இலையுதிர் காலத்தின் இருளான இரவு. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னே, இதே போன்ற இலையுதிர் கால மாலையில், தான் கொடுத்த விருந்தை நினைத்துக் கொண்டே, தன்னுடைய படிப்பறையில் மேலும், கீழுமாக வயதான வங்கி அதிகாரி நடந்து கொண்டிருந்தார். விருந்துக்குப் பல புத்திசாலி மனிதர்கள் வந்திருந்தார்கள். பல சுவாரசியமான உரையாடல்கள் நடைபெற்றன. அன்று பேசிய பல விஷயங்களில், மரணத் தண்டனை குறித்தான உரையாடலும் இருந்தது.
அன்று வந்திருந்தவர்களில் பெரும்பாலோர், பத்திரிகையாளர்களும், பல அறிவாளிகளும் மரண தண்டனையை எதிர்த்துப் பேசினார்கள். அதைப் பழைய காலத்தது என்றும், முறைகேடானது என்றும், கிறிஸ்தவ நாடுகளுக்கு அது சரியானது அல்ல என்றும் கூறிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலரின் கருத்துப்படி, மரண தண்டனை கொடுக்கப்படும் எல்லா இடங்களிலும் அதை ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும் என்றார்கள். அவர் மட்டும் “அதை நான் ஒத்துக்கொள்ளவில்லை. மரணத் தண்டனையோ, ஆயுள் தண்டனையோ நான் அனுபவித்ததில்லை. ஆனால் ஒருவர் அவற்றைப் பற்றிச் சரியாக யோசித்தால், மரண தண்டனை என்பது ஆயுள் தண்டனையை விட மிகவும் மனிதத்தன்மை கொண்டதும், நெறியுடையதும் ஆகும். மரண தண்டனையில் மனிதன் உடனடியாக கொல்லப்பட்டுவிடுகிறான். ஆயுள் தண்டனை அவனைக் கொஞ்சம், கொஞ்சமாகக் கொல்கிறது. சில நிமிடங்களில் உங்கள் உயிரை போக்குபவன் மனிதத்தன்மை கொண்டவனா? அல்லது பல வருடங்களுக்கு உயிரை இழுத்து, மெதுவாக கொல்பவன் மனிதத்தன்மை கொண்டவனா?”
“இரண்டுமே மனிதத்தன்மையற்றவை” என்றார் வந்திருந்த விருந்தினர்களில் ஒருவர். “ஏனென்றால் இரண்டுக்கும் இருப்பது ஒரே குறிக்கோள்தான் – உயிரை எடுப்பது. நீதிமன்றம் என்பது கடவுள் அல்ல; தன்னால் திரும்பக் கொடுக்க முடியாத ஒன்றை எடுப்பதற்கு, அதற்கு எந்த உரிமையும் இல்லை.”
அன்று வந்திருந்த விருந்தினர்களில், இருபது வயது உடைய ஒரு இளம் வக்கீலும் இருந்தார். அவருடைய கருத்தைக் கேட்டபோது, அவர் கூறினார்:
“மரண தண்டனை, ஆயுள் தண்டனை இரண்டும் ஒரே அளவில் நெறியற்றவை தான். ஆனால் இவை இரண்டின் நடுவே நான் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், நான் ஆயுள் தண்டனையைத் தேர்ந்தெடுப்பேன். வாழ்வது என்பது எப்போதும் சாவதை விட மேலானது.”
இப்போது எல்லோரும் பேச ஆரம்பித்தார்கள். அப்போது இளமையாகவும், சற்று பதற்றத்துடனும் இருந்த வங்கி அதிகாரி, உணர்ச்சிவசப்பட்டு, மேசையை முஷ்டியால் குத்தி, வக்கீலை நோக்கிக் கத்தினார்.
“அது உண்மையல்ல! நீங்கள் ஐந்து வருடங்கள் தனிமை சிறையில் இருந்து விட்டால், நான் இருபது லட்சம் தருகிறேன்.”
“நீங்கள் உண்மையாகச் சொல்கிறீர்கள் என்றால், நான் பந்தயத்துக்குத் தயார். ஆனால் ஐந்து அல்ல, பதினைந்து வருடங்கள் இருக்கத் தயார்.”
“பதினைந்தா? சரி.” என்றார் அவர். “விருந்தினர்களே! இருபது லட்சம் நான் பந்தயம் கட்டுகிறேன்.”
“ஒத்துக் கொள்கிறேன்! நீங்கள் உங்கள் பணத்தை வைக்கிறீர்கள். நான் என் சுதந்திரத்தைப் பந்தயம் வைக்கிறேன்.”
இப்படியாக அந்த அர்த்தமில்லாத, காட்டுத்தனமான பந்தயம் ஆரம்பித்தது! தன்னால் எண்ணமுடியாத சொத்தை வைத்திருந்த வங்கி அதிகாரி, விளையாட்டுத்தனத்துடன் இருந்த காலம் அது. அவர் பந்தயத்தை எண்ணி மகிழ்ந்தார். விருந்தின் போது, அந்த இளைஞனை வேடிக்கை பேசிக்கொண்டிருந்தார்.
“இன்னமும் நேரமிருக்கிறது, இளைஞனே, நன்றாக யோசித்துக் கொள். எனக்கு இருபது லட்சம் என்பது ஒன்றுமே இல்லை. ஆனால் நீ உன் வாழ்வின் மூன்று அல்லது நான்கு நல்ல வருடங்களை இழக்கப்போகிறாய். மூன்று, நான்கு என்று நான் சொல்வதன் காரணம், அதற்கு மேல் உன்னால் இருக்க முடியாது. அத்தோடு, தானாகச் சிறையில் வைத்துக் கொள்வது என்பது, கட்டாயமாகச் சிறையில் இருப்பதைவிடக் கடினமானது என்பதை மறந்துவிடாதே. எப்போது வேண்டுமென்றாலும் உன்னால் வெளியே சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கமுடியும் என்ற எண்ணம், சிறையில் நீ இருக்கும் நாட்களை நரகமாக்கிவிடும். உனக்காகப் பரிதாபப்படுகிறேன்.”
இப்போது அதை எல்லாம் நினைத்துக் கொண்ட அவர், தனக்குத் தானே பேசிக் கொண்டார்: “இந்தப் பந்தயத்தின் நோக்கம் என்ன? அந்த மனிதன் தன்னுடைய வாழ்வின் பதினைந்து வருடங்களை இழந்ததும், நான் இருபது லட்சத்தைத் தூக்கி எறிவதும் எதற்காக? அதனால் மரணத் தண்டனை, ஆயுள் தண்டனையைவிட நல்லது அல்லது கெட்டது என்று தீர்மானித்துவிட முடியுமா? இல்லை, இல்லை. எல்லாம் முட்டாள்தனம். எந்த அர்த்தமும் இல்லாதது. என்னுடைய பணத்திமிரும், அவனது பணத்தாசையும்தான்…”
அந்த நாள் மாலை அதன் பின்னர் நடந்தது நினைவுக்கு வந்தது. அந்த இளைஞன் தன்னுடைய சிறைவாசத்தை, கடுமையான மேற்பார்வையுடன் அவரது தோட்டத்தில் இருந்த சிறிய வீட்டில் கழிப்பது என்று முடிவு செய்தார்கள். பதினைந்து வருடங்களுக்கு, அவன் அந்த வீட்டின் எல்லையைத் தாண்டி வரக்கூடாது; மனிதர்களைப் பார்க்கவோ, மனிதர்கள் குரலைக் கேட்கவோ கூடாது; செய்தித்தாள்களும், கடிதங்களையும் பெறக்கூடாது என்றெல்லாம் ஒத்துக் கொள்ளப்பட்டது. இசைக்கருவிகளையும், புத்தகங்களையும் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. கடிதங்கள் எழுதவும், வைன் அருந்தவும், புகை பிடிக்கவும் அனுமதி இருந்தது.
அவர்களது ஒப்பந்தத்தின்படி, உலகத்துடன் அவனுடைய ஒரே தொடர்பு, அதற்காக அமைக்கப்பட்ட சிறிய சன்னலின் வழியே மட்டுமே அனுமதிக்கப்படும். அவனுக்கு என்ன தேவையோ – புத்தகங்கள், வைன், இசை – எவ்வளவு தேவையோ அதை அவன் அந்தச் சன்னலின் வழியே மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். அவனுடைய சிறைவாசத்தை தனிமையில் கழிப்பதற்கு என்ன, என்ன நிபந்தனைகள் இருக்க வேண்டுமோ அவை அனைத்தையும் அந்த ஒப்பந்தம் தெளிவாக எடுத்துரைத்தது. அங்கே சரியாகப் பதினைந்து வருடங்கள் – நவம்பர் 14, 1870, பன்னிரண்டு மணியில் இருந்து நவம்பர் 14, 1885 பன்னிரண்டு மணி வரை அங்கிருக்க வேண்டும். நிபந்தனைகளை அவன், இந்தக் காலக்கெடு முடியும் நேரத்துக்கு இரண்டு நிமிடங்கள் முன்பு உடைக்கச் சிறிது முயற்சி செய்தாலும், அவர் அவனுக்கு இருபது லட்சம் தரத் தேவையில்லை.
அவனது சிறைவாசத்தின் முதல் வருடம், அவனது குறிப்புகளில் இருந்து, தனிமையிலும், மனச்சோர்விலும் அவன் அவதிப்படுவது தெரிந்தது. அங்கிருந்து பியானோ வாசிக்கும் சத்தம் பகலிலும், இரவிலும் கேட்டுக் கொண்டே இருந்தது. மதுவையும், புகையிலையையும் மறுத்துவிட்டான். மது தன்னுடைய ஆசைகளை அதிகப்படுத்துவதாகவும், சிறைக்கைதியின் முக்கிய எதிரி ஆசைகள்தான் என்றும் எழுதியிருந்தான். அதுவும் நல்ல வைன் குடித்துவிட்டு, யாரையும் பார்க்காமல் இருப்பது மிகவும் மகிழ்ச்சியற்ற நிலை. புகையிலை அறையில் இருந்த காற்றை மாசுபடுத்தியது. முதல் வருடம் அவன் வாசித்த புத்தகங்கள் எளிமையான கதைகளைக் கொண்டவை – எளிமையான காதல் கதைகள், பரபரப்பான, விறுவிறுப்பான கதைகள்.
இரண்டாம் வருடத்தில் பியானோ சத்தம் நின்று போய்விட்டது. கைதியும் இப்போது செவ்வியல் இலக்கியக் கதைகளை மட்டுமே கேட்டார். ஐந்தாவது வருடத்தில், திரும்பவும் பியானோ வாசிக்கப்பட்டது. கைதி வைன் கேட்டார். அவரைச் சன்னல் வழியே பார்த்தவர்களுக்கு, கைதி வருடம் முழுவதும் தின்று கொண்டும், குடித்துக் கொண்டும், படுக்கையில் படுத்துக் கொண்டு, கொட்டாவி விட்டுக்கொண்டும், தனக்குத்தானே பேசிக்கொண்டும் இருந்ததாகத் தெரிந்தது. புத்தகங்களை வாசிக்கவில்லை. சில நேரங்களில் இரவில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தான். பல மணி நேரம் தொடர்ந்து எழுதுவான். பின்னர் காலையில் அனைத்தையும் கிழித்துப் போட்டுவிடுவான். பல முறை அழுது கொண்டிருப்பதையும் பார்த்தார்கள்.
ஆறாம் ஆண்டின் பிற்பகுதியில், கைதி பல மொழிகளையும், தத்துவம், வரலாறு போன்றவற்றையும் ஆர்வமாகப் படிக்க ஆரம்பித்தான். மிகுந்த ஆர்வத்துடன் இவற்றைப் படிக்க ஆரம்பித்தான். வங்கி அதிகாரி, அவன் கேட்ட புத்தகங்களை வாங்குவதைக் கிட்டத்தட்ட முழு நேரமும் செய்ய வேண்டிய அளவுக்கு அவன் வாசித்துக் கொண்டிருந்தான். நான்கு வருடங்களில் கிட்டத்தட்ட அறுநூறு புத்தகங்களை வாங்க வேண்டி இருந்தது. இந்தக் காலகட்டத்தில், அவருக்குக் கைதியிடம் இருந்து ஒரு கடிதம் வந்து சேர்ந்தது.
“என் அன்பு சிறைக்காவலருக்கு! நான் இந்தக் கடிதத்தை ஆறு மொழிகளில் எழுதியிருக்கிறேன். அந்த மொழிகளை அறிந்தவர்களிடம் இதை படித்துக் காட்டவும். அவர்கள் அதில் ஒரு தவறைக்கூடக் கண்டறியாவிட்டால், தோட்டத்தில் ஒரு முறை துப்பாக்கியால் சுடவும். அதைக் கொண்டு என்னுடைய முயற்சிகள் எல்லாம் வீணாகவில்லை என்று தெரிந்துகொள்வேன். எல்லாக் காலங்களிலும், எல்லா நிலங்களிலும் இருக்கும் வேறு வேறு மொழி பேசுபவர்கள் அனைவரிடமும் ஒரே நெருப்புதான் எரிந்துகொண்டிருக்கிறது. ஓ! இப்போது அவர்களை எல்லாம் புரிந்து கொள்வதில் இருந்து என்னுடைய ஆன்மா அடையும் இணையில்லா மகிழ்ச்சியை மட்டும் உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால்..!” கைதியின் ஆசை நிறைவேற்றப்பட்டது. தோட்டத்தில் இரண்டுமுறை சுடும்படி ஆணையிட்டார்.
பத்தாவது வருடத்துக்குப் பின்னர், கைதி தன்னுடைய மேசையில் அசையாமல் அமர்ந்து, வேதாகமத்தை தவிர வேறெதையும் வாசிக்கவில்லை. நான்கு வருடங்களில் அறுநூறு புத்தகங்களைப் படித்த ஒருவன், ஒரு வருடமாக ஒரு சிறிய புத்தகத்தை மட்டுமே வாசித்துக் கொண்டிருப்பது அவருக்கு வேடிக்கையாக இருக்கிறது. வேதாகமத்தை தொடர்ந்து, இறையியல் புத்தகங்களும், ஆன்மிக வரலாறுகளும் தொடர்ந்தன.
கடைசி இரண்டு வருடங்களில், கைதி இன்னதென்று இல்லாமல் பல புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்தார். ஒரு நேரத்தில், அறிவியல் சம்பந்தமான புத்தங்களைக் கேட்பான்; உடனே அடுத்ததாக பைரன் அல்லது ஷேக்ஸ்பியர் புத்தகங்களைக் கேட்பான். அதே நேரத்தில் அவனிடம் இருந்து வரும் குறிப்புகளில் வேதியியல் புத்தகம், மருத்துவக் கையேடு, நாவல் மற்றும் ஏதாவது தத்துவம் அல்லது இறையியல் பற்றிய கட்டுரைகளையும் கேட்பான். அவன் படித்துக் கொண்டிருப்பது, கடலில் மூழ்கிக் கொண்டிருப்பவன், மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலின் ஏதாவது ஒரு பகுதியைப் பிடித்து தப்பிக்க முயற்சி செய்வதுபோல இருந்தது.
இதையெல்லாம் அவர் நினைத்துக்கொண்டு, யோசித்தார்:
“நாளை பன்னிரண்டு மணிக்கு அவனுக்கு விடுதலை கொடுக்கவேண்டும். எங்களுடைய ஒப்பந்தத்தின்படி, அவனுக்கு இருபது லட்சம் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுத்தால், என் கதை முடிந்து விடும். முழுவதுமாக நான் நிர்மூலமாகிவிடுவேன்.”
பதினைந்து வருடங்களுக்கு முன், அவரது சொத்து மதிப்பு பல லட்சங்களில் இருந்தது. இப்போதோ, அவரது சொத்துக்கள் அதிகமாக இருக்கிறதா, கடன் அதிகமாக இருக்கிறதா என்று அவருக்கே தெரியவில்லை. பங்கு சந்தையில் அவர் ஈடுபட்ட சூதாட்டங்கள், பேரங்கள் போன்றவற்றை அவரால் வயதான பின்னரும் கைவிட முடியவில்லை. அதுவே அவரது சொத்தின் மதிப்பைச் சிறிது, சிறிதாகக் குறைத்து விட்டது. பயமில்லாத, தன்னம்பிக்கையும், கர்வமும் கொண்ட செல்வந்தர், இப்போது வெறும் சாதாரண வங்கி அதிகாரியாக, அவரது முதலீடுகள் மேலே ஏறுவதையும், இறங்குவதையும் பார்த்து நடுங்கிக்கொண்டிருந்தார். “நாசமாய்ப் போன பந்தயம்!” என்று அவர் தனக்குள்ளே முணுமுணுத்தார். அவரது தலையைப் பிடித்துக்கொண்டு “ஏன் இன்னமும் அவன் சாகவில்லை? அவனுக்கு நாற்பது வயதாகிவிட்டது. என்னுடைய கடைசிக் காசையும் எடுத்துக்கொண்டு அவன் திருமணம் செய்துகொண்டு, வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டு, பங்குச் சந்தையில் சூதாடிக் கொண்டிருப்பான். நான் அவனைப் பிச்சைக்காரனைப் போலப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவன் என்னைப் பார்த்து தினமும் ஒரே வாக்கியத்தைச் சொல்லிக் கொண்டிருப்பான் – ‘என்னுடைய வாழ்வின் மகிழ்ச்சிக்கு நீங்கள்தான் காரணம். உங்களுக்கு உதவுகிறேன்!’ இல்லை, அது முடியாது! அவன் இறந்து போவது ஒன்றுதான் என்னை பிச்சைக்காரன் ஆக்குவதில் இருந்தும், அவமானத்தில் இருந்தும் காப்பாற்றும்!”
மூன்று மணி அடித்தது. அவர் கேட்டுக் கொண்டிருந்தார். வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். வெளியில் மரங்கள் அசையும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. சத்தம் எதுவும் போடாமல், அவரது நெருப்பும் அண்ட முடியாத பாதுகாப்புப் பெட்டியில் இருந்து, பதினைந்து வருடங்களாக திறக்கப்படாத அந்த வீட்டின் சாவியை எடுத்துக் கொண்டு, அவருடைய மேலங்கியை அணிந்து கொண்டு, வீட்டில் இருந்து வெளியே வந்தார்.
தோட்டத்தில் இருளாகவும், குளிராகவும் இருந்தது. மழை விழுந்து கொண்டிருந்தது. கத்தியால் வெட்டுவது போலக் காற்று தோட்டத்தின் வழியே ஊளையிட்டு வீசிக் கொண்டு, மரங்களை நிற்கவிடாமல் ஆட்டிக் கொண்டிருந்தது. வங்கி அதிகாரி கண்களை இடுக்கிக்கொண்டு பார்த்தார். அவரால் நிலத்தையோ, வெள்ளை சிலைகளையோ, வீட்டையோ அல்லது மரங்களையோ பார்க்க முடியவில்லை. வீடு இருந்த இடத்துக்குச் சென்ற அவர், அங்கிருந்த காவலாளியை இரண்டு முறை அழைத்துப் பார்த்தார். எந்தப் பதிலும் வரவில்லை. அவனும் வீசிய காற்றுக்குப் பயந்து எங்கேயோ ஒடுங்கி இருக்க வேண்டும். சமையலறையிலோ, வேறு குடில்களிலோ தூங்கிக்கொண்டிருக்க வேண்டும்.
“நான் நினைப்பதை நடத்துவதற்கு மட்டும் எனக்குத் தைரியம் இருந்தால், முதல் சந்தேகம் காவலாளி மீதுதான் விழும்” என்று நினைத்தார்.
இருட்டில் அந்த வீட்டின் படிகளைக் கண்டறிந்து, வீட்டின் வாயிலைச் சென்றடைந்தார். அங்கிருந்த சிறிய வழியில் சென்று, ஒரு தீக்குச்சியைக் கொளுத்தினார். அங்கே ஒருவரும் இல்லை. படுக்கை இருந்தது, அதில் மெத்தை இல்லை. மூலையில் ஒரு இரும்பு அடுப்பு இருந்தது. கைதியின் அறைகளுக்குச் செல்லும் கதவுகளில் இருக்கும் முத்திரை அப்படியே இருந்தது.
தீக்குச்சி எரிந்து முடிந்தவுடன், அவர் உணர்வு மிகுதியில் நடுங்கிக்கொண்டே, அங்கிருந்த சிறிய சன்னலின் வழியே எட்டிப்பார்த்தார். கைதியின் அறையில் மெழுகுவர்த்தி மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. கைதி மேசையில் அமர்ந்திருந்தார். அவனது முதுகு, தலை முடி, கைகளைத் தவிர எதுவும் தெரியவில்லை. மேசையில், இரண்டு நாற்காலிகளில், மேசையின் அருகில் இருந்த தரை விரிப்பில் புத்தகங்கள் திறந்து கிடந்தன.
ஐந்து நிமிடங்கள் கடந்தன. இன்னமும் கைதியிடம் இருந்து எந்த அசைவும் இல்லை.பதினைந்து வருடச் சிறைவாசம் அவனை அசையாமல் அமர்ந்திருக்கச் செய்தது. சன்னலைத் தன்னுடைய விரல்களால் தட்டினார். ஆனால் கைதியிடம் எந்த அசைவும் இல்லை. அதன் பின்னர், கதவில் இருந்த முத்திரையை மெதுவாக அகற்றி, சாவியைப் போட்டார். துருப்பிடித்திருந்த பூட்டு சத்தத்துடன் திரும்பி, கதவு சத்தத்துடன் திறந்தது. அங்கே காலடி சத்தத்தையும், ஆச்சர்யத்துடன் ஒரு குரலையும் அவர் எதிர்பார்த்தார். ஆனால் மூன்று நிமிடங்கள் கடந்தன. இன்னமும் அறையில் அமைதி மட்டுமே நிலவியது. உள்ளே செல்ல முடிவெடுத்தார்.
மேசையில் சாதாரண மனிதர்களைப்போல இருந்த ஒருவன் அசையாமல் அமர்ந்திருந்தான். வெறும் எலும்பின் மீது தோலைப் போர்த்தியது போல இருந்த அவனது முடி, பெண்களைப் போல நீண்டு வளர்ந்திருந்தது. தாடி புதர் போல மண்டி வளர்ந்திருந்தது. அவனது முகம் மஞ்சளாக, கன்னங்கள் குழி விழுந்தும், அவனது முதுகு நீண்டும், குறுகலாகவும், அவனது முரடாக இருக்கும் தலையைத் தாங்கிக் கொண்டிருந்த கைகள் மெலிதாக, பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது. அவனது தலையில் வெள்ளை முடி எட்டிப் பார்க்கத் தொடங்கியிருந்தது. அவனது தளர்ந்த, மெலிந்த, வயதான முகத்தைப் பார்க்கும் எவரும் அவனுக்கு நாற்பது வயது என்பதை நம்பமாட்டார்கள். அவன் தூங்கிக் கொண்டிருந்தான்… அவனது குனிந்த தலை இருந்த மேசையின் மீது காகிதக்கட்டு ஒன்று இருந்தது. அதில் அழகான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது.
“பரிதாபமான ஜீவன்!” என்று நினைத்தார். “வரப்போகும் லட்சங்களை நினைத்துத் தூங்கிக்கொண்டிருக்கிறான். ஏற்கனவே பாதி பிணமாக இருக்கும் இவனை, படுக்கையில் போட்டு, அவனது முகத்தைத் தலையணையால் முகத்தை அழுத்தினால் போதும். உலகின் எந்த நிபுணரும் இதைக் கொலை என்று கண்டுபிடிக்க முடியாது. முதலில் அவன் என்ன எழுதியிருக்கிறான் என்று பார்க்கலாம்…”
அந்தக் காகிதக்கட்டை எடுத்துக்கொண்டு, அதை வாசிக்க ஆரம்பித்தார்;
“நாளை பன்னிரண்டு மணிக்கு, என்னுடைய சுதந்திரமும், மற்ற மனிதர்களைப் பார்ப்பதற்கான உரிமையும் திரும்பக் கிடைத்துவிடும். நான் இந்த அறையில் இருந்து வெளியே சென்று சூரியனைத் திரும்பப் பார்க்கும் முன், சில வார்த்தைகளை உங்களுக்குச் சொல்ல வேண்டும். தெளிவான மனசாட்சியோடு, கடவுளின் முன் உண்மையாக நான் சொல்வது, சுதந்திரத்தையும், ஆரோக்கியத்தையும், நீங்கள் உலகின் நல்ல விஷயங்கள் என்று கருதப்படும் எல்லாவற்றையும் வெறுக்கிறேன்.”
“பதினைந்து வருடங்களாக நான் உலக வாழ்வைப் படித்து வந்திருக்கிறேன். உண்மையில் நான் உலகையும் மனிதர்களையும் பார்க்கவில்லை. ஆனால் உங்கள் புத்தகங்களில் நான் வாசமான வைன்னையும் குடித்திருக்கிறேன், பாடல்களைப் பாடினேன், மான்களையும், காட்டுப்பன்றிகளையும் வேட்டையாடினேன், பெண்களைக் காதலித்திருக்கிறேன்… கவிஞர்களாலும், அறிவாளிகளாலும் உருவாக்கப்பட்ட நுட்பமான அழகுடைய மேகங்கள் என்னை இரவில் வந்து பார்த்திருக்கின்றன, என் மூளையைச் சுழற்றிவிட்ட அற்புதமான கதைகளை என் காதுகளில் சொல்லி இருக்கின்றன.
உங்கள் புத்தகங்களில் நான் இல்புர்ஸ், மோண்ட் பிளாங்க் சிகரங்களை ஏறி இருக்கிறேன்; அந்த உச்சியில் இருந்து காலையும், மாலையும் சூரியன் வானத்தை, கடல்களை, மலைச் சிகரங்களைத் தன் வெளிச்சத்தால் தங்க நிறத்தாலும், செந்நிறத்தாலும் நிரப்புவதைப் பார்த்தேன். அங்கிருந்து எனது தலைக்கு மேலே மின்னல் அடிப்பதையும், சூறாவளி மேகங்கள் சுழலுவதையும் பார்த்தேன். அங்கிருந்து பசுமையான காடுகள், வயல்கள், ஆறுகள், ஏரிகள், நகரங்கள் என அனைத்தையும் பார்த்தேன். அங்கிருந்து அழகிகளின் பாடல்களையும், ஆடு மேய்ப்பவர்களின் குழல் ஓசையையும் கேட்டுக் கொண்டிருந்தேன். என்னிடம் கடவுளைப் பற்றிப் பேச வந்திருந்த சாத்தான்களின் சிறகைத் தொட்டுப் பார்த்தேன்… உங்கள் புத்தகங்களில் நான் முடிவில்லாத பள்ளங்களில் குதித்திருக்கிறேன், அற்புதங்கள் செய்திருக்கிறேன், கொன்றிருக்கிறேன், நகரங்களை எரித்திருக்கிறேன், புதிய மதங்களை போதித்திருக்கிறேன், பெரிய அரசுகளைக் கைப்பற்றியிருக்கிறேன்…
“உங்களது புத்தகங்கள் என்னை அறிவுடையவனாகச் செய்திருக்கின்றன. பல காலங்களாக மனிதனின் அறிவில் தோன்றிய அனைத்தையும் சிறிய புத்தகங்களின் வழியே என்னுடைய மூளையில் இருக்கின்றது. உங்கள் எல்லோரையும்விட நான் புத்திசாலி என்பது எனக்குத் தெரியும்.
நான் உங்களது புத்தகங்களை வெறுக்கிறேன். இந்த உலகின் அறிவையும், ஆசிகளையும் வெறுக்கிறேன். இவை எல்லாம் எந்த மதிப்பும் இல்லாதவை. கண நேரத்தில் அழிந்து போவது, மாயை, கானல் நீரைப்போல ஏமாற்றம் கொடுப்பது. நீங்கள் பெருமை உடையவராகவும், அறிவாளியாகவும், அருமையானவராகவும் இருக்கலாம். ஆனால் மரணம் உங்களையும், வயலில் இருக்கும் எலிகளைப்போல ஒரு நொடியில் பூமியின் முகத்தில் இருந்து அழித்துவிடும். உங்களுடைய வரலாறு, வாரிசுகள், அழிக்கமுடியாத மேதமை எல்லாம் பூமி உருண்டையுடன் எரிந்தோ, உறைந்தோ போய்விடும்.
நீங்கள் உங்கள் அறிவை இழந்து, தவறான பாதையில் செல்கிறீர்கள். பொய்களை உண்மை என்று நம்புகிறீர்கள்; அவலட்சணத்தை அழகு என்கிறீர்கள். ஏதோ ஒரு காரணத்தால், ஆப்பிள், ஆரஞ்சு மரங்களில் தவளைகளும், பல்லிகளும் காய்க்க ஆரம்பித்தாலும், ரோஜா பூ, வியர்வை மண்டிய குதிரையைப்போல வாசம் வீசினாலும் அதை அற்புதமாகப் பார்ப்பீர்கள். நானோ, பூமியைச் சொர்க்கமாகப் பார்க்கும் உங்களை நினைத்து ஆச்சரியம் அடைகிறேன். உங்களைப் புரிந்துகொள்ள நான் விரும்பவில்லை.
நீங்கள் வாழும் வகையை நான் எப்படியெல்லாம் வெறுக்கிறேன் என்பது நிரூபிக்க, நான் ஒரு காலத்தில் சொர்க்கம் என்று நினைத்த இருபது லட்சத்தை வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதை நான் இப்போது வெறுக்கிறேன். எனக்கு அந்தப் பணம் தேவையில்லை என்பதால், நான் இந்த அறையில் இருந்து ஐந்து மணி நேரம் முன்பாகக் கிளம்பி, நமது ஒப்பந்தத்தை உடைத்துவிடுவேன்…”
இதை வாசித்து முடித்தவுடன், அதை அவர் மேசையின் மீது வைத்துவிட்டார். அவனைத் தலையில் முத்தமிட்டு, அங்கிருந்து அழுதுகொண்டே வெளியேறினார். வேறெந்த நேரத்திலும், அவர் பங்குச் சந்தையில் பெருமளவில் நஷ்டத்தைச் சந்தித்த போதும், அவர் இவ்வளவு கேவலமானவராக உணர்ந்ததில்லை. வீட்டுக்குச் சென்று, அவரது படுக்கையில் படுத்த பின்னரும், அவரது கண்ணீரும், உணர்ச்சிகளும் அவரைப் பல மணி நேரம் தூங்கவிடாமல் செய்தது.
மறுநாள் காலையில் காவலாளிகள் வெளிறிய முகத்தோடு அவரிடம் வந்து, சிறை வீட்டில் இருந்த கைதி, அன்று காலை சன்னலின் வழியே வெளியே வந்து, தோட்ட வாசலுக்குச் சென்று, வெளியே மறைந்துவிட்டான் என்றார்கள். அவரும் அவர்களுடன் சென்று அவன் மறைந்துவிட்டதை உறுதிசெய்துகொண்டார். தேவையில்லாத பேச்சுகளைத் தவிர்க்க, அவர் அவனது கடைசிக் கடிதத்தை, இருபது லட்சத்தை வேண்டாம் என்று அவன் எழுதியிருந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு, தன்னுடைய வீட்டில் இருக்கும் நெருப்பும் தொட முடியாத பாதுகாப்பு பெட்டியில் பத்திரமாக வைத்தார்.
0