Skip to content
Home » புத்த ஜாதகக் கதைகள் #18 – மச்ச ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #18 – மச்ச ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 34வது கதை)

‘இல்லறமா… துறவறமா?’

கதை நிகழும் காலத்தில் பிக்கு ஒருவர் அவரது முன்னாள் மனைவி பற்றிய நினைவுகளில் சிக்கிக் கொள்கிறார். புத்தரிடம் இதைப் பற்றிக் கூறுகிறார்கள். முற்பிறவி கதை ஒன்றை அவர் சொல்கிறார். உணர்வு வேகத்தில் கண்மூடித்தனமாக இயங்கிய ஒரு மீனுக்குக் கிட்டத்தட்ட உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டது. அத்துடன், பிடிபடுவதிலிருந்து தப்பித்த அதன் மனைவி, துரோகம் செய்துவிட்டதாகத் தன்னை நினைத்துவிடக்கூடாது என்றும் வருத்தப்பட்டது. போதிசத்வர் சாவிலிருந்து அதைக் காப்பாற்றினார்.

சங்கத்தில் ஒரு நாள் புத்தர் மிகவும் உருக்கமாக உபதேச உரையாற்றிக் கொண்டிருந்தார். உரையைக் கேட்க வந்திருந்த ஓர் இளைஞன் அதில் மனத்தைப் பறிகொடுத்துவிட்டான். முழுமையாகப் புத்துணர்ச்சி அடைந்ததைப்போல் அவன் உணர்ந்தான். தீட்சை பெற்று, சங்கத்திலும் சேர விரும்பினான். அந்த இடத்திலிருந்து உடனே விரைந்து வீட்டுக்குச் சென்று மனைவியிடம் நிகழ்ந்ததைச் சொல்லி, தான் சங்கத்தில் சேர விரும்புவதாகக் கூறினான். அவளுடைய அனுமதியையும் வேண்டினான். அவன் மனைவி அவன் மேல் அதிகமான அன்பு வைத்திருந்தாள்; அதனால் அவள் மிகவும் தயங்கினாள். எனினும், அவனைத் தடுக்க அவளுக்கு வழி ஏதும் தெரியவில்லை. அதனால் அவனுக்கு அனுமதி கொடுத்தாள்.

அவன் உடனே சங்கத்துக்குச் சென்று சேர்ந்தும்விட்டான். தியானத்தில் ஈடுபட்டு மனதைப் பண்படுத்தவும் தொடங்கினான். எனினும் அவனால் அடுத்த நிலையை அடைந்து தம்மத்தின் பலனை அடைய முடியவில்லை. அவனுடைய மனைவியால் இவன் இல்லாத நிலையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தான் தனிமையில் இருப்பதாகவும் கைவிடப்பட்டவளாகவும் உணர்ந்தாள். சந்நியாசி கோலத்தைத் துறந்து அவன் வீடு திரும்ப வேண்டும் என்று விரும்பினாள். எனவே உணர்வைத் தூண்டும் வகையில் உடையணிந்து, பழங்களையும் உணவுகளையும் எடுத்துக்கொண்டு அந்தப் பிக்குவைத் தேடி வந்தாள். துறவி நிச்சயமாக இதனால் மகிழ்ச்சியடைவார் என்று நினைத்தாள். வீட்டில் அவரில்லாமல் தான் படும் கஷ்டங்களைப் பகிர்ந்து கொண்டாள். அவரில்லாமல் ’எவ்வளவு துன்பப்படுகிறேன்’ என்றும் சொன்னாள்.

அவள் அங்கிருந்து வெளியேறிய பின்னர், துறவியால் சங்கத்தின் விஷயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. அவருடைய எண்ணங்கள் அலைமோதின. தன் மனைவி எப்படி இருக்கிறாளோ, என்ன செய்கிறாளோ, தன்னைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறாளோ, தானில்லாமல் அவளால் வாழ முடியுமா என்றெல்லாம் யோசித்தார். அவளை மீண்டும் தன்னால் எப்போது பார்க்க முடியும் என்று ஏங்கினார். இன்னும் ஒரு முறை அவளைத் தொட்டால் எப்படி இருக்கும்? என்ன நிகழும்? இப்படியான எண்ணங்கள் அனைத்தும் புனிதச் சிந்தனைகளுக்கும் வாழ்க்கைக்கும் தீங்கு விளைவிப்பவை; அவை அவர் பயணிக்க விரும்பிய பாதையிலிருந்து விலக்கி இழுத்துச் செல்பவை என்பதையும் அறிந்திருந்தார்.

அவரது ஆசையின் வலிமை, அவரது ஆன்மிக முதிர்ச்சியின்மையை வென்றுவிட்டது. பிக்கு, புத்தரைப் பார்த்து துறவற்றத்தை விட்டு விலக அனுமதி கேட்க விரும்பினார். அவ்வாறே சென்று அவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

புத்தர் அவரைப் பார்த்து ‘நான் கேள்விப்பட்டதும், இப்போது நீங்கள் என்னிடம் சொல்வதும் உண்மையா? பெண் உணர்வு உங்களை ஆக்கிரமித்துள்ளதா? உங்கள் மனம் ஏக்கத்தாலும், ஆசையாலும் வருத்தத்தாலும் நிரம்பியுள்ளதா?’

‘நீங்கள் சொல்வது உண்மைதான், ஆற்றல் பெற்றவரே.’

‘யார் அந்தப் பெண்?’

‘என்னுடைய முன்னாள் மனைவிதான் அய்யா. இனிமையானவள். அவளை என்னால் மறக்க முடியவில்லை. அவளை நான் இழக்க விரும்பவில்லை. துறவுக்குரிய இந்த ஆடைகளைக் களைந்துவிட்டு, அவளை நாடிச் செல்வதைத் தவிர்த்து எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை.’

அப்போது ஆசிரியர் அந்தத் துறவியைப் பார்த்து, ‘பிக்குவே, அந்தப் பெண்ணை நினைக்கவேண்டாம். அவளால் உங்களுக்குத் தீங்குதான் ஏற்படும். கடந்த பிறவியிலும் அவள் மூலமாகத்தான் உங்களுக்கு ஆபத்து உண்டானது. அப்போதும் நான்தான் உங்களைக் காப்பாற்றினேன்’ என்று கூறினார்.

அந்தக் கதையையும் விரிவாகக் கூறினார்.

0

அப்போது வாராணசியைப் பிரம்ம தத்தன் ஆண்டுகொண்டிருந்தான். போதிசத்வர் அவருடைய ராஜகுருவாக இருந்தார்.

அந்த நாட்களில் மீனவர்கள் சிலர் ஆற்றில் மீன் பிடிக்க வலை வீசினர். அப்போது, பெரிய மீனொன்று அதனுடைய மனைவியாகிய மீனுடன் காதல் உணர்வுடன் விளையாடிக் கொண்டே அந்தப் பக்கமாக நீந்தி வந்தது. வேகமாக நீந்தி வந்த அந்தப் பெண் மீன், வலையருகில் வந்து முகர்ந்து பார்ப்பதுபோல் உரசி, ஒரு சுற்று சுற்றிவிட்டு வலையில் மாட்டாமல் தப்பித்து ஓடியது. எனினும், அந்தப் பெரிய மீன் காதல் மனைவியின் மீதான மோகத்தால் கண்மூடித்தனமாக நீந்தி வந்துகொண்டிருந்தது; வலையைப் பார்க்காமல் அதற்குள் சென்று மாட்டிக்கொண்டது. மீனவர்கள் வலையில் மீன் மாட்டியதை உணர்ந்தவுடன், வலையை இழுத்து மீனை வெளியில் எடுத்தனர்; எனினும் அதை அவர்கள் உடனடியாகக் கொல்லவில்லை, அருகில் ஆற்றங்கரை மணலில் உயிருடன் வீசினர்.

‘நமது உணவுக்காக இந்த மீனை நெருப்பில் வாட்டி உண்ணலாம்’ என்று அவர்கள் பேசிக்கொண்டனர்; அதன்படி அவர்கள் தீ மூட்டவும், அதை வாட்டுவதற்குக் கொம்பு ஒன்றை வெட்டித் தயார் செய்யவும் தொடங்கினர். மணலில் துடித்துக் கொண்டிருந்த மீன், தனக்குள் வருந்திப் புலம்பியது: ‘என் உடலில் கொம்பைச் செருகுவதால் ஏற்படும் வலியோ நெருப்பில் வாட்டப்படுவதால் ஏற்படும் வேதனையோ என்னைத் துயரத்தில் ஆழ்த்தவில்லை. ஆனால், நான் வேறொருவருடன் சென்றுவிட்டேன் என்ற நம்பிக்கையில் என் மனைவி துன்பப்படாமல் இருக்கவேண்டும். அப்படி நினைத்துவிட்டால், அந்த எண்ணமே என்னை வேதனையில் ஆழ்த்தும்’ என்று புலம்பியபடியே இந்த வசனத்தையும் கூறியது:

நீரின் குளிர்ச்சியோ, நெருப்போ அல்ல,
வலையில் மாட்டிக் கொள்வதோ அல்ல
ஆனால், என் மனைவி
வேறொருத்தியுடன் மகிழ்வுடன் சென்றுவிட்டேன் என்று
என்னைக் குறித்து நினைப்பதுதான் வேதனை.

0

அப்போது போதிசத்வரான ராஜகுரு பணியாட்களுடன் ஆற்றில் குளிப்பதற்காக அங்கு வந்தார். அவருக்கு அனைத்து விலங்குகளின் மொழியும் புரியும். அந்த ஆண் மீனின் புலம்பலும் அவர் காதில் விழுந்தது.

அவர் மனதுக்குள் நினைத்துக்கொண்டார்: ‘இந்த மீன் மனைவியின் மீதான உணர்வுப்பெருக்கில் ஆட்பட்டு துயரம் கொண்டு புலம்புகிறது. இவ்வாறு ஆரோக்கியமற்ற மனநிலையில் அந்த மீன் இறந்தால், நரகத்தில் மோசமான சூழலில் மறுபிறப்பு எடுக்கும். அதிலிருந்து தப்பிக்க முடியாது. ஆகவே அந்த நிலையிலிருந்து இந்த மீனைக் காப்பாற்றுவேன்.’

அவர் மீனவர்களிடம் சென்று பேசினார். ‘குடிமக்களே, அரசனுக்குக் கறி சமைக்க நீங்கள் தினந்தோறும் மீன்கள் தர வேண்டாமா?’ என்று கேட்டார்.

‘ஐயா நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ராஜாவுக்கு இல்லாத மீனா? நீங்கள் விரும்பும் எந்த மீனையும் எடுத்துச் செல்லுங்கள்’ என்றார்கள் அவர்கள்.

‘இதோ தரையில் கிடக்கும் இந்த மீன் போதும். வேறு எதுவும் தேவையில்லை; இதை மட்டும் கொடுங்கள்.’

‘எடுத்துக்கொள்ளுங்கள் ஐயா.’

அந்த மீனைத் தன் இரு கைகளிலும் அள்ளி எடுத்துக்கொண்டு கரையில் அமர்ந்துகொண்டார் போதிசத்வர். ‘நண்பரே மீனே, நான் இன்று உன்னைப் பார்க்காமல் இருந்திருந்தால், மரணத்தைச் சந்தித்திருப்பாய். எதிர்காலத்தில் இப்படியான உணர்வுக்கு அடிமையாக ஆகாதீர்கள்.’

இவ்வாறான அறிவுரையுடன் போதிசத்துவர் மீனைத் தண்ணீரில் விட்டுவிட்டு நகரத்துக்குச் சென்றார்.

இந்தக் கதையைச் சொல்லிமுடித்த பின்னர், ததாகதர் யார் எவராக அவதாரம் செய்திருந்தனர் என்பதையும் எடுத்துரைத்தார்: ‘பிக்குவின் முன்னாள் மனைவி, பெண் மீனாகப் பிறந்திருந்தாள். மயக்கத்திலிருந்து மீண்ட பிக்கு, அந்த ஆண் மீன். நான் ராஜகுருவான போதிசத்வராக அவதாரம் எடுத்திருந்தேன்.’

இவ்வாறாக கௌதமரின் உபதேசமும் பாடமும் முடிந்தது. பேராசான் நன்னெறிகளையும் போதித்தார். அதன் பின்னர், மனைவியின் மயக்கத்திலிருந்து மீண்ட அந்த பிக்கு தம்மத்தின் முதல் நிலையை அடைந்தார்.

(தொடரும்)

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *