Skip to content
Home » திராவிடத் தந்தை #1 – நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்

திராவிடத் தந்தை #1 – நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்

நேற்றிரவு அவருக்கு நினைவு தப்பியது. சில நாட்களாகவே கடுங்காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தார். இளமையில் அவர் இங்கு வந்தபோது, திருநெல்வேலி வெயில் கொஞ்ச நஞ்சத் துன்பமா கொடுத்தது? அதனால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் குற்றாலம், கொடைக்கானல் எனக் குளிர்பிரதேசங்களுக்குச் செல்வது வழக்கம். சமயத்தில் வெப்பம் அதிகமாகிவிட்டால் இடையன்குடிக்கு அருகேயுள்ள இளஞ்சுனையில்கூட நீராடி வருவார். ஆனால் மூப்படைந்த பிறகு உடல் ஒத்துழைக்க மறுத்தது. அரை நூற்றாண்டுக்குப் பிறகும் இந்திய வெயிலுக்கு அவர் பழகவில்லை. வேறுவழியின்றி மெட்ராஸ் பிஷப்பிடம் இராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு கொடைக்கானல் பகுதியில் குடியேறி இத்தோடு 7 மாதம் ஆகிவிட்டது.

இரவு பகல் பாராமல் உழைத்துக் கொட்டிய உடல் இப்போது நடுக்கம்கொள்ள ஆரம்பித்தது. பிறர் துணையின்றி தனியே நடக்க முடியாது. ஆனால் எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு வழக்கம்போல் தன் அன்றாட வேலைகளைத் தவறாமல் செய்து வந்தார். 50 வருடங்களாகப் பழகிப்போன இச்செயல்முறையை எளிதில் மாற்ற முடியுமா? ஆனால் அன்று இரவு காய்ச்சல் கடுமை ஆனது. தூங்குவதற்குச் சற்று முன்னர், சிறிது சிறிதாக நினைவு இழைகளை இழந்துகொண்டே வந்தார். மயக்க நிலையில் கிடந்த அவரை எலிசாதான் கைத்தாங்கலாகப் பிடித்து படுக்கவைத்தார். மறுநாள் காலையில் எலிசா வந்து எழுப்பும்போது, மணி 9 இருக்கும். கால்டுவெல் கண் திறக்கவில்லை. எலிசா உடலைப் பிடித்து உலுக்கினார், கைகளைப் பற்றிக் குலுக்கினார். கால்டுவெல் உடல் பாறாங்கல்போல் கிடந்தது.

எலிசாவின் தழுதழுத்த குரல் கேட்டு பக்கத்து அறையில் இருந்த குழந்தைகள் விரைந்து வந்தனர். யார் அழைத்தும் அவர் எழவில்லை. 1891ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி காலை, கால்டுவெல் எனும் மகத்தான மனிதரின் உயிர், குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தது. உடனே திருச்சியில் இருந்த கால்டுவெல்லின் மாப்பிள்ளை அருட்திரு. ஜே.எல். வையட் என்பாருக்குத் தந்தி அனுப்பினர். முன்பே குறிப்பிட்டதுபோல கால்டுவெல்லின் உடலை இடையன்குடியில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யுமாறு தந்தியில் செய்தி அனுப்பப்பட்டது. தான் ஆசையாசையாகக் கட்டியெழுப்பிய தேவாலய பலிபீடத்தின் அருகில் தன் பூதவுடலை அடக்கம் செய்யவேண்டும் என்று எலிசாவிடம் அடிக்கடிச் சொல்வார்.

கால்டுவெல் - எலிசா கால்டுவெல்
கால்டுவெல் – எலிசா கால்டுவெல்

 

அருட்திரு. ஜே.எல். வையட் - இசபெல்லா கால்டுவெல்
அருட்திரு. ஜே.எல். வையட் – இசபெல்லா கால்டுவெல்

கால்டுவெல் உடலில் தூய அங்கி அணிவித்துப் படுக்கவைத்தனர். இந்த அங்கியை, தன் வாழ்நாள் முழுதும் உடுத்திக்கொண்டு இடையன்குடியின் மூலைமுடுக்கெல்லாம் அலைந்து திரிந்தார். மெளனப் பின்னணியில் வேத வசனங்கள் எதிரொலிக்கும் அவ்வீட்டில், அன்று அழுகுரல் சத்தம் நாலா மூலையிலும் பட்டுத்தெரித்தது. அங்கி அணிவிக்கப்பட்ட அவர் உடலைப் பத்திரமாகச் சவப்பெட்டிக்குள் பூட்டினர். அன்று முழுக்க கொடைக்கானல் வட்டாரத்தில் கால்டுவெல் புகழறிந்த பலர், நேரில்வந்து அஞ்சலி செலுத்தினர்.

அருட்திரு. நூஜண்ட் செய்ய வேண்டிய சடங்குகளைத் தொடங்கினார். எலிசாவும் குழந்தைகளும் சித்தப்பிரம்மைப் பிடித்தார்போல் இருந்தனர். வாழ்நாள் முழுவதும் கால்டுவெல்லின் உற்ற துணையாக, ஒவ்வொரு பொழுதிலும் வேண்டிய செளகரியங்கள் செய்துதரும் அன்பு மனைவியாக எலிசா இருந்திருக்கிறார். அவருடன் சேர்ந்து களத்தில் பணியாற்றியிருக்கிறார்; பள்ளிக்கூடங்கள் நடத்தியிருக்கிறார்; கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியிருக்கிறார். கால்டுவெல் இல்லாமல் இடையன்குடி செல்வது, எரிமலைமேல் அடியெடுத்து வைப்பதாகத்தான் இருக்கும்.

சவப்பெட்டி மீது பூக்களால் அலங்காரம் செய்து, அதை மற்றொரு பெட்டிக்குள் வைத்துப் பூட்டினர். கரடுமுரடான கொடைக்கானல் மலையில் தனியாளாகக் கீழிறங்குவதே சவாலான காரியம். இரண்டு சவப்பெட்டியையும் அதற்குள்ளிருக்கும் கால்டுவெல் உடலையும் சுமந்து மலையிறங்குவது அத்தனை எளிதில் சாத்தியப்படுமா? 12 மைல் தூரம் செங்குத்தான பாதை. கொஞ்சம் சறுக்கினாலும் மலைமுகட்டில் பெட்டி உருண்டுவிடும். கை கடுகடுத்துப்போய் ஒருவர் உதறினாலும் பெரிய ஆபத்து.

யார் இதற்குப் பாத்தியப்படுவார்கள்? கூலிக்கு வருபவர்களை அழைத்துக் கேட்டனர். இறந்த உடலை மலையிலிருந்து இறக்குவதற்குத் தயங்கினார்கள். பின்னர் இச்செய்தி அருகிலிருந்த கிராமத்திற்குத் தெரியவந்தது. மதுரா மிஷனரி மூலம் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய 24 பேர் கால்டுவெல்லின் மகிமை அறிந்து இவ்வேலைக்கு ஒப்புக்கொண்டனர். கால்டுவெல்லின் மகன் அடிங்டன்னும் தந்தையின் இந்நெடிய ஊர்வலத்தில் கலந்துகொண்டார்.

கொடைக்கானலிலிருந்து இரண்டு மைல் தூரம் கடந்த பிறகு, சொன்னபடியே கால்டுவெல்லின் மருமகன்  அவர்களோடு வந்து சேர்ந்து கொண்டார். இங்கிருந்து திருநெல்வேலி செல்வதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தன. அம்மநாயக்கனூர்வரை சவப்பெட்டியை மாட்டு வண்டியில் வைத்துக் கொண்டுசென்றனர். அங்கிருந்து பாளையங்கோட்டைச் செல்வதற்கு ரயில் பெட்டி காத்திருந்தது.

மறுநாள் இரவு (ஞாயிறு) சுமார் 8 மணியளவில் பாளையங்கோட்டை வந்தடைந்தனர். அங்கிருந்து அவர்களை அழைத்துச் செல்ல அருட்திரு. வாக்கர், டக்ளஸ் மற்றும் சி.எம்.எஸ். மிஷனைச் சார்ந்த ஸ்டார்ஸ் முதலானோர் வந்திருந்தார்கள். அவர்களைச் சுற்றிலும் பாளையங்கோட்டை ரயில் நிலையத்தை அடைத்த மாதிரி உள்ளூர் மக்களின் பெருங்கூட்டம் சூழ்ந்துகொண்டிருந்தது. மக்களின் ஒருமித்தத் துன்ப அலைகளுக்கு நடுவே, கால்டுவெல்லின் உடலைப் பாளையங்கோட்டை தேவாலயத்திற்குச் சுமந்து சென்றனர். அந்த இரவுப் பொழுதிலும் தேவாலயத்தைச் சுற்றி ஈ மொய்ப்பதுபோல் வருவதும் போவதுமாக மக்கள்கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

தேவாலயத்தின் உள்ளே சவப்பெட்டியை மையமாக வைத்து வேத வசனங்களைப் படிக்கத் தொடங்கினார் டக்ளஸ். மக்கள் பேச்சறியாது, அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டே கால்டுவெல் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை வெறித்துப் பார்த்தனர். இதே தேவாலயத்தில் கால்டுவெல் எத்தனையோ முறை பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறார். ஊர் மக்களைச் சந்தித்து ஆலோசனை வழங்கியிருக்கிறார். அனாதவரான மக்களுக்கு தோழனாகவும் வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார். இன்று அவர் உடல் மூச்சுப் பேச்சின்றி அமைதியாகக் கிடக்கிறது.

திங்கட்கிழமை மதியம் ஸ்பிரிங் வைக்கப்பட்ட குதிரை வண்டியில் சவப்பெட்டியை ஏற்றி இடையன்குடிக்கு அனுப்பி வைத்தனர். இங்கிருந்து இடையன்குடி செல்ல 40 மைல் தூரம் பயணிக்கவேண்டும். போகும் வழியில் சுங்கச் சாவடி ஒன்று இருந்தது. அதன் இருமருங்கிலும் ‘சாரா டக்கர்’ நிறுவனத்தைச் சார்ந்த கல்லூரி மாணவிகள் காட்டுமரம்போல அணிவகுத்து நின்றனர். கால்டுவெல் உடலோடு குதிரை வண்டியில் வந்தவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ‘சாரா டக்கர்’ தென்னிந்தியாவில் தொடங்கப்பெற்ற முதல் மகளிர் கல்லூரி. அம்மாணவிகள் ஏன் இங்கு ஒன்றுபோல் நிற்கின்றனர் என்று அருட்திரு. வையட் அருகில் விசாரித்தார். ‘கால்டுவெல் உடல் இந்த வழியாகத்தான் வரும் என்று திருநெல்வேலி தேவாலயத்திலிருந்து நேற்று தகவல் வந்தது. எந்நேரத்துக்கு வருமென்று தெரியாததால் காலையிலிருந்தே காத்திருக்கிறோம்’ என்று மிஸ் ஆஸ்க்வித் சொன்னார். இவர்தான் இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றிருந்தார். பெண் கல்வி முன்னேற்றத்திற்காக கால்டுவெல் – எலிசா ஜோடி மேற்கொண்ட பணிகள் ஒன்றா, இரண்டா? இதில் எத்தனைக் குழந்தைகள் முதல் முறையாக எழுத்து வாசத்தை மோப்பம் பிடித்தவர்கள்? பஞ்சம் உண்ட பாதி ஊரை, படிப்பறிவு கொடுத்து இவ்வளவு தூரம் அழைத்துவருவது இலேசுப்பட்ட காரியமா? பெட்டிக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் கால்டுவெல்லுக்குத்தான் தெரியும்.

மாணவிகளின் ஆர்ப்பரிப்பால் அவர் உடல் அங்கேயே சிறிதுநேரம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஆட்களைச் சொல்லியனுப்பி மூன்று மைல் தூரத்திலிருந்து நடையும் ஓட்டமாய் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்திய ஊர் மக்களுக்கு இவர் அப்படி என்னதான் செய்தார்?

பின் அங்கிருந்து குதிரை வண்டியைப் பூட்டிக்கொண்டு இடையன்குடி நோக்கி விரைந்தனர். மதராஸ் மாகாணத்தின் எத்தனை எத்தனையோ கிராமங்களைத் தாண்டி அவர் வந்தடைந்த ஊர் இடையன்குடி. இம்மக்களின் மேன்மைக்கும், கிராம வளர்ச்சிக்கும் தன் வாழ்நாள் முழுவதையும் செலவு செய்திருக்கிறார். 1883ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றபோது கால்டுவெல்லின் நண்பர்கள் அவரை அங்கேயே தங்கும்படி சொன்னார்கள். ஆனால் அவர், ‘நான் யாருக்காக வாழ்ந்தேனோ, அவர்கள் மத்தியில்தான் சாக விரும்புகிறேன்’ எனச் சொன்னார். செவ்வாய்க்கிழமை அதிகாலை 7 மணிக்கு கால்டுவெல் பணிசெய்த அக்கிராமத்திற்குள், அவர் உடல் தரையில் படாமல் நுழைந்தது. அவர் விரும்பி நேசித்து நிர்மாணித்த ஊர், பூதவுடலை உட்செறிக்கக் காத்திருந்தது.

ஊர் எல்லையில் மக்கள் நிறைந்திருந்தார்கள். இஸ்லாமியர்கள், இந்துக்கள், கத்தோலிக்க மதகுருமார்கள், பள்ளிக்குழந்தைகள், ஏழை விவசாயிகள், ஊரகத் தொழிலாளர்கள், மூதாட்டிகள், தமிழ் அறிவுஜீவிகள் என சகலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 28ஆம் தேதி எலிசா அனுப்பிய தந்தி ஊர் முழுதும் பரவியிருந்தது. குதிரை வண்டியின் சத்தம் கேட்டதும் சோர்ந்திருந்த கூட்டம் பீடிகையின்றி எழுந்து ஓடியது.

தூய வெண்ணிறப் பஞ்சுத் துணியில் ‘நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்’ என்ற பைபிள் வசனம், சித்திரத் தையல் வேலைப்பாடுகளால் எழுதப்பட்டிருந்தது. தங்கள் வாழ்வின் போக்கையே திருப்பிப்போட்ட ஒரு மனிதருக்கு, அவர் வழியிலேயே அஞ்சலி செலுத்த ஆயத்தமாகினர் உள்ளூர் மக்கள்.

சுமார் அரைமணி நேரத்திற்குள் அவர் உடல், பொது மக்கள் பார்வைக்காக தேவாலய வாசலில் வைக்கப்பட்டது. சரக்கொன்றை மலர்கள் அதிகம் சூழ்ந்திருந்த அவ்வாசலில் ‘Forever with the Lord’ என்ற பாடலைக் கண்ணீரும் கம்பலையுமாகப் பாடி முடித்தனர். இத்தேவாலயக் கட்டடம், கால்டுவெல்லே முன்னின்று பார்த்துப் பார்த்துக் கட்டிய அழகுப் பதுமை. 1847ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினாலும் இதைப் பிரதிஷ்டைச் செய்வதற்குள் 1880 ஆகிவிட்டது. தேவாலயம் சுற்றியுள்ள பெரும்பாலான இடங்களும் கமிட்டிக்குச் சொந்தமானதுதான்.

இதோ அங்கிருக்கும் புளியமர நிழலில் எத்தனை முறை அவரைச் சந்தித்திருக்கிறோம். அப்போதெல்லாம் எத்தனைத் திடகாத்திரமாக இருந்தார். பனை மரங்களும் வெயில் திண்ணிப் பறவைகளுமாய் இருந்த இவ்வூரை நம் போன்ற மனிதர்கள் வாழத் தகுதிபடைத்த நிலமாய் மாற்றினார். நாடார் மக்கள் கல்விக்கூட வாசலை எட்டிப் பார்க்கத் தூண்டினார். இந்தத் தேவாலய மணிக்கூண்டின் மீதேறி பார்த்தால், கண்ணில் படும் அத்தனைக் காட்சியும் இவருடைய சிருஷ்டிதான். உதகையிலிருந்து சுமார் 1300 கி.மீ. தூரத்தையும் நடந்தே கடந்து இடையன்குடி அடைந்த கால்கள் ஏன் இப்போது சலசலப்பின்றி ஓய்வுகொள்கின்றன?

ஊர் மயானக்காடுபோல் மெளனமாக இருந்தது. மொத்த மக்களும் தேவாலயம் மற்றும் அதனையொட்டிய பகுதியில் குழுமியிருந்தனர். உள்ளூர் மக்கள் வெற்றிலை பாக்கு வைத்து வழிபட அனுமதி கேட்டார்கள். பாசத்தால் கட்டியெழுப்பிய உறவுமுறைக்குள் மதச் சடங்குகள் முட்டுக்கட்டை போட முடியுமா? அனைத்து வேண்டுதல்களும் நிறைவேற்றப்பட்டன. சவப்பெட்டிமேல் மலர்மாலை சூட்டினர். இனி பலிபீடத்தின் அருகிலுள்ள கல்லறைக்குள் அவர் உடலை இறக்கவேண்டும். அடிங்டன் முன்னின்று ஆகவேண்டியதைச் செய்தார். கால்டுவெல் உடலை கல்லறையில் இறக்கிய பிறகு கடைசியாக இரண்டு பாடல்களை அருட்திரு. சவரிராயன் பாடினார். இடையன்குடி வந்த காலத்திலிருந்தே கால்டுவெல்லின் உற்ற நண்பராக இருந்தவர் சவரிராயன். முன்னாள் சி.எம்.எஸ். ஊழியர். இதே நேரத்தில் கால்டுவெல்லோடு தொடர்புடைய மதராஸ் மாகாண தேவாலயங்கள் பலவும் இரங்கல் கூட்டம் நிகழ்த்திக் கொண்டிருந்தன.

உலகளாவிய மொழியியல் அறிவும் ஐரோப்பிய தத்துவப் புரிதலும் ஊர் மெச்சும் சமயப் பேரொளியும் கொண்ட அறிவுஜீவி ஒருவர் இந்தியாவின் தொலைக்கோடி கிராமம் ஒன்றில் அடையாளம் தெரியாமல் அமரர் ஆக விரும்பினார். அவர் ஆசையும் விருப்பம்போல் கைகூடியது. ஓர் அந்நியருக்கு வழிநெடுக உள்ளூர் மக்கள் கிடையாய் கிடந்து அஞ்சலி செலுத்தினர். இத்தனை மரியாதைக்கும் புகழ்மொழிக்கும் ஒப்ப இவர் வாழ்ந்த வாழ்க்கை என்ன? தென் தமிழகக் கிராமங்களோடு, தென் இந்தியாவின் அரசியல் போக்கையும் மொத்தமாகப் புரட்டிப்போட்ட இச்சூராவளியின் கதை என்ன? இன்றும் இவர் பெயர் ஏன் சிலருக்கு அச்சமூட்டுகிறது? திராவிடவியல் ஆராய்ச்சியில் இவர் வெளிக்கொணர்ந்த உண்மைகள் என்ன? ஆராய்வோம்.

(தொடரும்)

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *