(தொகுப்பிலிருக்கும் 18வது கதை)
ஜேதவனத்தில் பெருமான் இருந்தபோது இறந்தவர்களுக்கு விருந்து படைப்பது குறித்த இந்தக் கதையைச் சொல்கிறார்.
அந்தக் காலகட்டத்தில், அவர்களது இறந்துபோன உறவினர்களின் நன்மைக்கு என்று சொல்லி விருந்து படைக்கும் சடங்கு ஒன்றை மக்கள் பின்பற்றினர். அதன் பேரில் மக்கள் வெள்ளாடுகளையும் செம்மறி ஆடுகளையும் பிற விலங்குகளையும் அந்தச் சடங்கின்போது பலி கொடுத்தனர்.
மக்களின் இந்த நடவடிக்கைகளைப் பார்த்திருந்த துறவிகள் சங்கத்தின் தம்மக்கூடத்தில் அமர்ந்து இறந்தவர்களுக்கு படைக்கும் இந்தச் செயல் பற்றியும் அந்தச் சடங்கில் விலங்குகள் பலி கொடுப்பது குறித்தும் பேசிக்கொண்டிருந்தனர். அங்கு வந்திருந்த ததாகதரிடம் கேள்விப்பட்ட இந்தச் செய்தியைச் சொல்லி அவருடைய கருத்தையும் கேட்டனர்; ‘பெருமானே நாங்கள் அந்தச் சடங்கைப் பார்த்தோம். உயிருள்ள விலங்குகளின் உயிரை பறிக்கிறார்கள்; இறந்தவர்களுக்கு விருந்து என்ற பெயரில் அதை அர்ப்பணிக்கிறார்கள். ததாகதரே, இப்படி அவர்கள் செய்வதால் ஏதாவது நன்மை இருக்க முடியுமா? எனில் அதை விளக்க வேண்டும்.’
‘அப்படிச் செய்வதால் பலனேதும் விளையாது துறவிகளே’ என்று புத்தர் பதிலளித்தார். பலி பீடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வெட்டப்படுவதற்குச் சில விநாடிகளே இருக்கையில் இறக்கப் போவதை அறிந்தும் சிரிக்கவும் அழவும் செய்த ஆடு ஒன்றின் கதையை அவர்களுக்குச் சொல்கிறார்: பலி கொடுப்பவர்களுக்கு அளிக்கப்படும் இறுதித் தண்டனையாக இதுவே இருக்க முடியும் என்று அவர் சிரித்துக்கொண்டே கூறினார். அதுமட்டுமின்றி, வாழ்வில் இதேபோன்ற விதியை எதிர்கொள்பவர்களுக்காகப் பரிவுடன் அழவும் செய்தார்.
‘இறந்து போன நம் முன்னோர்களுக்குப் படையல் என்ற நோக்கத்துடன் எந்த விலங்கின் உயிரைப் பறித்தாலும் அதனால் பலன் ஏதும் இல்லை. நன்மையும் ஏற்படாது. கடந்த காலத்தில் ஞானம் பெற்றவரான போதிசத்வர் நடுவானில் அமர்ந்தபடி, தம்மத்தை உபதேசித்தார்; இந்தச் சடங்கு நடைமுறைகளின் தீய விளைவுகளை எடுத்துரைத்தார். அதன் காரணமாக இந்தத் தேசம் முழுமையும் அந்தப் பழக்கத்தைக் கைவிடும்படி செய்தார். எனினும், அந்த நடைமுறை இப்போது புதிதாக முளைத்துள்ளது.’ இப்படிச் சொல்லிவிட்டு, முற்பிறவியின் அந்த நிகழ்வை அவர்களிடம் ஒரு கதையாகக் கூறத்தொடங்கினார்.
0
இந்த நிகழ்வு நடந்த காலத்தில் வாராணசியைத் தலைநகராகக் கொண்டு பிரம்மதத்தன் ஆட்சி செய்து கொண்டிருந்தான்.
இறந்துபோன முன்னோர்களுக்குப் படையல் அளிக்கும் சடங்கு ஒன்றுக்காகப் பிராமணர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார். அவர் மூன்று வேதங்களையும் அறிந்து தேர்ந்தவர். ஆச்சார்யராக தேசம் முழுவதும் புகழ் பெற்றவர். அந்தப் பலி-யாகத்துக்காக வெள்ளாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிராமணர் தன்னுடன் வந்திருந்த மாணாக்கர்களைப் பார்த்துக் கூறினார். ‘எனது அன்புக்குரிய மாணவர்களே, இந்த ஆட்டை ஆற்றுக்கு ஓட்டிச் சென்று குளிப்பாட்டுங்கள்; அதன் கழுத்தில் மாலை ஒன்றைப் போடுங்கள்; அலங்காரம் செய்யுங்கள்; சாப்பிடுவதற்குக் கூடை நிறையத் தீவனங்களும் அளித்து அழைத்து வாருங்கள்.’
‘அப்படியே செய்கிறோம், குருவே’ என்று அவர்கள் ஆட்டை ஆற்றுக்கு அழைத்துச் சென்றனர். அந்த விலங்கை நீரில் இறக்கி, குளிப்பாட்டி, பிராமணர் சொன்னதுபோல் அலங்கரித்து ஆற்றங்கரையில் நிற்க வைத்தார்கள். அந்த ஆடு திடீரென்று பானையைப் போட்டு உடைப்பது போல் உரக்கச் சிரித்தது. அதன் பின்னர் அழுதது.
அந்த ஆடு உரத்துச் சிரித்ததையும் அதன் பின்னர் சப்தமாக அழுததையும் பிராமணரின் சீடர்கள் விநோதமாகப் பார்த்தனர். அந்த ஆட்டைப் பார்த்துக் கேட்டனர், ‘வெள்ளாடே, நண்பா, நீ திடீரென்று சிரித்தாய்; அதன் பின்னர் சப்தமாக அழுதாய்; எங்களுக்கு அது வித்தியாசமாகத் தோன்றுகிறது; தயவு செய்து நீ எதற்காகச் சிரித்தாய்? பின்னர் எதற்காக அழுதாய் என்று எங்களுக்குச் சொல்லமுடியுமா?’
அந்த ஆடு உடனே, ‘நண்பர்களே, நீங்கள் இந்தக் கேள்விகளை உங்களுடைய குருவிடம் கேளுங்கள்’ என்றது.
எனவே, ஆட்டை ஓட்டிக்கொண்டு அவர்கள் குருநாதரிடம் வந்தனர். ஆடு சிரித்ததையும், பின் அழுததையும் அவரிடம் கூறினார்கள். காரணம் கேட்டதற்கு உங்கள் குருவின் முன்னால் இந்தக் கேள்வியைக் கேளுங்கள் என்று அந்த ஆடு சொன்னது என்று அவரிடம் நிகழ்ந்ததை விவரித்தனர். இவற்றையெல்லாம் கேட்ட அந்த வேதப் பிராமணரும் ஆட்டைப் பார்த்து அந்தக் கேள்வியை, ஏன் சிரித்தாய், பின்னர் ஏன் அழுதாய் என்று கேட்டார்.
அந்த விலங்குக்கு அதனுடைய முந்தைய பிறவியில் நிகழ்ந்தவற்றை நினைவுகூரும் ஆற்றல் இருந்தது; ஆகவே கடந்த பிறவியில் நடந்தவை குறித்து பிராமணனிடம் விவரித்தது.
‘பிராமணரே, முற்பிறவியில் நானும் உங்களைப்போல் பிராமணனாக அவதரித்திருந்தேன். உங்களைப் போலவே நானும் வேத மந்திரங்களில் தேர்ச்சி பெற்ற பிராமணனாக இருந்தேன். நானும் இறந்தவர்களுக்குப் படையலாக விருந்தளித்தேன். காணிக்கைக்காக ஆடு ஒன்றையும் பலியிட்டேன். அந்த ஒரேயொரு ஆட்டைக் கொன்றதற்காக இதுவரையிலும் என் தலை நானூற்று தொண்ணூற்றொன்பது முறை வெட்டப்பட்டுவிட்டது. இதோ இப்போது நான் எடுத்திருப்பது ஐந்நூறாவது மற்றும் இறுதிப் பிறவி; இன்றைக்கு எனது தலை வெட்டப்படும். எனது பிறவித் துயரங்களில் இருந்து விடுபடப்போகிறேன். அதை நினைத்துப் பார்த்தேன், மகிழ்ச்சியில் சப்தமாகச் சிரித்தேன். மறுபுறத்தில், ஓர் ஆட்டைக் கொன்றதற்காக ஐந்நூறு முறை என் தலையை இழக்க நேர்ந்தது. இன்று அந்தப் பிறவி துன்பத்திலிருந்து விடுபடப் போகிறேன். மாறாக, என்னைக் கொல்லப்போகும் நீங்கள் அதற்குத் தண்டனையாக ஐந்நூறு முறை உங்கள் தலையை இழக்கப்போகிறீர்கள்; அதிலிருந்து எப்படி நீங்கள் விடுபடுவீர்கள் என்று நினைத்துப் பார்த்தேன். என்னைப் போலவே. நீங்களும் துயரப்படப் போகிறீர்கள் என்று அறிந்ததும், தாங்க முடியவில்லை. உங்கள் மேல் உள்ள இரக்கத்தினால்தான் அழுதேன்.’
‘’வெள்ளாடே, பயப்படாதே, உன்னைக் கொல்ல மாட்டேன்’ என்றார் பிராமணர்.
‘என்ன சொல்கிறீர்கள் பிராமணரே?’ என்று கேட்டது ஆடு. ‘நீங்கள் என்னைக் கொன்றாலும் அல்லது கொல்லாமல் விட்டாலும் இன்று என்னால் மரணத்திலிருந்து தப்பிக்க முடியாதே?’
‘வெள்ளாடே, அஞ்ச வேண்டாம். உன்னைக் காக்க நானும் உன்னுடன் வருவேன்/ இருப்பேன்.’
‘பிராமணரே, உங்களால் அப்படி என்னை இறப்பிலிருந்து பாதுகாக்க முடியாது. நீங்கள் அளிக்க நினைக்கும் பாதுகாப்பு பலவீனமானது. நான் செய்திருக்கும் பாவத்தின் சக்தி வலிமையானது.’
பிராமணர் வெள்ளாட்டைப் பலி கொடுக்காமல் விடுதலை செய்தார். பின்னர் தனது சீடர்களிடம், ‘இந்த ஆட்டைக் கொல்வதற்கு நாம் யாரையும் அனுமதிக்கக் கூடாது’ என்று கூறினார். அந்த இளைஞர்களுடன் இணைந்து அந்த விலங்குக்குப் பாதுகாப்பாக, நெருக்கமாகப் பின்தொடர்ந்து சென்றார்.
விடுதலை அடைந்த ஆடு சாலையோரம் இருந்த பாறை ஒன்றில் தாவி ஏறியது. பாறையின் பக்கம் நீட்டிக்கொண்டிருந்த புதர்ச் செடிகளைக் கடித்துத் தின்னத் தொடங்கியது. அந்த நொடியில் வானத்தில் திடீரென்று மின்னலும் இடியும். மின்னல் அந்தப் பாறையின் மீது பாய்ந்து தாக்கியது; அங்கு நின்றிருந்த ஆட்டின் தலையிலும் இடி விழுந்து, அதன் தலையை இரண்டாகக் கிழித்தது. இடி தாக்கி இறந்துபோன அந்த ஆட்டைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர்.
ஆடு இறந்துபோன அதே இடத்தில் போதிசத்வர் ஒரு மரத் தேவதையாக அவதரித்திருந்தார். தனது அமானுஷ்யச் சக்தியைப் பயன்படுத்தி நிகழ்வு நடந்த இடத்துக்குமேல் வானத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து, நிகழ்ந்ததையும் வேடிக்கை பார்க்க வந்த மக்கள் கூட்டத்தையும் பார்த்துக்கொண்டிருந்தார்.
‘இந்த மனிதர்களும் உயிரினங்களும் அவர்கள் செய்யும் தீய செயல்களுக்கான விளைவுகளை, பலன்களை மட்டும் முன்கூட்டியே அறிந்திருந்தால் ஒருவேளை அவர்கள் இவ்வாறு கொலை செய்வது போன்றவற்றை விட்டுவிடுவார்களோ’ என்று நினைத்தார். ‘தனது இனிய குரலில் அந்த மக்களுக்கு தம்மத்தைப் போதித்தார். உயிரினங்களைக் கொன்றால், துயரம் மிகுந்து, மறுபிறவிக்கும் அந்தத் துயரம் நீடிக்கும் என்பதை மனிதர்கள் ஒருவேளை அறிந்திருந்தால் எவரும் இப்படிக் கொலைசெய்யத் துணிய மாட்டார்கள். கொலை துயரத்தையே கொணரும்.’
இவ்வாறு, ததாகதரான கௌதமர் தம்மத்தை எடுத்துரைத்தார்; கேட்டுக்கொண்டிருந்தவர்கள் நரகத்தை எண்ணி அச்சப்பட்டனர். ஓர் உயிரைப் பறிப்பதால் மறு பிறவியில் நரகம் போன்ற வாழ்வு குறித்து சீடர்களும் பயந்தனர். போதிசத்வர் எண்ணற்ற விதிகளை நிறுவினார். அதன் பின்னர் அதனடிப்படியிலான தம்ம வாழ்வையும் போதித்தார். இறப்புக்குப் பின் அவருடைய செயல்களுக்கு ஏற்ற நிலையை எய்தினார்.
கெளதமர் முற்பிறவியின் தொடர்பைச் சுட்டிக்காட்டினார்: ‘அந்த நாட்களில் போதிசத்வர் என்ற மரத் தேவதையாக நான் இருந்தேன்’ என்று சொல்லி கதையை முடித்தார்.
மக்களும் போதிசத்வரின் போதனையை உறுதியாகப் பின்பற்றி வாழ்ந்தனர். தரும சிந்தனையுடன் நற்செயல்கள் செய்து வாழ்நாளைக் கழித்தனர், இறுதியில் அவர்கள் தேவர்களுடைய நகரத்தைச் சென்றடைந்தனர்.
(தொடரும்)