Skip to content
Home » பௌத்த இந்தியா #37 – சமயம் – பிராமணர்களின் நிலை – 3

பௌத்த இந்தியா #37 – சமயம் – பிராமணர்களின் நிலை – 3

பௌத்த இந்தியா

பௌத்தம் எழுச்சி பெறுவதற்கு முன்பே, வேதப்பிராமணர்கள் அவர்கள் பின்பற்றிய புதிரான விஷயங்கள் சிலவற்றுடன் மிகவும் இணக்கமாக இருக்கக்கூடிய ஊகச் சிந்தனை வகைகளை சிறிய விளக்க நூல்களாக அமைத்து கொண்டனர்; மிக உயர்ந்த உண்மையாக அவற்றை. பலியிடும் யாகம் குறித்த புனித நூல்களுக்கு இவற்றைப் பிற்சேர்க்கைகளாக இணைத்துக்கொண்டனர். இந்த அம்சத்தில் அவர்கள் பின்பற்றிய நடைமுறை, அவர்கள் விரும்பி வழிபடும் கடவுளர்களின் வரிசையில் சேர்க்கப்படாத, ஆனால், மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த கடவுளர்களை நடத்தியதற்கு இணையாக இருந்தது.

வரலாற்று இயக்கங்களை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தும்போது, வேதப்பிராமணர்கள் பின்பற்றிய, அவர்களது நூல்களில் பதிவு செய்திருக்கும் சிந்தனைகள் தவிர்த்து, வேறு சில சிந்தனைகளும் வழக்கங்களும் நடைமுறையில் இருந்திருக்கவேண்டும் என்பதைத் தெளிவாக அறியமுடிகிறது. இவ்வாறு குறிப்பிடப்படும் மாற்றுச் சிந்தனைகள் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்கான மதிப்பு மிக்க சான்றுகள் நமக்குக் கிடைத்திருக்கும் பிற்கால இலக்கியங்களில் காணப்படுகின்றன. எனவே, மற்ற விஷயங்களைப்போலவே, பேசப்படும் இந்த விஷயத்திலும் வேதப்பிராமணர்களின் நூல்கள் மதிப்புமிக்க ஆவணங்களைப் பொதிந்து பாதுகாத்துள்ளன என்பது தெரிகிறது; ஆனால், அவை பகுதியளவே உள்ளன.

அவர்கள் அவ்வாறு தேர்ந்தெடுத்த கருத்துகள், இயல்பாக அனைவரும் எதிர்பார்ப்பது போல் யாகங்கள் குறித்த அவர்கள் வைத்திருக்கும் கருத்துகளை அடிக்கோடிட்டுக்காட்டும் அதே தொல் இறைக்கோட்பாட்டுக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டவையே. பௌத்தத்துக்கு முந்தைய நூல்களான இந்த உபநிடதங்களில் ஆன்மா குறித்துப் பேசப்படுகிறது; ஒவ்வொரு மனித உடலுக்குள்ளும் அது இருப்பதாகக் கருதப்படுகிறது. மனித வாழ்க்கை மற்றும் அதன் இயக்கத்துக்கான ஒரே விளக்கமாகவும் போதுமான விளக்கம் என்றும் கூறப்படுகிறது. உயிர் இருக்கும் ஓர் உடலில், இயல்பான நிலையில் இந்த ஆன்மா இதயக்குழியில் வசிக்கிறது. பார்லி அல்லது அரிசி தானியத்தின் அளவில் இருப்பதாகவும் விவரிக்கப்படுகிறது. பிற்கால ஊகச் சிந்தனைகளில் கட்டை விரல் பருமன் அளவுக்கு அது வளர்கிறது; அதனால், அதை ‘குள்ளன்’ என்று கூறுகின்றனர். ஆனால், வடிவத்தில் ஒரு மனிதனைப் போல் இருந்தது. அதன் தோற்றத்தை, ஓர் உவமானத்தின் மூலமாகவும் சித்திரிப்பது கடினமாக இருந்தது.

ஆனால், வேறு சில பத்திகளில் புகை நிறத்தின் கம்பளி போன்று, செந்நிறப் பூச்சி போன்று, சுடர் போன்று, வெண் தாமரை போன்று, மின்னல் ஒளி போன்று, புகையற்ற வெளிச்சம் போன்று இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆன்மா எப்படி உருவாகிறது என்பது குறித்த நம்பிக்கைகள் மாறுபடுகின்றன. பிரக்ஞை, மனம், மூச்சு, கண் மற்றும் காதுகள்; பூமி, நீர், நெருப்பு மற்றும் தூய வான்வெளி; வெப்பமும் வெப்பமின்மையும், ஆசையும் ஆசையின்மையும்; கோபமும் கோபமின்மையும்; விதிகளும் விதியின்மையும் கொண்டதாக இருக்கிறது; ஒரு சொற்றொடரில், அனைத்து பொருட்களும் அதில் இருக்கின்றன என்று ஒரு பத்தியில் கூறப்படுகிறது. இவற்றிலிருந்து, இங்கு ஆன்மா எனப்படுவதை பருப்பொருள், மூலக்கூறு என சொல்லலாம் (பொருளின் நான்கு கூறுகளும்- அதாவது நிலம், நீர், நெருப்பு, ஆகாயம்- அதற்குள் இருக்கின்றன). ஆனால், தெரிந்தெடுக்கப்பட்ட மனம் சார்ந்த சில குணங்களும் இருக்கின்றன.

ஆர்வமூட்டும் பழமையான, மிக மிக புதிர் நிறைந்த மற்றொரு நூலில் பொருளின் மூலக்கூறுகள் குறித்து முதலில் விளக்கப்படுகிறது. அத்துடன், ஐந்து ஆன்மாக்கள் என்றொரு விஷயமும் பேசப்படுகிறது; ஒவ்வொன்றும் மற்றொன்றின் உள்ளே உறைகிறது; அனைத்தும் ஒன்றுதான். இருப்பினும், அதற்கு வெளியில் இருக்கும் ஒன்றிலிருந்து வேறுபட்டது. அவை ஒவ்வொன்றும், மனித வடிவில், முறையே உணவு, மூச்சு, மனம், பிரக்ஞை, மகிழ்ச்சி ஆகியவற்றால் உருவானவையாக இருக்கின்றன.

ஆன்மா உடலை விட்டு வெளியேறியதால்தான் சில வகை நோய்கள் ஏற்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. அதை மீண்டும் உடலுக்குள் வரவழைப்பதற்கு வசீகர மந்திரங்கள் சில பதிவு செய்யப்பட்டுள்ளன. கனவு தோன்றும் அளவுக்கு நாம் தூங்குகையில் ‘ஆன்மா’ உடலிலிருந்து விலகி வெளியில் உலவும். ‘எனவே, ஒரு மனிதன் தூங்கும்போது அவனைத் திடீரென்று எழுப்பவேண்டாம்; ஆன்மாவால், அவனிடம் திரும்பி செல்வதற்கு வழியைக் கண்டுபிடிக்க இயலாது. அதனால், அவனைக் குணப்படுத்துவது கடினம்.’ என்கிறார்கள்.

நாம் கனவு காணும் போது ஆன்மா, உடலை விட்டு வெளியேறி, அதன் விருப்பம் போல் அலைகிறது. அது தன் கற்பனைக்கேற்ப ஓர் உலகை உருவாக்குகிறது; தேர்களையும், வீடுகளையும், ஏரிகளையும், ஆறுகளையும், பலவிதமான வடிவங்களையும் உருவாக்கிக் கொள்கிறது; ஓர் அழகிய விளையாட்டு மைதானத்தை உருவாக்குகிறது; அதில் அது நடிக்கிறது, மகிழ்ச்சியுடன் இருக்கிறது, வேதனையுறுகிறது. ‘பெண்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறது, அல்லது, நண்பர்களுடன் சிரித்து விளையாடுகிறது, அல்லது பயங்கரமான காட்சிகளைப் பார்க்கிறது’.

ஒரு ராஜாளி சிறகுகளை விரித்து, வானத்தில் அங்கும் இங்கும் பறந்து அலைந்து திரிந்து, சோர்ந்து, களைத்துப்போன பின்னர் இறுதியில் கூட்டுக்குத் திரும்புவதுபோல், அதனுடைய விளையாட்டு மைதானத்திலிருந்து ஆன்மா உடலுக்குத் திரும்புகிறது. ஆழ்ந்த, விரைவான தூக்கம்; அதற்கு மேல் அதற்குத் தேவையில்லை. என்ன ஓர் அழகான, வசீகரமான சித்திரம்!

இத்தகைய கனவுகள் நல்வாய்ப்பு அல்லது அதற்கு எதிரான மோசமானவை குறித்த முன்னறிவிப்புகள். இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் அதேமாதிரியான பண்பாடு மற்றும் நாகரீகக் காலகட்டங்களில் இருந்தவர்களிடம் இதுபோன்ற கற்பனைகள் உருவாகி, நிலவின.

ஆன்மா மீண்டும் உடலுக்குத் திரும்பிய பின்னர், கனவற்ற உறக்கத்தில் சாவகாசமாகப் படுத்திருக்கும்; தலை முடி தொடங்கி, கால் நகங்களின் நுனிகள் வரை முழுமையாக வியாபித்திருக்கும்; ஹிதா எனப்படும் எழுபத்திரண்டாயிரம் ரத்தக் குழாய்களின் மூலம் இது நடைபெறுகிறது. அப்போதுதான் ஆன்மா மிகத் துல்லியமாக, ஒளியைப் பெறுகிறது என்பது கொஞ்சம் விந்தையான கருத்தாகத்தான் இருக்கிறது.

ஆன்மா உடலிலிருந்து எவ்வாறு வெளியேறுகிறது; மீண்டும் உடலுக்குள் எப்படிச் செல்கிறது என்பது குறித்து நமக்கு ஏதும் கூறப்படவில்லை. இது வியப்பான ஒன்றல்ல. ஏனெனில், ஆன்மா அதனுடைய முதல் உடலுக்குள் எவ்வாறு நுழைந்தது என்பது பற்றிய கருத்துகள் முரண்படுகின்றன: கருத்தரிக்கும் போதா, கருவின் முதல் இயக்கத்தை தாய் உணரும்போதா குழந்தை பிறக்கும் போதா என்று தெரியவில்லை. இந்தப் பார்வை குறித்த அனைத்துக் கருத்துகளும், இப்போது மேலை நாடுகளில் இருப்பதைக்காட்டிலும், அக்கால இந்தியாவில் சந்தேகமின்றி தெளிவற்றதாகத்தான் இருந்தன. அந்த ஆன்மா இந்த உடலில் பிறப்பதற்கு முன், வேறு ஓர் உடலில் இருந்ததாகக் கருதப்படும் செய்திகள் சில பத்திகளில் காணப்படுகின்றன.
வேறு சில பத்திகளில், வேறுவிதமான செய்திகள் பதிவாகியுள்ளன: அதாவது உயிரினங்கள் தோன்றும்போது, ஆன்மா அதனுடைய முதல் உடலில், மண்டை ஓட்டிலிருக்கும் பிளவின் வழியாகக் கீழ்நோக்கி இதயத்துக்குள் செருகப்படுகிறதாம். ஆனால், மேல்நோக்கி, குடல் மற்றும் வயிற்றின் வழியாக, தலைக்குள் ஆன்மா செருகப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தும் பத்தி ஒன்றையும் நாம் படிக்க முடிகிறது. அத்துடன், விநோதமான ஊகச் சிந்தனை ஒன்றையும் காண்கிறோம்: அடுத்தத் தலைமுறைக்கு ‘விதை’ மூலம் ஆன்மாவை மாற்றுவது. அதில் மூன்று வகைகள் உள்ளனவாம்.

அந்தச் சிந்தனைகளில் ஒன்று இது: மனித ஆன்மாக்கள் சில சந்திரனுக்குச் செல்கின்றன; அப்போது அவை அங்கிருக்கும் கடவுளர்களுக்கு உணவாகின்றன; செய்த நற்செயல்களின் விளைவாக/ அதன் அடிப்படையில் கடவுளர்களுடன் ஐக்கியமாகின்றன. நற்செயல்களின் பலன்கள் தீர்ந்துவிட்டால், கடவுளிடமிருந்து விடுபட்டு அவை தூய வான்வெளிக்குச் செல்கின்றன; அங்கிருந்து காற்றுக்கும், காற்றிலிருந்து மழைக்கும், மழையிலிருந்து இந்த நிலத்துக்கும், நிலத்திலிருந்து தாவரங்களுக்கும் மாறுகின்றன. தாவரங்களில் இருந்து அவை ஆண்களுக்கு உணவாகின்றன; ஆண்களிடமிருந்து அவை பெண்களுக்குள் செல்கின்றன.

சாதாரணமாக, ஒரு மனிதன் இறந்த பின்னர், அவனது இதயத்தின் மேல் பகுதி ஒளிரத் தொடங்கும். இந்த ஒளிதான் ஆன்மாவை வழிநடத்துகிறது. இதயத்திலிருந்து ஆன்மாவைக் கண்ணுக்குள் இட்டுச் செல்கிறது; அதன்பின்னர் கண் வழியாக வேறொரு உடலுக்குச் செல்கிறது; அந்த உடலுக்குச் சொந்தமான மனிதன் செய்த செயல்கள் உயர்ந்ததா இல்லையா என்ற அடிப்படையில் ஆன்மா அந்த உடலிலிருந்து நீங்குகிறது. அவனது ஆசைகளும் ஏக்கங்களும் தீர்ந்துபோன ஒரு மனிதனின் ஆன்மா, மண்டை ஓட்டு (தலை உச்சி) பிளவின் வழியாகப் பிரம்மனிடம் செல்கிறது.

ஒவ்வொரு நேர்விலும் அது பயணிக்கும் வழியில் பல நிறுத்தங்கள் இருக்கின்றன; அதாவது வழியிலிருக்கும் இடங்கள். ஆனால், இவை குறித்தும் மற்றும் வேறு சில விவரங்கள் குறித்தும் வேறுபட்ட கொள்கைகள் இருக்கின்றன. இந்தக் கருத்துகளை வேறொரு இடத்தில் விவாதித்துள்ளேன். மேலும், மிகக் கவனமான ஆய்வுகள், வேதப் பிராமண இலக்கியங்களின் வேறு சில பகுதிகளிலும் இவை போன்ற கருத்துகள் பதிவாகியுள்ளதைச் சந்தேகத்துக்கு இடமின்றி வெளிப்படுத்துகின்றன; ஆனால், அதிகம் பழமையான உபநிடதங்களில் அவை காணப்படவில்லை. எனினும் அவை பழமையானவை என்ற முத்திரையைத் தாங்கி நிற்கின்றன. மகாபாரதத்தில் (xii. 11704) சொல்லப்பட்டிருப்பதுபோல் இறந்துகொண்டிருக்கும் ஒருவன் அவனது முழங்கால்களை மடித்துக் குறுக்கும்போது, முழங்கால்களின் வழியாக ஆன்மா அவனை விட்டு வெளியேறி சாத்யாகளிடம் செல்வதாக அது கூறுகிறது.

ஆனால், இந்தப் பிறவியில் ஒரு மனிதன் யாகம் செய்வதன் மூலமோ அல்லது தவம் இயற்றுவதன் மூலமோ மறுபிறப்பு என்பதிலிருந்து ஆன்மாவுக்கு விடுதலை கிட்டாது என்பதில் ஏறக்குறைய ஒருமித்த கருத்து உபநிடதங்களில் காணப்படுகிறது. நிரந்தர உண்மையான, அனைத்துச் செயல்களுக்கும் அடிப்படையாகவும் காரணமாகவும் இருக்கும் அந்த மாபெரும் ஆன்மாவும் மனிதனின் ஆன்மாவும் ஒன்று எனக் கூறப்படுகிறது; இது ஒரு வகையான, இறையியல் அல்லது தொல் இறைக் கோட்பாட்டின் அடிப்படையிலான உள்முகப் பார்வையாக இருக்கலாம்.

ஆகவே, நமது வரலாறு தொடங்கிய அந்தக் காலகட்டத்தில், இந்தச் சிந்தனைகள் ஒரு முழுமையான சுழற்சியை முடித்துவிட்டன. ஓர் உடலுக்குள் இருப்பதாகக் கருதப்படும் ஹோமுங்குலஸ் (மனிதப் பிரதிமை) போன்றொரு மிக நுட்பமான விஷயமான, ஆன்மா குறித்த கருதுகோள், மனித உயிர்களின் வாழ்க்கை மற்றும் இயக்கம், தூக்கம் மற்றும் இறப்பு ஆகியவற்றை விளக்கத் தொடங்கியது. இதே அளவிலான ஒத்திசைவுடன், புற உலகின் இது போன்ற நிகழ்வுகளையும் போதிய அளவு அறிவுப்பூர்வமாக விளக்கியது. அது விரிவடைந்தது. அத்துடன் மேலும் மேலும் பரவலாக நீட்டிக்கப்பட்டது.

சூரியனுக்குள் ஓர் ஆன்மா இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில், விண்ணுலகங்களுக்கு இடையே, வெளிப்படையான ஒரு நோக்கத்துடன், சூரியன் கம்பீரமாக வலம் வருவதையும், அதன் உதயத்தையும் அஸ்தமனத்தையும், அதன் அழகையும், ஒளியையும் பிரகாசத்தையும் வேறு எப்படி விளக்க முடியும்? அதனுடைய இயக்கம் ஓரளவு புதிரானதென்றால், கீர்த்தி வாய்ந்த இந்தப் படைப்பினுடைய ஆன்மாவின் நோக்கங்களுக்கு வரம்பு நிர்ணயிப்பதும், அல்லது வரையறுப்பதும் யார்? இதில் விவாதம் செய்ய ஏதுமில்லை. அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்படி யாராவது சந்தேகப்பட்டால், நிந்தனையாளர்களாக அவர்கள் சித்திரிக்கப்படுவார்கள்.

கடவுளர்கள் என்று அவர்கள் அழைத்த இந்த ஆன்மாக்கள், இயல்பில் அவற்றை உருவாக்கிய மனிதர்களின் மூளைக்கு வெளியில் நிச்சயமாக வசிக்கவில்லை. அவை மனிதனுடைய ஆன்மாவின் தர்க்கரீதியான அனுமானங்கள். அத்துடன் புறத்திலிருக்கும் இந்த ஆன்மாக்கள்- இந்தக் கடவுளர்கள்-மனித உடலில் வசிப்பதாகக் கூறப்படும் ஆன்மாக்களுடன் தோற்றத்திலும் இயல்பிலும் ஒத்திருந்தன. எனினும், இந்தப் புறநிலை ஆன்மாக்களை- கடவுளர்களை உருவாக்கிய மனிதர்கள், அவர்களுக்குள் இருக்கும் ஆன்மாக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, உணர்வுக்கு அப்பாற்பட்ட மெய்யான ஒன்றாக அவற்றை பார்த்தனர். அவர்கள், அதாவது கடவுளர்கள் எப்போதும் மாறிக்கொண்டே இருந்தனர்; அதாவது அவர்களைப் பற்றிய மனிதர்களின் கருத்துகள் எப்போதும் மாறிக்கொண்டும், நகர்ந்துகொண்டும், மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டும் இருந்தன.

இந்தியப் புராணங்களின் நீண்ட வரலாறு, இத்தகைய மாற்றங்களின் வரலாறு எனக் கூறலாம். எப்போதும் அது இறையியல் காரணங்களைச் சார்ந்து இருந்ததில்லை. ஒவ்வொரு மாற்றத்தின் போதும் புறத்திலிருக்கும் ஆன்மாக்களான- கடவுளர்களின் உணர்வுக்கு அப்பாற்பட்ட மெய் நிலையும், மனிதர்களுக்குள் வசிக்கும் ஆன்மாக்களிலிருந்து அவை வேறுபட்டிருப்பதும், முன்னைக்காட்டிலும் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிந்ததுபோல் இருந்தது.

இப்போதுதான் எதிர்வினை என்பது வந்தது. பௌத்தம் தோன்றுவதற்குச் சற்று முன்புவரையிலும் சிந்தனையாளர்கள் மத்தியில், ஒரு கடவுள் மற்றொரு கடவுளுடன் ஒத்திருப்பதுதான் என்ற கருத்து நிலவியது. ஆனால், சாதாரண மக்கள் அப்படி நம்பவில்லை. அதன் பின்னர்தான், தொன்மையான ஆன்மா, இந்த உலகத்தின் ஆன்மா, ஆக உயர்ந்த ஆன்மா-பரமாத்மா என்ற கருதுகோள் பரவத். தொடங்கியது. பரமாத்மாவிடமிருந்துதான் ஏனைய அனைத்துத் தேவர்களும் ஆன்மாக்களும் தோன்றின. மிகவும் துணிச்சலான இந்த ஊகச் சிந்தனையில் ஓர் ஆழ்ந்த உண்மை இருந்தது. மனிதருக்குள் இருக்கும் ஆன்மா கடவுளுடன் ஒத்திருப்பதாகக் கருதப்பட்டது; அந்தக் கடவுள் தான், ஒரே, அசலான மற்றும் உண்மையான யதார்த்தம்; ஆனால், அதேநேரத்தில் இதன் வரலாற்றை ஆராய்ந்தால், ஆன்மா என்பதுதான் அசலான சிந்தனை; கடவுளர்கள் அதிலிருந்துதான் தோன்றினர் என்பது வெளிவருகிறது.

இந்தச் சிந்தனையைப் பின்பற்றிய வேதப்பிராமணர்களால் இந்த மாபெரும் பொதுமைப்படுத்தல் நிகழவில்லை; அவர்களது சிந்தனைப் பள்ளிகளிலும் தோன்றவில்லை. அதற்கான சான்றுகள் ஏராளம் நமக்குக் கிடைத்துள்ளன. பொதுமைப்படுத்தலில் மிக நுட்பமான ஒன்று உள்ளது; அதாவது இந்தக் கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் முக்கியமான அடித்தளமாக, இந்தக் கருத்தைச் சிந்தித்து வேதப் பிராமணர்களுக்குக் கற்பித்த சத்ரிய இனத்தவர்களின் பெயர்கள் வேதப்பிராமண இலக்கியத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதே அது. இவற்றைப் பின்பற்றிய வேதப்பிராமணர்களில், இந்த விஷயங்களை அவர்களது புனித இலக்கியங்களில் சேர்ப்பதற்கு அனுமதி பெறுவதில் அதிகம் பங்களித்தவராக உத்தாலக அரூணி என்ற கௌதமர் குறிப்பிடப்படுகிறார்;  ‘ஆன்மிக விஷயங்கள்’ குறித்த வாதங்களில் அவரது தோல்வி பற்றி முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிந்தனை இந்த நிலையை எட்டியதும், ஆன்மா என்ற கோட்பாட்டின் அடிப்படையிலான ஊகச் சிந்தனை அதற்கும் அப்பால் செல்லமுடியவில்லை. அகத்திலும் புறத்திலும் வசிக்கும் ஆன்மாக்களின் இயல்பு மற்றும் குணங்கள், மற்றும், அவைகளுக்கு இடையிலான உறவுகள் பற்றிய கருத்துகளில் மட்டுமே மாற்றம் ஏற்படுவது சாத்தியமானது. அதன் பின்னர், ஆனால், சற்று தாமதமாக சீனாவில் அதிகத் தெளிவின்றியும், அதன் பின்னர் கிரேக்கத்திலும் இந்த ஊகச் சிந்தனை இந்த நிலையை அடைந்தது. ஆனால், இந்தியாவில், இந்தியாவில் மட்டுமே, இதற்கு அடுத்துச் செல்வதற்கு அடி எடுத்து வைக்கப்பட்டது. சத்திரியரான கௌதமர் மற்றும் அவரது சீடர்கள் ஆன்மா என்ற கோட்பாட்டை முற்றிலும் கைவிட முடிவு செய்தனர். அவர்கள் உருவாக்கிய புதிய தத்துவத்தில் (அது சரியா தவறா என்பது இங்கே பிரச்னை இல்லை) ஆன்மா இல்லை; அல்லது ஆன்மாக்கள் எந்தப் பங்களிப்பும் செய்யவில்லை.

இந்த முழுமையான மற்றும் பரந்த தொலைநோக்கு நடவடிக்கை பாமரர்களால் எடுக்கப்பட்டது என்பது வியப்புக்குரிய ஒன்றல்ல. வேதப்பிராமணர்களின் அதிக அளவிலான செல்வாக்கால், இந்தியர்கள் அந்த நேரத்தில் பிற மனிதர்களைக் காட்டிலும் மூடநம்பிக்கை அதிகம் கொண்டவர்களாக இருந்தனர் என்று கருதுவது சான்றுகளைத் தவறாகப் புரிந்துகொள்வதாகும். இதற்கு நேர்மாறாக, நன்கு வரையறுக்கப்பட்ட உணர்வு சாதாரண மக்களிடம் இருந்தது; உண்மையான புரிதலும், வலுவான இயல்பான அறிவும், இந்த விஷயங்கள் அனைத்திலும் பரந்துபட்ட விநயமும், எதையும் வரவேற்கும் தாராள உணர்வும் அவர்களிடம் காணப்பட்டன. நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் சிந்தனையிலும் அவற்றை வெளிப்படுத்துவதிலும் உலகம் இதுவரையிலும் கண்டிராத அளவுக்கு, முழுமையான மற்றும் சந்தேகத்துக்கு இடமற்ற சுதந்திரம் இருந்தது என்ற உண்மையை வேறு எப்படி விளக்க முடியும்?

இவ்வாறான நிலைமைகளுக்குக் காரணமாக, அன்றைக்குப் பெரும்பான்மையாக நிலவிய மிக எளிதான மற்றும் எளிமையான பொருளாதார நிலைமைகள் இருந்தன என்பதைக் கவனிக்கத் தவறினால், அக்கால வரலாற்றின் முக்கியமான அம்சம் ஒன்றைப் புறக்கணித்துவிடும் சாத்தியமுள்ளது.

(தொடரும்)

___________
T.W. Rhys Davids  எழுதிய “Buddhist Indiaநூலின்  தமிழாக்கம்.

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *