(தொகுப்பிலிருக்கும் 28வது கதை)
‘பரிவான சொற்களை மட்டுமே பேசுங்கள்’
சங்கத்தின் விதிகளை மதிக்காமல் மற்ற பிக்குகளையும் இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாகப் பேசும் பிக்குகள் ஆறுபேர் இருக்கிறார்கள். அந்த அறுவர் பற்றி புத்தருக்கு புகார்கள் வருகின்றன. அவர் காதுகளிலும் செய்திகள் விழுகின்றன. அந்த அறுவரை அழைத்து கௌதமர் கண்டிக்கிறார். அவர்களிடம் காளை ஒன்றின் கதையையும் சொல்கிறார்; அந்த விலங்கிடம் கடுமையான சொற்களில் பேசியதால் அது கோபமடைகிறது. அதன் உரிமையாளருக்கு ஆயிரம் நாணயங்கள் நட்டத்தையும் ஏற்படுத்துகிறது; எனினும் பரிவான சொற்களைப் பேசியதும், அந்த எஜமானனுக்கு இரண்டாயிரம் நாணயங்கள் பலன் கிடைக்க வைத்தது.
0
இந்தக் கதை ஆசிரியர் புத்தர் ஜேத வனத்தில் இருக்கையில் துறவிகளுக்கு உபதேசமாகக் கூறியது.
அந்த ஆறு பிக்குகளுன் ஒரு குழுவாக, சங்கத்தின் விதிகளை முறையாகப் பின்பற்றாமல் சுற்றிவந்தனர். பிரபலமான இந்த அறுவர், மதிப்புமிக்க துறவிகளின் கருத்துகளுடன் உடன்பட வில்லை என்றால் அந்தப் பிக்குகளை இகழ்வார்கள், ஏளனம் செய்வார்கள், நிந்திப்பார்கள். பத்து வகையான அவதூறுகளையும் பயன்படுத்தி அவர்களை அசிங்கப்படுத்துவார்கள்.
பொறுக்க மாட்டாத மற்ற பிக்குகள் ஒரு நாள் இந்த விஷயத்தை புத்தரிடம் எடுத்துச் சென்று முறையிட்டார்கள். அவர்களது நடவடிக்கைகள் பொறுக்க முடியாதவையாக இருக்கின்றன என்றனர். புத்தர் அந்த அறுவரையும் வரச் சொன்னார்; அவர்களைப் பார்த்து மற்ற பிக்குகள் கூறுவது உண்மையா என்று கேட்டார். அவர்களும் அது உண்மைதான் என்று உடனடியாக ஒப்புக்கொண்டனர்.
புத்தர் அவர்களைக் கடிந்து கொண்டார். ‘பிக்குகளே, கடுமையான புண்படுத்தும் சொற்கள் விலங்குகளுக்கும் எரிச்சல் ஊட்டுவன. முற்பிறவியில், ஒரு விலங்கு அதனுடைய எஜமானன் அதைப் பார்த்து கடுமையான சொற்களை உச்சரித்ததால் அவனுக்கு ஆயிரம் நாணயங்கள் நட்டம் ஏற்படும் சூழலை உருவாக்கிவிட்டது தெரியுமா?’ என்று அவர்களிடம் முற்பிறவியில் நடந்த கதை ஒன்றை அவர்களிடம் சொல்லத்தொடங்கினார்.
முற்பிறவியில் காந்தார தேசத்தின் தட்சசீல நகரில் போதிசத்துவர் ஒரு காளையாக அவதாரம் செய்திருந்தார். சிறிய கன்றாக இருந்தபோதே, அந்தக் குட்டியின் எஜமானர்கள், அந்த வீட்டிற்கு வந்த பிராமணர் ஒருவருக்குத் தானமாக அதைக் கொடுத்துவிட்டனர். பரிசுத்தமான மனிதர்கள் என்று அவர்கள் கருதுபவர்களுக்குக் காளையைத் தானமாக அளிப்பது அவர்களது குடும்பத்தின் வழக்கம் என்று சொல்லிக்கொண்டனர்.
அந்தப் பிராமணர் கன்றுக்கு நந்திவிசாலன் என்று பெயரிட்டார். பெரும் மகிழ்ச்சியைத் தரும் காளை என்று அதற்குப் பொருள். அந்தக் கன்றைத் தனக்குப் பிறந்த குழந்தையைப் போலவே பராமரித்து வளர்த்தார். அந்த இளம் கன்றுக் குட்டிக்கு அரிசிக் கஞ்சியும், அரிசிச் சோறும் அளித்தார். போதிசத்துவரான அந்தக் காளைக் கன்று நல்ல போஷாக்குடன் வளர்ந்தது.
நன்கு வளர்ந்து மிடுக்கான காளையாகிவிட்ட போதிசத்துவர் இவ்வாறு நினைத்துக் கொண்டார்: ‘இந்தப் பிராமணர் என்னை மிகவும் சிரமப்பட்டு வளர்த்திருக்கிறார். அவருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். நான் பாரமிழுப்பதுபோல் பாரமிழுக்கும் காளையை இந்த ஜம்புதீபம் முழுவதிலும் பார்க்க முடியாது. இந்தப் பிராமணன் என்னை வளர்த்ததற்குச் செய்த செலவை எனது வலிமையை நிரூபித்து, அதன் மூலமாக அவருக்குப் பலன் ஏதாவது கிடைக்கும்படி செய்யலாம். எனினும், அதை எப்படிச் செய்வது?’
காளைக்கு ஒரு யோசனை தோன்றியது. அதனையொட்டி, மறுநாள் தனது எஜமானரிடம் சென்று இவ்வாறு கூறியது: ‘பிராமணரே, இந்த நகரில் மந்தைகள் அதிகம் வைத்திருக்கும் வணிகரிடம் செல்லுங்கள். பாரம் ஏற்றப்பட்ட நூறு வண்டிகளை உங்களிடமிருக்கும் எந்தக் காளையாவது இழுக்குமா? நான் வளர்த்திருக்கும் காளை இழுக்கும். பந்தயத்திற்கு நான் தயார். ஆயிரம் நாணயங்கள். நீங்கள் தயாரா என்று கேளுங்கள்’.
பிராமணர் நகரத்து வணிகர் ஒருவரிடம் சென்று அந்த நகரத்தில் யார் வைத்திருக்கும் காளைகள் வலிமையானவை என்பதுபோல் அவரிடம் விவாதம் ஒன்றைத் தொடங்கினார்.
இன்னாருடைய காளை, அப்புறம் இன்னாருடைய காளை என்று அந்த வணிகர் கூறினார். ‘எனினும், உண்மையாகவே ஆற்றலும் வலிமையும் கொண்டவை என்னுடைய காளைகள்தான். அவற்றுடன் ஒப்பிடும் அளவுக்கு இந்த நகரத்தில் ஒரு காளை எவரிடமும் இல்லை தெரியுமா?’ என்றார்.
அதற்குப் பிராமணர், ‘ஒரே நேரத்தில் நூறு பார வண்டிகளை இழுக்கும் காளை இருப்பது உங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்டார்.
‘நூறு வண்டிகளா? அப்படி ஒரு காளை இருக்கிறதா? எங்கே உள்ளது?’ என்று சிரித்தார் வியாபாரி.
‘என் வீட்டில்தான். நான் வளர்க்கும் காளைதான்’ என்ற பிராமணர், ‘ ஒரு பந்தயம் வைத்து அதை நிரூபிப்போமா?’ என்று அவரை வினவினார்.
‘நிச்சயமாகச் செய்வோம்’ என்று அந்த வணிகர் கூறியதும், பிராமணர், ஆயிரம் நாணயங்களைப் பந்தயமாக வைப்பதாக அவரிடம் கூறினார். அவரும் ஒப்புக்கொண்டார்.
0
பந்தய நாள் குறிக்கப்பட்டது. அந்த நாளில் பிராமணர் நூறு வண்டிகளை ஏற்பாடு செய்தார். வண்டிகள் அனைத்திலும், மணல், சரளைக் கற்கள் போன்ற பொருட்களை பாரத்திற்காக ஏற்றினார். அனைத்து வண்டிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக வலிமையான கயிற்றால் நன்கு கட்டினார்.
இவ்வாறு செய்து முடித்ததும் நந்தி விசாலனை ஓட்டிச் சென்று நன்கு குளிப்பாட்டினார். அவனுக்கு மணம் மிகுந்த அரிசிக் கஞ்சியும் சோறும் அளித்தார். காளையின் கழுத்தில் மலர் மாலை ஒன்றை அணிவித்தார். அதன் பின்னர், முதல் வண்டியில் ஒற்றைக் காளை இழுக்கும் வகையில் வசதியாக அமைத்திருந்த நுகத்தடியில் காளையைப் பூட்டி, ஏர்க்காலில் தாவிஏறி ஓட்டுபவர் அமரும் தட்டுப் பலகையில் தார்க்குச்சியுடன் அமர்ந்தார்.
காற்றில் தார்க்கோலின் சாட்டைப் பகுதியை வேகமாக வீசி சப்தம் செய்தார். செல்லமாக அதட்டுவதாக நினைத்து, ‘வண்டிகளை இழுடா, அயோக்கியப் பயலே! வண்டிகளை இழுத்துச் செல்லடா!’ என்று கத்தியபடி காளையைத் தட்டினார்.
போதிசத்துவரான காளைக்கு ஒரே கோபம். இவர் என்ன என்னை அயோக்கியப் பயலே என்கிறார். ‘அவர் குறிப்பிடும் அயோக்கியப் பயல் நான் இல்லை’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டது. காளை, தனது நான்கு கால்களையும் தரையில் அழுந்தப் பதித்து நின்றது. அவர் எவ்வளவோ அதட்டியும் ஓர் அங்குலமும் முன்னே நகரவில்லை.
வண்டிகள் நகரவில்லை என்பதால் பிராமணர் தோற்றார். அந்த இடத்திலேயே, ஆயிரம் நாணயங்களைக் கொடுக்கச் சொல்லி பிராமணனிடமிருந்து வியாபாரி வாங்கிவிட்டார். பிராமணருக்குப் பணம் நஷ்டம். காளையை வண்டியிலிருந்து அவிழ்த்துவிட்டு, வீட்டிற்குள் சென்றார். பணம் நஷ்டம் என்பதைக் காட்டிலும் நகரத்தில் இருந்தவர்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க வந்திருந்தனர் என்பதால், தேவையற்ற அவமானத்தால் அவருக்குப் பெரும் வேதனை. படுக்கையில் சென்று படுத்துக் கொண்டார்.
0
நந்திவிசாலன் அந்தப் பக்கமாகச் சென்று அவரைப் பார்த்தது. பிராமணர் படுத்திருப்பதையும் துக்கத்தில் ஆழ்ந்திருப்பதையும் அறிந்து கொண்டது. அவர் அருகில் சென்று ‘தூங்குகிறீர்களா’ என்று விசாரித்தது.
பிராமணர், ‘ஆயிரம் நாணயங்களை இழந்துவிட்டு நான் எப்படித் தூங்க முடியும்?’ என்று கேட்டார், துக்கத்துடன்.
‘பிராமணரே, உங்கள் வீட்டில் நான் வளர்ந்த இந்த ஆண்டுகளில் எப்போதாவது ஒரு பானையை உடைத்திருக்கிறேனா? அல்லது யாரையாவது முட்டித் தள்ளியிருக்கிறேனா? அல்லது ஏதாவது களேபரம் செய்திருக்கிறேனா, சொல்லுங்கள்’
‘அப்படி நீ ஏதும் செய்யவில்லையே, என் குழந்தையே!’
‘அப்படி இருக்க, இன்று என்னை ஏன் அப்படி அயோக்கியன் என்று அழைத்தீர்கள்? பந்தயத்தில் தோற்றதற்கு உங்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்; என்னை அல்ல. இப்போதே போய், அந்த வியாபாரியிடம் இந்த முறை இரண்டாயிரம் நாணயம் என்று பந்தயம் கட்டுங்கள். ஆனால், ஒன்று. என்னை மீண்டும் நீங்கள் அயோக்கியன் என்று மட்டும் அழைக்க வேண்டாம். அதை மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்’.
காளை சொல்லியதைக் கேட்ட பிராமணர் மீண்டும் வியாபாரியிடம் சென்றார். மீண்டும் ஒரு முறை பந்தயம் வைக்கலாமா? இந்த முறை இரண்டாயிரம் நாணயங்களை வைக்கிறேன் என்றார். வியாபாரியும் அதற்கு ஒப்புக்கொண்டார். முன்பு கிடைத்த அனுபவத்தில் வெற்றி தனக்குத்தான் என்று வியாபாரி நினைத்தார்.
பிராமணரும், இந்த முறையும் முன்பு போலவே நூறு வண்டிகளை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாகக் கட்டினார். கம்பீரமாகவும் நேர்த்தியாகவும் நின்றிருந்த நந்திவிசாலனை முதல் வண்டியின் நுகத்தடியில் பூட்டினார்.
எப்படி அவர் அதைச் செய்தார் என்று பார்க்கலாம். முதலில் அவர் நுகத்தடியின் ஒரு புறத்தில் காளையைப் பூட்டாங்கயிற்றால் பூட்டினார். பின்னர், மற்றொரு காளை இருக்க வேண்டிய மறுபுறத்தை வண்டியின் பார்ச் சட்டமான ஏர்க்காலுடன் ஒரு மரத்துண்டால் இணைத்து நுகத்தடியின் அந்தப் பகுதி அசையாமல் வளைக்க முடியாதபடி இறுக்கமாகக் கட்டினார். இரண்டு காளை இழுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட அந்த வண்டியை இப்போது ஒரே காளையே இழுக்க முடியும்.
இப்போது வண்டியில் ஏறி அமர்ந்த பிராமணர் நந்திவிசாலனின் முதுகில் மெல்லத் தட்டி, வண்டியை இழுக்கும்படி வேண்டினார். ‘எனது நல்ல நண்பனே! இந்த வண்டிகளை இழுத்துச் செல்லுங்கள்! என்னுடைய நல்ல நண்பனே! இழுத்துச் செல்லுங்கள்.’
சரம்போல் சேர்த்துக் கட்டப்பட்டிருந்த நூறு வண்டிகளையும் ஒரே இழுப்பில் போதிசத்துவர் என்ற காளை இழுத்துச் சென்றது. முதலில் நின்ற வண்டியின் இடத்தில் கடைசி வண்டி வந்து நிற்கும் வகையில் அவ்வளவு தூரத்திற்கு இழுத்துச் சென்றது.
ஏராளமாக மந்தைகள் வைத்திருந்த அந்த வியாபாரி வியந்து போனான். பந்தயத்தில் தோற்றதால் இரண்டாயிரம் நாணயங்களை பிராமணரிடம் உடனடியாக அளித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நகரத்தின் மக்களும் நந்திவிசாலன் என்ற காளையின் திறமையைப் பாராட்டி பெரும் தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தனர். அத்தனையும் பிராமணரின் கைகளுக்குச் சென்றன. இவ்வாறாக போதிசத்துவரின் ஆற்றலாலும் திறமையாலும் அந்த பிராமணனுக்கு நற்பெயர் மட்டுமின்றி நல்ல பயனும் விளைந்தது.
இவ்வாறு அந்த அறுவரைக் கண்டிக்கும் விதமாகவும் உபதேசமாகவும் புத்தர் கதையைச் சொல்லிமுடித்தார். கடுமையான சொற்களால் நாம் எவரையும் மகிழ்ச்சியடைய வைக்க முடியாது. ‘நிச்சயமாக அனைவரும் மற்றவர் மகிழும் வகையில் பேச வேண்டும்; கடுமையான, விரும்பத்தகாத சொற்கள் எதுவும் பேசக்கூடாது. உவக்கும் வகையில் பேசிய மனிதருக்காக அந்தக் காளை மிகப் பெரும் பாரத்தையே இழுத்தது; அதன் காரணமாக அவருக்குச் செல்வமும் மனத்திருப்தியும் பலனாகக் கிடைத்தன’.
அதன் பின்னர், தம்ம அரங்கில் இருந்தவர்களிடம் முற்பிறவியில் யார் எவராகப் பிறந்திருந்தார்கள் என்பதையும் கௌதமர் கூறினார்: ‘ஆனந்தன் பிராமணராகவும், நான் நந்திவிசாலன் என்ற காளையாகவும் அவதரித்திருந்தோம்’.
(தொடரும்)