Skip to content
Home » புத்த ஜாதகக் கதைகள் #1 – அறிமுகம்

புத்த ஜாதகக் கதைகள் #1 – அறிமுகம்

புத்த ஜாதகக் கதைகள்

இந்தியத் துணைக்கண்டத்தின் மகாபாரதம், இராமாயணம், பஞ்சதந்திரக் கதைகள் போன்று ஜாதகக் கதைகளும் வெகு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை.

இந்தியர்களின் வாழ்வுடன் தொடர்புடையதாகத் தோன்றும் இக்கதைகள் பெரும்பாலும், கௌதம புத்தரின் முற்பிறப்பு நிகழ்வுகளை விவரிக்கின்றன. மனித உருவிலோ விலங்காகவோ அந்தப் பிறவியில் அவர் ஆற்றிய செயல்கள் அவை.

ஜாதகம் என்றால் ‘பிறப்பு தொடர்பானது’ என்கிறது கிரந்தம். இந்த ஜாதகக் கதைகளில், கௌதம புத்தரின் வேறு பிறவிகளில் நிகழ்ந்த செயல்கள், நடவடிக்கைகள் சுவாரஸ்யமான கதைகளாக, அறநெறி போதனைகளுடன் சொல்லப்படுகின்றன.

பௌத்தத்தில், புத்தர் அல்லது புத்தம் என்பது ஒரு நிலை; அதாவது அறிவொளி பெறுதல் அல்லது ஞானநிலை எய்துதல். அதுபோல், நாம் அறிந்திருக்கும் கௌதமர் மட்டுமே புத்தர் அல்ல. கௌதம புத்தர், அந்த ஞான நிலையை அடைந்த புத்தர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது.

இந்த ஜாதகக் கதைகள் அத்தகைய புத்தம் என்ற நிலையை அடைவதற்கான நெடிய பாதையில் கடக்க வேண்டிய பல பிறவிகளையும், செயல்களையும் ஆன்மிகப் பயிற்சிகளையும் சுட்டிக் காட்டுவன என்று பௌத்தப் பள்ளிகளின் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். புத்த நிலையை அடையவேண்டும் என்று இதற்கு முந்தைய புத்தரான தீபங்கரர் முன்னிலையில் கௌதம புத்தர் உறுதி பூண்டதாகவும், அந்த நடைமுறையில் பல பிறவிகளில் அவராற்றிய பணிகளைத் தனது நினைவுகளிலிருந்து அவர் கூறுவதாகவும் பாரம்பரியப் பார்வை ஒன்று கூறுகிறது; எனவே, இவை ஜாதகங்கள் என்றழைக்கப்படுகின்றன.

ஜாதகத் தொகுப்புகளில் மொத்தம் 547 கதைகள் உள்ளன. சில தொகுப்புகளில் எண்ணிக்கைக் குறையக்கூடும். காரணம், சில கதைகள், ஒருமுறைக்கு மேல் சொல்லப்படுகின்றன.

பண்டைய இந்தியாவில் இக்கதைகள் பௌத்தப் பள்ளிகளால் ஆக்கப்பட்டு – அல்லது சொல்லப்பட்டு, அடுத்தடுத்து சீடர்களுக்கும் மற்றவர்களுக்கும் கூறப்பட்டு, பரவின. மனனம் செய்யப்பட்டு, வாய்மொழியாகவே அவை பரப்பப்பட்டன. ஒன்றிரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர்தான், எழுதி வைத்துப் பாதுகாக்கும் முறை வழக்கத்தில் வந்த பின்னர்தான் இவை பதிவு செய்யப்படுகின்றன.

பௌத்த இலக்கியம் என்று வரையறுக்கப்படும் படைப்புகளில் ஒன்றான இந்தக் கதைகள் மிகப் பழமையானவை. அதன் வடிவங்கள், சொல்லப்படும் முறை, கதையின் அமைப்பு/கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மிகச் சிறந்த இலக்கியப் படைப்புகளாகவும் இவை அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மிகப் பழமையான கதைகள், பொது யுகத்துக்கு முன் ஐந்தாம் நூற்றாண்டில் படைக்கப்பட்டவையாக இருக்கலாம். பிந்தையவை, மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் கூறப்பட்டவையாக இருக்கக்கூடும் என்று பௌத்த ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். சாஞ்சியிலும், பௌத்த நினைவுச் சின்னங்களில் முதன்மையானதும் மிக முக்கியமானதுமான, அலகாபாத்துக்குத் தென்மேற்கே 120 மைல் தொலைவிலிருக்கும் பர்ஹுத் கிராமத்திலிருக்கும் நினைவிடத்திலும் இக்கதைகள் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. ஆகவே, இவை அந்த நினைவிடங்கள் அமைக்கப்பட்ட காலத்துக்கு முந்தையவையாக நிச்சயம் இருக்கக்கூடும் என்று முடிவு செய்கிறார்கள்.

0

பௌத்தச் சங்கத்தின் பிக்ஷுகள் மத்தியில் அறநெறிகள் குறித்தும், நல்லொழுக்கம் குறித்தும் விவாதங்கள் எழும் போது அவர்களுக்கு விளக்கமளிக்கும் விதமாகவும், உபதேசம் செய்வதுபோலவும் அவரது முந்தைய பிறவியில் நடந்த ஒரு நிகழ்வை புத்தர் சங்கத்தினர்களுக்குச் சொல்கிறார். இப்பிறவியின் ஒரு நிகழ்வுடன் முற்பிறவியில் நடந்த நிகழ்வு ஒப்பிடப்படுகிறது.

இதன் மூலம் பௌத்தக் கொள்கைகளும் புத்தருடைய போதனைகளும் உபதேசங்களும் சீடர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் கொண்டு சேர்க்கப்படுகின்றன. பௌத்தத் துறவிகளுக்கு இவை பேருதவியாய் இருந்தன. இந்த நோக்கில்தான் இக்கதைகள் தோன்றின என்றும் சொல்லப்படுகிறது.

கதையின் முக்கியப் பாத்திரம் எடுத்துக்காட்டாக போதிசத்துவர் என்ற பெயரில் ஒருவர் கதையில் வருவார். போதிசத்துவர் தெய்விக அம்சம் நிறைந்தவராக, ஒரு துறவி/ ஞானி போன்றவராகச் சித்திரிக்கப்படுகிறார். சம்பவங்களை நேரில் பார்த்தவராகவும், பங்கேற்றவராகவும் அவர் கதையை விவரிக்கிறார்.

வைதிக சமயக் கோட்பாடான மறுபிறவியையும் கர்மாவையும் ஏற்றுக்கொண்டு, சூழலுக்கு ஏற்றாற்போல் கதை வடிவமைக்கப்படுகிறது. அறிவுரைகளுக்கு அறநெறி பூச்சு அளித்து, பின்பற்ற வேண்டிய ஒழுக்கமாக அது கற்பிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக,. மறுபிறவியில் சொர்க்கத்தில் பிறப்பது என்பது யாகப்பலி அல்லது தபஸ் என்கிற சுய-சித்திரவதையால் கிடைக்காது; புத்தர் வலியுறுத்தும் நற்பண்புகளைப் பின்பற்றுதல், தானமளித்தல், உண்மை பேசுதல், எதிரிகளை மன்னித்தல் ஆகியவற்றால் இயலும். ஆனால், ஜாதக கதைகளில் முதன்மையாகப் பேசப்படும் இந்தப் போதனைகள் பௌத்தத்தின் சாரம் அல்ல; நல்ல செயல்களைச் செய்வதால் மட்டுமே இந்த மீட்சியை அடைய முடியாது.

சீடனின் நோக்கமாக தகுதிகளைக் குவித்துக்கொள்வது இருக்கமுடியாது. புலனறிவை வெல்வதாகும். ஜாதகக் கதைகளின் பெரும்பகுதி தார்மிக போதனைகளாக இருக்கின்றன. பௌத்தம் மீதான நம்பிக்கை, மூடநம்பிக்கையையும் சடங்குகளையும் நிராகரித்தல், காம வேட்கையிலிருந்தும், மாயையிலிருந்தும் விடுபடுதல், வெறுப்பை விலக்குதல் போன்ற அறிவொளி பெறுவதற்கான வழிமுறைகளையும் கூறுகின்றன. அத்துடன் உன்னதமான அந்தப் பாதையில் முன்னோக்கிச் செல்லும்போது விட்டு விடுதலை அடைய வேண்டிய இதர பந்தங்களையும் கூறுகின்றன.

முற்பிறப்புக் கதைகளில், புத்தர், ஓர் அரசனாக, தேவனாக, விலங்காக, சீடனாக, கற்றுத்தேர்ந்தவராக வருகிறார். போதிசத்துவர் என்ற பாத்திரமாகவும். பிரச்னைகளைத் தீர்ப்பவராகவும், தீர்வுக்கு வழி சொல்பவராகவும் பாத்திரமேற்கிறார். அந்தப் பிறவியில் தான் என்ன உருவம் எடுத்தேன் என்பதையும், வேறு யார், எப்படித் தன்னோடு இருந்தனர் என்பதையும் விளக்குகிறார். சில கதைகளில் கடந்த பிறவியில் போதிசத்துவர் செய்த தவறுகளும் அதன்மூலம் பெற்ற அனுபவங்களும் விளக்கமாகச் சொல்லப்படுகின்றன. பல்வேறு வகையான கதையம்சங்களைக் கொண்ட இவை, பெரும்பாலும் புத்தரின் முற்பிறப்பு நிகழ்வுகளை, சாகசங்களைக் கூறுவதாகவே இருக்கின்றன.

மிகப் பழமையான பௌத்த இலக்கியம் என்று இவை வகைப்படுத்தப்படுகின்றன. எனினும், இக்கதைகளின் கருப்பொருள்களில் இந்தியாவுக்கே சொந்தமான பழங்கதைகளும் நாட்டுப்புறக்கதைகளின் மையக் கருப்பொருட்களும் உள்வாங்கப்பட்டுள்ளன. சாதாரண மக்களிடம் பரவியிருந்த இவை, அடுத்த தலைமுறைகளுக்குச் சொல்லப்படுகின்றன; அச்சமயம், பிரதேசம் சார்ந்த கதைகளும், அம்மக்களிடம் பிரபலமாக இருந்த கதைகளின் கருப்பொருட்களும் எளிமையான பாத்திரங்களும் இந்த ஜாதகக் கதைகளில் சேர்க்கப்பட்டிருக்கக்கூடும்.

0

பேராசிரியர் ஃபாஸ்போல் (Fausboll) தொகுத்த ஜாதகக் கதைகளின் முதல் தொகுப்பு பாலி மொழி பதிப்பாக வெளிவந்தது. பெரும் பாராட்டைப் பெற்ற அந்தப் புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு பேராசிரியர் கோவல் (Cowell) மேற்பார்வையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வெளியிட்டது. பௌத்த இலக்கியத்துக்கு ஆங்கிலேயர் செய்த மற்றொரு முக்கியமான பங்களிப்பு இது.

‘இந்திய மக்களின் அன்றாட நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் சார்ந்த தகவல்கள் ஆகியவற்றை முழுமையாகக் கொண்டதாக இந்த ஜாதகக் கதைகள் இருக்கின்றன; இந்தியர்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் குறித்து எழும் பல்வேறு வகையான கேள்விகளுக்கான விடைகளால் அவை நிரம்பியுள்ளன’ என்கிறார் பௌத்தம் குறித்து பல்வேறு புத்தகங்களை அளித்துள்ள ஆய்வாளர் ரீஸ் டேவிட்ஸ்.

ஜாதகக் கதைகள் சொல்லப்படும் விதத்தில் பொதுவாக மூன்று படிகள் இருக்கின்றன. அவை, ஒன்று நிகழ்காலத்து விவரிப்பு, இரண்டு,, கடந்த காலத்து அதாவது முற்பிறப்பின் விவரிப்பு; அதன்பின்னர் இப்போது இருப்பவர்களை முற்பிறப்பு கதாபாத்திரங்களுடன் தொடர்புப்படுத்தி அடையாளப்படுத்திக் காட்டுதல்.

ரீஸ் டேவிட்ஸ் குறிப்பிடுவதுபோல் ஜாதகக் கதைகள், உரைநடையும் பாடல்களும் கலந்ததாகவே காணப்படுகின்றன. சில கதைகளின் கருப்பொருட்கள், விலங்குகளைப் பாத்திரமாகக் கொண்டு இளையோருக்கு அறிவுரை சொல்வது போன்று இருக்கின்றன. எனினும், இந்தியாவில் பரவலாகக் காணப்படும் பழங்கதைகள், புராணங்கள், இதிகாசங்களின் கூறுகளும் அவற்றில் காணப்படுகின்றன.

ஜாதகக் கதைகள் ஆதியில் பிராகிருத மொழியிலும், புத்தாக்கம் செய்யப்பட்ட சம்ஸ்கிருத மொழியிலும் சொல்லப்பட்டன. அதன் பிறகு பல்வேறு கீழைத் தேசத்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. இந்தியாவில் ஜாதகக் கதைகளின் பல்வேறு தொகுப்புகள் இருக்கின்றன. அதிக எண்ணிக்கையிலான கதைகள் தேரவாத பௌத்தத்தைப் பின்பற்றுவோர் பள்ளியில் கிடைத்திருக்கின்றன.

இந்தக் கதைகள் பொது யுகத்துக்கு முன் 400க்கும் 300க்கும் இடைப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவையாக அறியப்படுகின்றன. பின்னாட்களில் இவை கீழ்த்திசை நாடுகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்டு, அங்கு பரவின. ஜாதகக் கதைகளுடன் நெருங்கியதாக பாலி மொழியின் கரியா-பிடகம், சம்ஸ்கிருதத்தில் இருக்கும் ஜாதகமாலை, ஷீஃப்னரின் திபெத்தியக் கதைகளின் தொகுப்பு, பௌத்த சம்ஸ்கிருத மூல மொழியிலிருந்து சீனத்துக்குக் கொண்டு சேர்க்கப்பட்ட கதைகளும் இருக்கின்றன. சாரம் ஒன்றாக இருந்தாலும், சொல்லப்படும் முறை- வடிவம் எல்லாம் பௌத்தப் பள்ளிகளுக்கு இடையில் மாறுபடுகின்றன.

ஒருவருடைய அறிவுக்கூர்மையை, சமயோசிதத்தை வெளிப்படுத்தும் கதைகளாக, பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய விக்ரமாதித்தனின் வேதாளம் சொன்ன கதைகள், பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகளுக்கு முன்னோடிகளாக ஜாதகக் கதைகளும் பஞ்ச தந்திர கதைகளும் இருக்கின்றன.

இக்கதைகளை நான் வரிசைக்கிரமமாக அளிக்கப் போவதில்லை. என்னளவில், சற்றுச் சுவைகூடியதாகவும், பெரியதாகவும் இருக்கும் கதைகளை முதலில் கூறுகிறேன். முடிந்த அளவில் மக்கள் தமிழில் கூற முயற்சி செய்கிறேன். நன்றி.

(தொடரும்)

பகிர:
nv-author-image

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *