Skip to content
Home » செகாவ் கதைகள் #8 – கறுப்புத் துறவி 7

செகாவ் கதைகள் #8 – கறுப்புத் துறவி 7

கறுப்புத் துறவி

குளிர் காலத்தின் நீண்ட இரவுகளில் ஒன்று. கோவரின் படுக்கையில் படுத்தபடி பிரெஞ்சு நாவலைப் படித்துக் கொண்டிருந்தார். நகரின் வாழ்வுக்கு இன்னமும் பழக்கப்படாத தான்யாவுக்குத் தினமும் மாலையில் தலை வலித்தது. எனவே அவள் சீக்கிரமே படுத்துத் தூங்கிவிட்டாள். தூக்கத்தில் புரியாத வார்த்தைகளைப் புலம்பிக் கொண்டே இருந்தாள்.

கடிகாரம் மூன்று மணி அடித்தது. கோவரின் மெழுகுவர்த்தியை அணைத்து விட்டுப் படுத்தார். நீண்ட நேரம் கண்களை மூடியபடி படுத்துக்கிடந்தார். அறையின் வெப்பத்தினாலும் தான்யா தூக்கத்தில் பேசிக் கொண்டிருந்ததாலும் அவரால் தூங்க முடிந்திருக்கவில்லை. மீண்டும் நாலரை மணிக்கு மெழுகுவர்த்தியை ஏற்றினார்.

கறுப்புத் துறவி படுக்கைக்கு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

ஒரு நொடி அமைதிக்கு பின்னர், துறவி அவரை நோக்கி ‘நல்ல இரவு! இப்போது என்ன சிந்தனை செய்து கொண்டு இருக்கிறீர்கள்?’ என்றார்.

‘பெயரும் புகழும் அடைவது பற்றி’ என்றார் கோவரின். ‘நான் படித்துக் கொண்டிருக்கும் பிரெஞ்சு நாவலில் அதன் கதாநாயகன் பல முட்டாள்தனமான காரியங்களைச் செய்கிறான். பெயரும் புகழும் அடையவேண்டுமென்று துடிக்கிறான். என்னால் அந்த வேட்கையைப் புரிந்து கொள்ள முடியவில்லை.’

‘ஏனென்றால் நீங்கள் மிகவும் புத்திசாலி. புகழை விளையாட்டுப் பொருளாகப் பார்ப்பதால், அது உங்களுக்கு விருப்பமாக இருப்பதில்லை.’

‘அதுதான் உண்மை.’

‘புகழ் உங்களை எந்த விதத்திலும் ஈர்க்கவில்லை. இறந்த பின்னர் ஏதேனும் சின்னத்தில் நம் பெயர் பொறிக்கப்படுவதில் என்ன புகழ்ச்சியோ, மகிழ்ச்சியோ இருக்கிறது. காலத்தின் போக்கில் அழிந்து போகும். மனிதனின் நினைவு குறைவாக இருப்பதால், அனைத்து சாதனையாளர்களின் பெயர்களும் நினைவில் இருப்பதில்லை.’

‘ஆமாம். எதற்காக நினைவில் வைத்திருக்க வேண்டும்?… வேறு ஏதாவது பேசுவோம். மகிழ்ச்சி பற்றி. மகிழ்ச்சி என்றால் என்ன?’ என்றார் கோவரின்.

மணி ஐந்து அடித்தபோது, அவர் கால்களைக் கீழே இருந்த விரிப்பில் வைத்துக் கொண்டு, படுக்கையில் அமர்ந்தவாறு, துறவியைப் பார்த்துத் திரும்பியிருந்தார்.

‘பழைய காலங்களில், ஒரு மன்னர் (பாலிக்ரேட்டஸ்) தன்னுடைய அபரிமிதமான மகிழ்ச்சியைக் கண்டே பயந்து, கடவுள்களை சமாதானப்படுத்த தன்னுடைய பிரியமான மோதிரத்தை அவர்களுக்கு அர்ப்பணித்துவிட்டார். கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நானும், அந்த பாலிக்ரேட்டஸைப் போல, என்னுடைய மகிழ்ச்சியைக் கண்டு சிறிது அச்சமடைகிறேன். காலையில் இருந்து இரவு வரை மகிழ்ச்சியாக இருக்கிறேன். மகிழ்ச்சி என்னை முழுமையாக ஈர்த்து, மற்ற உணர்வுகளை இல்லாமல் செய்துவிடுகிறது. வருத்தம், துன்பம், களைப்பு என அனைத்து உணர்வுகளுக்கும் எனக்கு அர்த்தம் தெரியாது. நான் தீவிரமாக பேசுகிறேன், எனக்கே சந்தேகமாக இருக்கிறது.’

‘ஏன்?’ என்று துறவி ஆச்சரியமாகக் கேட்டார். ‘அப்படியென்றால் மகிழ்ச்சி என்பது ஏதோ வேற்றுலக உணர்வு என்று நினைக்கிறாயா? அதுவே வாழ்வின் இயற்கையான நிலை என்று நினைக்கவில்லையா? அது சரியல்ல! மனிதன் தன்னுடைய மனதிலும், ஒழுக்கத்திலும் உயர்ந்த நிலைக்குச் செல்லும் போது அவன் மிகவும் சுதந்திரமாக உணர்கிறான், வாழ்வில் இன்னமும் அதிகமாக திருப்தியை அடைகிறான். சாக்ரடீஸ், டயோஜீனேஸ், மார்கஸ் ஆரெலிஸ் முதலியோர் மகிழ்ச்சியை மட்டுமே அறிந்தவர்கள். அவர்களுக்குத் துக்கமே இல்லை. ‘சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்’ என்று திருத்தூதர் (இயேசுவின் சீடர்) கூறுகிறார். அப்படியே இருங்கள்!’

‘அப்புறம் திடீரென்று கடவுள்களுக்குக் கோபம் வந்துவிடும்’ என்று கோவரின் வேடிக்கையாகக் கூறினார். ‘ஆனால் அவர்கள் என்னுடைய மகிழ்ச்சியைத் திருடி, என்னைப் பட்டினி போடவும், நடுங்கவும் செய்தால் அதை விரும்ப மாட்டேன்.’

தான்யா அப்போதுதான் விழித்தாள். அவளுடைய கணவனை அதிர்ச்சியுடனும், பயத்துடனும் பார்த்தாள். அவர் பேசிக் கொண்டிருந்தார். திரும்பி நாற்காலியை பார்த்தார். கைகளை ஆட்டினார். சிரித்தார். அவரது கண்கள் ஒளிர்ந்தன. அவரது சிரிப்பு வித்தியாசமாக இருந்தது.

‘அன்ரியுஷா! நீங்கள் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டாள்.

அவர் துறவியை நோக்கி நீட்டியக் கையைப் பிடித்துக் கொண்டாள். ‘அன்ரியுஷா! யாரது?’

‘யாரா? ஓ, துறவியா!… அவர் அங்கே அமர்ந்திருக்கிறார்’ என்று கறுப்பு துறவியைச் சுட்டிக்காட்டினார்.

‘அங்கே யாருமில்லை, அன்ரியுஷா! யாருமில்லை… உங்களுக்கு உடல் சரியில்லை.’

தான்யா அவளது கணவனைக் கட்டிக் கொண்டாள். அவரை அந்த மாயத் தோற்றத்தில் இருந்து காப்பாற்றுவது போல, இறுகப் பிடித்துக் கொண்டு, தன் கைகளால் அவரது கண்களை மூடினாள்.

‘உங்களுக்கு உடல்நிலை சரியில்லை’ என்று நடுக்கத்துடன், தேம்பினாள். ‘அன்பே! இப்படி சொல்வதற்கு என்னை மன்னித்து விடுங்கள்! உங்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் உடல் சரியில்லை என்று நினைக்கிறேன்… உங்கள் உடல்நிலை சரியில்லை, அன்ரியுஷா!’

அவளது நடுக்கம் இப்போது அவருக்கும் வந்தது. மறுபடியும் நாற்காலியைப் பார்த்தார். அதில் யாருமில்லை. அவரது கைகளும், கால்களும் மிகவும் வலிமையற்று இருந்தன. அவர் எழுந்து உடை அணிய ஆரம்பித்தார்.

‘ஒன்றுமில்லை, தான்யா, ஒன்றுமில்லை… ஆனால் எனக்கு கொஞ்சம் உடல் சரியில்லை… அதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்’ என்று தடுமாற்றத்துடன் பேசினார்.

‘நானும் அதைப் பல காலமாக கவனித்து வருகிறேன். அப்பாவும் அதைக் கவனித்திருக்கிறார்’ என்று தன்னுடைய அழுகையைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டே கூறினாள். ‘நீங்களாகவே ஒரு மாதிரியாகப் பேசிக் கொள்கிறீர்கள், வினோதமாக சிரிக்கிறீர்கள்… தூங்காமல் இருக்கிறீர்கள். கடவுளே, கடவுளே! காப்பாற்றுங்கள்!’ என்று பயத்துடன் அழுது கொண்டிருந்தாள். ‘அன்ரியுஷா! பயப்படாதீர்கள், பயப்படாதீர்கள்… கடவுள் இருக்கிறார், பயப்படாதீர்கள்!…’

அவளும் உடையை மாற்றிக் கொண்டாள்… அவளைப் பார்க்கும் போது தான் கோவரினிற்குத் தன்னுடைய நிலை புரிய ஆரம்பித்தது. கறுப்பு துறவியும், அவருடன் நடத்திய உரையாடலுக்குமான அர்த்தம் இப்போதுதான் புரிந்தது. தான் சித்தம் கலங்கிய நிலையில் இருப்பது அவருக்குப் புரிந்தது.

எதற்கென்று தெரியாமல் இருவரும் உடை மாற்றிக் கொண்டு, முன்னறைக்குச் சென்றனர். அவள் முதலிலும், அவர் பின்னாலும் சென்றனர். அங்கே யெகோர் செமினோவிச் அமர்ந்திருந்தார். அவரும் அவர்களுடன் தங்கியிருந்தார். தான்யாவின் அழுகைச் சத்தத்தில் எழுந்திருந்தார்.

‘அன்ரியுஷா! பயப்படாதீர்கள்…’ என்று காய்ச்சலில் நடுங்குவதைப் போல நடுக்கத்துடன் தான்யா கூறினாள். ‘பயப்படாதீர்கள்… அப்பா, இதுவும் கடந்து போகும்… கடந்து போகும்’ என்றாள் தந்தையைப் பார்த்து.

கோவரின் மிகவும் உணர்ச்சி மயமான நிலையில் இருந்ததால், அவரால் பேசவும் முடியவில்லை. அவர் முழுவதையும் வேடிக்கையாக எண்ண முயன்றார். அவரது மாமனாரைப் பார்த்து, சொல்ல ஆரம்பித்தார்: ‘என்னைப் பாராட்டுங்கள்… என் சித்தம் பேதலித்துவிட்டதாக தெரிகிறது.’ ஆனால், அவரது உதடுகள் மட்டுமே அசைந்தன. துயரத்துடன் புன்னகை மட்டும் தோன்றியது.

ஒன்பது மணிக்கு அவருக்கு மேலங்கியும், குளிருக்கு அதன் மேலே இன்னொரு அங்கியும் அணிவித்து, சால்வையால் போர்த்தி, மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அவர் சிகிச்சையைத் தொடங்கினார்.

0

கோடைக்காலம். மருத்துவரின் ஆலோசனைப்படி கோவரின் திரும்பவும் கிராமத்திற்கு வந்திருந்தார். அவரது ஆரோக்கியம் திரும்பியிருந்தது. அவர் இப்போது கறுப்புத் துறவியைப் பார்ப்பதில்லை. அவருடைய உடல் பலத்தை மட்டுமே திரும்பப் பெற வேண்டியிருந்தது. அவரது மாமனாருடன் வாழ்ந்து வந்தார். பால் நிறையக் குடித்தார். ஒருநாளில் இரண்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்தார். வைன் குடிப்பதையும், புகை பிடிப்பதையும் முற்றிலுமாக நிறுத்தியிருந்தார்.

ஜூன் 19 அன்று, எலியாவின் தினத்திற்கு முன், அவர்கள் வீட்டில் ஒரு மாலை பிரசங்கம் ஏற்பாடு ஆகியிருந்தது. பாதிரியார், பணியாளிடம் இருந்து தூபத்தை வாங்கியவுடன், வீடு தேவாலயம் போன்ற வாசனை வீச ஆரம்பித்தது. கோவரின் மிகவும் களைப்பாக உணர்ந்தார். தோட்டத்திற்குச் சென்றார். அவரைச் சுற்றிப் பூத்திருந்த அழகான பூக்களைச் சற்றும் கவனிக்காமல், மேலும் கீழுமாக நடந்து, அங்கிருந்த இருக்கையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.

அங்கிருந்து பூங்கா வழியாக நடக்க ஆரம்பித்தார். நதியின் கரையை அடைந்து, அதில் இறங்கி நதியைக் கேள்விக்குறியோடு பார்த்தார். கடந்த வருடம் இளமையும், மகிழ்ச்சியும் கொண்டு முணுமுணுத்துக் கொண்டிருந்த பெரும் பைன் மரங்கள், இப்போது அவரைத் தெரியாததுபோல அமைதியாகவும், அசையாமலும் நின்று கொண்டிருந்தன… உண்மையில், அவரது வெட்டப்பட்ட தலைமுடி, மெதுவான நடை, வெளிறியும் பருத்தும் மாறியிருந்த முகம் முதலியவற்றால் அவரை எங்கும் யாரும் அடையாளம் காண்பது கடினமே.

நதியைக் கடந்தார். சென்ற வருடம் புல்லரிசி விளைந்திருந்த வயலில், இப்போது ஓட்ஸ் பயிரிடப்பட்டிருந்தது. சூரியன் அஸ்தமித்திருந்தது. தொடுவானில் தெரிந்த அகன்ற, சிவப்பான வெளிச்சம் வானிலை மாறப்போவதைக் கூறிக் கொண்டிருந்தது. எல்லாம் அமைதியாக இருந்தது.

கடந்த வருடத்தில் அவர் முதலில் கறுப்புத் துறவியைப் பார்த்த இடத்தைப் பார்த்துக் கொண்டே, கோவரின் இருபது நிமிடங்கள், வெளிச்சம் போகும்வரை, பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வீட்டிற்குக் களைப்பும், திருப்தியில்லாமலும் திரும்பியபோது, யெகோர் செமினோவிச்சும் தான்யாவும் மொட்டை மாடிப் படிகளில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தவர்கள், அவரைப் பார்த்தவுடன், பேச்சை நிறுத்தினார்கள். அவர்கள் முகத்தைக் கொண்டே, அவரைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று கோவரின் யூகித்தார்.

‘நீங்கள் பால் அருந்தும் நேரம் இது’ என்று தான்யா, அவளது கணவனிடம் கூறினாள்.

‘இல்லை, இப்போது வேண்டாம்’ என்று அவரும் கடைசிப் படியில் அமர்ந்துகொண்டே பதில் கூறினார். ‘நீ குடித்து விடு. எனக்கு வேண்டாம்.’

தான்யா அவளது தந்தையை அச்சத்துடன் பார்த்துக் கொண்டாள். மெதுவாகக் குற்றம் தெறிக்கும் குரலில்,

‘பால் உங்களுக்கு நல்லது என்று உங்களுக்கே தெரியும்.’

‘ஆமாம், நல்லதுதான்’ என்று சிரித்தார் கோவரின். ‘வாழ்த்துக்கள், சென்ற வாரத்தில் இருந்து நான் ஒரு பவுண்டு எடை அதிகரித்திருக்கிறேன்.’ தலையைக் கைகளால் பிடித்துக் கொண்டு, மிகவும் வலியுடன் கூடிய குரலில், ‘ஏன்… என்னை ஏன் குணமாக்கினாய்? மருந்துக் கலவைகள், ஓய்வு, சுடு தண்ணீர் குளியல், ஒவ்வொரு வாய் சாப்பாட்டையும், ஒவ்வொரு அடியையும் பயத்துடன் பார்க்கிறேன்… இது எல்லாம் என்னை முட்டாளாக ஆக்கிவிடும். எனக்கு சித்தம் பேதலித்திருந்தது… மேன்மையான நிலையை அடையும் வெறியுடன் இருந்தேன்… ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக நான் உற்சாகத்துடனும், சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தேன்… நான் சுவாரசியமானவனாகவும், புதியவனாகவும் இருந்தேன். இப்போது நான் உலகத்தைப்போல மிகவும் விவேகமுள்ளவனாகி விட்டேன். நான் சாதாரணமானவன் ஆகிவிட்டேன். வாழ்வதும் இப்போது களைப்பாக இருக்கிறது… ஓ, என்ன கொடுமை… என்னை எப்படிக் கொடுமையாக நடத்தி இருக்கிறீர்கள்! நான் மாயத்தோற்றங்களைக் கண்டேன்… அதனால் யாருக்கு என்ன தீமை விளைந்தது? என்ன தீமை?’

‘நீங்கள் சொல்வது கடவுளுக்குத்தான் தெரியும்!’ என்று யெகோர் செமினோவிச் பெருமூச்சு விட்டார். ‘நீங்கள் சொல்வதைக் கேட்பதும் முட்டாள்தனமாக இருக்கிறது.’

‘அப்படியென்றால் கேட்காதீர்கள்.’

மற்றவர்கள் அங்கிருப்பது, குறிப்பாக யெகோர் செமினோவிச் இருப்பது, கோவரினுக்கு எரிச்சலைத் தந்தது. அவரது மாமனாரிடம் அவர் எந்த உணர்ச்சியும் இல்லாமலும், மரியாதை இல்லாமலும் பேசினார். அவரைக் கடுமையாகவும், வெறுப்புடனும் பார்த்தார்.

யெகோர் செமினோவிச்சிற்குத் தன்னுடைய தவறு என்னவென்று தெரியாததால், குழப்பமும் குற்றவுணர்வும் அடைந்தார். அவர்களுக்கு இடையில் இருந்த நல்ல உறவு இப்படி மாறியது தான்யாவிற்குப் புரியவில்லை என்பதால், அவள் அவளது தந்தையின்மீது சாய்ந்து, அவரது கண்களைப் பயத்துடன் பார்த்தாள். அவர்களுக்கு இடையிலான உறவு தினமும் மோசமாக மாறி வருகிறது என்பது அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

அவளுடைய தந்தை மிகவும் வயதானவராக இருந்தார். அவளது கணவனோ மிகவும் எரிச்சல் கொண்டவராகவும், கிறுக்குத்தனமாகவும், எளிதில் உணர்ச்சி வசப்படுபவராகவும், சுவாரசியம் இல்லாதவராகவும் இருந்தார். அவள் சிரிப்பதையும், பாடுவதையும் நிறுத்திவிட்டாள். சாப்பிடுவதில்லை. இரவு முழுவதும் அவள் தூங்குவதில்லை. பெரிய துயரம் ஒன்றை எதிர்பார்த்தே அவளது வாழ்வு நகன்றது. அதை நினைத்து அவள் தன்னைத் தானே வதைத்துக் கொண்டதில், நாள் முழுவதும் எந்த உணர்வும் இல்லாமலேயே இருந்தாள். வீட்டில் பிரசங்கம் நடந்தபோது, அவளது தந்தை அழுததுபோல அவளுக்குத் தெரிந்தது; அதைப்பற்றி யோசிக்காமல் இருக்க முயன்று கொண்டே, அவள் அங்கே அமர்ந்திருந்தாள்.

‘புத்தரையும், முகமதுவையும், ஷேக்ஸ்பியரையும் அவர்களது உறவினர்களும், மருத்துவர்களும் அவர்களைப் பரவசத்தில் இருந்தும், அகவெழுச்சியில் இருந்தும் குணப்படுத்த முயலாமல் இருந்தது குறித்து அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்!’ என்றார் கோவரின். ‘முகமதுவிற்குத் தினமும் மருந்துக் கலவைகளை எடுத்துக்கொண்டு, இரண்டு மணி நேரம் மட்டும் வேலை செய்து, பால் குடித்துக் கொண்டு இருந்திருந்தால், அந்த அதிசயமான மனிதர் அவரது நாய் சாதித்திருக்க முடிந்ததைக்கூடச் சாதிக்க முடியாமல் போயிருப்பார். மருத்துவர்களும், நல்ல மனம் கொண்ட உறவினர்களும் மனித குலத்தை முட்டாளாக்கவே செய்கிறார்கள். சிறிது காலத்தில் சாதாரணமாக இருப்பதே மேதமையாகக் கருதப்படும். அத்தோடு மனித இனமே அழிந்து போகும். உனக்கு மட்டும் புரிந்தால்’ என்று கோவரின் எரிச்சலுடன், ‘உனக்கு மட்டும் நான் எவ்வளவு நன்றியுடன் இருக்கிறேன் என்பது புரிந்தால்!’

மிகவும் எரிச்சலுடன் இருப்பதை உணர்ந்தார். எனவே, அதிகமாகப் பேசுவதற்கு முன், எழுந்து வீட்டிற்குள் சென்றார். காற்றில்லாத இரவாக இருந்தது. சன்னலின் வழியே புகையிலை, ஜலாப்பு செடிகளின் வாசனை வந்தது. இருண்ட முன்னறையில் இருந்த சன்னலின் வழியே, தரையின் மீதும், பியானோவின் மீதும் நிலவொளி விழுந்து கொண்டிருந்தது. கோவரினிற்குச் சென்ற கோடைக் காலத்தின் மகிழ்ச்சி நினைவிற்கு வந்தது. அப்போது காற்று இப்போது போலவே ஜலாப்பு செடி வாசத்துடனும், நிலவொளியுடனும் இருந்தது… சென்ற வருடத்தின் நிலையைத் திரும்பக் கொண்டு வர எண்ணி, சுருட்டைப் பற்ற வைத்தார். வேலையாளை வைன் கொண்டு வரச்சொன்னார். சுருட்டு கசந்தும், வைன் சென்ற வருடம்போல இல்லாமலும் இருந்தது. பழக்கமில்லால் போவது எவ்வளவு மோசமாக இருக்கிறது! ஒற்றைச் சுருட்டு, சிறிது வைன் குடித்தவுடன் அவருக்குத் தலை சுற்றுவதாகத் தோன்றியது. சிறிது மருந்து கலவையை எடுத்துக் கொண்டார்.

படுக்கைக்குச் செல்வதற்கு முன், தான்யா அவரிடம் சொன்னாள்.

‘அப்பா உங்களை மிகவும் மதிக்கிறார். ஆனால் நீங்கள் அவர்மீது எதனாலோ எரிச்சலுடன் இருக்கிறீர்கள். அது அவருக்கு மிகவும் துயரமாக இருக்கிறது. அவரது முகத்தைப் பாருங்கள்; ஒவ்வொரு மணி நேரமும் அவருக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. அன்ரியுஷா! கிறிஸ்துவின் பெயரால், உங்களது மறைந்த தந்தையின் பெயரால் நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய மன நிம்மதிக்காகவேனும் அவரிடம் அன்பாக இருங்கள்!’

‘மாட்டேன். அதற்கு எனக்கு விருப்பமும் இல்லை.’

‘ஏன்?’ என்று தான்யா நடுங்கினாள். ‘எனக்கு ஏன் என்று தெரியவேண்டும்.’

‘ஏனென்றால், எனக்கு அவரைப் பிடிக்கவில்லை’ என்று கோவரின் கவனமின்றிப் பதில் கூறினார். ‘அதைப் பற்றிப் பேச வேண்டாம்; அவர் உனது தந்தை.’

‘என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை’ என்றாள் தான்யா. அவளுடைய கைகளை நெற்றியில் வைத்து அழுத்திக் கொண்டு, வெறித்துப் பார்த்தாள். ‘ஏதோ பயங்கரமான, புரியாத ஒன்று இந்த வீட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அன்ரியுஷா! நீங்கள் மாறிவிட்டீர்கள்; நீங்கள் நீங்களாக இல்லை… மிகவும் புத்திசாலியும், தனித்தன்மையும் கொண்ட நீங்கள் சிறிய விஷயங்களுக்கு எல்லாம் எரிச்சல் அடைகிறீர்கள்… நீங்கள் முன்புபோல இருந்தீர்கள் என்றால், இப்போது எரிச்சல் அடையும் விஷயங்களைப்பற்றி நம்பவும் மாட்டீர்கள். இல்லை… கோபப்படாதீர்கள், கோபப்படாதீர்கள்,’ என்று அவளது வார்த்தைகளால் பயமுற்று, அவரது கரங்களை முத்தமிட்டாள். ‘நீங்கள் மிகவும் புத்திசாலி, நல்லவர், மேன்மையானவர். அப்பாவிடம் நியாயமாக நடந்து கொள்ளுங்கள். அவரும் மிகவும் நல்லவர்.’

‘அவர் நல்லவரில்லை; நல்ல மனநிலை கொண்டவர். இந்த நாடக மாமாக்கள் – உன் தந்தையைப் போல – நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, மேம்போக்கான முகமும் கொண்டவர்கள். நாவல்களிலோ, நாடகங்களிலோ, வாழ்விலோ ஒரு நேரத்தில் இவர்கள் எனக்குக் கேளிக்கையாக இருந்தார்கள். இப்போது அவர்களை நான் வெறுக்கிறேன். அவர்கள் மிகப்பெரிய சுயநலவாதிகள்… அளவுக்கு மிஞ்சி நுகர்வதும், மாடுகளைப்போல, பன்றிகளைப்போல அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கைகளும் மிகவும் அருவறுப்பானவை.’

தான்யா படுக்கையில் அமர்ந்து, தலையைத் தலையணையில் வைத்தாள்.

‘இது சித்திரவதை!’ என்றாள்; அவளது குரலில் இருந்து அவள் மிகவும் களைத்திருக்கிறாள் என்பதும், அவளால் பேசவும் முடியவில்லை என்பதும் தெரிந்தது. ‘சென்ற குளிர்காலத்தில் இருந்து, ஒரு நேரமும் ஓய்வில்லை… என்ன கொடுமை, கடவுளே! நான் படும் பாடு…’

‘ஆமாம்! நான் ஏரோது மகாராஜா, நீயும், உன் தந்தையும் நான் கொலை செய்த குழந்தைகள். ஆமாம்!’

தான்யாவிற்கு அவரது முகம் அவலட்சணமாகவும் விருப்பமில்லாததாகவும் தோன்றியது. அதில் தெரிந்த வெறுப்பும் கண்டனமும் அதற்கு ஒத்துவரவில்லை. அவரது முகத்தில் ஏதோ ஒன்று குறைவது போலவும் தோன்றியது; அவரது முடியை வெட்டியதில் இருந்து, ஏதோ மாற்றமடைந்ததாகவே தோன்றியது. பதிலுக்கு அவரை நோகடிக்கும் படியாக ஏதாவது சொல்லவேண்டும் என்று தோன்றியது. ஆனால், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். அவளது பயம் அதிகமாக, அறையை விட்டு வெளியேறினாள்.

(தொடரும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *