Skip to content
Home » செகாவ் கதைகள் #10 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 1

செகாவ் கதைகள் #10 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 1

ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 1

I

இது ஏழு வருடங்களுக்கு முன் நடந்தது.

அப்போது, ஜே பிரதேசத்தின் மாவட்டம் ஒன்றில், பெய்லகுரோவ்வின் பண்ணைத் தோட்டத்தில் வாழ்ந்து வந்தேன். பெய்லகுரோவ் நில உடமையாளர். காலையில் முன்னமே எழும் வழக்கம் கொண்டவர்; நீண்ட அங்கியை அணிந்து கொள்ளும் வழக்கம் கொண்டவர்; மாலைகளில் பியர் குடித்துக் கொண்டு, தன்னுடைய கருத்துகளுடன் எங்கும், யாரும் ஒத்துப் போவதில்லை என்று எப்போதும் என்னிடம் குறை சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் பழத்தோட்டத்தில் இருந்த சிறிய வீட்டில் இருந்தார். அங்கிருந்த பழைய மாளிகை வீட்டில் நான் இருந்தேன். அதன் பெரிய தூண்கள் இருக்கும் முன்னறையில் மெத்தையைத் தவிர வேறு எதுவும் கிடையாது. அந்த மெத்தையில் நான் தூங்கினேன். அங்கிருந்த மேசையில் உட்கார்ந்துகொண்டு தனியாகச் சீட்டு விளையாடுவேன். அமைதியான வானிலையிலும் புகைபோக்கி அழுவதுபோல் குரல் எழுப்பும். புயலடிக்கும் போதோ வீடு முழுவதும் ஆட்டம் போடும். இரண்டாகப் பிளந்துவிடுவது போல இருக்கும். அதுவும் ராத்திரிகளில், அறையின் பத்து பெரிய சன்னல்களில் மின்னல் வெளிச்சம் அடிக்கும்போது, மிகவும் பயங்கரமாக இருக்கும்.

எப்போதும் வேலை இல்லாத நிலையில், நான் எதுவும் செய்யாமல் சும்மாவே இருந்தேன். பல மணி நேரங்கள் அங்கேயே அமர்ந்து சன்னலின் வழியே வானம், பறவைகள், மரங்கள் போன்றவற்றைப் பார்த்துக் கொண்டும், கடிதங்களைத் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டும், அதன் பின்னர் பல மணி நேரங்கள் தூங்கிக் கொண்டும் இருப்பேன். சில நேரங்களில் வெளியே சென்று, மாலை வரை இலக்கில்லாமல் சுற்றிவிட்டு வருவேன்.

ஒருநாள் அப்படித் திரிந்துவிட்டு வரும்போது, நான் ஒரு வினோதமான பண்ணை வீட்டைப் பார்த்தேன். சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தது. சுற்றியிருந்த சோளக்காடுகளில் நீண்ட நிழல் விழுந்து கொண்டிருந்தது. அருகருகே நடப்பட்டிருந்த பிர் மரங்கள் இரண்டு வரிசைகளாகப் பெரிய சுவர் போல நின்று கொண்டிருந்தன. அவற்றின் நடுவே இருண்ட, நீண்ட பாதையும் இருந்தது. நான் வேலியின் மீது ஏறி குதித்து, இரண்டு இஞ்சுகள் உயரத்துக்குக் கிடந்த பிர் மரத்தின் ஊசி இலைகளை மிதித்துக்கொண்டு பாதையின் வழியே நடந்தேன். இப்போது எல்லாம் அசைவில்லாமல், இருட்டாக இருந்தது. இங்கும், அங்குமாக மரங்களின் உச்சியில் இருந்த சிலந்தி வலைகளில் மாலை வெயிலின் வெளிச்சம்பட்டு, வானவில் போல ஜொலித்துக் கொண்டிருந்தது. பிர் மரங்களின் வாசம் மூச்சை முட்டியது. அங்கிருந்து எலுமிச்சை மரங்கள் இருந்த பாதையில் திரும்பினேன். இங்கும் எல்லாம் பாழடைந்தும், சிதைந்தும் இருந்தன. என் காலுக்கடியில் காய்ந்த இலைகள் துயரத்துடன் சத்தம் எழுப்பின. மரங்களிடையே நிழல்கள் ஆடிக் கொண்டிருந்தன. வலதுபுறம் இருந்த பழத் தோட்டத்தில் இருந்து மஞ்சள் குருவி ஒன்றின் மெலிதான பாடல் கேட்டது. அதுவும் வயதானதாக இருக்க வேண்டும். எலுமிச்சை மர வரிசை முடிவுக்கு வந்தபின் அங்கே மாடியும், இடைமாடியும் கொண்ட வெள்ளை வீடு ஒன்று இருந்தது. அதைத் தாண்டி இருந்த பண்ணையிடத்தில் சிறிய குளமும், அதன் அருகில் குளியலறை ஒன்றும் இருந்தன. அங்கிருந்து வரிசையாக இருந்த வில்லோ மரங்கள் நடுவே இருந்த பாதை தொலைவில் இருந்த கிராமத்துக்குச் சென்றது. கிராமத்தில் இருந்த உயர்ந்த, மெலிவான மணி கோபுரமும், அதன் மீதிருந்த சிலுவையும் மாலை சூரியனின் ஒளியில் ஒளிர்ந்தன. ஒரு கணத்துக்கு ஒட்டுமொத்த காட்சியின் மாயமும், ஏற்கனவே என்னுடைய குழந்தைப்பருவத்தில் பார்த்தது போன்று தோன்றியது.

பண்ணையிடத்தில் இருந்து வயலை நோக்கிச் செல்லும் பாதையில் இருந்த, வெள்ளைக்கல் சிங்கங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வாயிலின் அருகே இரண்டு இளம் பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் மூத்தவள் மெலிந்தும், வெளிறியும், மிகவும் அழகாகவும், தலையில் பழுப்பு நிற முடியோடு, அடம்பிடிக்கும் பேச்சோடு இருந்தவள், என்னைப் பார்க்கவில்லை. மற்றவள், இன்னமும் இளம்பெண் – பதினேழு அல்லது பதினெட்டு வயதுக்கு மேல் இருக்காது. இவளும் மெலிந்தும், வெளிறியும், பெரிய கண்கள் மற்றும் வாயுடன் இருந்தாள். என்னை ஆச்சரியமாகப் பார்த்து நான் அவர்களைக் கடக்கும்போது, ஆங்கிலத்தில் ஏதோ சொல்லி குழப்பமாக என்னைப் பார்த்தாள். எனக்கு அவர்களது அழகான முகங்களை ஏற்கனவே பார்த்தது போல இருந்தது. நல்ல கனவில் இருந்து எழுந்தவன் போல நான் வீட்டுக்குத் திரும்பினேன்.

அதற்குச் சில நாட்களுக்குப் பின், ஒரு நாள் மதியம் நானும், பெய்லகுரோவ்வும் வீட்டுக்கு அருகில் நடந்து கொண்டிருந்தோம். அப்போது அங்கு திடீரென்று வந்த குதிரை வண்டியில் அந்தப் பெண்களில் மூத்தவள் அமர்ந்திருந்தாள். அங்கு சமீபத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக நிதி திரட்ட வந்திருந்தாள். எங்களை நேராகப் பார்க்காமல், சியானோவில் நடந்த விபத்தில் எத்தனை வீடுகள் பாதிக்கப்பட்டன; எத்தனை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் தங்குவதற்கு இடமில்லாமல் இருக்கிறார்கள்; அவள் உறுப்பினராக இருக்கும் குழு அவர்களுக்கு எப்படி உதவுகிறது என்று மிகவும் தீவிரமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். எங்களிடம் கைகளில் பெயர் பட்டியலைக் கொடுத்து, எங்களது பெயர்களையும் அதில் எழுத சொல்லிவிட்டு, அதை எடுத்துக்கொண்டு எங்களிடம் இருந்து விடை பெற ஆரம்பித்தாள்.

“எங்களை எல்லாம் மறந்துவிட்டீர்கள், பியோடோர் பெட்ரோவிச்.” என்று பெய்லகுரோவ்வைப் பார்த்துச் சொல்லிவிட்டு, கையை நீட்டினாள். “எங்களை வந்து பாருங்கள். திரு.என் (என் பெயரை கூறினாள்), அவரது திறமையை மதிப்பவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பார்க்க விரும்பினால், அவரும் வந்து பார்க்கலாம். நானும், அம்மாவும் மிகவும் மகிழ்வோம்.”

நான் தலைவணங்கினேன்.

அவள் சென்ற பின்னர், பியோடோர் பெட்ரோவிச் அவளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்: நல்ல குடும்பத்தில் இருந்து வரும் பெண்; அவளது பெயர் லிடியா வோல்சனினோவ்; அவளும் அவளது தாயும், சகோதரியும் குளத்தின் மறுபுறத்தில் இருந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்; வீட்டின் பெயரும், அந்தக் கிராமத்தின் பெயரும் ஷோல்கோவ்கா என்ற விவரங்களையெல்லாம் கூறினார். அவர்களது தந்தை மாஸ்கோவில் பெரிய பதவியில் இருந்தவர் என்றும், அரசரின் ஆலோசகர் குழுவில் இருந்தபோது, இறந்து விட்டார் என்றும் கூறினார். மிகவும் வசதியுடையவர்களாக இருந்தாலும், வோல்சனினோவ் குடும்பம் எப்போதும் கிராமத்திலேயே கோடையிலும் குளிர்காலத்திலும் இருந்து வந்தார்கள்.

லிடியா, ஷோல்கோவ்காவில் இருந்த ஸிம்ஸ்டோவ் பள்ளியில் ஆசிரியையாக இருந்தாள். அதில் வந்த மாத சம்பளமான இருபத்து ஐந்து ரூபிள்களை மட்டுமே அவளுக்காகச் செலவழித்து வந்தாள். தன்னுடைய சுதந்திரம் குறித்து மிகவும் பெருமை கொண்டிருந்தாள்.

“அவர்கள் சுவாரசியமான குடும்பம்” என்ற பெய்லகுரோவ், “நாம் சென்று, அவர்களைப் பார்த்து வரவேண்டும். அவர்கள் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்” என்றார்.

விடுமுறை நாளின் மதியத்தில், நாங்கள் வோல்சனினோவ் குடும்பத்தைச் சந்திக்க ஷோல்கோவ்கா சென்றோம். அவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தார்கள். அவர்களது தாயார், எக்டேரினா பாவ்லோவ்னா, ஒரு காலத்தில் அழகியாக இருந்திருக்க வேண்டும். இப்போது அவளது வயதுக்கு அதிகமான எடையோடு, ஆஸ்துமாவினால் அவதிப்பட்டுக் கொண்டு, சோகமும், மறதியுமாக என்னிடம் ஓவியம் பற்றிப் பேச முயன்று கொண்டிருந்தாள். ஷோல்கோவ்காவுக்கு நான் ஒருவேளை வரலாம் என்று அவளது மகள் சொல்வதைக் கேட்டு விட்டு, அவள் மாஸ்கோவில் கண்காட்சிகளில் பார்த்த என்னுடைய இயற்கைக்காட்சி ஓவியங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள். அவற்றின் மூலம் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று கேட்டாள். லிடியா அல்லது வீட்டில் அவளை அழைத்தது போல, லைடா, என்னை விட பெய்லகுரோவ்விடம் அதிகமாகப் பேசினாள். ஏன் அவர் ஸிம்ஸ்டோவ்வில் வேலை பார்ப்பதில்லை என்றும், ஸிம்ஸ்டோவ் சந்திப்புகளுக்கு ஏன் ஒரு முறை கூட வரவில்லை என்று அவரிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“அது சரியில்லை, பியோடோர் பெட்ரோவிச்” என்று குறை சொல்லும் தொனியில் கூறினாள். “அது சரியில்லை. நீங்கள் இதற்காக வெட்கப்பட வேண்டும்.”

“உண்மை, லைடா, உண்மை” என்றாள் அவளது தாயார். “அது சரியில்லைதான்.”

இப்போது என்னைப் பார்த்து திரும்பி, “இந்த மாவட்டம் முழுவதும் பாலகின்னின் கைகளில் இருக்கிறது. அவர்தான் குழுவின் தலைவர். மாவட்டத்தில் இருக்கும் வேலைகள் எல்லாம் அவரது மருமகன்களுக்கும் சகலைகளுக்கும் கொடுக்கப்படுகிறது. அவரது விருப்பப்படி அவர் நடந்து கொள்கிறார். நாம் அவரை எதிர்த்து நிற்கவேண்டும். இளைஞர்கள் அனைவரும் ஒரு குழுவாக இருக்க வேண்டும். ஆனால் நமது இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று உங்களுக்கே தெரியும். வெட்கம், பியோடோர் பெட்ரோவிச்.”

ஸிம்ஸ்டோவ் பற்றிய விவாதங்களின்போது, அவளது இளைய சகோதரி, ஜென்யா அமைதியாக இருந்தாள். தீவிரமான உரையாடல்களில் அவள் பங்கெடுக்கவில்லை. குடும்பத்தினர் அனைவரும் அவளை இன்னமும் சிறு பெண்ணாகவே கருதினார்கள். சிறு வயதில் அவளது ஆங்கில ஆசிரியையை ”மிஸ்சியுஸ்’ என்று அழைத்ததால், அவளை அப்படியே செல்லமாக அழைத்தார்கள். அவள் முழு நேரமும் என்னை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் புகைப்படத் தொகுப்பை பார்த்துக் கொண்டிருந்தபோது, அவள் “இது என் மாமா… இது என் சித்தப்பா” என்று என்னுடைய தோள்களைக் குழந்தையைப் போலப் பிடித்துக் கொண்டு, விரல்களால் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தாள். அவளுடைய சிறிய, இன்னமும் வளர்ச்சியடையாத மார்பு, மெலிந்த தோள்கள், அரைக்கச்சையால் இறுக கட்டியிருந்த நீண்ட, மெல்லிய இடை முதலியவற்றை என்னால் பார்க்க முடிந்தது.

வளையம் எறிதல், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை விளையாண்டோம். பின்னர் தோட்டத்தில் நடந்துவிட்டு, தேநீர் அருந்தினோம். பெரிய இரவு விருந்தை பின்னர் ஒன்றாக உண்டோம். நான் தங்கியிருந்த பெரிய தூண்களுடைய அறையுடன் பார்த்த பொழுது, எனக்கு அந்தச் சிறிய வீடு மிகவும் வித்தியாசமாக இருந்தது. சுவரில் எண்ணெய் ஓவியங்கள் இல்லை. வேலைக்காரர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட்டார்கள். லைடா மற்றும் மிஸ்சியுஸால் அனைத்தும் இளமையும், தூய்மையும் கொண்டிருந்தது. இரவு உணவின் போதும், லைடா பெய்லகுரோவ்விடம் ஸிம்ஸ்டோவ், பாலகின், பள்ளி நூலகங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள்.

அவள் மிகவும் உற்சாகமும் நேர்மையும் உடைய தீவிரமான பெண். அவள் பேசுவதைக் கேட்பது சுவாரசியமாக இருந்தது. ஆனால், பள்ளியில் மெதுவாகப் பேசுவதாலோ என்னவோ, அவள் மிகவும் சத்தமான குரலில் பேசினாள். மாறாக, பியோடோர் பெட்ரோவிச் பல்கலைக்கழக நாட்களில் இருந்து எந்த உரையாடலையும், விவாதமாக மாற்றக்கூடியவர். மெதுவாகவும் அலுப்பூட்டும் வகையிலும், கைகளை ஆட்டிக் கொண்டும் பேசுவார். அப்படிப் பேசுவதை முற்போக்கும், புத்திசாலித்தனமும் கொண்ட மனிதனின் அடையாளம் என்று நினைத்துக் கொண்டிருந்தார். அப்படிக் கைகளை ஆட்டி பேசும் போது, மேசையில் இருந்த சாஸைத் தட்டிவிட்டார். அது மேசை விரிப்பில் குட்டைபோல் தேங்கி நின்றதை, என்னைத் தவிர யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.

நாங்கள் வீடு திரும்பும் போது, மிகவும் இருட்டாகவும், எந்த அசைவும் இல்லாமலும் இருந்தது.

“அதுதான் நல்ல வளர்ப்பு!” என்று பெருமூச்சுடன் பெய்லகுரோவ் கூறினார். “சாஸைத் தட்டி விடாமல் இருப்பது அமல்ல. வேறு ஒருவர் தட்டி விடும் போது, அதைக் காணாதது போல இருப்பது. ஆமாம். பாராட்டப்படவேண்டிய புத்திசாலித்தனமான குடும்பம். பொதுவாக கண்ணியமான மனிதர்களோடு எனக்கு தொடர்பிருப்பது இல்லை. எப்போதும் வேலை, வேலை, வேலை!”

நல்ல விவசாயியாக இருப்பதற்கு எவ்வளவு கடினமான உழைப்பு தேவைப்படுகிறது என்று சொல்ல ஆரம்பித்தார். நான் நினைத்தேன்; என்ன ஒரு சோம்பேறி, முட்டாள் இவன்! நாங்கள் தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்கும் போது, குறுக்கே புகுந்து அவரது இழுவையை ஆரம்பிப்பார் – ம், ம், ம் – வேலை செய்து கொண்டே பேசுவது, எப்போதும், எல்லாவற்றிலும் மெதுவாக, நேரத்தை மதிக்காமல் இருப்பது. வேலை செய்வதைப் பொறுத்தவரை, அவர் சொல்வதை நான் நம்பவில்லை. ஏனென்றால், பல வாரங்கள் முன்பு வந்த கடிதங்களும் பதில் எழுதப்படாமல் அவரது சட்டைப்பையில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

“இதில் மோசமான விஷயம் என்னவென்றால், யாரும் பாராட்டவில்லை என்றாலும் நாம் வேலை செய்துகொண்டே இருக்கிறோம்” என்று என்னருகில் முணுமுணுத்துக் கொண்டே நடந்தார்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *