Skip to content
Home » செகாவ் கதைகள் #11 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 2

செகாவ் கதைகள் #11 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 2

ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை

II

வோல்சனினோவ் வீட்டுக்கு நான் இப்போது அடிக்கடிச் செல்ல ஆரம்பித்தேன். எப்போதும் அங்கே வெராண்டாவில் இருந்த கீழ் படிகளில் அமர்ந்திருப்பேன். ஏதோ ஒருவிதத்தில் வேகமாகவும், சுவாரசியமில்லாமலும் சென்றுகொண்டிருந்த வாழ்வின் மீது எனக்கு அதிருப்தியும், இனம் புரியாத நிறைவின்மையும் இருந்தது. அப்படியாகச் சோர்வடைந்திருந்த இதயத்தை மார்பிலிருந்து வெளியிலே எடுத்துவிடுவது எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவ்வப்போது எண்ணிக் கொண்டேன். அவர்கள் வீட்டு மாடியில் இருந்து எப்போதும் பேச்சுச் சத்தமும் உடைகள் உரசும் சத்தமும் புத்தகப் பக்கங்களைத் திருப்பும் சத்தமும் கேட்டுக் கொண்டே இருக்கும். லைடா வீட்டுக்கு எப்போதும் நோயுற்றவர்கள் உதவி கேட்டு வந்து கொண்டே இருந்தார்கள் அல்லது அவள் புத்தகங்களை விநியோகித்துக் கொண்டிருந்தாள். இவையெல்லாம் எனக்குப் பழகிப்போயின. நானும் அவளுடன் அடிக்கடி கிராமத்துக்கு தொப்பியின்றி குடை பிடித்தபடி சென்று கொண்டிருந்தேன். மாலையில் அவள் ஸிம்ஸ்டோவ் பற்றியும், பள்ளிகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பாள். அவள் மிகவும் அழகாகவும், நுட்பமாகவும், எல்லாவற்றிலும் சரியாகவும் இருந்தாள். அவளது உதடுகள் மெலிதாகவும், உணர்ச்சி மிக்கதாகவும் இருந்தன. எதைப்பற்றியாவது தீவிரமாகப் பேச ஆரம்பித்தவுடன், அவள் என்னிடம் வறண்ட தொனியில் சொல்லுவாள்: “இது உங்களுக்கு விருப்பமாக இருக்காது.”

நானும் அவள் மீது எந்தப் பரிவும் காட்டவில்லை. நான் ஒரு இயற்கைக்காட்சி ஓவியன் என்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. நான் மக்களின் துன்பத்தை ஓவியமாக வரைவதில்லை என்றும் அவளுடைய நம்பிக்கைகளை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும் அவள் விரும்பவில்லை. ஒருமுறை பைக்கால் ஏரியின் வழியே செல்லும்போது, நான் ஒரு பெரியட் இனப் பெண்ணைக் கண்டேன். குதிரையில் இருந்த அவள், சீன பருத்தியில் செய்த சட்டையும், கால் சட்டையும் அவள் அணிந்திருந்தாள். அவளுடைய புகையிலைக் குழாயை எனக்குத் தருவாளா என்று கேட்டு, அவளுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவள் என்னுடைய ஐரோப்பிய முகத்தையும், தொப்பியையும் பார்த்து முகத்தைச் சுளித்து, குதிரையை தட்டிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டாள்.

அதுபோலவேதான் லைடா என்னை வெளியாளாக எண்ணி வெறுத்தாள். வெளிப்படையாக அவள் அதைக் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், என்னால் அதை உணர முடிந்தது. மாடியின் கீழே அமர்ந்திருந்தபோது, எனக்குச் சற்று எரிச்சல் ஏற்பட்டது. ஒருவர் மருத்துவராக இல்லாதபோது, குடியானவர்களுக்கு வைத்தியம் பார்ப்பது அவர்களை ஏமாற்றுவதுபோல என்றும், நான்காயிரம் ஏக்கர் வைத்திருக்கும் போது, மற்றவர்களுக்கு நல்லது செய்வது எளிது என்றும் பேசிக் கொண்டிருந்தேன்.

அவளது சகோதரி, மிஸ்சியுஸ், அது போன்ற கவலைகள் இல்லாதவள். என்னைப் போலவே எந்த வேலையும் செய்யாமல் நேரத்தைக் கழித்துவந்தாள். காலையில் எழுந்தவுடன், மாடிக்குச் சென்று அங்கிருந்த நாற்காலியில் தரையில் கால் படாமல் உட்கார்ந்துகொண்டு புத்தகம் படிப்பாள். சில சமயம் எலுமிச்சை மரங்களினூடே நடந்துகொண்டு புத்தகம் படிப்பாள். அவள் நாள் முழுவதும் புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பாள். அவள் அலுப்பாகவும், மயக்கமாகவும், வெளிறியும் இருப்பதைக் கொண்டே புத்தகம் வாசிப்பது எவ்வளவு தூரம் அவளைக் களைப்படைய வைத்திருப்பது என்பது தெரியவரும்.

நான் வரும்போதெல்லாம், அவள் சற்று வெட்கப்பட்டுக்கொண்டு, புத்தகத்தை வைத்துவிட்டு, என்னை அவளது பெரிய கண்களால் பார்த்து, அன்று நடந்தது அனைத்தையும் கூறுவாள். வேலையாட்களின் அறையில் இருந்த புகைபோக்கி தீ பிடித்தது, குளத்தில் பெரிய மீன் ஒன்று அகப்பட்டது என்று எதையாவது கூறுவாள்.

வாரநாட்களில் எப்போதும் அவள் நல்ல வண்ணமயமான மேலாடையும், அடர் நீல பாவாடையும் அணிவாள். நாங்கள் ஒன்றாக படகில் சென்று செர்ரி பழங்களைப் பறிப்போம். அவள் பழங்களைப் பறிக்கக் கைகளை நீட்டும் போதோ, துடுப்பு போடும் போதோ, அவளது மெலிந்த, உருண்டையான கைகள் மேலாடையின் வழியே தெரியும். படகில் செல்லாத நாட்களில் நான் ஓவியம் வரைவேன். அவள் என்னருகில் நின்று கொண்டு, அதை மூச்சு விடாமல் பார்த்துக் கொண்டிருப்பாள்.

ஜூன் மாத இறுதியில், ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணி அளவில் வோல்சனினோவ் வீட்டுக்குச் சென்றேன். ஆனால் வீட்டைத் தவிர்த்துவிட்டு, பூங்காவின் வழியாக நடந்தேன். வழியில் கோடையில் நிறைய வளர்ந்திருந்த காளானைப் பார்த்துக்கொண்டே, அவற்றை ஜென்யாவுடன் வந்து சேகரிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டே நடந்து கொண்டிருந்தேன். காற்று வெப்பமாக இருந்தது. அப்போது, நல்ல உடைகள் அணிந்து அவர்கள் தேவாலயத்துக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஜென்யா காற்றுக்கு எதிராக அவளது தொப்பியை பிடித்துக் கொண்டிருந்தாள். மாடியில் தேநீர் அருந்தப்போவதாக அவர்கள் தெரிவித்தார்கள்.

உலகில் எந்தக் கவலையும் இல்லாத மனிதனாக, என்னுடைய சோம்பலை நியாயப்படுத்த, கிராமங்களில் வரும் இது போன்ற விழாநாட்களை மிகவும் விரும்பினேன். பனித்துளி உலராத பசுமையான தோட்டங்கள் சூரிய ஒளியில் மின்னிக்கொண்டிருந்தன. மாடி முழுவதும் செவ்வரளி வாசம். இளைஞர்கள் தேவாலயத்திலிருந்து திரும்பி வந்து, தோட்டத்தில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். நன்றாக உடையணிந்து, மகிழ்வுடனும் ஆரோக்கியமான, திருப்தியுடனும் இருக்கும் அந்த அழகான மக்கள் அன்றைய நாள் முழுவதும் எதுவும் செய்யாமல் இருப்பார்கள் என்பது புரிந்தது. அது போலவே வாழ்நாள் முழுவதும் இருந்துவிடாதா என்று ஏக்கம் மனதில் எழுகிறது. அப்படியே தோட்டத்தின் வழியே நடக்கும் போது நினைத்துக் கொண்டிருந்தேன். எந்த வேலையும், குறிக்கோளும் இல்லாமல் அப்படியே நாள் முழுவதும், கோடை முழுவதும் கழித்துவிடத் தயாராக இருந்தேன்.

ஜென்யா கையில் கூடை வைத்திருந்தாள். நான் அங்கிருப்பேன் என்று அவளுக்குத் தெரிந்திருந்தது. நாங்கள் காளான்களை எடுத்துக்கொண்டே, பேசிக் கொண்டிருந்தோம். அவள் கேள்வி கேட்கும் போதெல்லாம், அவள் என் முகத்தின் முன்னே நின்று கொண்டாள்.

“நேற்று கிராமத்தில் அதிசயம் ஒன்று நடந்தது. ஊனமுற்ற பெலகேயா வருடம் முழுவதும் நோயால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தாள். எந்த மருத்துவர் மற்றும் மருந்தாலும் குணப்படுத்த முடியவில்லை. ஆனால் நேற்று வயதான கிழவி அவள் காதில் ஏதோ சொன்னாள், அவளுக்கு எல்லாம் சரியாகிவிட்டது.” என்றாள்.

“இது என்ன பிரமாதம்?” என்றேன் நான். “நோயுற்றவர்களிடமும், வயதானவர்களிடமும் அற்புதத்தை தேடக்கூடாது. ஆரோக்கியமாக இருப்பது அற்புதம் அல்லவா? வாழ்க்கையே அற்புதம் இல்லையா? அற்புதம் என்பது புரிந்து கொள்ளவே முடியாதது.”

“புரிந்து கொள்ளமுடியாததைப் பற்றி உங்களுக்கு பயமாக இல்லையா?”

“இல்லை. என்னால் புரிந்து கொள்ள முடியாததை, நான் நேரில் சந்திக்க விரும்புகிறேன். அதற்குப் பயந்துவிடமாட்டேன். அதையும் விட மேலானவன் நான். சிங்கம், புலி, நட்சத்திரம், இயற்கையில் இருக்கும் எதையும்விட மனிதன் மேலானவன் என்று நினைக்க வேண்டும். புரியாததையும், அற்புதமானதையும்விட மேலானவன் என்று நினைக்க வேண்டும். இல்லையென்றால் அவன் மனிதனே அல்ல; எல்லாவற்றிற்கும் பயப்படும் வெறும் எலி.”

கலைஞனாக இருந்ததால், எனக்கு நிறையத் தெரியும் என்று ஜென்யா நம்பினாள். எனக்கு என்ன தெரியாது என்பதையும் யூகிக்கத் தெரிந்திருந்தாள். மேலுலகின் அழகும், நிரந்தரமுமான இடத்துக்கு அவளை நான் அழைத்துச் செல்ல வேண்டும் என்று விரும்பினாள். அத்தகைய இடங்கள் எனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் நம்பினாள். எப்போதும் என்னிடம் கடவுள், நித்தியவாழ்வு, அற்புதங்கள் போன்றவற்றைப் பற்றியே பேசினாள். நானும், என்னுடைய கற்பனையும் எப்போதும் அழிந்துவிடக்கூடும் என்பதை நான் ஒத்துக் கொள்ளவில்லை என்பதால், “ஆமாம். மனிதர்களுக்கு அழிவில்லை. ஆமாம், நமக்கு நித்தியவாழ்வு காத்திருக்கிறது” என்று பதில் கூறினேன். அதையெல்லாம் அவளும் அமைதியாகக் கேட்டு, அப்படியே நம்பிவிடுவாள். எப்போதும் என்னிடம் அதை நிரூபணம் செய்யச் சொல்லிக் கேட்டதில்லை.

வீட்டை நெருங்கும் போது, சட்டென்று நின்ற அவள், என்னிடம், “நமது லைடா சிறந்த பெண், இல்லையா? அவளை நான் மிகவும் விரும்புகிறேன். அவளுக்காக எந்த நொடியிலும் என்னுடைய உயிரையும் கொடுத்துவிடுவேன். சொல்லுங்கள், நீங்கள் ஏன் அவளுடன் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? ஏன் எரிச்சல் அடைகிறீர்கள்?” என்று ஜென்யா என்னுடைய சட்டையை விரலால் தொட்டுக்கொண்டே கேட்டாள்.

“ஏனென்றால் அவள் தவறாக பேசுகிறாள்.”

ஜென்யா தலையை அசைத்தாள். அவளது கண்களில் இருந்து நீர் வழிந்தது.

“எனக்குப் புரியவில்லை!” என்று முணுமுணுத்தாள்.

அதே நேரத்தில் லைடா வெளியே வந்தாள். அவள் மாடியில் கையில் குதிரையை ஓட்டும் தார்க்குச்சியுடன் நின்றாள். சூரிய வெளிச்சத்தில் அவள் மிகவும் அழகாக இருந்தாள். அங்கிருந்து கொண்டே, பண்ணையாள் ஒருவனுக்குச் சில கட்டளைகள் இட்டாள். சுறுசுறுப்பாக நடந்து கொண்டும், சத்தமாகப் பேசிக் கொண்டும் இரண்டு, மூன்று நோயாளிகளைப் பார்த்து விசாரித்தாள். அதன் பின்னர், நிறைய வேலை இருப்பவளைப் போல வீட்டுக்குள் நடந்து கொண்டிருந்தாள். அங்கே ஒவ்வொரு சாமான்களையும் எடுத்தும் திறந்தும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளை இரவு உணவுக்கு அழைத்தவுடன் வரவில்லை. அவர்கள் சூப்பைக் குடித்து முடித்த பின்னரே அவள் வந்தாள். எப்படியோ நான் இது போன்ற சிறிய விஷயங்களை எல்லாம் நினைவில் வைத்திருக்கிறேன். அவற்றை நினைத்துக் கொண்டிருந்தேன். அன்றைய தினம் சொல்லிக் கொள்வது போல எதுவும் நடக்கவில்லை என்றாலும், எனக்கு எல்லாம் நினைவில் இருக்கிறது. உணவுக்குப் பின்னர், ஜென்யா நாற்காலியில் சாய்ந்து கொண்டு வாசித்தாள். நான் படிகளின் கீழே அமர்ந்திருந்தேன். அனைவரும் அமைதியாக இருந்தோம். வானம் மேகமூட்டத்துடன், மெதுவாக மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. அன்று வெப்பமாக இருந்ததால், காற்று வீசவில்லை. நாள், முடியாமல் நீண்டு கொண்டே செல்வது போல இருந்தது. எக்டேரினா பாவ்லோவ்னா மாடிக்குக் கைகளில் விசிறியுடன், தூக்க கலக்கத்துடன் வந்தாள்.

“ஓ, அம்மா!” என்ற ஜென்யா, அவளது கரங்களில் முத்தமிட்டாள். “பகலில் தூங்குவது உங்களுக்கு நல்லதில்லை.”

அவர்கள் ஒருவரை ஒருவர் விரும்பினார்கள். ஒருவர் தோட்டத்துக்குச் சென்றபோது, மற்றவர் மாடியில் நின்று கொண்டு, மரங்களை நோக்கி, “அலோ!” “ஜென்யா!” “அம்மா! எங்கே இருக்கிறாய்?” என்று கூப்பிட்டுக் கொள்வார்கள். அவர்கள் எப்போதும் ஒன்றாக வழிபடுவார்கள். ஒரே நம்பிக்கைகளைக் கொண்டிருந்தார்கள். அமைதியாக இருக்கும் போதும், ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொண்டார்கள். மற்றவர்களை ஒரே போல நடத்தினார்கள். எக்டேரினா பாவ்லோவ்னா இப்போது என்னிடமும் நன்றாகப் பழக ஆரம்பித்திருந்தார். எந்த அளவுக்கு என்றால், நான் சில நாட்கள் வரவில்லை என்றால், ஆட்களை அனுப்பி என்னை விசாரித்து வரவும் செய்தாள். என்னுடைய ஓவியங்களை மிகவும் பிரமிப்புடன் பார்த்தாள். அது போலவே நடந்த விஷயங்களை எல்லாம் மிகவும் வெளிப்படையாக என்னிடம் கூறுவாள். அவளது வீட்டு ரகசியங்களையும் என்னிடம் சொல்லுவாள்.

அவளது மூத்த மகளை மிகவும் பெருமித உணர்வுடன் பார்த்தாள். லைடா அவளிடம் எப்போதும் ஆறுதல் தேடி வந்ததில்லை. லைடா எப்போதும் மிகவும் தீவிரமான விஷயங்களைப் பற்றியே பேசுவாள். அவளது வழி தனி வழியாக இருந்தது. அவளுடைய தாயும், சகோதரியும் அவளைப் புனிதமாகவும், மர்மமானவளாகவும் பார்த்தார்கள். கப்பலின் அதிகாரியை, கப்பலின் வேலையாட்கள் பார்ப்பது போலப் பார்த்தார்கள்.

“எங்கள் லைடா மிகவும் சிறப்பானவள். இல்லையா?” என்று அவளது தாயார் எப்போதும் சொல்லுவாள்.

மென்மையான மழை தொடர்ந்து பெய்ய, நாங்கள் லைடாவைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம்… “அவள் மிகவும் சிறப்பானவள்” என்று அவளது தாயார் சொன்னாள். இப்போது சுற்றிப் பார்த்துக்கொண்டு, மெதுவான குரலில், “அவளைப் போன்றவளைப் பட்டப் பகலில் விளக்கைக் கொண்டுதான் தேடிப் பார்க்க வேண்டும். ஆனால், எனக்கு இப்போது கவலையாக இருக்கிறது. பள்ளி, மருந்துகள், புத்தகங்கள் எல்லாம் சரிதான், ஆனால் எதற்காக இவ்வளவு தீவிரமாகச் செல்ல வேண்டும்? அவளுக்கு இருபத்து மூன்று வயதாகிவிட்டது. அவள் தன்னைப் பற்றி இன்னமும் சற்று தீவிரமாக சிந்திக்க வேண்டும். இப்படியே புத்தகங்கள், மருந்துகள் என்று சென்றால், வாழ்க்கை எப்படி சென்றது அவளுக்கே தெரியாது… அவள் திருமணம் செய்ய வேண்டும்.”

வாசித்ததால் வெளிறிப் போய், தலை முடியெல்லாம் கலைந்துபோயிருந்த ஜென்யா, தலையைத் தூக்கி பார்த்து, தனக்குத்தானே பேசுவது போல, அவளது தாயை பார்த்து, “அம்மா, எல்லாம் கடவுளின் கையில் இருக்கிறது.”

திரும்பவும் அவள் புத்தகத்தில் மூழ்கிவிட்டாள்.

பெய்லகுரோவ், போட்டியோவகா என்ற நீண்ட அங்கியும், வேலைப்பாடுகளுடன் கூடிய சட்டையும் அணிந்திருந்தார். நாங்கள் வளையம் எறிதல், டென்னிஸ் முதலிய விளையாட்டுக்களை இருட்டும்வரை விளையாண்டோம். அதன் பின்னர், நீண்ட இரவு விருந்தை அருந்தினோம். லைடா திரும்பவும் பள்ளிகளைப் பற்றியும், மாவட்டத்தைத் தன்னுடைய கையில் வைத்திருக்கும் பாலகின் பற்றியும் பேசிக் கொண்டிருந்தாள். அன்றிரவு அங்கிருந்து கிளம்பியபோது, நீண்ட சோம்பலான நாளை பற்றிய நினைவும், எவ்வளவு நீண்டதாக இருந்தாலும், அதற்கு முடிவு உண்டு என்ற சோகமான நினைவும் மட்டுமே இருந்தது. ஜென்யா என்னை வாயிலுக்கு அழைத்துச் சென்றாள். அன்றைய தினத்தை, காலையில் இருந்து இரவு வரை, அவள் என்னுடன் செலவளித்திருந்ததால் அவளை விட்டுப் பிரியும்போது, ஒருவிதமாகத் தனிமையாக உணர்ந்தேன். அவர்களது குடும்பமே என் மீது அன்புடன் இருந்தது. அந்தக் கோடையில் முதல் முறையாக நான் வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

வீட்டுக்குச் செல்லும் போது, பெய்லகுரோவ்விடம் நான் “ ஏன் நீங்கள் இப்படியான சலிப்பூட்டும் வாழ்வை வாழ்கிறீர்கள்? என் வாழ்வு சோர்வாகவும், மந்தமாகவும், சலிப்பாகவும் இருக்கிறது. அதற்குக் காரணம் நான் ஒரு ஓவியன், விநோதமானவன். என்னுடைய வாழ்வு முழுவதும் பொறாமை, அதிருப்தி, என்னுடைய வேலையில் இருக்கும் நம்பிக்கையின்மை; நான் எப்போதும் ஏழையாகவும், நாடோடியாகவும் இருக்கிறேன். நீங்கள் செல்வந்தர், சாதாரண மனிதர். நிலவுடைமையாளர். கனவான் – ஆனால் ஏன் இப்படி ஒரே வழக்கமான வாழ்வை வாழ்ந்து, வாழ்வில் இருந்து எதையும் எடுக்காமல் இருக்கிறீர்கள்? உதாரணமாக, நீங்கள் ஏன் ஜென்யா அல்லது லைடா மீது இன்னமும் காதல் கொள்ளாமல் இருக்கிறீர்கள்?”

“நான் இன்னொரு பெண்ணைக் காதலிப்பதை நீ மறந்துவிட்டாய்” என்று பதில் கூறினார் பெய்லகுரோவ்.

அவர் குறிப்பிட்டது அவரது தோட்ட வீட்டில், அவருடன் வாழ்ந்து வந்த லயபார் இவனொவ்னாவை. நான் அவளை தினமும் பார்ப்பேன். பருமனாகவும், ஆடம்பரமாகவும், கொழுப்பேற்றப்பட்ட வாத்தைப்போல, தோட்டத்தில் ருஷ்ய தலை அலங்காரம் செய்து கொண்டு, குடையுடன் நடந்து கொண்டிருப்பாள். அவளது வேலையாட்கள் உணவு நேரத்தில் அல்லது தேநீர் நேரத்தில் அவளை உள்ளே அழைப்பார்கள். மூன்று வருடங்களுக்கு முன்பு அவள், அவரது வீட்டின் ஒரு பகுதியை கோடைகாலத்தில் வாடகைக்கு கேட்டு வந்தாள். ஆனால் அவள் பெய்லகுரோவ்வுடன் வாழ ஆரம்பித்து விட்டாள். அவரைவிட அவள் பத்து வருடங்கள் மூத்தவள். அவரை மிகவும் கடுமையுடன் நடத்தினாள். வெளியே செல்வதற்கும் அவர் அவளிடம் அனுமதி வாங்க வேண்டும். அவ்வப்போது அவள் தேம்பியும், சளி பிடித்த மனிதரைப்போல சத்தம் எழுப்பிக் கொண்டும் இருந்தாள். அந்தச் சத்தத்தை அவள் நிறுத்தாவிட்டால், நான் அங்கிருந்து சென்றுவிடுவேன் என்று அவளிடம் கூறுவேன். அதன் பின்னரே அவள் நிறுத்துவாள்.

வீட்டுக்குச் சென்றவுடன், பெய்லகுரோவ் மெத்தையில் அமர்ந்துகொண்டு, முகத்தைச் சுளித்துக் கொண்டு, யோசித்துக் கொண்டிருந்தார். நான் அறையில் மேலும், கீழுமாக நடந்து கொண்டிருந்தேன். என்னுள் ஒரு புதிய உணர்வு, காதல் முதல் முறையாக எழும் உணர்வு எழுந்தது. நான் வோல்சனினோவ் குடும்பத்தைப் பற்றிப் பேச விரும்பினேன்.

“லைடா, அவளைப் போலவே மருத்துவமனைகளுக்கும் பள்ளிகளுக்கும் ஓடிக் கொண்டிருக்கும் ஸிம்ஸ்டோவ் சமூக சேவைப் பணியாளரை மட்டுமே விரும்புவாள். அவளைப் போன்ற ஒரு பெண்ணுக்காக ஒரு மனிதன் சேவைப் பணியாளராக மட்டுமல்லாது, அந்த வேலையில் முழுவதுமாக இரும்பு காலணிகளை போல தேய்ந்து போகவும் தயாராக இருக்கவேண்டும். மிஸ்சியுஸ்? எவ்வளவு அழகானவள்!” என்றேன்.

பெய்லகுரோவ் இப்போது தன்னுடைய நீண்ட பேச்சை ஆரம்பித்தார். அந்த நூற்றாண்டின் நோயான, தோல்வி மனப்பான்மை பற்றி அலுப்பூட்டும் வகையில் பேச ஆரம்பித்தார். மிகவும் நம்பிக்கையுடனும் விவாதம் செய்வது போலவும் பேசிக் கொண்டிருந்தார். பல நூறு மைல்களுக்கு நீளும் வறண்ட, சலிப்பூட்டும், காய்ந்த புல்வெளிகள் கூட நமக்கு இவருடன் பேசுவதுபோன்ற அலுப்பைத் தராது. உட்கார்ந்து, பேசிக் கொண்டிருந்த நிலையைப் பார்த்தால், அவர் இப்போதைக்கு அங்கிருந்து செல்லப் போவதில்லை என்று தெரிந்தது.

“இதில் முக்கியம் தோல்வி மனப்பான்மையோ, வெற்றி மனப்பான்மையோ அல்ல; ஆனால் நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது பேருக்கு எந்த மனப்பான்மையும் இல்லை என்பதே பிரச்னை” என்று எரிச்சலுடன் சொன்னேன்.

பெய்லகுரோவ், நான் அவரைப் பற்றிச் சொல்கிறேன் என்று நினைத்து, கோபித்துக் கொண்டு, அங்கிருந்து சென்றுவிட்டார்.

(தொடரும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *