Skip to content
Home » செகாவ் கதைகள் #6 – கறுப்புத் துறவி 5

செகாவ் கதைகள் #6 – கறுப்புத் துறவி 5

கறுப்புத் துறவி

தன்னுடைய சமாதான தூது வெற்றி பெற்றதை நினைத்து மகிழ்ச்சியடைந்த கோவரின் பூங்காவிற்குச் சென்றார். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தபோது, வண்டி வரும் சத்தமும் ஒரு பெண்ணின் சிரிப்புச் சத்தமும் கேட்டது. விருந்தினர்கள் மீண்டும் வருகிறார்கள். தோட்டத்தில் நிழல்கள் நீண்டு கொண்டிருந்தன; வயலின் இசையும், பெண்ணின் குரலும் அவரை வந்தடைந்தது; அவருக்கு இவை கறுப்புத் துறவியை நினைவுக்குக் கொண்டு வந்தது. இப்போது எந்த நாட்டிற்கு, எந்த கிரகத்திற்கு, அவரது பிம்பம் பறந்ததோ?

அந்தக் கதை அவரது நினைவிற்கு வந்து, வயலில் தெரிந்த அந்தக் கறுப்புப் பிம்பம் அவரது கற்பனையில் தோன்றியபோது, அவருக்கு எதிரில் இருந்த பைன் மரங்களின் பின்னிருந்து சிறிதும் சத்தமின்றி, நடுத்தர உயரம் கொண்ட ஒருவர் நடந்து வந்தார். வெளுத்திருந்த அவரது முடி மறைக்கப்படாமல் இருந்தது.

அவர் கறுப்பு நிறத்தில் உடை அணிந்து, வெறும் காலுடன், பிச்சைக்காரனைப் போல நடந்து வந்தார். பிணத்தைப் போல உணர்ச்சியற்றிருந்த அவரது முகத்தில் கறுப்புத் திட்டுகள் இருந்தன. தலையை ஆட்டிக் கொண்டே, அந்தப் பிச்சைக்காரனோ அல்லது தெரியாத நபரோ சத்தமில்லாமல் கோவரின் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே வந்து அமர்ந்தார். கோவரின் கறுப்புத்துறவியை அறிந்து கொண்டார். ஒரு நிமிடம், அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். கோவரின் மிகுந்த ஆச்சரியத்துடனும் துறவி மிகவும் கனிவுடனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘நீங்கள் மாயத்தோற்றம் போன்றவர்’ என்றார் கோவரின். ‘ஏன் நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள்? ஏன் ஒரே இடத்தில் இருக்கிறீர்கள்? உங்கள் கதையோடு அது ஒத்துப் போகவில்லையே.’

‘எல்லாமே ஒன்றுதான்’ என்று பதில் கூறிய துறவி, கோவரினை நோக்கி தன் முகத்தைத் திருப்பினார். ‘கதை, மாயத்தோற்றம், நான் – எல்லாமே உன்னுடைய உணர்ச்சிகரமான கற்பனைதான். நான் ஒரு மாயாவி.’

‘அதாவது நீங்கள் உண்மையில் இருக்கவில்லை என்று சொல்கிறீர்களா?’ என்று கோவரின் கேட்டார்.

‘என்ன வேண்டுமென்றாலும் நினைத்துக் கொள்ளுங்கள்’ என்று மெதுவாகச் சிரித்துக் கொண்டே பதில் கூறினார் துறவி. ‘நான் உன் கற்பனையில்தான் இருக்கிறேன். உன் கற்பனை இயற்கையின் ஒரு பாகமே. எனவே நானும் இயற்கையில் இருக்க வேண்டும்.’

‘உங்கள் முகம் மிகவும் புத்திசாலித்தனமாகவும் தனித்தும் இருக்கிறது. உண்மையில் நீங்கள் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்ந்திருக்க வேண்டும்’ என்றார் கோவரின். ‘இப்படியான தோற்றம் என்னுடைய கற்பனையில் தோன்றும் என்பது எனக்கே தெரியாது. என்னை ஏன் அப்படி ஆனந்தமாகப் பார்க்கிறீர்கள்? என்னை எண்ணி மகிழ்ச்சி அடைகிறீர்களா?’

