Skip to content
Home » பௌத்த இந்தியா #36 – சமயம் – பிராமணர்களின் நிலை – 2

பௌத்த இந்தியா #36 – சமயம் – பிராமணர்களின் நிலை – 2

பௌத்த இந்தியா

பிற்காலத்தில், எடுத்துக்காட்டாக காவியங்களில், இந்தப் பட்டியல் இன்னும் நீண்டது; தவம் கடினமானதாகவும்; சுய-சித்திரவதை வெறுப்பூட்டுவதாகச் சித்தரிக்கப்பட்டது. ஆனால், இந்தக் காலகட்டம் தொடங்கி, இப்போது இந்த மிக நவீன காலம் வரையிலும், தபசும், தன்னை வருத்திக்கொள்ளலும் இந்திய சமய வாழ்க்கையில் நிரந்தர சிந்தனையாகவும் நடைமுறையாகவும் மாறிவிட்டது. எல்லோரும் அறிந்ததுபோல் இந்தியாவுக்கு மட்டும் உரித்தானதாக இது நின்றுவிடவில்லை.

செயிண்ட் சிமியோன் ஸ்டைலிட்ஸ் (St. Simeon Stylites) குறித்த குறுநாடகத்தில், மேற்குலகில் இந்த மூடநம்பிக்கையின் வேரில் கிடத்தப்பட்டிருக்கும் இதைப்போன்ற உணர்வுகள் பற்றிய அழுத்தமான பகுப்பாய்வு ஒன்றை டென்னிசன், நமக்கு அளித்துள்ளார். ஆனால், ஒரு கிறிஸ்தவ துறவியின் கருத்து வெளிப்பாட்டுக்கு ஒருவிதமான இறையியல் தொனியைக் கொடுக்கும் கருத்துகளும் இந்தியாவில் நாம் காணும் கருத்துகளும் மிகவும் வேறுபட்டவை. கருத்துருவாக்கத்தை முழுமையாகப் பார்க்கும் இந்திய முறை, டயோஜெனெஸ் (Diogenes) உடமைகளைத் துறந்து மிகப் பெரிய களிமண் ஜாடியில் நாய்போல் ஒடுங்கி வசித்த காலத்தில் சிந்தித்தவிதத்துடன் மிகவும் ஒத்துப்போகிறது.

உண்மையில் மாறுபட்டுச் சிந்திக்கும் மெய்யியல்வாதியும் நிர்வாண துறவியுமான சேனியாவை (மிகவும் மரியாதையுடன்) குறிப்பிடப் பயன்படுத்தப்பட்ட ‘சினிக்’ (cynic) என்ற கிரேக்கச் சொல், இந்தியாவில் ‘நாய் போல் வாழ்பவன்’ (kukkura vatiko) என்று சொல்லப்படுவதுடன் மிகச் சரியாக ஒத்திருக்கிறது.

பாவத்திலிருந்து மீள்வதற்கே இந்தத் தவம் அல்லது தெய்வ குற்றத்திலிருந்து மீள்வதற்கு முறையிடுவது என்பதுபோல் இங்கு எந்த விஷயமும் எழவில்லை. மனவலிமையின் மூலம் தனது மேன்மைத்தன்மையைக் காட்டி பெருமை பேசிக்கொள்வதே தவிர்த்து வேறில்லை. வசதியான வாழ்வை மறுப்பது மட்டுமின்றி வலியை விரும்பி வரவேற்று, தனது விருப்பப்படி உடலை வைத்துக்கொள்வது. நிச்சயமாக கிறித்துவர் எவரும் இதேபோன்ற ஒன்றைச் செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டும் நோக்கம் இதில் இல்லை. அவர்களும் செய்தனர். ஆனால், அந்த விஷயத்தில், அவர்களது செய்கை அப்போது இந்தியாவில் நடைமுறையில் இருந்திராத வேறு சில சிந்தனைகளால் மறைக்கப்பட்டதாக இருந்தது.

கிழக்கிலும் மேற்கிலும் இவ்விதமான செயல்களும் சாதனைகளும் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இத்தகைய மனிதர்களுக்கு இந்தியாவில் நல்ல மரியாதை அளிக்கப்பட்டது. பௌத்த பாடலாசிரியர் ஒருவரின் வரிகளை மேற்கோள் காட்டலாம்:

தன்னை எரித்துக்கொண்டு, குளிரில் உறைந்து,
அச்சுறுத்தும் காடுகளில் தனிமையில்,
நிர்வாணமாக, நெருப்பின்றி, தனக்குள் நெருப்புடன்,
பயங்கர மௌனச் சூழலில் இலக்கை அடையப் போராடுபவர்.

மக்களது பாராட்டுகளாலும் போற்றுதல்களாலும் கிடைத்த வலிமையால், சிமியோன் (Simeon) இறப்பதற்கு முன்பு புனிதரானார். டியோஜெனெஸ் மற்றும் இந்தியாவில் அவருக்கு இணையானவராகக் கருதப்படும் மகா வீரர் ஆகிய இருவரும் முக்கியமான சிந்தனைப் பள்ளிகளை நிறுவினர். அதன்மூலம் வரலாற்றில் அவர்களது முத்திரையைப் பதித்தனர். அனைத்துக்கும் மேலாக, ஒரு கேள்வி எழுகிறது. இந்த உலகத்தில் கிடைக்கும் சுகங்களை மறுத்து, தம்மைச் சித்ரவதைக்கு உட்படுத்திக் கொள்பவர்களை ஒருவித பயம் நிறைந்த பிரமிப்புடன் பார்க்கவேண்டுமா? மற்ற மனிதர்களைக் காட்டிலும் சிறந்தவர்களாக, மிகவும் புனிதமானவர்களாகப் பார்த்து வியக்க வேண்டுமா?

இந்தக் கண்ணோட்டத்துக்கு ஓரளவு நியாயம் இருக்கிறது. அனுபவம் பிரச்னையின் மறுபக்கத்தையும் அதனுடன் சேர்ந்துவரும் தீமைகளையும் காட்டும் வரையிலும், இத்தகைய முயற்சிகள் லோகாயத நோக்கங்களுக்குப் பயன்படுகையில் மன வலிமையால் கிடைக்கும் முடிவுகள் போதுமானவையாக இல்லாதிருப்பதும், அத்தகைய நடைமுறைச் செயல்பாடுகளில் நன்கு வெளிப்படும் சுய-கட்டுப்பாடும் பொதுமக்களின் மனத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது.

இவ்வாறு இந்த மறுபக்கம் இந்தியாவில் இரண்டு திசைகளிலிருந்து முன்வைக்கப்படுவதைக் காண்கிறோம்; ஒன்று, முக்கியமாக தத்துவம் சார்ந்ததாகவும் மற்றொன்று நெறிமுறை சார்ந்ததாகவும் இருக்கிறது. உலக வரலாற்றில், இவை தொடர்பான காலகட்டத்தில் இந்தியாவில் இந்த இரண்டு இயக்கங்களும் வெளிப்பட்டவிதம் முற்றிலும் இயல்பானது. அப்போது நிலவிய, விநோதமானது என்று ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கும் வழக்கத்தால் இவை தாக்கத்துக்கு உட்பட்டன. எனினும் மத்திய கால ஐரோப்பாவில் மாணவர்கள் அங்கு செய்தது போல், இந்தியாவிலும் குரு குல மாணவர்கள் பிக்ஷை எடுத்து வாழ்ந்தவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். கிரேக்கச் சிந்தனை வரலாற்றில் பார்க்க முடிவது போலவே வழக்கத்தில் இருந்து மாறுபட்ட மெய்யியல் வாதம் செய்வோரை (sophist) பற்றியும் கேள்விப்படுகிறோம். ஆனால், விசித்திரமான செய்தி என்னவென்றால், பௌத்தத்தின் எழுச்சிக்கு முன், குரு குல மாணவர்கள் மட்டும் பிக்ஷை எடுத்து வாழ்ந்திருக்கவில்லை; ஆசான்களுமே தேச சஞ்சாரியாக பிக்ஷை எடுத்து வாழும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.

இப்படி தேச சஞ்சாரிகளாக இருந்த குரு பரம்பரையினர், பிரம்மச்சாரிகளாக இருந்தனர்; அதைத் தவிர்த்து அவர்கள் துறவிகளாக இருக்கவேண்டிய அவசியமில்லை; ஆனால், எப்போதும் மக்களால் அவர்கள் உயர்வாக மதிக்கப்பட்டனர். நாம் முன்னர் பார்த்ததுபோல், முடியாட்சிகளில் அரச குடும்பங்களும், இனக் குழுக்களில் அந்தச் சமூகத்தினரும் இவர்களைப் போன்ற தேச சஞ்சாரிகள் வந்து தங்குவதற்காக பொதுக்கூடங்களை அமைத்தனர். அங்கு, தத்துவத்திலும் சமயம் சார்ந்த விஷயங்களிலும் உரையாடல் அடிப்படையில் விவாதங்கள் நடந்தன. இவற்றில் அனைவரும், ஏன் பெண்களும், கலந்து கொள்ளலாம். சிந்தனையிலும், கருத்து வெளிப்பாட்டிலும் கலந்து கொள்வோருக்குப் பூரண சுதந்திரம் அளிக்கப்பட்டது அநேகமாக உலக வரலாற்றில் இதற்கிணையான சுதந்திரம் வேறெங்கும் குறிப்பிடப்படவில்லை.

மக்களிடையே சராசரியாகப் பொதுவான நுண்ணறிவும் நயமான பழக்கவழக்கங்களும் மிக நியாயமான அளவில் இருந்தால் மட்டுமே ஆர்வமூட்டும் இந்தச் சூழல் சாத்தியமாக இருந்திருக்கும். சீர்திருத்த காலத்துக்கு முந்தைய காலகட்டத்தில் மேற்கு ஐரோப்பா முழுவதும் மாணவர்கள் தேச சஞ்சாரம் செய்யும் வாழ்க்கையை மேற்கொண்டனர்; வரவிருக்கும் ஒரு மாற்றத்தின் அடையாளமாக அது பார்க்கப்பட்டது; அது மாற்றம் ஏற்படவும் பெரிதும் உதவியது; அதுபோலவே வட இந்தியாவில் காணப்பட்ட நிலைமைகள், தேச சஞ்சாரிகள் தமது வாழ்க்கையை விருப்பம்போல் வாழ்வதற்கு உதவின. உண்மை என்று அவர்கள் கருதியதைத் தேடிச் சென்றனர். அந்த இயக்கத்தின் முன்னோடிகளின் சிந்தனையை இப்போது நாம் புத்த மதம் என்று அழைக்கிறோம். அந்த இயக்கத்தை வளர்த்தெடுப்பதற்கு இந்த தேச சஞ்சாரிகளும் பெரிதும் உதவினர்.

தேச சஞ்சாரிகளின் ஆரம்பக்கால வரலாறு இன்னும் எழுதப்படவில்லை. இதைப் போன்ற புலனடக்கத்தை புரோகிதர் ஒருவர் பின்பற்றியது பற்றி தனிப்பட்ட நேர்வு ஒன்றில் நாம் கேள்விப்படுகிறோம். கௌதமரின் குடும்பத்தைச் சேர்ந்த அவர் பெயர் உத்தாலகா அரூணி; அவரைப் பற்றி கதைகள் பல பாதுகாக்கப்பட்டு வருகின்றன; ஆன்மிக விஷயங்களில் அவருடன் வாதத்தில் ஈடுபட்டு, அவரைத் தவறு என்று நிரூபிக்க அச்சமின்றி முன் வருபவருக்கு ஒரு தங்க நாணயம் தரத் தயாராக இருப்பதாகக் கூறியபடி அவர் நாடு முழுவதும் சஞ்சாரம் செய்தார் என்று கூறப்படுகிறது. அவரை வெற்றி கொண்டவரிடம் இவர் சீடராகிவிடுவார்.

இவ்வாறாக, நாம் பார்த்த இந்த ‘ஆன்மிக விஷயங்கள்’ பிராமணர்களுக்கே உரிய சிறப்பியல்பு என்று சுட்டிக்காட்டலாம். அவர் தோற்கடிக்கப்படும்போது இவை போன்ற பிரச்னைகள் முன்வைக்கப்படும்: உயிரினங்கள் பற்கள் இல்லாமல் ஏன் பிறக்கின்றன; அதன் பின்னர் அவற்றுக்குப் பற்கள் ஏன் வளர்கின்றன; அந்த உயிரினங்களுக்கு வயதாகும்போது பற்கள் ஏன் சிதைவடைகின்றன?

அவரை எதிர்க்கும் மரபுவாத புரோகிதரின் பதில் இப்படியாக இருக்கும்: பலியிடல் யாகத்தில் பூர்வாங்க ஆகுதி அளிப்பதற்கான தெய்வ அழைப்பில் விதிமுறைகள் ஏதுமில்லை; எனவே உயிரினங்கள் பற்கள் இல்லாமல் பிறக்கின்றன; முதன்மை யாகத்துக்கு விதிமுறைகள் இருப்பதால் பற்கள் வளர்கின்றன; யாகத்தின் இறுதி நிகழ்வுகளுக்கும் அத்தகைய விதிமுறைகள் இல்லை; எனவே வயதான காலத்தில் பற்கள் சிதைந்துவிடுகின்றன.

சமமான தெளிவும் ஏற்கக்கூடியதாகவும் இருக்கும் ஏனைய விளக்கங்கள் இனப்பெருக்க ஆற்றலின் வளர்ச்சிக்கும் சிதைவுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. அவருக்குத் தெரியவில்லை என்பதற்காக உத்தாலக அரூணி கேலி செய்யப்பட்ட ‘ஆழமான புதிர்கள்’ இவைதாம். வேதப் பிராமணர்களின் எழுத்துப்பிரதி இந்த சுவாரஸ்யமான பழைய கதையைப் பாதுகாத்து வைத்திருக்கிறது.

உலகம் முழுவதுமிருக்கும் எதிர் கருத்தாளர்களை வாதத்தில் சந்திப்பதற்காகக் கிராமம் கிராமமாக சஞ்சாரம் செய்த பெண் மெய்யியல்வாதி (தர்க்கவாதி) ஒருவரை அறிமுகப்படுத்தும் கதை ஒன்று உண்டு; வாதத்தில் அவர் தோல்வியுற்றதால், அவரை வெற்றிகண்ட பௌத்தரின் சீடராக ஆகிவிடுவார். இந்த இரண்டு கதைகளும் நடந்ததாகக் கூறப்படும் காலத்துக்கு இடைப்பட்ட நூற்றாண்டுகளில் இந்த அமைப்பு முழுமையாக வளர்ச்சியுற்றது. ஆனால், கெடுவாய்ப்பாக வேதப்பிராமணர்களின் பதிவுகளில் இதைப் பற்றி மிகக் குறைவாகவே காணப்படுகிறது; ஆகவே, அந்த முன்னேற்றத்தின் தடத்தைக் கண்டறிவது எளிதாக இல்லை.

அவர்களது வாழ்வாதாரத்துக்கு மதிப்புக்கும் ஆதாரமான பலியிடல்-யாகச் செயல்பாடுகளை இகழ்வானதாகக் கருதிய ஆண்களும் பெண்களும் இணைந்திருக்கும் ஓர் அமைப்பின் மதிப்பு படிப்படியாக வளர்ந்து வருவதை மிகவும் இயல்பாகவே வேதப் பிராமணர்கள் விரும்பவில்லை. ஆனால், அவர்களால் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய இயலவில்லை. அவர்கள் நடத்தித் தருவதற்குத் தயாராக இருந்த யாகங்கள், ஒரு காலத்தில் ராஜ்ஜிய அளவிலும் பழங்குடி விழாக்களிலும் அவை பெற்றிருந்த முக்கியத்துவத்தை முற்றிலும் இழந்திருந்தன. அவை இப்போது ஒரு தனிநபரின் நலனுக்காக, அவரது செலவில் நடத்தப்படும் மந்திரச் சடங்குகளாக மாறிவிட்டன. இவ்வாறு நடத்திக் கொள்வதற்குத் தகுதியுள்ள ஒவ்வொருவரும், தமக்காக யாகங்கள் செய்துகொள்ள விருப்பமுள்ளவர்களாக இருந்தனர் என்பதாக வேதப் பிராமணர்களின் பதிவுகளில் காணப்படுகிறது.

நிஜ வாழ்க்கையில் அதற்கான செலவைப் பார்த்துப் பின்னடைந்தவர்கள் அநேகமாகப் பலர் இருந்திருக்கலாம்; அத்துடன் அவர்கள் இதுபோன்ற மாய மந்திரத்தை விரும்பினால், வேறொருவரின் மந்திரத்தை, அதில் மலிவான வகையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். எவ்விதம் பார்த்தாலும், புரோகிதத்துவம் என்பதற்கு மையப்படுத்தப்பட்ட அமைப்பு எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை; அவர்களது கடவுளர்களுக்கு நிரந்தரமான கோயில்கள் இல்லை; அவர்களது வழிபாட்டுச் சடங்குகள் அல்லது புரோகிதர்களின் செல்வாக்குக்கு முற்றிலும் அப்பால் அடிக்கடி செல்லக்கூடிய புனிதமான ஆலயங்களாக, அவர்கள் புனிதமானதாகக் கருதும் மரங்களும் அல்லது உள்ளூர் கடவுளர்களை வழிபடப் பயன்படும், மதிக்கப்பட வேண்டிய பொருட்களும் இருந்தன.

வேதப்பிராமணர்கள் தங்களுக்குள் பிரிந்துகிடந்தனர். யாகம் நடத்துவதற்கு உரிய தட்சணைகள் விஷயத்தில் அவர்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டனர். அவர்களது தேவைகள் அனைத்தையும் பராமரிக்கும் அளவுக்கு இவர்களது சேவைகளை விரும்புவோர் போதுமான அளவில் இல்லை. ஆகவே, பிராமணர்கள் வேறுவிதமான தொழில்கள் அனைத்தையும் செய்யத் தொடங்கினர். அத்துடன் தொடர்ச்சியாக யாகம் தொடர்பான செயல்களில் ஈடுபடாதவர்கள், அவர்களது கண்ணோட்டத்துக்கு முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை குறித்த, சமயம் பற்றிய பார்வைக்குப் பெரும்பாலும் திரும்பினர்.

யாகத்துக்கும் மேலானதாக தபஸ் மற்றும் புலனடக்கத்தை பிராமணர்கள் தரவரிசைப்படுத்தியதைக் காண்கிறோம். மேலே குறிப்பிட்ட உள்முகப்பார்வையை கருத்தில் கொண்டவர்களில், அவர்களுக்கு எதிர் நிலையில் இருந்தவர்களின் வரிசையில், சாமானியர்களாக அல்லது தேச சஞ்சாரிகளாகச் சேர்ந்த பிராமணர்களைக் காண முடிகிறது. எனவே, அவர்கள் விரும்பினார்களோ இல்லையோ அவர்களால் புதிய சிந்தனைகளின் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை; உள்ளே வேகமாக வந்த அலைநீரை அவர்களது அமைப்புக்குச் சாதகமான வாய்க்கால்களின் வழியாக மடைமாற்றிக் கொள்ள வேதப் பிராமணர்கள் முயன்றனர்.

பௌத்த எழுச்சிக்குப் பிறகான சிறிது காலத்துக்குப் பிறகுதான் – ‘ஆஸ்ரமங்கள்’ என்ற புகழ்பெற்ற கோட்பாட்டைப் பிராமணர்கள் வகுத்தார்கள்; அதன்படி பிராமணச் சிந்தனைப் பள்ளி ஒன்றில் அவர்கள் பல ஆண்டுகள் படித்துத் தேர்ச்சி பெறவேண்டும்; அதன் பின் பிராமணிய நூல்களில் முறைப்படுத்தப்பட்டுக் கூறப்படும் விதிகளின்படி மணம்புரிந்து, குடும்ப வாழ்க்கையில் ஈடுபடவேண்டும்; அதன்பின்னர்தான், எவரும் துறவியாகவோ அல்லது தேச சஞ்சாரியாகவோ மாற முடியும். உயர்நிலையை அடைவதற்கு ஒரு துணிச்சலான முயற்சி இது.

வெற்றி பெற்றிருந்தால், ஒட்டுமொத்த பெளத்த இயக்கத்தையும் அது நிறுத்தியிருக்க கூடும். ஆனால், எப்பொழுதும் உரிய முகவரியைச் சென்று சேராத கடிதமாகவே, செயலிழந்த கோட்பாடாகவே இருந்தது; நிச்சயமாக, இப்போது நாம் பரிசீலித்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் அப்படித்தான் இருந்தது. ஆனால், கிறித்தவச் சகாப்தத்துக்குப் பிந்தைய வேதப்பிராமணர்களின் பதிவுகள் இந்த விஷயங்களைப் பேசுகின்றன; விதிகள் கடைபிடிக்கப்பட்டதாகக் கூறுகின்றன என்பது முற்றிலும் உண்மை.

ஆனால், அவை இந்திய வாழ்க்கை குறித்த மெய் நிகழ்வுகளை நமக்குத் தருவதில்லை. அவை தருவதும், அல்லது தருவதாகக் கருதப்படுவதும், புரோகிதர்கள் கொடுக்கவேண்டும் என்று விரும்பிய தகவல்கள் மட்டுமே. அந்தத் தத்துவத்தில் மெள்ள மெள்ள ஏற்பட்ட வளர்ச்சி மற்றும் அதிலிருந்து வேறுபடும் பார்வைகள் குறித்தும், மக்கள் மத்தியில் அவற்றுக்கு இருந்த தளர்வான பிடிப்பு பற்றியும் அறிந்துகொள்ள ஏராளமான சான்றுகள் அந்தப் பதிவுகளில் உள்ளன. அந்த ஆதாரங்களை என்னால் திரட்ட முடிந்தது; வேறொரு இடத்தில் அவற்றை சேகரித்து வைத்துள்ளேன். மிகவும் ஆர்வமூட்டும் அவை வரலாற்று அடிப்படையில் முக்கியமானவை; மிகவும் இறுதியான அவற்றை, மிகவும் நீளமானது என்பதால் இங்குக் கொடுக்க இயலவில்லை.

(தொடரும்)

___________
T.W. Rhys Davids  எழுதிய “Buddhist Indiaநூலின்  தமிழாக்கம்.

பகிர:
nv-author-image

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *