(தொகுப்பிலிருக்கும் 14 வது கதை)
மிகவும் மதிக்கப்படும் ஒரு துறவி, சுவையான உணவின் மீதான ஆசையைக் கைவிடமுடியாமல் நாக்குக்கு அடிமையாகி மீண்டும் குடும்ப வாழ்வுக்குத் திரும்புகிறார். கௌதமரிடம் இதைப்பற்றி சீடர்கள் கூறுகின்றனர். அதையொட்டி அவர் ஒரு கதையை விவரிக்கிறார்.
‘சுவையைக் காட்டிலும் இந்த உலகில் மோசமானது எதுவும் இல்லை’ என்று பெருமான் இந்தக் கதையை ஜேதவனத்தில் இருந்தபோது கூறுகிறார்.
கௌதமர் ராஜகிருகத்தின் அருகில் வேணுவனத்தில் தங்கியிருந்து உபதேசம் செய்துகொண்டிருக்கிறார். அந்த நகரத்தின் செல்வமிக்க குடும்பங்களில் இரண்டாவது நிலையில் இருக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்தவன் திஸ்ஸா. குடும்பத்தில் அவன் இளைய மகன். புத்தர் வந்திருப்பது அறிந்து வேணு வனத்துக்குச் செல்கிறான். அவருடைய போதனைகளை, தம்மம் பற்றிய அவரது பேச்சைக் கேட்கிறான். அவனுக்குத் தானும் இந்த அமைப்பில் சேர்ந்து துறவியாகலாம் என்ற ஆவல் எழுகிறது. உரியவர்களை அணுகி தன்னைச் சேர்த்துக்கொள்ளும்படிக் கேட்கிறான்.
அவன் இளைஞன் என்பதாலும் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதாலும், சங்கத்தின் விதிகளின் படியும் அவனது பெற்றோரிடம் அனுமதி பெற்றுவருமாறு கேட்டுக்கொள்கிறார்கள். திஸ்ஸா தன்னைச் சங்கத்தில் சேர அனுமதிக்கும்படிப் பெற்றோரிடம் கேட்கிறான். அவர்கள் வேண்டாம் என்று எடுத்துரைக்கிறார்கள். உன்னையே வருத்திக்கொள்ளும் அந்தக் கடுமையான வாழ்க்கை வேண்டாம்; உன்னால் அதைப் பின்பற்ற முடியாது என்று அறிவுரை கூறுகிறார்கள். திஸ்ஸா ஏற்கவில்லை.
ரதபாலன் என்ற துறவியின் நடைமுறையைப் பின்பற்றுகிறான். அதன்படி, தனக்கு அனுமதி தரவில்லை என்றால் தான் உணவு உண்ணப் போவதில்லை என்று போராட்டம் செய்கிறான். ஏதேதோ, எப்படி எப்படியோ பேசிப் பார்த்த அவனது பெற்றோர்கள் வேறு வழியின்றி சங்கத்தில் சேர்வதற்கு அனுமதி அளிக்கிறார்கள்.
சங்கத்தில் ததாகதரின் முன்னிலையில் உறுதி எடுத்துக் கொண்டு துறவியாகிறான். குள்ள பிண்டபாடிகர் -பிட்சை சேகரிப்பவர்களில் இளையோன் என்று அவனை அழைக்கிறார்கள்.
அந்த இளைஞன் அமைப்பில் சேர்ந்த சுமார் பதினைந்து நாட்களுக்குப் பின்னர், புத்த பெருமான் வேணுவனத்திலிருந்து புறப்பட்டு சிராவஸ்தியிலிருந்த ஜேதவனத்துக்குச் சென்றார், அங்கு அந்த இளம் துறவி, அந்த நிலையில் ஏற்கவேண்டிய பதின்மூன்று பயிற்சிகளையும் பெற்றார். எந்த வீட்டையும் தவிர்க்காமல் வீடு வீடாகப் பிக்ஷை ஏற்றார். ததாகதரின் போதனைகளை ஏற்று, அவற்றைப் பின்பற்றிய அந்த இளைஞன் சொர்க்கத்தில் பிரகாசிக்கும் சந்திரனைப்போலப் பிரகாசித்தான் எனச் சொன்னார்கள்.
இதே நேரத்தில் அங்கே ராஜகிருகத்தில் திருவிழா ஒன்று நடந்து கொண்டிருந்தது. துறவி திஸ்ஸாவின் பெற்றோர்கள் மகனை நினைத்து வருத்தப்பட்டனர். ஒரு வெள்ளிப்பெட்டியில் அவன் எப்போதும் அணியும் ஆடைகளையும் அணிகலன்களையும் வைத்திருந்தனர். அதைத் திறந்து வைத்துக்கொண்டு புலம்பிக்கொண்டிருந்தனர்: ’திருவிழாக்களில் எங்கள் மகன் இதையெல்லாம் அணிந்து கொண்டாட்டமாக இருப்பானே. எங்களுடைய ஒரே மகனைக் கௌதமர் அழைத்துக்கொண்டார். இப்போது அவன் சிராவஸ்தியில் இந்த நேர்த்தியான உடைகளை அணியாமல் எப்படி இருக்கிறானோ, எங்கு நிற்கிறானோ, எங்குத் தங்கியிருக்கிறானோ என்ன சாப்பிடுகிறானோ தெரியவில்லையே?’
அப்போது அந்த வீட்டுக்கு வந்த ஓர் அடிமைப் பெண், வீட்டின் எஜமானி அழுவதைக் கவனித்தாள். ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டாள்; அந்தப் பெண்மணியும் நடந்ததை எல்லாம் அவளிடம் சொன்னாள்.
அவள் ‘அம்மா உங்கள் மகனுக்கு என்ன பிடிக்கும்?’ என்று கேட்டாள்.
அவனுக்கு இதெல்லாம் பிடிக்கும் என்று அந்தத் தாய் துயரத்துடன் ஒரு பட்டியலைக் கூறினாள்.
‘சரி, நீங்கள் எனக்கு அனுமதியும் அதிகாரமும் கொடுத்தால், உங்கள் மகனைத் திரும்ப இந்த வீட்டுக்கு அழைத்து வர என்னால் முடியும்.’
‘அப்படியா, உங்களால் முடியுமா? மிக்க மகிழ்ச்சி. அப்படிச் செய்தால் நீங்கள் கேட்பதையெல்லாம் தருகிறேன்’ என்று ஒப்புக்கொண்டாள். அந்தப் பெண்ணுக்குத் தேவையான பணத்தையும் செலவுகளுக்குக் கொடுத்தாள்; அவளுக்கு உதவியாகப் பரிவாரம் ஒன்றையும் ஏற்பாடு செய்தாள்.
‘இதோ நீ கேட்டது அனைத்தும் கொடுத்துவிட்டேன். சென்று, என் மகனை எப்படியாவது திரும்ப அழைத்து வா!’
திஸ்ஸாவின் பெற்றோருடைய அனுமதியுடன் பரிவாரம் சூழ அந்தப் பெண் பல்லக்கில் ஏறி சிராவஸ்திக்குச் சென்றாள். அங்கு அந்தத் துறவி தினமும் பிக்ஷைக்குச் செல்லும் வீதியிருக்கும் இடத்தை விசாரித்து அறிந்தாள். அங்கு வீடொன்றைப் பார்த்துக் குடியமர்ந்தாள். ஒரு முழுமையான குடும்பத்தைப்போல் தினசரி காரியங்கள் அனைத்தையும் செய்தாள். பணியாட்கள் சூழ்ந்திட அவள் வசித்தாலும், அந்தத் துறவி அவரது பெற்றோர்கள் அனுப்பிய அந்த வேலையாட்களை அடையாளம் கண்டு கொள்ளாதவாறு மறைவாக இருக்கச் செய்து தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டாள்.
அந்தத் துறவி பிக்ஷை சேகரிக்க வரும் நேரத்தைப் பார்த்திருந்தவள் அவருக்கு உணவும் பானமும் அளித்து உபசரித்தாள். அவள் அளிக்கும் உணவு மற்றும் பானத்தின் ருசி துறவிக்கு மிகவும் பிடித்துவிட்டது; அந்த ருசியில் அவர் பிணைக்கப்பட்டார். அதன் பின்னர் அடுத்தடுத்து அவர் பிக்ஷைக்காக வருகையில் துறவியை வீட்டில் அமரவைத்து உபசரித்தாள். இது அவருக்கு வழக்கமாகிவிட்டது; அந்த உணவின் ருசிக்கும் உபசரிப்புக்கும் அடிமையாகிவிட்டார். அந்தப் பெண் இப்படியாக அந்தத் துறவியுடன் நட்பை உண்டாக்கிக் கொண்டாள்.
பின்னொருநாள் இவ்வாறு பிக்ஷைக்கு அவர் வரும் நேரம் அறிந்துகொண்ட அந்தப் பெண், உடல் நிலை சரியில்லை என்று பொய்யாக வீட்டின் உள்ளறையில் சென்று படுத்துக்கொண்டாள். பிக்ஷைக்கு வந்த துறவியை வீட்டில் அமரவைத்த பணியாளர்கள் அவருடைய திருவோட்டை எடுத்து வைத்துக் கொண்டனர். உணவு வரும் என்று காத்திருந்தவர், அந்தப் பெண்மணி தானே உபசரிப்பாள், காணவில்லையே என்று சுற்றுமுற்றும் பார்த்தார், துறவி.
‘அந்தப் பெண் எங்கே?’
‘அவருக்கு உடல் நிலை சரியில்லை. உள்ளறையில் படுத்திருக்கிறார். நீங்கள் அவரைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்.’
அவள் அளித்த பதார்த்தங்களின் சுவையால் ஈர்க்கப்பட்டிருந்த துறவி, தான் ஒரு துறவி என்பதையும், ஏற்றுக்கொண்ட உறுதிமொழிகளையும், பெண் இருக்கும் வீட்டின் உள்ளறைக்குள் செல்லக்கூடாது என்பதையும் மறந்து, அந்தப் பெண் படுத்திருந்த அறைக்குள் சென்றார்.
வந்த காரியம் வெற்றி என்பதை உணர்ந்த அந்தப் பெண், அதன் பின்னர் தான் யார் என்பதையும், இங்கு வந்ததற்கான காரணத்தையும் துறவியிடம் விளக்கிக் கூறினாள். அவர் சுவையான உணவு உண்ணுவதில் ஈடுபாடுடையவர்; நாச்சுவைக்குக் கட்டுப்பட்டவர்; பெற்றோர்கள் மூலமாக இதை அறிந்து அதைப் பயன்படுத்தி அவரை வீழ்த்தியதாகவும் கூறினாள்.
துறவி முழுமையாக அவள் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டார். சங்கத்தின் விதிகளையும் மீறிவிட்டார். ஆகவே அவர் சங்கத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் திஸ்ஸாவை பல்லக்கில் ஏற்றிக்கொண்டு பரிவாரங்களுடன் மீண்டும் ராஜகிருகத்துக்குத் திரும்பி வந்தாள். ‘துறவியின்’ பெற்றோர்களுக்கு, மகன் திரும்பியதில் மிக்க மகிழ்ச்சி.
இந்த நிகழ்வுகள் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டன.
0
சங்கத்தின் தம்ம கூடத்தில் அமர்ந்து இந்த நிகழ்வு குறித்து சீடர்கள் தமக்குள் உரையாடிக் கொண்டிருந்தனர். ‘சகோதரர்களே, அந்த அடிமைப் பெண் சுவைக்காக ஏங்க வைத்து, திஸ்ஸா என்ற குள்ள பிண்டபடிகரை சங்கத்திலிருந்து வெளியேற்றி அழைத்துச் சென்றுவிட்டாள்’.
அந்த நேரத்தில் கூடத்துக்குள் நுழைந்தார் பெருமான். தனது இருக்கையில் அமர்ந்து அதற்கு அழகூட்டினார். ‘ துறவிகளே, இந்தக் கூடுகையில் நீங்கள் இன்று விவாதிக்கும் விஷயம் என்ன?’
துறவிகள் அந்த நிகழ்வை கௌதமரிடம் கூறினர். அதைக் கவனமாகக் கேட்ட ததாகதர் அவர்களிடம் கீழ்க்கண்டவாறு கூறினார்: ‘துறவிகளே, அந்தத் துறவி இவ்வாறு சுவைக்கு ஏங்கியதும், அந்த பெண்ணின் வலையில் வீழ்ந்ததும் இது முதன் முறையல்ல. கடந்து சென்ற பிறவியிலும் அவர் இவ்வாறுதான் அவளுடைய வலையில் வீழ்ந்து போனார்’.
அதன் பின்னர், சீடர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, அந்தக் கதையை அவர்களுக்குக் கூறினார்.
0
முன்பொரு காலத்தில் பிரம்மதத்தன் வாராணசியில் ஆட்சி செய்துகொண்டிருந்தான். பெரும் தோட்டங்களும் பூங்காக்களும் அவனுடைய அரண்மனையில் பராமரிக்கப்பட்டு வந்தன. அரசனின் பொழுதுபோக்கு நேரம் முக்கியமானது என்பதால் அதற்குப் பணியாளர்கள் சிறப்பாக அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களின் தலைவனாக சஞ்சயன் என்ற தோட்டக்காரன் இருந்தான்.
ஒருநாள், அவன் உல்லாசப் பூங்காவில் பராமரிப்பு வேலையில் இருக்கும்போது காற்றைப்போல் கடுகி ஓடும் வெளிமான் ஒன்று அங்கு நுழைந்தது. மேய்ந்துகொண்டிருந்த அந்த விலங்கு, சஞ்சயனைக் கண்டதும் பயந்து ஓடிவிட்டது. மனிதர்களைக் கண்டால் அஞ்சியோடும் அந்த மானைப் பயமுறுத்தாமல், இயல்பாகப் பூங்காவுக்குள் உலவும் சூழலை உருவாக்க சஞ்சயன் முனைந்தான். இப்படி சில நாட்கள் போனதும், பல முறை வந்து பழகிவிட்ட மான், உல்லாசப் பூங்காவில் சுற்றித் திரியத் தொடங்கியது.
நாள்தோறும் தோட்டத்துக்கு வரும் சஞ்சயன் பூக்களையும் பழங்களையும் சேகரித்து மன்னனுக்கு எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் அரசன் அவனிடம், கேட்டான்.
‘நண்பரே, உல்லாசப் பூங்காவில் விசித்திரமாக ஏதேனும் நடந்ததா?’
‘அய்யா, நானே சொல்ல நினைத்தேன். வெளிமான் ஒன்று தினமும் பூங்காவில் உலாவ வருகிறது.’
‘நீங்கள் அதைப் பிடிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?’
‘ஓ… நிச்சயமாகப் பிடித்துவிடலாம். உங்கள் விருப்பம் அதுவானால் அப்படியே செய்வோம்.’
‘சரி, ஆவன செய்யுங்கள்.’
‘அரசே, எனக்கு சற்று அதிகமாகத் தேன் மட்டும் கொடுக்கச் சொல்லி உத்தரவிடுங்கள். அந்த மானை மாட்சிமை மிக்க உங்கள் அரண்மனைக்குள் ஓட்டிக் கொண்டு வந்துவிடுவேன்.’
‘அப்படியே ஆகட்டும்.’
அரசன், தோட்டக்காரன் சஞ்சயனுக்கு வேண்டுமளவுக்குத் தேன் கொடுக்கச்சொல்லி உத்தரவிடுகிறான். சஞ்சயன் தேனை வாங்கிக் கொண்டு உல்லாசப் பூங்காவுக்குச் சென்றான். அந்த மான் அடிக்கடி வந்து செல்லும், புல் மேயும் பகுதியில் புற்களின் மீது தேனைத் தடவினாற்போல் தெளித்தான். அதன் பின்னர் மரங்களுக்குப் பின்னால், மானின் கண்களில் படாதவாறு ஒளிந்து கொண்டான்.
மானும் வந்தது, தேன் தடவிய புற்களின் பக்கம் மேய்ந்தது. அந்தப் புதிய தேன் சுவையில் சிக்கிக் கொண்டது. வெளி மான் தினந்தோறும் வந்தாலும், தேன் தெளித்த புற்கள் இருந்த பகுதியிலேயே மேய்ந்தது. மான் பொறியில் சிக்கிக் கொண்டது என்பதை அறிந்ததும், சஞ்சயன் மறைவிலிருந்து வெளிவந்து தூரத்தில் இருந்தபடியே மானுக்கு தனது இருப்பை வெளிப்படுத்தினான்.
தொடக்கத்தில் ஒன்றிரண்டு நாட்கள் இவனைக்கண்டு அஞ்சி ஓடிய மான், அதன் பின்னர் தேன் புற்களின் ஈர்ப்பால், அவன் இருந்தாலும், அங்கு வந்து மேய ஆரம்பித்தது. இப்போது தோட்டக்காரனின் இருப்பு அதற்குப் பழகிப்போய்விட்டது. அவனால் தனக்கு ஆபத்தில்லை என்று தெரிந்ததும், சஞ்சயன் கைகளில் பிடித்திருக்கும் தேன் தடவிய புற்களைத் தின்னுமளவுக்கு நெருங்கி வந்தது. சரி, அந்த விலங்கின் நம்பிக்கையை நாம் பெற்றுவிட்டோம் என்று அந்தத் தோட்டக்காரன் உறுதி செய்துகொண்டான்.
மறுநாள், மான் சந்தேகம்கொள்ள கூடாதென்று பூங்காவிலிருந்து அரண்மனைக்குச் செல்லும் பாதையை உடைந்த மரக்கிளைகளால் கம்பளம்போல் பரப்பினான். தன்னுடைய தோளில் தேன் நிரம்பிய குடுவை ஒன்றைத் தொங்கவிட்டுக்கொண்டான்; இடுப்பில் கத்தையாகப் புற்களைக் கட்டிக்கொண்டான்; மான் பார்வையில் படும்படி தேன் தடவிய புற்களை அந்தப் பாதையில் வீசினான். அதைத் தின்ற பின் மான் அவனைப் பார்த்தது; அவனும், இடுப்பில் கட்டியிருந்த புல்லைப் பிய்த்து குடுவையிலிருந்த தேனில் தோய்த்து பாதையில் வீசினான். மான் தின்றுகொண்டே அவனைத் தொடர்ந்து வந்தது. இவ்வாறு அரண்மனையின் வாசல் வரையிலும் தேன் தடவிய புல்லை மானின் முன்னால் வீசிக்கொண்டே சென்றான். மான் மாளிகையின் வாசலைத் தாண்டி உள்ளே நுழைந்ததும், காவலர்கள் கதவை மூடினர்.
மனிதர்களைப் பார்த்த மான் உயிருக்கஞ்சி நடுக்கத்துடன் அந்த மண்டபத்தைச் சுற்றி அங்குமிங்கும் ஓடியது; அப்போது, ராஜா உப்பரிகையிலிருந்த தனது அறையிலிருந்து கீழிறங்கி வந்தான் மண்டபத்துக்குள் பிடிபட்டு நின்றிருந்த வெளி மானைப் பார்த்தான்.
‘இந்த மான் மிகவும் பயந்து போயிருக்கிறது. விலங்குகளில் மனிதர்களைக் கண்டு மிகவும் பயப்படும் விலங்கு இது. ஓரிடத்தில் மனிதர்களைப் பார்த்துவிட்டால், அந்த இடத்துக்கு ஒரு வாரம் முழுவதும் மீண்டும் போகாது. எங்காவது ஓரிடத்தில் அதை யாராவது பயமுறுத்திவிட்டால், அந்த இடத்தை மீண்டும் திரும்பிப் பார்க்காது; வாழ்நாள் முழுவதும் அங்கு செல்லாது. எனினும், தேன் சுவையால் ஈர்க்கப்பட்டு அதற்கு அடிமையாகிப்போன இந்த விலங்கு காட்டிலிருந்து இதோ இந்த அரண்மனை வரையிலும் வந்துவிட்டது. வனத்தையே சார்ந்திருக்கும், அதை விட்டு எப்போதும் வெளிவராத மான், சுவைக்கு அடிமையாகி சஞ்சயனுக்குக் கட்டுப்பட்டுவிட்டதைப் பார்த்தீர்களா?” என்று சொல்லிய அரசன், அந்த வெளிமானை வனத்துக்குள் கொண்டு விடும்படி உத்தரவிட்டான்.
புத்த பெருமான், கதையையும் உபதேசத்தையும் இவ்வாறு சொல்லி முடித்தார். அந்தப் பெண் காட்டிய உணவுச் சுவையால் ஈர்க்கப்பட்ட அந்தத் துறவி சங்கத்தை விட்டு வெளியேறினார்; முற்காலத்தில் அந்த மான் தேனின் சுவையால் வனத்தைவிட்டு வெளியேறி மாட்டிக்கொண்டது.
அந்த அடிமைப் பெண் முற்பிறவியில் தோட்டக்காரன் சஞ்சயனாக இருந்தார். துறவி குள்ள பிண்டபடிகர் அப்போது வெளிமானாகப் பிறந்திருந்தார். நானே வாராணசி மன்னன் பிரம்மதத்தனாக அவதரித்திருந்தேன் என்று சொன்னவர், ‘உண்மையாகவே, வீடுகளில் அல்லது நமக்குப் பழக்கமானவற்றில் நம்மைக் கட்டிப்போடும் சுவையைக் காட்டிலும் மோசமானது உலகில் வேறு எதுவும் இல்லை’ என்று சொல்லி முடித்தார்.
(தொடரும்)