இரவு விருந்து முடிந்து, விருந்தினர்கள் சென்ற பின்னர், கோவரின் அறைக்குத் திரும்பி, அங்கிருந்த மெத்தையில் படுத்துக்கொண்டார். துறவியைப்பற்றி சற்றே சிந்திக்கலாம் என்று அவர் நினைத்துக்கொண்டிருந்தபோது தான்யா நுழைந்தாள்.
‘அன்ரியுஷா, இதோ அப்பாவின் கட்டுரைகள்… நீங்கள் வாசிப்பதற்கு. மிகவும் நல்ல கட்டுரைகள். அவர் மிகவும் நன்றாக எழுதுவார்’ என்றாள்.
‘அருமை!’ என்று சொல்லிக் கொண்டே, அவளுக்குப் பின்னாடியே முகத்தில் வரவழைக்கப்பட்ட புன்னகையோடு, யெகோர் செமினோவிச் நுழைந்தார். ‘அவள் சொல்வதைக் கேட்காதீர்கள்!… உங்களுக்குத் தூக்கம் வரவில்லை என்றால் மட்டும் படியுங்கள். நல்ல தூக்க மருந்து என் கட்டுரைகள்!’
‘என்னைப் பொறுத்தவரை, அவை அருமையானவை.’ உண்மையான நம்பிக்கையுடன் கூறினாள் தான்யா. ‘வாசியுங்கள், அன்ரியுஷா! அப்பாவை மேலும் எழுதச் சொல்லுங்கள். தோட்டக்கலை பற்றி அவர் நிறைய எழுதலாம்.’
யெகோர் செமினோவிச் சிரித்து, முகமெல்லாம் வெட்கத்துடன், புகழப்படுபவர்கள் செய்வது போலத் தட்டு, தடுமாறி சம்பிரதாயமான வார்த்தைகளைச் சொன்னார். இறுதியாக, தோல்வியை ஒப்புக் கொண்டார்.
‘நீங்கள் வாசிக்கத்தான் வேண்டும் என்றால், முதலில் கவச்சேயின் கட்டுரைகளை வாசியுங்கள். அத்தோடு இந்த ருஷ்ய கட்டுரைகளையும்.’ என்று சொல்லிக்கொண்டே, காகிதங்களை நடுங்கும் கரங்களில் எடுத்துக் கொண்டார். ‘இல்லையென்றால், உங்களுக்கு ஒன்றும் புரியாது. என்னுடைய பதில்களைப் படிப்பதற்கு முன், நான் எதற்கு பதிலளிக்கிறேன் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அது உங்களுக்குச் சுவாரசியமாக இருக்காது… முட்டாள்தனமாக இருக்கும். சரி, தூங்கும் நேரமாகிவிட்டது.’
தான்யா வெளியே சென்றாள். யெகோர் செமினோவிச் மெத்தையின் ஒரு பக்கமாக அமர்ந்து, சத்தமாகப் பெருமூச்சு விட்டார்.
‘ஆ! என் சகோதரனே…’ என்று நீண்ட மௌனத்திற்கு பின்னர் ஆரம்பித்தார். ‘என் அருமை ஆசிரியரே! நான் கட்டுரை எழுதுகிறேன், கண்காட்சிகளில் என் தோட்ட பொருள்களைக் காட்டுகிறேன், சில சமயங்களில் பரிசும் பெறுகிறேன்… அவர்கள் என்னிடம், பெசோட்ஸ்க்கி, உன் ஆப்பிள்கள் தலை அளவிற்குப் பெரிதாக இருக்கிறது என்கிறார்கள்… பெசோட்ஸ்க்கி தோட்டத்தில் பெரிய லாபம் பார்க்கிறார் என்கிறார்கள்…
‘கொசுபே* போலப் புகழும், செல்வமும் கொண்டவர்.’ (*புஷ்கினின் ‘போல்டவா’ கவிதைவரி. கொசுபே, புஷ்கினின் மூதாதையான நீதிபதி. – மொ.பெ.)
‘ஆனால், இவற்றின் முடிவில் என்ன நடக்கப் போகிறது என்று நான் கேட்கிறேன்? சந்தேகமில்லாமல் என்னுடைய தோட்டங்கள் அருமையாக இருக்கின்றன, அவை முன்மாதிரியானவை… சுருக்கமாக, அவை தோட்டங்கள் அல்ல, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் அது. நவீன ரஷ்ய விவசாயம் மற்றும் தொழில் துறையின் முன்னோக்கிய பயணத்தின் முதல் அடி… ஆனால் எதற்காக? என்ன இறுதி நோக்கத்திற்காக?’
‘இதற்கு எளிதாகப் பதில் கூறலாமே…’
‘நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. நான் என்ன சொல்கிறேன் என்றால், நான் இறந்த பிறகு இந்தத் தோட்டங்களுக்கு என்னவாகும்? இப்போதிருக்கும் நிலையில், நானில்லாமல் தோட்டங்கள் ஒரு மாதம்கூட இருக்காது. தோட்டம் பெரிதாக இருப்பதோ, பல வேலையாட்கள் இருப்பதோ பெரிது இல்லை, நான் இந்த வேலையைக் காதலிக்கிறேன், புரிகிறதா? நான் என்னை விரும்புவதைவிட அதிகமாகத் தோட்ட வேலையை விரும்புகிறேன். என்னைப் பாருங்கள்! காலையில் இருந்து இரவு வரை உழைக்கிறேன். என் கைகளாலேயே எல்லாவற்றையும் செய்கிறேன். செடிகளுக்கு ஒட்டுப்போடுவது, வெட்டுவது, நடுவது என எல்லாமும் நானே செய்கிறேன். எனக்கு யாராவது உதவினால் கூட எரிச்சல் அடைகிறேன். அவர்கள் மீது பொறாமை கொள்கிறேன்.
‘இதன் ரகசியம் அன்பில் இருக்கிறது. என்னுடைய திறமையான கண்கள், கைகளில் இருக்கிறது. என்னுடைய நண்பர்கள் வீட்டிற்கு அரை மணி நேரம் சென்றிருக்கும்போது, நான் என் இதயத்தை எங்கேயோ விட்டுவிட்டு வந்ததுபோல உணர்கிறேன். நான் நானாக இருப்பதில்லை. அங்கிருக்கும் போதெல்லாம் என்னுடைய தோட்டத்திற்கு என்ன ஆனதோ என்று பயந்து கொண்டே இருக்கிறேன். நாளையே நான் இறந்து விட்டால், யார் இவற்றைப் பார்த்துக் கொள்வார்கள்? வேலை எல்லாம் யார் செய்வார்கள்? தோட்டக்காரர்களா? வேலையாட்களா? என்னுடைய இப்போதைய கவலையெல்லாம் தோட்டத்தில் இருக்கும் முயல்களோ, புழு, பூச்சிகளோ அல்லது உறைபனியோ அல்ல, அது யாரென்று தெரியாத ஒருவரின் கை.’
‘ஆனால் தான்யா? அவள் ஒன்றும் முயல்கள் அளவிற்கு ஆபத்தானவள் இல்லையே?…அவளும் தோட்ட வேலையை விரும்புகிறாள், புரிந்தும் கொள்கிறாள்.’ என்று கோவரின் சிரித்துக் கொண்டே கூறினார்.
‘ஆமாம், தான்யா இதை விரும்பவும், புரிந்துகொள்ளவும் செய்கிறாள். என்னுடைய மறைவிற்குப் பின், தோட்டத்தை அவள் நிர்வகித்தால், அதைவிட வேறொன்றும் எனக்குத் தேவையில்லை. ஆனால், அவள் திருமணம் செய்து கொண்டால்?’ என்று யெகோர் செமினோவிச் முணுமுணுத்துக் கொண்டே, கோவரினை மருண்ட விழிகளால் பார்த்தார். ‘அதுதான் விஷயமே. அவள் திருமணம் செய்துகொள்ளலாம். குழந்தைகளும் பிறக்கலாம். தோட்டத்தைப் பார்த்துக்கொள்ள நேரமிருக்காது. அதைவிட மோசமானது, அவள் திருமணம் செய்தவன் ஊதாரியாக இருந்துவிட்டால், அவனுக்கு எப்போதும் பணம் தேவைப்படும். அதற்காக அவன் தோட்டத்தைக் குத்தகைக்கு விட்டுவிட்டால், முதல் வருடத்திலேயே எல்லாம் நாசமாகிவிடும். இதுபோன்ற விஷயங்களில் பெண்கள் கடவுளின் சாபம்தான்.’
யெகோர் செமினோவிச் பெருமூச்சு விட்டார். சில நிமிடங்களுக்கு அமைதியாக இருந்தார்.
‘நீங்கள் இதைச் சுயநலம் என்று கூறலாம். ஆனால், தான்யா திருமணம் செய்வதை நான் விரும்பவில்லை. அதை நினைத்துப் பயப்படுகிறேன்! இன்று வயலினுடன் வந்த முட்டாளைப் பார்த்திருப்பீர்கள். தான்யா அவனைத் திருமணம் செய்ய மாட்டாள் என்றாலும் எனக்கு அவனைப் பார்க்கவும் பிடிப்பதில்லை… சுருக்கமாக, நான் ஒரு மாதிரியானவன்தான்… எனக்கே அது தெரிகிறது.’
யெகோர் செமினோவிச் எழுந்து, அறையின் மேலும், கீழும் நடந்தார். அவர் எதையோ சொல்ல விரும்புகிறார் என்றும், அதை அவரால் சொல்ல இயலவில்லை என்பதும் நன்றாகத் தெரிந்தது.
‘நான் உங்களை மிகவும் விரும்புவதாலேயே, வெளிப்படையாகப் பேச இயலவில்லை’ என்று தன் கைகளை கால்சட்டைப் பைகளுக்குள் விட்டுக்கொண்டார். ‘எல்லா முக்கியமான விஷயங்களிலும், எனக்கு நேரிடையாகப் பேசவே பிடிக்கும். மறைத்து, மறைத்துப் பேசுவது பிடிக்காது. எனவே நான் நேரடியாகவே சொல்லிவிடுகிறேன். தான்யா உங்களைத் திருமணம் செய்வதை மட்டுமே நான் பயமில்லாமல் பார்க்கிறேன். நீங்கள் மிகுந்த அறிவாளி, நல்ல இதயம் கொண்டவர், என்னுடைய வாழ்நாளின் வேலை எல்லாம் வீணாகச் செல்வதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நான் உங்களை என்னுடைய மகனைப்போல நினைக்கிறேன்… உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். எனவே நீங்களும், தான்யாவும்… காதலித்தால்… நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். இதை நேர்மையான மனிதனாக உங்களிடம் வெட்கமின்றி நேரடியாகவே சொல்கிறேன்.’
கோவரின் புன்னகைத்தார். கதவைத் திறந்து கொண்டு வெளியே செல்ல ஆரம்பித்த யெகோர் செமினோவிச், சட்டென்று அங்கேயே நின்றார்.
‘உங்களுக்கும், தான்யாவிற்கும் ஆண் குழந்தை பிறந்தால், அவனைத் தோட்டக்கலை நிபுணனாக நானே ஆக்கிவிடுவேன்’ என்று கூறிக்கொண்டே, ‘ஆனால் வெறும் பகல் கனவு. நல்லிரவு!’ என்றார்.
தனியாக விடப்பட்ட கோவரின், வசதியாக அமர்ந்துகொண்டு, யெகோர் கொண்டுவந்த கட்டுரைகளைப் பார்க்க ஆரம்பித்தார். முதலாவது ‘இடைப்பட்ட வளர்ச்சி’ என்று பெயரிடப்பட்டிருந்தது. இரண்டாவது, ‘புதிய தோட்டத்தில் மண் பராமரிப்பு குறித்த திரு.ழ வின் கருத்துக்களுக்குச் சில வார்த்தைகளில் பதில்.’ என்றும், மூன்றாவது ‘ஒட்டுப் போடுதல் குறித்து மேலும் சில குறிப்புகள்.’ என்றிருந்தது. மற்ற கட்டுரைகளும் அதுபோன்ற பெயருடன் இருந்தன. ஆனால் எல்லாக் கட்டுரைகளும் அமைதியற்றும், எரிச்சலுடனும் எழுதப்பட்டிருந்தன.
‘ரஷ்ய ஆப்பிள் மரங்கள்’ என்ற அமைதியான தலைப்போடிருந்த கட்டுரையும் எரிச்சலுடன் எழுதியதாக இருந்தது. யெகோர் செமினோவிச் தன்னுடைய கட்டுரைகளை ‘மறுபுறத்தை கேளுங்கள்’ என்று ஆரம்பித்தார்; ‘புரிந்தவர்களுக்கு ஒரு வார்த்தை’ என்று முடித்தார்; அதற்கிடையே அமில வார்த்தைகளில் ‘கல்லூரிகளின் நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு இயற்கையை ஆராயும் நமது தோட்டக்கலை நிபுணர்களின் படித்த முட்டாள்தனத்திற்கு’ எதிராக எழுதப்பட்டிருந்தது. மேலும் ‘மேலோட்டமான அறிவு கொண்டவர்களுக்கும், அருவருக்கத்தக்க புத்தி உடையவர்களுக்கும் கிடைக்கும் புகழைக் கொண்ட’ திரு. கவச்சேக்கு எதிராகவும் எழுதப்பட்டிருந்தது. இனி பழங்களைத் திருடியும் மரங்களைச் சேதப்படுத்தியும் மாட்டிக்கொள்ளும் குடியானவர்களைச் சவுக்கால் அடிக்கக்கூடாது என்று ஏற்படுத்தப்பட்ட சட்டத்தைக் குறித்து தேவையில்லாமல் எழுதப்பட்ட வருத்தத்தையும் கோவரின் கண்டார்.
‘அவரது எழுத்துக்கள் முழுமையானதாகவும், ஈர்க்கும்படியாகவும் இருக்கிறது’ என்று யோசித்த கோவரின், ‘ஆனாலும் இவற்றில் முழுவதும் கோபமும், போருக்குப் போகும் அவசரமும்தான் இருக்கிறது. எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கும்போல. எல்லாத் தொழில்களிலும் திறமையானவர்கள் அமைதியாகவும், இது போன்றவர்கள் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள்.’
அவர் தான்யாவை நினைத்துப் பார்த்தார். தன்னுடைய தந்தையின் கட்டுரைகளை எண்ணி மிகவும் பரவசமடைகிறாள். யோகோர் செமினோவிச் இப்போது நினைவிற்கு வந்தார். சிறிதாகவும், வெளிறியும், மெலிந்தும், தன்னுடைய தோள்பட்டை எலும்புகள் தெரிய, கருமையான, புத்திசாலித்தனத்தைக் காட்டும், எப்போதும் எதையோ தேடிக் கொண்டிருக்கும் விரிந்த கண்கள் கொண்ட தான்யாவை நினைத்தார். வேகமாக நடக்கும் யெகோர் செமினோவிச்சை மறுபடியும் நினைத்தார். எப்போதும் பேசவும், விவாதம் செய்யவும் ஆர்வமாக இருக்கும் தான்யாவையும், சாதாரண வார்த்தைகளையும் கைகளை ஆட்டியும், குரல் மாற்றியும் பேசும் அவளது குணத்தை நினைத்துப்பார்த்தார். அவள் அதிகமாகப் பதட்டத்தில் இருக்க வேண்டும்.
மறுபடியும் கோவரின் வாசிக்க ஆரம்பித்தார். ஆனால் அவருக்கு எதுவும் புரியவில்லை. எனவே புத்தகங்களைத் தூக்கி வீசிவிட்டார். இசையைக் கேட்டுக்கொண்டும், நடனமாடும்போதும் அவருக்கு இருந்த உற்சாகம் இன்னமும் மீதமிருந்தது. அதுவே அவருக்குப் பல சிந்தனைகளைக் கொடுத்தது. இந்த விசித்திரமான, இயற்கைக்கு மாறான துறவி தனக்கு மட்டுமே தெரிந்திருந்தார் என்றால், தான் மிகவும் மோசமாக நோய்வாய்ப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணினார். அதுவும் தன்னிலை மறந்து மாயத்தோற்றங்களைக் காணும் அளவிற்கு மோசமாக இருக்கவேண்டும். அந்தச் சிந்தனையே அவருக்குப் பயத்தைக் கொடுத்தது. ஆனால் அதுவும் வெகு நேரம் நீடிக்கவில்லை.
அவர் மெத்தையில் அமர்ந்தார். தலையைக் கைகளில் ஏந்திக்கொண்டு, அவரது உடல் முழுதும் நிரம்பிய மகிழ்ச்சியைச் சற்றுக் கட்டுப்படுத்த முயன்றார்; திரும்பவும் ஒரு நிமிடத்திற்கு அறையில் மேலும் கீழும் நடந்து விட்டு, வேலைக்குத் திரும்பினார். ஆனால் அவர் புத்தகத்தில் படித்த கருத்துகள் அவரைத் திருப்திப்படுத்தவில்லை. அவர் இன்னமும் விரிந்த, முடிவில்லாத, ஆச்சரியத்தை ஊட்டும் ஒன்றை எண்ணி ஏங்கினார்.
காலை விடியும்போது அவர் உடையை மாற்றிவிட்டு, விருப்பமில்லாமலேயே படுக்கைக்குச் சென்றார். சற்று நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைத்தார். இறுதியாக, யெகோர் செமினோவிச் தோட்டத்திற்கு வேலை செய்யச் செல்வது தெரிந்தவுடன், அவர் வேலையாளை அழைத்து, தனக்குச் சற்று வைன் கொண்டு வருமாறு ஆணையிட்டார். பல கோப்பைகள் வைன் குடித்தார். அவரது நினைவு மங்கியது. அப்படியே தூங்க ஆரம்பித்தார்.
(தொடரும்)