Skip to content
Home » பௌத்த இந்தியா #31 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 1

பௌத்த இந்தியா #31 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 1

பௌத்த இந்தியா

கி.மு. ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டு இந்திய மக்களின் சமய நம்பிக்கைகள் பற்றிய சான்றுகள் பிராமணர்களின் இலக்கியங்களில் உள்ளன என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பிக்கை. ஆனால், இது எனக்கு நம்ப முடியாத ஒன்றாகத் தோன்றுகிறது. எந்த மாதிரியான கருத்துகளை மக்கள் வைத்திருக்க வேண்டும் என்று சமய குருமார்கள் விரும்பினார்களோ அவற்றைத்தான் அவர்கள் நமக்காகப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்; உண்மையில் மக்கள் கொண்டிருந்த பெரும்பான்மைக் கருத்துகளை அல்ல.

வேதப் புத்தகங்களைப் பாதுகாத்து வைத்ததற்கும் அவற்றை மற்றவர்களிடம் ஒப்படைப்பதற்கும் தேவையான அவர்களது மகத்தான உழைப்பைக் கருத்தில் கொள்ளவேண்டும்; நாம் முன்னம் பார்த்ததுபோல், புத்தகங்கள் முழுவதையும் மனப்பாடம் செய்வதன் மூலம்தான் இதைச் செய்ய முடியும். மானுடச் சிந்தனை வரலாற்றுக்கு மிகவும் மதிப்பு மிக்கதான இந்த இலக்கியத்தை நமக்காகப் பாதுகாத்து வைப்பதில் பங்களித்த, மன உறுதியும் அர்ப்பணிப்பும் மிக்க வேத பண்டிதர்களைப் போற்றுகிறோம்.

ஒரு கற்றறிந்த பிராமணர், இந்த விஷயத்தில் மட்டுமின்றி, இந்தியா நியாயமாகப் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டிய ஒரு நபர். கிறிஸ்தவப் பாதிரியார்கள் பழமைவாதம் நிறைந்தவை என்று தமது படைப்புகளில் அவர்களாகவே விலக்கி வைத்திருப்பவை தவிர்த்து அவர்களது கண்ணோட்டங்களில் விவரித்திருப்பவை, மிகவும் தெளிவற்றவையாக, துல்லியமற்றவையாக இருக்கின்றன என்பதைக் கவனிக்கும்போது, எதிர்கொண்ட சிரமங்கள் மிகவும் அதிகமாக இருந்த அந்தச் சூழலில் பிராமணர்கள் இன்னும் அதிகமாகச் செய்திருக்கலாம் என்று எதிர்பார்ப்பது எந்த அளவு அறிவுக்கு ஒவ்வாதது என்பதை நாம் பார்க்க முடியும். அதுமட்டுமின்றி, இதுவரையிலும் செய்து முடித்திருப்பதை அவர்கள் மிகத் துல்லியமாகவும் சிறப்பாகவும் செய்துள்ளனர். ஆனால், அவர்கள் நமக்காகப் பாதுகாத்து வைத்திருக்கும் பதிவேடுகள், மொத்தப் படைப்புகளில் ஒரு பகுதியே.

சமய நம்பிக்கை குறித்து நடந்திருப்பவை, மொழி விஷயத்தில் நடந்ததற்கு இணையானவைதாம். தட்சசீலம் தொடங்கி கீழே இருக்கும் சம்பா வரையிலும் எவரும் சம்ஸ்கிருதம் பேசவில்லை. உயிர்ப்புடன் இருந்த மொழியாக, எல்லா இடங்களிலும் ஒருவிதமான பாலி மொழியே இருந்தது. பல பழமையான வேதச் சொற்கள் மிகவும் எளிதாக உச்சரிக்கக்கூடிய வடிவங்களில் தக்கவைக்கப்பட்டிருந்தன. நீடித்திருக்கும் வேர்களில் இருந்து, ஒத்ததன்மை அடிப்படையில் பல புதிய சொற்கள் உருவாக்கப்பட்டன. வேறு பல புதிய சொற்கள் ஆரியர்-அல்லாதவரின் பேச்சு வடிவங்களில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேத நூல்களில் இடம் பெறாத பல ஆரிய சொற்கள், பொது மக்களின் பயன்பாட்டில் தொடர்ந்து இருந்தன. இதற்கிடையில், வேதப் பிராமணர்களின் பள்ளிகளில், குறிப்பாக அங்கு மட்டுமே, (பெரும்பான்மையாக நாம் சம்ஸ்கிருதம் என்று அழைக்கும்) வேத மொழி சார்ந்த அறிவு பராமரிக்கப்பட்டது.

ஆனால், சிலர் சொல்வதுபோல் இந்தப் பள்ளிகளின் சம்ஸ்கிருதம் முன்னேற்றம் அடைந்தது; அல்லது மற்றவர்கள் சொல்வது போல் வேத காலத்தின் தரத்திலிருந்து சீரழிந்துவிட்டது. பள்ளிகளில் நடைமுறைப் பயன்பாட்டில் இருந்த சம்ஸ்கிருதம் வேத காலப் பேச்சுவழக்குக்கு – அதாவது பௌத்தத்துக்குப் பிந்தைய கவிதைகள் மற்றும் நாடகங்களில் புழங்கிய செவ்வியல் சம்ஸ்கிருதம் என்று அழைக்கப்பட்ட ஒன்றிலிருந்து மிகவும் தள்ளி இருந்தது.

சமயத்திலும் இதுவேதான் நடந்தது. வேதப் பிராமணர்களின் பள்ளிகளுக்கு வெளியில் காணப்பட்டதாக ரிக் வேதத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆர்வமூட்டும் சுவாரஸ்யமான நம்பிக்கைகள் நடைமுறையில் குறைவான தாக்கத்தையே கொண்டிருந்தன. நாம் அறிந்ததுபோல், வேதத்தில் காணப்படும் மந்திர தந்திரங்களும் மாயாஜாலங்களும் இறையியலும் உண்மையில் பரவலான மக்களின் நம்பிக்கையாக இருக்கவில்லை. அதன் இறையியல் கருதுகோள்கள் மற்றும் நடைமுறை மாந்திரிக வேலைகள் (சடங்குகளின் போது பிரயோகிக்கப்படுபவை) ஆகிய இரண்டும், ஏற்கெனவே அவர்கள் முன்வைக்கும் எளிமையான நம்பிக்கைக்கு புறம்பாக, மிகவும் முன்னேற்றம் அடைந்திருந்த ஒரு காலகட்டத்தைக் காட்டுகின்றன.

பழைய சமூக அமைப்புகளில் பொதுவாகப் பார்க்க முடிந்த கடவுளர்களான – அச்சுறுத்தும் பூமாதா, வன தேவதைகளும் நாகங்களும், நாய்-நட்சத்திர கூட்டம், ஏன் சந்திரனும் சூரியனும், புதிய சிந்தனைகளால் (புதிய கடவுள்கள்) அக்னி, உற்சாக பானம் (சோம பானம்), இடி மற்றும் மழைக் கடவுள் (இந்திரன், வருணன்) ஆகியோரால் ஓரங்கட்டப்பட்டனர். அதுமட்டுமின்றி, பலியிடல் நடக்கும் யாகச் சடங்குகளின் புதிர் மற்றும் மந்திர உச்சாடனங்கள், சிக்கல்கள் நிறைந்த அவற்றின் செயல்முறைகளாலும் செலவுகளாலும் பாமர மக்களைப் பொறுத்தவரை அவற்றில் இருந்து விலகியிருந்தனர்.

வேதயிசம் (வைதீகம்) பற்றிய இந்தக் கருத்துகள், அவற்றை பொதுவானவை என்று சொல்ல முடியாத, ஆனால், மிகப் பரவலாக நிலவிய கருத்துகளுடன் முரண்படுகின்றன என்பதை அறிவேன். பேராசிரியர் மாக்ஸ் மில்லர் ரிக் வேதத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நம்பிக்கைகளின் ஆதிகாலத் தன்மையை இறுதி வரை வலியுறுத்தினார். அந்த நம்பிக்கைகள் நமக்கு மிகவும் வினோதமானவையாக அபத்தமானவையாகத் தோன்றுகின்றன. உண்மையில் அவை அப்படித்தான் உள்ளன. ஒரு மேம்பட்ட சிந்தனை நிலையை வெளிப்படுத்துவதாக அவை இருக்கின்றன என்ற கருத்தை ஏற்றுக்கொள்வது கடினம். இந்தியாவில், சீர்திருத்தம் நோக்கிய வழியில் ஒரு பெரும் தடையாக இன்று புரோகித மரபு இருப்பதைப் பார்க்கமுடிகிறது. இப்படியான நிலையில் கடந்த காலத்தில் ஒரு வர்க்கமாக, பிராமணர்கள் எப்போதாவது, புதிய கருத்துகளை முன்னெடுத்துச் சென்றிருப்பார்கள் என்று நம்புவது கடினம்.

ஆனால், உலகின் வேறு பகுதிகளில் நிலவிய சமய நம்பிக்கைகளில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியின் பொதுவான போக்கை ஒப்பிட்டுப் பார்க்கையில், ரிக் வேதத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நம்பிக்கைகள் மிகப் பழமையானவை அல்ல என்பது வெளிப்படுகிறது. வேறு எங்கும் காணப்படாத அந்த நம்பிக்கைகளின் இயல்பைக் கருத்தில் கொண்டால், அவற்றை உருவாக்கிய மனிதர்கள், இதற்கு முந்தைய கருத்துகளின் மீது செய்யப்பட்ட ஒருவித முன்னேற்றமாக அல்லது சீர்திருத்தம் என்பதாகப் பார்த்திருக்கிறார்கள் என்று தோன்றுவது தெளிவு.

அதுமட்டுமின்றி, நாம் இப்போது பரிசீலிக்கிற இந்தக் கருத்தைப் பொறுத்தவரையில், நமக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்களில், குறைந்தபட்சம் மூன்று வரிகள் ஒரு விஷயத்தை வெளிப்படுத்துகின்றன; அதாவது ரிக் வேதம் எழுதி முடிக்கப்பட்ட அந்த இறுதி நேரத்தில், இந்தியாவில் இருந்த ஆரியர்கள் மத்தியில் பொதுவாகப் பல நம்பிக்கைகள் நிலவின. ஆனால் அவை ரிக் வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. (மக்களிடையே பிரபலமாக இருந்த சில சமய கருத்துகள், வேதத்தில் போகிற போக்கில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன; வேதப் பிராமண அமைப்பின் நிலவிய நம்பிக்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை, {see Kirste in the Vienna Oriental Journal, 1902}).

அந்த மூன்று வரிகளில் முதல் வரி, அதர்வண வேதத்தின் வரலாறு. பௌத்தம் தோன்றுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே மாந்திரிகப் பயன்பாட்டுக்குரிய மதிப்புமிக்க மந்திரங்களின் பழைய சேகரிப்புகள் நடைமுறையில் ஒன்றாகத் தொகுக்கப்பட்டிருந்தன. ஆனால், அதற்குச் சற்று முன்புதான், பலியிடல் யாகம் நடத்தும் வேதப் பிராமணர்கள் தங்களது பழமையான மற்ற மூன்று படைப்புகளைக் காட்டிலும் இந்த வேதம் தாழ்ந்தது; எனினும் அதுவும் ஒரு வேதம்தான் என்றனர்.

பௌத்த நியதி நூல்களில் அதர்வணம் ஒரு வேதமாக ஏன் குறிப்பிடப்படவில்லை என்பதை இது விளக்குகிறது. மூன்று வேதங்களையும் அவற்றோடு தொடர்புடைய உலகைப் பற்றியும் மட்டுமே அவை குறிப்பிடுகின்றன. மாந்திரீகம் மற்றும் பில்லி சூனியம் ஆகியவற்றில் பயன்படும் புரியாத உச்சரிப்புகள் தொடர்ந்து கேலி செய்யப்படுகின்றன. அத்துடன் இதற்கோ யாகத்துக்கான மந்திரச் சொற்களுக்கோ திறமை வேண்டும் என்பதை மறுக்கிறார்கள். ஆனால் இந்தப் புத்தகங்கள் எழுதப்பட்ட பிரதேசங்களில் வாழ்ந்த மக்களின் பார்வையில் அதர்வணத் தொகுப்பு இன்னும் வேதமாக மாறவில்லை.

ஆயினும், அதர்வண வேதத்தில் அது அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கைகளும் நடைமுறைகளும், மற்ற மூன்று வேதங்களில் குறிப்பிடுவதைக் காட்டிலும் மிகவும் பழமையானவை என்று சொல்ல முடியாவிட்டாலும், பழமையானவை என்பது மிகவும் உறுதியானது. அவை இந்திய ஆரியர்களால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பின்பற்றப்பட்டவை. ரிக் வேதத்தில் பதிவாகியிருக்கிற விஷயங்கள் அதர்வண வேதத்தில் உள்ளவை போன்றே நமக்கு அபத்தமாகத் தோன்றலாம். ஆனால், ஒரு கருத்தை நாம் புறக்கணிக்க முடியாது. அதாவது கொஞ்சம் பழமையான தொகுப்பை உருவாக்கியவர்கள், தெரிந்தே, உணர்வுப்பூர்வமாக ஒரு தெரிவை செய்திருக்கிறார்கள். அப்போது வழக்கத்தில் இருந்த நம்பிக்கை குறித்த சில சொற்றொடர்களை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார்கள்; அவை அவர்களுக்கு ஈர்ப்புடையதாக இல்லை; அல்லது அவர்களது நோக்கத்துக்கு பொருத்தமாக இல்லை. அல்லது அவர்களது தெய்வங்களின் தகுதிக்கு ஏற்புடையதாக இல்லை. அவர்கள் ஒதுக்கியவை, அல்லது கிட்டத்தட்ட ஒதுக்கியவை அதிகமும் நாகரிகம் அடையாதவர்களின் மூடநம்பிக்கைகள், மந்திரச் சடங்குகள் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, அவ்வாறு செய்ததில் அவற்றுக்கு உரிய மதிப்பை அளிக்காமல் இருப்பது எளிதான விஷயமல்ல.

(தொடரும்)

___________
T.W. Rhys Davids  எழுதிய “Buddhist Indiaநூலின்  தமிழாக்கம்.

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *