Skip to content
Home » செகாவ் கதைகள் #1 – ஓர் அறிமுகம்

செகாவ் கதைகள் #1 – ஓர் அறிமுகம்

ஆண்டன் செகாவ்

உலகின் தலைசிறந்த சிறுகதைகள் என்றொரு பட்டியலை யார், எங்கிருந்து தயாரித்தாலும் அதில் தவறாமல் இடம்பெற்றுவிடும் ஒரு பெயர், செகாவ். டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி எனும் இரு பெரும் ஆளுமைகள் உலகை வசப்படுத்தி வைத்திருந்த காலத்தில் அந்தோன் செகாவால் தனது தனித்துவமான குரலை நிலைநிறுத்த முடிந்திருக்கிறது. இது சாதாரண சாதனையே அல்ல.

சார்லஸ் டிக்கன்ஸ் போல் இளம் வயதிலேயே வறுமையைத் தரிசித்துவிட்டார் அந்தோன் செகாவ் (1860-1904). குடும்பப் பொறுப்புகளை ஏற்று நடத்தும் தந்தை அவருக்கு அமையவில்லை. சம்பாத்தியம் இல்லை, கடனும் நிறைய வாங்கினார் என்பதுபோக கோபக்காரராகவும் வீட்டிலிருப்பவரைப் போட்டு அடிப்பவராகவும் தந்தை இருந்திருக்கிறார்.

எனவே இளம் வயதிலேயே வேலை செய்து பணம் சம்பாதிக்கவேண்டிய நிர்பந்தம் செகாவுக்கு ஏற்பட்டுவிட்டது. தனது பள்ளிக்கூடப் படிப்புக்கான செலவை அவரே பார்த்துக்கொண்டார். தன் செலவு போக, மீதமிருப்பதை வீட்டுக்கும் அனுப்பி வைத்துக்கொண்டிருந்தார்.  செகாவ் ஏற்றுச் சுமந்த குடும்பச் சுமை அவருடைய படைப்புகளிலும் வெளிப்படுவதைக் காணமுடிகிறது.

1879ஆம் ஆண்டு மாஸ்கோவிலுள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார் செகாவ். அப்போதே சிறிய நகைச்சுவைக் கதைகளையும் சிறிய கட்டுரைகளையும் எழுதவும் இதழ்களுக்கு அனுப்பி வைக்கவும் ஆரம்பித்துவிட்டார். 26 வயதுக்குள் 400 சிறுகதைகளையும் ரஷ்ய மக்களின் அன்றாடங்களைப் பிரதிபலிக்கும் நடைச்சித்திரங்களையும் எழுதிக் குவித்துவிட்டார்.

நவீன சிறுகதை வடிவின் தந்தை என்று சிலர் செகாவை மதிப்பிடுகிறார்கள். அவருடைய கதைகள் உலகம் முழுவதையும் கவர்ந்து ஆக்கிரமித்திருக்கின்றன. அவருடைய தாக்கத்துக்கு உள்ளான படைப்பாளர்கள உலகம் முழுக்க நிரம்பியிருக்கிறார்கள். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் எண்ணற்ற மொழிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்கின்றன. எண்ணற்ற புதிய வாசகர்களை மீண்டும் மீண்டும் சென்றடைந்துகொண்டே இருக்கின்றன.

தன்னுடைய 44ஆம் வயதில் செகாவ் காசநோய்க்குப் பலியானார். இந்தக் குறைவான வாழ்விலும் காலத்தைக் கடந்து நிற்கும் 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், குறுநாவல்கள், நாடகங்கள் எழுதியிருக்கிறார். அவற்றின்மூலம் காலத்தை வென்று வாழ்கிறார்.

0

செகாவின் கதைகள் மனித வாழ்வின் பல்வேறு நிலைகளையும், மனித மனதின் வக்கிரங்களையும் எந்த வித விமரிசனமும் இல்லாமல் நம் முன்னே வைக்கின்றன. விர்ஜினியா உல்ஃப் கூறியதைப் போல செகோவின் கதை இதுவரை நாம் கேட்காத இசையைப் போன்றது. கவனமாகவும், இலக்கிய மனதுடனும் அதை அணுகாவிட்டால் அதன் இனிமையை நம்மால் உணரமுடியாது.

செகாவ் சிறுகதைகளிலிருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுப்பதென்பது உண்மையிலேயே அசாதாரணமான ஒரு பணியாகும். நான் மொத்தம் 12 சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்திருக்கிறேன்.

தேர்ந்தெடுத்தல் என்பது எப்படிக் கூறினாலும் ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தைச் சார்ந்தது. நான் தேர்ந்தெடுத்த அதே செகாவிடமிருந்து இன்னொருவர் வேறொரு 12 சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்கமுடியும். அனைவருக்கும் பொதுவாக ஒரு பட்டியலைத் தயாரிப்பது இயலாத செயல் என்றே சொல்லவேண்டும். அதை நான் முயலவும் இல்லை.

செகாவ் யார் என்பதை அழுத்தமாகச் சுட்டும் வகையில் இந்த 12 கதைகளும் அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்.  எல்லோராலும் உணர்வுபூர்வமாக இக்கதைகளோடு ஒன்றிப்போகமுடியும் என்றும் நம்புகிறேன். இவற்றில் சில அரசியல் பேசுபவை, சில காதல் பேசுபவை. இன்னமும் சில தனிமனிதனின் தோல்விகளையும் வெற்றிகளையும் பேசுபவை.

நான் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்திருக்கும் 12 சிறுகதைகளின் தலைப்புகள் பின்வருமாறு. கறுப்புத் துறவி, மாடி வீடு (ஓவியனின் கதை), குடியானவர்கள், நெல்லிக்காய்கள், நாயுடன் வந்த பெண், பந்தயம், வார்டு எண் 6, ஆயர்,  ரோத்ஸ்சில்டின் வயலின்,  காதல்,  அசையும் சொத்து,  ஓர் அரசாங்க ஊழியனின் மரணம்.

இந்தக் கதைகள் 1882இல் இருந்து 1902ம் ஆண்டுக்குள் எழுதப்பட்டவை. ரஷ்ய வரலாற்றில் இது மாறுதல்கள் வேகமாக நிகழ்ந்து கொண்டிருந்த காலம். இந்தக் கதைகளில் வரும் பலரும் தங்களது கடந்தகாலத்தை நல்லவிதமாகவும், எதிர்காலத்தைச் சற்று அச்சத்துடனும் பார்ப்பதைக் காணலாம். 1861ம் வருடம் ரஷ்ய வரலாற்றில் முக்கியமானது. அந்த வருடம்தான் பண்ணையடிமை முறை ஒழிக்கப்பட்டது. இந்தக் கதைகள் அதிலிருந்து 20-40 வருடங்களுக்குள் எழுதப்படுகின்றன. எப்படிப்பட்ட மாற்றங்களை இந்தச் சீர்திருத்தம் கொண்டுவந்தது என்பதை செகாவ் பல இடக்ளில் தொட்டுச் செல்கிறார்.

1861ம் ஆண்டு பிரதேச நிர்வாகங்கள் ‘ஸிம்ஸ்டவோ’ என்னும் நிர்வாகக் குழுக்கள் கைகளுக்குச் சென்றது. பெரும்பாலும் அந்தப் பகுதி பிரபுக்களும், முதலாளிகளும் நிரம்பியிருந்த இந்தக் குழுவைப்பற்றிப் பல கதைகளில் பார்க்கலாம். ‘மாடி வீடு’, ‘குடியானவர்கள்’, ‘காதல்’ முதலிய கதைகளில் இந்தக் குழுக்கள் ரஷ்ய கிராமப்புறங்களில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்தான விமர்சனங்களைக் காணலாம்.

‘கறுப்புத் துறவி’ தன்னை மேதை என்றெண்ணிக் கொள்ளும் மனிதனின் கதை. அவனுடைய மனதின் பிறழ்வில் அவன் கறுப்புத் துறவியைச் சந்திக்கிறான். கறுப்புத்துறவி என்பது அவரது மனப்பிறழ்வின் பிம்பமா அல்லது அவன் தன்னை மேதை என்றெண்ணிக் கொள்வதற்குக் கற்பித்துக் கொள்ளும் காரணமா என்பது கதையை வாசிப்பவர்களின் முடிவில் இருக்கிறது.

‘தன்னைப் புரட்சியாளனாக மாற்றிய கதை’ என்று லெனின் பாராட்டிய கதை  ‘வார்டு எண் 6’. சமூகத்தின் புரையோடிய நிறுவனங்களையும், அந்த நிறுவனங்களை அண்டிப் பிழைக்கும் அதிகாரிகளையும் மிகவும் தீவிரமாகத் தோலுரிக்கும் கதை. அதுபோலவே அன்றைய ரஷ்யாவின் குடியானவர்களின் நிலையை எடுத்துக் கூறியது ‘குடியானவர்கள்’. அரசாலும், மற்றவர்களாலும் சுரண்டப்படும் அவர்கள் வாழ்வின் இறுதியில் கைகளை ஏந்திப் பிச்சைக்காரர்களாகவே சமூகம் நிறுத்தி வைக்கிறது.

‘மாடி வீடு’ ஒரு காதல் கதை. அல்லது கனவை மட்டும் துரத்தும் ஒரு மனிதனின் காதல் கதை. சமூகத்தில் சிறிதேனும் மாற்றத்தைக் கொண்டுவர முயலும் ஆசிரியைக்கும், வேலை எதுவும் செய்ய விரும்பாத கலைஞனுக்கும் இடையான மோதல் எப்படிக் காதலைப் பிரிக்கிறது என்பது இன்றுவரை இந்தக் கதையை ஒன்று தீவிரமாக விரும்பவோ அல்லது தீவிரமாக வெறுக்கவோ செய்கிறது.

‘நாயுடன் வந்த பெண்’ செகாவின் கொண்டாடப்படும் கதைகளில் ஒன்று. மகிழ்ச்சியற்ற திருமணங்களில் இருக்கும் இருவர் கொள்ளும் காதல் கதை. ஒரு நாள் இரவு மட்டும் என்று ஆரம்பிக்கும் உறவு, அவர்களது வாழ்வைப் புரட்டிப் போடுகிறது. ‘அசையும் சொத்து’ இன்னொரு விந்தையான காதல் கதை. திருமணமான பெண்ணைக் காதலிக்கும் ஒருவர், அவளை அவளது கணவனிடம் இருந்து விலை கொடுத்து வாங்குகிறார். இந்தப் பரிமாற்றத்தில் யார் உண்மையாகக் காதலிக்கிறார்கள் என்பதை வாசகரிடமே விட்டுவிடுகிறார்.

‘ஆயர்’ மற்றும் ‘நெல்லிக்காய்கள்’ இரண்டும் தனிமனிதனின் ஆசைகளையும் அவற்றை நிறைவேற்ற நடக்கும் போராட்டங்களையும், குறிப்பாக அவற்றின் முடிவில் நாம் மகிழ்ச்சி என்று எதைக் கூறுகிறோம் என்பதையும் கூறுகின்றன. மகிழ்ச்சிக்கு நாம் கொடுக்கும் விலை என்ன என்பதையும் செகாவ் சுட்டிக் காட்டுகிறார்.

‘பந்தயம்’ இன்னொரு புகழ்பெற்ற கதை. என்ன விதமான தண்டனை சிறந்தது என்று கண்டறிய சற்று விசித்திரமான பந்தயம் செய்துகொள்ளும் இருவரில் யார் வெல்கிறார்கள் என்பதும், வெல்வது என்பது என்ன என்பதையும் சொல்லும் கதை.

பல ரஷ்ய இலக்கியங்களை மொழிபெயர்த்திருக்கும் கான்ஸ்டன்ஸ் கார்னெட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து இந்தக் கதைகளை நான் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறேன். சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுத்து, வேறு இரண்டு மொழிபெயர்ப்புகளோடு அவற்றைச் சரி பார்த்திருக்கிறேன். சாராம்சத்தைச் சிதைக்காமல் மொழிபெயர்ப்பது சவாலாக இருந்தது. நிதானமாகவே செய்திருக்கிறேன். செகாவுக்குச் சிறிதேனும் நியாயம் செய்திருக்கிறேனா என்பதை வாசகர்கள்தான் சொல்லவேண்டும்.

(தொடரும்)

 

பகிர:
nv-author-image

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

7 thoughts on “செகாவ் கதைகள் #1 – ஓர் அறிமுகம்”

 1. செக்காவின் கட்டுரை நன்றாக இருக்கிறது. உங்கள் தமிழாக்க சேவை வளரட்டும் பெறுகட்டும்…

  1. புத்தக எலி

   உங்கள் தமிழ்மொழிபெயர்ப்பு சேவை வளர வாழ்த்துக்கள்.

   செகாவின் கதைகளை வாசிக்க மிக ஆர்வமாக உள்ளேன்.

 2. க.நா.இராஜேஸ்வரன்,மொரட்டுப்பாளையம்.

  செகாவ் பற்றி இப்பொது தான் படிக்கிறேன். வாசிக்கத் தோதான எழுத்து நடை.

 3. பாரதி சந்திரன்

  உங்கள் கட்டுரை சிறப்பாக இருக்கிறது ரஷ்ய நாட்டின் பின்புறத்தை செக்காவ் சிறுகதைகள் இப்படி வெளிப்படுத்தின என்பதையும் அழகாக வரைந்து விட்டீர்கள்

 4. When it comes to short stories, It’s all the way Chekov, Chekov only.
  It’s good that his stories are translated into Tamil for the present Generation, as most of them are immersed in social medias.!!!

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *