Skip to content
Home » புத்த ஜாதகக் கதைகள் #16 – மயில் நடன ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #16 – மயில் நடன ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 32வது கதை)

‘துறவும் போகமும்’

நிகழ்காலத்தில் செல்வந்தர் ஒருவர் சங்கத்தின் நெறிகளைக்கேட்டு, அதில் தன்னை இணைத்துக் கொள்கிறார்; எனினும் தனது வசதியான வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் சேர்த்துவைத்துக் கொள்கிறார். இப்படி வாழ்க்கையை ஒரு பிக்கு வசதியாக அனுபவித்து வருவதை அறிந்த மற்ற பிக்குகள், அவரை புத்தரிடம் அழைத்துச் செல்கின்றனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அந்த நபர் தனது மேலாடைகளை வீசி எறிகிறார்; அதன்பின்னர் ஆடைகளை முற்றிலும் களைந்து எறிகிறார்.

தனக்குப் பொருத்தமான ஒருவனைக் கணவனாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ள தன் மகளுக்கு அனுமதி தந்த பறவைகளின் ராஜாவின் கதையைப் புத்தர் கூறுகிறார். அவள் ஒரு மயிலைத் தேர்ந்தெடுத்தாள். அந்த ஆண் மயில் அவளுக்காக நடனமாடியபோது, வெட்கமின்றித் தன்னுடைய உடலை வெளிப்படுத்திக் கொண்டது. அதனால் அரசன் அவனைக் கண்டித்து, மகளை இன்னொருவனுக்கு மணம் செய்து கொடுத்தான்.

0

இந்தக் கதையைப் பேராசான் ஜேதவனத்தில் இருக்கையில் கூறினார். மடாலயத்தில் பல உடைமைகளுடன் வசித்துக் கொண்டிருந்த பிக்குவை பற்றிய கதை இது.

சிராவஸ்தியில் குடும்பத் தலைவராக இருந்த ஒருவர் அவரது மனைவி இறந்தவுடன், பௌத்தச் சங்கத்தில் சேர்ந்தார் என்று மரபுவழி செய்திகள் கூறுகின்றன. அவர் அங்கு சேர்ந்தவுடன் வசிப்பதற்குத் தனியாக ஓர் அறையைக் கட்டும்படி செய்தார்; சமைப்பதற்கான அடுப்புடன் அறை ஒன்றையும், பொருட்கள் வைக்க ஓர் அறையையும் ஏற்பாடு செய்துகொண்டார். நெய், அரிசி, இன்னும் அவை போன்ற சமைப்பதற்குத் தேவையான பலவற்றையும் பண்டக அறையில் சேமித்து வைத்துக்கொள்ளும் வரையிலும் முழுமையாகத் தன்னை அவர் மடத்தில் இணைத்துக் கொள்ளவில்லை.

பிக்குவாக மாறிய பிறகும், தனது பழைய வேலையாட்களை மடத்துக்கு அழைப்பார். தனக்குப் பிடித்ததைச் சமைக்கச் சொல்லிச் சாப்பிடுவார். வசதியாக இருப்பதற்கு அவருக்குத் தேவையான பொருட்களை ஏராளமாகச் சேமிப்பில் வைத்திருந்தார்; இரவு நேரத்தில் அணிந்துகொள்ள ஓர் உடை, பகல் நேரத்துக்கு ஓர் உடை. இப்படியாக மடாலயத்தின் வளாகத்தில், ஒதுங்கி, தனித்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்.

அந்தப் பிரதேசத்தில் இருக்கும் மடாலயதிலிருந்து பிக்குகள் பிற மடங்களைச் சுற்றிப் பார்க்கப் பயணமாகச் சென்று கொண்டிருந்தனர். அன்று இந்த மடத்துக்கு வந்திருந்தனர். நமது பிக்கு, அன்று தனது உடைகளையும், பாய் – படுக்கைகளையும் உலர்வதற்காக அறைக்குள் நன்கு விரித்துப் பரப்பி வைத்திருந்தார். வரிசையாக ஒவ்வொரு அறையாகப் பார்த்து வந்த அந்தப் பிக்குகள் இவர் அறைக்குள்ளும் நுழைந்தனர். இவரது உடமைகளைப் பார்த்து வியந்தனர்.

‘இவையெல்லாம் யாருடையவை?’

‘பிக்குகளே, இவை அனைத்தும் என்னுடையவைதான்.’

‘என்னது, உங்களுடையதா?’ என்று அவர்கள் நம்பவியலாமல் கூவினர். ‘இந்த மேலாடை சரி, உள்ளாடைகள் சரி. ஆனால், அந்தப் படுக்கை! அனைத்தும் உங்களுடையதா?’

‘ஆமாம், வேறு யாருடையதும் இல்லை. அனைத்தும் என்னுடையவை.’

‘அய்யா, நல்வாய்ப்புகள் அமையப்பெற்ற நமது ஆசான் மூன்று ஆடைகள் மட்டும்தானே அனுமதித்துள்ளார். யாருடைய உபதேசங்களின் அடிப்படையில் நீங்கள் இந்தச் சங்கத்தில் இணைந்து உங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறீர்களோ, அந்தப் புத்தர் மிகவும் எளிமையானவர். குறைவான உடைமைகளைப் பரிந்துரைப்பவர். எனினும் நீங்கள் இவ்வாறு உங்களுக்குத் தேவையானவற்றை ஏராளமாகச் சேர்த்து வைத்திருக்கிறீர்களே. வாருங்கள். பத்து ஆற்றல்களும் நிறைந்திருப்பவரான கௌதமரிடம் உங்களை அழைத்துச் செல்கிறோம்.’

இவ்வாறு சொல்லி, அவரை அழைத்துக்கொண்டு புத்தரைச் சந்திக்கச் சென்றனர்.

0

தம்ம அரங்கில் பிக்குகளுடன் உரையாடிக் கொண்டிருந்தார் புத்தர். இவர்கள் தன்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்ததும், அவர்களை நோக்கி வினவினார்: ‘பிக்குகளே என்ன காரணத்தினால், இந்தப் பிக்குவை அவரது விருப்பத்துக்கு மாறாக இங்கு அழைத்து வந்திருக்கிறீர்கள்?’

‘குருவே, இந்த பிக்கு சங்கத்தின் விதிகளை மீறியிருக்கிறார். நல்ல வசதியுடன் இருக்கிறார். தனக்குத் தேவையானவற்றை அதிக அளவில் சேகரித்து வைத்திருக்கிறார்.’

‘பிக்குவே, இவர்கள் கூறும் தகவல் உண்மையா? உங்களிடம் நிறைய உடைமைகள் இருக்கின்றனவா?” என்று புத்தர் அவரை வினவினார்.

‘ஆமாம் அய்யா.’

‘ஏன் இவ்வளவு உடைமைகளைச் சேர்த்து வைத்திருக்கிறீர்?’

இந்தக் கேள்விக்குப் பதில் ஏதும் கூறாத அந்தப் பிக்கு, அனைவரின் முன்னிலையில் தனது மேலாடைகளைக் கிழித்து வீசி எறிந்தார். புத்தரின் முன்னால், பிறந்த கோலத்தில் நின்றார்.

‘ஏன், நான் இப்படியே வேண்டுமானாலும் இருப்பேன்!’

‘ஓ, முட்டாளே’ என்று அனைவரும் கூச்சலிட்டனர்.

அந்த மனிதன் அங்கிருந்து ஓடிப்போனான். அதன் பின்னர், ஒரு சாதாரண மனிதனைக்காட்டிலும் தாழ்ந்த நிலைக்குப் போய்விட்டான்.

0
அன்று தம்ம அரங்கில் பிக்குகள் அனைவரும் கூடியிருந்தனர். அந்த மனிதன் புத்தருக்கு முன்பாகவே அப்படி நடந்துகொண்டானே. எவ்வளவு அநாகரிகமான செயல் என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது கௌதமர் உள்ளே வந்தார். தனக்கான இருக்கையில் அமர்ந்துகொண்டார். சீடர்கள் தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து, ‘பிக்குகளே, நீங்கள் எதைப் பற்றி உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?’ என்று அவர்களிடம் கேட்டார்.

‘பேராசானே’ என்று அவர்கள் பேசத் தொடங்கினர். ‘அன்று அந்தப் புதிய பிக்கு உங்கள் முன்னால் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டதைப்பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம், உங்கள் முன்னிலையில், உங்களைப் பின்பற்றும் நான்கு வகுப்பினரின்-பிக்குகள், பிக்குணிகள், முழுமையாகத் தீட்சை பெறாத சகோதரர்கள், சகோதரிகளின் முன்னிலையில் நாணத்தைத் துறந்து நிர்வாணமாக நின்றார். கிராமத்தில் சரியாக உடையணியாமல் திரியும் விஷமக்காரச் சிறுவன் போல் அவர் ஓடினார். அனைவராலும் அவர் வெறுக்கப்படுகிறார். சாதாரண மனிதனைக்காட்டிலும் தாழ்ந்த நிலையை அடைந்து நம்பிக்கை இழந்து திரிகிறார்.’

அவர்களுக்கு ஆறுதலாகவும் பதிலாகவும் கெளதமர் இவ்வாறு கூறினார், ‘துறவிகளே, இந்த நாணமற்ற செயலால் அவருக்கு ஏற்பட்ட இழப்பு இது மட்டுமல்ல; கடந்த பிறவியில் அவர் ஓர் உயர்ந்த ஆபரணம் போன்ற அற்புதமான மனைவியை இழந்தார். இந்தப் பிறவியிலும் உயர்வான உபதேசத்தின் பயனான நன்னெறிகளையும் அவர் இழந்தார்.’

அத்துடன் சீடர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்த முற்பிறவிக் கதையையும் கூறினார்.

0

முற்பிறவி கதை இது. உலக வரலாற்றின் முதல் சுழற்சி; அவ்வளவாக வளர்ச்சியுறவில்லை. அந்தக் காலகட்டத்தில் நான்கு கால் விலங்குகள், அவர்களுக்கு அரசனாகச் சிங்கத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டன; மீன்கள் அசுர-மீன் ஆனந்தனையும், பறவைகள் தங்க நிறத்தில் இருந்த காட்டு வாத்தையும் தேர்ந்தெடுத்துக் கொண்டன. போதிசத்துவர் தங்க வாத்தாகப் பிறந்திருந்தார்.

ராஜாவான அந்தத் தங்க வாத்துக்கு மிக மிக அழகான இளம் மகள் இருந்தாள். அவளுடைய தந்தையாகிய அரசன் மகளுக்கு அவள் கேட்கும் எந்த வரத்தையும் தருவதாக உறுதி கூறினார்.

மகள் தந்தையிடம் கேட்ட வரம்: ‘சுயம்வரம். தன் கணவனைத் தானே தேர்ந்தெடுக்கும் அனுமதி’.

தந்தையும் உடனே அளித்தார்.

அரசன், மகளுக்கு அளித்த வாக்குறுதி அளித்தது மட்டுமின்றி, அதை நிறைவேற்றவும் ஏற்பாடுகள் செய்தார். ஹிமாலயப் பிரதேசத்திலிருக்கும் அத்தனை பறவைகளையும் வரச் சொல்லி, ஒன்றுதிரட்டினார். அனைத்து வகையான பறவைகளும் அழைப்புக்கிணங்க வந்து சேர்ந்தன: அன்னப் பறவைகளும், மயிலினங்களும் ஏனைய பறவையினங்களும். மொட்டையான ஒரு பரந்த பாறை மீது ஒன்றாகத் திரண்டன.

ராஜா, தனது மகளை அழைத்து வரச் சொல்லி ஆணையிட்டார். அவள் மனதுக்கு உகந்த கணவனைக் கூடியிருப்பவர்களிலிருந்து தெரிந்தெடுத்துக் கொள்ளுமாறு கூறினார்.

மகள், பறவைகளின் கூட்டத்தைச் சுற்றிப் பார்த்தாள். மயிலைப் பார்த்ததும் அவளுடைய கண்கள் பளிச்சென பிரகாசித்தன. பளபளப்பாக ஓர் ஆபரணம்போல் பிரகாசிக்கும் அதனுடைய கழுத்தும், பல்வேறு வண்ணங்களால் அமைந்திருந்த அதன் தோகையும் அவளை ஈர்த்தன. அந்த ஆண் மயிலை அவளுக்குப் பிடித்துப் போயிற்று. அந்த மயிலைத் தனது துணையாகத் தேர்ந்தெடுத்திருப்பதாக, தந்தையிடம், ”இவரே என் கணவனாக இருக்கட்டும்” என்றாள்.

பின்னர் பறவைகளின் கூட்டம் மயிலின் அருகில் சென்று இந்தச் செய்தியைக் கூறின: ‘நண்பா மயிலே, பறவைகள் அனைத்தையும் பார்த்த இளவரசி, கணவனாக உன்னைத் தேர்ந்தெடுத்தாள்’.

அதீத மகிழ்ச்சியால் மயில் துள்ளி ஆடியது. “நண்பர்களே இதுநாள்வரையிலும் நான் எவ்வளவு துடிப்பானவன் என்பதை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை” என்று அகவியது. அத்தனைப் பறவைகளுக்கும் முன்பாகக் கண்ணியத்தைத் துறந்து, சிறகுகளை விரித்து நடனமாடத் தொடங்கியது; அவ்வாறு நடனமாடும்போது, அந்த மயில் தன்னுடைய உடலை முற்றிலும் வெளிப்படுத்திக் கொண்டது.

இந்தச் செயலால் தங்க வாத்து ராஜா மிகவும் அவமானம் அடைந்ததாக உணர்ந்தார். ‘இவனுக்குள் அடக்கம் என்பது இல்லை, பொதுவெளியில் எப்படிக் கண்ணியமாக நடப்பது என்பதும் தெரியவில்லை; நிச்சயமாக என் மகளை நாணமற்ற ஒருவனுக்கு மணம் செய்து தரமாட்டேன்.’

இவ்வாறு சொல்லிய அவர் அந்தப் பறவைகளின் கூட்டத்தில் இந்தச் சொற்களை உதிர்த்தார்:
‘இனிமையான குரல், அற்புதமான முதுகு, உயர்வான நீலக்கல்லுக்கு இணையான கழுத்து நீளமான அழகான தோகை, நடனமாடத் தெரிந்தவன் என்றாலும் உனக்கு என் மகளைக் கொடுக்கமாட்டேன்’.

கூடியிருந்த ஏராளமானவர்கள் முன்னிலையில் இவ்வாறு கூறிய ராஜாவான தங்க வாத்து, தன்னுடைய மகளை உறவுக்காரனான ஓர் இளம் காட்டு வாத்துக்கு மணம் செய்து கொடுத்துவிட்டது.

இளவரசி தனக்குக் கிடைக்கவில்லை என்றதும் நாணமுற்ற மயில் உடனடியாக அங்கிருந்து பறந்து சென்றுவிட்டது. ராஜா தங்க வாத்துவும் தனது இருப்பிடமான ‘அரண்மனைக்குத்’ திரும்பிச் சென்றது.

0

‘இப்படித்தான் நடந்தது சீடர்களே’ என்று கதையைச் சொல்லி முடித்த ததாகதர்,

‘அடக்கத்தையும் கண்ணியத்தையும் துறந்ததால் அவருக்கு இழப்பு ஏற்பட்டது முதன்முறையல்ல. இப்போதும் இந்தப் பிறவியில் அற்புதமான கிடைத்தற்கரிய உபதேசத்தையும் நன்னெறியையும் அவர் இழந்தார். முற்பிறவியில் கிடைக்கவிருந்த சிறந்த மனைவியையும் இழந்தார்.’

‘சென்ற பிறவியில் மயிலாகப் பிறந்து இருந்தவர்தான் இப்போது பல்வேறு உடைமைகளை வைத்திருந்த அந்தச் சீடர். நான் அரசன் தங்க காட்டு வாத்தாக அவதரித்திருந்தேன்’ என்று தொடர்புகளையும், சீடர்களுக்கு புத்தர் சுட்டிக்காட்டினார்.

(தொடரும்)

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *