(தொகுப்பிலிருக்கும் 16வது கதை)
தற்போதைய காலத்தில் புத்தரின் மகன் ராகுலன் இரவில் தோட்டத்திலிருக்கும் வீட்டில் தங்கினாலும் விதிகளைக் கடைப்பிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். கடந்த பிறவியிலும் ராகுலன் பொறுப்புடனும் அக்கறையுடனும் இருந்ததாகவும், அதுதான் அவரது உயிரைக் காப்பாற்றியது என்றும் புத்தர் விளக்குகிறார்.
கோசாம்பியில் உள்ள பதரிகா மடத்தில் அப்போது பெருமகன் தங்கியிருந்தார். சங்க விதிகளைக் கடைப்பிடிப்பதில் மிகவும் ஆர்வத்துடன் இருந்த சீடரான ராகுலன் குறித்த இந்தக் கதையைச் சீடர்களிடம் சொன்னார்.
0
ஒருமுறை கௌதமர் ஆலவி நகருக்கு அருகில் அமைந்திருந்த அக்காலவா கோவிலில் தங்கியிருந்தார். பௌத்தக் கொள்கைகளைப் பின்பற்றும் பல பெண்களும் பிக்குணிகளும் அங்கு கூடுவார்கள். தம்மம் குறித்த பிரசங்கத்தைக் கேட்க வருவார்கள். பிரசங்கம் பொதுவாக பகல் நேரத்தில்தான் இருக்கும். நேரம் அதிகமாகி மாலை கவிந்த பின்னர் பெண்கள் புறப்பட்டு விடுவார்கள். துறவிகளும் சங்கத்தில் பற்றுக்கொண்ட சாதாரண ஆண்கள் மட்டுமே இருப்பார்கள்.
மாலைப் பிரசங்கம் நடந்து முடிந்த பின்னர் மூத்த பிக்குகள் அவர்களுடைய அறைகளுக்கு ஓய்வு எடுக்கச் செல்வார்கள். இளம் சீடர்களும் சங்கத்தில் பற்றுக்கொண்ட சாதாரண ஆண்களும் கூட்டம் நடந்த அந்தக் கூடத்திலேயே படுத்துறங்குவார்கள். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது நன்கு குறட்டை விடுவார்கள்; சிலர் சப்தமாக வாயால் மூச்சுவிடுவார்கள்; சிலர் நற நறவென பற்களைக் கடிப்பார்கள். பலருடைய தூக்கம் இதனால் கெட்டுப்போகும்.
ஒரு நாள் இவ்வாறு நிகழ்ந்தது; சிறிது நேர உறக்கத்துக்குப்பின் தூக்கம் கெட்டு எழுந்த மூத்த சீடர்கள் அநாகரிகமான இந்தப் பழக்கம் குறித்து கௌதமரிடம் முறையிட்டனர். ‘சங்கத்தில் புதியதாக சேர்ந்திருக்கும் சீடர்களுடன் ஒரே இடத்தில் ஒரு துறவி தூங்கினால், அது ‘பசித்தேய’ குற்றவகையில் வரும் (குற்றத்தை ஒப்புக்கொண்டு வருத்தப்படுவதும் தேவை)’ என்றார். இந்த விதியைக் கூறிய பின்னர் கௌதமர் கோசாம்பி நகருக்குச் சென்றார்.
எந்த ஒரு பிக்கும் எந்த நிலையிலும், இரண்டு அல்லது மூன்று இரவுகளுக்கு மேல், சங்கத்தின் உயர் நிலையை அடையாதிருக்கும் சீடர் ஒருவருடன் ஒரே இடத்தில் உறங்க/ படுத்துக்கொள்ளக் கூடாது. அவ்வாறு செய்தால் அது பசித்தேய குற்றம்.
புத்தர் இவ்வாறு சொன்னதைக் கேட்டதும் அந்தத் துறவிகள் மரியாதைக்குரிய ராகுலனிடம் இவ்வாறு கூறினர்: ‘ஐயா, ததாகதர் இப்படி ஒரு விதியைக் கூறினார். ஆகவே நீங்கள் எங்களுடன் உறங்க வேண்டாம. தயவுசெய்து உங்களுக்கு என்று ஓர் இடத்தைக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.’
அந்தத் துறவிகள், ராகுலன் அவரது தந்தை மீது வைத்திருக்கும் மரியாதையை அறிந்தவர்கள்; சங்க விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் அந்த மகனுக்கு இருந்த ஆர்வத்தையும் அறிந்தவர்கள்; எனவே, அந்த இடம் அவனுடையது என்பதுபோல் அந்த இளைஞனை நடத்தினர். ராகுலனுக்கு எளிய படுக்கை ஒன்றை ஏற்பாடு செய்தனர்; துணிகளைக் கொடுத்து அதைத் தலைக்கு அணையாக வைத்துக்கொள்ளவும் சொன்னார்கள்.
எனினும், இந்தக் கதை நடந்த நாளில் அவர்கள் அவருக்கு தனியாக அறை ஏதும் கொடுக்கவில்லை. அது விதியை மீறிய செயலாக இருக்கும் என்று பயந்தார்கள்.
ஓர் அற்புதமான சீடன் ராகுலன்; அவரது தந்தையான பத்து ஆற்றல்கள் கொண்ட ஒருவரான புத்தரிடம் உதவி கேட்டு செல்லவில்லை; அவருடைய ஆசான் என்ற முறையில் சங்கத்தின் தம்மம் பிரிவின் தலைவராக இருந்த சாரிபுத்தனிடமும் செல்லவில்லை; அவருடைய ஆசிரியர் பெருமைக்குரிய மொகல்லானாவையும் தேடிச் செல்லவில்லை; அமைப்பில் அவருக்கு மூத்தவரும் ஆசிரியரும் மாமனுமான ஆனந்தரிடமும் செல்லவில்லை. கௌதம புத்தரின் தோட்ட வீட்டுக்கு தனது பொருட்களை எடுத்துச் சென்றார்; சொர்க்கத்தில் இருக்கும் ஒரு மாளிகையாக அதை எண்ணி தனது வசிப்பிடமாக ஆக்கிக் கொண்டான்.
புத்தர் பெருமானின் அந்தத் தோட்ட வீட்டின் கதவு எப்போதும் மூடப்பட்டே இருக்கும்: சமன் செய்யப்பட்ட அந்த வீட்டின் தளம் நறுமணம் ஊட்டப்பட்டதுபோல் மணக்கும். சுற்றிலும் சுவர்கள் மலர்களாலும் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும்; இரவு முழுவதும் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருக்கும். இந்த வீட்டில் வசிக்கலாம் என்று ராகுலனைத் தூண்டியது இத்தகைய சிறப்புகள் அல்ல.
துறவிகள் அவரைப் பார்த்து தங்குவதற்கு அவருக்கான ஓர் இடத்தைக் கண்டுபிடிக்கச் சொன்னார்கள்; உபதேசங்களையும் அறிவுறுத்தல்களையும் அவர் மதித்தார்; சங்க விதிகளைத் தவறாமல் கடைப்பிடிக்க ஆசைப்பட்டார். இந்தக் காரணங்களால் தான் அவர் அங்கு தங்கினார்
உண்மையில், அவ்வப்போது துறவிகள் அவரைச் சோதிப்பதுண்டு; வெகு தொலைவில் இருந்து அவர் வருகிறார் என்பதை அறிந்தும், துடைப்பத்தையோ கூட்டிய தூசியையோ கூடத்தில் எறிவார்கள்; ராகுலன் உள்ளே வந்ததும் அதை யார் வீசினார்கள், பார்த்தீர்களா என்று கேட்பார்கள்.
‘ஆமாம், ராகுலன் அந்த வழியாகத்தான் வந்தேன்’ என்பதே அவரது பதிலாக இருக்கும். எதிர்காலத்தின் ஒரு முதிர்ச்சி பெற்ற துறவியாகப்போகும் அவர் என்றைக்கும் அதைப் பற்றி எதுவும் தெரியாது என்று என்றைக்கும் கூறியதில்லை. மாறாக, அந்தக் குப்பையை அகற்றுவார். கூறிய அந்தத் துறவியின் மன்னிப்பை வேண்டுவார். மன்னித்தேன் என்று அவர் கூறும் வரையிலும் அதை உறுதிபடுத்திக்கொள்ளும் வரையிலும் அந்த இடத்தை விட்டு நகர மாட்டார். விதிகளை கடைப்பிடிப்பதில் அவர் அவ்வளவு ஆர்வமுடன் இருந்தார். முக்கியமாக இந்த மிகையார்வம் தான் அந்தத் தோட்டவீட்டை வசிப்பதற்குத் தெரிந்தெடுக்க முக்கிய காரணமாக அமைந்தது.
0
பொழுது இன்னும் விடியவில்லை. மடாலயத்துக்குத் திரும்பிய எம்பெருமான் தோட்ட வீட்டுக்கு வந்து வாயிலின் முன் நின்றார். ஒரு முறை செருமினார். ‘நான் வந்திருக்கிறேன்’.
‘இதோ வந்துவிட்டேன்’ என்பது மதிப்புக்குரிய ராகுலனின் பதிலாக இருந்தது.
‘யார் உள்ளே?’ என்று வினவினார் புத்தர்.
‘நான்தான், ராகுலன்’ என்று பதில் வந்தது. வெளியே வந்த இளைஞன் புத்தரை குனிந்து வணங்கினார்.
‘ராகுலா, நீ ஏன் இங்கே தூங்குகிறாய்?’
‘எனக்குத் தூங்குவதற்கு வேறு இடம் ஏதும் கிடைக்கவில்லை. இந்த நேரம் வரையிலும் துறவிகள் அனைவரும் என்னிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்கிறார்கள்; விதிகளை மீறியதாகப் போய்விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் எனக்குத் தங்க இடம் தர தயங்குகிறார்கள். அதன் காரணமாக இந்த வீட்டைத் தங்குவதற்குத் தெரிந்தெடுத்தேன். அத்துடன், இந்த இடத்தில் நான் வேறு யாரையும் சந்திக்கவோ எதிர்கொள்ளவோ வாய்ப்பிருக்காது அல்லவா?’
ஞானாசிரியன் தனக்குள் இவ்வாறு நினைத்துக் கொண்டார்: ‘ராகுலனையும் இவர்கள் இவ்வாறு நடத்துவார்கள் என்றால், சங்கத்தில் சேரும் புதிய இளைஞர்களை என்ன செய்யமாட்டார்கள்?’ அவருடைய மனம், தம்மம் குறித்துச் சிந்தித்தது; அசைபோட்டது. மறுநாள் அதிகாலையில் துறவிகள் அனைவரையும் கூடுமாறு வேண்டிக்கொண்டார். தம்மப் பிரிவின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் சாரிபுத்தனிடம் விசாரித்தார். ‘சாரிபுத்தா, சங்கத்தின் அனைத்து நிகழ்வுகளும் உனக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ராகுலன் நேற்று எங்கே உறங்கினான் என்று தெரியுமா?’ என்று அவரைக் கேட்டார்.
‘இல்லை, ஐயா, எனக்குத் தெரியாது.’
‘ராகுலன் இன்று அந்தத் தோட்டவீட்டில் தங்கியிருக்கிறார். சாரிபுத்தா, ராகுலனையே சங்கம் இப்படி நடத்தும் என்றால், இத்தகைய நிர்வாக முறையில் மற்ற இளைஞர்களை சங்கம் எப்படி நடத்தக்கூடும். அவர்களை இப்படி நடத்துவது, அவர்களை நாம் சங்கத்தில் இருத்தி வைக்க உதவாது. ஆகவே, இனிமேல் வரும் நாட்களில் புதியதாகச் சேர்ந்திருக்கும் உறுப்பினர்களை உன்னுடைய இருப்பிடத்திலேயே முதல் இரண்டு நாட்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்துகொள். மூன்றாவது நாள் தொடங்கி அவர்கள் வெளியில் தங்க அனுமதிக்கலாம். எனினும், அவர்கள் எங்குத் தங்குகிறார்கள் என்பதை அறிந்து போதுமான கவனம் எடுத்துக்கொள்’
இந்த அறிவுறுத்தலுடன் பெருமான் கௌதமர் இதற்கான விதியையும் வகுத்து அறிவித்தார்.
0
தம்மக்கூடத்தில் துறவிகள் அனைவரும் ஒன்று கூடியிருந்தனர்; ராகுலனின் நல்ல குணங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். ‘சகோதரர்களே, ராகுலன் விதிகளைக் கடைப்பிடிப்பதில் எவ்வளவு ஆர்வமாக இருந்தார் பார்த்தீர்களா. அவருக்கான தங்குமிடத்தைத் தேடிக்கொள்ளச் சொன்னபோது, தசபலரின் (பத்து ஆற்றல்கள் கொண்டவரின்) மகன் என்று தன்னைப்பற்றிக் கூறிக்கொள்ளவில்லை; நீங்கள் எங்குத் தங்குகிறீர்கள்? உங்களுடைய வசிப்பிடத்திலிருந்து வெளியேறுங்கள். நான் தங்க வேண்டும் என்று ஒரு துறவியையும் அவர் வெளியேறும்படி கூறவில்லை. ஒரு சிறிய தோட்ட வீட்டில் தனது வசிப்பிடத்தைத் தேடி, அங்குத் தங்கியிருக்கிறார்.’
அவர்கள் இவ்வாறு தமக்குள் உரையாடிக் கொண்டிருக்கும்போது ததாகதர் கூடத்துக்கு வந்தார்; அவருக்கான ஆசனத்தில் அமர்ந்தார்; ‘துறவிகளே, இன்று நீங்கள் உரையாடிக் கொண்டிருக்கும் விஷயம் என்ன?’ என்று கேட்டார்.
‘பெருமகனே’ என்று அவர்கள் பதில் கூற முனைந்தனர். ‘சங்கத்தின் விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் துறவி ராகுலனுக்கு இருக்கும் ஆர்வத்தையும் அக்கறையையும் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம்.’
உடனே ஆசிரியர், ‘ராகுலன் அப்படித்தான். இப்போது மட்டுமல்ல, முற்பிறவியில் அவர் ஒரு விலங்காகப் பிறந்திருந்தபோதும் இத்தகைய ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தினார்’ என்றார். அத்துடன், முற்பிறவியில் நடந்த அந்தக் கதையையும் கூறத் தொடங்கினார்.
0
அந்தக் காலத்தில் ராஜகிருகத்தைத் தலைநகராகக் கொண்டு மகத ராஜ்ஜியத்தை ஓர் அரசன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அப்போது போதிசத்துவர் மானாகப் பிறந்திருந்தார்; அந்தக் காட்டில் மான் கூட்டத்துக்குத் தலைவன் போல இருந்தார். இப்போது அவருடைய சகோதரி மான் தனது மகனை அவரிடம் அழைத்து வந்தது.
‘என் அண்ணனே, இதோ உங்கள் மருமகன். அவனுக்கு ஒரு மானுக்கு இருக்கவேண்டிய தந்திரங்களை எல்லாம் கற்றுக்கொடுங்கள்’ என்று வேண்டியது.
‘உறுதியாகக் கற்றுத் தருகிறேன்’ என்று போதிசத்துவர் கூறினார். ‘என் தங்கையின் மகனே, இப்போது சென்று விளையாடு. நான் குறிப்பிடும் நேரத்தில் பாடம் கற்றுக்கொள்ள வந்துவிடு.’
அவ்வாறு, வெளியில் சென்று விளையாடிவிட்டு மாமன் குறிப்பிட்ட நேரத்தில், இளம் மான் திரும்பி வந்து, மாமனிடம் பாடம் கேட்கக் காத்திருந்தது. அவரிடமிருந்து மானுக்கு இருக்க வேண்டிய தந்திரங்களை அறிவுரைகளாகப் பெற்றுக்கொண்டது.
ஒரு நாள் அந்த இளம் மான் வனத்தில் சுற்றிக் கொண்டிருந்தபோது விலங்குகளைப் பிடிக்க விரித்திருந்த கண்ணி ஒன்றில் சிக்கிக் கொண்டது; வலையில் சிக்கிக் கொண்ட விலங்கின் அவலக்குரலை எழுப்பியது. இந்த மானின் குரலைக் கேட்டதும் மான் கூட்டம் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடியது. அந்த மகனின் தாயிடம் அவன் பிடிபட்டுவிட்டதைக் கூறின. அவள் தன் சகோதரனிடம் வந்து அவனுடைய மருமகனுக்கு மானின் தந்திரங்கள் முறையாகக் கற்பிக்கப்பட்டனவா என்று கேட்டாள்.
‘அச்சம் கொள்ள வேண்டாம், சகோதரி. உன் மகன் ஆபத்தில் இல்லை’ என்றார் போதிசத்துவர். ‘அவன் மானுக்குரிய தந்திரங்களை முழுமையாகக் கற்றுக்கொண்டுள்ளான். நீ பெரும் மகிழ்ச்சி அடையும் அளவுக்கு அவன் விரைந்து இங்கே திரும்பி வருவான்.’ அத்துடன் கீழ்க்கண்டவாறு ஆறுதல் சொற்களையும் கூறினார்:
அவன் பல தோரணைகளில், பல தந்திரங்களுடன், தனது குளம்புகளைப் பயன்படுத்தி ஒரே ஒரு நாசி வழியாகச் சுவாசிப்பது என்று என் மருமகன் வேட்டைக்காரனைப் பல வழிகளில் ஏமாற்றிவிடுவான். அவளுடைய மகன், மான்கள் உயிர்வாழக் கற்கவேண்டிய தந்திரங்களில் எந்த அளவு தேர்ச்சி பெற்றுள்ளான் என்பதையும் விளக்கிக் கூறினார்.
0
இதற்கிடையில் வலையில் சிக்கிய அந்த இளம் மான் அதிலிருந்து விடுபடுவதற்குப் போராடவில்லை, மாறாக ஒரு பக்கமாக நன்கு உடலை நீட்டிப் படுத்துக்கொண்டது. அதனுடைய கால்களை இறுக்கமாகவும் கடினமாகவும் வைத்து நீட்டிக் கொண்டது. கால் குளம்புகளைச் சுற்றி புற்களும் மண்ணும் பெயர்ந்திருப்பதுபோல் குளம்புகளால் தோண்டி வைத்தது. இயல்பாக இல்லாததுபோல் படுத்துக்கொண்டது; தலை தொங்கி ஒருபக்கம் சரிந்து, நாக்கு வெளித் தள்ளியிருந்தது.
உடல் அதன் கட்டுப்பாட்டில் இல்லாதது போல் கிடந்தது. காற்றை உள்ளே இழுத்து, உடல் வீங்கிப் பருமனாகி இருப்பதுபோல் ஆக்கிக் கொண்டது. கண்கள் திருகிக்கிடந்தன. கீழ்ப்பக்க நாசியால் மட்டுமே மூச்சு விட்டு மேல்புற நாசியின் முச்சைக் கட்டுப்படுத்திக் கொண்டது. மொத்தத்தில் இறந்துபோன மானின் உடல்போல் தோற்றமளிக்கும் அளவுக்குத் தன்னை மிகவும் விறைப்பாகவும் கடினமாகவும் வைத்துக்கொண்டது. ஈக்கள் சப்தமிட்டபடி அதைச் சுற்றி மொய்க்கத் தொடங்கின; அங்கொன்றும் இங்கொன்றுமாக காகங்கள் அருகில் உட்கார்ந்தன.
வேட்டைக்காரன் வந்தான். வலையில் விழுந்து கிடந்த மானைப் பார்த்ததும் அதன் வயிற்றில் கையால் தட்டிப் பார்த்தான். ‘இன்றைக்கு அதிகாலையில் வலையில் மாட்டியிருக்க வேண்டும்; மான் ஏற்கனவே மோசமான நிலையை அடைந்துவிட்டது’ என்று நினைத்தபடியே வலையிலிருந்து மானை விடுவிக்கத் தொடங்கினான். அப்போது தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்: ‘விழுந்து கிடக்கும் இடத்திலேயே மானை அறுத்து விடலாம். இறைச்சியை மட்டும் வீட்டுக்கு எடுத்துச் செல்வோம். முழுவதுமாகச் சுமந்து செல்ல வேண்டாம்.’
அந்த வேட்டைக்காரன் மானை அதன் வலையிலிருந்து முழுமையாக விடுவித்துவிட்டான். மானின் நோக்கம் ஏதும் அறியாத அவன், கொஞ்சம் மான் இறைச்சியைச் சுட்டுத் தின்னலாம் என்று எண்ணி, காய்ந்த குச்சிகளையும் இலைகளையும் சேகரிக்கத் தொடங்கினான். அவன் வேறு பக்கம் திரும்பியபடி வேலையில் கவனமாக இருந்தபோது, படுத்திருந்த மான் எழுந்து கொண்டது. தலையையும் கால்களையும் உதறிக் கொண்டது. பலத்த காற்றின் முன் சிக்கிய சிறு மேகம் சிதறி ஓடுவதுபோல் பாய்ந்தோடி அதன் தாய் மானிடம் சென்று சேர்ந்தது.
0
விதிகளைச் சரியாகக் கடைப்பிடிப்பதில் ராகுலன் சென்ற பிறவியிலும் இப்போதைப் போலவே ஆர்வத்துடன் தான் இருந்தான் என்று இந்த நிகழ்வை விவரித்து முடித்த ததாகதர், ராகுலன் அந்த இளம் மானாக அவதரித்து இருந்ததாகவும், அவனுடைய தாயாக உப்பாலவண்ணனும், தான் அந்த மானின் மாமனாகப் பிறந்ததாகவும் கூறினார்.
(தொடரும்)