இரண்டாவது விஷயமாக, மக்கள் கொண்டிருந்த சமய நம்பிக்கைகள் குறித்த பொதுவான பார்வையைச் சொல்லலாம்; இவை, இதிகாசங்கள் மூலமாக, குறிப்பாக மகாபாரதம் மூலமாக, நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. வேத இலக்கியத்தின் பொதுவான பார்வையிலிருந்து, பல விஷயங்களில், இது முற்றிலும் வேறுபட்டது. மகாபாரதத்தில் பார்க்க முடிகிற கருத்தாக்கங்களில் கி.மு. ஏழாம் நூற்றாண்டைக் குறித்து அறிந்து கொள்வதற்கான சான்றாக எந்த ஒன்றை எடுத்துக்கொள்ள முடியும் என்பது நமக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை. அந்தக் காவியம், நிச்சயமாகப் பிற்காலத்து மதகுருமார்களில் கைகளில் மாற்றங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும்; ஒன்று, இரண்டு ஏன் மூன்று முறை மாற்றப்பட்டிருக்கலாம்.
வேதகுருமார்கள் மாற்றங்களைச் செய்தனர் என்றாலும், அவர்களது சிந்தனைப் பள்ளிகளில் நடைமுறையில் இல்லாத சில கருத்துகள் மக்கள் மத்தியில் அதிகம் செல்வாக்கு பெற்றிருப்பதைக் கண்டறிந்ததால், இனியும் அவற்றைப் புறக்கணிக்க முடியாது என்று உணர்ந்தனர்.
இரண்டு முக்கிய நோக்கங்களுடன் அந்தக் காவியத்துக்கு மறுவடிவம் கொடுத்திருக்கவேண்டும்; முதலாவது, பிராமணர்களின் மேலாதிக்கத்தை வலியுறுத்திப் பேசுவது; ஏனெனில், அப்போது வேதகுருமார்களுக்கு எதிரான பௌத்தர்கள் மற்றும் பிறரின் கருத்துகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தன; அதனால், அவர்களது ஆதிக்கம் பெரும் ஆபத்தில் இருந்தது. இரண்டாவது, மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட சில பிரபலமான வழிபாட்டு முறைகள் மற்றும் நம்பிக்கைகளை பிராமணர்கள் எப்போதும் பரிவுடன்தான் அணுகினர்; அத்துடன் அவற்றை முறைப்படி ஏற்றுக்கொண்டனர் என்றும் காட்டிக்கொள்ள முனைந்தனர்.
எப்படியிருந்தாலும், வேத இலக்கியத்தில் இல்லாத, காவியத்தில் பார்க்க முடிகிற இந்த வழிபாட்டு முறைகளும் நம்பிக்கைகளும் அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் மற்றும் அதிகார நிலையிலும் இருந்தன. நமக்கு கிடைத்திருக்கும் ஆதாரம், தனித்ததாக இருந்திருந்தால், நிச்சயம் அதிகம் மதிப்பற்றதாக, பலவீனமானதாக இருந்திருக்கும்; என்றாலும் வேத இலக்கியத்தில் சேர்க்கப்படாத நம்பிக்கைகளுக்கு சில ஆதாரங்கள், இங்கும் உள்ளன என்பதை ஒரு விளக்கம் என்ற அளவில் எடுத்துக்கொள்ளலாம். குறைந்தபட்சம், ஓரளவுக்காவது. அவை இந்தியாவில் ஆரியர்கள் மற்றும் செமி-ஆரியர்களின் மத்தியில் இன்னமும் வழக்கத்தில் உள்ளன; அதுமட்டுமின்றி அழுத்தமான தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
‘வரலாற்றின்’ அந்த மூன்றாவது விஷயம், சமய நம்பிக்கைகள் பற்றிய குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டது; அவை பௌத்தர்களின் நம்பிக்கை சார்ந்தவை அல்ல. பௌத்த நியதி புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மக்களின் நம்பிக்கை சார்ந்தவை. ஆனால், இவை குறித்த விவரங்கள் இதுவரையிலும் சேகரிக்கப்படவில்லை என்பதுடன் ஆய்வுக்கும் உட்படுத்தப்படவில்லை. அவை பலவிதங்களில் சுவாரஸ்யமாகவும் குறிப்பாகச் சிலவற்றைத் தெரிவிப்பதாகவும் உள்ளன; ஆகவே, அவற்றில் மிக முக்கியமான சிலவற்றைச் சுருக்கமாக இங்குச் சுட்டிக்காட்டுவது பயனுள்ளதாக இருக்கும்.
இந்தப் பிரச்னையில் தொடர்புடைய வழக்கமான பத்திகள் மூன்று; ஒன்று உரைநடையில் உள்ளது; மற்ற இரண்டும் செய்யுள் வடிவில் உள்ளன. இவை அனைத்தும் மிகப் பழமையான ஆவணங்களில் காணப்படுகின்றன. முதலாவது ‘சீலங்கள்’ தொகுப்பில் இருக்கிறது. அந்தப் பத்தி இவ்வாறு தொடங்குகிறது:
‘சில சந்நியாசிகளும் பிராமணர்களும் தர்ம சிந்தனை கொண்டவர்கள் அளிக்கும் உணவை உண்டு வாழ்கிறார்கள்; அவர்கள் தந்திரக்காரர்கள், புனிதமான சொற்களைச் சொல்லி, ஊதியத்துக்காக தெய்வசக்தி பெற்றவர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்கள்; துர்த்தேவதைகளை விரட்டும் சோம்பேறிகள்; ஆதாயத்தை மேலும் மேலும் சேகரிப்பதற்காக எப்போதும் ஏங்குபவர்கள். ஆனால், கௌதம சந்நியாசி, இத்தகைய ஏமாற்றுக்காரர்களிடமிருந்தும் ஆரவாரப் பேச்சாளர்களிடமிருந்தும் விலகி நிற்பவர்.’
அதன்பின் அவற்றை, வரலாற்றாளர்களுக்கு மிகவும் மதிப்புமிக்க, நீண்ட விவரக்குறிப்புகள் தொடர்கின்றன; ஆறாம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளியில் வசித்த மக்களது நம்பிக்கைகளின் ஒரு பகுதியாக இருந்த அனைத்து வகையான ஆன்ம வாதம் சார்ந்த மந்திரச் சொற்கள் அவை; இல்லையென்றால் இத்தகைய ‘தரக்குறைவான கலைகள்’ பிராமணர்களுக்கும், அவற்றைப் பிரயோகித்த மற்றவர்களுக்கும் ஆதாயத்தின் ஆதாரமாக எப்படி இருந்திருக்க முடியும்? கைரேகை சாஸ்திரம், பல வகையான எதிர்கால கணிப்புகள், வானத்தின் நிகழ்வுகளிலிருந்து சகுனங்களும் குறிகளும் கணித்துச் சொல்லுதல், கனவுகளை விளக்கி வருவதுரைத்தல், எலிகள் கடித்த துணியில் காணப்படும் குறிகளைக் கொண்டு சகுனம் சொல்லுதல், அக்னிக்கு ஆகுதியளிக்கும் யாகங்கள் போன்றவை குறித்து நமக்குச் சொல்லப்படுகிறது.
இவற்றுடன் வேறுசிலவும் இணையாகச் சொல்லப்படுவது மிகவும் தனித்தன்மையானது, விசேஷமானது; பல்வேறு வகையான பொருட்களை கடவுளர்களுக்கு அர்ப்பணித்தல், அதிர்ஷ்டம் மிக்க இடங்கள் இவை என்று நிர்ணயித்தல், வசீகர மந்திரங்களின் உச்சாடனம், பில்லி சூனியம் வைத்தல், பாம்புகளை வசீகரம் செய்தல் மற்றும் அந்தக் கலையை வேறு விலங்குகள், பறவைகள் மீது பிரயோகித்தல், ஆரூடம் பார்த்தல், குறி சொல்லுதல், மந்திரித்தல், தெய்வ வாக்கு கூறுதல், கூடவே வைத்திருக்கும் சிறுமி அல்லது ஆடி மூலம் கடவுளிடம் ஆலோசித்தல், மாபெரும் இறைவனை வழிபடுதல், ஸ்ரீ – யை எழுந்தருளச் செய்தல் (அதிர்ஷ்ட தெய்வம்), சங்கல்பத்தின் மூலமாக தெய்வங்களைக் கட்டுப்படுத்துதல், ஆண்மை அளிக்க அல்லது ஆண்மைக்குறைவை ஏற்படுத்த வசீகர மந்திரங்களை உச்சாடனம் செய்தல், வீடு அல்லது இடங்களை புனிதப்படுத்துதல் இவை போன்ற இன்னும் பல கூறப்படுகின்றன.
ஒருவிநோதமான பட்டியல் இது; மிகவும் குறிப்பாக வேதத்தில் பார்க்கமுடிகிற பல்வேறு வகையான ஆன்மவாத அடிப்படையிலான மூடநம்பிக்கைகளையும், அவற்றுக்கு அப்போது பரந்த அளவில் மக்கள் மத்தியில் எவ்வளவு முக்கியத்துவம் இருந்தது என்பதையும் மிக அழகாக இது சுட்டிக்காட்டுகிறது. பதிவுகளின் ஆய்வின்போது, வேதத்தில் குறிப்பிடப்படாத, மிக ஆரம்ப காலகட்டத்தைச் சேர்ந்த செல்வத்தையும் வெற்றியையும் கொடுக்கும் ‘ஸ்ரீ’ என்ற அதிர்ஷ்ட தெய்வம் பற்றிய குறிப்புகளை நாம் காணமுடியும். அவற்றில் ஒன்று ‘ஸ்ரீமா தேவதை’ என்ற எளிய எழுத்துக்களில் குறிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ‘எபேசியர்களின் டயானா’வைப் (Diana of the Ephesians) போலவே, இந்தத் தேவதையும் தனது உற்பத்தித்திறனின் அடையாளத்தை மார்பகத்தில் கொண்டிருக்கிறாள்.
மற்றொன்றில், அந்தப் பெண் கடவுள் அமர்ந்திருக்கிறது; அதன் இருபக்கங்களிலும் இரண்டு யானைகள் அதன் மீது நீரூற்றுகின்றன. அந்தப் பிரபலமான பெண் தெய்வம் குறித்த மிகவும் பொதுவான பதிவின் மிகப் பழமையான எடுத்துக்காட்டு இது. இந்தத் தெய்வத்தின் உருவத்தை மிகச் சரியாக இதே வடிவத்தில், இன்றும் வட இந்தியாவின் கடைத் தெருக்களில் வாங்க முடியும்.
சமீபத்தில் தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட இந்தப் பிரபலமான தெய்வத்தின் புகைப்படத்தை இந்த நூலில் பயன்படுத்திக்கொள்ள திருமதி க்ரேவன் எனக்கு பரிவுடன் அனுமதி தந்தார்; அநேகமாக இது பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். வேத காலத்தைச் சேர்ந்திராத இந்தப் பெண் தெய்வ வழிபாடு, மிகப் பழமையான சிற்பங்களின் காலத்துக்கும் நமது காலத்துக்கும் இடையில் இருந்திருக்கிறது என்பதற்கு இது உறுதியான சான்று.
புத்தரின் காலத்தில் ‘ஸ்ரீ’ ஏற்கெனவே ஒரு பிரபலமான தெய்வம். வேத குருமார்கள் இந்தத் தெய்வத்தை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டனர் என்பதை இது விளக்குகிறது, அவ்வாறு அவர்கள் செய்ததற்கு ஒரு சிறப்பான கதையையும் அவர்கள் கண்டுபிடித்தனர். அத்துடன் இயல் கடந்த நிலையில் சந்திரன், சூரியன் மற்றும் அன்னை பூமி போன்ற அச்சம் தரும் தெய்வங்களின் சேர்க்கையுடன், இந்தத் தெய்வத்தையும் இணைத்து போகிறபோக்கில் மீண்டும் ஒருமுறை, அவர்கள் குறிப்பிடுகின்றனர். வேதத்தில் குறிப்பிடப்படும் இந்திரன், அக்னி, சோமன் மற்றும் வருணன் போன்றவர்களும் ஒப்பீட்டளவில் மிகவும் பின்னணியில் வைக்கப்படுகின்றனர்; ஆனால், வேதங்களில் அவை அரிதாகக் குறிப்பிடப்படுகின்றன என்றாலும் இந்திய மக்களின் மனத்தில் மிகப் பெரும் பங்கை உண்மையில் அவை ஆக்கிரமித்திருக்க அதிக சாத்தியம் உள்ளது. நவீன புராணங்களில் ‘ஸ்ரீ’ விஷ்ணுவின் மனைவியாகக் கருதப்படுகிறார்.
மற்ற இரண்டு பத்திகள், செய்யுள் வடிவத்தில் உள்ளன. மகா சமய சுத்தந்தா என்ற சுத்தந்தம் முழுமையும் இவைதாம். பாலி டெக்ஸ்ட் புக் சொசைட்டிக்காக எடிட் செய்யப்பட்டு தீக நிகயாவில் பத்தி எண்.20 ஆக உள்ளது. எனது ‘புத்தருடன் உரையாடல்கள்’ என்ற நூலில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மற்றது, அதனாத்ய சுத்தந்தாவில் பத்தி எண்.32 ஆக அதே தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கவிதைகளில் முதலாவதில், எவரென்று, அறிய முடியாத ஆரம்பகால பௌத்தப் பாடலாசிரியர் ஒருவர் ஒன்றைப் பதிவு செய்கிறார்; மக்கள் வழிபடும் கடவுளர்கள் அனைவரும் கபிலவாஸ்துவில் இருந்த அந்தப் புதிய ஆசானையும், அவரது அமைப்பிலிருந்த மற்ற சந்நியாசிகளையும் நாடி வந்து மரியாதை செலுத்திய முறையை விவரிக்கிறார்.
இரண்டாவது கவிதையிலும் முன்னர் போல் அறியப்படாத மற்றொரு பாடலாசிரியர் ஒரு நிகழ்வை விவரிக்கிறார்; சில கடவுளர்கள் அவரைப் பார்க்க வருகிறார்கள்; புதிய கோட்பாட்டுக்கு விரோதமாக மற்ற தெய்வங்களின் இதயங்களை மாற்றும், அதிலிருந்து விலகி, அக்கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களை அமைதியாக இருக்க அனுமதிக்கும் சில சொற்றொகுதிகளைப் பின்பற்றுமாறு அவரிடம் கூறுகிறார்கள்; அவ்வாறு சாந்தப்படுத்த வேண்டியது விரும்பத்தக்கது என்று கருதப்படும் அனைத்துக் கடவுளர்களின் பெயர்களையும் அந்தச் சொற்றொகுதி வெளிப்படுத்துகிறது.
இந்த இரண்டு கவிதைகளும், பிராமணர்கள் பிரபலமான நம்பிக்கைகளை ஒன்றன் பின் ஒன்றாக ஏற்றுக்கொண்டதைச் சுட்டிக்காட்டுவதற்கு இணையானவை. சமயத் தலைவர்களிடம் தாக்கம் ஏற்படுத்தும் நோக்கங்கள், அவர்களது கருத்துகளுக்கு முற்றிலும் நேரெதிரானவையாக இருந்தாலும், எவ்வளவு ஒத்ததன்மை கொண்டதாக இருக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. இரண்டு நிகழ்வுகளிலும் முயற்சி ஒரே மாதிரியான விளைவைத் தந்திருக்கிறது. வெவ்வேறு கருத்துகளுடன் மக்கள் சமரசமாக இருக்கச் செய்வதே இதன் நோக்கம். இதன் உண்மையான தாக்கம் என்னவென்றால், மக்களின் கருத்துகள் இவ்வாறு பின்வாசல் வழியாக அனுமதிக்கப்பட்டன என்பதும், அவை அந்த வளாகம் முழுவதையும் நிரப்பின என்பதும்தான். மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பிய கருத்துகள் பாலைவனத்தில் கொட்டியவையாக மாறின; இறுதியில் முற்றிலும் மறைந்து போயின. நமது வீட்டுக்கு அருகிலும் இதே போன்ற நிகழ்வுகளை நாம் நினைவுகூர முடியும்.
(தொடரும்)
படம்: ‘ஸ்ரீமா தேவதை’, பர்ஹூத்தில் கண்டெடுக்கப்பட்ட சுங்கர் காலத்திய சிற்பம் (கொல்கத்தா அருங்காட்சியகம்)
___________
T.W. Rhys Davids எழுதிய “Buddhist India” நூலின் தமிழாக்கம்.