பேராசிரியரான ஆண்ட்ரே வசிலீவிச் கோவரின் மிகவும் களைப்படைந்திருந்தார். அவரது நரம்புகளும் தளர்ந்திருந்தன. அதற்காக சிகிச்சை எடுத்துக்கொள்ள அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை; ஒருமுறை அவரது மருத்துவ நண்பருடன் மது அருந்தும்போது மட்டுமே இதைத் தெரிவித்தார். அவரது நண்பரும் சில மாதங்கள் கிராமப் பகுதிகளில் சென்று கழிக்கும்படிக் கூறினார். அதே நேரத்தில் தான்யா பெசோட்ஸ்க்கி, அவரைப் போரிசோவ்கவிற்கு வந்து, தன்னுடனும் தன் தந்தையுடனும் வந்து தங்குமாறு அழைப்பு விடுத்திருந்தார். ஆண்ட்ரே அங்கே செல்வது என்று முடிவு செய்தார்.
அதற்கு முன்பாக (ஏப்ரலில்) அவரது பூர்வீக இடமான கோவரிங்கவில் இருக்கும் அவருடைய வீட்டிற்குச் சென்று மூன்று வாரங்களைத் தனிமையில் கழித்தார். ரஷ்யாவின் புகழ்பெற்ற தோட்டக்கலை நிபுணரான பெசோட்ஸ்க்கி அவருக்கு இன்னொரு தந்தையைப் போன்றவர். அவரைச் சிறுவயதில் வளர்த்தவரும் அவர்தான். வானிலை நல்லவிதமாக மாறிய பின்னர் அவர் தன்னுடைய வீட்டில் இருந்து கிளம்பினார். கோவிரிங்கவில் இருந்து போரிசோவ்கவிற்குக் கிட்டத்தட்ட 80 கிலோமீட்டர் தூரம் இருக்கும். அவரது வசதியான குதிரை வண்டியில், வசந்த கால சாலைகளில் செல்லும் பயணம் மிகவும் இன்பமானதாக இருக்கும் என்று எதிர்பார்த்தார்.
போரிசோவ்கவில் இருந்த வீடு பெரியதாகவும் நிறையத் தூண்களுடனும் இருந்தது. பல சிங்கச் சிற்பங்கள் சுண்ணாம்பு உதிர்ந்த நிலையில் இருந்தன. வாசலில் வேலையாள் ஒருவன் சீருடையில் இருந்தான். ஆங்கில முறையில் வீட்டைச் சுற்றி இருந்த பூங்கா பழையதாகவும், பாழடைந்தும் இருந்தது. வீட்டில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவிற்கு, நதி வரையிலும் பூங்கா நீண்டிருந்தது. நதியின் களிமண் கரையில், பைன் மரங்கள் வெளிவந்திருந்த வேர்களால் தரையைப் பிடித்துக் கொண்டிருந்தன. அங்கே யாருமற்ற நதி ஓடிக்கொண்டிருந்தது. உள்ளான் குருவி ஒன்று சோகமாகக் குரலெழுப்பிக் கொண்டிருந்தது. அங்கிருந்த சூழல் யாரையும் அமர்ந்து பாடல் ஒன்று எழுதச் செய்துவிடும்.
80 ஏக்கர் அளவில் இருந்த தோட்டங்கள் வேறு விதமான உணர்வுகளை ஏற்படுத்தின. மோசமான வானிலை இருந்த நாட்களிலும் வெளிச்சமாகவும் மகிழ்ச்சியைத் தூண்டுவதாகவும் இருந்தது. ரோஜாப்பூக்கள், லில்லி, டுலிப் என்று பலவிதமான நிறங்களில் பூக்கும் பல செடிகளும் இருந்தன. வெள்ளையில் இருந்து கறுப்பு வரை அனைத்து நிறங்களிலும் இருந்த பூக்களை கோவரின் பார்த்ததுகூட இல்லை. வசந்தம் அப்போதுதான் ஆரம்பித்திருந்தது. இன்னமும் பல அரிதான பூக்கள் பூக்க ஆரம்பிக்கவும் இல்லை. ஆனால் நிழல்களில் பல நிறங்களில் பூத்திருந்த பூக்களே போதுமானதாக இருந்தது. அதிலும் இதழ்களில் பனித்துளிகள் மின்ன பூக்களும், இலைகளும் இருக்கும் அதிகாலை நேரம் இன்னமும் இனியதாக இருந்தது.
குழந்தையாக இருக்கும்போது, பெசோட்ஸ்க்கி ‘குப்பை’ என்று வெறுப்போடு சொல்லும் பகுதி, கோவரினுக்கு நல்ல அபிப்பிராயத்தையே கொடுத்தது. எத்தனைக் கலை அற்புதங்கள், பெரும் அவலட்சணங்கள், இயற்கையின் கேலிகள் அங்கிருந்தன! ஒட்டுப் போடப்பட்டிருக்கும் பழ மரங்கள், ஆப்பிள் மர வீடுகள், கூம்பு வடிவத்தில் இருந்த பேரிக்காய் மரம், உருண்டையான ஓக் மரங்கள், வளைவுகள், மரங்களில் இருந்த ஒற்றை எழுத்துகள், பெசோட்ஸ்க்கி தோட்டத்தில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்த ஆண்டான 1862 செதுக்கப்பட்டிருந்த பிளம் மரம் என்று பலவும் அங்கிருந்தன.
அவற்றுடன், ஒன்றுபோல, அழகாகவும், கம்பீரமாகவும் வளர்ந்து நின்ற மரங்கள், பனை மரங்களைப்போல நீண்டு வளர்ந்திருந்த மரங்களை, அவற்றின் அருகில் சென்ற பின்னரே, அவை நெல்லிக்காய் அல்லது முந்திரி என்று அறிந்து கொள்ள முடிந்தது. அவை எல்லாவற்றையும்விடத் தோட்டத்தை மிகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருந்தது, பெசோட்ஸ்க்கியின் தோட்டக்காரர்கள் அங்கு நடந்து கொண்டிருந்ததுதான்.
அதிகாலையிலிருந்து பின்னிரவு வரை மரங்கள், புதர்கள், பாதைகள், மலர்ப்படுகைகள் என அனைத்து இடங்களிலும் அவர்கள் கைகளில் மண்வெட்டி, கடப்பாரை, கைவண்டிகள், நீரூற்றும் பானைகளுடன் எறும்புகளைப்போலச் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
கோவரின் போரிசோவ்கவிற்கு ஒன்பது மணிக்கு வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்தபொழுது தான்யாவும் அவளது தந்தையும் மிகவும் கவலையில் இருந்தார்கள். அன்றைய தெளிவான, நட்சத்திர ஒளி மட்டுமே இருந்த இரவு, வரப்போகும் உறைபனியை அமைதியாக உணர்த்திக்கொண்டிருந்தது. அவர்களின் நம்பிக்கையான தலைமை தோட்டக்காரர் இவான் கார்லிச் நகரத்திற்குச் சென்றிருந்தார். இரவு உணவின்போதும் அவர்களது உரையாடல் முழுவதும் உறைபனியைச் சுற்றியே இருந்தது. அன்றிரவு தான்யா உறங்கக்கூடாது என்றும், இரவு ஒரு மணிக்குத் தோட்டத்திற்குச் சென்று நிலைமையை ஆராய வேண்டும் என்றும், யெகோர் செமினோவிச் மூன்று மணி அல்லது அதற்கு முன்பே எழுந்து ஆராய வேண்டும் என்றும் முடிவு செய்தார்கள்.
கோவரின் மாலை முழுவதும் தான்யாவுடன் அமர்ந்திருந்தார். நடுஇரவிற்குப் பின்னர் அவர்கள் இருவரும் தோட்டத்திற்குச் சென்றார்கள். காற்றில் எரியும் புகையின் வாசனை ஏற்கெனவே அங்கிருந்தது. யெகோர் செமினோவிச்சிற்கு வருடத்திற்குப் பல ஆயிரம் ரூபிள்கள் லாபம் ஈட்டி கொடுத்துக் கொண்டிருந்த ‘வர்த்தக’ பழத்தோட்டத்தில் ஏற்கெனவே தரையில் அடர்த்தியான, கரும் புகை சூழ்ந்திருந்தது. இந்தப் புகையே அங்கிருந்த மரங்களின் இளம் இலைகளைச் சூழ்ந்து, பழமரங்களைக் காப்பாற்றப் போகிறது.
தோட்டத்தில் இருந்த மரங்கள், சதுரங்கப் பலகையில் இருக்கும் காய்களைப்போல நேராகவும், ராணுவ வீரர்களைப்போல வரிசையாகவும் இருந்தன. எந்த இடத்திலும் வரிசை மாறாத மரங்கள், ஒரே உயரமாகவும் இருந்தது, தோட்டத்தில் நடப்பதை அலுப்பூட்டுவதாக மாற்றியிருந்தது. கோவரினும் தான்யாவும் தோட்டத்தின் பாதைகளில் மேலும், கீழுமாக நடந்தார்கள். வைக்கோல், சாணி, குப்பை முதலியவை எரிந்து கொண்டிருப்பதையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அங்கே நிழலாக நடந்து கொண்டிருந்த வேலையாட்களை நேரில் பார்க்கவில்லை. செர்ரி, பிளம் மற்றும் சில ஆப்பிள் மரங்களில் மட்டுமே பழங்கள் இருந்தன. ஆனால், தோட்டம் முழுவதும் புகை நிரம்பியிருந்தது. அவர்கள் விதையிடப்பட்டிருந்த படுகைகளை அடைந்த பின்னரே, கோவரினால் மூச்சு விட முடிந்தது.
‘நான் சிறுவனாக இருக்கும்போது, புகையினால் தும்மல் வருவது நினைவிற்கு வருகிறது.’ என்று தோள்களைக் குலுக்கிக்கொண்டே கோவரின் சொன்னார். ‘ஆனால், செடிகளை உறைபனியில் இருந்து புகை எப்படிக் காப்பாற்றும் என்பது மட்டும் எனக்குப் புரியவேயில்லை.’
‘மேகங்களுக்குப் பதிலாகப் புகை உபயோகமாக இருக்கும்’ என்று தான்யா கூறினாள்.
‘மேகங்கள் எதற்காகத் தேவை?’
‘மேகங்கள் இருக்கும் வானிலையில் காலை பனி இருக்காது.’
‘அப்படியா?’ என்றார் கோவரின்.
அவர் சிரித்துக் கொண்டே, தான்யாவின் கைகளைத் தன்னுடைய கைகளில் பற்றிக்கொண்டார். அகன்ற, மிகவும் தீவிரமான, உணர்ச்சியற்ற முகம். அடர்த்தியான, கருமையான புருவங்கள். அவள் அணிந்திருந்த அங்கி அவளது கழுத்தை இறுக்கமாகப் பிடித்திருந்ததால், அவளால் தலையை எளிதாகத் திருப்ப முடியாமல் இருந்தது. பனியில் நனையாமல் இருக்க அவள் உடையை மடித்து விட்டிருந்தாள். அவளது நிமிர்ந்த, மெலிந்த உருவம் அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
‘கடவுளே! எப்படி வளர்ந்துவிட்டாள்!’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டார். ‘ஐந்து வருடங்களுக்கு முன், நான் உன்னைப் பார்த்தபோது நீ சிறுமியாக இருந்தாய். ஒல்லியாக, நீண்ட கால்களோடு, அழுக்காக, சிறிய உடை அணிந்து கொண்டிருந்தாய். உன்னை நான் கேலி பண்ணிக் கொண்டிருந்தேன். ஐந்து வருடங்களில் ஆளே மாறிவிட்டாய்!’ என்றார்.
‘ஆம், ஐந்து வருடங்கள்!’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே தான்யா சொன்னாள். ‘அதற்குள் பல நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன. உண்மையாகச் சொல்லுங்கள், ஆண்ட்ரி,’ என்றாள் முகத்தில் மகிழ்ச்சியுடன். ‘எங்களுடன் தொடர்பில்லாமல் போனதிற்கு வருந்தினீர்களா? ஆனால் நான் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்? நீங்கள் ஓர் ஆண், உங்களது சுவாரசியமான வாழ்வை நீங்கள் வாழ்கிறீர்கள்… கொஞ்சம் தொடர்பில்லாமல் போகலாம். அப்படித்தானோ, இல்லையோ, அன்ரியுஷா, இனியாவது எங்களை உங்களுக்கு நெருக்கமானவர்களாக நினைக்க வேண்டும். அப்படிக் கேட்பதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது.’
‘ஏற்கெனவே அப்படித்தான் நினைக்கிறேன், தான்யா.’
‘சத்தியமாக?’
‘சத்தியமாக.’
‘உங்களது புகைப்படங்கள் எங்களிடம் நிறைய இருப்பது குறித்து நீங்கள் ஆச்சரியப்பட்டீர்கள். எனது தந்தை உங்கள்மீது மிகுந்த மதிப்பை வைத்திருக்கிறார் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். நீங்கள் அதிகமாகப் படித்தவர். சாதாரண மனிதர் இல்லை. உங்களது பணியில் நீங்கள் அடைந்திருக்கும் முன்னேற்றம் அற்புதமானது. தான் படிக்க வைத்ததால்தான் நீங்கள் இத்தனை வெற்றி அடைந்தீர்கள் என்று அப்பா உறுதியாக நம்புகிறார். அவரது நம்பிக்கையில் நான் குறுக்கிடுவதில்லை. அப்படியே நம்பிக்கொண்டிருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்!’
விடிந்துவிட்டது. வானம் வெளிர் நீலமாக இருந்தது. மரங்களும், புகை மூட்டமும் இப்போது தெளிவாகத் தெரிய ஆரம்பித்திருந்தது. வானம்பாடி பாட ஆரம்பித்திருந்தது. அருகில் இருந்த வயல்களில் இருந்து குயில்களின் பாடல் கேட்க ஆரம்பித்திருந்தது.
‘தூங்கப் போகலாம்!’ என்ற தான்யா. ‘குளிராகவும் இருக்கிறது.’ என்றபடி கோவரினின் கையைப் பிடித்துக் கொண்டாள். ‘இங்கு வந்ததற்கு நன்றி, அன்ரியுஷா. எங்களுக்கு இங்கே பரிச்சயமானவர்கள் மிகவும் குறைவானவர்கள். அவர்களும் சிறிதும் சுவாரசியமற்றவர்கள். இங்கே எங்களுக்கு எப்போதும் தோட்டம், தோட்டம், தோட்டம்தான். வேறெதுவும் இல்லை. அடிமரம், விறகு, ‘ என்று சிரித்தாள்.
‘தோட்டக்கழிவுகள், மோர், மொட்டுகள், களைதல், ஒட்டுப் போடுவது… எங்கள் வாழ்வு முழுவதும் தோட்டத்தின் வழியாகவே செல்கிறது. ஆப்பிளையும், பேரிக்காயையும் தவிர வேறெதுவும் எங்கள் கனவுகளில் கூட வருவதில்லை. இவை அனைத்தும் தேவைதான். ஆனாலும் அவ்வப்போது ஏதாவது மாற்றம் வருமா என்று நான் விரும்பாமல் இல்லை. நீங்கள் எங்களை வந்து பார்க்கும் நாட்கள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. விடுமுறைக்கு நீங்கள் வரும் நாட்களில், புதிதாகத் திரையை விலக்கியதுபோல அனைத்தும் புதியதாகவும், பிரகாசமாகவும் இருக்கும். அப்போது நான் சிறு பெண்தான், ஆனாலும் நான் புரிந்து கொள்ளத்தான் செய்தேன்…’ என்றாள்.
தான்யா நிறுத்தாமல், உணர்ச்சிகரமாகப் பேசிக்கொண்டிருந்தாள். அப்போது சட்டென்று கோவரினுக்கு ஒரு சிந்தனை தோன்றியது. அந்தக் கோடைக்காலத்தில், நிறுத்தாமல் பேசும் அந்தச் சிறிய பெண்ணால் அவர் ஈர்க்கப்பட்டுவிடலாம். அதைத் தாண்டி அவள்மீது காதலும் கொள்ளலாம். அவர்களின் தற்போதைய நிலையில், அதைவிட அதிகமாக இயற்கையானதும், சாத்தியமுள்ளதும் வேறெதுவும் இருக்கிறதா? இந்தச் சிந்தனை அவருக்கு மகிழ்ச்சியும், வேடிக்கையும் தந்தது. அவரது அன்பான முகத்தைக் கீழே குனிந்து கொண்டு, புஷ்கினின் கவிதையைத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டார்.
‘ஒனிஜின், நான் மறைக்க மாட்டேன்,
தத்தியானவை பைத்தியக்காரத்தனமாகக் காதலிப்பதை.’
அவர்கள் வீட்டை அடைந்தபோது யெகோர் செமினோவிச் எழுந்திருந்தார். கோவரினுக்குத் தூக்கம் வரவில்லை; எனவே, அந்த வயதான மனிதருடன் பேச ஆரம்பித்துவிட்டார். அவர்கள் இருவரும் தோட்டத்திற்குத் திரும்பவும் சென்றார்கள். யெகோர் செமினோவிச் உயரமாகவும், அகன்ற தோள்களுடனும், பருமனாகவும் இருந்தார். அவர் வேகமாக நடந்ததால் மூச்சு வாங்கியது. ஆனாலும் அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அவரது முகபாவனை எப்போதும் அவசரமாகவும், எதனாலோ தொந்தரவுற்றவர் போலவும் இருந்தது. ஒரு நொடி தாமதித்தாலும் அனைத்தும் அழிந்துவிடும் என்று நினைப்பவர் போல இருந்தார்.
‘இங்கே பாருங்கள்! உங்களுக்காக ஒரு மர்மம்…!’ என்று ஆரம்பித்து, நின்று சற்று மூச்சு வாங்க ஆரம்பித்தார். ‘இங்கே தரையில் பார்த்தால், உங்களுக்கு உறைபனி தெரியும். ஆனால் தரையில் இருந்து இரண்டு மீட்டர்கள் மேலே பார்த்தீர்கள் என்றால் வெப்பமாக இருக்கும்… அது ஏன் என்று தெரியுமா?’
‘எனக்குத் தெரியாது…’ என்று சிரித்துக் கொண்டே கோவரின் கூறினார்.
‘இல்லை!… உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்க முடியாது… உலகின் மிகப்பெரிய மூளைக்கும் எல்லாவற்றையும் புரிந்து வைத்திருக்க முடியாது. இன்னமும் தத்துவத்தைத்தான் படித்துக் கொண்டிருக்கிறீர்களா?’
‘ஆமாம்… நான் உளவியல் படித்துக் கொண்டிருக்கிறேன். பொதுவாக, தத்துவமும் படிக்கிறேன்.’
‘அது அலுப்பூட்டுவதாக இல்லையா?’
‘மாறாக, என்னால் அதைப் படிக்காமல் வாழமுடியாது.’
யெகோர் செமினோவிச் தன்னுடைய பெரிய மீசையை மெதுவாகத் தடவிக் கொண்டே, ‘ம்… கடவுள் துணையால்… உங்களுக்காக மகிழ்ச்சியடைகிறேன், சகோதரரே! மிகவும் மகிழ்ச்சி!’
பேசிக் கொண்டே இருந்தவர், திடீரென்று கூர்மையாக எதையோ கேட்க ஆரம்பித்தார். அவரது முகம் கோபமாக மாறியது. புகைமூட்டத்தின் நடுவே தெரிந்த பாதையில் வேகமாகச் சென்று மறைந்து போனார்.
‘குதிரையை யார் மரத்தில் கட்டியது?’ என்ற குரல் கேட்டது. ‘உங்களில் எந்தத் திருடன் அல்லது கொலைகாரன் இந்தக் குதிரையை ஆப்பிள் மரத்தில் கட்டியது? கடவுளே! கடவுளே! எல்லாம் பாழாகிவிட்டது! அழிந்துவிட்டது! தோட்டமே பாழாகிவிட்டது, அழிந்துவிட்டது! கடவுளே!’
அவர் திரும்பவும் கோவரின் இருந்த இடத்திற்கு வந்துபோது, அவரது முகம் இயலாமையையும், வருத்தத்தையும் கலந்து காட்டிக் கொண்டிருந்தது.
‘இந்த முட்டாள்களை வைத்துக்கொண்டு என்னதான் செய்வது?’ என்று கைகளைப் பிசைந்துகொண்டே, குறை கூறும் குரலில் சொல்ல ஆரம்பித்தார். ‘நேற்றிரவு ஸ்டெப்கா உரவண்டியைக் கொண்டு வந்து, அதன் குதிரையை ஆப்பிள் மரத்தில் கட்டிவிட்டான்… அதை மிகவும் இறுகக் கட்டியதில், மரத்தில் மூன்று இடங்களில் பட்டை உரிந்துவிட்டது. இதுபோன்றவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது? அவனிடம் கேட்டால், கண்களை விழித்துக்கொண்டு, முட்டாளைப் போலப் பார்க்கிறான். அவனைக் கொல்ல வேண்டும்!’
அவர் சற்று அமைதியானவுடன், அவர் கோவரினை அணைத்துக் கொண்டு, அவரது கன்னங்களில் மெலிதாக முத்தமிட்டார்.
‘இருக்கட்டும், கடவுள் துணையால்….‘ என்று குரல் தடுமாற, ‘நீ வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. எவ்வளவு மகிழ்ச்சி என்று என்னால் சொல்லவும் முடியாது. நன்றி!’ என்றார்.
பின்னர், அதே கவலை தோய்ந்த முகத்தோடு, வேகமாக நடந்துகொண்டே, கோவரினுக்கு அவரது தோட்டம் முழுவதையும், ஆரஞ்சு மரங்கள், பசுமைக்குடில்கள், கொட்டகைகள், அந்த நூற்றாண்டின் அதிசயங்களாக அவர் கருதிய இரண்டு தேன்கூடுகள் முதலியவற்றைச் சுற்றிக்காட்டினார்.
அவர்கள் நடந்து கொண்டிருக்கும்போதே, சூரியன் எழும்பி, வெளிச்சம் தோட்டத்தை நிரப்பியது. வெப்பமும் அதிகமாக இருந்தது. அன்றைய நீண்ட, வெப்பமான நாளை கோவரின் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அவருக்கு இப்போதுதான் மே மாதம் ஆரம்பித்திருக்கிறது என்பதையும், இன்னமும் கோடையின் நீண்ட, பிரகாசமான, மகிழ்ச்சிகரமான நாட்கள் தனக்கு மீதமிருக்கின்றது என்பதையும் எண்ணினார்.
அவர் சிறுவயதில் அதே தோட்டத்தில் விளையாடிய நாட்கள் நினைவிற்கு வந்து, அவரது நடையில் இளமையின் துள்ளல் எழுந்தது. பதிலுக்கு, அவர் கிழவரை கட்டி அணைத்து மென்மையாக முத்தமிட்டார். பழைய ஞாபகங்கள் கிளறப்படவே, அவற்றை எண்ணிக்கொண்டே இருவரும் வீட்டிற்குத் திரும்பி, பழைய சீனா கோப்பைகளில், பிஸ்கட்டுகளின் துணையுடன், தேநீர் அருந்தினார்கள். கோவரினுக்கு அவரது குழந்தைப்பருவ மற்றும் இளம்பருவ நாட்கள் நினைவிற்கு வந்துகொண்டே இருந்தது. நிகழ்காலத்தின் இனிமையுடன் இறந்தகால நினைவுகளும் கலந்து கொள்ள, கோவரினின் இதயத்தை மகிழ்ச்சி நிரப்பியது.
அவர் தான்யா எழும்வரை காத்திருந்தார். அவளுடன் காபி அருந்திவிட்டு, தோட்டத்தில் நடந்துவிட்டு, அவரது அறைக்குச் சென்று, வேலையைச் செய்ய ஆரம்பித்தார். குறிப்புகளை எடுத்துக்கொண்டே வாசித்துக் கொண்டிருந்தார். ஜன்னலின் வழியே வெளியே பார்க்கத் தோன்றியபோதோ அல்லது மேசையின் மீது பூஞ்சாடிகளில் பனித்துளிகளுடன் இருந்த ரோஜா மலர்களைப் பார்க்கத் தோன்றியபோதோ மட்டுமே கண்களைப் புத்தகத்தில் இருந்து எடுத்தார். அவரது உடலின் ஒவ்வொரு நரம்பும் மகிழ்ச்சியில் நடுங்கித் துடிப்பதாக அவருக்குத் தோன்றியது.
(தொடரும்)
அருமையான கதை ஆனால் இந்த கதையோடு ஒன்றிபோய் என்னால் படிக்க முடியவில்லை. (அனுபவிக்க முடியவில்லை) ஏனென்றால் இந்த கதை அந்த நாட்டு பின்ணனியில் இருக்கிறது.
மனிதர்கள் பெயரும் ஊர் பெயரும் ஒன்றுபோல உள்ளது.☺