பழைய நினைவுச்சின்னங்களில் மர வழிபாடு சார்ந்தவை காணப்படுகின்றன என்ற ஃபெர்குசனின் (Fergusson) விளக்கத்தை முழுமையாக மறுபரிசீலனை செய்யவேண்டும். இந்திய இலக்கியம் பற்றி போதிய அறிவு இல்லாமலேயே இந்தியக் கலைஞர்களின் படைப்புகளை விளக்க முயல்கிறார். மேதைமை நிறைந்தவராயினும் சாத்தியமற்றதை அவர் முயற்சி செய்கிறார். ஆனால், அந்த அவரது தவறு மிகவும் இயல்பானது. கிடைத்திருக்கும் செதுக்குச் சிற்பங்களில் நமது முதல் பார்வையில் மனிதனும் விலங்குகளும் மரம் ஒன்றை. அதில் வசிக்கும் ஆன்மாவை (தேவதையை) வணங்குவதைக் காட்சிப்படுத்துகின்றன என்பது மிக நிச்சயம். ஆனால், அந்தச் சிற்பத்தை நாம் ஆழ்ந்து பார்க்கையில், சிற்பத்தில் காணப்படும் மரத்தில் ’மிகவும் உயர்ந்தவரான காசப்பனின் போதி மரம்; ஞானம் தந்த மரம்’ என்ற சொற்கள் எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
புத்தர்கள் அனைவரும் ஒரு மரத்தினடியில் ஞானம் பெற்றார்கள் எனக் கருதப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட விவரிப்பைப் பொறுத்து மரம் வேறுபடுகிறது. எடுத்துக்காட்டாக, நமது புத்தரைப் பொறுத்தவரையில், அவர் ‘ஞானம் பெற்ற மரம்’, அஸ்ஸத்தா அல்லது அரச மரம் என்று அழைக்கப்படுகிறது. கௌதமர் புத்தர் ஞானம் பெற்றதைப் பற்றிக் குறிப்பிடும் அனைத்துப் பழமையான விவரிப்புகளிலும், அந்த நேரத்தில் அவர் எந்த மரத்தின் கீழ் அமர்ந்திருந்தார் என்பது பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. எனினும் ஏற்கனவே சுத்தந்தா ஒன்றில் இந்த நிகழ்வு அரச மரம் ஒன்றின் கீழ் நடந்ததாகப் போகிறபோக்கில் குறிப்பிடப்படுகிறது. அத்துடன் பிற்காலத்துப் பௌத்த நூல்களிலும் இந்த நிகழ்வு அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. ஆனால் பழைய நூல்களில் புத்தர் ஒருபோதும் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை; எப்போதும் ஓர் அடையாளத்தின் மூலமாகவே சுட்டப்படுகிறார்.
இங்கே நாம் மரத்துக்கு மரியாதை செலுத்துவது குறித்து, விவாதிக்கிறோம்; ஆனால், அது அந்த மரத்துக்காக அல்ல; அதில் வசிப்பதாகக் கருதப்படும் ஆன்மா அல்லது ஆவியை வழிபடுவதற்காகவும் அல்ல; ஆனால், உபதேசம் செய்த அந்தக் குருவின் அடையாளமாகவோ அல்லது அதைப் போன்ற ஒரு மரத்தின் அடியில்தான் வணக்கத்துக்குரிய அந்த பழமையான குரு புத்தராக மாறினார் என்று அவரைப் பின்பற்றுபவர்கள் நம்புவதால் செய்யப்படுகிறது. எந்தவகையிலும் மர வழிபாடு குறித்துப் பேசுவதும் விவரிப்பதும் சிரமம் தரும் பணிதான்; ஒருவிதமான தவறான சித்தரிப்பு அல்லது ஓரளவுக்குத் தவறான புரிதல் எனவும் கூறலாம்.
இந்தப் படைப்புகள் எழுதப்பட்டபோது, இவ்வுலகிலிருந்து மறைந்து போய்விட்ட பிரியத்துக்குரிய அவர்களது குருவின் நினைவாக அரச மரம் புனிதமானதாகக் கருதப்பட்டது; அத்துடன் ’ஞானத்தின் மரம்’ என்ற அடைமொழியையும் பெற்றது. ஆனால், அந்த ஞானம் என்பது குருவின் ஞானமே; அந்த மரத்தின் அல்லது மரத்தில் ’வசிக்கும்’ கடவுளின் ஞானம் அல்ல; அந்த மரத்தின் பழங்களை உண்பதாலும் அதைப் பெற முடியாது.
இந்தக் கருத்துகள் நிச்சயமாக பௌத்தத்துக்குப் பிந்தையவை. கௌதமர் தனது வாழ்க்கையின் மிக நெருக்கடியான காலகட்டத்தில் ஓர் அரச மரத்தடியில் அமர்ந்திருந்தார் என்ற மரபு வழியிலான விவரிப்பின் காரணமாக இவ்வாறான கருத்துகள் முற்றிலும் இயல்பாகத் தோன்றியிருக்கலாம். அத்துடன் மிக விரைவில், அந்த மரபும், மிகவும் சரியானதெனக் கருதப்பட்டதற்கும் சாத்தியமிருக்கிறது. நான்கு சுவர்களுக்கு மத்தியில் அமர்ந்து சிந்திப்பதைக் காட்டிலும், அழகிய இயற்கைச் சூழலில், திறந்த வெளியில் அமர்ந்து சிந்தனை செய்வது அடிக்கடி நிகழக்கூடியதுதான் என்ற உண்மை நமக்குத் தெரியும். இயற்கையின் அழகான விஷயங்களைப் போற்றுவது, பல ஆரம்பக்கால பௌத்தக் கவிதைகளில் மிகவும் தெளிவாகக் காணப்படுகின்றன; ஆனால், இது ஓர் இந்தியப் பண்புதான்; பௌத்தப் பண்பு அல்ல.
அறநெறி தொடர்பான அல்லது தத்துவம் குறித்த ஓர் அழுத்தமான கருத்தை ஒட்டி நடந்த முனைப்பான உரையாடலின் முடிவில், புத்தர் அதை முடிக்க விரும்புகிறார்; ’இதோ நம்மைச் சுற்றிலும் மரங்கள் உள்ளன; இந்த விஷயத்தைச் சிந்தித்துப் பாருங்கள்!’ என்று வேண்டுகோள் வைக்கிறார். உணர்வுபூர்வமான இந்த நிகழ்வின் செய்தி பௌத்தத்தில் மட்டுமல்ல; பரவலாக இந்தியர்களிடம் காணப்படுவது. ஆகவே, புத்தர் தனது வாழ்க்கையில் உருவாக்கிய புதிய கோட்பாட்டின் முக்கிய அம்சங்களை ஓர் அரச மரத்தின் கீழ் இருந்துதான் பெற்றுக்கொண்டார் என்று கருதுவது எவ்வகையிலும் சாத்தியமற்றது. அப்படித்தான் எனில், அவர் நிர்வாணம் அடைந்த அந்தத் தருணம் புத்தருடைய வாழ்க்கையில் மட்டுமல்ல; உலக வரலாற்றிலும் ஒரு திருப்புமுனையான விஷயம். அத்துடன் இந்த மிக எளிமையான மற்றும் இயல்பான உண்மையை அவருடைய சீடர்கள் நினைத்துப் பார்த்திருக்க முடியும் என்று கருதுவதும் சிந்திக்க முடிந்ததல்ல.
மற்றொரு கருதுகோளுக்கும் இங்குச் சாத்தியமிருக்கிறது; புத்தரின் சீடர்கள், அனைத்து நல்லெண்ணத்துடனும் குறிப்பிட்ட இந்த மரத்துடன் அவர்களது குருவை இணைத்துப் பேசியதற்குக் காரணம், அந்த மரம் ஏற்கனவே, அவரது காலத்துக்கு முன்பே, மற்ற எல்லா மரங்களைக்காட்டிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக புனிதமானதாகக் கருதப்பட்டிருக்கும். ஆகவே இந்த உணர்வின் விளைவாக அந்த மரபு உருவாகியிருக்கலாம்.
மிகத் தொடக்கக்கால வேத பாடல்களின் காலத்திலேயே இந்த மரத்துக்கு நிச்சயம் உயர்ந்த மதிப்பு இருந்தது. சோமன் வழிபாட்டுக்கு இந்த மரத்திலிருந்துதான் பாத்திரங்கள் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி, அன்றைய மருத்துவர்களின் தாந்திரிகக் கலையில் பயன்படுத்தப்பட்ட மருத்துவ மூலிகைகளை இந்த மரத்தில் செய்யப்பட்ட சிறு பெட்டிகளில் வைத்துக்கொண்டனர். தீக்கடைகோலின் கோல் (அது தீயை உண்டாக்குவது புதிராகவே கருதப்பட்டது) அரச மரத்துண்டால் செய்யப்பட்டது.
ஒரு பத்தியில், விண்ணுலகத்தில் ஆசீர்வதிக்கப்பட்ட ஆன்மாக்கள் ஒரு மரத்திடம் அடைக்கலமாகி இருப்பதாகப் பதிவாகியுள்ளது. அந்த மரம், இந்த அரச மரத்துடன் ஒப்பிடப்படுகிறது. நாம் பேசும் மரபின் உருவாக்கத்துக்கு இது போதுமான காரணமாக இருக்குமா என்பது சந்தேகமே. ஆனால், ஒருவேளை அவ்வாறு உருவாகியிருப்பின், பொதுமக்கள் கற்பனையுடன் இத்தகைய விஷயங்களும் சேர்ந்திருக்க கூடும்.
எப்படி இருப்பினும், கூறப்படும் நாட்டுப்புறக் கதைகள், அவை மேற்கோள்காட்டும் அரச மரத்துக்குத் தெய்விகச் சக்தியை ஒருபோதும் ஏற்றிக் கூறவில்லை. அவை எப்போதும் வேறொரு மரத்தைக் குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது. அத்துடன் இது சாதாரணமான, தற்செயலான ஒன்றே என்று மிகவும் உறுதியாகக் கூற நம்மிடம் ஆதாரம் ஏதுமில்லை. மர-தெய்வங்கள் நாகர்கள் என்றே அழைக்கப்பட்டன; அவை விரும்பினால், நாம் முன்னர் குறிப்பிட்ட நாகங்களைப்போல மனித உருவத்தைப் பெறமுடியும்.
கதை ஒன்றில், வணிகர்களைச் சாம்பலாக்கிய ஆலமரத்தில் வசித்த ஆவியை நாகராஜா என்று அழைக்கின்றனர். மரத்திலிருந்து அது அனுப்பிய வீரர்கள், நாகங்களே; அத்துடன், அந்த மரம் ’நாகங்களின் வசிப்பிடம்’ என்றே கூறப்பட்டது. மகா சமயத்தை எழுதிய கவிஞர், புத்தருக்கு மரியாதை செலுத்துவதற்கு வந்ததாகக் கூறும் தெய்வங்களின் பட்டியலில், இந்த மரத் தெய்வங்களை விசேஷமாகவும் தனியாகவும் ஏன் குறிப்பிடவில்லை என்பதை இது விளக்கக்கூடும். எப்படி இருப்பினும், மரங்களில் வசிப்பதாகக் கருதப்படும் சக்திவாய்ந்த ஆன்மாக்களை வழிபடும் மர வழிபாடு, வேதங்களில் அரிதாகவே குறிப்பிடப்படுகிறது; பௌத்தம் எழுச்சி பெற்ற காலத்தில் வட இந்திய மக்கள் பின்பற்றிய சமயத்தின் முக்கிய பகுதியாக இருந்த நம்பிக்கைகளின் பட்டியலில் இதையும் சேர்க்கலாம்.
இந்த இரண்டு பட்டியல்கள் எதிலும் வேதத்தின் பெரிய கடவுளான இந்திரன் குறிப்பிடப்படவில்லை. இடியையும் மின்னலையும் ஆயுதமாகத் தாங்கி நிற்கும் இந்திரனின் இடத்தை சக்கா (ஸக்ர) எடுத்துக்கொண்டார். பெருமளவுக்கு இல்லையென்றாலும் பலவிதத்திலும் முற்றிலும் மாறுபட்ட உருவாக்கமாக அவர் இருக்கிறார். இந்தக் கடவுள்கள் எந்த அளவுக்கு நிஜம் என்பதையும் சிந்திக்க மறந்துவிடக்கூடாது. அவர்கள் மெய்யான இருப்பைக் கொண்டவர்கள் இல்லை. ஆனால், அவர்கள் மனிதர்களின் மனத்தில் இருக்கும் எண்ணங்களைப்போல் போதுமான அளவு நிஜமானவர்கள். எந்தத் தருணத்திலும் ஒரு தேசத்தின்/ சாதாரண மக்களின் தெய்வங்கள் நித்தியமானவையாக, மாறாதவையாகத் தோன்றுகின்றன.
