கோவரினுக்குத் தனிப் பேராசிரியராக ஒப்புதல் கிடைத்தது. அவருடைய முதல் உரை டிசம்பர் 2ஆம் தேதிக்கு உறுதிப்படுத்தப்பட்டு, பல்கலைக்கழகத்தின் அறிவிப்புப் பலகைகளில் பதிப்பிக்கவும்பட்டது. ஆனால், அந்த நாள் வந்தபொழுது, கோவரின் நோய்வசப்பட்டிருப்பதால் அன்று பல்கலைக்கழகத்திற்கு வர இயலாது என்றொரு தந்தி பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு வந்தது.
ரத்த வாந்தி எடுத்திருந்தார். ஒரே மாதத்தில் இருமுறை அவர் ரத்தத்தை வாந்தியாக எடுத்தார். மிகவும் வலிமை குன்றியும், எப்போதும் தூக்கம் வரும் நிலையிலும் இருந்தார். ஆனால், இந்த நோய் அவருக்குப் பயம் தரவில்லை. ஏனென்றால், அவரது தாயார், இதே நோயுடன் பத்து வருடங்களுக்கு மேல் வாழ்ந்திருந்தார். அவரது மருத்துவர்களும் அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், அவர் எது குறித்தும் கவலைப்படாமல், பேச்சைக் குறைத்து இயல்பாக வாழ்ந்து வர வேண்டும் என்றும் கூறினார்கள்.
ஜனவரியில் மறுபடியும் அவரது உரை தள்ளி போடப்பட்டது. பிப்ரவரியில் பாடத்தை ஆரம்பிப்பதற்கான காலம் தாண்டிவிட்டது. எனவே, அடுத்த வருடத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டது.
அவர் இப்போது தான்யாவுடன் வாழவில்லை. வயதில் மூத்த இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். அவள் அவரைச் சிறு குழந்தையைப்போல பார்த்துக் கொண்டாள். அவர் இப்போது அமைதியாகவும் பணிவாகவும் இருந்தார். அவள் சொல்வதை விருப்பமுடன் ஏற்றுக்கொண்டார். வர்வாரா நிக்கோலேயேவ்னா, அதுதான் அவளது பெயர். அவரைக் கிரிமியாவிற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தபோது, அதனால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை என்று அவர் நினைத்தாலும், அதற்கு ஒத்துக் கொண்டார்.
ஒரு நாள் மாலை நேரத்தில் அவர்கள் செவஸ்டாபோல் சென்றடைந்தார்கள். அங்கிருந்து மறுநாள் யால்டா செல்ல வேண்டியிருந்ததால், அன்றிரவை அங்கே கழிக்க முடிவு செய்திருந்தார்கள். நீண்ட பயணத்தால் இருவரும் களைத்திருந்தார்கள். வர்வாரா நிக்கோலேயேவ்னா தேநீர் அருந்திவிட்டு, படுக்கைக்குச் சென்று விட்டாள். கோவரின் விழித்திருந்தார். அவர்கள் ரயில் நிலையத்திற்குக் கிளம்புவதற்கு ஒரு மணி நேரம் முன்பு, தான்யாவிடம் இருந்து கடிதம் ஒன்று வந்திருந்தது. அதை வாசிக்காமல் வைத்திருந்தார்; அந்தக் கடிதம் பற்றிய எண்ணமே அவருக்கு ஒவ்வாததாக இருந்தது. அவருடைய ஆழ்மனதில் தான்யாவுடனான திருமணம் ஒரு தவறு என்பதை அவர் உணர்ந்திருந்தார். அவளிடம் இருந்து பிரிந்ததற்காக மகிழ்ச்சியே அடைந்தார்.
அவருடன் வாழ்ந்த நாட்களின் இறுதியில் அவளுடைய புத்திசாலித்தனமான கண்களைத் தவிர வெறும் உயிருள்ள பிணமாக மாறியிருந்ததை நினைக்கும் போதெல்லாம் அவருக்கு தன் மீதே பச்சாதாபமும் வெறுப்பும் வந்தது. கடித உறையில் இருந்த கையெழுத்து, அவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரிடம் இருந்த கொடூரத்தையும், அநீதியையும் நினைவுபடுத்தியது. தன்னுடைய ஆன்மீக வறட்சி, தனிமை, வாழ்வின் மீது பிடிப்பின்மை முதலியவற்றிற்காக அவற்றிற்கு எந்த விதத்திலும் காரணம் இல்லாதவர்கள்மீது தான் பழி வாங்கியதையும் நினைவுறுத்தியது…
அவர் நோயுற்றதில் இருந்து எழுதிய கட்டுரைகள், உரைகள் அனைத்தையும் கிழித்து, சன்னலின் வழியே எறிந்ததும், அவை அங்கிருந்த மரத்தின் மீதும், பூக்களின் மீதும் விழுந்ததும் அவருக்கு நினைவுக்கு வந்தது; அந்தப் பக்கங்களில் எல்லாம் விநோதமும், ஆதாரமுமில்லாத பாவனைகளும், ஒன்றுமில்லாத எரிச்சல்கள், மேதமையை நோக்கிய வெறியும் மட்டுமே இருந்தன. அவை எல்லாம், அவர் அவரது தவறுகளை மட்டுமே எழுதி இருக்கிறார் என்று அவருக்குத் தோன்றச் செய்தது.
ஆனாலும், அவர் தனது கடைசிப் புத்தகத்தைக் கிழித்து, சன்னலின் வழியே எறிந்தவுடன், அவர் மனது கசந்தும் வெறுப்பும் அடைந்து இருந்தது. வெளியே சென்று அவரது மனைவியிடம் கொடூரமாகப் பேசி அதைத் தீர்த்துக் கொண்டார். ஆண்டவா! அவளது வாழ்வை எப்படியெல்லாம் நாசம் செய்திருக்கிறார்! அவளைப் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், ஒருமுறை அவர் அவளிடம் எப்படி அவளது தந்தை அவளைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி தன்னிடம் கூறினார் என்பதைக் கூறினார்; அப்போது அதைக் கேட்ட யெகோர் செமினோவிச், அறையில் நுழைந்து, என்ன பேசுவது என்று தெரியாமல், கால்களை மட்டும் தரையில் தட்டிக் கொண்டு, அவரது நாக்கை அறுத்ததுபோல ஊளையிட்டார். தான்யா, அவளது தந்தையைக் கண்டு, உள்ளத்தை உருக்கும் முறையில் கத்தி தரையில் மயங்கி விழுந்தாள். கோரமான காட்சி அது.
கடிதத்தில் இருந்த தெரிந்த கையெழுத்தைக் கண்டவுடன் அவருக்கு இந்த நினைவுகள் எல்லாம் வந்தன. மாடியில் வெளியே சென்றார். அங்கே வெப்பமாகவும் அமைதியாகவும் இருந்தது. கடலில் இருந்து உப்பு வாசம் வந்தது. நிலவொளியும், நகரின் வெளிச்சமும் கடலில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அதன் நிறமும் சொல்லமுடியாத நிறத்தில் இருந்தது. அடர் நீலமும், பச்சையும் கலந்த மென்மையான நிறமாக இருந்தது; சில இடங்களில் தண்ணீர் கொப்பரசு போன்ற நீல-பச்சை நிறத்துடனும் இருந்தது. இன்னமும் சில இடங்களில் தண்ணீர் போல இல்லாமல், திரவ நிலவொளியைப் போலவும் இருந்தது. இவை எல்லாமுமாகச் சேர்ந்த நிறக்கலவை அமைதியைக் கொடுத்தது.
விடுதியின் கீழ் அறைகளில், மாடியின் கீழே சன்னல்கள் திறந்திருந்தன. அங்கிருந்து பெண்களின் குரலும், சிரிப்புச் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. அங்கே கேளிக்கை எதுவோ நடந்து கொண்டிருந்தது.
கோவரின் சற்று முயற்சி எடுத்துக்கொண்டு, கடிதத்தைப் பிரித்தார். தன்னுடைய அறைக்குத் திரும்பி, வாசிக்க ஆரம்பித்தார்.
‘என் தந்தை இப்போதுதான் இறந்தார். அதற்காக நான் உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறேன். ஏனென்றால் நீங்கள்தான் அவரைக் கொன்று இருக்கிறீர்கள். எங்களுடைய தோட்டமும் அழிந்து விட்டது; அதை யார் யாரோ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; என் தந்தை எதை நினைத்துப் பயத்தாரோ அதுவே நடந்து கொண்டிருக்கிறது. அதற்கும் நான் உங்களுக்குத்தான் கடன் பட்டிருக்கிறேன். உங்களை நான் என் ஆழ்மனதின் உள்ளிருந்து வெறுக்கிறேன்! நீங்கள் விரைவாக அழிந்து போக வேண்டும் என்று விரும்புகிறேன்! ஆ, நான் எப்படியெல்லாம் துயரப்படுகிறேன்! என் இதயம் தாங்க முடியாத வலியில் இருக்கிறது!… உங்களைச் சபிக்கிறேன்! உங்களைத் தனித்துவமிக்க மேதையாக எண்ணினேன்; உங்களைக் காதலித்தேன். நீங்களோ ஒரு பைத்தியக்காரர்…’
அதற்கு மேல் கோவரினால் வாசிக்க முடியவில்லை; கடிதத்தைக் கிழித்து எறிந்தார்… அவரது அமைதி குலைந்தது, பயங்கரமாக உணர்ந்தார்… திரையின் மறுபக்கம், வர்வாரா நிக்கோலேயேவ்னா தூங்கிக் கொண்டிருந்தார்; அவளது மூச்சுச் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. கீழே இருந்த அறையில் இருந்து பெண்களின் குரலும், சிரிப்பு சத்தமும் கேட்டது. ஆனாலும் அவருக்கு விடுதியில் முழுவதும் அவரைத் தவிர யாரும் இல்லை என்றே தோன்றியது. துயரத்தினால் மூழ்கடிக்கப்பட்ட தான்யா அவரைக் கடிதத்தில் சபித்திருந்தாள்; அவரை மரணமடையச் சபித்திருந்தது அவருக்கு வலியைக் கொடுத்தது. அறையின் கதவைப் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு வருடங்களில் அவரது வாழ்வையும், அவருக்குப் பிடித்தவர்களின் வாழ்வையும் அழித்த அந்தச் சக்தி திரும்பவும் உள்ளே வந்துவிடுமோ என்ற பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரது நரம்புகள் பதட்டமடையும் போதெல்லாம், வேலை மட்டுமே அவருக்குப் புகலிடமாக இருந்தது. அவர் மேசையில் அமர்ந்து, ஏதேனும் சிந்தனையின் மீது அவருடைய மனதைச் செலுத்துவார். அவரது சிவப்புப் பையில் இருந்து அவரது கட்டுரைகளின் சிறிய தொகுப்பை எடுத்துக் கொண்டார். கிரிமியாவில் இருக்கும்போது, எதுவும் செய்யாமல் இருப்பது களைப்பைத் தந்தால், எழுதுவதற்காக எடுத்து வந்திருந்தார்… மேசையில் அமர்ந்து, அவர் தொகுப்பில் வேலை செய்ய ஆரம்பித்தார்.
முன்போலவே அமைதியாக, கவலையில்லாமல், தன்னிலை மறந்த நிலையை அடைந்தார். அவரது கட்டுரை அவரை உலகத்தின் டம்ப நிலையில் இருந்து விலக்கியது. வாழ்க்கை மனிதர்களுக்குத் தரும் சாதாரண, ஒன்றுமில்லாத பயன்களுக்காகக் கொடுக்கப்படும் விலையைக் குறித்துச் சிந்தித்தார். நாற்பது வயதிற்கு முன்பே தத்துவப் பேராசிரியராக ஆவது; சாதாரண ஆசிரியராக இருப்பது; சாதாரணச் சிந்தனைகளை – மற்றவர்களின் சிந்தனைகள் பற்றிய சிந்தனைகள் – களைப்பூட்டும், பலவீனமும், கடினமுமான வார்த்தைகளில் எழுதுவது; ஒரே வார்த்தையில், படித்த மந்தை மனிதனாக வாழ அவர் பதினைந்து வருடங்கள் படித்தார், இரவும், பகலும் உழைத்தார், கடுமையான உடல் நோயைத் தாங்கினார், தோல்வியடைந்தத் திருமணத்தைச் செய்து கொண்டார் – இதுபோன்ற பல முட்டாள்தனங்களையும், அநீதிகளையும் நினைவுபடுத்திக் கொள்வதும் பயங்கரமாக இருந்தது. தான் சாதாரணமானவன் என்பதை கோவரின் உணர்ந்தார். அவர் அதை இப்போது மனதளவில் ஒத்துக்கொள்ளவும் செய்தார். ஏனென்றால், இறுதியில் ஒவ்வொரு மனிதனும் அவனைப் பற்றிய உண்மையை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
அவரது கட்டுரைகள் அவரை அமைதிப்படுத்தின. அவர் கிழித்துப்போட்ட கடிதம், அவரது சிந்தனையைத் தொந்தரவு செய்தது. அவர் எழுந்து, கிழிந்து கிடந்த தாள்களை எடுத்து சன்னலின் வழியே வெளியே எறிந்தார். ஆனால், கடலில் இருந்து வீசிய மெல்லிய காற்று அவற்றை மீண்டும் சன்னலிற்கே கொண்டு வந்தது. மறுபடியும் அவரை அமைதியற்ற பயங்கரம் தொற்றியது. அவரைத் தவிர விடுதியில் வேறு உயிருள்ள ஆன்மாவும் இல்லை என்று தோன்றியது… திரும்பவும் மாடிக்குச் சென்றார். கடல் அவரை மெல்லிய நீலத்தில் இருந்து அடர்நீலம் வரையிலான பலவாறான நிறக்கண்களால் அழைப்பது போல இருந்தது. திணற வைக்கும் வெப்பமாக இருந்தது; குளிப்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தார்!
கீழே இருந்து வயலின் இசை கேட்டது. இரண்டு பெண்கள் பாடினார்கள். அது அனைத்தும் அவருக்குத் தெரிந்தது. அவர்கள் பாடிய பாடல் ஓர் இளம் பெண்ணைப் பற்றியது. கற்பனை உலகில் இருந்த அவள், இரவில் தோட்டத்தின் மர்மமான சத்தங்களில் இருந்த இசைவையும், புரியாத புனிதத்தையும் கண்டாள்… கோவரின் மூச்சைப் பிடித்துக் கொண்டார். அவரது இதயம் அடிப்பதை நிறுத்தி விட்டது. மீண்டும் ஒரு முறை அவர் முன்பு அனுபவித்த மாய, பரவசத்தை மீண்டும் ஒரு முறை அவரது நடுங்கும் இதயத்தில் உணர்ந்தார்.
உயரமான, கறுப்புத் தூண் ஒன்று, புயலைப் போலவோ, நீரூற்று போலவோ கடலின் மறுபுறம் தோன்றியது. கடலின் வழியே வெகுவேகமாக விடுதியை நோக்கி வந்தது. வரவர அது சிறியதாக ஆகிக் கொண்டிருந்தது. கோவரின் சற்று விலகி அதற்கு இடம் கொடுத்தார்… தலையை மூடாமல், வெறுமையான நரைத்த தலை, கறுப்புப் புருவங்கள், காலில் எதுவுமில்லாமல், மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவரைத் தாண்டி சென்று, அறையின் நடுவில் சென்று துறவி நின்றார்.
‘என்னை ஏன் நீ நம்பவில்லை?’ என்று கோவரினை அன்பாகப் பார்த்துக்கொண்டே, குறை சொல்லுவதுபோலக் கூறினார். ‘நான் சொன்னதை நம்பியிருந்தால், உன்னை ஒரு மேதை என்பதை நம்பினால், நீ இந்த இரண்டு வருடங்களைச் சோகத்துடனும், வறண்ட வாழ்க்கையுடனும் கழித்திருக்கத் தேவையில்லை.’
கோவரின் திரும்பவும் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும், மேதை என்றும் நம்பினார். அவருக்குக் கறுப்புத் துறவியுடன் நடந்த உரையாடல் அனைத்தும் நினைவிற்கு வந்தது. பதில் சொல்ல முயன்றார். அதற்கு முன்பே அவரது தொண்டையில் இருந்து ரத்தம் நெஞ்சில் வடிந்தது. என்ன செய்வது என்று தெரியாமல், அவர் தனது கையால் அதைத் தடுக்க முயன்றார். அவரது சட்டையின் கைகளும் ரத்தத்தால் நனைந்தது. திரைக்குப் பின்னால் தூங்கிக்கொண்டிருந்த வர்வாரா நிக்கோலேயேவ்னாவை எழுப்ப எண்ணினார். அதற்காகத் தன்னுடைய வலிமையைத் திரட்டிக் குரலெழுப்பினார்.
‘தான்யா!’
அவர் தரையில் விழுந்தார். கைகளை உயர்த்தி, திரும்பவும் குரலை எழுப்பினார்.
‘தான்யா!’
தான்யாவை நோக்கி அழுதார். அதிசயமான பூக்கள் மலரும் தோட்டத்தை நோக்கி அழுதார். பூங்காவை நோக்கி, அங்கிருந்த பைன் மரங்களை நோக்கி, புல்லரிசி வயலை நோக்கி அழுதார். அவரது அதிசயமான அறிவியல், அவரது இளமை, அவரது தைரியம், மகிழ்ச்சியை நோக்கி அழுதார். அவரது அழகான வாழ்வை நோக்கி அழுதார். அவருக்கு முன்பு தரையில் பெரிய அளவில் ரத்தம் தேங்கியிருந்தது. முழுவதுமாக வலிமை இழந்திருந்த அவரால் எதுவும் பேச முடியவில்லை. ஆனாலும் வெளிப்படுத்த முடியாத, எல்லையில்லா மகிழ்ச்சி அவரை முழுவதுமாக நிரப்பியது. மாடியின் கீழே இசை இன்னமும் கேட்டுக்கொண்டிருந்தது. கறுப்புத் துறவி அவரிடம் நீ ஒரு மேதை என்று முணுமுணுத்தார். அவர் இறந்ததற்குக் காரணம் அவரது உடல் பலவீனமாகவும், அழிந்து போவதுமாக இருந்ததாலும், அவரது மேதமையை மறைக்க அதனால் முடியவில்லை என்பதாலும் என்றும் கூறினார்.
வர்வாரா நிக்கோலேயேவ்னா விழித்து, திரைக்குப் பின்னால் இருந்து வந்தபோது, கோவரின் இறந்து போயிருந்தார். ஆனால், அவரது முகத்தில் மறையாத மகிழ்ச்சியின் புன்னகை உறைந்து போயிருந்தது.
(முற்றும்)

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், ‘1877 தாது வருடப் பஞ்சம்.’ தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.