Skip to content
Home » செகாவ் கதைகள் #14 – குடியானவர்கள் 1

செகாவ் கதைகள் #14 – குடியானவர்கள் 1

குடியானவர்கள்

I

ஸ்லாவியன்ஸ்கி பஜார் விடுதியில் உணவு பரிமாறுபவராக இருந்த நிக்கொலாய் சிகில்டுயேவ் நோய்வாய்ப்பட்டார். அவரது கால்கள் மரத்து போய், அவரால் நடப்பதும் முடியாமல் போனது. ஒரு முறை அவர் உணவை எடுத்து செல்லும் போது  தடுமாறி விழுந்துவிட்டார். அதனால் வேலையை விட வேண்டிவந்தது. அவருடைய  சேமிப்பு மட்டுமல்லாது மனைவியின் சேமிப்பும் மருத்துவர் கட்டணம் மற்றும் மருந்து செலவுகளில் கரைந்து போனது. அவர்களுக்கு வாழ்வதற்குப் பணம் இல்லை. அவருக்கும் வேலையில்லாமல் இருப்பது சலிப்பாக இருந்தது. எனவே அவரது கிராமத்தில் இருக்கும் வீட்டுக்குச் சென்றுவிட முடிவு செய்தார். தனது  சொந்த வீட்டில் நோயுடன் இருப்பது மலிவாகவும் இருக்கும். மேலும் நமது வீட்டின் சுவர்களே நமக்குப் பெரிய உதவி என்பது உண்மையல்லவா?

ஷுகோவோவை அவர் மாலையில் சென்றடைந்தார். அவரது குழந்தைப்பருவ நினைவுகளில் இருந்த அவரது வீட்டை மிகவும் வசதியானதாகவும், வெளிச்சத்துடன், போதுமான அளவுடையதாகவும் கற்பனை செய்து வைத்திருந்தார். இப்போது குடிசை போலிருந்த அதனுள் நுழையும்போதே அவரைப் பயம் தொற்றியது. இருட்டாகவும், இடநெருக்கடியுடன், சுத்தம் இல்லாமலும் இருந்தது. அவருடன் வந்திருந்த மனைவி ஓல்காவும், மகள் சாஷாவும், வீட்டில் பாதி இடத்தை அடைத்துகொண்டிருந்த சுத்தமில்லாத அடுப்பை மிகவும் குழப்பத்துடன் பார்த்தார்கள். அடுப்பு புகை கரியால் நிரம்பி, ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தது. எவ்வளவு ஈக்கள்! அடுப்பு ஒரு பக்கமாக இருந்தது. இன்னொரு பக்கமாக உத்திரம் சாய்ந்தவாறு இருந்தது. குடிசை எந்த நேரமும் கீழே விழுந்து விடும்போல இருந்தது. மூலையில், கடவுள் படங்கள் இருந்த இடத்தில் போத்தல் சீட்டுகளும், செய்தித்தாள் துணுக்குகளும் படங்களுக்குப் பதிலாகச் சுவற்றில் ஓட்ட பட்டிருந்தது. ஏழ்மை, ஏழ்மை! வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை. அனைவரும் அறுவடைக்கு சென்றிருந்தார்கள். அடுப்பில் எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி, அழுக்காகவும், எதைப்பற்றியும் கவலைப்படாமலும் அமர்ந்திருந்தாள். அவர்கள் வந்ததை அவள் கவனிக்கவும் இல்லை. தரையில் வெள்ளைப் பூனை ஒன்று சுவற்றில் உரசிக்கொண்டு இருந்தது.

“மியாவ்! மியாவ்!” என்று சாஷா கூப்பிட்டாள். “மியாவ்!”

“பூனைக்குக் கேட்காது!” என்றாள் அந்தச் சிறுமி. “காது கேட்காது.”

“அது எப்படி?”

“ஓ, அதை அடிச்சிட்டாங்க.”

நிக்கொலாய்யும், சாஷாவும் முதல் பார்வையிலேயே அங்கே வாழ்வு எப்படி இருக்கப் போகிறது என்பதை உணர்ந்தார்கள். ஆனால் அதைப் பற்றி அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. அமைதியாகத் தங்களது சுமைகளைக் கீழே வைத்துவிட்டு, வெளியே தெருவுக்கு வந்தார்கள். அவர்களது குடிசை, தெருவின் முனையில் இருந்து மூன்றாவதாக இருந்தது. அதுவே இருப்பதிலேயே மிகவும் வறுமையுடனும், பழையதாகவும் இருந்தது. இரண்டாவது குடிசையும் கொஞ்சம் அதே நிலைமையில் இருந்தது. முதலாவது குடிசைக்கு இரும்பு கூரையும், சன்னல்களில் திரை தொங்கிக்கொண்டிருந்தது. அந்தக் குடிசை தனியே நின்றது. அது ஒரு மது விடுதி. குடிசைகள் எல்லாம் ஒரே வரிசையில் இருந்தன. மொத்த கிராமமும், அமைதியாகவும், கனவைப் போலவும், வில்லோ, எல்டர் மற்றும் ஊசியிலை மரங்களும் அங்கங்கே தெரிந்து, மிகவும் மனதை கவரும் வகையில் இருந்தது.

குடியானவர்களின் குடிசைகளைத் தாண்டிய உடன், நதியை நோக்கி சரிவாகப் பாதை சென்றது. செங்குத்தாக இருந்த கரை முழுவதும், களிமண்ணில் பெரிய பெரிய கற்கள் துருத்திக் கொண்டு இருந்தது. சரிவின் கீழே, குயவர்கள் களிமண்ணையும், கற்களையும் தோண்டி இருந்த குழிகளின் நடுவே பாதை சென்றது. அங்கங்கே சில பழுப்பு, சிவப்பு நிற உடைந்த பானைத் துண்டுகளும் குவியலாகக் கிடந்தன. அதற்கும் கீழே அகலமான, சமவெளியில் பசுமையான மேய்ச்சல் நிலம் இருந்தது. அங்கிருந்த வைக்கோல் எல்லாம் ஏற்கனவே எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. மற்ற இடங்களில் குடியானவர்களின் கால்நடைகள் மேய்ந்து கொண்டிருந்தன.

கிராமத்தில் இருந்து முக்கால் மைல் தொலைவில் இருந்த நதி, வளைந்தும், நெளிந்தும் ஓடிக் கொண்டிருந்தது. அதன் கரைகளில் மரங்களும், புதர்களும் இருந்தது. அதைத் தாண்டி பெரிய மேய்ச்சல் நிலமும், அதில் கால்நடைகளும், வெள்ளைக் கொக்குகளும் அலைந்து திரிந்துகொண்டு இருந்தன. அதைத் தாண்டி இந்தக் கரையைப் போலவே செங்குத்தாக மேடாக இருந்தது. அதன் மேலே குடியிருப்பும், அருகிலேயே ஐந்து குவி மாடங்களுடன் தேவாலயமும், அங்கிருந்து சிறிது தூரத்தில் பண்ணை வீடும் இருந்தது.

“உங்களது கிராமம் நன்றாகவே இருக்கிறது! எவ்வளவு பெரிய இடம்” என்றாள் ஓல்கா. தேவாலயத்தைப் பார்த்து சிலுவையிட்டுக் கொண்டாள்.

அதே நேரத்தில் தேவாலயத்தின் மணி மாலை பிரசாங்கத்துக்காக அடிக்க ஆரம்பித்தது. (அது சனிக்கிழமை மாலை.) கீழே தண்ணியை எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்த சிறுமிகள் இருவர், தேவாலய மணி சத்தம் கேட்டு திரும்பி நின்று அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“இந்த நேரத்தில் ஸ்லாவியன்ஸ்கி பஜாரில் இரவு உணவு பரிமாற ஆரம்பித்திருப்பார்கள்” என்றார் நிக்கொலாய். .

சரிவின் நுனியில் நிக்கொலாய்யும், ஓல்காவும் அமர்ந்து சூரியன் அஸ்தமிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தங்கமும், அடர்சிவப்புமான சூரிய ஒளி ஆற்றில், தேவாலய சன்னலில், அந்த இடம் முழுவதும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. மாஸ்கோவில் இருப்பதைப்போல் இல்லாமல், காற்று மென்மையாகவும், அமைதியாகவும், சொல்லமுடியாத அளவுக்குத் தூய்மையாகவும் இருந்தது. சூரியன் அஸ்தமித்தவுடன் கால்நடை கூட்டங்களும், பறவைக்கூட்டங்களும் சத்தமிட்டுக் கொண்டே திரும்பிக் கொண்டிருந்தன. ஆற்றின் மறுபுறத்தில் இருந்து கொக்குகள் பறந்து கொண்டிருந்தன. எல்லாம் அமைதியாக ஆனது. அதுவரை இருந்த மென்மையான வெளிச்சமும் மறைந்து கொண்டிருந்தது. இரவின் இருள் மெதுவாக அவர்களின் மீது கவிந்து கொண்டிருந்தது.

அதே நேரத்தில், கூனுடனும், பல்லும் இல்லாமல் நிக்கொலாய்யின் வயதான தந்தையும், தாயும் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அதே நேரத்தில் ஆற்றுக்கு மறுபுறம் இருந்த பண்ணையில் வேலை முடிந்து பெண்கள் – அவரது மைத்துனிகள் மரியாவும், பியோக்ளாவும் கூட வீடு திரும்பி இருந்தார்கள். நிக்கொலாய்யின் சகோதரன் கிர்யக்கின் மனைவி மரியா. அவர்களுக்கு ஆறு குழந்தைகள் இருந்தார்கள். மற்றொரு சகோதரனான டெனிஸ், ராணுவ வீரனாக இருந்தான். அவனது மனைவியான பியோக்ளாவுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. குடிசைக்குள் நுழைந்தவுடன், நிக்கொலாய் அவரது குடும்பம் முழுவதும், பெரியவர்களும், சிறியவர்களுமாகக் குடிசைக்குள் இருக்கும் ஒவ்வொரு மூலைகளிலும், தொட்டில்களிலும், பெட்டிகள் இடையேயும் நகர்வதையும், அவரது வயதான தாயும், தந்தையும் கறுப்பு ரொட்டியைத் தண்ணீரில் முக்கிப் பேராசையுடன் தின்பதையும் பார்த்தவுடன், நோயுடனும், கையில் பணமில்லாமலும் தான் அங்கு வந்திருப்பது பெரிய தவறு என்பதை உணர்ந்தார். அதுவும் குடும்பத்தோடு வந்திருப்பது – இன்னமும் பெரிய தவறு!

“கிர்யக் எங்கே?” என்று அவர்களை விசாரித்த பின்னர் அவர் கேட்டார்.

“அவன் கடையில் வேலை செய்கிறான். காடுகளிலும் இருப்பான். மோசமான குடியானவன் இல்லை. ஆனால், மதுக்கோப்பையை அதிகம் விரும்புகிறான்” என்று பதில் கூறினார் அவரது தந்தை.

“அவனால் பெரிய உதவி எல்லாம் இல்லை!” என்று வயதான தாயார் அழுது கொண்டே சொன்னாள். “இங்கே ஆம்பளைகள் எல்லாம் துயரம்தான். அவர்கள் வீட்டுக்கு எதுவும் கொண்டு வருவதில்லை; இங்கிருந்து எடுத்துத்தான் செல்கிறார்கள். கிர்யக் மட்டுமல்ல, கிழவனும் குடிகாரன்தான். அதை மறைப்பதால் என்ன பயன்? அவருக்கும் மதுவிடுதிக்கு வழி தெரியும். இவர்கள் மீது கடவுளும் கோபத்தில் இருப்பார்.”

விருந்தினர்களுக்காகத் தேநீர் கெண்டி வெளியே வந்தது. தேநீர் மீன் வாடை அடித்தது; சர்க்கரை, பழுப்பு நிறத்தில் இருந்தது. யாரோ தின்று விட்டு வைத்த மீதம் போல இருந்தது. ரொட்டியின் மீதும், பாத்திரங்களின் மீதும் கரப்பான் பூச்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. குடிக்கவும் அருவருப்பாக இருந்தது. அவர்களது உரையாடலும் அது போலவே இருந்தது. ஏழ்மை, நோய் தவிர வேறு எதைப் பற்றியும் அவர்கள் பேசவில்லை. ஆனால் அவர்கள் முதல் கோப்பையைக் குடித்து முடிப்பதற்குள், வெளியில் இருந்து நீண்ட, சத்தமான, குடிகாரனின் சத்தம் கேட்டது.

“ம-ரிரியா!”

“கிர்யக் வருகிறான் போலிருக்கிறது” என்றார் வயதானவர்.

அனைவரும் அமைதியானார்கள். திரும்பவும் ஒரு முறை, பூமியின் அடியில் இருந்து வருவது போல அதே கடுமையான குரல் கேட்டது.

“ம-ரிரியா!”

மூத்த அண்ணி மரியா, முகம் வெளிறிப்போய், அடுப்புக்கு அருகில் ஒடுங்கி கொண்டாள். அந்த வலிமையான, அகன்ற தோள்களையுடைய அவலட்சணமான பெண்ணின் முகத்தில் தோன்றிய பயத்தைப் பார்ப்பதற்கு வினோதமாக இருந்தது. அவளது மகள் அடுப்பில் அமர்ந்து கொண்டிருந்தவள், அதுவரை எதை பற்றியும் கவலைப்படாமல் இருந்தவள், சத்தமாகத் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

“எதற்காக அழுகிறாய், கொள்ளையில் போகிறவளே?” என்று பியோக்ளா – இவளும் வலிமையும், அகன்ற தோள்களும் கொண்டவள் – அவளை நோக்கி கத்தினாள். “உன்னைக் கொன்றுவிடமாட்டான்.”

மரியா, கிர்யக்குடன் காட்டில் தனியாக வாழ பயந்தாள் என்றும், அவன் குடித்துவிட்டு வரும் போதெல்லாம் அவளுடன் சண்டையிட்டு, கருணையில்லாமல் அவளை அடித்து உதைத்தான் என்றும் நிக்கொலாய்யிடம் அவரது வயதான தந்தை தெரிவித்தார்.

“ம-ரிரியா!” என்று இப்போது கதவுக்கு அருகில் சத்தம் கேட்டது.

“என்னை யாராவது காப்பாற்றுங்கள்!” என்று மரியா, குளிர்நீரில் நனைந்தவள் போல நடுங்கி கொண்டே கூறினாள். “காப்பாற்றுங்கள்…!”

குடிசையில் இருந்த குழந்தைகள் எல்லாம் அழ ஆரம்பித்தார்கள். அவர்களைப் பார்த்து சாஷாவும் அழ ஆரம்பித்தாள். அப்போது இருமலும், தாடியுடன், உயரமாக வளர்ந்திருந்த குடியானவன் ஒருவன் குளிருக்கு தொப்பியை அணிந்து கொண்டு உள்ளே வந்தான். அங்கிருந்த மங்கலான விளக்கொளியில் அவனது முகத்தைப் பார்க்க முடியாமல் இருந்ததால் இன்னமும் பயங்கரமாக இருந்தான். அதுதான் கிர்யக். நேராக அவனது மனைவியை நோக்கி சென்றவன், கைகளைச் சுற்றி, அவளது முகத்தில் முஷ்டியை மடக்கி ஒரு குத்து விட்டான். அந்தக் குத்தினால் கலங்கிய அவள், எந்தச் சத்தமும் எழுப்பாமல், அங்கேயே அமர்ந்தாள். அவளது மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது.

“கேவலம்! கேவலம்!” என்று படுக்கையை நோக்கி நகர்ந்த கிழவன், “விருந்தினர்கள் முன் வேற!”

தாயார் அமைதியாகக் குனிந்தவாறே அமர்ந்து, யோசனையில் இருந்தாள். பியோக்ளா தொட்டிலை ஆட்டிக் கொண்டிருந்தாள்.

அனைவரிடமும் பயத்தை ஏற்படுத்தும் அவனது நோக்கம் நிறைவேறிவிட்டதால், தன் மீதே மகிழ்ச்சியுடன் கிர்யக், மரியாவின் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு, கதவை நோக்கி நடந்தான். இன்னமும் பயங்கரமாகத் தன்னைக் காட்டிக்கொள்ள, மிருகத்தைப் போல குரல் எழுப்பினான். ஆனால், அந்த நேரத்தில் அவன் விருந்தினர்களை கண்டு அங்கேயே நின்றுவிட்டான்.

“ஓ! வந்துவிட்டார்களா…” என்று தன் மனைவியை விட்டுவிட்டு, “என் சகோதரனும், அவனது குடும்பமும்…”

தடுமாறிக் கொண்டே, அவனுடைய சிவந்திருந்த, குடித்திருந்த கண்களை விரித்துக் கொண்டு, அங்கிருந்த சிலையின் முன் சில வழிபாட்டு வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, “என்னுடைய சகோதரனும், அவனது குடும்பமும் அவர்களது தந்தையின் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்… மாஸ்கோவில் இருந்து… பெரிய தலைநகரம் மாஸ்கோ, நகரங்களின் தலைநகர்… மன்னித்துக்கொள்.”

தேநீர் பாத்திரத்தின் அருகே இருந்த இடத்தில் அமர்ந்து, தேநீர் குடிக்க ஆரம்பித்தான். அங்கிருந்த அமைதியின் நடுவே, மிகவும் சத்தமாகத் தேநீரை உறிந்து குடிக்க ஆரம்பித்தான்…. பத்து, பனிரெண்டு கோப்பைகளைக் குடித்து விட்டு, அங்கிருந்த பலகையில் படுத்து, குறட்டைவிட ஆரம்பித்தான்.

அனைவரும் படுக்கச் செல்ல ஆரம்பித்தார்கள். நிக்கொலாய் உடல்நிலை சரியில்லை என்பதால், அவர் அவரது வயதான தந்தையுடன் படுக்கையில் படுத்துக் கொண்டார். சாஷா தரையில் படுத்துக் கொண்டாள். ஓல்கா மற்ற பெண்களுடன் படுத்துக் கொள்ள தொழுவத்துக்குச் சென்றார்.

அங்கே மரியாவுடன் வைக்கோலில் படுத்துக்கொண்டே, “அன்பே! உன்னுடைய துயரங்களைக் கண்ணீரைக் கொண்டு சரி செய்ய முடியாது. பொறுமையாக இரு, அவ்வளவுதான். வேதம் என்ன சொல்கிறது – ‘உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு’… அழாதே”

பின்னர் மெல்லிய குரலில் முணுமுணுப்பாக மாஸ்கோவைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள். அவள் எப்படி அங்கே பெரிய இடங்களில் வேலை செய்தாள் என்று கூறினாள்.

“மாஸ்கோவில் வீடுகள் பெரியதாக, செங்கலால் எழுப்பப்பட்டிருக்கும்… நிறைய தேவாலயங்கள் இருக்கும். எல்லா வீடுகளில் பெரிய கனவான்கள் இருப்பார்கள். நன்றாக உடை அணிந்து, சுத்தமாக இருப்பார்கள்.”

மரியா தான் மாஸ்கோவுக்கு மட்டுமல்ல, அந்த மாவட்டத்தின் நகரத்துக்குக் கூடச் சென்றதில்லை என்று கூறினாள். அவளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. எந்த வழிபாடும் தெரியாது. அவளும், அங்கே அமைதியாக உட்கார்ந்து எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த பியோக்ளாவும் எதைப் பற்றியும் தெரியாமல், எதையும் புரிந்து கொள்ள முடியாதவர்களாகவும் இருந்தார்கள். அவர்களது கணவர்களை வெறுத்தார்கள். மரியா, கிர்யக்கை கண்டு பயந்து நடுங்கிக்கொண்டே இருந்தாள். அவனிடம் இருந்து வீசிய வோட்கா மற்றும் புகையிலை வாசத்தை வெறுத்தாள். அது அவளுக்குத் தலைவலியைக் கொடுத்தது.

ராணுவ வீரனான அவளது கணவனை நினைக்கிறாளா என்று பியோக்ளாவிடம் கேட்டதிற்கு, “நினைப்பதா!” என்று எரிச்சலுடன் பதில் சொன்னாள்.

அதன் பின்னர் அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. அமைதி நிலவியது.

தொழுவத்தின் அருகில் இருந்து சேவல் ஒன்று குளிரினால் கூவி கொண்டே இருந்தது. அவர்களால் தூங்க முடியவில்லை. காலை சூரியனின் முதல் வெளிச்சம் உள்ளே வந்த போது, பியோக்ளா திருட்டுத்தனமாக எழுந்து வெளியே சென்றாள். அங்கே அவளது வெறும் கால்கள் எங்கோ ஓடும் சத்தம் கேட்டது.

II

ஓல்கா, மரியாவுடன் தேவாலயத்துக்குச் சென்றாள். மேய்ச்சல் நிலத்தின் வழியே செல்லும் போது, இருவரும் உற்சாகமாக இருந்தார்கள். ஓல்கா அங்கிருந்த அழகான காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தாள். அவளது சகோதரியை அவளுக்கு நெருக்கமாகவும், உறவினராகவும் கருதியதால் மரியாவும் உற்சாகமாக இருந்தாள். சூரியன் எழுந்து கொண்டிருந்தது. மேய்ச்சல் நிலத்தின் மீது பருந்து ஒன்று தாழ்வாகப் பறந்து கொண்டிருந்தது. ஆற்றின் மீது பனிமூட்டம் இன்னமும் மூடி இருந்ததால், மந்தமாகத் தெரிந்தது. ஆனால், ஆற்றின் மறுகரையில் ஏற்கனவே சூரியனின் வெளிச்சம் குன்று வரை தெரிந்து கொண்டிருந்தது. வெயிலில் தேவாலயம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. பண்ணை வீட்டில் இருக்கும் சேவல்கள் உரக்கக் கூவிக் கொண்டிருந்தன.

“கிழவர் நல்லவர்தான்” என்றாள் மரியா. “கிழவிதான் மிகவும் கடுமையானவள். எப்போதும் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பாள். எங்களுடைய தானியம் திருவிழா வரை சரியாக வந்தது. இப்போது நாங்கள் கடையில் மாவை வாங்குகிறோம். அதனால் அவள் கோபமாக இருக்கிறாள்; நாங்கள் நிறைய உண்கிறோம் என்கிறாள்.”

“ஆ, ஆ, அன்பே! பொறுமையாக இரு; வேதம் என்ன சொல்கிறது – ‘வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்”.

ஓல்கா அமைதியாகவும், சீராகவும், புனித பயணத்துக்குச் செல்லும் பெண் போலவும், வேகமாக நடந்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் அவள் வேதத்தை வாசித்தாள். பாதிரிகளைப் போல, சத்தமாக வாசித்தாள். வேதத்தில் அவளுக்குப் பலதும் புரியவில்லை என்றாலும், வாசிப்பது அவளது கண்களில் இருந்து கண்ணீர் வர வைத்தது. ‘மெய்யாகவே’, ‘இல்லாத படியால்’ போன்ற வார்த்தைகளை வாசிக்கும் போது அவளது உள்ளம் படபடத்தது. அவள் கடவுள், பரிசுத்த ஆவி, புனிதர்கள் போன்றவற்றை நம்பினாள். உலகில் சாதாரண மக்கள், ஜெர்மானியர்கள், நாடோடிகள், யூதர்கள் என எவர் மனதையும் காயப்படுத்தக்கூடாது என்று எண்ணினாள். மிருகங்கள் மீது அன்பு செலுத்தாதவர்கள் நன்றாக இருக்கமாட்டார்கள் என்றும் எண்ணினாள். இதுவே வேதாகமத்தில் எழுதப்பட்டு இருக்கிறது என்று அவள் நம்பினாள். எனவே அவள் வேதத்தில் இருந்து வாசிக்கும் போது, அவளுக்குப் புரியவில்லை என்றாலும், அவளது முகம் மென்மையாகவும், அன்பானதாகவும் மாறி ஒளிர்ந்தது.

“ நீங்கள் எந்தப் பிரதேசத்துக்காரர்கள்?” என்றாள் மரியா.

“விளாடிமிர். ஆனால் எனக்கு எட்டு வயதாக இருக்கும்போதே, மாஸ்கோ வந்துவிட்டோம்.”

அவர்கள் நதியை வந்தடைந்தார்கள். ஆற்றின் மறுபுறம், பெண்ணொருத்தி தன் ஆடைகளைக் களைந்து கொண்டிருந்தாள்.

“அது பியோக்ளா!” என்று மரியா அவளைப் பார்த்துக்கொண்டே சொன்னாள். “பண்ணை வீட்டுக்குச் சென்றிருப்பாள். அங்கிருக்கும் பண்ணை ஆட்களை பார்ப்பதற்கு. வெட்கங்கெட்ட அவிசாரி. பயமுறுத்தும் அளவுக்கு மோசமாகப் பேசவும் செய்வாள்.”

இளமை வேகம் கொண்ட பியோக்ளா, கறுப்பு புருவத்துடன், தலைமுடியை விரித்துப் போட்டுக் கொண்டு, தண்ணீரில் தன்னுடைய கால்களை அடித்துக் கொண்டு குளிக்க ஆரம்பித்தாள். அவளைச் சுற்றி எல்லாப்புறமும் தண்ணீர் அலை, அலையாக விரிந்தது.

“வெட்கம் கெட்டவள்!” என்று மறுபடியும் மரியா கூறினாள்.

நதியைச் சிறிய மரப் பாலத்தின் வழியே கடந்தார்கள். கீழே இருந்த தெளிவான தண்ணீரில் மணலை மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. தண்ணீரின் அருகே இருந்த புதர்களில், இலைகளில் பனித்துளிகள் மின்னிக் கொண்டிருந்தன. மிதமான வெப்பமாக இருந்தது. எவ்வளவு நன்றாக இருந்தது! என்ன அருமையான காலை! யாராலும் தப்பிக்க முடியாத, பயங்கரமான, நம்பிக்கையை நசுக்கும் ஏழ்மை மட்டும் இல்லை என்றால், இங்கே வாழ்வு எவ்வளவு நன்றாக இருக்கும்! முந்தைய தினம் நடந்தவற்றை எல்லாம் நினைவுக்குக் கொண்டு வருவதற்கு, கிராமத்தைச் சுற்றிப் பார்த்தால் போதும். அவர்களைச் சூழ்ந்திருந்த மகிழ்ச்சி என்னும் மாயம் உடனடியாக மறைந்தும் போனது!

அவர்கள் தேவாலயத்துக்கு வந்து சேர்ந்தார்கள். மரியா நுழைவு வாயிலில் நின்று கொண்டாள். அதைத் தாண்டிச் செல்ல அவளுக்குத் தைரியம் இல்லை. அங்கே உட்காரவும் தைரியம் இல்லை. காலை பிரசங்கம் எட்டில் இருந்து ஒன்பது மணிக்கு முடியும்வரை அவள் நின்றுகொண்டே இருந்தாள்.

பிரசங்கம் நடந்து கொண்டிருந்தபோது, பண்ணை வீட்டில் இருந்த குடும்பத்தினர் வந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் கூட்டம் பிரிந்து வழிவிட்டது. இரண்டு இளம் பெண்கள், வெள்ளை உடை அணிந்து, அகன்ற தொப்பிகள் அணிந்து கொண்டும், ஒரு சிறுவன் கடலோடியைப்போல உடை அணிந்து கொண்டும் வந்தார்கள். அவர்களது தோற்றம் ஓல்காவைக் கவர்ந்தது. முதல் பார்வையிலேயே அவர்கள் நன்றாகப் படித்தவர்கள், அழகானவர்கள், நல்ல நாகரிகமானவர்கள் என்றெல்லாம் அவளுக்குத் தெரிந்தது. மரியா அவர்களை மனிதர்களே இல்லை என்பது போலவும், முகத்தைப் பெரிதாகச் சுழித்துகொண்டு, அவர்களுக்கு வழி விடவில்லை என்றால் அவர்கள் மிருகங்களாக மாறி தன்னை நசுக்கிவிடுவார்கள் என்பது போலவும் பார்த்தாள்.

ஒவ்வொரு முறை பாதிரியார் தன்னுடைய குரலில் பிரசங்கம் செய்தபோதெல்லாம், “ம-ரிரியா!” என்ற குரல் கேட்பது போலிருந்தது. அதைக் கேட்டு நடுங்கினாள்.

(தொடரும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *