யெகோர் செமினோவிச்சும் தான்யாவும் அடிக்கடி தங்களிடையே சண்டையிட்டுக் கொண்டு, விரும்பத்தகாத வார்த்தைகளையும் சொல்லிக்கொள்வார்கள். அன்று காலையும் அப்படியே இருவரும் எரிச்சல் தரும் வார்த்தைகளைப் பேசிவிட, தான்யா அழுதுகொண்டே அவளுடைய அறைக்குச் சென்று விட்டாள்.
தேநீர் நேரத்திலும், இரவு உணவிற்கும்கூட அவள் கீழே வரவில்லை. முதலில் யெகோர் செமினோவிச், தனக்கு நீதியும் ஒழுங்கும் மட்டுமே முக்கியம் என்பதுபோல மிகவும் பெருமிதமாகவும், நேராகவும் நடந்து கொண்டிருந்தார். ஆனால் அவரால் அப்படியே வெகு நேரம் இருக்க முடியவில்லை. அவரது உற்சாகம் வடிந்தது. பூங்காவில் நடந்து கொண்டே ‘ஆகா! கடவுளே!’ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார். இரவு அவர் உணவை எடுத்துக்கொள்ளவில்லை. இறுதியாக, மனதால் மிகவும் துயரப்பட்டு, மூடியிருந்த கதவை மெதுவாகத் தட்டி, அதைவிட மெதுவாக அழைத்தார்.
‘தான்யா! தான்யா!’
கதவின் பின்னிருந்து அழுதுகொண்டிருக்கும் ஆனால் திடமான மனதுடன் இருக்கும் மெலிதான குரல் கேட்டது.
‘என்னைத் தனியே விடுங்கள்!… சொல்வதைக் கேளுங்கள்.’
தந்தையும் மகளும் இப்படியாக வருத்தமாக இருந்தது அவர்களது வீடு முழுவதும் எதிரொலித்தது. தோட்டத்தில் இருந்த வேலையாட்களும் விதிவிலக்கல்ல. கோவரின், அவரது சுவாரசியமான வேலையில் ஈடுபட்டிருந்தார். ஆனால், அவரும் களைத்தும் அசௌகரியமாகவும் உணர்ந்தார். எனவே அவர்களது பிரச்னையில் நுழைந்து, மாலைக்குள் அதை முடித்து வைக்க முடிவு செய்தார். அவர் சென்று தான்யாவின் அறைக்கதவை தட்டினார். அவளும் அவரை உள்ளே அனுமதித்தார்.
‘என்ன இது?’ என்று வேடிக்கையாக ஆரம்பித்தார்; கண்ணீரால் ஈரமான அவளுடைய முகத்தையும், சிவந்திருந்த முகத்தையும் பார்த்தவுடன், ‘அவ்வளவு தீவிரமான விஷயமா இது?’ என்றார்.
‘என்னை எப்படிக் கொடுமைப்படுத்துகிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று அவள் சொல்லும்போதே கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. ‘எப்படியெல்லாம் தொல்லை கொடுக்கிறார்!’ என்று கைகளைப் பிசைந்து கொண்டே தொடர்ந்தாள்.
‘நான் அவரிடம் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை… தேவையில்லாத வேலையாட்களை அனுப்பிவிடலாம் என்றுதான் சொன்னேன்… அதுவும் பகலில் மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னேன்… ஒருவாரமாக அவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை. நான்… இவ்வளவுதான் நான் சொன்னேன், அதற்கு என்னை நோக்கிக் கர்ஜித்துவிட்டு, சொல்லக்கூடாத பல வார்த்தைகளைச் சொன்னார்… மிகவும் மோசமான வார்த்தைகள்… மிகவும் அவமானகரமானவை. அனைத்தும் ஒன்றுமில்லாத விஷயத்திற்காக.’
‘இருக்கட்டும்!’ என்று அவளது முடியைச் சரி செய்துகொண்டே கோவரின் கூறினார். ‘நீயும் போதுமான அளவிற்குத் திட்டவும் அழவும் செய்துவிட்டாய்… அதுவே போதும். இப்படியே இருக்க முடியாது… அது சரியல்ல… எல்லாவற்றிற்கும் மேலாக அவர் உன்னை விரும்புகிறார் என்று உனக்கும் தெரியும்.’
‘அவர் என்னுடைய வாழ்வை முழுவதுமாக நாசம் செய்துவிட்டார்.’ என்று தேம்பினாள் தான்யா. ‘வசவுகளையும், அவமதிப்புகளையும் மட்டுமே நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவருடைய வீட்டில் என்னைத் தேவையில்லாதவளாக அவர் நினைக்கிறார். அப்படியே இருக்கட்டும்! அவருக்குக் காரணம் இருக்கும்! நாளை நான் இங்கிருந்து செல்லப் போகிறேன். தந்தித் துறையில் வேலை செய்யக் கல்வி கற்கப் போகிறேன்… அவர் அப்படியே இருக்கட்டும்!’
‘தான்யா! அழுவதை முதலில் நிறுத்து. அதனால் எந்த நன்மையையும் இல்லை… நீயும் எரிச்சலுடனும், அவசர முடிவெடுப்பவளாகவும் இருக்கிறாய். அதுவும் தவறுதான். வா, நான் உங்களுக்கு இடையே சமாதானம் செய்து வைக்கிறேன்.’
கோவரின் மென்மையாகவும், அவள் ஏற்கும்படியும் பேசினார். ஆனாலும் தான்யா, அவளுக்குப் பெரிய துரதிர்ஷ்டம் ஏற்பட்டது போல, தோள்களைக் குலுக்கிக்கொண்டும், கைகளைப் பிசைந்து கொண்டும் அழுது கொண்டிருந்தாள். அவளது சோகத்துக்கான காரணம் சிறியதாக இருந்தது. கோவரின் கூடுதலாக வருந்தினார். ஒரு நாள் முழுவதும் அல்லது அவள் சொல்வது போல வாழ்நாள் முழுவதும் அவளை வருத்தப்பட வைக்க எவ்வளவு சிறிய காரணம் போதுமானதாக இருக்கிறது!
தான்யாவைத் தேற்றிக் கொண்டிருந்தபோது, அவரை உலகில் உறவினராக எண்ணி விரும்புபவர்கள் அந்தப் பெண்ணும் அவளது தந்தையும் மட்டுமே என்று தோன்றியது. அவர்கள் இல்லை என்றால், சிறிய வயதிலேயே தாயையும், தந்தையையும் இழந்த அவர், வாழ்நாள் முழுவதும் மென்மையான வருடலும், நாம் உணரும் எளிமையான, காரணமற்ற அன்பும் என்னவென்றே தெரியாமல் இருந்திருப்பார். அவரது களைப்பும், சோர்வும் அடைந்த நரம்புகள், அழுதுகொண்டு, நடுங்கிக் கொண்டிருந்த பெண்ணின் நரம்புகளை உணர்ந்தது. அவரால் எப்போதும் நல்ல ஆரோக்கியமான பெண்ணை விரும்ப முடியாது என்று உணர்ந்தார்; ஆனால், வெளிறிய, மகிழ்ச்சியற்ற, பலவீனமான தான்யா அவரை ஈர்த்தாள்.
அவளது தலைமுடியையும், தோளையும் பார்ப்பது அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது; அவளது கரங்களை அழுத்தினார், கண்ணீரைத் துடைத்தார்… ஒருவழியாக அழுவதை நிறுத்தினாள். ஆனாலும் அவள் அவளது தந்தை பற்றிக் குறை சொல்வதை நிறுத்தவில்லை. அவள் அந்த வீட்டில் தாங்கமுடியாத துயரத்தோடு வாழ்வதையும் சொல்லி, கோவரினை தன்னுடைய நிலையை புரிந்துகொள்ள முயற்சி செய்யச் சொன்னாள்.
மெதுவாக அவள் முகத்தில் சிரிப்பு தோன்ற ஆரம்பித்தது. கடவுள் அவளை மிகவும் முன் கோபத்துடன் படைத்து விட்டதாகப் பெருமூச்சுடன் கூறினாள். இறுதியில் சத்தமாகச் சிரித்து, தன்னையே முட்டாள் என்று சொல்லிக்கொண்டு, அறையை விட்டு வெளியே ஓடினாள்.
சிறிது நேரம் கழித்து, கோவரின் தோட்டத்திற்குச் சென்றார். அங்கே யெகோர் செமினோவிச்சும் தான்யாவும் எதுவுமே நடக்காதது போல, பாதையில் ஒன்றாக நடந்துகொண்டே, ரொட்டியை உண்டு கொண்டிருந்தனர். இருவரும் மிகவும் பசியுடன் இருந்தார்கள்.
(தொடரும்)