‘ஆமாம். ஏனென்றால் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரில் நீங்களும் ஒருவர். உண்மைக்கு மட்டுமே நீங்கள் தலை வணங்குகிறீர்கள். உங்கள் சிந்தனை, உங்கள் எண்ணம், உங்களது ஆச்சரியமான அறிவியல், உங்களது வாழ்வு முழுவதும் கடவுளின் அருள் தெரிகிறது. எப்போதும் நித்தியமான அறிவிற்கும் அழகிற்கும் படைக்கப்பட்டது.’

‘எப்போதும் நித்தியமான உண்மையைச் சொல்கிறீர்கள். எப்போதும் நித்தியமான வாழ்வு இல்லை என்றால், நித்தியமான உண்மை என்பது தேவையானதாகவும், நெருங்கக் கூடியதாகவும் இருக்க முடியுமா?’

‘நித்தியமான வாழ்வு உண்டு’ என்று துறவி கூறினார்.

‘மனிதர்கள் எப்போதும் அழியாதவர்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள்.’

‘ஆமாம். உங்களைப் போன்றவர்களுக்கு உன்னதமான, அழகான எதிர்காலம் இருக்கிறது. உங்களைப் போன்றவர்கள் இன்னமும் அதிகமாக இருக்கும்போது, அந்த எதிர்காலம் இன்னமும் அருகில் வருகிறது. உங்களைப்போல் உயர்ந்த குறிக்கோளுடன், சுதந்தரமாகவும், மனசாட்சியின் படியும் வாழ்பவர்கள் இல்லை என்றால் மனிதம் என்பதும் இல்லாமல் போய்விடும். அதன் போக்கில் இயற்கையாக மாறி இருந்தால், அது வரலாற்றின் முடிவுவரை காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால், நீங்கள் அதை நித்திய சத்தியத்தின் அரசுக்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகக் கொண்டு வந்து விட்டீர்கள். இதுவே உங்களது உன்னத சேவை. மக்களின் மீதான கடவுளின் ஆசீர்வாதத்தில் நீங்கள் உங்களைப் போர்த்திக்கொண்டு இருக்கிறீர்கள்.’

‘நித்திய வாழ்வின் குறிக்கோள்தான் என்ன?’ என்றார் கோவரின்.

‘எல்லா வாழ்வின் குறிக்கோள்தான் – வாழ்வை அனுபவிப்பது. உண்மையான மகிழ்வு என்பது அறிவை அடைவதில் இருக்கிறது. நித்தியவாழ்வு எண்ணிலடங்கா, வற்றாத அறிவின் நீரூற்றுகளைக் கொண்டிருக்கிறது. அந்த அர்த்தத்திலேயே இப்படிச் சொல்லப்படுகிறது – என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு…’

‘நீங்கள் பேசுவதைக் கேட்பது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறது என்பதை உங்களால் உணர முடியாது’ என்று கோவரின், மகிழ்ச்சியில் கைகளைத் தேய்த்துக் கொண்டே கூறினார்.

‘எனக்கும் மகிழ்ச்சியே.’

‘ஆனாலும் நீங்கள் என்னைவிட்டு நீங்கும்போது, நீங்கள் உண்மையாகவே என் முன் தோன்றினீர்களா என்று நான் குழம்பிப் போகிறேன். நீங்கள் மாயத்தோற்றம், மாயாவி. அப்படி என்றால் நான் உடலால் நோய்வாய்ப்பட்டிருக்கிறேன் என்றாகிறது. சாதாரண நிலையில் நான் இல்லை என்பதாகிறது?’

‘அதனால் என்ன? அது உங்களுக்குக் கவலை தரக்கூடாது. உங்களது சக்தியை நீங்கள் அதிகமாக உபயோகித்திருப்பதால், நீங்கள் நோயுற்று இருக்கிறீர்கள். கருத்தை நோக்கிய பயணத்தில் நீங்கள் உங்களது உடல்நலத்தைத் தியாகம் செய்திருக்கிறீர்கள். அதை மட்டுமின்றி, உங்களது உயிரையும் நீங்கள் தியாகம் செய்யும் நேரம் அருகில் இருக்கிறது. அதற்கு மேலாக என்ன வேண்டும்? எல்லாத் திறனும் கொண்டவர்களும் மேன்மக்களும் அதையே விரும்புவார்கள்.’

‘ஆனால் என் உடல்நலம் சரியாக இல்லை என்றால், நான் எப்படி என்னையே நம்ப முடியும்?’

‘உலகம் கொண்டாடும் மேதைகள் எல்லாம் தரிசனங்களைப் பெறவில்லை என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? பேரறிவு கொண்டிருப்பது பித்துநிலை என்று அவர்களே சொல்லவும் செய்வார்கள். ஆனால், ஆரோக்கியமாகவும், சாதாரணமாகவும் இருப்பவர்கள் எல்லாம் வெறும் மந்தை மனிதர்கள் என்று நான் சொல்கிறேன். வயதாவது, களைத்துப் போவது, உடல் சீர்குலைவது முதலியவற்றைக் குறித்து மிகவும் வருந்துபவர்கள் தங்களது குறிக்கோளை நிகழ்காலத்தில் வைத்திருப்பவர்கள் – அவர்கள்தான் மந்தைகள்.’

‘ரோமர்கள் அதையே சிறந்தது என்கிறார்கள் – ஆரோக்கியமான உடலே ஆரோக்கியமான மனம்.’

‘கிரேக்கர்களும் ரோமர்களும் சொன்னது அனைத்தும் உண்மையல்ல. வாழ்த்துகள், விருப்பங்கள், உணர்ச்சிகள், கிளர்ச்சி எனக் கவிஞர்கள், தீர்க்கதரிசிகள், தியாகிகள் போன்றோரைச் சாதாரண மனிதர்களிடம் இருந்து பிரித்துக் காட்டும் அனைத்தும் மிருக வாழ்வோடு, ஆரோக்கியத்தோடு சம்பந்தமில்லாதது. திரும்பவும் சொல்கிறேன், ஆரோக்கியமாகவும் சாதாரணமாகவும் இருக்க வேண்டுமென்றால் நீ மந்தையுடன்தான் செல்ல வேண்டும்.’

‘நான் அடிக்கடி யோசிப்பதை நீங்களும் சொல்வது எவ்வளவு வினோதமாக இருக்கிறது!’ என்றார் கோவரின். ‘என்னுடைய ரகசிய சிந்தனைகளை அருகில் இருந்து கவனித்து, கேட்டவர்போலச் சொல்கிறீர்கள். சரி, என்னைப்பற்றிப் பேச வேண்டாம். நித்திய உண்மை என்று நீங்கள் எதைக் கூறுகிறீர்கள்?’

துறவி எந்தப் பதிலும் கூறவில்லை. கோவரின் அவரைத் திரும்பப் பார்த்தார், அவரது முகத்தைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. அவரது உருவம் மெதுவாக மறைந்து கொண்டிருந்தது; அவரது தலையும், கைகளும் மறைந்து போனது; அவரது உடலும் இருக்கையில் இருந்து மறைந்து, மாலை ஒளியில் முழுவதுமாக மறைந்து போனது.

‘தோற்றம் மறைந்துவிட்டது’ என்று சிரித்துக் கொண்டே கோவரின் கூறினார். ‘என்ன பரிதாபம்!’

வீட்டுக்கு உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் திரும்பினார். கறுப்புத் துறவி அவரைப்பற்றிக் கூறியது அவரது ஆன்மாவையும், அவரது மொத்த உயிர்க்கும் புகழ்ச்சியாக இருந்தது. நித்திய சத்தியத்தைக் கடைபிடிப்பவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது, கிறிஸ்துவின் ராஜ்ஜியத்தை பூமிக்குக் கொண்டு வருவதைப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னகர்த்தியவர்களில் ஒருவராக நிற்பது, மனித குலத்தின் பல்லாயிர ஆண்டுகால துயரங்கள், பாவங்கள், துன்பங்கள் முதலியவற்றில் இருந்து விடுவிப்பது, அனைத்திற்கும் ஒரே கருத்துக்காக அனைத்தையும் – இளமை, வலிமை, ஆரோக்கியம், பொது நன்மைக்காக உயிரை இழப்பது – என்ன உயர்ந்த, மென்மையான விஷயம்! இப்போது அவரது கடந்த கால வாழ்வு அவருக்கு நினைவில் வந்தது. மிகவும் ஒழுக்கமுடைய, தூய்மையான, கடும் உழைப்பும் கொண்ட வாழ்வு. அவர் அதில் கற்றுக்கொண்டவற்றையும், கற்றுவிப்பதையும் எண்ணிப் பார்த்தவுடன், துறவி அவரைப் பற்றிச் சற்றும் மிகையாக எதுவும் கூறவில்லை என்று தோன்றியது.

பூங்காவின் வழியே அவரைச் சந்திக்க தான்யா வந்து கொண்டிருந்தாள். அவளைக் கடைசியாகப் பார்த்தபோது அணிந்திருந்தது அல்லாமல் வேறு உடையை அணிந்திருந்தாள்.

‘இங்கேயா இருக்கிறீர்கள்? உங்களைத்தான் தேடிக் கொண்டிருந்தோம்… என்ன நடந்தது?’ என்று அவரது பிரகாசமும், பரவசமும் நிறைந்த முகத்தையும், கண்ணீர் நிறைந்த கண்களையும் பார்த்து, ஆச்சரியத்துடன் கேட்டாள்… ‘அன்ரியுஷா! நீங்கள் மிகவும் விநோதமானவர்.’

‘நான் திருப்தியாக இருக்கிறேன், தான்யா,’ என்று அவளது தோளில் கைகளை வைத்துக்கொண்டே கோவரின் கூறினார். ‘அதை விட அதிகமாக மகிழ்ச்சியாக இருக்கிறேன்! தான்யா, என் அன்பு தான்யா! நீ எனக்கு மிகவும் பிரியமானவள். தான்யா! நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.’

அவளுடைய இரண்டு கரங்களையும் மென்மையாக முத்தமிட்டார்.

‘என் வாழ்வின் மிகவும் பிரகாசமான, அற்புதமான, புதிரான நிமிடங்களை இப்போதுதான் வாழ்ந்திருக்கிறேன்… ஆனால் நான் எல்லாவற்றையும் சொல்ல முடியாது, அதை நீ நம்பவும் மாட்டாய் அல்லது என்னைப் பைத்தியம் என்று கூறுவாய்… உன்னைப் பற்றிப் பேசுவோம்! தான்யா! நான் உன்னைக் காதலிக்கிறேன். பல காலமாகக் காதலித்துக் கொண்டிருக்கிறேன். உன்னருகில் இருப்பதும், தினமும் உன்னைப் பத்து முறையாவது சந்திப்பதும் எனக்குத் தேவையாக இருக்கிறது. வீட்டிற்குத் திரும்பிய பின்னர், நீயில்லாமல் எப்படி வாழப்போகிறேன் என்று தெரியவில்லை.’

‘இல்லை!’ என்று சிரித்தாள் தான்யா. ‘எங்களை எல்லாம் இரண்டு நாட்களில் மறந்து விடுவீர்கள். நாங்கள் எல்லாம் உங்களுக்கு முன்னால் மிகவும் சிறுமையானவர்கள். நீங்கள் மிகவும் உயர்ந்தவர்.’

‘உண்மையாகவே கேட்கிறேன். உன்னை என்னுடன் அழைத்துச் செல்கிறேன், தான்யா! சரியா? என்னுடன் வருவாயா? என்னவளாக இருப்பாயா?’ என்றார்.

தான்யா இப்போது ஆச்சரியத்துடன் ‘என்ன?’ என்றாள். ஆனால் அவளால் சிரிக்க முடியவில்லை. அவளது கன்னங்களில் சிவப்புத் திட்டுக்கள் தோன்றின. வேகமாக மூச்சு விட்டாள். பூங்காவிற்குள் வேகமாக நடந்து சென்றாள்.

‘நான் யோசிக்கவில்லை… இது பற்றி யோசித்ததேயில்லை… இல்லை’ என்று தனது கைகளைக் குழப்பத்துடன் பிசைந்து கொண்டிருந்தாள்.

ஆனால் கோவரின் வேகமாக அவளது பின்னால் சென்று, அதே ஒளிரும், பரவசமான முகத்துடன் அவளிடம் பேசினார்.

‘என்னை முழுக்க ஆட்கொள்ளும் காதல்தான் எனக்கு வேண்டும். தான்யா, அந்தக் காதலை உன்னால் மட்டுமே கொடுக்க முடியும். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்! மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்!’

அவளோ வளைந்து, குறுகி சட்டென்று பத்து வருடங்கள் வயதானவளாக தெரிந்தாள். ஆனால் கோவரினிற்கு அவள் அழகாகத் தெரிந்தாள். மகிழ்வுடன் சத்தமாகச் சொன்னார்.

‘எவ்வளவு அழகாக இருக்கிறாள்!’

(தொடரும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *