போரிசோவ்கவிற்கு வந்தபிறகும் நகரத்தில் இருந்ததுபோலவே பதட்டத்துடன் அமைதியில்லாத வாழ்வையே வாழ்ந்து வந்தார் கோவரின். எந்நேரமும் அதிகமாக வாசிக்கவும் எழுதவும் செய்தார். இத்தாலிய மொழியைக் கற்றுக் கொண்டிருந்தார். தினமும் நடைப்பயிற்சிக்குச் செல்லும் போதும், வேலைக்குத் திரும்புவது பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார். அவர் தூங்காமலேயே இருந்தது, வீட்டில் இருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது. அவர் பகலில் அரைமணி நேரம் தூங்கினாலும், அன்றைய இரவு அவரால் தூங்க முடியவில்லை. ஆனால் இந்தத் தூங்கா இரவுகளுக்குப் பின்னரும் அவர் மிகவும் சுறுசுறுப்பாகவே இருந்தார்.
நிறையப் பேசிக்கொண்டும், மது அருந்திக் கொண்டும், விலை உயர்ந்த சுருட்டுகளைப் புகைத்துக்கொண்டும் இருந்தார். ஒவ்வொரு நாளும், அருகில் இருந்த பெரிய வீடுகளில் இருந்து இளம் பெண்கள் போரிசோவ்கவிற்கு வந்தார்கள். அவர்கள் தான்யாவுடன் பியானோ வாசித்துக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தார்கள். சில நேரங்களில் அருகில் இருந்த இளைஞர்களும் அங்கு வந்து வயலின் வாசித்தார்கள். கோவரின் அவர்களது இசையையும் பாடல்களையும் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அது சமயங்களில் அவருக்குச் சோர்வைக் கொடுத்தது. அதே சோர்வில் கண்கள் தானாகவே மூடிக்கொண்டு, தோளில் அவரது தலை சாய்ந்துவிடும்.
ஒருநாள் மாலை, அவர் மாடியில் அமர்ந்து தேநீர் அருந்திவிட்டு, வாசித்துக் கொண்டிருந்தார். முன்னறையில் தான்யாவும், அவளது தோழி ஒருத்தியும், இன்னொரு வயலின் வாசிப்பவரும், பிரகாவின் இசையை வாசித்துக் கொண்டிருந்தனர். கோவரின் அதன் வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். அதன் வார்த்தைகள் ரஷ்ய மொழியில் இருந்தாலும், அதன் அர்த்தத்தை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. இறுதியாக, புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு, மிகவும் கவனமாகக் கேட்டுப் புரிந்து கொண்டார்.
சீரில்லாத கற்பனையைக் கொண்ட பெண்ணொருத்தி இரவில் தோட்டத்தில் சில மர்மமான சப்தங்களைக் கேட்டாள். அந்தச் சப்தங்களின் புனிதத்தன்மையும், அவற்றின் ஒத்திசைவான சப்தமும் அழகாகவும் வினோதமாகவும் இருந்தது. மனிதர்களாலும் அதைப் புரிந்துகொள்ள முடியாது. சற்று நேரத்தில், அவள் சொர்க்கத்திற்கே சென்றுவிட்டாள். கோவரினின் கண்கள் தாமாகவே மூடிக்கொண்டன. சற்று நேரத்தில் எழுந்த அவர், களைப்புடன் முன்னறையில் மேலும், கீழுமாக நடந்தார். அதன் பின்னர் மற்ற அறைகளிலும் நடந்து கொண்டிருந்தார். இசை நின்றபோது, தான்யாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு, அவளுடன் மாடிக்குச் சென்றார்.
‘இன்று அதிகாலையில் இருந்து, வினோதமான பழைய கதை என் தலையில் ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கே அதை வாசித்தேன் அல்லது கேட்டேன் என்று எனக்கு நினைவில்லை. ஆனால், கதை மிகவும் சிறப்பானதாக இருந்தாலும், அது கோர்வையாக இல்லை. எனக்கு மிகவும் தெளிவாக இல்லை என்றாலும் சொல்கிறேன். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, கறுப்பு அங்கி அணிந்த துறவி ஒருவர் சிரியா அல்லது அரேபிய காடுகளில் சுற்றிக் கொண்டிருந்தார். சில மைல்கள் தொலைவில், மீனவன் ஒருவன், ஏரியின் மீது இன்னொரு கறுப்புத் துறவி நடந்து செல்வதைப் பார்த்தான். இந்த இரண்டாவது துறவி வெறும் பிம்பமே. இப்போது உன் மனதில் இருந்து ஒளியியலின் அனைத்துப் பௌதீக விதிகளையும் கதைகள் மதிப்பதில்லை என்பதை நினைவில் இருத்திக்கொள். கறுப்புத் துறவியின் முதல் பிம்பத்தில் இருந்து இரண்டாவது, மூன்றாவது என்று பிம்பங்கள் வளிமண்டலத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் பிரதிபலித்தது. ஒரு நேரத்தில் அது ஸ்பெயினில் தெரிந்தது, அதன் பின்னர் இந்தியாவில், வடக்கில் என்று தெரிந்தது. அதன் பின்னர் அது பூமியின் வளிமண்டலத்தில் இருந்து விலகினாலும், அது முழுவதுமாக மறைந்து போகும் சூழல் ஏற்படவில்லை. ஒருவேளை இப்போது அது செவ்வாய் கிரகத்திலோ அல்லது நட்சத்திரங்களிடையிலோ இருக்கலாம். இந்தக் கதையின் முக்கியமான நிமித்தமே, காடுகளுக்குத் துறவி சென்ற ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், பிம்பம் மறுபடியும் பூமியின் மீது, மனிதர்களிடையே தோன்றும் என்பதுதான். அந்த ஆயிரம் வருடங்கள் இப்போது முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது… கதையின் படி, நாம் இன்றோ, நாளையோ கறுப்புத் துறவியை எதிர்பார்க்கலாம்.’ என்றார்.
‘என்ன வினோதமான கதை,’ என்றாள் தான்யா. அவளது குரலில் இருந்து அவள் அந்தக் கதையை விரும்பவில்லை என்று தெரிந்தது.
‘ஆனால் இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தக் கதை எப்படி எனக்குத் தோன்றியது என்பதுதான். எங்காவது வாசித்தேனா? எங்காவது கேட்டேனா? இல்லை, நான் கறுப்புத் துறவியைப் பற்றிக் கனவு கண்டேனா? எனக்கு எதுவும் நினைவில்லை. ஆனாலும் எனக்கு இந்தக் கதை சுவாரசியமாக இருக்கிறது. நாள் முழுவதும் எனக்கு வேறெதுவும் சிந்தனையில் இல்லை.’ என்று கோவரின் சிரித்துக் கொண்டிருந்தார்.
தான்யாவை அவளது விருந்தினர்களிடம் அனுப்பிவிட்டு, அவர் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டு, பூந்தோட்டத்தில் சிந்தனை செய்துகொண்டே நடந்துகொண்டிருந்தார். சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தது. அப்போதுதான் நீரூற்றப்பட்டிருந்த பூச்செடிகளில் இருந்து ஈரப்பதமும் எரிச்சலும் கொண்ட வாசம் வீசிக்கொண்டிருந்தது. வீட்டில் திரும்பவும் இசையின் சத்தம் கேட்க ஆரம்பித்திருந்தது. சற்று தூரத்தில் இருந்து வயலினுடன் கலந்த குரல் கேட்க ஆரம்பித்தது. கதையை எங்கே கேட்டோம் என்று யோசித்துக்கொண்டே அவர் தோட்டத்தின் நடுவே மெதுவாக நடந்து, கவனிக்காமலேயே நதிக்கரைக்கு வந்துவிட்டார்.
கோவரின், நதியின் கரையின் வழியே சென்ற பாதையில் இறங்கிக் கொண்டிருந்தார். அங்கிருந்த உள்ளான் குருவி ஒன்றையும், இரண்டு வாத்துகளையும் அவரது நடந்து வந்த சத்தம் பயமுறுத்தியது. அடர்ந்த பைன் மரங்களின் இடையே, அஸ்தமித்துக் கொண்டிருந்த சூரியனின் வெளிச்சம் வீசிக்கொண்டிருந்தது. நதியின் மீது இருள் ஏற்கெனவே கவிந்திருந்தது. கோவரின் நதியைக் கடந்தார். அவருக்கு முன் புல்லரிசி வயல் விரிந்திருந்தது. அங்கிருந்து மனிதர்கள் இருக்கும் இடமோ, மற்ற மனிதர்களோ தென்படவில்லை. அந்தப் பாதை இதுவரை யாரும் செல்லாத, மர்மமான மேற்குப் பகுதியை நோக்கிச் சென்றது. அங்கு இன்னமும் பெரிதாகவும், கம்பீரமாகவும் சூரிய அஸ்தமனத்தின் பின்னான வெளிச்சம் தெரிந்து கொண்டிருந்தது.
‘எப்படிப்பட்ட பரந்த, அமைதியான, சுதந்திர வெளி!’ என்று நடந்துகொண்டே கோவரின் யோசித்தார். ‘உலகமே எங்கோ ஒளிந்துகொண்டு, அதை நான் புரிந்துகொள்வதற்காகக் காத்திருப்பது போல இருக்கிறது.’
வயலில் இருந்த கதிர்கள் அலையலையாக அசைந்தாடின. மாலை நேரத்துக் காற்று அவரது தலையின்மீது வீசியது. இன்னொரு நிமிடத்தில், காற்று வேகமாக வீசியது. மீண்டும் ஒரு முறை புல்லரிசி வயலில் அலை அடித்தது. அதன் பின்னர் பைன் மரக்காடுகளில் இருந்து முணுமுணுப்பும் கேட்டது. கோவரின் ஆச்சரியத்தில் அங்கேயே நின்றுவிட்டார். தொடுவானத்தில், சூறாவளிபோல, அதில் இருந்து எழும்பும் நீர்தாரையைப்போல, பூமியில் இருந்து பெரிய, கறுப்புத் தூண் எழும்பியது. அதன் விளிம்புகள் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை; ஆனால் முதலில் இருந்தே அது ஒரே இடத்தில் அப்படியே இருக்காமல், வேகமாக கோவரினை நோக்கி வருவது போல இருந்தது.
அது அருகில் வர வர, அதன் உயரமும் வளர்வதும் குறைந்தது. தன்னையறியாமலேயே கோவரின் பாதையில் இருந்து விலகி, அதற்கு வழி விட்டார். கறுப்பு அங்கி அணிந்த துறவி ஒருவர், வெள்ளை முடியோடும், கருமையான புருவங்களோடும், கைகளைத் தன்னுடைய மார்பின் குறுக்கே கட்டியவாறு வேகமாகச் சென்றார். அவரது கால்கள் தரையின் மேலே இருந்தது. கோவரினைத் தாண்டி இருபது யார்டுகள் சென்றதும், அவர் கோவரினைப் பார்த்து, தலையை மெதுவாக அசைத்து, கொஞ்சம் அன்புடனும் கூர்மையாகவும் சிரித்தார். அவரது முகம் மெலிந்தும், வெளிறியும் இருந்தது. அவர் கோவரினைத் தாண்டிச் சென்றவுடன் மீண்டும் வளர ஆரம்பித்தார். அப்படியே பறந்தபடியே நதியைக் கடந்து, மறுபுறம் இருந்தக் களிமண் கரை மற்றும் பைன் மரங்களின்மீது வேகமாக மோதி, அவற்றின் வழியே சென்று புகையைப் போல மறைந்து போனார்.
‘அப்படி என்றால், அந்தக் கதை உண்மைதான் போல!’ என்று தடுமாறியபடியே கோவரின் சொல்லிக் கொண்டார்.
அவர் கண்ட காட்சியின் வினோதம் அவருக்குப் பெரிதாகத் தெரியவில்லை; வெறும் கறுப்பு அங்கியை மட்டும் பார்க்காமல், அவரால் துறவியின் முகத்தையும், கண்களையும்கூட அருகிலும், தெளிவாகவும் பார்க்க முடிந்தது என்று திருப்தி அடைந்தார்; மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வீட்டிற்குத் திரும்பினார்.
பூங்காவிலும் தோட்டத்திலும் பலரும் அமைதியாக நடந்து கொண்டிருந்தார்கள். வீட்டில் இன்னமும் இசை கேட்டுக் கொண்டிருந்தது. அவர் மட்டுமே துறவியைப் பார்த்ததாகத் தெரிந்தது. அவர் என்ன காட்சியைக் கண்டார் என்று தான்யாவிடமும் யெகோர் செமினோவிச்சிடமும் சொல்ல வேண்டும் என்று மிகவும் விரும்பினார். ஆனால் அவர்கள் அதை அவருடைய பிரமை என்று நினைப்பார்கள் என்று எண்ணி, தனக்குள்ளேயே வைத்துக்கொள்ள முடிவு செய்தார். எனவே அன்று அவர் சத்தமாகச் சிரித்தும் பாடியும் நடனம் ஆடிக்கொண்டும் மிகவும் உற்சாகமாக இருந்தார். விருந்தினர்களும் தான்யாவும் அவர் அன்று மிகவும் பரவசமாகவும், எழுச்சியுடனும், சுவாரசியமானவராகவும் இருப்பதைக் கவனித்தார்கள்.
(தொடரும்)