Skip to content
Home » புத்த ஜாதகக் கதைகள் #19 – வட்டக ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #19 – வட்டக ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 35வது கதை)

‘சத்திய வாக்கின் மகிமை’

மகத தேசத்தில் கௌதம புத்தர் பிக்குகளுடன் காட்டின் வழியாகப் பயணம் செய்துகொண்டிருந்தார்; வனத்தில் திடீரென்று காட்டுத் தீ ஏற்பட்டது. காடு முழுவதும் பரவத் தொடங்கியது. புத்தர் உடனடியாக, ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிற்கிறார். அனைவரையும் அந்த இடத்துக்கு வந்து நிற்கச் சொல்கிறார். காட்டுத் தீ அந்த இடத்தை நெருங்கவில்லை. பல அடி தூரத்தில் நின்றுவிடுகிறது. புத்தரின் ஆற்றல்தான் இதற்குக் காரணம் என்று சீடர்கள் கருதுகிறார்கள். கடந்த பிறவியில் தான் உதிர்த்த ஒரு சத்தியவாக்குதான் இதற்குக் காரணம் என்கிறார் புத்தர். இந்த அற்புதம் ஒரு யுகக் காலத்துக்கு நீடித்திருக்கும் என்கிறார். சீடர்களிடம் அந்தக் கதையையும் சொல்கிறார்.

0

புத்தர் அப்போது மகத தேசத்தில் இருக்கிறார். எப்போதும்போல் சீடர்களுடன் கிராமங்களுக்கு விஜயம் செய்கிறார். அப்போது பிக்ஷை சேகரிக்கும் செயலிலும் ஈடுபட்டிருந்தார். அவ்வாறு ஒரு குக்கிராமத்தில் காலைச் சுற்று பிக்ஷையைக் பெற்றுக்கொண்டு ஓய்விடத்துக்குத் திரும்பினார். உணவுண்டு சற்று நேர ஓய்வுக்குப் பின்னர், அவர் மீண்டும் வெளியில் சென்றார். சங்கத்தின் சகோதரர்களும் கூட்டமாக அவரைத் தொடர்ந்தனர்.

அந்தக் கிராமத்தையொட்டி நல்லதொரு வனம் இருந்தது. அதற்குள் புத்தர் சென்றார். அப்போது எதிர்பாராமல் பெரும் காட்டுத் தீ பிடித்தது. அவ்வாறு ஆண்டுக்கொரு முறை நடக்குமாம். தீ வேகமாகப் பரவி வனத்தை எரிக்கத் தொடங்கியது. பேராசானுக்கு முன்னும் பின்னும் சீடர்கள் பலர் அவரைப் பாதுகாப்பதுபோல் நின்றனர். தீ வேகமாக நெருங்கி வந்தது. எங்கும் தீயும் புகை மண்டலமும் சூழ்ந்தது.

புதிதாகச் சங்கத்தில் இணைந்திருந்த பிக்குகள் பதற்றத்தில் பயந்து அலறினர். இதைச் செய்யலாம், அதைச் செய்யலாம் என்று பேசத்தொடங்கினர். சிலரோ எதிர்த் தீயை உண்டாக்குவோம். அந்தக் காப்புத் தீயால் தாம் நிற்கும் இடத்தைக் காட்டுத் தீ நெருங்காது என்று கூறினர். அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினர். காய்ந்த சுள்ளிகளையும் மரக்கிளைகளையும் சேகரித்துக் குவித்து தீக்கடை கோலால் நெருப்புண்டாக்கிப் பற்ற வைத்தனர்.

பழைய பிக்குகள் அவர்களைப் பார்த்து ஏளனமாகக் கேட்டனர். ‘சகோதரர்களே நீங்கள் என்ன செய்கிறீர்கள்? வானத்தின் நடுவில் பிரகாசிக்கும் சந்திரனைப்போல், கிழக்கில் உதித்து ஆயிரமாயிரம் கதிர்க்கரங்களுடன் உலாவரும் சூரியன்போல், சமுத்திரமும் கண் முன் உயர்ந்து நிற்கும் மேரு மலையும்போல் நம்மருகில் இருக்கும் ததாகதரை நீங்கள் பார்க்கவில்லையா? அவருக்கு ஒப்பாக தேவர்களிலும் மனிதர்களிலும் சுட்டிக்காட்ட எவரும் இல்லை; அத்தகைய ஒருவருடன் நீங்கள் யாத்திரை செய்கிறீர்கள். அவரிடம் பேசலாம், யோசனை கேட்கலாம் என்று சிறிதும் நீங்கள் சிந்திக்கவில்லை. அறிவொளி பெற்ற புத்தர் இருப்பதைக் கவனியாமல் ‘நாம் தீயை உண்டாக்குவோம்’ என்று உரக்கச் சப்தமிடுகிறீர்கள். புத்தரின் ஆற்றல் உங்களுக்குத் தெரியாது. வாருங்கள், பேராசானிடம் செல்வோம்.’

இவ்வாறு, சங்கத்தின் சகோதரர்கள் அனைவரும் விவேகம் நிறைந்த ஆசானைச் சுற்றி நின்றனர். முன்னால் நடந்த புத்தர் ஓரிடத்தில் நின்றார், நெருப்பு இவர்களை நோக்கி நெருங்கி வந்தது. அவர்களை விழுங்கி பஸ்பமாக்கிவிடுவேன் என்பது போல் சப்தமாக விரைந்த வந்தது. அனைவரும் தீயில் கருகிப் போய்விடுவார்கள் போல் தோன்றியது. எனினும் புத்தர் நின்ற இடம் நோக்கிச் சூழ்ந்த தீ ஏறத்தாழ நூற்று முப்பது அடி தூரத்துக்கு முன்பாகவே மேலும் முன்னேறாமல் நின்றுவிட்டது. சிறிது நேரத்தில், நீருக்குள் தீப்பந்தத்தை நனைத்ததுபோல் அணைந்தே விட்டது. முந்நூற்றைம்பது அடி விட்டம்கொண்ட பெரும் வட்டத்துக்கு வெளியில்தான் எரிந்தது. சற்று நேரத்தில் சக்தியற்றுப் போனது.

கண்முன் நிகழ்ந்த மாயாஜாலத்தைப் பார்த்து வியந்துபோன சகோதரர்கள் இது பேராசானால் விளைந்த அற்புதம் என்று அவரைப் புகழ்ந்தனர்; ’ஓ! புத்தரின் விழுமியங்கள் எவ்வளவு மகத்தானவை! உணர்வும் அறிவும் இல்லாத இந்த நெருப்பும்கூட புத்தர் நின்ற இடத்தை நெருங்கி, அங்கிருந்த மரம் செடி கொடிகளை எரிக்க முடியவில்லை. நீரில் விழுந்த தீப்பந்தம் போல் அணைந்து போயிற்று. கௌதமரின் ஆற்றல் எவ்வளவு அற்புதமானது!’ என்று சொல்லி அவரை வணங்கினர்.

அவர்களது சொற்களைக் கேட்ட புத்தர், ‘சகோதரர்களே, இந்தத் தீ இந்த இடத்தை நெருங்காமல் சற்றுத் தள்ளியே அணைந்து போய்விட்டது. இந்த நெருப்பு அணைந்துபோனது என்னிடம் இப்போது இருக்கும் சக்தியால் நடக்கவில்லை. சென்ற பிறவியில் உச்சரித்த ‘சத்திய வாக்கால்’ அதன் செயல்திறனால் நிகழ்ந்தது. அந்த சத்தியத்தின் இருப்பு யுகம் முழுவதும் நீடித்திருக்கும் என்பதால் நிகழ்ந்தது. இந்த இடத்தில் இந்த யுகம் முழுவதும் எந்த நெருப்பும் பற்றி எரியாது’ என்று சொல்லியபடிபடி சற்று முன்னகர்ந்து மரங்கள் நின்றிருந்த இடம் ஒன்றைச் சுட்டிக்காட்டினார்.

அப்போது மூத்த பிக்குவான ஆனந்தர் அங்கி ஒன்றை நான்காக மடித்துத் தரையில், வசதியான இடத்தில் பேராசான் அமர்வதற்கு விரித்தார். கௌதமர் அந்த இருக்கையில் பத்மாசனமிட்டு அமர்ந்தார். வணங்கிய, சகோதரர்களும் அவரைச் சுற்றி வட்டமாக அமர்ந்தனர். அவரிடம், ‘எங்களுக்கு இப்போதைய நிகழ்வுகள் தாம் தெரியும் அய்யா; கடந்த பிறவியைப்பற்றி நாங்கள் அறியமாட்டோம். அந்த நிகழ்வுகள் குறித்து எங்களுக்கு விவரியுங்கள்’ என்று வேண்டிக் கொண்டனர். அவர்களது வேண்டுகோளின் பேரில், சென்ற பிறவியின் கதையைச் சொல்லத் தொடங்கினார். ‘அதோ அந்த மரத்தில்தான் நான் சென்ற பிறவியில் அவதரித்திருந்தேன்’.

0

முன்னொரு காலத்தில் மகத ராஜ்ஜியத்தின் இந்த வனத்தில் இதே இடத்தில், போதிசத்துவர் மரத்தின் மீதிருந்த ஒரு கூட்டில் காடைப் பறவையாக அவதரித்தார். முட்டையின் ஓட்டை உடைத்து வெளிவந்த அந்தக் காடைக்குஞ்சு பெரிய பந்து அளவுக்கு இருந்தது. தந்தையும் தாயும் அதைக் கூட்டில்வைத்து பத்திரமாகப் பார்த்துக் கொண்டன. வெளியில் செல்லும் அவை, இரையைத் தேடி தம்முடைய அலகுகளில் எடுத்து வந்து குஞ்சுக்கு ஊட்டின. அந்தக் குஞ்சுக்கு இரை தேடும் வேலையே இல்லை. அந்தக் காடைக்குஞ்சுக்குச் சிறகுகளை விரித்து காற்றில் பறக்கவோ கால்களை நகர்த்தி தரையில் நடக்கவோ இயலவில்லை.

அந்தப் பகுதியில் ஆண்டுதோறும் எதிர்பாராமல் காட்டுத் தீ ஏற்படும். வனமே அழிக்கப்படும். இந்த ஆண்டும், இப்போது அந்த வனத்தில் காட்டுத் தீ பற்றிக்கொண்டது. மிக விரைவாகப் பரவத் தொடங்கியது. பட படவென தீப்பிழம்புகள் பலத்த சப்தத்துடன் வீசிப் பரவின. மளமளவென மரங்கள் சாய்ந்தன; எரிந்து கருகின. விலங்குகளும் உயிரினங்களும் தப்பி ஓட முயன்றன. இயலாதவை நெருப்பில் மாட்டி மாண்டு போயின. மரங்களில் கூடுகட்டி வாழ்ந்திருந்த பறவைக் கூட்டங்கள், கூடுகளில் இருந்து வெளியேறி ‘கீச் கீச்’ சென்று மரண பயத்தில் சத்தமிட்டபடி பறந்தோடின.

போதிசத்துவரின் தந்தையும் தாயும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தன. தீயோ மரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. குஞ்சைத் தூக்கிக் கொண்டு அவற்றால் பறந்து செல்ல இயலாது. ஆகவே, மனத்தில் பெரும் வேதனையுடன், தமது குஞ்சைக் கூட்டிலேயே கைவிட்டுப் பறந்து சென்றன.

அங்கே, கூட்டில் தனியே விடப்பட்ட காடைக் குஞ்சு கழுத்தை உயர்த்திப் பார்த்தது. எங்கும் நெருப்பும் புகையும் சூழ்ந்து, மரங்கள் பற்றி எரியும் காட்சி. தப்பிக்க முடியாத அந்தக் காடைக் குஞ்சான போதிசத்துவர், தனக்குள் இப்படி நினைத்துக் கொண்டது: ‘சிறகுகளை விரித்துப் பறக்கும் சக்தி இருந்திருந்தால், பாதுகாப்பான இடத்துக்குச் செல்லலாம்; அல்லது, கால்களை நகர்த்தி நடக்க முடிந்திருந்தால், வேறு இடத்துக்கு நடந்து சென்று தப்பிக்கலாம். பெற்றோர்கள், தீயில் மாட்டி இறந்து போய்விடுவோம் என்ற பயத்தில், தம்மைக் காப்பாற்றிக் கொள்ளப் பறந்து சென்றுவிட்டனர். இந்த உலகில் தனித்து விடப்பட்டேன். பாதுகாக்கவோ, உதவி செய்யவோ ஆளில்லாமல் இருக்கிறேன். எனில், நான் இப்போது என்ன செய்வது?’

‘இந்த உலகில் நற்சிந்தனைக்கு ஒரு சக்தி உண்டு என்கிறார்கள். அதுபோல சத்தியத்தை நம்பினால் எதுவும் நடக்கும் (சத்தியமாக இவ்வாறு நடக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்ற மனவிருப்பம் உறுதியாக, ஒரு கட்டளையாக உச்சரிக்கப்படும்போது, துன்பத்தில் இருப்பவர்களுக்கு நன்மை பயக்கும் அற்புதங்களை அது செய்யும். பௌத்தத்தில், சத்தியத்தின் அடிப்படையிலான கட்டளை சத்தியத்தின் தார்மிக ஆற்றலுடன் தொடர்புடையது).

‘கடந்த பிறவிகளில் பரிபூரண நிலை எதுவென்று உணர்ந்ததன் மூலம், போதி மரத்தின் அடியில் அறிவொளியை அடைந்தவர்கள் பலர் உள்ளனர்; நற்சிந்தனை, அமைதி, விவேகம் ஆகியவற்றின் மூலமாக மறு பிறவியிலிருந்து விடுதலை பெற்றனர். அத்தகைய விடுதலை மூலம் எதையும் பகுத்து அறியும் தன்மையையும் பெற்றனர். அவர்கள் உண்மை, இரக்கம், கருணை, பொறுமை ஆகிய குணங்களைக் கொண்டனர்; அவர்களுடைய அன்பு அனைத்து உயிரினங்களையும் ஒரே மாதிரியாக அரவணைக்கிறது; மனிதர்கள் அவர்களை எங்கும் நிறைந்திருக்கும், எல்லாம் அறிந்த புத்தர்கள் என்கிறார்கள். அவர்கள் அவ்வாறு அடைந்த பண்புகளுக்கு ஓர் ஆற்றல் உள்ளது. இவற்றிலிருந்து நானும் ஒரு சத்தியத்தை உள்வாங்கிக் கொள்கிறேன்; இயற்கையில் நிலவும் ஒற்றைக் கொள்கையைப் பற்றிக்கொள்கிறேன். அனைத்தும் வாழ வேண்டும் என்பதில் நம்பிக்கைக் கொள்கிறேன்.

‘ஆகவே, கடந்தகால புத்தர்களையும், அவர்கள் பெற்ற ஆற்றல்களையும் நினைவில்கொண்டு, என்னுள் இருக்கும் உண்மையான நம்பிக்கையுடன் உயிர்களை வாழவைக்கும் அந்த இயற்கையின் கொள்கையை நிலைநிறுத்த விரும்புகிறேன்; சத்தியத்தின் மீதான நம்பிக்கையுடன், அதை மனத்தில் இருத்தி என்னையும் மற்ற பறவைகளையும் காப்பாற்றும் நோக்கில் இந்தத் தீப்பிழம்புகள் பின்வாங்கிச் செல்லவேண்டும் என்று கட்டளையிடுகிறேன்’.

இவ்வாறு கடந்தகாலத்து புத்தர்களை மனத்தில் இருத்தி போதிசத்துவர் என்ற காடைக் குஞ்சு கூறியது:

பறக்க முடியாத சிறகுகள்,
நடக்க முடியாத கால்கள்
பெற்றோர்கள் கைவிடப்பட்டேன்
இதோ இங்கே இருக்கிறேன்.
எல்லோரும் அஞ்சும் அக்னி தேவனே!
வணங்கி வேண்டிக்கொள்கிறேன்
ஊழிக்காலத்தின் ஜதாவேதனே! திரும்பு, திரும்பிச்செல்!

இவ்வாறு காடைக் குஞ்சு சொன்னதும், அக்னிதேவனான ஜதாவேதன் நூற்று முப்பது அடி தூரம் பின்னால் சென்றான். அவ்வாறு பின்வாங்கும்போது வனத்தில் எந்தப் பகுதிக்கும் தீ பரவவில்லை. தீப்பந்தம் நீரில் நனைக்கப்பட்டது போல், தீ அணைந்தது.

அந்த இடம் மட்டும் காட்டுத்தீயிலிருந்து விலக்கப்பட்டது.ஓர் யுகம் முழுவதும் அவ்வாறு நீடிக்கும் என்பதால், ‘யுக அற்புதங்களில்’ ஒன்றெனக் கூறப்பட்டது.

0

ததாகதர் இவ்வாறு முற்பிறவி நிகழ்வைச் சொல்லி முடித்தார். ‘இவ்வாறாகத்தான் அது நிகழ்ந்தது; எனவே, இந்த அற்புதம் என்னுடைய இப்பிறவியின் ஆற்றலால் நிகழ்ந்திருக்கவில்லை. காடைக் குஞ்சாகப் பிறந்திருந்தபோது நான் உதிர்த்த சத்திய வாக்கின் ஆற்றலால் நடந்தது. காட்டுத் தீ எப்போதும் இந்த இடத்தைத் தீண்டாமல் சுற்றியே செல்லும்’.

அதன்பின்னர் கௌதமர் பிறப்பின் தொடர்புகளைச் சுட்டிக் காட்டினார். ‘இப்போது என்னுடைய பெற்றோராக இருப்பவர்கள் நான் காடைக் குஞ்சாகப் பிறந்திருந்தபோதும் என் பெற்றோராக இருந்தனர். அந்தக் காடைக் குஞ்சு எனும் போதிசத்துவராக நான் பிறந்திருந்தேன்’ என்று சொல்லி முடித்தார்.

உபதேசமும் பாடமும் முடிந்தது. நன்னெறிகளை அவர் போதித்தார். முடிவில், அவரவர் பெற்ற அறிவொளியின் அடிப்படையில் பிக்குகள் சிலர் அடுத்த நிலைகளை அடைந்தனர். சிலர் அருக நிலையையும் அடைந்தனர்.

(தொடரும்)

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *