(தொகுப்பில் இருக்கும் முதல் கதை இது)
ஒருநாள் அனந்தபிண்டிகர் வேறு நம்பிக்கையைப் பின்பற்றும் பள்ளிகளின் 500 நண்பர்களை அழைத்துக்கொண்டு கௌதம புத்தரைச் சந்திக்க வந்திருந்தார். பூக்களும் மாலைகளும் அன்பளிப்புகளும் கொண்டுவந்திருந்தார். கௌதமர் அன்று சிராவஸ்தியின் ஜேதவனத்தில் இருந்த பெரும் மடாலயத்தில் தங்கியிருந்தார். முறைப்படியான வணக்கமும் அறிமுகங்களும் முடிந்தன. அனைவரும் அமர்ந்தனர். தனது இனிய குரலில் ததாகதாவான கௌதமர் தம்மத்தை அவர்களுக்கு எடுத்துரைத்தார். உபதேசத்தைக் கேட்டவர்கள் பௌத்த மார்க்கத்தில் அடைக்கலமாகினர். அன்று தொடங்கி, அனந்தபிண்டிகருடன் கௌதமரை அவ்வப்போது அவர்கள் காண வந்தனர்.
புத்தர் சிராவஸ்தியிலிருந்து ராஜகிருகத்திற்கு விஜயம் செய்து அங்கு ஏழெட்டு மாதங்கள் வசித்த பின்னர் மீண்டும் ஜேதவனத்தின் மடாலயத்தில் வந்து தங்குகிறார். அனந்தபிண்டிகர் தனது நண்பர்களான அந்த 500 பேர்களுடன் புத்தரைக் காண வருகிறார். முறையாக வணக்கம் செய்த பின் தனது நண்பர்கள் அவர்களுடைய முந்தைய பள்ளிக்கே திரும்பிவிட்டார்கள் என்று அறிவிக்கிறார். கௌதமர் அவர்களைப் பார்த்து இந்த மார்க்கத்தின் மும்மணிகளைப் பின்பற்றாமல் பழைய நம்பிக்கைக்கு அவர்கள் திரும்பிவிட்டது உண்மையா என்று கேட்கிறார்.
அவர்கள் மறைக்காமல் ஆம் என்று ஒப்புக்கொண்டதும், புத்தம் என்ற நிலைக்கு இணையாக இந்த உலகில் எதுவுமில்லை என்று சொல்லி, புனித நூல்களில் கூறியுள்ளபடி மும்மணிகளின் அற்புதத்தை உபதேசிக்கிறார்.
அத்துடன், உண்மையான அடைக்கலம் என்று தவறான அடைக்கலத்தைத் தேடிச்செல்லும் முட்டாள்தனமாக முடிவை எடுப்பவர்கள், பூதங்கள் உலாவும் வனப்பகுதியில் அமானுஷ்யச் சக்திகளின் வலையில் வீழ்ந்துவிடுவார்கள். அழிந்துபோவார்கள். முழுமையான, சந்தேகத்திற்கு இடமற்ற உண்மையைப் பற்றிக்கொண்டவர்கள் அதுபோன்ற மோசமான நிலைமைகளில் சிக்காமல் மீண்டு செழிப்புறுவார்கள் என்று கூறுகிறார். ஒரு புத்திசாலி வியாபாரியும் ஒரு முட்டாள் வணிகனும் சம்பந்தப்பட்ட முற்பிறவி கதை ஒன்றையும் கூறுகிறார்.
வாரனாசியைத் தலைநகராகக் கொண்டு காசி ராஜ்ஜியத்தை பிரம்மதத்தன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். அந்த நகரில் வணிகர் குடும்பம் ஒன்றில் போதிசத்துவர் பிறந்திருந்தார். உரிய வயதை அடைந்ததும், குடும்ப தொழிலான வணிகத்தில் ஈடுபட்டார். ஐந்நூறு வண்டிகள் கொண்டதாக அவரது வணிகம் சிறப்பாக இருந்தது. கிழக்கு திசையிலிருந்து மேற்காகப் பயணித்து வணிகம் செய்தவர், இப்போது மேற்குத் திசையிலிருந்து கிழக்கு நோக்கித் திரும்பியிருந்தார். வாரனாசி நகரில் மற்றொரு இளம் வணிகனும் இருந்தான். அவன் புத்தியில்லாத மூடன். எதிலும் திறமை இல்லாதவன்.
கதை நடந்த நேரத்தில் போதிசத்துவர் வியாபாரத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். ஐந்நூறு வண்டிகளில் வாரனாசி நகரத்தின் விலையுயர்ந்த சரக்குகள் ஏற்றப்பட்டிருந்தன; வண்டிகள் புறப்படத் தயாராக நின்றிருந்தன. இவரைப் போலவே அந்த மூட வணிகனும் தயாராக இருந்தான். அந்த வியாபாரியிடமும் ஐந்நூறு வண்டிகள். போதிசத்துவருக்கு ஒரு யோசனை. ‘இந்த முட்டாள் வியாபாரியுடன் நாமும் சேர்ந்து பயணம் போவது பிரச்சனையாக இருக்குமே. அவனுடைய வண்டிகளும் சேர்ந்து ஒரே நேரத்தில் ஆயிரம் வண்டிகள் ஒன்றாகப் பயணித்தால் அதிகம் பயன்பாட்டில் இல்லாத சாலையில் பயணம் நெருக்கடியாக இருக்கும். சமையலுக்குத் தேவையான விறகு, குடிநீர், மாடுகளுக்கு தண்ணீர், அவற்றிற்குப் புல் சேகரிப்பதும் கடினமான விஷயம். ஆகவே அவனோ அல்லது நானோ முதலில் செல்ல வேண்டும்.’
ஆகவே, போதிசத்துவர், அந்த வியாபாரியை அழைத்து தனது எண்ணைத்தை அவனிடம் கூறினார். ‘நாம் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து பயணிக்க முடியாது; இரண்டு குழுவினரும் சிரமப்பட வேண்டியிருக்கும். அதனால், ஒன்று நீ முதலில் செல்லவேண்டும் அல்லது எனக்குப் பிறகு நீ வர வேண்டும். என்ன சொல்கிறாய்?
அந்த இளைஞனுக்கு இந்த யோசனை மகிழ்ச்சியை அளித்தது. ‘நான் முதலில் சென்றால் எனக்குப் பல நன்மைகள் கிடைக்குமே. பலரும் பயணித்திராத பாதையில் செல்வதால் மாடுகளுக்கு அதிகமாகப் புல் கிடைக்கும்; கறி சமைக்கத் தேவையான காய்களும் கீரை வகைகளும் கிடைக்கும். கலங்காத சுத்தமான தண்ணீர் கிடைக்கும்; அத்துடன், என்னுடைய பொருட்களுக்கு மதிப்பையும் விலையையும் நான் விருப்பம்போல் சொல்ல முடியும்’ என்று நினைத்தான். ‘ஆகா, சந்தோஷம், நானே முதலில் செல்கிறேன், நண்பா.’
போதிசத்துவருக்கு வேறு ஒரு பார்வையும் இருந்தது. இரண்டாவதாகச் செல்வதில் சில நன்மைகளை அவர் கண்டார். மனத்திற்குள் இவ்வாறு அவர் நினைத்துக்கொண்டார். ‘முதலில் செல்பவர்கள் கரடுமுரடாக இருக்கும் சாலையைச் சமன் செய்து சீர்படுத்துவார்கள், அந்தப் பாதையில் இரண்டாவதாகப் பயணிப்பது சௌகரியமாக இருக்கும். முன்னால் செல்பவர்களின் வண்டிக் காளைகள் வளர்ந்திருக்கும் பழைய புல்லை மேய்ந்துவிடும். அந்த இடத்திற்குச் செல்லும்போது புதிய புற்கள் துளிர்த்திருக்கும். நமது காளைகள் சுவையான, இளம் புற்களை மேய முடியும். சமையலுக்கு அவர்கள் காய்களையும், கீரைகளையும் பறித்திருப்பார்கள். நாம் செல்லும்போது கீரைகளும் காய்களும் புதியதாக வளர்ந்திருக்கும். நமது பரிவாரத்திற்கு அது உதவியாக இருக்கும். அந்தக் கூட்டத்தினர், நீர் இல்லாத இடங்களில், நீர் எடுப்பதற்காகப் புதிதாக ஊற்றுகளை அகழ்ந்து உருவாக்கியிருப்பார்கள். அவர்கள் தோண்டி அமைத்த கிணறுகளின் நீரைப் பயன்படுத்தலாம். அவர்கள் ஏற்கனவே, விலையை நிர்ணயம் செய்து, பொருட்களை விற்பனை செய்திருப்பார்கள். புதிதாக நிர்ணயித்து விற்பது கடினமான வேலை; நான் அவர்களுக்கு அடுத்ததாகச் செல்வதால், ஓரளவுக்கு அவர்கள் ஏற்கனவே பேசி முடிவு செய்திருந்த விலையில் எனது பொருட்களைப் பண்டமாற்று செய்து கொள்வேன். அது மிகவும் எளிது’.
இவ்வளவு நன்மைகள் நமக்குக் கிடைக்கும் என்ற முடிவுடன் அந்த முட்டாள் வணிகனைப் பார்த்து, ‘அப்படியா மிக்க மகிழ்ச்சி. நண்பரே. நீங்களே முதலில் செல்லுங்கள்’ என்றார். ‘மிகவும் நல்லது’ என்று சொன்னான் அந்த முட்டாள் வணிகன். வண்டிகளை ஓட்டிக் கொண்டு பயணத்தைத் தொடங்கினான். பயணத்தின் போது, மனிதர்கள் வசிக்கும் கிராமங்களையும் சிற்றூர்களையும் கடந்து சென்றார்கள். இப்போது அவர்கள் ஒரு காட்டின் எல்லைப்பகுதிக்கு அருகில் வந்து சேர்ந்திருந்தார்கள்.
அந்தக் காட்டுப்பகுதி ஐந்து விதமாகப் பிரிந்து கிடந்தது; கொள்ளையர்கள் வசிக்கும் காட்டுப்பகுதி. வழிசெல்வோர்களை இடைமறித்து அவர்கள் திருடுவார்கள், கொள்ளையடிப்பார்கள். அடுத்த பகுதி சிங்கம் போன்ற வன விலங்குகள் வசிக்கும் ஆபத்தான பகுதி; அதற்கடுத்திருக்கும் காட்டுப்பகுதி குளிப்பதற்கோ குடிப்பதற்கோ நீர் கிடைக்காத வறண்ட பகுதி. நான்காவது பகுதியில் பயணிப்பவர்கள் அமானுஷ்யச் சக்தியால் சூழப்படுவார்கள். ஐந்தாவது காட்டுப்பகுதியில், கிழங்குகள் போன்ற பொருட்களோ அல்லது வேறு உணவு பொருட்கள் எதுவும் கிடைக்காத பிரதேசம். வனத்தின் இந்த ஐந்து பகுதிகளில் வழிசெல்வோருக்கு மிகவும் பிரச்சனைக்குரியவை, நீர் கிடைக்காத வறட்சிப் பகுதியும், அமானுஷ்யச் சக்திகள் உலவும் பகுதியும் தான்.
0
இளம் வணிகன் தன்னுடைய வண்டிகளில் பெரிய தண்ணீர் சால்களில் நீரைக் நிரப்பிக் கொண்டுதான் புறப்பட்டான். அவன் கடக்க வேண்டிய நீரற்ற அந்த வறண்ட காட்டுப்பகுதி அறுபது லீகுகள் தொலைவுள்ளது. ஒரு லீகு மூன்று மைல் என்றால் எவ்வளவு தூரம் என்று புரிந்து கொள்ளலாம். இப்போது வனாந்தரத்தை அவன் பாதி தூரம் தாண்டியிருந்தான். காட்டின் நடுப்பகுதிக்கு வந்திருந்தான். பூதங்கள் நடமாடும் வனம் அது.
இவர்களைப் பார்த்து விட்ட ஒரு பூதத்திற்கு ஒரே மகிழ்ச்சி. இவர்கள் வைத்திருக்கும் நீரைக் கொட்டிவிட்டு சால்களைத் தூக்கி எறியவைக்கிறேன். நீரில்லாமல் அவர்கள் மயக்கமடைந்தவுடன் ஒவ்வொருவராக அனைவரையும் விழுங்கிவிடுவேன். என்று தனக்குள் அது சொல்லிக் கொண்டது. உடனே மந்திர சக்தியால் நல்ல வெள்ளை நிறத்தில் இளம் காளைகள் இழுக்கும் அழகான வண்டி ஒன்றை உருவாக்கியது. ஆற்றல் மிக்க பிரபுவைப்போல் அந்த வண்டியில் இவர்களை நோக்கி வந்தது. அந்த வண்டியைச் சுற்றி பத்து அல்லது பன்னிரண்டு அமானுஷ்ய உருவங்கள் வீரர்களின் உருவத்தில் வந்தன. அந்தப் பரிவாரங்கள் தம் கைகளில் வில், அம்பு, வாள், கேடயங்கள் ஆகியவற்றை ஏந்தியிருந்தன.
அந்தப் பூதம் நீலத் தாமரைகளைத் தலையில் சூடியிருந்தது; வெள்ளை நிற அல்லிப்பூக்களைக் கழுத்தில் மாலையாகப் போட்டிருந்தது. அதன் தலைமுடியும் உடைகளும் ஈரமாக இருந்தன. அது வந்த வண்டிச் சக்கரங்கள் சேற்றில் உருண்டதுபோல் தோன்றின. பூதத்தினுடைய வண்டியின் முன்னாலும் பின்னாலும் வந்த பரிவாரங்களின் தலைமுடியும் உடைகளும் ஈரமாக இருந்தன. அவையும் தலையில் நீலத் தாமரைகளும் கழுத்தில் வெள்ளை அல்லி மலர் மாலைகளுடன் இருந்தன. கைகளில் வெள்ளைத் தாமரைகளை, தண்டுகளுடன் கொத்தாக வைத்திருந்தன. செழிப்பான அந்தத் தண்டுகளைக் கடித்து மென்றுகொண்டே வந்தன. அவற்றிலிருந்து நீரும் சேறும் சொட்டிக் கொண்டிருந்தன.
அக்காலத்தில் வணிகர்களின் தலைவர்களிடம் ஒரு வழக்கம் இருந்தது. காற்று அவர்கள் முகத்தின் மீது அதாவது எதிர்புறத்திலிருந்து வீசும் போது, தூசியிலிருந்து தப்பிக்க அவர்களது வண்டியில் அமர்ந்து முன்வரிசையில் பயணிப்பார்கள்; அவர்களது பணியாளர்கள் அவர்களைச் சுற்றி அமர்ந்திருப்பார்கள். அதே நேரம் காற்று அவர்களுக்குப் பின்பக்கமிருந்து வீசும்போது, பின் வரிசையில் பயணிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கதை நிகழும்போது காற்று எதிர்புறத்திலிருந்து வீசியது; அதனால் அந்த இளைய வணிகன் முன் வரிசையில் பயணித்துக் கொண்டிருந்தான்.
பூதத்திற்கு வியாபாரி எப்படிப் பயணிக்கிறான் என்பது தெரிந்துவிட்டது. எந்த வரிசையில் இருக்கிறான் என்பதையும் தெரிந்து கொண்டது. அதனால், தனது வண்டியைப் பாதையிலிருந்து விலக்கி ஓரமாக நிறுத்தியது. வியாபாரி அருகில் வந்ததும், அந்த வண்டியிடம் சென்று வியாபாரியைப் பார்த்து அன்புடன் விசாரித்தது.
‘எங்கே போகிறீர்கள்?’
பயணக்கூட்டத்தின் தலைவனான வணிகனும், அவனுடைய மற்ற வண்டிகள் தன்னைத் தாண்டிச் செல்லும் வகையில் தனது வண்டியைப் பாதையிலிருந்து ஓரங்கட்டி நிறுத்தினான். பூதத்திடம் விவரமாக சொன்னான். ‘நாங்கள் வாரனாசியிலிருந்து வருகிறோம். வியாபார விஷயமாகச் செல்கிறோம், ஐயா. உங்கள் தலையில் தாமரைப் பூக்களும் கழுத்திலும் கைகளிலும் அல்லிப்பூக்களையும் பார்க்கிறோம். உங்கள் மனிதர்கள் செழிப்பான பூக்களின் தண்டுகளை மென்று தின்றுகொண்டிருக்கிறார்கள். அனைவரும் நனைந்திருக்கிறீர்கள். கால்களில் சேறும் சகதியுமாக இருப்பதைப் பார்க்கிறேன். நீங்கள் சாலையில் வரும்போது மழை பெய்ததா? அல்லது தாமரைகளும் அல்லிகளும் பூத்திருக்கும் குளங்களில் குளித்து எழுந்து வருகிறீர்களா?’
இப்போது அந்தப் பூதம் வியப்பதுபோல் பொய்யாகக் கூச்சலிட்டது. ‘என்ன கேட்கிறீர்கள்? இன்னும் கொஞ்சம் தூரம் பயணம் செய்தால் போதும்; பச்சேபசேலென்று மரங்களுடன் காட்டைப் பார்ப்பீர்கள். அந்த இடத்தில் ஆரம்பித்து, வழி முழுக்க தண்ணீரைத் தவிர வேறு எதையும் நீங்கள் பார்க்க முடியாது. அந்தப் பகுதியில் எப்போதும் மழை பெய்து கொண்டே இருக்கும். அங்கே இருக்கும் குளங்கள் அனைத்தும் மழை நீரால் நிரம்பிக் கிடக்கின்றன; பார்க்கும் இடங்களில் எல்லாம் தாமரைகளும் அல்லிகளும் மூடியிருக்கும் ஏரிகளைப் பார்க்கலாம்.’
வண்டிகள் வரிசை அவர்களைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தன. ‘நீங்கள் அனைவரும் எங்குப் போகிறீர்கள்?’ என்று பூதம் கேட்டது. நாங்கள் ‘அந்த நகரத்திற்கு’ போகிறோம் என்று வணிகன் கூறியதும், ’இந்த வண்டிகளில் எல்லாம் என்ன வைத்திருக்கிறீர்கள்?’ என்று திரும்பவும் கேட்டது. இன்ன மாதிரி பொருட்கள் எல்லாம் விற்பதற்கு எடுத்துப் போகிறோம் என்றான் வணிகன்.
‘அதோ கடைசியா போகும் வண்டியில் என்ன இருக்கு? பாரம் அதிகம் ஏற்றியது போல் தெரிகிறதே!’
‘ஓ, அந்த வண்டியா? அதில் தண்ணீர் சால்கள் இருக்கின்றன’ என்றான் வணிகன்.
‘நல்லது, தூரத்திலிருந்து இந்த வழியாகப் போகிறவர்கள் தேவையான நீரை எடுத்துப் போவது நல்லதுதான். எனினும் இப்போ அது உங்களுக்குத் தேவையில்லையே! நீங்க போகிற வழியில் தண்ணீர் அதிகமாக இருக்கிறது. கவலை வேண்டாம். அதனால், நீங்கள் இந்த மண் சால்களில் இருக்கும் தண்ணீரைக் கொட்டி விடுங்கள். பாரம் இல்லாமல் வேகமாக, எளிதாகப் பயணம் செய்யலாம்.’
இப்படிச் சொல்லிவிட்டு, ‘உங்களை அதிக நேரம் நிறுத்திவிட்டேன். பயணத்தைத் தொடருங்கள்’ என்று பூதம் இவர்கள் பார்வையிலிருந்து மறைந்தது; அது வசித்த பூதங்களின் நகரத்திற்குத் திரும்பி சென்றுவிட்டது.
அந்த முட்டாள் வியாபாரி கொஞ்சமும் யோசிக்கவில்லை. பூதம் கூறிய யோசனை தான் அவன் மனத்தில் ஓடியது. அதன்படி தண்ணீர் இருந்த சால்களையெல்லாம் கவிழ்த்து நீரைக் காலி செய்யச் சொன்னான். சால்களையும் தூக்கிப்போட்டான். ஆபத்திற்கு உள்ளங்கை அளவுக்குத் தண்ணீரையும் வைத்துக் கொள்ளாமல் வண்டிகளை ஓட்டும்படி உத்தரவிட்டான். முன்னே போகப்போக எங்கேயும் நீரைக் காணவில்லை. ஏரி குளம் எதிலும் தண்ணீர் இல்லை. தாகம் அந்த மனிதர்களைச் சோர்வடையச் செய்தது. எனினும் சூரியன் மறையும் வரை அவர்கள் சென்று கொண்டே இருந்தனர். மலைவாயிலில் சூரியன் விழுந்ததும் வண்டிகளை நிறுத்தினர். வண்டிகளை ஒரே இடத்தில் தொடராக நிறுத்தினர். காளைகளை வண்டிச் சக்கரங்களில் கட்டினர்.
ஆனால், காளைகளுக்குக் குடிக்க ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை. மனிதர்களுக்கே இல்லை எனும்போது மாடுகளுக்கு எங்கே கிடைக்கும்? சோர்வடைந்த மனிதர்கள், அரை மயக்கத்தில் தரையில் துணிகளை விரித்துத் தூக்கத்தில் மூழ்கினர்.
நள்ளிரவில். பூதங்கள் அவர்களது ஊரிலிருந்து வெளிவந்தன. அவற்றிற்கு அன்று ஒரே விருந்துதான். மனிதர்களையும் காளைகளையும் ஒவ்வொன்றாகத் தின்று விழுங்கின. சதையைத் தின்றுவிட்டு எலும்புகளை மட்டும் ஆங்காங்கே வீசிவிட்டு ஊருக்குத் திரும்பின. பார்க்கும் இடமெல்லாம் எலும்புகள் தான். வண்டிகளும் அவற்றிலிருந்த சரக்குகள் மட்டும் யாரும் தொடாமல் அப்படியே இருந்தன. அந்த வணிகக் கூட்டம் ஒட்டுமொத்தமாக அழிந்து போனதுக்கு அந்த மூட வியாபாரியே காரணம்.
0
இங்கே வாரனாசியில் போதிசத்துவர், தனக்கு முன்னதாக புறப்பட்டுப்போன இளம் வியாபாரி அங்கிருந்து போய் ஆறு வாரங்கள் ஆகும் வரை காத்திருந்தார். அதன் பின்னர் தனது ஐந்நூறு வண்டிகளுடன் நகரத்திலிருந்து புறப்பட்டார். சில நாட்களில் அவர்கள் காட்டின் எல்லைப் பகுதிக்கு வந்து சேர்ந்தார். அவரும் தண்ணீர் சால்களில் போதுமான அளவு நீரை நிரப்பி வைத்திருந்தார். வண்டிகள் நின்றதும் தாளம் ஒன்றை ஒலிக்கச் செய்து அனைவரையும் ஒரே இடத்தில் கூடும்படி செய்தார்.
அத்துடன் அவர்களிடம், ‘என் அனுமதியின்றி ஒருவரும் உள்ளங்கை அளவு நீரையும் பயன்படுத்தக் கூடாது. மட்டுமின்றி, இந்த வனத்தில் விஷ மரங்களும் செடிகளும் இருக்கின்றன. ஆகவே, உங்களில் ஒருவரும் இதுவரையிலும் நீங்கள் சாப்பிட்டிராத இலையையோ, பூவையோ, பழங்களையோ என்னைக் கேட்காமல் சாப்பிட வேண்டாம்’ என்று கூறினார். அதன்பின் தனது ஆலோசனைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சொல்லி 500 வண்டிகளுடன் வனத்திற்குள் நுழைந்தார்.
அவர்கள் காட்டின் நடுப்பகுதியை அடைந்தனர். நாம் முன்னர் பார்த்ததுபோல், அந்தப் பூதம் போதிசத்துவரின் பாதையில் வந்து நின்றது. பூதத்தை மனித உருவில் பார்த்ததும் யாரென்று போதிசத்துவருக்கு புரிந்து விட்டது. பூதத்தை நன்கு உற்றுப் பார்த்தார். ‘இங்கே தண்ணீர் ஏதுமில்லை, நீரற்ற பாலைவனம் இது’ என்று தனக்குள் உறுதியாக நினைத்துக் கொண்டார். சிவந்த கண்களும் ஆக்ரோஷமான உருவத்துடனும் இருக்கும் இந்த நபரின் நிழலைப் பார்க்க முடியவில்லையே!
நமக்கு முன்னால் அந்த இளம் வணிகன் இங்கு வந்திருக்கக்கூடும். அந்த முட்டாள் எடுத்து வந்த தண்ணீர் முழுவதையும் தூக்கி எறியும்படி அவனை இந்தப்பூதம் தூண்டியிருக்க வேண்டும். பின்னர், அவர்கள் மயங்கி விழும் வரை காத்திருந்து, அவனையும் அவன் ஆட்களையும் சாப்பிட்டிருக்க வேண்டும் என்று ஊகித்தார். எனினும், இந்தப் பூதத்திற்கு என்னுடைய புத்திசாலித்தனமும், சமயோசிதப் புத்தியும் தெரிந்திருக்காது என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.
பின்னர் பூதத்திடம் சத்தமாக, உத்தரவிடுவதுபோல் பேசினார். ‘இந்த இடத்தைவிட்டு போ! நாங்கள் வியாபாரம் செய்யப் போய்க் கொண்டிருக்கிறோம். ஆகவே, கண்ணெதிரே நீரைப் பார்க்கும் வரையில் இருப்பதை நாங்கள் தூக்கி எறிய மாட்டோம். அப்படி ஒருநேரம் வரும்போது, வண்டி பாரத்தை நாங்கள் குறைத்துக் கொள்வோம். நீ இதற்காகக் கவலைப்பட வேண்டாம்.’
பூதம் தனது வண்டியில் இவர்களுடன் கொஞ்ச தூரம் பயணித்தது. பின்னர், இனிமேல் ஒன்றும் முடியாது என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, ஊர்ப் பக்கம் திரும்பிச் சென்றுவிட்டது. அது சென்றபிறகு போதிசத்துவரின் ஆட்கள் அவரிடம் பேசினார்கள்.
‘ஐயா, இங்கு வந்த அந்த மனிதர்கள் சொன்னதை நாங்களும் கேட்டோம். சில மைல்கள் போனதும் மரங்கள் பசுமையாக இருக்கும் வனம் இருக்கிறதாம். அங்கு எப்போதும் மழை பெய்து கொண்டே இருக்குமாம். அந்த மனிதர்கள் தலையில் தாமரைப் பூக்களையும், கைகளில் அல்லிப்பூக்களையும் வைத்திருந்தார்கள் பார்த்தீர்களா. அல்லித் தண்டுகளைத் தின்று கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உடைகளும் தலைமுடியும் நனைந்து, நீர் வழிந்து கொண்டிருந்தது. ஆகவே, நம்முடைய சால்களில் இருக்கும் தண்ணீரைக் கொட்டிவிட்டு, பாரம் குறைந்த வண்டிகளுடன் வேகமாகப் போகலாம்’ என்றனர்.
இப்படி அவர்கள் பேசுவதைக் கேட்டதும், போதிசத்துவர் அவர்கள் அனைவரையும் மீண்டும் ஒரேயிடத்தில் கூடும்படி உத்தரவிட்டார். பின்னர் அவர்களைப் பார்த்துக் கேட்டார்.
‘இப்போது சொல்லுங்கள், இந்தக் காட்டில் ஓர் ஏரியை அல்லது குளத்தைப் பார்த்திருப்பதாக யாராவது சொல்லி இதற்கு முன் நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?’
‘இல்லை, ஐயா,’ என்று பதில் சொன்னவர்கள், ‘இதை நீரில்லாத வறண்ட காட்டுப்பகுதி என்றுதான் சொல்வார்கள்.’
‘சரி, இப்போது சில பேர் இங்கு வந்து காட்டிற்குள் கொஞ்சம் தள்ளி மழை பெய்கிறது என்று சொன்னார்கள், இல்லையா? சாதாரணமா, அப்படி மழை பெய்தால், அந்த ஈரப்பதக் காற்று எவ்வளவு தூரம் வீசும்?
‘ஒரு மூன்று மைலாவது வரும் ஐயா.’
‘அப்படி இங்கிருக்கும் உங்களில் யாராவது அந்தக் காற்றை உணர்ந்தீர்களா?
‘இல்லை.’
‘புயல் வீசும், மழை பொழியும் மேகத்தின் முகட்டை எவ்வளவு தொலைவு வரை பார்க்க முடியும்?
‘மூன்று மைல் தொலைவு வரை பார்க்க முடியும்.’
‘இன்று அப்படி உங்களால் மேகத்தைப் பார்க்க முடிகிறதா?’
‘யாரும் பார்க்கவில்லை, ஐயா.’
‘மின்னல் அடித்தால் எவ்வளவு தூரம் தெரியும்?’
‘பத்துப் பதினைந்து மைல் தூரம்.’
‘இங்கே யாராவது அப்படி மின்னல் அடித்ததைப் பார்த்தீர்களா?
‘இல்லை ஐயா.’
‘இடி முழக்கம் எவ்வளவு தூரம் கேட்கும்?’
‘ஆறேழு மைல் தூரம் ஐயா.’
‘இன்றைக்கு நாம் இடி முழக்கத்தைக் கேட்டோமா?’
‘ஒருவரும் கேட்கவில்லையே.’
‘புரிந்து கொள்ளுங்கள், இங்கு வந்தது, மனிதர்கள் இல்லை. பூதங்கள். அவற்றின் பேச்சைக் கேட்டு, தண்ணீரைக் கொட்டியிருந்தோம் என்றால், நாம் பலவீனமாகி மயக்கமாகிவிடுவோம். அப்போது அவை நம்மை விழுங்கிவிடும். நமக்கு முன்னால் சென்ற அந்த இளம் வியாபாரி திறமை இல்லாதவன். மூடன். பெரும்பாலும் மனித உருவில் வந்த பூதம் சொன்னதைக் கேட்டு ஏமாந்து, தண்ணீர்ச் சால்களைத் தூக்கி எறியச் சொல்லியிருப்பான். அவர்கள் சோர்ந்திருக்கும் போது, அனைவரையும் இவை விழுங்கியிருக்கும். அவனுடைய வண்டிகள் புறப்படும்போது இருந்தது போலவே சரக்குகளுடன் நின்றிருக்கும். அதை நாம் எதிர்பார்க்கலாம். தாமதம் செய்யாமல் வேகமாகப் புறப்படுங்கள். ஒரு சொட்டு தண்ணீரையும் வீணடிக்காதீர்கள்’
இப்படிப் பேசிய பின்னர், அவரது மனிதர்களை எச்சரிக்கை செய்த போதிசத்துவர், அனைவரையும் விரைந்து பயணம் செய்யத் தூண்டினார். சில மைல்கள் பயணம் செய்த பின்னர், அந்த இளம் வணிகனின் 500 வண்டிகளும் சரக்குகளுடன் நின்ற இடத்தை அடைந்தனர். பார்க்கும் இடமெல்லாம், மனிதர்களின், காளைகளின் எலும்புக்கூடுகள் சிதறிக் கிடந்தன. போதிசத்துவர் வண்டிகளை நிறுத்தி காளைகளை அவிழ்த்துவிட சொன்னார். காளைகளுக்குத் தீனி அளித்த பின்னர், ஆட்களையும் விரைவாகவே இரவு உணவை முடிக்க சொன்னார். காளைகளை ஒரேயிடத்தில் கட்டி ஓய்வெடுக்க ஏற்பாடு செய்துவிட்டு, அவற்றைச் சுற்றி மனிதர்களைப் படுக்கச் சொன்னார். அதுமட்டுமின்றி, அவரும் வலிமையான ஆட்கள் சிலரும் வாட்களை ஏந்திக் காவல் காத்தனர்.
இவ்வாறு மூன்று சாமங்கள் முடிந்து விடியும் வரையிலும் மற்ற வீரர்களுடன் அவர் காவல் இருந்தார். பொழுது விடிந்தபின்னர், உடனடியாகக் காளைகளுக்குத் தீனி வைக்கச் சொன்னார். புறப்படுவதற்கு மற்ற ஏற்பாடுகளையும் விரைந்து முடிக்கச் சொன்னார். பழுதடைந்த சில வண்டிகளை அந்த இடத்திலேயே விட்டுவிட சொல்லி, ஏற்கனவே இருந்த வண்டிகளில் சரக்குகளை ஏற்ற வைத்தார்.
தம்மிடமிருந்த சாதாரண விலை குறைந்த பொருட்களின் இடத்தில், மூட வியாபாரி கொண்டு வந்து இங்கு கைவிடப்பட்டிருந்த விலையுயர்ந்த பொருட்களை ஏற்றிக் கொண்டார். முடிவு செய்தபடி குறிப்பிட்ட நகரத்திற்குப் பயணத்தைத் தொடர்ந்தார். அங்குச் சென்ற பின், பொருட்களை, நல்ல விலைக்கு, அவற்றின் மதிப்பைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிக விலைக்கு பண்டமாற்று செய்து விற்றார். தன்னோடு வந்த கூட்டத்தில் ஒருவரையும் இழக்காமல், வியாபாரத்தை முடித்துக் கொண்டு சொந்த நகரான வாரனாசிக்குத் திரும்பினார்.
கதை இவ்வாறு முடிந்தது. ஆசிரியர் கூறினார்: ‘இவ்வாறு மூடத்தனமாக நடந்தவர்கள் முழுமையான அழிவுக்குக் காரணமாக இருந்தனர்; அதேநேரம் எப்போதும் உண்மையைப் பற்றிக்கொண்டவர்கள், அமானுஷ்யச் சக்திகளின் கைகளில் இருந்து தப்பினார்கள்; தங்கள் இலட்சியத்தை அடைந்தனர்; பாதுகாப்பாக வீடு திரும்பினர்.’
இரண்டு கதைகளையும் சொல்லிய கௌதமர், உபதேசமும் அளித்தார். இரண்டு கதைகளுக்கும் இருக்கும் தொடர்பையும் விளக்கினார். முற்பிறவி கதையில் வந்த முட்டாள் வியாபாரி, தேவதத்தன்; அவரைப் பின்பற்றிய ஐந்நூறு வணிகர்களும், தேவதத்தனின் சீடர்கள். விவேகம் நிறைந்த வணிகனாக வந்த என்னைப் பின் தொடர்ந்தவர்கள், இந்தப் பிறவியில் புத்தரைப் பின்பற்றுபவர்கள் என்றார்.
(தொடரும்)