Skip to content
Home » புத்த ஜாதகக் கதைகள் #11 – மஹிளாமுக ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #11 – மஹிளாமுக ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 26வது கதை)

தற்காலத்தில் புத்தரால் சிட்சை அளிக்கப்பட்ட ஒரு பிக்கு பிட்சை ஏற்கச் செல்லாமலிருந்தார். அதற்கு பதிலாக தேவதத்தனின் மடாலயத்தில் சுவையான உணவை உட்கொள்கிறார். இந்தச் செய்தி அறிந்ததும், அந்த பிக்குவை புத்தரிடம் அழைத்து வருகிறார்கள். தீய சொற்களைக் கேட்டுக்கொண்டிருந்து, எளிதில் வழிதவறிப் போய்விட்ட, அதன் பிறகு நல்ல சொற்களைக் கேட்டுத் திருந்திய ஒரு யானையைப் பற்றிய கதையை அவருக்குக் கௌதமர் சொல்கிறார்.

வேணுவனத்தில் ஆசான் தங்கியிருக்கையில் நடந்த நிகழ்வு இது. இளவரசன் அஜாதசத்ருவின் பிரியத்தைச் சம்பாதித்துக் கொண்டவர் தேவதத்தன்; அதனால் ஆதாயமும் மதிப்பும் பெற்றிருந்தார்.

அவருக்காக இளவரசன் அஜாதசத்ரு கயாசீசா என்ற இடத்தில் மடாலயம் ஒன்றைக் கட்டித் தந்தார், தினந்தோறும் அந்த மடத்திற்கு மூன்று ஆண்டுகள் பழமையான மணம் வீசும் அரிசியில் சமைக்கப்பட்ட உணவு ஐந்நூறு பானைகளில் சிறந்த சுவைகளில் அனுப்பி வைக்கப்பட்டது. அவருக்குக் கிடைத்த ஆதாயத்தையும் இருந்த மதிப்பையும் பார்த்து ஏராளமானோர் சீடர்களாக தேவதத்தனிடம் சேர்ந்தனர். இவ்வாறு, வசதிகளுடன் தேவதத்தன் அந்த மடத்தைவிட்டு வெளியேறும் சிரமம் ஏதுமின்றி சுகமாக வசித்தார்.

அந்தச் சமயத்தில் ராஜகிருகத்தில் இரண்டு நண்பர்கள் வசித்தனர்; அந்த இருவரில் ஒருவர் கௌதமரின் சிட்சையைப் பெற்று உறுதிமொழி ஏற்று அவருடைய சங்கத்தில் சேர்ந்தார். மற்றொருவர் தேவதத்தனிடம் சேர்ந்து அவரது சீடரானார். அந்த நண்பர்கள் அவ்வப்போது ஒருவரையொருவர் தற்செயலாகவோ அல்லது ஒருவர் மடத்திற்கு மற்றவர் சென்றோ தொடர்ந்து சந்தித்துக் கொண்டனர். அவ்வாறு இவர்கள் சந்தித்துக் கொண்டபோது ஒருநாள் தேவதத்தனின் சீடர் மற்றவரிடம் இவ்வாறு கேட்டார்:

‘நண்பா, நீ ஏன் தினந்தோறும் உடலில் வியர்வைச் சொட்டச் சொட்ட பிட்சை ஏற்பதற்காக வெளியில் செல்கிறாய்? தேவதத்தனும், அவரது சீடர்களும் எங்கேயும் வெளியில் செல்வதில்லை. கயாசீஸ மடத்திலேயே அமைதியாக அமர்ந்திருக்கிறார். அவருக்கு அனுப்பப்படும் சுவையான உணவை உண்கிறார். மற்றவர்க்கும் அளிக்கிறார். அவருடையதைப்போல் சிறந்த வழி வேறெதுவும் இல்லை. நீயே உனக்கு ஏன் வேதனையை வரவழைத்துக்கொள்கிறாய்? ஒரு நல்ல காரியம் செய். காலையில் முதல் வேலையாக இந்தக் கயாசீஸ மடத்திற்கு வா. இங்கு வந்து எங்களுக்கு அளிக்கப்படும் மணம் மிகுந்த அரிசிக் கஞ்சியை முதலில் குடி, அந்தச் சந்தோஷத்துடன் அதன் பிறகு அளிக்கப்படும் பதினெட்டு வகையான திட உணவுகளையும் சாப்பிடு. சிறந்த சுவையான உணவை உண்டு அனுபவிப்பதை ஒரு நல்ல விஷயமாக எடுத்துக்கொள்ளக் கூடாதா?’

இவ்வாறு அந்த நண்பர் அவரது மடத்திற்கு வரச்சொல்லி தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருந்தார். ஒரு நேரத்தில் சென்று வரலாமே என்ற எண்ணம் இந்தச் சீடனுக்குள் எழுந்தது; அதன் பிறகு கயாசீஸா மடாலயத்திற்குச் செல்லத் தொடங்கினார். சுவையான உணவுகளைச் சாப்பிடத் தொடங்கினார். அது வழக்கமான பழக்கமாகிவிட்டது. எனினும், உரிய நேரத்தில் வேணுவன மடத்திற்குத் திரும்பிவிட வேண்டும் என்பதை மட்டும் அந்தச் சீடன் மறக்கவில்லை.

இந்தச் செயலை அந்தச் சீடரால் எப்போதுமே ரகசியமாகச் செய்ய இயலவில்லை. கயாசீஸா மடத்திற்கு அந்தச் சீடன் செல்வதும் அங்கு தேவதத்தனுக்கு அளிக்கப்படும் மணமிக்கச் சுவையான உணவைச் சாப்பிட்டு மகிழ்ந்ததும் அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

அவரது நண்பர்கள், ‘மற்றவர்கள் சொல்வது உண்மையா? நீ அங்கு செல்வதும் குரு தேவதத்தனுக்கு அளிக்கப்படும் உணவைச் சாப்பிட்டு மகிழ்கிறாய் என்று நாங்கள் கேள்விப்படுவதும் உண்மையா?’ என்று கேட்டனர்.

‘யார் சொன்னது?’

இன்னார் இன்னார் சொன்னார்கள் என்று அவர்கள் பதில் அளித்தனர்.

‘ஆமாம், உண்மைதான் நண்பர்களே. நான் கயாசீஸா மடத்திற்குச் சென்று அங்கு சாப்பிட்டு வருகிறேன். எனினும், அந்த உணவைத் தேவதத்தன் எனக்குக் கொடுக்கவில்லை. அங்கு இருக்கும் என் நண்பர்கள் கொடுக்கிறார்கள்.’

‘இருக்கட்டும். தேவதத்தன் புத்தரின் கொள்கைகளுக்கு எதிரான நிலையில் இருப்பவர் இல்லையா. அஜாதசத்ருவின் நம்பிக்கையையும் பிரியத்தையும் தந்திரமாக அவர் பெற்றுக்கொண்டார். நியாயமற்ற முறையில் ஆதாயத்தையும் மதிப்பையும் பெறுகிறார். பாதுகாப்பாக இருக்கும் இந்த மடாலயத்தின் விதிகளின்படி நீ உறுதி எடுத்துக்கொண்டாய். எனினும் நியாயமற்ற முறையில் தேவதத்தனுக்கும் அவரது மடத்திற்கும் அளிக்கப்படும் உணவைச் சாப்பிட்டு வருகிறாய். இது தவறு. ஆசிரியரிடம் உன்னை அழைத்துச் செல்வதுதான் சரியாக இருக்கும்.’

அந்தச் சீடரை அழைத்துக்கொண்டு அவர்கள் தம்ம அரங்கிற்குச் சென்று அமர்ந்தனர். அவர்கள் வந்திருப்பதை அறிந்து கொண்ட ததாகதர் அவர்களைப் பார்த்துக் கேட்டார்.

‘பிக்குகளே, இந்த துறவியின் விருப்பத்திற்கு மாறாக நீங்கள் அவரை இங்கு அழைத்து வந்திருக்கிறீர்களா?’

‘ஆமாம், ஆசிரியரே. இந்தத் துறவி உங்களுடைய உபதேசங்களை ஏற்று பிக்குவானவர். ஆனால், இப்போது நேர்மையற்ற முறையில் தேவதத்தருக்கு அளிக்கப்படும் உணவை அங்கு சென்று உண்டு வருகிறார்.’

‘துறவியே, இவர்கள் சொல்கிறபடி, அந்த உணவை நீங்கள் சாப்பிட்டு வருகிறீர்களா?’

‘தேவதத்தர் எனக்கு வழங்குவதில்லை. அந்த மடாலயத்தில் இருக்கும் வேறு நண்பர்கள் கொடுக்கிறார்கள்.’

‘துறவியே, இங்கு சொல்வாதம் ஏதும் செய்ய வேண்டாம்’ என்றார் ஆசிரியர். ‘தேவதத்தர் மோசமான நடத்தைகளும் பண்புகளும் கொள்கைகளும் கொண்டவர். புத்தரின் முன்னிலையில் உறுதிமொழி எடுத்த உங்களால், தேவதத்தர் மடாலயத்தின் உணவை எப்படி உண்ண முடிந்தது? நீங்கள் எப்பொழுதும் மற்றவர்களால் வழிநடத்தப்பட வாய்ப்புள்ளவர்; நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் பின்பற்றிச் செல்லக்கூடிய குணம் கொண்டவர்; முற்பிறவியிலும் அப்படித்தான்,’ என்று சொல்லிவிட்டு முற்பிறவி கதையை எல்லோருக்கும் சொல்கிறார்.

0

அந்தப் பிறவியில் பிரம்ம தத்தன் வாராணசியை ஆண்டுகொண்டிருந்தார். அவருடைய அமைச்சராகப் போதிசத்துவர் இருந்தார். அரசனிடம் யானை ஒன்று இருந்தது. ராஜாவின் பட்டத்து யானையாக அது பராமரிக்கப்பட்டது. அதற்கு மஹிளாமுகத்தவள் என்று பெயர் சூட்டி அழைத்தனர். நல்ல குணங்கள் கொண்ட அந்த யானை, பாகன் சொற்படி கேட்கும். எவரையும் துன்புறுத்தாத விலங்கு.

ஒருநாள், அந்த யானை கட்டப்பட்டிருந்த கொட்டாரத்திற்கு அருகில் இரவில் சில திருடர்கள் கூடினர். அங்கு அமர்ந்து அவர்களது திட்டங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.

‘வீட்டுக்குள் செல்லும் பாதை இது; இந்த இடத்தில்தான் நாம் சுவர்களை உடைத்து உள்ளே போகவேண்டும்; கொள்ளையடித்த பொருட்களை நாம் எடுத்துக்கொண்டு வெளியேற வசதியாக நாம் சுவரில் உண்டாக்கும் பாதை தடையின்றி, ஒரு சாலையைப்போல அல்லது ஆற்றை நடந்து எளிதாகக் கடந்து செல்வது போல் இருக்க வேண்டும். பொருட்களை எடுக்கும்போது யாரையும் கொலை செய்ய முயலக் கூடாது; எனினும் நம்மை யாரும் எதிர்க்க இருக்க மாட்டார்கள். நம்மைப்போன்ற திருடர்கள் எல்லா நல்ல குணங்களையும் நல்லொழுக்கங்களையும் விட்டுவிடவேண்டும்; இரக்கமற்றவர்களாக, வன்முறையாளர்களாக இருக்க வேண்டும்.’

இவ்வாறான கலந்தாலோசனையில் ஒருவருக்கொருவர் யோசனை சொல்லிக்கொண்டனர்; அதன் பின்னர் அந்தத் திருடர்கள் அவர்களது தொழிலுக்குச் சென்றுவிட்டனர். மறுநாளும் அந்த இடத்திற்கு அவர்கள் வந்தனர்; தொடர்ந்து பல நாட்கள் வரத் தொடங்கினர்; தங்கள் திட்டங்களை நடவடிக்கைகளை அங்கு ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.

இவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்த யானை இவ்வாறு சிந்தித்தது; இவர்கள் நமக்காகத்தான், வெளிப்படையாக அறிவுரைகள் கூறுவதற்காகத்தான் இங்கு வருகிறார்கள்; இனிமேல் தானும், இரக்கமற்றும், கொடூரமாகவும், வன்முறையுடனும் நடந்துகொள்ளும் வகையில் மாற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது. அவ்வாறே அந்த யானை மாறியும் விட்டது.

மறு நாள் அதிகாலையில் யானைப்பாகன் கொட்டாரத்திற்கு வந்தான். அவன் யானையின் அருகில் வந்த உடனேயே, துதிக்கையால் அவனைச் சுருட்டித் தூக்கிய யானை, பாகனைத் தரையில் வீசிக் கொன்றுவிட்டது. இவ்வாறே அதன் அருகில் வந்த மேலுமொருவன், அடுத்து ஒருவன் என்று அனைவரையும் தும்பிக்கையால் பிடித்துத் தூக்கி எறிந்து கொன்றுவிட்டது. அதன் அருகில் வர முயலும் அனைவருக்கும் இதே கதிதான். அதனால் எவரும் அதை நெருங்க முன்வரவில்லை.

மஹிளாமுகத்தாளுக்கு மதம் பிடித்துவிட்டதாகவும், நெருங்கி வரும் எவரையும் கொன்று குவிப்பதாகவும் மன்னருக்குச் செய்தி போயிற்று. அரசன் போதிசத்துவரை அழைத்துவரச் செய்தான்.

‘அறிவார்ந்தவரே! அங்கு சென்று என்ன நடந்தது. யார் அவளைக் கெடுத்தது என்பதைக் கண்டுபிடியுங்கள்.’

போதிசத்துவர் யானைக் கொட்டாரத்திற்குச் சென்றார். அருகில் செல்லாமல் தூரத்தில் நின்றே யானைக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று ஆய்வு செய்தார். அதன்பின்னர் அரண்மனைக்கு வந்து அரசனிடம் இவ்வாறு கூறினார்.

‘அரசே, யானைக்கு உடம்பில் எந்தக் காயமும் ஏற்படவில்லை. சில மனிதர்கள், அல்லது திருடர்கள் பேசுவதை அந்த யானைக் கேட்டிருக்க வேண்டும். அதனால், அதன் குணம் கெட்டு வக்கிரம் அடைந்துவிட்டது என்று கருதுகிறேன்.’

‘சரி, இப்போது என்ன செய்யலாம்? உங்கள் யோசனை என்ன?’

‘யானைக் கொட்டாரத்துக்கு அருகில் நல்ல பண்புள்ள மனிதர்களை, முனிவர்களை, கற்றறிந்த பிராமணர்களைக் கூடும்படிச் செய்யலாம். யானையின் காதில் விழும்படி நல்ல விஷயங்களை நற்பண்புகளைப் பேசும்படி கூறலாம். ஒருவேளை யானை அவற்றைக் கேட்டுத் திருந்தலாம்.’

‘அப்படியே செய்யலாம், நண்பரே’ என்றான் அரசன்.

அதன் பின்னர், போதிசத்துவரின் அறிவுரைப்படி நல்ல மனிதர்களும், முனிவர்களும், கற்றறிந்த பிராமணர்களும் யானைக்கொட்டாரத்தின் அருகில் தினந்தோறும் கூடும்படியும் நல்ல விஷயங்களைப் பேசும்படியும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அவ்வாறு யானையின் இருப்பிடத்திற்கு அருகில் கூடிய மனிதர்கள் பின்வருமாறு பேசினர்: ‘எவரையும் கொடுமைப்படுத்தக் கூடாது; கொல்வது கூடாது. நல்லவர்கள் பொறுமையுடனும், அன்புடனும், இரக்கத்துடனும் நடந்துகொள்ளவேண்டும்’.

இந்த உரையாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த யானை, அவர்கள் தனக்குத்தான் இதைப் பாடமாகச் சொல்கிறார்கள் என்பதை உணர்ந்தது. தனது மோசமான குணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தது. அவ்வாறே ஆகவும் செய்தது.

அரசன் போதிசத்துவரைப் பார்த்துக் கேட்டான். ‘நண்பரே, யானைக்கு உங்களுடைய சிகிச்சை நல்ல பலன் அளித்ததா? அவள் இப்போது எப்படி இருக்கிறாள்? நன்றாக இருக்கிறாளா?’

‘ஆமாம் அரசே. யானை தனது பழைய குணங்களை மீண்டும் அடைந்துவிட்டது. நற்சொற்களை உதிர்த்த அந்த அறிவார்ந்தவர்களுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். மதம் பிடித்தது போலிருந்தவள், இப்போது மீண்டும் பழையபடி ஆகிவிட்டாள். முன்பு திருடர்களின் சொற்களைக் கேட்ட மஹிளாமுகத்தவள் பித்துப்பிடித்துத் திரிந்தாள். அனைவரையும் தூக்கி எறிந்தாள்; இப்போது உயர்ந்த குணங்களை மீண்டும் பெற்றுவிட்டாள்.’

அரசன் போதிசத்துவரின் அறிவுத்திறனைப் பார்த்து வியந்தான். ‘இவரால் விலங்கின் மனத்தையும் படித்தறிய முடிகிறதே!’ அவருக்குப் பெரும் பரிசுகள் அளித்து மரியாதை செய்தான்.

0

கதையைச் சொல்லி முடித்த ஆசான் இவ்வாறு கூறினார். ‘பிக்குவே, முற்பிறவியிலும் நீங்கள் இப்படித்தான் நடந்தீர்கள்; சந்திக்கும் அனைவரையும் அவர்கள் சொல்வதையும் கேட்டு, அதைப் பின்பற்றி நடந்துகொண்டீர்கள். திருடர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு அவர்களைப்போலவே நடந்துகொண்டீர்கள். அதன்பின்னர், அறிவாளிகளின் நல்ல சொற்களைக் கேட்டு அதையும் பின்பற்றி திருந்தவும் செய்தீர்கள்.’

கதையும் உபதேசமும் பாடமும் முடிந்தது. கௌதமர் முற்பிறவியில் யார் என்னவாக அவதரித்திருந்தனர் என்பதையும் கூறினார்: ‘அத்துமீறி நடந்து கொண்ட இந்தத் துறவி அன்று மஹிளாமுகத்தவள்; ஆனந்தன்தான் அரசன். நான்தான் அமைச்சர்.’

(தொடரும்)

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *