(தாராளமயமாக்கல் இந்தியாவை உலகின் மென்பொருள் தலைநகரமாக மாற்றியது. இந்தியாவின் வெற்றிகரமான மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் உருவான கதை இது. வேதிகா காந்த் என்பவர் ஓர் இணைய இதழில் (https://fiftytwo.in) எழுதிய நீண்ட கட்டுரையின் மொழியாக்கம். இந்தக் கட்டுரையைப் பரிந்துரைத்த மகேந்திரராஜன் சந்திரசேகரனுக்கும் கட்டுரையைப் படித்துப் பிழைகளைத் திருத்திய அபிநயா சம்பத்துக்கும் நன்றி).
0
1990 ஜனவரி மாதத்தில் ஒரு நாள் மதியம், பெங்களூர் ஜெயநகரில் இருந்த ஷாலினி உணவகத்தில் நான்கு பேர் மதிய உணவிற்காக அமர்ந்தார்கள். அவர்களுடைய சிறிய மென்பொருள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தைப் பூனேவில் இருந்து பெங்களூரின் ஜெயநகருக்கு சிறிது காலத்திற்கு முன்பு மாற்றி இருந்தார்கள். என்.எஸ். ராகவன், கே. தினேஷ், நந்தன் நீலகேனி, நாராயண மூர்த்தி. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஏழு நிறுவனர்களில் நால்வர் இவர்கள்.
அன்றைய காலைப்பொழுதை ஒரு முக்கியமான முடிவைக் குறித்து விவாதிக்கச் செலவிட்டு இருந்தார்கள். மிகப் பிரபலமான தொழில் குழுமம் ஒன்று அந்த நிறுவனர்களின் பங்குகளை $1 மில்லியன் டாலருக்கு (இரண்டு கோடி ரூபாய்) வாங்க விருப்பம் தெரிவித்திருந்தது. ஒரு வருடம் முன்புதான் அழிவின் விளிம்பைத் தொட்டு மீண்டிருந்தது இன்ஃபோசிஸ். கர்ட் சால்மன் அஸோசியேட்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்தோடு கூட்டாகத் தொழில் செய்யும் முயற்சி உடைந்திருந்தது. அதிலிருந்து மெல்ல மீண்டு இருந்தார்கள். அந்தப் பெரிய நிறுவனத்தின் விருப்பத்தை அப்படி எளிதில் புறம் தள்ளிவிட முடியாது.
இன்ஃபோசிஸ் ஒன்பது வருடங்கள் முன்பு துவங்கப்பட்டது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருந்த நிறுவனங்களுக்கு மென்பொருள் கட்டுமான ஒப்பந்தங்களை எடுத்து மென்பொருள் சேவைகளை வழங்கியது. [1]
அதற்கு முந்தைய பத்து வருடங்களில், குறுங்கணினிகளின் (மைக்ரோ கம்ப்யூட்ர்ஸ்) எழுச்சி மென்பொருளையும் அந்த மென்பொருளை இயக்கும் உபகரணங்களையும் தனியாகப் பிரிக்க உதவியது. அதன்மூலம் கணினித்துறை பெரிய மாற்றங்களைக் கண்டது. குறுங்கணினிகளுக்கு முன்பு இருந்த மெயின்ஃபிரேம் பெருங்கணினிகள் ஒரு பெரிய அறையை அடைத்தபடி இருக்கும். அவற்றை இயக்க ஒரு படையே தேவைப்படும். குறுங்கணினிகளால் மெயின்ஃபிரேம் பெருங்கணினிகளின் காலம் முடிவிற்கு வந்தது. அதன் விளைவால் நிறுவனங்கள் மலிவான கணினிகளை வாங்கி, தாங்களே தங்களுக்குத் தேவையான மென்பொருளை எழுதி, அந்தக் கணினிகளில் ஓட்ட முடிந்தது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் திட்டம், அந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் இருந்த அதே அளவு திறமையான ஆட்களை வைத்து மிகக் குறைந்த விலையில் மென்பொருளை எழுத வைக்கலாம் என்பது.
ஷாலினி உணவகத்தில் மதிய உணவு உண்டபடியே, அந்த நால்வரும் விவாதித்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தைத் துவங்குவதற்கு அது சரியான காலகட்டமோ, சரியான இடமோ இல்லை. நண்பர்களிடமும், உறவினர்களிடமும் வாங்கிய பத்தாயிரம் ரூபாயில் (அன்று ஆயிரம் டாலர்கள்) இன்ஃபோசிஸ் துவங்கப்பட்டது. எல்லா அளவுகோல்களின் படியும், துவங்கப்பட்ட இடத்திலிருந்து நிறுவனம் தொலைதூரத்தைக் கடந்து வந்திருந்தது. இன்ஃபோசிஸ்ஸின் பெரும்பாலான நிறுவனர்கள் அதனை விற்கும் யோசனையை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களைவிடப் பத்து வருடங்கள் மூத்தவரான நாராயண மூர்த்தி நிறுவனத்தை விற்க விரும்பவில்லை. இன்னும் சில காலம் தாக்குப் பிடித்துப் பார்க்கலாம் என்றார்.
‘சிக்கனமான ஒரு வாழ்வை வாழ்ந்து இருக்கிறோம். நம் பேராசைகளுக்கு அடிமை ஆகாமல், நம் செயல்களுக்கு எஜமானாக இருக்கிறோம்.’ நாற்பது வருடங்களுக்குப் பின்பு இந்தக் கோடைக் காலத்தில், மூர்த்தி ஒரு சூம் காணொளியில் என்னிடம் சொல்லிக் கொண்டு இருந்தார். ‘நம் குடும்பங்களுக்காக, இந்த நிறுவனத்தில் இருக்கும் இளைஞர்களுக்காக, இந்தத் துறைக்காக, சமூகத்திற்காக, உண்மையிலே நமக்காக, இந்த மராத்தான் ஓட்டத்தை நாம் ஓடித்தான் ஆக வேண்டும்.’ அடுத்த ஒரு மணிநேரத்தில், மற்ற அனைவரையும், தன் முடிவை ஏற்கச்செய்தார். இன்ஃபோசிஸ்ஸை வாங்க விரும்பிய தொழில் குழுமத்தின் விருப்பத்தை எல்லோரும் நிராகரித்தார்கள்.
பின்பு நினைத்துப் பார்த்தால் அது சரியான முடிவு. இந்தியாவின் பெரு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்த இன்ஃபோசிஸ்ஸின் சமீபத்திய சந்தை மதிப்பு $100 பில்லியன் டாலர்கள். அதன் வளர்ச்சியும் வெற்றியும் ஒரு வகையில் இந்திய மென்பொருள் துறையின் வளர்ச்சியையும், வெற்றியையும் ஒத்து இருந்தது. அவர்கள் ஷாலினியில் உணவு அருந்திய அந்த நாளில் (1990 ஆண்டு), மொத்த இந்திய மென்பொருள் துறையின் மதிப்பே $100 மில்லியன்தான். 1996ஆம் ஆண்டில் $1 பில்லியன்.[2]
மென்பொருள் துறை எதிர்காலத்தில் பிரம்மாண்டமாக வளரும் என்று அன்று எந்த உத்திரவாதமும் இல்லை. ‘1980களில், இந்தியா ஒரு தோல்வி அடைந்த நாடு. நாம் வரிசையின் கடைசியில் இருந்தோம்.’ தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பின் (NASSCOM) இணை-நிறுவனர்களில் ஒருவரான சௌரப் ஸ்ரீவத்ஸவா இவ்வாறு என்னிடம் சொன்னார்.[3]
‘நாம் இரண்டு சதவிகித இந்து வளர்ச்சி விகிதத்தில் இருந்தோம்.’ 1950-1980 காலகட்டத்தில் இந்தியாவின் ஆமை வேக வளர்ச்சி விகிதத்தைக் குறிக்கும் பதம் – ‘இரண்டு சதவிகித இந்த வளர்ச்சி விகிதம்’. ‘நாம் குப்பைகளை ஏற்றுமதி செய்து கொண்டு இருந்தோம். நமக்கு குரலே இல்லை. அந்தக் காலகட்டத்தில், முதல்தர அறிவுத் துறையின் உச்சத்தில் இருப்பதாக மேற்கு உலகு கருதிய ஒன்றை இந்தியா ஏற்றுமதி செய்ய முடியும் என்பதே ஒரு சவாலான விஷயம்’.
முப்பது வருடங்களுக்கு முன்பு, இந்தியப் பொருளாதாரத்தில் எதேச்சையாக நிகழ்ந்த திருப்பம், இந்திய மென்பொருள் துறையையே மாற்றி அமைத்தது எனப் பரவலாக அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். 1991 ஆம் ஆண்டு, ஏற்றுமதி இறக்குமதி பணப் பற்றாக்குறை பெருநெருக்கடியைச் சமாளிக்க, பி.வி.நரசிம்ம ராவின் அரசாங்கம், இந்தியப் பொருளாதாரத்தை தாராளமயமாக்கலை நோக்கித் திருப்பியது. 1960 களுக்குப் பிறகு உலகப் பொருளாதாரத்தில் மீண்டும் இந்தியா இணைந்தது.
1980களின் பிந்தைய ஆண்டுகளில் மெல்ல மாற்றங்கள் தென்படத் துவங்கின. சிறிய அளவில் மாற்றங்கள் நடந்தாலும், ஜூலை 1991 பெருந்திறப்பிற்கு அவை முக்கியப் பங்களிப்பு ஆற்றின. வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம், தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசு அதிகாரிகள், ஒரு புகழ்மிக்க அமெரிக்கத் தலைமை அதிகாரியின் இந்திய வருகை – இவை எல்லாம் இந்தியாவையும், அதன் மென்பொருள் துறையையும் சரியான பாதையில் செலுத்தின. இவை நிகழவில்லை என்றால் மென்பொருள் துறை பாதை மாறிப் போயிருக்கலாம். அல்லது மென்பொருள் துறை என்ற ஒன்றே இல்லாமலும் போயிருக்கலாம்.
1980களில் நடந்த இந்தச் சிறிய மாற்றங்களின் மூலம், இந்தியா தன் சோஷலிசக் கொள்கைகளில் இருந்து மெல்ல விலகத் துவங்கியது என்று அறிஞர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.[4]
இன்ஃபோசிஸ் மற்றும் அதன் நிறுவனர்களின் கதை, இந்தியா முதலாளித்துவ வளர்ச்சியை நோக்கி நகர்ந்த கதையின் ஒரு பகுதி. குறைந்தபட்சம் வணிகத்திற்கு எதிரான தடைகள் சற்றுக் குறைந்ததன் கதை. இன்ஃபோசிஸ்ஸின் கதை தொழில்முனைவோரின் வெற்றிக்கதை மட்டுமல்ல பொருளியல் தத்துவக் கொள்கை மற்றும் நடைமுறை அரசியல் சார்ந்த ஒரு பார்வையும் கூட. முதலில் மெதுவாக, பின்பு அதிவேகமாக மாறிய இந்தியாவின் கதையில் பின்னிப் பிணைந்தது இன்ஃபோசிஸ்ஸின் பயணம்.
திட்டமிட்ட பொருளாதாரத்தையும், தொழிற்கட்டமைப்பையும் உருவாக்க விரும்பிய சுதந்திர இந்தியா, கணினிகளை முதலில் பயன்படுத்திய நாடுகளில் ஒன்று. பி.சி. மகளலோபிஸ்[5]
மற்றும் ஹோமி பாபா[6]
போன்ற செல்வாக்கு உடைய அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கியவர்கள் நவீனக் கணினியைப் பயன்படுத்தினார்கள். IBM நிறுவனம் 1951 லேயே இந்தியாவில் கணினி விற்பனையைத் துவக்கி ஆய்வகங்கள், எண்ணெய் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு விற்றார்கள்.[7]
பிரிட்டிஷ் நிறுவனமான இன்டர்நேஷனல் கம்ப்யூட்டர்ஸ் லிமிட்டட் (ICL) IBM நிறுவனத்தின் போட்டியாளராக இருந்தது. சுதந்திரம் அடைந்தபோது, இந்தியக் கல்லூரிகளில் பயின்ற மொத்தப் பொறியாளர்களின் எண்ணிக்கை 2500. பெரும்பாலானவர்கள் கட்டுமானத் துறையில் தான் பயின்றார்கள்.[8]
பொதுத்துறை நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் பல பொறியியல் துறைகளில் தேர்ச்சி பெற்ற பொறியாளர் படை தேவைப்படுகிறார்கள் என்று உணர்ந்து இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (ஐஐடி) உருவாக்கும் எண்ணம் இந்திய அரசிற்குத் தோன்றியது. ஐஐடிக்கள் மிகவேகமாக அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யத் துவங்கின.
ஒன்பது அமெரிக்கப் பல்கலைக் கழகங்களின் கூட்டமைப்பின் உதவியுடன் ஐஐடி கான்பூர் துவங்கப்பட்டது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அளித்தவற்றில் அதிவேக ஐபிஎம் 620 கணினியும் இருந்தது. 1963இல் அந்தப் பெரும் கணினி நிறுவப்பட்டது. இந்திய மென்பொருளாளர்களில், ஒரு தலைமுறையே அந்தப் பெருங்கணினியில்தான் நிரல் எழுதிப் பழகினார்கள். அவர்களில் ஒருவர் நாகவர ராமாராவ் நாராயண மூர்த்தி.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறிய ஊரான சித்லகட்டாவில் பிறந்த நாராயண மூர்த்தி, மைசூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றார். மின் பொறியியலில் அவருக்கு விருப்பம் இருந்தது. ஐஐடி கான்பூரில் முதுகலையில் சேர்ந்த பிறகு, அவருக்குக் கணினித் துறையில் ஆர்வம் ஏற்பட்டது.
முதுகலையில் பட்டம் பெற்ற பிறகு அவர் மிக வித்தியாசமான ஒரு வேலையைத் தேர்வு செய்தார். அவருடைய கல்லூரி நண்பர்கள் அனைவருமே பெரிய நிறுவனங்களைத் தேர்வு செய்து இருந்தார்கள். இந்திய மேலாண்மைக் கழகம், அகமதாபாத் (ஐஐஎம்-ஏ) ஒரு புதிய கணினி ஆய்வகத்தை நிறுவினார்கள். அமெரிக்கப் பல்கலைக்கழகம் எம்ஐடியில் பட்டம் பெற்ற பேராசிரியர் ஜெ.ஜி.கிருஷ்ணய்யா தலைமையில் அந்த ஆய்வகம் இயங்கியது. அவர் HP 2100A TSS கணினியை இறக்குமதி செய்ய முடிவு செய்தார்.[9]
பலர் ஒரே நேரத்தில் பகிர்ந்து பயன்படுத்தக்கூடிய நேர-பகிர்வு கணினிகளை (Time Sharing System -TSS) இந்தியாவில் ஐஐஎம்-ஏ தான் முதலில் நிறுவியது. உலகிலேயே ஸ்டான்ஃபோர்ட் மற்றும் ஹார்வேர்ட் பல்கலைக் கழகங்களைத் தவிர TSS ஐ பயன்படுத்திய மூன்றாவது மேலாண்மை பல்கலைக்கழகம் ஐஐஎம்-ஏ.
இங்கு மூர்த்தி தலைமை நிரல் எழுத்தாளராக (Chief Systems Programmer) பணிக்குச் சேர்ந்தார். ‘கணக்கியல், உற்பத்தி முறைகள், சரக்கு மேலாண்மை போன்றவற்றைப் புத்திசாலியான இள மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகக் கற்றல் மென்பொருளை இங்கு உருவாக்கினேன். மேலாண்மை விளையாட்டு மென்பொருள்களையும் எழுதினேன்.’ என்றார் மூர்த்தி.
அகமதாபாத்தில் செய்த வேலையின் மூலம் மூர்த்திக்குப் புதிய வாய்ப்புகள் திறந்தன. 1970களின் துவக்கத்தில் பாரிஸ் நகரில் இருந்த ஒரு மென்பொருள் நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. ‘பிரான்ஸ் வளர்ந்த நாடு. அவர்கள் பயன்படுத்தக்கூடிய இயங்குதளத்தை (ஆபரேடிங் சிஸ்டம்) 18 பேர் கொண்ட அந்த நிறுவனம் உருவாக்கியது. அந்தச் சிறிய நிறுவனத்தில் கிடைத்த வேலை என்னை ஈர்த்தது.’ மூர்த்தி தொடர்ந்தார். ‘உலகின் துடிப்பான நகரமான பாரிஸ் வாழ்க்கையும் என்னை ஈர்த்தது. நல்ல சம்பளம். அப்போது நான் இளைஞன்!’ முனைவர் படிப்பிற்குப் பதிலாக மூர்த்தி பாரிஸ் வேலையைத் தேர்வு செய்தார்.
அந்த அனுபவம் அவரை முழுமையாக மாற்றியது. ‘பிரான்ஸ் செல்லும்வரை நான் விமானத்தில் பயணித்தது கிடையாது. பம்பாய்-லண்டன்-பாரிஸ் சிரியன் ஏர்லைன்ஸ் விமானம். 800 ரூபாய் கட்டணம்.’ மூர்த்தி தொடர்ந்தார். ‘விமானத்தில் இருந்து இறங்கி ஹீத்ரோ விமான நிலையத்தில் நுழைந்தபோது, அந்தக் கண்ணாடிக் கதவில் இருந்த போட்டோ எலக்ட்ரிக் சென்சார் மூலம் கதவுகள் தானே திறந்து மூடுகின்றன என்று சிறிது நேரம் கழித்தே புரிந்தது.’
உலகத்தை அறிந்துகொள்ள அது ஒரு வாய்ப்பை அளித்தது. வணிகத்தின் வழிமுறைகளையும், அரசியலையும் புரிந்து கொள்ளவும் உதவியது. ‘சுத்தமான நாடு. அழகான நகரம். எல்லா இடங்களிலும் வளம்.’ மூர்த்தி நினைவுகூர்ந்தார். பெரிய திட்டங்கள் மூலம் நாட்டைக் கட்டமைக்கும் நேருவின் கனவின் வழி வந்த இடதுசாரியாகவே அதுவரை தன்னை உணர்ந்தார். ‘1961இல் இருந்து எனக்குக் கல்விக்கான தேசிய உதவித்தொகை கிடைத்தது. எல்லா ஐஐடிகளிலும், எல்லாத் துறைகளிலும் அமெரிக்காவில் இருந்து இரண்டு அல்லது மூன்று பேராசிரியர்கள் வேலை செய்தார்கள். அவர்கள் எல்லோரும் இடதுசாரி-தாராளவாதிகள். நேருவையும், அவர் கொள்கையையும் மிகவும் போற்றினார்கள்.’
உலகைக் குறித்த நாராயண மூர்த்தியின் அந்தப் பார்வையை, பாரிஸின் அறிவுப்புலம் சவாலுக்கு அழைத்தது. சோர்போனிலும், மேற்குக் கரையில் இருக்கும் கஃபேக்களிலும் இந்தக் கருத்தியல் சார்ந்த விவாதங்களில் கவனிக்கவும், பங்குகொள்ளவும் மூர்த்திக்கு வாய்ப்பு கிடைத்தது. பாரிஸில் இருந்து கிளம்பும்போது, தான் எந்தப் பக்கம் என்பதைத் தேர்வு செய்து இருந்தார். இப்போது, இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அதிக மதிப்புடைய வேலைகளை உருவாக்க வேண்டும். அதை அரசாங்கம் உருவாக்க முடியாது. தனியார் துறையின் தொழில் முனைவோர் உருவாக்க வேண்டியது என்று உணர்ந்தார். இந்த உணர்வால், ‘தொழில்முனைவில் ஒரு பரிசோதனை’ செய்வதற்காக 1976இல் மீண்டும் இந்தியா வந்தார்.
1976இல் ‘ஸாஃப்ட்ரானிக்ஸ்’ என்ற மென்பொருள் நிறுவனத்தை மூர்த்தி துவங்கினார். ஆனால் அது சரியான நேரம் இல்லை: கணினிகள் வேலைகளை எடுத்துக்கொள்ளும் என்ற பயம் உச்சத்தில் இருந்தது. அடுத்த சில மாதங்களில் ஜனதா அரசாங்கம் ஐபிஎம் நிறுவனத்தை இந்தியாவை விட்டுத் துரத்தி விட்டது. மேலும், இந்தியாவில் கணினிப் பயன்பாடு மிகக் குறைந்த அளவே இருந்தது. ஸாஃப்ட்ரானிக்ஸிற்குப் போதுமான வாடிக்கையாளர்கள் இல்லை. ஒரு வருடத்தில் மூர்த்தி நிறுவனத்தை மூட வேண்டி வந்தது.[10]
ஆனால் அமெரிக்காவில் நிலைமை வேறாக இருந்தது. மிக வேகமாக வணிக தொழில்நுட்பம் மக்கள் மயமாகிக் கொண்டு இருந்தது. DEC மற்றும் டேட்டா ஜெனரல் நிறுவனங்கள் உருவாக்கிய விலை குறைந்த திறன் மிகுந்த குறுங்கணினிகள் அதற்கு உதவின. அமெரிக்க சந்தையில் பங்கெடுக்க இந்திய நிறுவனங்களுக்கு ஒரு சிறிய வாய்ப்பு இருந்தது. இந்திய அரசாங்கத்தின் ஒரு சட்டம் அந்தச் சிறிய வழியை உருவாக்கியது- ‘கணினிகளை இறக்குமதி செய்ய வேண்டுமென்றால், இறக்குமதியாளர் அந்தக் கணினியின் மதிப்பைப்போல 200 சதம் ஏற்றுமதி செய்ய உறுதியளிக்க வேண்டும்’. அதன் வாயிலாக சில முன்னோடி நிறுவனங்கள் உருவாகி இருந்தன – டாடா கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் (இப்போது டாடா கல்சண்டன்சி சர்வீஸ் – TCS), ஹிண்டிட்ரான் மற்றும் பட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ்.
பட்னி என்பது இப்போது மறக்கப்பட்ட ஒரு பெயராக இருந்தாலும், அது இந்திய மென்பொருள் வரலாற்றிலும், இன்ஃபோசிஸ் வரலாற்றிலும் ஒரு முக்கிய பங்கை ஆற்றியது. ரூர்கி பல்கலைக்கழகம் (இப்போது ஐஐடி ரூர்க்கி) மற்றும் எம்ஐடியில் பயின்ற நரேந்திர பட்னி அதன் நிறுவனர். இப்போது நாம் பரவலாகப் பயன்படுத்தும் நிறைய மின் கருவிகளைப் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் அப்போது உருவாக்கின. உதாரணத்திற்கு லீகல் எக்ஸ்சேஞ்ச் இன்ஃபர்மேஷன் சர்வீஸஸ் (Lexis) நிறுவனம் நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும், சட்டங்களையும் மின்-மயப்படுத்தி ஒரு மின்-தொகுப்பை உருவாக்கிக் கொண்டு இருந்தது.[11]
கணினியில் தகவல்களை உள்ளிடும் வேலையை மிகக் குறைந்த விலையில் இந்தியாவில் இருந்து செய்ய முடிந்தது. இந்தியாவில் இருந்த டைப்பிஸ்டுகள் தகவல்களைப் பேப்பர்-டேப்பில் பதிந்து அமெரிக்காவிற்கு அனுப்பினார்கள். அங்கே, அதைக் கணினியில் ஏற்றிக்கொள்வார்கள். இந்த வேலை பெருவளர்ச்சி அடையவே, இந்தியாவில் இருந்து நேரடியாகவே கணினியில் பதித்துக் கொள்வது அதிக லாபம் தரும் என்ற முடிவிற்கு பட்னி வந்திருந்தார்.
1970இல் குறுங்கணினிகளின் உற்பத்தியாளர் டேட்டா ஜெனரலுடன் (DG) ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். கணினிகளை வாங்குவது மட்டுமல்ல, டேட்டா ஜெனரலின் இந்திய விற்பனையாளர் ஆகவும் பட்னி மாறியது. 200% லாபம் சட்டத்திற்கு உடன்படுவதற்காக, DGயின் மென்பொருள் எழுதும் வேலையையும் பட்னி ஏற்றுக்கொண்டது.
இந்தியாவில் தன் கிளையை நிறுவுவதற்காக பட்னி, நாராயண மூர்த்தியை வேலைக்குச் சேர்த்துக்கொண்டார். ஸாப்டிரானிக்ஸில் ஏற்கெனவே தன் கையைச் சுட்டுக் கொண்டிருந்த மூர்த்திக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. மென்பொருள் துறைதான் தன்னுடையது என்று ஏற்கெனவே மூர்த்தி முடிவு செய்து இருந்தார். ஆனால் சர்வதேச மென்பொருள் சந்தை குறித்து மேலும் தெரிந்துகொள்ளவேண்டும் என்றும் அவருக்குத் தோன்றியது. ‘ஏற்றுமதிக்கான சந்தை இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். அமெரிக்காவில் கணினியின் பயன்பாடு பெரிய அளவில் அதிகரிக்கும், மென்பொருள் பயன்பாடும் அதிகரிக்கும் என்று உறுதியாகத் தோன்றியது.’ என்றவர், 2019 ஹார்வேர்ட் மேலாண்மை கல்விக்கூடத்தின் பேராசிரியர் ஜோ ஃபுல்லரிடம் மூர்த்தி சொன்னார். ‘இந்தியாவில், வேலை தேவைப்படும் பொறியியல் படித்த இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிற்கும், பெரிய அளவில் டாலர் பற்றாக்குறை இருக்கிறது.’[12]
பட்னியில், மூர்த்தி மென்பொருள் எழுதுவதைக் காட்டிலும் பலமடங்கு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். டேட்டா ஜெனரலின் கணினிகளை இந்திய நுகர்வோருக்கு விற்கும் பொறுப்பையும், டேட்டா செண்டரின் மேற்பார்வையும் ஏற்றுக் கொண்டார். பொறுப்புகள் அதிகரிக்கவே, தனக்கு உதவுவதற்கு ஒரு மென்பொருள் குழுவையும் உருவாக்கிக் கொண்டார். நந்தன் நீலகேனி – மின்துறைப் பொறியாளர் ஐஐடி-பாம்பே; எஸ்.கோபாலகிருஷ்ணன் -ஐஐடி-மெட்ராஸில் கணினி முதுகலை; எஸ்.டி.ஷிபுலால், கேரளா பல்கலையில் இயற்பியலில் முதுகலை; கெ.தினேஷ் – பெங்களூர் பல்கலையில் கணிதத்தில் முதுகலை; என்.எஸ்.ராகவன், ஆந்திரா பல்கலை பட்டதாரி, அஷோக் அரோரா – ஐஐடி-பாம்பே.
1979இல் இந்திய மென்பொருள் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்றை பட்னி வென்றது – டேட்டா பேசிக்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திடம் செய்துகொண்ட $500,000 ஒப்பந்தம். துணி உற்பத்தியாளர்களுக்கான மென்பொருளை (CAMP) உருவாக்கும் ஒப்பந்தம் அது. இந்த ஒப்பந்தம் தான் ‘அவுட்சோர்சிங் துறை’ என்று நாம் இப்போது சொல்வதின் துவக்கம். அதுவரை குறுங்கணினி தயாரிக்கும் சில நிறுவனங்களுக்காகக் குறுங்கணினியின் மென்பொருளை உருவாக்கினார்கள்.
அதன்பின்பு குறுங்கணினியைப் பயன்படுத்தப் போகும் எண்ணற்ற நிறுவனங்களுக்கான மென்பொருளை அமெரிக்க மென்பொருள் நிறுவனங்களுடன் கூட்டாகச் சேர்ந்து ஒப்பந்த முறையில் எழுதித் தந்தார்கள். வெவ்வேறு துறைகளின் தேவைகளுக்கு ஏற்ப மென்பொருளை மாற்றி அமைத்தார்கள். [உதாரணம்: சரக்கு மேலாண்மைக்கான மென்பொருளை அமெரிக்க நிறுவனங்கள் உருவாக்கும். இந்திய நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட கார் உற்பத்தியாளருக்கோ, பல்பொருள் அங்காடிக்காகவோ அந்த சரக்கு மேலாண்மை மென்பொருளை மாற்றியமைக்கும். வேறு வகையில் சொல்ல வேண்டுமென்றால், அமெரிக்க நிறுவனம் பாலிஸ்டர் துணி உற்பத்தி செய்யும். இந்திய நிறுவனங்கள் அந்தத் துணியில் இருந்து ஆளுக்கு ஏற்றார்போல சட்டை தைத்துத் தந்தார்கள்.]
டேட்டா பேசிக்ஸ் ஒப்பந்தம் இந்தியாவைப் பெரிய அளவில் அமெரிக்க மென்பொருள் ஒப்பந்ததாரர்களிடம் கொண்டு சேர்த்தது. இதன் மூலம் உலகின் மறுபாதியில் இருக்கும் மென்பொருள் திறனைப்பற்றித் தெரிந்து கொண்டார்கள்.
அந்த ஒப்பந்தத்தின் வெற்றி, பட்னியின் மென்பொருள் பொறியாளர்களின் தன்னம்பிக்கையைப் பல மடங்கு அதிகரித்தது. துணிச்சலான முடிவுகளுக்குத் தூண்டியது. 1981இல் மூர்த்தியும் அவருடைய அணியும் பட்னியில் இருந்து விலகி சொந்தமாக நிறுவனம் துவங்கினார்கள். அதுதான் இன்ஃபோசிஸ்.
இந்தப் புதிய நிறுவனம் ஏற்கெனவே இருக்கும் ஒரு நிறுவனம் தன்னிலிருந்து பணம் தந்து பிரித்து அனுப்பிய நிறுவனம் இல்லை. பெரிய குடும்ப நிறுவனங்களின் மென்பொருள் நிறுவனமும் இல்லை (விப்ரோ, டி.சி.எஸ்); அமெரிக்காவில் இருந்த இந்தியர்கள் துவங்கியதும் இல்லை (பட்னியைப் போல). 1980ல் தொழில் துவங்குதல் என்பது இந்தப் பொறியாளர்களுக்கு ஒரு சவாலான தேர்வு. அவர்கள் மதிப்புமிக்கக் கல்லூரிகளில் பட்டம் பெற்று இருந்தார்கள். ஆனால் வணிகக் குடும்பப் பின்புலம் இல்லை. இந்தியாவில் பெரிய கனவுடன் நிறுவனங்கள் துவக்க வேண்டும் என்றால் அரசு அதிகார வர்க்கத்துடனும், சட்டத்தின் தடைகளையும் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும்.
‘அப்போது, தொலைபேசி இணைப்புப் பெறுவதற்கு ஆண்டுகள் ஆகும். வங்கிகளுக்கு மென்பொருள் புரியவில்லை. அவர்கள் தரும் கடனிற்கு அவர்கள் தொட்டு உணரக்கூடிய ஒரு பொருளை அடமானமாகக் கேட்டார்கள். ஒரு கணினியை இறக்குமதி செய்வதற்கு 20-30 முறை புது தில்லிக்குப் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.’ என்றார் மூர்த்தி.
பெரிய அளவில் வெளிநாட்டு நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டிருக்கும் இந்திய நிறுவனங்களுக்கு ஒரு சவால் இருந்தது. ‘நீங்கள் வெளிநாட்டில் ஒரு நாளிற்கு $8 மட்டுமே செலவிட முடிவும் என்ற கட்டுப்பாடு அப்போதுதான் தளர்த்தப்படுகிறது’ என்கிறார் NASSCOM ஶ்ரீவத்சவா. ‘அந்நியச் செலாவணியை மாற்றும் வசதி அப்போது இல்லை. நம் கையிருப்பில் எப்போதுமே அடுத்த சில மாதங்களுக்கான டாலர்கள் மட்டுமே இருந்தது.’ ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்திற்கும் மத்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெற வேண்டியிருந்தது.
இன்ஃபோசிஸ் தன் தொழிலை ஒரு முக்கிய ஒப்பந்தத்தை வென்றதன் மூலம் துவக்கியது. ஆம்! பட்னியின் மிக முக்கியமான ஒப்பந்ததாரர்: டேட்டா பேசிக்ஸ். பட்னி கம்ப்யூட்டர்ஸுடனான அவர்களின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தவுடன், இன்ஃபோசிஸ் டேட்டா பேசிக்ஸுடன் ஆறு வருட புதிய ஒப்பந்தத்தை போட்டுக்கொண்டது.[13]
ஒரு சின்ன சிக்கல் என்னவென்றால், இன்ஃபோசிஸ்ஸிடம் கணினியை வாங்குவதற்கும் இறக்குமதி செய்வதற்கும் பணம் இல்லை.[14]
அதனால் இன்ஃபோசிஸ் ஒரு வழியைக் கையாண்டது. மற்ற எல்லா இந்திய மென்பொருள் நிறுவனங்களும் பின்பு அந்த வழியைப் பின்பற்றின: இன்ஃபோசிஸ் பொறியாளர்கள் அமெரிக்காவிற்கு ‘ஆன் சைட்’ டில் வேலை செய்யச் சென்றார்கள். ‘பாடி ஷாப்பிங்’ – (உடல் விற்பனை) என்பது பின்பு ஒரு மட்டமான சொல்லாக மாறியது.’ ஶ்ரீவத்சவா சொன்னார், ‘ஆனால், அந்தக் காலத்தில் மென்பொருள் ஏற்றுமதியாளர்களால் அதை மட்டும்தான் செய்ய முடிந்தது. நாங்கள் வாடிக்கையாளர்களிடம் சொல்வோம்: இதுதான் எங்கள் மென்பொருளாளரின் பயோடேட்டா. நீங்கள் தொலைபேசியில் இண்டர்வியூ செய்துகொள்ளலாம். தேர்வடைந்தால், நாங்கள் விமானக் கட்டணத்தையும், இந்தியச் சம்பளத்தையும் தருகிறோம். அங்குள்ள செலவுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.’
அந்த நாட்களில் மென்பொருளாளரின் இந்திய சம்பளம் மாதத்திற்கு ₹2000-3000 என்று ஶ்ரீவத்சவா சொன்னார். அமெரிக்காவில் வீடு, உணவு உள்ளிட்ட செலவு மாதத்திற்கு தோராயமாக $1000. ஒப்பந்த நிறுவனங்களுக்கு ஒன்றோ அல்லது இரண்டோ மாதங்கள் கழித்து கட்டணம் வசூலிப்பதற்குப் பதில், முன்தொகையை வாங்கிக் கொண்டார்கள் (சலுகை விலையில் சேவையைத் தருவதற்காக). ‘அப்படித்தான் அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து எங்கள் தொழிலை நடத்துவதற்காகப் பணம் வாங்கினோம்’ என்றார் ஶ்ரீவத்சவா.
இன்ஃபோசிஸ் டேட்டா பேசிக்ஸுடன் ஆறு வருட ஒப்பந்தம் போட்டிருந்தது. CAMP மென்பொருளை அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் துணி மற்றும் ஷூ தயாரிப்பு நிறுவனங்களில், அவர்களுக்கு ஏற்றாற்போல் மாற்றி, பராமரிப்பு செய்வதற்கான ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் விரிவும் அதில் நாங்கள் செய்த வேலையும் அமெரிக்காவில் மற்றத் துறைகளில் எங்களுக்குக் கிடைத்த நுழைவுச்சீட்டு.
அட்லாண்டா நகரில் உள்ள கர்ட் சால்மன் அசோசியேட்ஸ் நிறுவனத்துடன் இன்ஃபோசிஸ் ஒரு கூட்டு ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். டிஜிட்டல் எக்யூப்மெண்ட் கார்ப்பரேஷன் மற்றும் ரீபக் பிரான்ஸ் நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர்களாக ஆனார்கள். 1987இல், அமெரிக்காவின் இரு கரையிலும் கிளைகளைத் துவங்கி, மேலும் வாடிக்கையாளர்களைப் பெறுவதற்காகத் தீவிரமாக முயன்றார்கள்.
1989இல், ஜாக் வெல்ச் – ஜெனரல் எலக்ட்ரிக் (GE) நிறுவனத்தின் புகழ்பெற்ற தலைமை செயல் அலுவலர் (CEO) இந்தியாவிற்கு வந்தார். அவருடைய நோக்கம் இந்தியாவிற்குத் தன் நிறுவனத்தின் விமான எஞ்சின்களை விற்பது. ஆனால் அவரிடம், அவருடைய நிறுவனத்தின் மென்பொருட்களை இந்தியாவில் இருந்து குறைவான விலையில் உருவாக்கலாமே என்று வணிக யோசனையை இருவர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பிரதமர் ராஜிவ் காந்தியின் தொழில்நுட்ப ஆலோசகர்கள் சாம் பிட்ரோடா மற்றும் ஜெய்ராம் ரமேஷ்.
‘வெல்ச்சின் இந்தியப் பயணம், இந்திய மென்பொருள் துறையின் ஒரு திருப்புமுனை’ என்று நீலகேனி விவரித்தார். ‘இந்திய மூளையின் செயல்திறனைக் கண்டுகொண்ட முதல் அமெரிக்கத் தலைமைச் செயல் அலுவலர் அவர்.’ 1989இல் இருந்து 1994 வரை இன்போசிஸ் வளர பெரிதும் காரணம் GE. அந்த அனுபவம் நிறையக் கற்றுக் கொடுத்தது. தன் ஆட்டத்தின் உச்சத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றியது இன்ஃபோசிஸ்ஸை தொலைநோக்கில் சிந்திக்க வைத்தது.
இன்ஃபோசிஸ்ஸும், இந்திய மென்பொருள் துறையும் பதின்பருவத்திலிருந்து முதிர்ந்து கொண்டிருந்தன. அதே காலத்தில் உலகளவில் நடந்த சில பெரிய மாற்றங்கள் இந்தியாவையும் மாற்றியது. இந்தியப் பொருளியல் சூழல் 1991இல் ஒரு பெரிய மாற்றத்தை அடைந்தது. ஆனால் 1980களில் நடந்த நிறையக் கொள்கை மாற்றங்கள்தான் இந்தப் பெரிய மாற்றத்திற்கு வழிவகுத்தது. மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்த இந்திரா காந்தி இந்த மாற்றங்களைத் துவக்கினார். இந்தியாவில் எப்போதும் உள்ள வழக்கம்போல பொருளாதாரத்தை அரசியல் நிர்ணயித்தது.
அரசியல் ஆய்வாளர் அதுல் கோலி, ‘அரசியல் ரீதியான அணிதிரட்டலுக்கு இரண்டு வெவ்வேறு சமன்பாடுகள் இருந்தன. மதச்சார்பின்மையும் சோசியலிசமும், இந்துப் பெரும்பான்மைவாதமும் முதலாளித்துவமும்’[15]
என்றார்.
ஜனதா கட்சியின் சவாலைச் சமாளிப்பதற்காக, இந்திரா காந்தி முதல் சமன்பாட்டைக் கைவிட்டு இரண்டாவது சமன்பாட்டை கைக்கொண்டார்.
வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படத் துவங்கியது. 1970களில் இந்தியாவின் சோவியத் யூனியன் சாய்வு, இந்திரா காந்திக்கும் அமெரிக்க அதிபர் நிக்சனுக்கும் நல்லுறவு இல்லாததால், மேலும் தீவிரமாகியது. 1971இல் அமெரிக்கா, பாகிஸ்தான் பக்கம் நின்றதும் உதவவில்லை. ஆனால் 1980களில் நிலைமை மாறி இருந்தது. சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து இருந்தது. அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானிற்கும் இருந்த நல்லுறவு தளர்ந்து இருந்தது. மேலும், இந்திரா காந்தி அமெரிக்க அதிபர் ரீகனுடன் நல்ல உறவைப் பேணினார். இரண்டு நாடுகளுக்கும் இடையே இருந்த உறவின் தொனி மாறியது, குறிப்பாக தொழில்நுட்பத்தைப் பொறுத்த வரையில்.
1984இல் இந்திராவின் படுகொலைக்குப் பின்பு, பொறுப்பு ஏற்றுக்கொண்ட அவர் மகன் ராஜிவ் காந்தி தொழில்நுட்பத்தைப் பரவலாக்க மேலும் முயற்சிகளை மேற்கொண்டார். 1982 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஏற்கெனவே வண்ணத் தொலைக்காட்சிகளும், கணினி மயமாக்கப்பட்ட டிக்கெட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டன. ராஜிவ் பிரதமரான பின்பு, அரசாங்க அலுவலகங்களில் கணினிகள் நிறுவப்பட்டன. ‘நிறைய அரசு அதிகாரிகள், நிரல் எழுதுவதையோ, கணினியைப் பயன்படுத்தக் கற்று கொள்வதையோ ஒரு தொந்தரவாகப் பார்த்தார்கள். ஆனால் ஓர் அடையாளமாக திடீரென்று எல்லோருடைய மேசைமீதும் கணினி இருந்தது.’ என்று கெ.ராய் பால் என்னிடம் சொன்னார். ராய் பால், முன்னாள் IAS அதிகாரி. மின்னணுத்துறையின் இணைச்செயலராக 1980களில் இருந்தார்.
தகவல் தொழில்நுட்பத் துறையின் வெற்றிக்கு அது அரசு அதிகாரிகளின் பார்வைக்கு வெளியே இருந்ததுதான் காரணம் என்று பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அது முழு உண்மையில்லை. ‘தகவல் தொழில்நுட்பத்துறையின் வெற்றியில் அரசாங்கத்தின் பங்கு எதுவும் இல்லை என்று யாராவது சொன்னார்கள் என்றால், அது முழுதும் உண்மை இல்லை.’ என்கிறார் ஶ்ரீவத்சவா. ‘சில அருமையான அதிகாரிகள், இந்தத் துறையின் எதிர்கால சாத்திய கூறுகள் என்ன என்பதைக் கண்டு கொண்டார்கள். அவர்களின் எல்லைக்கு வெளியே சென்று, தனிப்பட்ட முறையில் ரிஸ்க் எடுத்து எங்களுக்கு உதவினார்கள்.’
எங்கள் உரையாடல்களில் ஓர் அதிகாரியின் பெயர் தொடர்ந்து உச்சரிக்கப்படுகிறது. நாகராஜன் விட்டல் – திருவனந்தபுரத்தில் பிறந்து, தமிழகத்தில் வளர்ந்த மராத்தியர். குஜராத்தில் IAS அதிகாரியாகப் பணிபுரிந்தவர். பின்பு மின்னணுத்துறையின் செயலராக இருந்தவர். தன் ஆலோசகர்களுடன் வேலை செய்து, அரசாங்கத்தின் உள்ளிருந்து மாற்றங்களைக் கொண்டு வந்தவர். ‘எங்கள் தொழிற்துறையைப் பொறுத்தவரையில் அவர் ஒரு பெரும் நாயகன்.’ ஶ்ரீவத்சவா சொன்னார். ‘மூர்த்தி என்னிடம் விட்டலைப்போல தொழிற்துறையின் நலன்விரும்பிய இன்னோரு அரசு அதிகாரியைப் பார்த்ததில்லை’ என்றார்.
‘மின்னணுத்துறையின் செயலராகப் பொறுப்பு ஏற்குமாறு என்னிடம் சொன்ன கேபினட் செகரட்டரி, மென்பொருள் துறை, இந்தியப் பொருளியலில் ஒரு புதிய வளரும் துறை என அருண் நேரு நினைக்கிறார் என்றார்.’ 83 வயதான விட்டல் என்னிடம் பேசியபோது – ராஜிவ் காந்தியின் ஆலோசகரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான அருண் நேருவை நினைவுகூர்ந்தார். தொழில்நுட்பத்தில் ஆர்வமிருந்த விட்டலுக்கு அது போதுமான சிக்னலைத் தந்தது.
1980களின் இறுதியில், தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனங்கள் ஆட்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்குப் பதில் தொலைவில் இருந்தே (இந்தியாவிலிருந்தே) சேவை வழங்கும் முறைக்கு மாற விரும்பின. நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துவதுதான் நோக்கம். அதிநவீனத் தொலைத்தொடர்புக் கருவிகளும், நெட்வொர்க்கும் மிக அதிக விலையில் இருந்தது. அவற்றை வாங்கி, நிறுவி, பராமரிப்பதும் மிகக் கடினமாக இருந்தது. அதிவிரைவான தொலைத்தொடர்பு அலைவரிசைக்கு எர்த் ஸ்டேஷன் (earth station) ஒன்றை நிறுவ வேண்டிய தேவை எழுந்தது. அதற்குண்டான செலவை எந்த இந்திய நிறுவனத்தாலும் அப்போது தரமுடியவில்லை.
‘அப்போது, VSNL செயற்கைக்கோள் தொடர்புகளைக் கட்டுப்படுத்தியது. ‘எதற்காக உங்களுக்கு இவ்வளவு அலைக்கற்றைத் தேவைப்படுகிறது? எதற்காக பெரிய ஆட்களைப்போல நடந்து கொள்கிறீர்கள்?’ என்று கேள்வி கேட்பார்கள்’ டி.வி.மோகன்தாஸ் பாய், (இன்ஃபோசிஸின் முன்னாள் தலைமை நிதி அலுவலர்) சொன்னார்: ‘அப்போது என்ன முறைமை என்றால், VSNL இடம் பேண்ட்வித் கேட்டு விண்ணப்பிப்போம். அவர்கள் எப்போது கிடைக்கும் என்று சொல்ல மாட்டார்கள், அதன் விலையையும் சொல்ல மாட்டார்கள்.’ ஶ்ரீவத்சவா சொன்னார், ‘எந்த வாடிக்கையாளர் இந்தப் பதிலைக் கேட்டு ஆர்டர் தருவார்?’
ஓர் அமெரிக்க நிறுவனம் இந்தப் பிரச்னையைத் தீர்த்து வழிகாட்டியது. 1985இல், டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் ஒரு தனிப்பட்ட செயற்கைக்கோள் தொடர்பை நிறுவி தன்னுடைய பெங்களூர் மென்பொருள் அலுவலகத்தையும், அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இருந்த அலுவலகத்தையும் இணைத்தது. ‘டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸில் வேலை செய்த மோகன் ராவ் என்பவர், உண்மையிலே ஒரு பெரிய நம்பிக்கையின் அடிப்படையில், இந்தியாவின் முதல் எர்த் ஸ்டேஷனை நிறுவினார்.’ நீலகேனி சொன்னார். ‘மில்லர் ரோட்டில் இருந்த சோனா டவர்ஸ் என்ற கட்டடத்தில் அது நிறுவப்பட்டது. அவர்களின் மென்பொருள் துறை எஞ்சினியர்கள் பெங்களூரில் அமர்ந்தபடி, டல்லாஸிலும், ஹூஸ்டனிலும் இருந்த அலுவலகங்களுடன் செயற்கைக்கோள் வழியாகத் தொடர்பு ஏற்படுத்தி மென்பொருளை எழுதிக் கொண்டிருந்தார்கள்.’[16]
டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் ஒரு வழிமுறையை இந்திய மென்பொருள் துறைக்குக் காட்டியது. அரசு நிர்வகிக்கக்கூடிய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்கும் முயற்சிகளை விட்டலின் கீழ் இருந்த அரசு மின்னணுத்துறை மேற்கொண்டது. அவை தன்னாட்சி அதிகாரத்துடன், அரசின் மேற்பார்வையில் இயங்கும். அலைக்கற்றை பிரச்னையைத் தீர்ப்பதற்காக எல்லா நிறுவனங்களின் அலைக்கற்றைத் தேவைகளையும் மின்னணுத்துறையே ஒருங்கிணைத்து, VSNLக்கு முன்தொகை தந்து, பூங்காக்களில் எர்த் ஸ்டேஷன்களை நிறுவி, அதிவேகத் தகவல் தொடர்பை உறுதி செய்யும்.
இந்தக் காலகட்டத்தில்தான் மென்பொருள் துறையும் அரசிடம் வரி சலுகைகள் உள்ளிட்ட பொருளியல் சலுகைகளை எதிர்பார்த்து லாபி செய்தது. விட்டல் தன் சகாக்களிடம் சலுகைகள் தரச் சொல்லி அழுத்தம் தந்தார். ஆகஸ்ட் 1990 நடந்த கூட்டத்தில், அரசின் நிதித்துறைச் செயலர் பிம்லால் ஜலன் மென்பொருள் துறைக்கு ஓர் இலக்கு வைத்தார். ‘அடுத்த ஆண்டு $400 மில்லியன் ஏற்றுமதி செய்வீர்களா?’ என்று கேள்வி எழுப்பினார். அந்த வருட ஏற்றுமதியைவிட கிட்டத்தட்ட அது நான்கு மடங்கு. விட்டல் ஜலானிடம் ‘இலக்கை அடைவோம்’ என்றார். ‘நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். கூட்டத்தில் இருந்து வெளியே வந்தபின், விட்டல் என்ன செய்துவிட்டீர்கள்? என்று கேட்டேன்.’ என்று ராய் பால் சொன்னார்.
NASSCOM இல் உறுப்பினராக இருந்த மென்பொருள் நிறுவனங்களுக்குத் தான் ஒப்புக்கொண்ட இலக்கை விட்டல் பகிர்ந்தபோது, அவர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். ‘ஆனால் அவர்களுக்கு நான் அக்பர், பீர்பால் மற்றும் பறக்கும் குதிரை கதையை நினைவுபடுத்தினேன்.’ என்றார் விட்டல். ‘அக்பர், பீர்பால்மீது கோபத்தில் இருந்தார். பீர்பால் ஒரு பறக்கும் குதிரையைக் கண்டுபிடித்தால் மட்டுமே பீர்பாலின் தலை தப்பும் என்று எச்சரித்தார். பீர்பால் ஏற்றுக்கொண்டார். ஏன் ஒப்புக்கொண்டார்? ‘மறுநாள் என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்!’ என்றார் பீர்பால் – ‘பேரரசர் மறந்துபோகலாம் அல்லது பீர்பால் உண்மையிலே பறக்கும் குதிரையைக் கண்டுபிடிக்கலாம். என்னுடைய எண்ணமும் அதுதான். மென்பொருள் துறை சில சலுகைகளை எதிர்பார்க்கிறது. அதை நாம் பெற்றுவிட்டோம்.’
மென்பொருள் பூங்காக்களில் இருக்கும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான கணினிகளைத் தீர்வை இல்லாமலும், அரசாங்க முன் அனுமதி இல்லாமலும் இறக்குமதி செய்துகொள்ளலாம். லாபத்திற்கு வரிச் சலுகை உண்டு. மென்பொருள் துறையின் தாராளமயமாக்கல் இப்படித்தான் துவங்கியது.
பிறகு 1991 ஆம் ஆண்டின் சீர்திருத்தங்கள் மென்பொருள் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. இந்திய ரூபாயை டாலருக்கு (மற்ற வெளிநாட்டு பணத்திற்கும்) அப்போதைய சந்தை மதிப்பிற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம் என்பது வெளிநாட்டுச் செயல்பாடுகளை எளிதாக்கியது. வெளிநாட்டிற்குச் செல்வதும், வெளிநாட்டில் அலுவலகங்கள் திறப்பதும் எளிதாகியது. மென்பொருள் நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதல் திரட்டுவதற்கு, சந்தைச் சீர்திருத்தங்கள் மிகவும் உதவின. 1991 ஆம் ஆண்டிற்கு முன்பு, முதலீட்டை நிர்வகிக்கும் அரசாங்க அலுவலர் ஒரு நிறுவனத்தின் IPO பங்கின் விலையை நிர்ணயிப்பார்.
‘நிறுவனத்தின் பங்கு என்ன விலையில் பட்டியலிடப்பட வேண்டும் என்று அந்த அலுவலர் தீர்மானிப்பார்.’ 2006ஆம் ஆண்டு யேல் பல்கலையில் ஒரு பேட்டியில் மூர்த்தி தெரிவித்தார். ‘அந்த அலுவலருக்கு பங்குச் சந்தைகள் பற்றி எதுவுமே தெரியாது. உங்களுடைய par valueவிற்கு மேலே அவர் பங்குகளைப் பட்டியலிட ஒப்புக்கொள்ளவே மாட்டார்.’[17]
ஜூன் 1993 அரசாங்கம் விதிகளை மாற்றிய பின்பு, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இரண்டாவது மென்பொருள் நிறுவனம் இன்ஃபோசிஸ்.[18]
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டபோது அதற்குக் கிடைத்த வரவேற்பு மூர்த்தியை ஆரம்பத்தில் வருத்தப்பட வைத்தது. ‘பெரும்பாலான பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மென்பொருள் பற்றி கேள்விப்பட்டது இல்லை.’ மூர்த்தி தொடர்ந்தார். ‘வங்கிகளுக்கும் மென்பொருள் புரியவில்லை.’ பங்குகளை விற்பது கடினமாக இருந்தது. ‘நண்பர்களும் உறவினர்களுக்கும்’ என்று ஒதுக்கிய பங்குக் கோட்டாவையே விற்பது பெரும்பாடாக இருந்தது. ‘நான் விற்க விரும்பிய பெரும்பாலான உயர்-நடுத்தர வர்க்க நண்பர்களும் உறவினர்களும் சந்தேகத்தோடு பார்த்தார்கள். எக்கச்சக்கக் கேள்விகளைக் கேட்டார்கள். பங்கின் வரவைக் குறித்துக் கேரண்டி கேட்டார்கள்’ மூர்த்தி சொன்னார். ‘கடைசியாக, நண்பர்களிலும், உறவினர்களிலும் ஒருவர் கூட பங்கை வாங்கவில்லை.’
இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அவநம்பிக்கையோடு இருந்தாலும், இன்ஃபோசிஸ் $4.4 மில்லியன் டாலர்கள் முதலீட்டைத் திரட்டியது. இதற்குக் காரணம்: வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகை. அதைச் சாத்தியமாக்கிய தாராளமயமாக்கல் சீர்திருத்தங்கள். இந்தியச் சந்தையில் உற்சாகத்தோடு பங்குபெற்ற முதல் மதிக்கத்தக்க முதலீட்டு நிறுவனம் மார்கன் ஸ்டேன்லி அசெட் மெனேஜ்மெண்ட். அவர்கள் இன்ஃபோசிஸை நம்பி முதலீடு செய்தார்கள். ‘அவர்கள் அமெரிக்காவில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைப் பார்த்திருந்தார்கள். அவர்களுக்கு இன்ஃபோசிஸ்ஸின் ஆரம்பகால வளர்ச்சியில் பெரும் பங்கு உண்டு. ‘ என்றார் நீலகேனி.
அமெரிக்காவில் நிகழ்ந்த சில மாற்றங்கள் மீண்டும் இன்ஃபோசிஸ்ஸின் வளர்ச்சிக்கு உதவியது. அது சரியான காலகட்டம் என்று சொல்ல வேண்டும். 1990 ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் குடியேற்றச் சட்டத்தில் கையெழுத்திட்டார். அது H-1B விசா திட்டத்திற்கு வழிவகுத்தது. அமெரிக்காவில் அதிவேகமாக வளரும் சிறப்புத் திறன் தேவைப்படும் சில துறைகளில் (உயர் தொழில்நுட்ப துறை, ஆய்வு, கணினி நிரல் எழுத்து) ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையைத் தீர்க்க H-1B விசா திட்டம் செயல்படுத்தப்பட்டது.
1970களிலும், 1980களிலும் இருந்த மந்த நிலை நீங்கி அமெரிக்கப் பொருளாதாரமும் வளர்ச்சி அடையத் துவங்கியது. அமெரிக்க நிறுவனங்கள் பெரிய அளவில் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து, தங்கள் செயல்திறனைப் பெருக்கியது வளர்ச்சிக்குக் காரணம். இன்ஃபோசிஸ்ஸின் சந்தை அதிவேக வளர்ச்சி அடைந்தது. அதன் பங்கு மதிப்பும் உயர்ந்தது. பங்குச் சந்தையில் பட்டியலிட்டதன் (IPO) மூலம் இன்ஃபோசிஸ் திரட்டிய செல்வத்தின் பெரும்பகுதி பெங்களூர் அலுவலக வளாகத்தின் கட்டமைப்பிற்குச் செலவிட்டார்கள்.
தாராளமயமாக்கலின் பின்பும் பல ஆண்டுகளுக்கு இந்தியா தேவைக்கு ஏற்ப கணினித்துறைப் பொறியாளர் பட்டதாரிகளை உருவாக்கவில்லை. இந்தப் பிரச்னையைத் தீர்க்க, இன்ஃபோசிஸ் நேரடியாகவே கல்லூரிகளுடன் இணைந்து கணினித்துறை மற்றும் மின்னணுத்துறையைச் சாராத மற்றப் பொறியியல் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் ‘கற்றல் தேர்வு’ முறையை அறிமுகப்படுத்தியது. அந்தத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உறைவிடத்துடன் கூடிய 32 வார கடுமையானப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
இந்தக் காலகட்டத்தில், இன்ஃபோசிஸ் தங்கள் கட்டமைப்பைப் பெருக்குவதில் பெரிய அளவிற்குக் கவனம் செலுத்தினார்கள். அவர்கள் செய்த ஒரு புகழ்பெற்ற விஷயம் – ஊழியர்களுக்கான பங்கு ஆப்ஷன்களை தருதல் (ESOP). (அந்தப் பங்குகளை உடனடியாக விற்க முடியாது. முதல் வருடம் கழித்து 25%, பின்பு மாதா மாதம் ஒரு பகுதி என நான்கு வருடங்களில் விற்றுக்கொள்ளலாம்.) பாய் தொடர்ந்தார், ‘இன்ஃபோசிஸ்ஸில் வேலை செய்த டிரைவர்கள்கூட அவர்களின் பங்கு ஆப்ஷன்கள் மூலம் லட்சாதிபதிகள் ஆன கதைகள் உண்டு. அவையெல்லாம் உண்மைதான்.’
இன்ஃபோசிஸ் போன்ற ஒரு தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு வேலை வாங்க வேண்டும் என்பது நிறைய இளைஞர்களின் கனவாக மாறியது. தாராளமயமாக்கலால் நிறையத் தனியார் பொறியியல் கல்லூரிகளும் காளான்போலப் பெருகின. ‘மாநில அரசுகள் தாராளவாத சிந்தனையைக் கொண்டிருந்தன. குறிப்பாகத் தென்மாநில அரசுகள். அவை பெரிய அளவில் பொறியியல் கல்லூரிகளைத் திறந்ததன் மூலம், நாட்டின் பொறியாளர்கள் எண்ணிக்கை 1990களுக்குப் பிறகு பலமடங்கு பெருகியது.’ என்று நீலகேனி சொன்னார்.[19]
2000ஆம் ஆண்டு முடிவில் இன்ஃபோசிஸ்ஸிற்கு ஒரு பெரிய அதிர்ஷ்டம் அடித்தது. கணினியில் இடத்தைச் சேமித்து அதன் மூலம் செலவைக் குறைப்பதற்காக, பல நிரல்கள் ஆண்டுகளை நான்கு எண்களாகச் சேமிக்காமல், சுருக்கி இரண்டு எண்களாகச் சேமித்தன. (உதா: 1-1-1985 என்ற தேதி 1-1-85 என்று சேமிக்கப்படும். கணினி உருவான காலங்களில் கணினி மின்பொருட்கள் மிக விலை உயர்ந்தவை. (மனிதன் நிலவிற்குச் சென்றபோது நாசாவிடம் இருந்த மொத்த கணினித்திறனை (செயல்திறனை) விட இப்போது உங்கள் ஸ்மார்ட்போனில் கணினிச் செயல்திறனும், சேமிப்புத்திறனும் அதிகமாக உள்ளது!!)
இந்நிலையில் 1990களின் இறுதியில், ஒரு சிக்கல் எழுந்தது. 2000 என்ற ஆண்டை, ’00’ என்று சேமிக்கும்பொழுது, கணினி நிரல்கள் அதை 1900 என்று புரிந்து கொள்ளும். டிசம்பர் 31, 1999 ஆம் ஆண்டு இரவு முடிந்து 2000 ஆம் ஆண்டு பிறக்கும்போது, கணினிகள் ஆண்டுகளைத் தவறாகப் புரிந்துகொண்டு பெரிய சிக்கல்கள் ஏற்படும் என்று வதந்தி பரவியது. இதை Y2K பழுது என்றார்கள். அமெரிக்கப் பெருநிறுவனங்கள் குறைவான விலையில் இந்தப் பழுதை நீக்க இந்திய மென்பொருள் நிறுவனங்களை நாடினார்கள். 1998 ஆம் ஆண்டு இன்ஃபோசிஸின் வருமானத்தில் 22% Y2K பழுது நீக்கும் ஒப்பந்தத்தில் இருந்து வந்தது.[20]
இந்தப் பழுது பெரிய பிரச்னையாக எழுந்ததையும், அதை இந்திய மென்பொருள் நிறுவனங்கள் சரிசெய்ததையும், அதன்மூலம் இந்திய மென்பொருள் துறையின் மதிப்பு உயர்ந்ததையும், இன்ஃபோசிஸ் தனக்குச் சாதமாகப் பயன்படுத்த விரும்பியது. அமெரிக்கத் தொழில்நுட்பப் பங்குச்சந்தையான நாஸ்டாக்கில் தன் பங்குகளை மார்ச் 1999 ஆம் ஆண்டு பட்டியலிட்டது. 2004 ஆம் ஆண்டு, வயர்ட் பத்திரிக்கையில் ஒரு பெண்ணின் கையில் கணினி நிரல் எழுத்துகளில் இடப்பட்ட மருதாணி அட்டைப்படமாக இருந்தது. ‘தொழில்நுட்ப வேலைகள் எப்போதையும் விட அதிகமாக இந்தியாவிற்குச் செல்கின்றன. அதில் உங்களுக்கு ஏதாவது பிரச்னையா?’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
Y2K சிக்கல் தீர்ந்தபிறகு, 2004ஆம் ஆண்டில் இன்ஃபோசிஸ்சின் வருமானம் $1 பில்லியன் டாலரைத் தொட்டது. அடுத்த சில ஆண்டுகளில் அது $2 பில்லியன் டாலராக வளர்ந்தது. இன்ஃபோசிஸ், இந்திய சமூகத்தில் ஒரு சாராரைப்போல, உலகமயமாக்கலின் நன்மைகளை அறுவடை செய்தது.
அந்தக் காலகட்டத்தின் புகழ்பெற்ற கதைச் சொல்லியான தாமஸ் ஃபிரிட்மேன் ‘தி வேர்ல்ட் இஸ் ஃபிளாட்’ என்ற புத்தகத்தை 2005இல் எழுதினார். இந்தியப் பெருநிறுவனங்களில் அந்தப் புத்தகம் பெரிய அளவில் பேசப்பட்டது. அந்தப் புத்தகத்தில் பெங்களூருவையும், இன்ஃபோசிஸ்ஸையும் புகழ்ந்து எழுதப்பட்டிருந்தது. இன்ஃபோசிஸ்ஸின் தலைமைச் செயல் அலுவலரான நந்தன் நீலகேனி தட்டையான உலகத்தை ஃபிரிட்மேனுக்குக் காட்சியாக விவரித்தார். ‘டாம், விளையாட்டுக்களம் சமன்படுத்தப்பட்டுள்ளது’ என்றார் நீலகேனி.
இன்ஃபோசிஸின் வரலாறை இந்தச் சர்வதேசப் பின்னணியில் வைத்து மீண்டும் நோக்கும்போது சில விஷயங்கள் ஆச்சரியமாக உள்ளது. 2000களின் மத்தியில் இந்தியாவிற்குச் செல்லும் வேலைகளைப் பற்றி கவலைகள் எழுந்தன. பின்பு யாரும் அதைச் சொல்வதில்லை.
2007இல் வெளியிடப்பட்ட ஐபோன், 2008இல் ஆண்டிராய்ட், அதன் பின்பு கிளவுடிற்கு மாற்றம் ஆனது வணிகத்தையும் தொழில்நுட்பத்தையும் மாற்றிவிட்டது. (கிளவுட் மாற்றம்: நிறுவனங்கள் தங்களின் கணினி மற்றும் சர்வர்களை தாங்களே நிறுவி, பராமரிக்காமல் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் பராமரிக்கும் கணினிப் பண்ணைகளில் இருந்து தேவைக்கேற்ப கணினித்திறனை பயன்படுத்திக்கொள்ளும் முறை. சொந்தமாக மாடு வைத்திருக்காமல், பால் பண்ணைகளில் இருந்து தேவைக்கேற்ப பால் வாங்கிக்கொள்வது போல. (நேரப்-பகிர்வு பெருங்கணினிகள் குறுங்கணினிகளாக மாறி, மீண்டும் ஒருவகையில் நேரப்-பகிர்வு கணிணிகளின் 2.0வாக ஆனதை மேகங்கள் என்று பொருள்படக்கூடிய ‘கிளவுட்’ தொழில்நுட்பம் என்கிறார்கள்.) இப்போது நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்பக் குழு மட்டுமே, இந்தியாவிற்கு வேலைகளை அனுப்பலாமா என்று முடிவெடுக்க முடியாது. நிறைய அமெரிக்க நிறுவனங்கள் அவர்களே தங்கள் கிளைகளை இந்தியாவில் துவங்கி இந்திய மென்பொருள் மனிதத்திறனை பயன்படுத்தத் துவங்கிவிட்டார்கள்.
அரசியல் ரீதியிலும் ஃபிரீட்மேனின் ‘தட்டையான உலகம்’ என்ற கருத்து காலாவதி ஆகிவிட்டது. 2008இல் ஏற்பட்ட அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சி, வேலைகளைக் குறித்த அமெரிக்கர்களின் பார்வையை மாற்றிவிட்டது. சீனாவிற்குப் போய்விட்ட உற்பத்தித் துறையின் கடைமட்ட அல்லது அதிகத் திறன் தேவைப்படாத வேலைகள் குறித்த கவலை அமெரிக்காவில் எழுந்தது.
பெங்களூருக்குப் போய்விட்ட மேல்மட்ட அல்லது திறன் தேவைப்படும் வேலைகள் குறித்து அந்த அளவிற்கு இன்னும் பிரச்னை எழவில்லை. அமெரிக்க அரசியல்வாதிகள் தொழில் உற்பத்தி குறித்து மீண்டும் பேச ஆரம்பித்தார்கள். பொருளியல் ரீதியில் பாதிக்கப்பட்ட அமெரிக்கத் தொழிலாளர்களைக் கவர்வதற்காக அந்த நிலைப்பாட்டை அரசியல்வாதிகள் எடுத்தார்கள். (ரஸ்ட் பெல்ட் எனப்படும் தொழில் நிறுவனங்கள் நிறைந்திருந்த சில மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களின் இலக்கு. அங்கிருந்த நிறுவனங்கள் மெல்ல மெல்லச் சீனாவிற்கு மாறிவிட்டன.)
எங்களுடைய பேட்டியில், நீலகேனி இப்போது இருக்கும் உலகமயமாக்கலுக்கு எதிரான போக்கை ஆமோதித்தார், ‘இருப்பினும், மற்றத் துறைகளை ஒப்பிடும்போது எங்கள் மென்பொருள் துறை பெரிய அளவிற்குச் சிக்கல் இல்லாமல் வெளிவந்தது. ஏனென்றால் சீனாவை நோக்கியே எல்லாத் தோட்டாக்களும் பாய்வதால், இந்தியா ஓரளவு தப்பித்துள்ளது’ என்றார். மாறும் உலகச் சூழலுக்கு ஏற்ப, இன்ஃபோசிஸ் எந்தெந்த நாடுகளில் இயங்குகிறதோ, அந்த இடங்களில் மென்பொருள் திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.
‘அமெரிக்காவில் வேலை உருவாக்கத்தில் இன்ஃபோசிஸ் இப்போது பெரிய பங்களிப்பு ஆற்றுகிறது. இண்டியானாபோலிஸ் போன்ற இடங்களில் நாங்கள் மென்பொருள் பயிற்சி இடங்களை அமைத்திருக்கிறோம். அமெரிக்க மென்பொருள் நிறுவனங்களே அங்கெல்லாம் போவதில்லை.’ என்று நீலகேனி சொன்னார்.
2017இல் இருந்து இன்ஃபோசிஸின் அன்றாடச் செயல்பாடுகளில் தலையிடாத தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். (non-executive chairman). ‘இன்ஃபோசிஸை நாங்கள் ஒருவகையில் விசா சிக்கலைச் சமாளிக்கும்படி மாற்றியுள்ளோம். கடந்த இரு வருடங்களில் விசா தேவைப்படாத ஊழியர்கள் – அமெரிக்கர்கள் மற்றும் கிரீன் கார்ட் வைத்திருப்போர் – நிறையப் பணிகளுக்கு அமர்த்தியுள்ளோம்.’
ஆனால் இந்த மாற்றத்தால் இந்தியாவில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நீண்ட காலத்திற்கு, நிறைய இந்தியப் பொறியாளர்களுக்கு, இன்ஃபோசிஸ் வேலை என்பது உயர்-நடுத்தர வர்க்க வாழ்க்கைக்கான ஒரு நுழைவாயில், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல ஒரு வாய்ப்பு, இறுதியாக அமெரிக்காவில் கிரீன் கார்ட் விசாவிற்கான ஒரு பாதை. அந்த வழிகள் பெரிய அளவில் அடைபட்டுள்ளன.
பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை தேவைக்கு அதிகமாக உள்ளதால், ஆரம்ப நிலை ஊழியர்களின் சம்பளம் தகவல் தொழில்நுட்பத்துறையில் உயரவில்லை. 2005இல் ஒரு பயிற்சி நிலைப் பொறியாளர் ₹2.8 லட்சம் வாங்கினார். 15 வருடங்கள் கழித்து அது ₹3.5 லட்சமாகத்தான் உள்ளது. (2005இல் தங்கத்தின் விலையையும், டாலர்-ரூபாய் மதிப்பையும் இன்றைய நிலைமையும் ஒப்பிட்டால் ‘உண்மையில்’ சம்பளம் குறைந்துள்ளது). கூகிள், அமேசான் போன்ற நிறுவனங்களின் இந்திய வருகையும் இளைஞர்களின் பார்வையை மாற்றியுள்ளது.
2000க்குப் பிறகு பிறந்த இளைஞர்களுக்கு இன்ஃபோசிஸ் பழைய உலகமாகத் தெரிகிறது – ஒரேவிதமாகப் பயிற்சி அளிக்கப்படும் பொறியாளர்கள் வழக்கமான நிரல்களை எழுதுகிறார்கள். இப்போது, ‘ராக்ஸ்டார் கோடர்ஸ்’ எனப்படும் அதிதிறன் நிறைந்த நிரலாளர்கள் மேட்-இன்-இந்தியா யுனிக்கார்ன் நிறுவனங்களின் செல்வத்தால் ஈர்க்கப்படுகிறார்கள். [$1 பில்லியன் டாலர் சந்தைமதிப்புள்ள அதிவேகமாக வளரும் ஸ்டார்டப் நிறுவனங்களை ‘யுனிக்கார்ன்’ நிறுவனங்கள் என்கிறார்கள்.
அவற்றில் சில, பங்குச்சந்தையில் இன்னும் பட்டியல் இடப்படாதவை. அவை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் போது மேலும் அவற்றின் மதிப்பு உயரும் என்பது பொதுவான கணிப்பு. ஜனவரி 2022 கணக்கின்படி 80 ஸ்டார்டப் நிறுவனங்கள் இந்தியாவில் யுனிக்கார்ன் அந்தஸ்த்தை அடைந்துள்ளன. தமிழகம் இதில் பின்தங்கி உள்ளது. சென்னையில் இருந்து ஒன்று / இரண்டு நிறுவனங்கள் மட்டுமே யுனிக்கார்னாக கருதப்படுகிறது. (பெங்களூரு (35), டெல்லி (18), மும்பையில் (11) பெரும்பாலான யுனிக்கார்ன்கள் உள்ளன.]
ஆனால் இந்தியா இன்னும் தேவையான வேலைகளை உருவாக்கவில்லை. வேலையற்றோர் சதவிகிதம் 7-8% விகிதமாக உள்ளது. லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகளை உள்ளிழுத்துக்கொள்ளும் திறன் இந்தியாவில் மிகச் சில துறைகளிலேயே உள்ளது. கண்டிப்பாகத் தகவல் தொழில்நுட்பத்துறை அதில் ஒன்று. (2019-2020 ஆண்டிற்கான அனைத்திந்தியத் தொழில்நுட்பக் குழுமத்தின் தகவல் ஆய்வின்படி 36% பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கவில்லை என்கிறது.)[21]
உண்மையான ஒரு பெரிய சிக்கல் எழாமல், இந்தியத் தகவல் தொழில்நுட்பத்துறை தன் அடிப்படையை மாற்றிக்கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஓர் ஊழியருக்கான வருமானம், கடந்த பத்து வருடங்களாக ஒரே அளவில் உள்ளது. இந்தியாவில் மென்பொருள் துறை தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதற்குக் குறைந்த சம்பளம் மட்டுமல்ல, ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக 70% சரிந்துள்ளதும் ஒரு காரணம்.
தொழில்நுட்பச் சூழல் அதிவேகமாக மாற்றமடையும்போது, இந்தியாவின் பழைய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இன்னும் ஆற்ற வேண்டிய பங்குள்ளது எனச் சிலர் நினைக்கிறார்கள். ‘இன்ஃபோசிஸ், டி.சி.எஸ். மற்றும் விப்ரோ போன்ற நிறுவனங்கள் செய்யும் வேலை காலாவதியாகப்போவதில்லை.’ முன்னாள் இன்ஃபோசிஸ் அதிகாரியும், துறை நிபுணருமான பிரகாஷ் செல்லம் சொன்னார். ‘ஒரு நிறுவனத்தின் தொழில்நுட்பத் தேவை அதிகரிக்கும்போது, அதைப் பராமரிப்பதற்கான தேவையும் அதிகரிக்கும். பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.’
ஷாலினியில் உணவு சாப்பிடப்போன அந்த நான்கு பேரும், தங்கள் நிறுவனத்தை விற்கவேண்டாம் என்று எடுத்த முடிவு, ஒரு தலைமுறையையே மென்பொருள் துறையில் தொழில்துவங்க ஊக்கப்படுத்தியது. அவர்களுடைய நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கு உண்மையான செல்வத்தை ஈட்டித்தந்தது. இந்தியாவின் தகவல்தொழில் நுட்பத்துறையின் மதிப்பை உலகளவில் அதிகரிக்கச் செய்ததில் பெரும் பங்காற்றியது.
இந்தியாவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணித (STEM) கல்விகளில் வலிமையாக இருப்பதற்கு இந்திய மென்பொருள் துறையும், இன்ஃபோசிஸ்ஸும் பெரிய அளவில் பங்களிப்பாற்றி உள்ளன. இன்றைய இளம் பொறியாளர்கள் அவர்களின் தோளில்தான் நின்றுள்ளார்கள்: இப்போதைய யுனிக்கார்ன்கள் தங்களின் வெற்றிக்கு தங்கள் துறையின் முன்னோர்களுக்குக் கடன்பட்டுள்ளார்கள். ஏனென்றால், அவர்கள்தான் இந்தியா பாம்பாட்டிகளின் நாடாக அறியப்பட்டபோது உலகத்திற்கான மென்பொருளை எழுதியவர்கள்.
0
கட்டுரையின் மூல ஆசிரியர் வேதிக்கா காண்ட் ஒரு மேலாண்மை ஆலோசகர், எழுத்தாளர், வரலாற்றாசிரியர். ட்விட்டரில் பின்தொடர : @vedicakant
நன்றி: இன்ஃபோசிஸின் கதையையும் தன்னுடைய கதையையும் என்னுடன் பகிர்ந்து கொண்டதற்காக N.R. நாரயண மூர்த்தி அவர்களுக்கு நன்றி. அந்த இரண்டு கதைகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ளது. நந்தன் நீலகேனி அவர்களுக்கு, திரு.மூர்த்தியை அறிமுகப்படுத்தியதற்கும் என்னுடன் பேச நேரம் ஒதுக்கியதற்கும் என் நன்றிகள். மோகன்தாஸ் பாய், நாகராஜன் விட்டல், கெ.ராய் பால் மற்றும் பிரகாஷ் செல்லம் ஆகியோருக்கும் தங்கள் பார்வைகளை பகிர்ந்து கொண்டதற்காக நன்றிகள். இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு அவை உதவின. மனீஷ் ஷபர்வால் இந்தக் கட்டுரையின் முன்வரைவைப் படித்ததற்காகவும், திருத்தங்கள் சொன்னதற்காகவும் நன்றிகள்.
பல ஆண்டுகளாக சௌரப் ஶ்ரீவத்சவாவுடன் அவருடைய தொழில்முனைவர் பயணத்தைப் பற்றி உரையாடி இருக்கிறேன். இந்தியத் தகவல் தொழில்நுட்பத்துறை குறித்தும். அந்த உரையாடல்களைத் தொகுக்க வேண்டும் என்று விரும்பினேன். இந்தத் துறையின் ஆரம்பகாலம் குறித்துப் பேசியதற்கும், அவற்றின் சூழலை விளக்கியதற்கும், என்னுடன் நீண்ட உரையாடல் நடத்தியதற்கும் என் நன்றிகள்.
அருண் மோகன் சுகுமாரின் தூண்டுதல் இல்லாமல் நான் இன்ஃபோசிஸ் குறித்து எழுதியிருக்க மாட்டேன். தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி, கட்டுரையின் வடிவைக் குறித்து உரையாடி, முன்வரைவைப் படித்து திருத்தங்கள் சொன்னதற்காகவும் அருணிற்கு நன்றிகள்.
________
குறிப்புகள்
[1] அவுட்சோர்ஸிங் என்பது – ஒப்பந்தம் தந்த நிறுவனத்தின் மென்பொருளை மாற்றியமைப்பதாக இருக்கலாம், இல்லை ஒப்பந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் மென்பொருளை மாற்றியமைப்பதாகவும் இருக்கலாம்.↩
[2] K.S. Gopalakrishnan, ‘Indian IT and ITeS journey: Liberalization and Beyond’. <https://www.livemint.com/Opinion/fNjocJ9cwlGCDqLWt2OjXP/Indian-IT-and-ITeS-journey-Liberalization-and-beyond.html>↩
[3] NASSCOM is the Indian IT industry’s trade association.↩
[4] D. Rodrik, A. Subramanian, ‘From Hindu Growth to Productivity Surge: The Mystery of the Indian Growth Transition’ <https://j.mp/2p53ger>. 2004.↩
[5] திட்டக் கமிஷன் உறுப்பினர் மற்றும் இந்திய புள்ளியல் கழகத்தின் நிறுவனர்.↩
[6] இந்திய அணுஆய்வுத் திட்டத்தின் தந்தை. Tata Institute of Fundamental Research (TIFR) நிறுவனர்களில் ஒருவர்.↩
[7] இந்திய ரயில்வேதான் IBM நிறுவனத்தின் பெரிய இந்திய வாடிக்கையாளர். தினேஷ் சர்மா எழுதிய The Outsourcer: The Story of India’s IT Revolution, p 52 (2015) புத்தகத்தில் இருந்து.↩
[8] சர்மா, The Outsourcer, p 29.↩
[9] தங்கள் மேஜையின் மீதிருந்த திரையின் மூலம் தொலைவில் இருந்த ஒரு பெருங்கணினியைப் பலர் ஒரே சமயம் பயன்படுத்துவதை TSS என்கிறார்கள். 1950களில் பெரிய நிறுவனங்கள் தங்களில் எல்லா ஊழியர்களுக்கும் கணினியைத் தர முடியவில்லை. (அன்று கணினி விலை உயர்ந்தவை). TSS இந்தச் சிக்கலை தீர்த்தது. TSS இன்று கிளவுட் கம்ப்யூட்டிங் என்று சொல்லப்படுவதின் அடிப்படை.↩
[10] 1977இல் பதவிக்கு வந்த ஜனதா அரசாங்கம், ஜார்ஜ் பெர்னாண்டஸ்ஸைத் தொழில்துறை அமைச்சராக நியமித்தது. அவர் 1960களில் கணினிமயமாக்கலுக்கு எதிராக பம்பாயில் போராடிய தொழிற்சங்கவாதியாக இருந்தார். 1973இல் வந்த FERA சட்ட திருத்தம், 40 சதவிகிதத்திற்கும் மேல் வெளிநாட்டு முதலீட்டில் இயங்கிய நிறுவனங்கள் மத்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை மீண்டும் பெறவேண்டும் என்று சொன்னது. இந்தச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க IBM ஜார்ஜ் பெர்னாண்டஸ்ஸை அணுகியது தவறாகிப்போனது. பெர்னாண்டஸ் IBMஐ ‘திமிர் பிடித்தவர்கள்’ என்று பின்பு சொன்னார். நிறுவனத்தின் பங்குகளை உள்ளூர் நிறுவனத்திற்கு விற்கும்படி பிரெஞ்ச் அதிபர் ஜெனரல் சார்ல்ஸ் டி கால் சொன்னதைக்கூட அவர்கள் ஏற்க மறுத்துவிட்டோம் என்றார்கள். ‘உங்களுக்கு ஜெனரல் வேண்டுமானால் அடிபணிவார், நான் அடிபணிய முடியாது. வெளியே போங்கள்’ – சர்மா, The Outsourcer, p. 68↩
[11] LexisNexis என்று இன்று அழைக்கப்படும் LEXIS சட்ட, வணிக நிறுவனங்களுக்கும், நூலகங்களுக்கும் ஆன முதல் மின்தகவல் சேமிப்பு நிறுவனம். நீதிமன்றத் தீர்ப்புகளை எளிதாகத் தேடிக்கொள்ள உதவியது.↩
[12] நாராயண மூர்த்தியின் 2019 நவம்பர் ஹார்வேர்ட் மேலாண்மைக் கழகத்திற்கான பேட்டி. Creating Emerging Markets Oral History Collection.↩
[13] பட்னி கோபமடைந்தார். ‘மூர்த்தி பட்னி நிறுவனத்தில் இருந்து டிசம்பர் 1980ல் விலகினார். நிரல் எழுத்தாளர்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். மொத்த மென்பொருள் அணியே விலகியது எங்களை மிகவும் பாதித்தது… இந்த மொத்த நிகழ்வும் நரேந்திர பட்னிக்குக் கடும் கசப்பை ஏற்படுத்தியது. அவர் மூர்த்தியின் செயல் அறம் இல்லை என்றார். பட்னியின் வாடிக்கையாளராக இருந்த DBC, இன்ஃபோசிஸ்ஸின் முதல் வாடிக்கையாளராக ஆனது, பட்னியின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தியது’. – சர்மா, The Outsourcer, p 136↩
[14] 1984இல் சொந்தமான Data General கணினியை வாங்கினார்கள்.↩
[15] A. Kohli, ‘Politics of Economic Liberalization in India,’ World Development, vol. 17, No. 3, 1989, pp. 305-328.↩
[16] நந்தன் நீலகேனியின் ‘Oral history for the Computer History Museum’ பேட்டி.↩
[17] யேல் பல்கலைக்கழகத்தில் நாராயண மூர்த்தியின் பேட்டி, 2006.↩
[18] 1992இல் Mastek நிறுவனம் முதலில் IPO போனது.↩
[19] நீலகேனியின் ‘Oral history for the Computer History Museum’ பேட்டி.↩
[20] நந்தன் நீலகேனியின் Rediff.com <https://www.rediff.com/computer/1999/mar/20nileka.htm>பேட்டி – 20 மார்ச் 1999.↩
[21] AICTE தளத்தில் உள்ள ‘மாணவர்கள் தேர்ச்சி’ விகிதமும் ‘வேலை கிடைத்தோர்’ விகிதத்தையும் வைத்து இந்த எண்ணிக்கையைக் கணக்கிட்டேன்.↩