(தொகுப்பிலிருக்கும் 33வது கதை)
‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’
இந்த நிகழ்வின் காலகட்டத்தில் சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் இடையில் நதி நீர் பங்கிடுவதில் பிரச்னை எழுந்தது. கௌதம புத்தர் அவர்களுக்கு இடையில் சமரசம் செய்து வைக்கிறார். அறிவுரையாகக் கடந்த பிறவியின் கதை ஒன்றையும் அவர்களுக்குச் சொல்கிறார்: ’வேடன் விரித்த வலையில் மாட்டிக்கொண்ட காடைகள், ஒற்றுமையுடன் செயல்பட்ட காரணத்தால், வலையையும் தூக்கிக்கொண்டு பறந்து வேடனிடமிருந்து அவை தப்பின. எனினும் அவை தமக்குள் முரண்பாட்டை உருவாக்கிக்கொண்டதும் வேடனுக்கு இரையாகிவிட்டன’.
0
கபிலவாஸ்துவுக்கு அருகிலிருந்த குணாலா ஏரிக்கரையில் அரச மரங்கள் நிறைந்த வனத்தில் சில காலம் வசித்தபோது, கெளதமர் இந்தக் கதையைக் கூறினார். சங்கத்தின் பெரும்பான்மை சீடர்கள் பெரும் அதிருப்தியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தனர். அதைப் போக்கும்விதமாகவும் அவர் சொல்கிறார்.
சாக்கியர்களும் கோலியா பழங்குடியினரும் கபிலவாஸ்து நகரத்துக்கும் கோலியர் தலைநகரத்துக்கும் இடையில் ஓடும் ரோகிணி நதிக்கரைகளில் வசித்தனர். நதியின் இக்கரையில் ஓர் இனத்தவரும் அக்கரையில் மற்றோர் இனத்தவரும் வசித்தனர். அந்த நதி நீரை அனைத்துக்கும் பயன்படுத்திக்கொண்டனர். குறுக்கே அணை கட்டி வேளாண்மையும் செய்துவந்தனர்.
அந்த ஆண்டில் ஜேதாமுலா மாதத்தில் _(பங்குனி-சித்திரை) நல்ல வெயில். ஆற்றில் நீர்வரத்து குறைந்தது. வெயிலால் பயிர்கள் வாடத் தொடங்கின. இரு நகரங்களையும் சேர்ந்த விவசாயிகள் ஒன்று கூடினர். இப்பிரச்னை குறித்து விவாதித்தனர்.
அப்போது கோலிய நகரத்து மக்கள் இவ்வாறு கூறினர்: ‘இந்தத் தண்ணீரை இரு நகரங்களுக்குமான கால்வாய்களில் வெளியேற்றிப் பயன்படுத்தினால் இருவருக்கும் போதாது. யாராவது ஒருவருக்கு நீர் திறந்துவிட்டால் அந்த நிலங்களின் பயிர்கள் பிழைக்கும். அறுவடை செய்யலாம்; எனவே இப்போது எங்கள் பகுதிக்கு நீரைத் திறந்துவிடுங்கள்.’
கபிலவாஸ்து மக்கள் கூறியது இது: ‘நீங்கள் உங்கள் களஞ்சியங்களில் சோளத்தையும் வேறு தானியங்களையும் நிரப்பிக்கொள்வீர்கள்; நாங்கள் கைகளில் கூடைகளுடனும், சாக்குகளுடனும், தங்கக் காசுகளையும் விலையுயர்ந்த கற்களையும் தாமிரக் காசுகளையும் எடுத்துக்கொண்டு உங்கள் வீட்டு வாயில்களில் தானியங்களைக் கேட்டு நிற்க வேண்டும்; அதுதானே உங்கள் எண்ணம். அந்த நிலை எங்களுக்கு வேண்டாம். நீர் பாய்ச்சினால் எங்கள் பயிர்களும் செழித்து வளரும்; அதனால் எங்களுக்கு நீரைத் திறந்துவிடுங்கள்.’
கோலியர்கள் ‘முடியாது. நாங்கள் கொடுக்கமாட்டோம்’ என்றார்கள். ‘நாங்களும் அனுமதிக்கமாட்டோம்’ என்று மற்றவர்கள் சொன்னார்கள்.
இப்படியாகச் சொற்கள் அதிகரித்துக் கொண்டே போயின. தடித்த சொற்கள் ஓங்கி ஒலித்தன. அவர்களில் ஒருவன் எழுந்து மற்றொருவனை அடித்தான். பதிலுக்கு அவன் இவனைத் திருப்பி அடித்தான். இப்படியாகக் கைகலப்பு பெரிதாகியது; அத்துடன் நிற்கவில்லை. ஒவ்வொருவரும் எதிர் இனக்குழுவின் பூர்வீகத்தைத் தொட்டு இழிவான சொற்களில் விமர்சிக்கத் தொடங்கினர்.
கலகச் சூழல் உருவானது. கோலிய இனத்தின் விவசாயிகள் இவ்வாறு கூறினர்: கபிலவாஸ்து மக்களே விலகிச் செல்லுங்கள். நீங்கள் விலங்குகளைப் போன்றவர்கள்; நாய்கள், நரிகள் மற்றும் அதைப்போன்ற விலங்குகள் போன்று சகோதரிகளுடன் இணைந்து வாழ்பவர்கள். யானைகளும் குதிரைகளும், உங்களுடைய கேடயங்களும் ஈட்டிகளும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது.’
அதற்குச் சாக்கிய விவசாயிகள் இப்படிப் பதிலளித்தனர். ‘அப்படியா, உங்களால் முடியுமா? நீங்கள் கேடுகெட்ட தொழுநோயாளிகள். அதைக்காட்டிலும் மோசமானவர்கள். உங்கள் குழந்தைகளை விட்டு விலகி இருங்கள்; ஆதரவற்ற அநாதைகள் நீங்கள், மன நிலை சரியில்லாதவர்கள். மிருகங்களைப் போல் கோலி மரத்தின் பொந்துகளில் வசிப்பவர்கள். உங்களுடைய யானைகளும் குதிரைகளும் ஈட்டிகளும் கேடயங்களும் எங்களை ஒன்றும் செய்ய இயலாது.’
இழிவான சொற்களைப் பேசியும் கைகளாலும் சண்டைபோட்டுக் கொண்ட இரண்டு இனத்தவர்களும் நதி நீரைப் பிரித்து அளிப்பதற்கு நியமிக்கப்பட்டிருந்த அதிகாரிகளிடம் சென்று தம் பக்கத்து நியாயங்களை எடுத்துரைத்தனர். அதன் பின்னர் அவர்களுடைய அரசர்களிடமும் தெரிவித்தனர்.
சாக்கியர்கள், ‘சகோதரிகளுடன் சேர்ந்து வாழும் ஆண்கள் எவ்வளவு வலிமையானவர்கள், தீரமிக்கவர்கள் என்பதை நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்’ என்று அரசனிடம் சொன்னார்கள்: சண்டைக்கும் தயாராகிவிட்டனர்.
கோலியர்கள் தம் அரசனிடம், ‘கோலி மரத்தின் பொந்துகளில் வசிப்பவர்கள் எவ்வளவு வலிமையானவர்கள்; தீரமிக்கவர்கள் என்பதை நாம் அவர்களுக்குக் காட்டுவோம்’ என்று கூறினர். அவர்களும் சண்டைக்குத் தயாராகிவிட்டார்கள்.
எனினும் இந்தக் கதையை வேறு சிலர் இவ்வாறு சொல்கிறார்கள்: ‘சாக்கியர்கள் மற்றும் கோலியர்களின் அடிமைப் பெண்கள் தண்ணீர் எடுக்கவும் துணிகளைத் துவைக்கவும் ஆற்றுக்கு வருகின்றனர்; தலையில் சுமந்து வந்த துணி மூட்டைகளை ஆற்று மணலில் எறிந்துவிட்டு தமக்குள் உற்சாகமாகப் பேசத் தொடங்கினர். சிறிது நேரம் கழித்துத் துணி துவைக்க இறங்கிய ஒரு பெண் தனக்குச் சொந்தமானது என்று நினைத்து இன்னொருவரின் துணியை எடுத்தாள்; இதன் காரணமாக அவர்களுக்குள் சச்சரவு எழுந்தது. பேச்சு முற்றி சண்டையாக மாறியது. அது ஒவ்வொரு நிலையாக மேலே செல்லத் தொடங்கியது. அந்த இரு நகரங்களின் மக்கள், கொத்தடிமைகள், வேலையாட்கள், தொழிலாளர்கள், உதவியாளர்கள், ஊர்த்தலைவர்கள், ராஜ சபை உறுப்பினர்கள், ராஜப் பிரதிநிதிகள் என்று இருதரப்பைச் சேர்ந்த அனைவரும் போருக்குத் தயாராகிவிட்டனர்’’.
இந்த இரண்டில் எது உண்மை என்பது தெரியவில்லை.
பிரச்னை பெரிதான நிலையில், கௌதம புத்தர், ராஜ வம்சங்களைச் சேர்ந்த உறவினர்கள் மத்தியில் உரையாடி சமரசம் செய்து வைக்க முயன்றார். ‘இனத் தலைவர்களே, உறவினர்கள் மத்தியில் இவ்வாறான சச்சரவும் சண்டையும் தேவையற்றது. முறையற்றது. நமக்குள் ஒற்றுமையாக, சமாதானமாக இருப்போம். கடந்த பிறவியில் ஒற்றுமையாக இருந்ததால் விலங்குகளும் அவற்றின் எதிரிகளை வீழ்த்தின; ஒற்றுமை சிதைந்தபோது முழுமையான அழிவை எதிர்கொண்டன’ என்று ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தினர். அத்துடன் அவர்கள் கேட்டுக்கொண்டதால் அந்த முற்பிறவி நிகழ்வையும் விரிவாகக் கூறினார்.
0
பிரம்மதத்தன் வாராணசி அரசனாக இருந்த காலத்தில் போதிசத்துவர் வனமொன்றில் காடையாகப் பிறந்திருந்தார். அந்தக் காடைகளுக்குத் தலைமைப் பறவையாக இருந்தார். புத்திசாலியான வேடன் ஒருவன் அந்தக் காட்டுக்கு அருகில் வசித்தான். காடைகள் தமக்குள் பேசிக்கொள்வதுபோல் ஒலியெழுப்பத் தெரிந்தவன். ஒரு காடை மற்றொன்றை அழைப்பதுபோல் ஒலி எழுப்பி, அவற்றை ஓரிடத்தில் ஒன்று கூடும்படி செய்வான். அதன்பின்னர். அவற்றின் மீது வலையை வீசுவான். பறவைகள் சிக்கியதும் வலையின் சுருக்கை இறுக்கி, வலையோடு சேர்த்து காடைகளையும் தூக்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றுவிடுவான். அவற்றை விற்று அவன் வாழ்க்கை நடத்தினான்.
காடைக்கூட்டம் இதை எப்படித் தடுப்பது என்று தெரியாமல் விழித்தன. போதிசத்துவரான காடை, வேடனின் திட்டத்தை முறியடிக்க யோசனை ஒன்றைச் சொன்னார். அந்தக் காடைகளை நோக்கி, ‘இந்த வேடன் நம் இனத்தை அழித்துவிடுவான்போல் தெரிகிறது. அதிலிருந்து தப்பிக்க என்னிடம் ஒரு யோசனை உள்ளது. இனிமேல், அந்த வேடன் உங்கள் மேல் வலையை வீசிய உடனேயே, ஒவ்வொருவரும் வலையின் இடைவெளியில் தலையை நுழைத்துக் கொள்ளவேண்டும். அதன் பின்னர் அனைவரும் ஒன்றாக, ஒரே நேரத்தில் ஒரே திசையில் வலையுடன் பறந்து செல்ல வேண்டும். முட்புதர் ஒன்றின் மேல் இறங்குங்கள். வலை செடியின் முட்களில் சிக்கியவுடன் கீழ்ப்புறமாக அனைவரும் வெளிவந்து தப்பித்துவிடலாம்’ என்றார்.
மிகவும் நல்லது. அப்படியே செய்யலாம் என்று அந்தக் காடைகள் ஒப்புக்கொண்டன.
மறுநாள், வேடனின் வலையில் சில பறவைகள் மாட்டிக்கொண்டன. தப்பிக்க போதிசத்துவர் சொன்ன யோசனையைப் பயன்படுத்தின; வலையோடு சேர்ந்து ஒரே நேரத்தில் எழுந்து, ஒரே திசையில் பறந்தன. சற்று தூரத்தில் ஒரு முட்புதரின் மேல் வலையோடு இறங்கின; முட்களில் வலை மாட்டிக்கொண்டது. பறவைகள் ஒவ்வொன்றாகக் கீழ்ப்பக்கமாக வெளிவந்து தப்பித்தன.
வலையைக் கண்டுபிடித்த வேடன் முட்களில் மாட்டியிருந்த வலையை அவிழ்த்துக்கொண்டு வெறுங்கையுடன் வீட்டுக்குச் சென்றான். மறுநாளும், அதற்கு மறுநாளும் என்று இப்படியே வேடனின் வலையில் மாட்டிய காடைகள் அதே வித்தையைச் செய்து தப்பித்தன. வலை விரித்த வேடனுக்கு மாலையில் சூரியன் மறையும்வரை தனது வலையைப் பிரித்து எடுப்பதிலேயே நேரம் போயிற்று. அவன் வெறுங்கையுடன் வீட்டுக்குச் செல்வது வழக்கமாகிவிட்டது.
அவனுடைய மனைவி கோபமடைந்தாள்: ‘இப்படியே தினந்தோறும் நீங்கள் வெறுங்கையுடன் திரும்பி வருகிறீர்கள்; வேறோர் இடத்தில் இன்னொரு குடும்பம் வைத்து அங்கு அனைத்தையும் கொடுத்துவிட்டு வருகிறீர்களா?’
‘இல்லை, என் அன்பு மனைவியே. எனக்கு இன்னொரு குடும்பம் இல்லை. அந்தக் காடைகள் இப்போது வலையைத் தூக்கிக்கொண்டு ஒன்றாகப் பறந்து செல்கின்றன. அதை முட்புதரில் மாட்டிவிட்டுத் தப்பிவிடுகின்றன. எனினும் இது நீண்ட நாள் நீடிக்காது. உன்னை நீ வருத்திக்கொள்ளாதே. அவை தமக்குள் சண்டை போடத் தொடங்கியவுடன், நான் ஏராளமான பறவைகளைப் பிடிப்பேன்; அது உன் முகத்தில் புன்னகையை வரவழைக்கும்’ என்றான் வேடன். மேலும் இந்த வசனத்தையும் அவன் கூறினான்.
பறவைகள் ஒன்றாக வலையைச் சுமந்து
மகிழ்ச்சியுடன் பறந்து செல்கின்றன,
சண்டையிடத் தொடங்கும்போது, அவை
எனது கட்டுப்பாட்டில் வரும்.
0
வேடன் கவலை கொள்ளாமல்தான் இருந்தான். பறவைகளுக்குள் சண்டை வரும் என்று உறுதியாக இருந்தான். அவன் நினைத்தபடியே ஒருநாள் நடந்தது. அவ்வாறு காடைகள் இரை எடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு பறவை தவறுதலாக மற்றொரு காடையின் தலையில் மிதித்தது. உடனே மன்னிப்பும் கேட்டது. எனினும், மிதிபட்ட காடைக்குக் கோபம் போகவில்லை. இரண்டும் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்து சண்டையிட்டன.
ஒரு பறவையின் பக்கம் சில காடைகளும், மற்றொன்றின் பக்கம் வேறு காடைகளும் கட்சி சேர்ந்து கொண்டன. அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த மோதல்போக்கால் அவை தம்முடைய பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிக் கொள்கின்றன என்று போதிசத்துவர் நினைத்தார். அங்கிருந்தால் ஆபத்து என்று, தனது பறவைக்கூட்டத்தை அழைத்துக்கொண்டு காட்டின் வேறு பகுதிக்குச் சென்றுவிட்டார்.
அடுத்த முறை வேடன் வீசிய வலையில் சிக்கிய காடைகள், வலையை முதலில் யார் தூக்குவது என்று வாதிட்டன. சில, இந்தப் பக்கம் பறக்க, சில வேறு பக்கம் இழுக்க வலையைச் சுருக்கி இறுக்க வேடனுக்கு அது வாய்ப்பாக அமைந்தது.
பறவைகளை அள்ளி கூடைக்குள் போட்டுக்கொண்டு வீட்டுக்குச் சென்றான். அன்று அவன் மனைவியின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது.
‘இப்படித்தான் இனக்குழுத் தலைவர்களே, நமது இனத்துக்குள் உறவுகளுக்குள் இப்படிப்பட்ட சச்சரவு தேவையற்றது. சண்டை நம்மை அழிவுக்குத்தான் இட்டுச் செல்லும்’ என்றார் ததாகதர்.
புத்தரின் உபதேசமும் பாடமும் முடிந்தது. யார் எப்படி அவதரித்து இருந்தனர் என்பதையும் கூறினார்: ‘அந்த முட்டாள் காடையாகப் பிறந்திருந்தது தேவதத்தன். விவேகம் நிறைந்த நல்ல பறவையாக நான் பிறந்திருந்தேன்.’
இந்தக் கதையைக் கேட்ட சாக்கியர்களும் கோலியர்களும் சண்டையக் கைவிட்டு சமாதானமடைகின்றனர்.
(தொடரும்)
நீண்ட நாட்களாக ஜாதக கதைகள் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும் என்றிருந்தேன். இந்த தொடர் அதற்கு ஏற்றாற் போல அமைந்துவிட்டது. நன்றி.