(தொகுப்பிலிருக்கும் 23வது கதை)
ஆசான் ஜேதவனத்தில் இருந்தபோது இந்தக் கதையைக் கூறினார். பிக்கு ஒருவர் விடா முயற்சியைக் கைவிட்டுச் சோர்ந்து போய் அமர்ந்திருந்தார். அந்தச் சீடரை அழைத்துத் தேறுதலான சொற்களைக் கூறினார்: ‘விவேகம் நிறைந்தவர்களும் நல்ல மனிதர்களும் விரோதிகள் தம்மைச் சூழ்ந்திருக்கும் நிலையிலும் முயற்சியைக் கைவிடமாட்டார்கள். உடலில் காயம் பட்டிருந்தாலும், முயற்சியைக் கைவிடாதவர்கள் முற்பிறவியில் இருந்திருக்கிறார்கள்’ என்று சொன்னவர் இந்தக் கதையையும் பிக்குகள் மத்தியில் கூறினார்.
0
அப்போது, பிரம்மதத்தன் வாராணசியை ஆட்சி செய்து கொண்டிருந்தான். அந்தப் பிறவியில் போதிசத்துவர் சிந்தி இனத்தைச் சேர்ந்த சிறந்த குதிரையாகப் பிறவி எடுத்திருந்தார். அந்தக் குதிரையின் உடலில் அமைந்திருந்த லட்சணங்களின் அடிப்படையில் அது நல்ல ஜாதிக்குதிரை; அதனால், மன்னனின் போர்க்குதிரையாக அது பேணி வளர்க்கப்பட்டது. ஆடம்பரமான கவனிப்பிலிருந்த அந்தக் குதிரை மற்ற குதிரைகளைக் காட்டிலும் உயர்ந்த நிலையில் இருந்தது. அதற்கு மூன்று ஆண்டு பழமையான அரிசிதான் அளிக்கப்பட்டது. அந்தத் தீனியும் ஒரு லட்சம் நாணயங்கள் மதிப்புள்ள தங்கப் பாத்திரத்தில் கொடுக்கப்பட்டது.
அந்தக் குதிரையினுடைய லாயத்தின் தரை நன்கு சுத்தம் செய்யப்பட்டது. நான்குவிதமான நறுமணங்கள் தெளிக்கப்பட்டது; லாயத்தைச் சுற்றி கருஞ்சிவப்புத் திரைகள் தொங்கவிடப்பட்டிருந்தன; லாயத்தின் மேற்கூரையாக அமைந்திருந்த விதானத்தில் தங்க நட்சத்திரங்கள் பதிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. சுவர்களில் மலர் வளையங்களும் வாசனை மலர்கள் கொண்டு தொடுக்கப்பட்ட மலர் மாலைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன. அத்துடன் நறுமணம் நிறைந்த எண்ணெய் ஊற்றப்பட்ட விளக்கு ஒன்று எப்போதும் லாயத்தில் எரிந்துகொண்டிருந்தது.
ஒரு சமயத்தில் அந்த ராஜ்ஜியத்தைச் சுற்றியிருந்த ஏழு அரசர்கள் வாராணசியின் மீது நாட்டம் கொண்டு, அதைக் கைப்பற்ற விரும்பினர். ஆகவே, திடீரென்று ஒருநாள் அறிவிப்பின்றி அந்த அரசர்கள் வாராணசியைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர்; வாராணசி மன்னனுக்குக் கடிதம் ஒன்றையும் அனுப்பி எச்சரித்தனர்: ‘இந்த ராஜ்யத்தை எங்களிடம் உடனடியாக ஒப்படைத்துவிடுங்கள்; அல்லது போருக்குத் தயாராகுங்கள்’ என்ற செய்தி அந்தக் கடிதத்தில் இருந்தது.
இந்தச் செய்தி அறிந்த வாராணசி அரசன் அமைச்சரவையைக் கூட்டினான்; அவர்களிடம் வந்திருக்கும் நெருக்கடியை விளக்கிக் கூறினான்; என்ன செய்யலாம் என்று ஆலோசனைக் கேட்டான். அவர்கள், ‘அரசே, நீங்கள் நேரிடையாக முதலிலேயே போரில் இறங்கக்கூடாது. முதல் போருக்கு, இந்தப் பெயர் கொண்ட மாவீரனான தளபதியைப் படைகளுடன் அனுப்புவோம்; ஒருவேளை அவர் போரில் தோல்வியுற்றால், அடுத்து என்ன செய்வது என்பது பற்றி மீண்டும் கூடி முடிவு செய்யலாம்’ என்றனர்.
அரசன் அந்த மாவீரனான தளபதியை அழைத்து வரச் செய்தான். ‘எனது அன்புக்குரிய மாவீரனே! நாம் முற்றுகையிடப்பட்டிருக்கும் செய்தி உனக்குத் தெரிந்திருக்கும்; பெரும் ஆபத்தில் இருக்கிறோம். நமது அமைச்சர்கள் உனது தலைமையில் படைகளை அனுப்பலாம் என்று கூறுகிறார்கள். வந்திருக்கும் ஏழு மன்னர்களின் படைகளை எதிர்த்து உன்னால் படைகளை நடத்த முடியுமா? போரிட்டு வெல்ல முடியுமா?’ என்று கேட்டான்.
அதற்கு அந்தத் தளபதி, ‘அரசே, நிச்சயமாக எதிர்த்துப் போரிட முடியும். ஆயினும் நீங்கள் என்னுடன் உன்னதமான உங்களது போர்க் குதிரையை மட்டும் அனுப்புங்கள் போதும். ஏழு அரசர்கள் என்ன… இந்த ஜம்பு தீபத்திலிருக்கும் அத்தனை மன்னர்களையும் என்னால் எதிர்த்துப் போரிட்டு வெல்ல முடியும்’ என்றான்.
‘என் அன்பான தளபதியே! உங்களுக்கு என்ன தேவையோ, எனது போர்க்குதிரையோ நீங்கள் விரும்பும் வேறு குதிரைகளோ, அல்லது வேறு எவரையுமோ அழைத்துச் சென்று போரிடுங்கள்.’
‘மிகவும் மகிழ்ச்சி, எங்கள் மதிப்புக்குரிய அரசே!’ என்று அந்த மாவீரன் அரசனுக்குப் பதில் கூறினான்; அதன்பின்னர், கையில் வில்லும் அம்பறாத்தூணியுமாக மேல் மாடத்திலிருந்த அரசனின் அறையிலிருந்து கீழே இறங்கிச் சென்றான்.
பின்னர், அந்தத் தளபதி படைகளை அணிவகுத்து நிறுத்தினான்; லாயத்திலிருந்து அற்புதமான போர்க் குதிரையை வெளியில் கொண்டு வந்தான். அதற்கு முறையாக சேணமிட்டு, போர்க்குதிரைகளுக்கு உரிய கவசங்களையும் அணிவித்தான். அவனும் தலை முதல் கால் வரை போர்க்கவசம் தரித்து கையில் வாளேந்தினான். அதன் பின்னர், அந்த உன்னதமான குதிரையின் மீது ஏறிக்கொண்டு கோட்டைக் கதவைத் திறக்கச் சொல்லி, முதலில் அமைந்திருந்த எதிரி நாட்டு படை முகாமின் படைகளுடன் பாய்ந்தான். படைகளின் குறுக்கே புகுந்து, அங்குமிங்குமாக மின்னல் வேகத்தில் சுழன்று சிதறடித்தான். அந்தப் படைக்குத் தலைமை ஏற்று வந்திருந்த எதிரி அரசனையும் உயிருடன் பிடித்தான்; கைது செய்த அந்த மன்னனுடன் வேகமாகக் கோட்டைக்குத் திரும்பி, காவலில் வைக்கச் சொன்னான்.
பின்னர், மீண்டும் கோட்டைக் கதவைத் திறக்கச் சொல்லி, களத்தில் புகுந்தான். இரண்டாவது மற்றும் மூன்றாவது படை முகாம்களையும் தாக்கி முறியடித்தான். அவர்களது வீரர்களும் சிதறியோடினார்கள். இப்படியாக அவன் ஒவ்வொரு முகாமாகத் தாக்கி ஐந்து மன்னர்களையும் உயிருடன் பிடித்து, கோட்டைக்குள் கொண்டு வந்து சிறைவைத்தான்.
ஆறாவது படைப்பிரிவை அவன் இப்போது, தாக்கிக் கொண்டிருந்தான்; அந்த மன்னனைச் சிறைபிடிக்க முயன்றபோது, அவனுடைய போர்க்குதிரை எதிரியால் தாக்கப்பட்டது; அதற்குத் தீவிரமான காயமும் ஏற்பட்டது. உடலிலிருந்து குருதி கொட்டிக் கொண்டிருந்தது; காயத்தால் அதற்குத் தாங்க முடியாத பெரும் வலி. போர்க்குதிரைக்கு நன்கு காயமடைந்துவிட்டதை அறிந்த மாவீரன், கோட்டை வாயிலுக்கு இட்டுச்சென்று அங்கே படுக்க வைத்தான். அதன் கவசங்களைத் தளர்த்தி, அதற்கு மருந்திட்டான் ஓய்வெடுக்க வைத்தான். பிறகு வேறொரு குதிரைக்குச் சேணமிட்டு, கவசங்கள் அணிவித்து சண்டைக்குத் தயார் செய்தான்.
காயம்பட்டிருந்த போதிசத்துவரான அந்தக் குதிரை ஒரு பக்கமாக உடலை நீட்டிப் படுத்திருந்தது; கண்களைத் திறந்து, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் அந்த மாவீரன் என்ன செய்கிறான் என்பதையும் பார்த்தது.
தனக்குள் இவ்வாறு நினைத்துக் கொண்டது: ‘என் மீது சவாரிசெய்யும் அந்த வீரன் இன்னொரு குதிரையைச் சேணமும் கவசமும் அணிவித்து அதைப் போருக்குத் தயார்ப்படுத்துகிறான். பாவம் அந்தக் குதிரையால் ஏழாவது படைப்பிரிவைத் தாக்கித் தகர்க்க முடியாது. அந்த அரசனையும் கைது செய்ய முடியாது; இதுவரையிலும் நான் சாதித்த அனைத்தையும் இழக்கும் நிலை ஏற்படப் போகிறது; ஒப்பற்ற இந்த மாவீரன் கொல்லப்படப் போகிறான். அதுமட்டுமின்றி நம் அரசனும் எதிரியின் கைகளில் சிக்கிச் சிறைப்படப் போகிறான். அந்த ஏழாவது முகாமைத் தகர்த்து முறியடித்து அந்த மன்னனையும் என்னால் மட்டுமே பிடிக்க முடியும்; வேறு எந்தக் குதிரையாலும் முடியாது.’
இவ்வாறு மனதுக்குள் நினைத்துக்கொண்ட, அம்புகளால் துளைக்கப்பட்டுப் படுத்திருந்த போதிசத்துவரான அந்த நல்ல ஜாதிக் குதிரை அதன் மீது சவாரி செய்யப்போகிற அந்த மாவீரனை அழைத்துக் கூறியது: ‘தளபதியே, அந்த ஏழாவது படைப்பிரிவைத் தாக்கி, முறியடிக்க, அந்த ஏழாவது மன்னனையும் கைப்பற்ற என்னைத் தவிர வேறு எந்தக் குதிரையாலும் இயலாது. நான் இதுவரையிலும் பெற்ற வெற்றி வீணாகிவிட நான் விரும்பவில்லை; ஆகவே நான் எழுந்து நிற்க உதவுங்கள்; சேணங்களையும் கவசங்களையும் மீண்டும் பூட்டிவிடுங்கள்.’
அந்தத் தளபதி போதிசத்துவரான குதிரையை எழுந்து நிற்க வைத்தான்; காயங்களைச் சுத்தம் செய்து மருந்துவைத்துக் கட்டினான். பின்னர், அதற்குக் கவசங்களை அணிவித்து, சேணங்களைப் பூட்டினான். அந்தப் போர்க்குதிரையின் மீது ஏறிய தளபதி, ஏழாவது படைப்பிரிவையும் தாக்கி அதன் அணிகளை முறியடித்து, அந்த மன்னனையும் சிறைப்பிடித்து, படைவீரர்களிடம் காவல் செய்ய ஒப்படைத்தான்.
அதற்குப் பின்னர் அவர்கள் அந்தக் குதிரையைக் கோட்டை வாயிலுக்கு நடத்தி அழைத்துச் சென்றனர். அரசன் அந்த வெற்றிக் குதிரையைப் பார்ப்பதற்கு வெளியில் வந்தான். நல் மனது கொண்ட அந்தப் பெரும் ஆத்மா அரசனைப் பார்த்துப் பேசியது: ‘மாபெரும் அரசே! இப்போது நம்மிடம் சிறைப்பட்டிருக்கும் ஏழு அரசர்களையும் தயவுசெய்து கொன்றுவிடாதீர்கள்; அவர்களிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்டு விடுவித்துவிடுங்கள். அதுபோல், உங்களுக்கு இந்த வெற்றியைத் தந்த எங்கள் இருவருக்கும், நீங்கள் அளிக்கவிருக்கும் மரியாதைகள் அனைத்தையும் உங்கள் தளபதியான மாவீரனே பெறட்டும், அனுபவிக்கட்டும்; ஏனென்றால் ஏழு மன்னர்களை உங்களுக்காக சிறைபிடித்துக் கொண்டுவந்த ஒரு போர்வீரனுக்கு உரிய மரியாதை தராமல் நிலை தாழ்த்துவது சரியல்ல. அரசனே, நீ பெருந்தன்மையுடன் நடந்துகொள்; வாழ்க்கையில் நன்னெறிகளைக் கடைப்பிடி; உன் ராஜ்ஜியத்தை நீதியுடன் நேர்மையுடன் ஆட்சி செய்க.’
இவ்வாறு போர்க்குதிரை அரசனுக்கு அறிவுரைகள் கூறிக்கொண்டிருந்தபோது, அதனுடைய கவசங்களும் சேணங்களும் கழட்டப்பட்டன. போர்க்களத்தில் பட்ட காயங்களால் தாறுமாறாகக் கிழிந்திருந்த அதன்மேல் அணிவிக்கப்பட்டவை அகற்றப்படும்போதே அந்தக் குதிரையின் உயிர் பிரிந்தது.
0
அரசன் அந்தப் போர்க்குதிரைக்கு அனைத்து மரியாதைகளுடன் இறுதிச் சடங்குகள் செய்தான். மாவீரத் தளபதிக்கும் மிகுந்த மரியாதை செய்தான். தனக்கு எதிராக அவர்கள் இனிமேல் போர் தொடுக்கமாட்டார்கள் என்ற உறுதி மொழியை வாங்கிக்கொண்டு அந்த மன்னர்களை பிரம்மதத்தன் விடுதலை செய்து, அவரவர் ராஜ்ஜியங்களுக்குத் திருப்பி அனுப்பினான்.
கதையைக் கூறி முடித்த பெருமகன் புத்தர், இவ்வாறு பிக்குகளிடம் கூறினார்: ‘துறவிகளே, கடந்த பிறவியில் விவேகம் நிறைந்தவர்களும் நல்லவர்களும் அவர்களுக்கு விரோதமாகச் சூழ்நிலை இருந்தபோதும், மோசமாகக் காயப்பட்டாலும், விடாமுயற்சியைக் கைவிடவில்லை என்பதைப் பார்த்தோம். பிக்குகளாகிய நீங்கள் மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்காக, மக்கள் பணிக்காக உங்களை அர்ப்பணித்துள்ளீர்கள்; அத்தகைய நீங்கள் விடாமுயற்சியை எப்படிக் கைவிட முடியும்?’ பிறகு மென்மையான மனம் கொண்ட அந்தத் துறவியின் அருகில் அமர்ந்து நான்கு நன்னெறிகளையும் போதித்தார். பின்னாளில் அந்தத் துறவி ஓர் அருகர் ஆனார்.
உபதேசம் முடிந்தது; புத்தர் முற்பிறவித் தொடர்புகளைச் சுட்டிக்காட்டினார். ‘ஆனந்தன் அப்போது அரசனாக அவதரித்திருந்தார்; சாரிபுத்தன்தான் அந்த மாவீரத் தளபதி; நான் சிந்தி இனக் குதிரையாகப் பிறப்பு எடுத்திருந்தேன்’ என்று சொல்லி முடித்தார்.
(தொடரும்)