(தொகுப்பில் இருக்கும் 12வது கதை இது)
ஜேதவனத்தில் கௌதமர் இருந்த காலத்தில் நடந்த நிகழ்வு இது. பிக்குணிகளின் மடத்தில் வசித்த ஒரு துறவி கர்ப்பமாக இருப்பது பிரச்னையாகிறது. துறவியாகும் முன் இது நிகழ்ந்ததா அல்லது இங்கு வந்த பின்னரா என்ற அடிப்படையில் அந்தப் பெண் குறித்த வதந்திகள் உருவாகின. அந்தப் பெண் வெளியேற்றப்பட வேண்டும் என்று தேவதத்தன் ஆணை பிறப்பிக்கும் சூழல் உருவாகிறது. வழக்கு கௌதம புத்தரின் முன்னால் வந்தது. அந்தக் கதையைப் பார்க்கலாம்.
ராஜகிருகத்தில் பெரும் பணக்கார வணிகனின் மகளாக அவள் பிறந்தாள். கல்வியில் சிறந்தவள். நற்குணங்கள் நிறைந்தவள். உரிய வயதை அடைந்ததும், இயல்பான உலக வாழ்க்கை வேண்டாம்; அருக நிலை எய்த வேண்டும் என்று தன் விருப்பத்தைப் பெற்றோரிடம் தெரிவிக்கிறாள். துறவறம் மேற்கொள்ள அனுமதியுங்கள் என்று கேட்கிறாள்.
செல்வம் மிக்க நமது குடும்பத்தில், எங்களுடைய ஒரே மகள் நீ. துறவு மேற்கொள்ள வேண்டாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். பல முறை அவர்களைக் கெஞ்சிக் கேட்டும் அவர்கள் அனுமதி அளிக்கவில்லை.
சரி. எனக்குத் திருமண ஆன பின்னர், எனது கணவனின் அனுமதி பெற்று, துறவு மேற்கொள்வேன் என்று முடிவு எடுக்கிறாள். அவளுக்குத் திருமணம் ஆகிறது. புதிய வீட்டில் அர்ப்பணிப்புடன் குடும்பத்தைக் கவனித்துக்கொள்கிறாள். நல்ல அறநெறி நிறைந்த வாழ்க்கையை வாழ்கிறாள். அவள் ஒரு குழந்தையைச் சுமக்கும் தருணம் வருகிறது.
அன்று அந்த நகரில் ஏதோ விழா. ஊரே கொண்டாட்டமாக இருக்கிறது. எனினும், இவள் மட்டும் எங்கும் செல்லாமல் வீட்டு வேலைகளில் மூழ்கியிருக்கிறாள். கணவனுக்கு வியப்பாக இருக்கிறது. ஏன் நீ அந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனக் கேட்கிறான். எனக்கு அதில் ஆர்வமில்லை. மோசமான இந்த உடம்பை அலங்கரித்து மகிழ்வதில் விருப்பமில்லை. பிணத்தை அழகுபடுத்துவது போன்ற செயல் அது என்கிறாள்.
‘அன்பான மனைவியே, இந்த உடல் பாவம் நிறைந்தது என்று நீ கருதினால், ஏன் துறவு மேற்கொள்ளக்கூடாது?’
‘என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்றால், இன்றே நான் அதற்குத் தயார்.’
‘நல்லது. உன்னைச் சங்கத்தில் சேர்க்க ஏற்பாடு செய்கிறேன்.’
அவன் சங்கத்தின் உறுப்பினர்களை உபசரித்து, அமைப்புக்கு ஏராளமான நன்கொடைகளும் அளிக்கிறான். அதன்பின் சங்கத்தில் துறவியாக அவள் சேர்கிறாள். தேவதத்தனைப் பின்பற்றும் குழுவினரின் வரிசையில் அவள் சேர்ந்திருக்கிறாள். துறவியாகி விட்டதில் அவளுக்குப் பெரும் சந்தோஷம்.
0
மடத்தில் அவள் சேர்ந்த பின்னர் சில நாட்களில் அவள் உடலில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்களை மற்ற பெண் பிக்குகள் கவனித்துவிடுகிறார்கள். கைகளும் கால்களும் உடலும் பூசியிருப்பதுபோல் பருத்திருப்பதைப் பார்த்து, ‘பெண்ணே, நீ தாயாகப் போகிறாய் என்பது உனக்குத் தெரியுமா?’ என்று கேட்கிறார்கள்.
‘என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை; அற வாழ்க்கை வாழ வேண்டுமென்பதுதான் என் விருப்பம்.’
பின்னர், அவர்கள் அவளைத் தேவதத்தனிடம் அழைத்துச் செல்கிறார்கள். ’இந்தப் பெண் அவளது கணவனின் அரைகுறை சம்மதத்துடன் துறவியாகச் சேர்ந்திருக்கிறாள் என்று கருதுகிறோம். இவள் கர்ப்பமாக இருக்கிறாள். பிக்குவாகச் சேர்வதற்கு முன்னரே இது நடந்ததா என்று தெரியவில்லை. என்ன செய்வது என்று கூறுங்கள்.’
பொறுமை, கருணை, அனுதாபம் அற்ற தேவதத்தன், இவ்வாறு சொல்கிறார்: ‘எனது பிக்குகளில் ஒருவர் இவ்வாறு குழந்தையைச் சுமந்திருப்பது, கெடுதலான செய்தி. இதைக் கண்டிக்கிறேன். எனது முடிவு இதுதான். இந்தப் பெண்ணைச் சங்கத்திலிருந்து வெளியேற்றுகிறேன். இங்கு அவள் இருக்க வேண்டாம். இந்தப் பெண்ணை வெளியேற்றுங்கள்.’
ஒரு பாறையைத் தள்ளிவைப்பதுபோல் அவளைத் தள்ளிவைக்கிறார்.
மற்றப் பிக்குணிகளைப் பார்த்து அந்தப் பெண் கூறினாள்: ‘மூத்தவரான தேவதத்தர் புத்தரில்லை. நான் அவரின் முன்னிலையில் சங்கத்தில் சேரும் உறுதியை ஏற்கவில்லை. புத்தரின் முன்னால் தான் சேர்ந்தேன். ஆகவே என்னை ஜேதவனத்தில் இருக்கும் ததாகதரிடம் அழைத்துச் செல்லுங்கள்.’
அவள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அந்தப் பிக்குணிகள் அந்தப் பெண்ணை, ராஜகிருகத்திலிருந்து ஏறத்தாழ 130 மைல்கள் தூரத்தில் சிராவஸ்தியில் ஜேதவனத்தில் தங்கியிருந்த கௌதம புத்தரிடம் அழைத்துச் சென்றனர். அவரை வணங்கி, விஷயங்களை எடுத்துரைத்தனர்.
கௌதமர் இவ்வாறு நினைத்தார்: ‘இந்தப் பெண் மடத்தில் சேருவதற்கு முன் கர்ப்பமுற்றதாகத் தெரிகிறது. எனினும், தேவதத்தன் வெளியேற்றிய துறவியைப் புத்தர் ஏற்றுக்கொண்டார் என்று மற்ற துறவிகள் பேசக்கூடிய நிலை ஏற்படும். எனவே இந்த விஷயத்தை அரசவையில் வைத்து விவாதித்து முடிவெடுத்தால் நன்றாக இருக்கும்’.
கௌதமர் மறுநாள் கோசலத்தின் அரசனைத் தன்னிருப்பிடம் வரச்சொல்கிறார். அதுபோல், அனந்தபிண்டிகர், விசாகா என்ற பெண் சீடர், மற்றும் முக்கியமான நபர்களையும் வரச் சொல்லுகிறார். மாலையில், பிக்குகளும், பிக்குணிகளும், குடிமக்கள்-சீடர்களும் கூடியிருக்கும் அவையில், ’அந்த இளம் பிக்குணியின் விஷயத்தைத் தெளிவுபடுத்திவிட்டு வா’ என்று உபாலியை அழைத்துக் கூறுகிறார்.
அதன்படி, அவையை நடத்திய உபாலி, பெண் சீடர் விசாகாவை அழைத்து அந்த இளம் பிக்குணியை, துறவியாகச் சேர்வதற்கு முன் அவள் கர்ப்பமடைந்தாளா; அதன் பின்னரா என்று சோதிக்கச் சொல்கிறார். திரை மறைவுக்கு அவளை அழைத்துச் சென்று அவளது உடல் நிலைமையை ஆய்ந்து, சோதித்து, இல்லறத்தில் இருக்கும் காலத்தில்தான் அவள் கர்ப்பமுற்றிருக்கிறாள் என்று அறிவிக்கிறாள் விசாகா.
உரிய பாதுகாப்புடன் பிக்குணிகளின் வசிப்பிடத்தில் அவள் தொடர்ந்து வசிப்பதற்குப் புத்தர் அனுமதிக்கிறார். அவள் ஓர் ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தாள். இதைப் போன்ற ஒரு குழந்தை வேண்டும் என்றுதான் பல ஆண்டுகளுக்கு முன் புத்த பதுமுத்தர் முன்பாக அவள் வேண்டிக் கொண்டிருந்தாள்.
ஒருநாள் பிக்குணி ஆசிரமத்தின் வழியாகச் செல்லும்போது அரசன் குழந்தையின் அழுகுரலைக் கேட்டான். என்னவென்று விசாரிக்கச் சொன்னான். விவரங்களை அரசனிடம் அவர்கள் கூறினர். துறவி வாழ்க்கையை அனுசரிக்கும் பிக்குணிகளுக்குக் குழந்தையை வளர்ப்பது இடையூறாக இருக்கும் என்று சொல்லி, குழந்தையை அரச மகளிர் வளர்ப்பதற்கு அனுப்பினான். காசப்ப குமாரன் என்ற பெயரில் அவன் ஓர் இளவரசனாகவே வளர்க்கப்பட்டான். புத்திமானாக வளர்ந்தான். பிற்காலத்தில் அருக நிலையை அடைந்தான். அந்தத் தாயும் உள்ளொளியும் அறிவொளியும் பெற்றாள்.
கதை இவ்வாறு முடிகிறது. பின்னொரு நாள், பெருமான் ததாகதர் பிட்சையை முடித்து சீடர்களுக்கு உபதேசம் செய்தபின் தனது அறைக்குள் ஓய்வெடுக்கச் சென்றார். தம்ம கூடத்தில் கூடியிருந்த சீடர்கள் இந்த விஷயம் குறித்துத் தமக்குள் பேசிக்கொண்டிருந்தனர். ’தேவதத்தன் புத்த நிலையை அடையாதவர், பொறுமையற்றவர், பரிவும் இல்லாதவர். இளவரசன் காசப்பனுக்கும் அவன் தாய்க்கும் தீங்கு ஏற்படும் நிலைக்குக் காரணமாக இருந்தார். அறிவொளி பெற்றிருந்த, பொறுமையும் பரிவும் நிறைந்த கௌதமரால் அவர்கள் மீட்சியைப் பெற்றனர்’.
இந்த உரையாடலைக் கேட்டபடி அந்தக் கூடத்தில் நுழைகிறார் கௌதம புத்தர்; இப்பிறப்பில் மட்டுமல்ல; நான் எப்போதும் இந்த இருவருக்கும் உதவியாகத் தான் இருந்திருக்கிறேன் என்று சொல்கிறார். அவர்கள் அந்த விவரங்களைக் கூறும்படி கேட்டனர்.
0
பிரம்மதத்தன் வாரணாசியை ஆட்சி செய்துகொண்டிருந்தான். போதிசத்துவர் ஒரு மானாகப் பிறந்திருந்தார். தங்க நிறத்தில் அவர் உடல் மின்னியது. அந்த மானின் கண்கள் விலையுயர்ந்த கற்களாக மின்னின; கொம்புகளில் இருந்து வீசிய ஒளி வெள்ளிபோல் பளிச்சிட்டது. குளம்புகள் கெட்டி அரக்கால் உருவானவையாக இருந்தன. ஒரு சிறிய குதிரை அளவுக்கு அந்த மான் பெரியதாக இருந்தது. நிக்ரோதன் (ஆலமரம்) என்ற பெயரில் ஐந்நூறு மான்களுக்கு மத்தியில் அரசன்போல் அந்த மான் வளர்ந்தது.
அதே வனப்பகுதியில் மற்றொரு மானும் வளர்ந்தது. அதையும் ஐந்நூறு மான்களின் கூட்டம் ஒன்று பின்பற்றியது. அந்த மானின் பெயர் சாகா. நிக்ரோத மான் போலவே அதுவும் தங்க நிறத்தில் இருந்தது.
வாரணாசி அரசனுக்கு வேட்டையாடுவதில் அதிகப் பிரியம். அவனுக்கு உணவில் இறைச்சி கட்டாயம் இருக்க வேண்டும். அதனால், ராஜ்ஜியத்தின் குடிமக்கள், நகரமோ கிராமமோ, அனைவரும் வேட்டைக்குச் செல்லவேண்டும் என்று வற்புறுத்தினான்.
அந்த மக்கள் ஒன்று கூடிவிவாதித்தனர். ‘இந்த அரசன் வேட்டைக்குச் செல்லும்படி நம்மை வற்புறுத்தி நம் வேலைகளைக் கெடுக்கிறான். ஆகவே, நாம் பெரிதாக ஓர் உல்லாசப் பூங்கா போன்ற ஒன்றை அமைப்போம். மான்கள் சாப்பிடுவதற்கு ஏதுவாகப் புற்களையும் செடிகளையும் வளர்ப்போம். அந்தப் பூங்காவைச் சுற்றி மான்கள் தப்பிச் செல்லாதபடி வேலி அமைப்போம். பின்னர் காட்டுக்குச் சென்று மான்களை ஓட்டி வந்து இந்தப் பூங்காவில் அடைத்து வைத்துவிடுவோம்’ என்று முடிவு செய்தனர்.
அதன் பின்னர், கம்புகளையும் மான்களைக் கண்டுபிடிப்பதற்கான சாதனங்களையும் எடுத்துக்கொண்டு வனத்துக்குள் சென்றனர். வனத்தில் பல மைல் சுற்றளவுக்கு வட்டமாகச் சுற்றி வளைத்தனர். அந்த வளையத்துக்குள் சிக்கிய மான்களைப் பூங்காவை நோக்கி விரட்டி வந்தனர். அப்படிச் செய்கையில் இந்த நிக்ரோத மானும், சாகா மானும் வளையத்துக்குள் சிக்கிக் கொண்டன. கம்புகளைத் தரையில் தட்டியும், அம்புகளையும் ஈட்டிகளையும் அவற்றின் மீது படாமல் வீசியும் அவற்றை மிரட்டியும், மறைவிடங்களில் இருந்து அவற்றை வெளியில் வரவழைத்து, பூங்காவுக்குள் செலுத்திப் பத்திரமாக அதன் வாயிலையும் அடைத்தனர்.
அரசனைப் பார்த்து, ‘ராஜா, எங்களை வேட்டைக்குப் போகச் சொல்லி எங்கள் தினசரி வேலைகளை நிறுத்திவிட்டீர்கள். அந்த உல்லாசப் பூங்கா நிறைய மான்களை ஓட்டிவந்து நிரப்பிவிட்டோம். இனிமேல் அவற்றை உங்கள் உணவுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிச் சென்றனர்.
அரசன் அந்தப் பூங்காவுக்குச் சென்று பார்த்தான். ஏராளமான மான்கள் நின்றிருந்தன. அவனுக்குப் பெரும் மகிழ்ச்சி. அதில் இரண்டு மான்கள் தங்க நிறத்தில் இருந்ததைப் பார்த்தான். அவற்றை மட்டும் கொல்லக்கூடாது என்று உத்தரவிட்டான்.
0
அரசன் தனக்கு விருப்பமான நாளில் சென்று ஒரு மானை அம்பால் எய்து உணவுக்கு எடுத்து வருவான். சமையல்காரன் அதைச் சமைத்து அரசனுக்குப் பரிமாறுவான். சில நாட்களில் சமையல்காரனே நேரில் சென்று ஒரு மானைக் கொன்று தூக்கி வருவான். வில் அம்புடன் வரும் இவர்களைப் பார்த்ததுமே மான் கூட்டம் நடுங்கத் தொடங்கிவிடும். சில சமயங்களில் அம்பு பாய்ந்து அவை மயங்கி விழுந்து விடும். ஒரு மான் கொல்லப்படுவதற்குப் பல மான்கள் காயம்பட்டன; ஆகவே மான்கள் நிக்ரோத மானிடம் (போதிசத்துவர்) சென்று முறையிட்டன.
நிக்ரோத மான், சாகா மானையும் அழைத்து வரச் சொன்னது. மான்களைக் காப்பாற்ற ஓர் உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ள வைத்தது: ‘நண்பா, மான்கள் ஏராளமாகக் கொல்லப்படுகின்றன; அவை காயம்பட்டுத் துன்புறுகின்றன. சாவிலிருந்து தப்பிக்க முடியாது என்றாலும் காயம்படுவதிலிருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கிறது. தினந்தோறும், ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் ஒரு மான் சமையல்காரனின் வெட்டுமிடம் சென்று வெட்டுப்பாறையில் தலையைக் கொடுக்கவேண்டும் என்று செய்வோம். இன்று என்னுடைய கூட்டத்தில் என்றால், மறுநாள் உன்னுடையதிலிருந்து’ என்று கூறியது.
இப்படியே தொடர்ந்து நடைபெற்றது. தினசரி ஒரு மானின் மரணத்தின் மூலம் ஏனைய மான்கள் சித்ரவதையிலிருந்தும் காயத்தின் வேதனையிலிருந்தும் காப்பாற்றப்பட்டன.
ஒரு நாள் அப்படிச் செல்லவேண்டிய பொறுப்பு சாகா மான் கூட்டத்தில் கருவுற்றிருந்த ஒரு மான் மீது விழுந்தது. அந்தப் பெண் மான் தலைவனான சாகா மானிடம் சென்று தன் நிலைமையை எடுத்துரைத்தது: ‘ஒரே நேரத்தில் இருவர் சாகும் நிலைமை ஏற்படக்கூடாது. அதனால், நான் வேறொரு நாள் செல்கிறேன். அதற்குள் குட்டியை ஈன்றுவிடலாம். அதற்கு அனுமதியுங்கள்’ என்று கேட்டுக் கொண்டது. எனினும் சாகா மான் அதை ஏற்கவில்லை. திரும்பிச் செல்லும்படியும், முறையைப் பின்பற்றும்படியும் கடுமையாக உத்தரவிட்டது.
அதன் பின்னர் அந்தப் பெண் மான், நிக்ரோத மானிடம் சென்று தனது பரிதாபக் கதையைச் சொன்னது. ’சரி. உனது முறை கடந்துசெல்லும்படி நான் பார்த்துக்கொள்கிறேன். கவலைப்படாதே’ என்று சொல்லிய நிக்ரோத மான், உடனே புறப்பட்டுச் சென்று வெட்டும் பாறையில் தலைவைத்துப் படுத்துக் கொண்டது.
0
ராஜா அந்த ’பொன்மான்’ இரண்டுக்கும் விலக்கு அளித்திருந்தான். ஆகவே, நிக்ரோதப் பொன்மான் வெட்டுப் பாறையில் தலை வைத்திருப்பதைப் பார்த்த சமையல்காரன், விரைந்து சென்று காசி ராஜாவிடம் விஷயத்தைச் சொன்னான். உடனே அவன் தேரில் ஏறி, தனது பரிவாரங்களுடன் அந்த இடத்துக்கு விரைந்தான். தலையை வெட்டும் பாறையில் வைத்திருந்த மானை நோக்கிக் கேட்டான்:
‘மான்களின் அரசனே! என் நண்பா, நான்தான் உனக்கு விலக்கு அளித்திருந்தேனே! பின் ஏன் இங்கு வந்து தலையைக் கொடுத்திருக்கிறாய்?’
அப்போது அந்த மான் ராஜாவிடம் அனைத்தையும் கூறியது. ’ஒருவரது இறப்பை நான் இன்னொருவருக்கு மாற்ற முடியாது அல்லவா? அதனால் நானே இங்கு வந்து அதை ஏற்றுக்கொண்டேன்’ என்றது. காசி ராஜன் மனம் நெகிழ்ந்தான்.
‘பொன் மானே, இந்த அளவுக்குப் பொறுமையும், பரிவும், இரக்கமும் கொண்டவர்களை மனிதர்களிலும் நான் பார்த்ததில்லை. எழுந்திரு! உன்னையும் அந்தப் பெண் மானையும் கொல்ல வேண்டாம் என்று உத்தரவிடுவேன்’
அப்போது அந்த மான், ’நன்றி மனிதர்களின் ராஜாவே, நாங்கள் இருவரும் பாதுகாப்பாக இருப்போம். கூட்டத்தில் மீதமிருக்கும் மான்களின் கதி என்னவாகும்?’
‘அவற்றையும் கொல்ல வேண்டாம் என இப்போதே உத்தரவிடுகிறேன்.’
‘உங்கள் உல்லாசப் பூங்காவிலிருக்கும் மான்கள் பாதுகாப்பைப் பெற்றன. எனினும், மற்ற நான்கு கால் உயிரினங்கள்?
‘அவையும் பாதுகாப்பாக இருக்கும்.’
‘விலங்குகள் உயிர் பாதுகாப்புப் பெற்றன. ராஜாவே, பறவைகள் கூட்டம்?’
‘அவையும் பாதுகாப்பாக இருக்கும்.’
‘நீரில் வாழும் மீன்கள் போன்ற உயிரினங்கள்?’
‘அவற்றையும் எவரும் கொல்லாமல் இருக்க உத்தரவிடுகிறேன், பொன்மானே.’
இவ்வாறு அப்பிரதேசத்தின் அனைத்து வகை உயிரினங்களுக்கும் பாதுகாப்பை அந்தப் பொன்மானான போதிசத்துவர் உறுதி செய்தார். காசி ராஜன் நீதிநெறியுடனும் கருணையுடனும் நடந்துகொள்ளும்படி மான் உருவத்தில் இருந்த போதிசத்துவர் உபதேசம் செய்தார். ‘புத்தரின் கருணையுடன்’ அவருக்கு தம்மத்தை அந்தப் பொன் மான் போதித்தது. அரசனின் உத்தரவுகள் சரியாக நடைமுறையாகிறதா என்று பார்த்த பின்னர், தனது கூட்டத்துடன் காட்டுக்குள் சென்றது.
அந்தப் பெண் மான் அழகிய ஆண் குட்டியைப் பெற்றெடுத்தது. தாமரைப் பூவின் மொட்டுப்போல அழகாக இருந்த அந்தக் குட்டி, சாகா மானின் அருகில் சென்று அதனுடனும் மற்ற மான்களுடன் விளையாடியது. தாய் மான், குட்டிக்கு உபதேசம் ஒன்றை வசனப் பாடலாகக் கூறியது.
‘அன்பே, நிக்ரோத மானைப் பின்பற்றிச் செல்;
சாகா மான் கூட்டத்தின் அருகில் செல்லாதே!
இந்த மான் கூட்டத்தில் நீண்ட ஆயுளுடன்
இருப்பதைக் காட்டிலும்
நிக்ரோத மான் கூட்டத்தில் வாழ்ந்து
விரைவில் மரணிப்பது சிறப்பானது.’
0
எனினும், ராஜனின் உத்தரவுகளுக்குப் பின்னர், மான்கள், பயிர்களைச் சுதந்திரமாகத் தின்று திரிந்தன. விவசாயிகளின் துயரம் அதிகமானது. அவற்றை எவரும் துன்புறுத்துதல் கூடாது என்ற அரசனின் உத்தரவால், அவற்றை விரட்டவும் மக்கள் அஞ்சினர். மன்னனிடம் கூட்டமாகச் சென்று முறையிட்டனர். அரசனோ நான் பொன் மானுக்கு வாக்குறுதி அளித்துவிட்டேன் என்றான்.
இந்தச் செய்தி நிக்ரோத மான் காதில் விழுந்தது. தனது கூட்டத்திடம் இனி எவரும் இவ்வாறு வயலில் புகுந்து அவற்றை உண்ணக்கூடாது என்று வேண்டிக்கொண்டது. அத்துடன் இனிமேல் எவரும் வேலிகள் போன்றவற்றை அமைக்கவேண்டாம் என்று விவசாயிகளிடமும் கூறியது. வயலின் அருகில் இலைகள் கட்டப்பட்டிருந்தால் மான்கள் அங்கு அத்துமீறி நுழையாது என்று கூறியது. மான்கள் அனைத்தும் இந்த வாக்குறுதியைக் காப்பாற்றவேண்டும் என்றும் கூறியது. அன்று தொடங்கி வயல்களின் இலைகள் கட்டப்பட்டிருக்கும் அடையாளங்கள் தென்படத் தொடங்கியதாகச் சொல்கிறார்கள்.
பின்னர், கௌதமர் கதையின் கதாபாத்திரங்கள் யாரென்று கூறினார். முந்தைய பிறப்பில் அவரும், அவரது சமகாலத்தவர்களும் யார் யாராக இருந்தனர் என்று அடையாளம் காட்டினார்.
‘அப்போது சாகா மானாக இருந்தது இப்போது தேவதத்தர். அவரது தலைமையின் கீழிருந்த மான் கூட்டம், கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றிருக்கும் அவரைப் பின்பற்றுபவர்கள். இப்போது குமார காசப்பனின் தாயாக இருப்பவள் முற்பிறவியில் அந்தப் பெண் மான். அதற்குப் பிறந்த குட்டி மான் இப்போது குமார காசப்பன். ஆனந்தன், அப்போது காசி ராஜன். நிக்ரோத மானாக நானே அவதரித்திருந்தேன்’ என்றார்.
இந்த ஜாதகக் கதை இவ்வாறு முடிவுறுகிறது.
(தொடரும்)