உண்மையில் அவை, தொடர்ந்து மிகச் சிறிய அளவில் மாறிக்கொண்டே இருக்கின்றன. எந்த இரண்டு மனிதர்களும் ஒரே கடவுளை நினைப்பதில்லை; அதே நாளில், ஒரே சுற்றுப்புறச் சூழலில் இருந்தாலும், அவர்கள் மனதுக்குள் அந்தக் கடவுள் ஒரே மாதிரியான உருவத்தைப் பெறுவதில்லை. வேறு கடவுள்கள் குறித்து அவர்கள் கொண்டிருக்கும் கருத்துருத்துக்களுடன் ஒப்பிடுகையில் (அதாவது, அவர்களது வேறு சிந்தனைகளுடன் ஒப்பிடுகையில்) இந்தக் கடவுளுக்கான விகிதாசார முக்கியத்துவம் அதே அளவில் இருப்பதில்லை.
ஒரு மனிதனின் உடலமைப்பைப் பார்க்க முடிவதைப் போல், எந்தத் தருணத்திலும் எந்த ஒரு மாற்றத்தையும் பார்க்க முடியாது; எனினும், இரண்டு அடுத்தடுத்த தருணங்களில், அந்த உருவம் ஒருபோதும் உண்மையில் ஒரே மாதிரியாக இருக்காது; அத்துடன் அந்த நிரந்தரமான, நுட்பமான மாற்றங்களின் விளைவு, ஒரு காலகட்டத்துக்குப் பின்னரே தெளிவாகிறது. எனவே, ஒரு கடவுளின் பெயரில் ஒன்று திரட்டப்படும் சிந்தனை, படிப்படியான, நுட்பமான மாற்றங்களின் இயல்பான திரட்சியால் மாற்றம் பெறுகிறது. இந்த மாற்றம், ஒரு காலகட்டத்துக்குப் பிறகே (அது பல தலைமுறைகளாக, அல்லது, பல நூற்றாண்டுகளாக இருக்கலாம்) மிகவும் தெளிவாகிறது; ஒரு புதிய பெயர் அதற்கு உண்டாகிறது; படிப்படியாக, மிகவும் படிப்படியாக, அது பழையதை வெளியேற்றுகிறது. அதன்பின், அந்தப் பழைய கடவுள் இறந்துபோகிறார். பௌத்தக் கவிஞர்கள் கூறியதுபோல், ’அவர் அணிந்திருந்த மாலையின் மலர்கள் வாடிவிட்டன; அவரது கம்பீரமான ஆடைகள் பழையதாகி, மங்கிவிட்டன; சமூகத்தின் உயர்ந்த இடத்திலிருந்த அவர் வீழ்ச்சியடைந்தார்; புதிய பிறவி எடுத்து மீண்டும் பிறந்தார்’. அவர் மீண்டும் வாழ்கிறார்; அவரது முந்தைய வாழ்க்கைக்குப் பிறகான வெளிப்பாடாக, புதிய கடவுளாக, புதிய பெயரில், மனிதர்களின் இதயங்களில் ஆட்சி செய்கிறார் என்று நாம் சொல்லமுடியும்.
இவ்வாறாக ஜூபிட்டர் க்ரோனஸை வெளியேற்றினார்; அத்துடன் இந்திரன் வேதப் பாடல்களிலேயே திரிதாவை ஏறக்குறைய வெளியேற்றிவிட்டார்; இந்திரனும் மற்றவர்களும் ஏறத்தாழ வருணனை வெளியேற்றிவிட்டனர். இப்படியாக நாம் பரிசீலித்துக் கொண்டிருக்கும் அந்தக் காலகட்டத்தில், சக்கா, இந்திரனை ஏறத்தாழ வெளியேற்றிவிட்டார். பிற்காலத்தில் இந்திரனை மீண்டும் அரியணையில் அமர்த்த காவிய கர்த்தாக்கள் தங்களால் இயன்றதைச் செய்தனர். எனினும் அவர்களால் அதில் வெற்றி பெற முடியவில்லை. ஏனெனில் அவரது பெயரும் புகழும் சிறிது சிறிதாக தேய்ந்துபோனது. அடிவானத்தில், மங்கிப்போய் மறைந்து போவது போலவே, அவரது தகுதிக்கும் ஆற்றலுக்கும் வாரிசாக அமையக்கூடிய ஒருவரது வடிவத்தைப்போல் தன்னை மாற்றிக்கொள்ளும் அவரை இந்தப் பதிவுகளில் நாம் பார்க்க முடிகிறது.
மற்ற வேதக் கடவுளர்களின் விஷயத்திலும் இதேபோல் தான் நடந்தது. ஆனால், ஒவ்வொரு நேர்விலும் வெவ்வேறு அளவுகளில் நடந்தது. ஒவ்வொரு நேர்வையும் விரிவாகப் பார்ப்பது மிகவும் கடினமான பணி. எதிர்காலத்தின் கடவுளான அஞ்சத்தக்க உருவம் கொண்ட சிவனின் வீரியமும் இளமையும் தாங்கிய வடிவமான ஈசன் ஏற்கனவே சோமன் மற்றும் வருணனுக்கு இணையாக இருக்கிறார். அதுமட்டுமின்றி பிரஜாபதியும் பிரம்மாவும் விரைவில் அனைத்து கடவுளர்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதில் சக்காவுடன் இணையானவர்களாகக் கருதப்படுவார்கள். அதுபோல் அக்னி வழிபாடு, மாந்திரிகம் மற்றும் வருவது உரைத்தல் போன்றவற்றுக்கு இணையாகக் கீழிறக்கிச் சொல்லப்படுகிறது. விரைவில் மக்கள் சொல்லும் நாட்டுப்புறக் கதைகளில் இகழ்ந்து பேசி சிரிக்கக்கூடிய விஷயமாக அது மாறியது. காற்று கடவுளான வாயு ஒருபோதும் முக்கியமானவர் அல்ல. பட்டியலில் சாதாரணமாகவே குறிப்பிடப்படுகிறார். அந்தக் காலகட்டத்து நூல்களில் எந்த இடத்திலும் அவர் குறிப்பிடப்படவில்லை. விரைவில் அவரும் கதைசொல்லிகள் சிரித்து மகிழக்கூடியவராக மாறுகிறார். வருணன் இன்னமும் சக்தி வாய்ந்தவராக உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளார். மிக உயர்ந்த தரவரிசையில் இருக்கிறார். ஆனால் அவர் விரைவில் மர-கடவுளாக, நாக அரசனாக, கடவுளால் ஆட்கொள்ளப்பட்ட தேவ வாக்கு அருளும் பெண்களின் அதிபதியாக மாறினார்; இப்பெண்கள், மேலை உலகின் பிதியாஸ் போல் நயமான செய்திகளை அசிரீரியாகச் சொல்பவர்கள். நமது காவியத்தில் விஷ்ணு, வேணு என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறார். எனினும், அவர் அரிதாகவே வெளியில் தோன்றுகிறார். சுத்தந்தங்களில் இன்னமும் மழைக் கடவுள் பார்ஜன்யா தான். இரண்டு காவியங்களிலும் அவர் குறிப்பிடப்படுகிறார்; அத்துடன் நாட்டுப்புறக் கதைகளிலும் இதே பண்பு உள்ளவராகவே சித்திரிக்கப்படுகிறார்.
இந்த இலக்கியத்தில் வேறு எந்த வேதக் கடவுளர்களும் குறிப்பிடப்படுவதாக எனக்குத் தெரியவில்லை. தியாஸ், மித்ரன், சாவித்திரி, பூஷன், ஆதித்யர்கள், அஸ்வினிகள் மற்றும் மருத், அதிதி மற்றும் திதி, ஊர்வசி என்று மேலும் பலரும் எங்கு போனார்கள் எனத் தெரியவில்லை. வேதம் சார்ந்த பள்ளிகளின் வரம்புக்குள் மட்டுமே அவர்கள் வாழ்கின்றனர். இவர்கள் குறித்து இனி மக்களுக்குத் தெரியப்போவதில்லை.
ரிக்வேத பாடல்கள் தொகுத்து முடிவதற்கும் பௌத்தத்தின் எழுச்சிக்கும் இடையில் நீண்ட கால இடைவெளி இருந்தது என்பதில் இப்போது சந்தேகமில்லை. வேத பாடல்களின் திரட்டு, அதனளவில் சிறியதாக இருக்கிறது; பாடல்கள் தொகுக்கப்பட்ட காலத்தின்போது இந்தியாவில் நிலவிய நம்பிக்கைகளின் முழுமையான விவரங்களை அதனால் கொடுக்க இயலவில்லை. பௌத்தம் எழுச்சியுற்றபோது காணப்பட்ட வேதப் புராண கதைகளுக்கும் மக்கள் பின்பற்றிய சமயத்துக்கும் இடையில் சில வேறுபாடுகள் இருந்தன; அவை பதிவு செய்யப்படாத கடந்தகாலத் தாக்கத்தின் காரணமாக ஏற்பட்டதாக இருக்கலாம். ஆனால், இது வேறுபாட்டின் பகுதியளவு மட்டுமே. சொல்லப்போனால் ஒரு சிறிய பகுதியை மட்டுமே அது விளக்கக்கூடும். பழைய கடவுளர்கள், அதாவது பழைய சிந்தனைகள், அவர்களது இருப்பின்போது, மிக அதிகமாக மாறிவிட்டன; அவர்களில் பலர் இல்லாமல் போய்விட்டனர். தீவிரமான வாழ்க்கைச் சூழல்களில் பரவலான செல்வாக்குடன் புதிய கடவுளர்கள் பலர் திடீரெனத் தோன்றியுள்ளனர்.
ஆனால், ஒரு முடிவு தவிர்க்க முடியாதது. இதேபோன்ற உலகத்தின் பல பகுதிகளின் வளர்ச்சி நிலைகளைப் பார்க்கையில் இந்தியர்கள் மற்ற இனத்தவரிடமிருந்து மிகவும் வேறுபட்டவர்கள்; முட்டாள்தனம் என்று சொல்ல முடியாவிட்டாலும், எழுச்சியற்ற அவர்களது பழமைவாத சமயக் கருத்துகள்தான் வேறுபடுத்திக் காட்டுகின்றன; எடுத்துக்காட்டாக, கிரேக்கர்களையும் ரோமானியர்களையும் காட்டிலும் அவர்கள் மூடநம்பிக்கைக்கு அதிகம் இடம் கொடுத்தனர், அறிவை குறைவாகவே நம்பினார்கள் என்று பொதுவான கருத்து நிலவுகிறது. இப்பார்வை கைவிடப்பட வேண்டும். வேத பிராமணர்களின் நூல்களை மிகவும் பிரத்தியேகமான ஆய்வுக்கு உட்படுத்தியதில் ஓரளவு விஷயங்கள் கிடைத்துள்ளன. நவீன நிலைமைகள் பற்றிய தவறான பார்வையை, கடந்த காலத்தைத் திரும்பவும் படிப்பதன் மூலமும் அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால், வேத பிராமணர்களின் செல்வாக்கு இல்லாமல், சுயாதீனமாக எழுதப்பட்ட அல்லது தொகுக்கப்பட்ட சமண மற்றும் பௌத்த இலக்கியங்களிலிருந்து பெறப்பட்ட புதிய ஆதாரங்களை அவற்றால் எதிர்த்து நிற்க முடியாது.
அசலான தகவல்கள் எதிரான ஒரு பார்வைக்கு இட்டுச் செல்லும். வேத காலத்திலிருந்து ஒரு நிலையான முன்னேற்றம் இருந்ததை அவை சுட்டிக்காட்டுகின்றன. இதற்கான காரணங்கள் என்னவாக இருக்க முடியும் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம். ஆனால், அந்தத் தகவல்கள் எதுவாக இருந்தாலும், அதற்கான காரணங்கள் என்னவாக இருந்தாலும், ’அசைக்கமுடியாத கீழைத் தேசம்’ என்று, சுய திருப்தி மிகுந்த அறியாமையுடன் கிளிப்பிள்ளைபோல் பேசுவோரின் சொற்களை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.
(தொடரும்)
___________
T.W. Rhys Davids எழுதிய “Buddhist India” நூலின் தமிழாக்கம்.