Skip to content
Home » செகாவ் கதைகள் #15 – குடியானவர்கள் 2

செகாவ் கதைகள் #15 – குடியானவர்கள் 2

குடியானவர்கள் 2

III

அவர்கள் கிராமத்துக்கு வந்தது அனைவருக்கும் தெரிந்திருந்தது. எனவே குடிசையில் அவர்களைப் பார்ப்பதற்கு பலரும் வந்தனர். லெனிச்சேவ்களும் மத்வயடிச்சேவ்களும் இல்லயிச்சேவ்களும் மாஸ்கோவில் வேலையில் இருக்கும் தங்களது உறவினர்களைப் பற்றி விசாரிக்க வந்தார்கள். ஷுகோவோவில் இருந்த எழுதப் படிக்கத் தெரிந்த அனைவரும் மாஸ்கோவுக்கு விடுதிகளிலோ வீடுகளிலோ வேலையாட்களாகச் சென்றுவிட்டார்கள். ஆற்றின் மறுபக்கம் இருக்கும் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோரும் சுடுமனைகளில் வேலைக்குச் சென்றிருந்தனர். பல காலத்துக்கு முன் அடிமைகள் காலம் முடிந்த நேரத்தில், இப்போது பெரிய நாயகனாகக் கருதப்படும் குடியானவரான லூக்கா இவனிட்ச், மாஸ்கோவில் இருந்த கிளப்பில் உணவு பரிமாறுபவராக இருந்தார். தன்னுடைய கிராமத்தவர்கள் தவிர வேறு யாரையும் வேலைக்கு எடுத்துக்கொள்வதில்லை என்ற முடிவில் இருந்தார். அதன் மூலம் கிராமத்தில் இருந்து பலரையும் அங்கிருந்த உணவு விடுதிகளிலும் மதுக்கடைகளிலும் வேலைக்குச் சேர்த்தார்.

அப்போதிருந்து ஷுகோவோ கிராமத்தை அருகில் இருந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், அடிமை நகர் என்றே அழைத்து வந்தனர். நிக்கொலாய்க்கு பதினோரு வயதாக இருக்கும் போது மாஸ்கோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது ‘ஹெர்மிடேஜ்’ தோட்டத்தில் தலைமை உணவு பரிமாறுபவராக இருந்த மத்வயடிச்சேவ் குடும்பத்தைச் சேர்ந்த இவான் மகரிட்ச் அவரை வேலையில் சேர்த்தார். இப்போது அவரைப் பார்க்க வந்த மத்வயடிச்சேவ் குடும்பத்தினரை நோக்கி, நிக்கொலாய் கூறினார்:

“இவான் மகரிட்ச் எனக்கு வேலை வாங்கித் தந்தவர். அவராலேயே என்னால் ஒரு நல்ல மனிதனாக வாழ முடிந்தது. அவருக்காக இரவும் பகலும் கடவுளிடம் வேண்டிக் கொள்வேன்.”

“உங்களது ஆத்மா பரிசுத்தமானது!” என்றாள் இவான் மகரிட்ச்சின் சகோதரியான வயதான கிழவி. மேலும் கண்களில் நீருடன் “அவரைப் பற்றிய செய்தி எதுவுமே கேள்விப்படவில்லை” என்றாள்.

“சென்ற குளிர்காலத்தில் அவர் ஓமோனில் வேலையில் இருந்தார். அதன் பின்னர் நகரில் எங்கோ தோட்டத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்… வயதாகிவிட்டது! பழைய நாட்களில் அவர் தினமும் வீட்டுக்கு பத்து ரூபிள் வரை கொண்டு வருவார். இப்போது எல்லா இடங்களிலும் நிலைமை மாறிவிட்டது. அவர் அதை எண்ணி புலம்புகிறார்.”

அந்த வயதானவள் நிக்கொலாய்யின் பூட்ஸ் அணிந்த கால்களைப் பார்த்தாள். அவரது வெளிறிய முகத்தைப் பார்த்தாள்.

“உங்களால் அனுசரித்துப் போக முடியாது, நிக்கொலாய் ஓஷிபிட்ச்; அனுசரித்துப் போக முடியாது. இல்லைதான்!”

சாஷாவை அனைவருக்கும் பிடித்திருந்தது. அவளுக்குப் பத்து வயதாகி இருந்தாலும், மிகவும் மெலிதாக இருந்ததால் அவளுக்கு ஏழு வயதுக்கு மேல் சொல்ல முடியாது. முகம் கறுத்து, சரியாக வெட்டப்படாத முடிகள், நீண்ட, மங்கிப்போன உடைகள் அணிந்திருந்த பெண்களிடையே, வெள்ளை முகம், பெரிய, கறுத்த கண்கள், முடியில் சிவப்பு துணியுடன் அவள் வித்தியாசமாக இருந்தாள். ஏதோ காட்டில் இருந்து பிடித்து வந்த சிறிய விலங்கை, அவர்களது குடிசைக்கு அனுப்பியது போல வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“அவளுக்கு வாசிக்கவும் தெரியும்” என்று அவளது மகளை அன்புடன் பார்த்துக் கொண்டே, ஓல்கா மென்மையாகப் பாராட்டினாள். “கொஞ்சம் வாசித்துக் காட்டு!” என்று மூலையில் இருந்த வேத புத்தகத்தை எடுத்து வந்தாள். “வாசித்துக் காட்டு. இங்கிருக்கும் நல்ல கிறிஸ்தவர்கள் கேட்பார்கள்.”

அந்த வேதாகமம் மிகவும் பழைய, தோலினால் தைக்கப்பட்ட புத்தகம். அதன் பக்கங்கள் எல்லாம் மிகவும் வாசித்ததால் மடங்கி இருந்தது. அதைக் கொண்டு வந்தவுடன் ஏதோ துறவிகள் குடிசைக்கு வந்ததுபோல வாசம் கிளம்பியது.

“கர்த்தருடைய தூதன் … ஏரோது பிள்ளையைக் கொலை செய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு “

“பிள்ளையையும் அதின் தாயையும் “ என்று ஓல்கா திரும்பவும் மிகவும் உணர்ச்சியுடன் கூறினாள்.

“எகிப்துக்கு ஓடிப் போய் … நான் உனக்குச் சொல்லும் வரைக்கும் …அங்கேயே இரு என்றான்”.

‘அங்கேயே இரு’ என்ற வார்த்தை வரும் போது, ஓல்காவால் கண்ணீரை நிறுத்த முடியவில்லை. அவளைப் பார்த்து, மரியாவும் தேம்ப ஆரம்பித்தாள். அவர்களைப் பார்த்து இவான் மகரிட்ச்சின் சகோதரியும் தேம்பி அழ ஆரம்பித்தாள். வயதான தந்தை அவரது தொண்டையை செருமிக்கொண்டு, அவரது பேத்திக்கு கொடுக்க ஏதாவது இருக்கிறதா என்று தேடினார். ஒன்றும் கிடைக்கவில்லை என்றதும், கைகளை ஆட்டிக் கொண்டு பேசாமல் இருந்துவிட்டார். வாசிப்பது முடிந்தவுடன், அனைவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள். ஓல்கா மற்றும் சாஷா பற்றி மிகவும் மகிழ்ந்தார்கள்.

அன்று விடுமுறை என்பதால், குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் இருந்தார்கள். கிழவன், அவளது மருமகள்கள், அவளது பேத்திகள் அனைவரும் பாட்டி என்று அழைக்கும் வயதான பெண்மணி, வீட்டில் அனைத்து வேலையையும் அவளே இழுத்துபோட்டுக்கொண்டு செய்வாள்; வீட்டில் அடுப்பை மூட்டி, அவளது கைகளாலேயே தேநீர் பாத்திரத்தை வைத்துவிட்டு, மதிய உணவையும் அவளே செய்துவிட்டு, தான் வேலை செய்தே தேய்ந்து போய்விட்டதாகக் கூறிக்கொண்டிருந்தாள். யாராவது ஒரு வாய் அதிகமாக சாப்பிட்டுவிடுவார்களோ அல்லது அவளது கணவனோ, மருமகள்களோ வேலை செய்யாமல் சும்மா இருந்து விடுவார்களோ என்று பயந்து கொண்டிருந்தாள்.

சிலநேரங்களில் மது விடுதி சொந்தக்காரரின் வாத்து, குடிசைக்குப் பின்னால் இருந்த அவர்களது தோட்டத்துக்கு வந்திருப்பதாக அவளுக்குச் சத்தம் கேட்கும். கையில் குச்சியுடன் பின்பக்கம் சென்றவள், அங்கு அரைமணி நேரம், அவளைப் போலவே மெலிந்தும் சாய்ந்தும் இருந்த முட்டைகோசு செடிகளின் இடையே நின்று கத்திக் கொண்டிருந்தாள்; இன்னொரு முறை, காகம் ஒன்று அவளது கோழிகளைத் தூக்கவந்திருப்பதாக நினைத்து, பின்னால் சென்று சத்தமாக திட்டிக் கொண்டிருந்தாள். காலையில் இருந்து இரவு வரை ஏதாவது காரணத்துக்காக கோபமாக புலம்பிக் கொண்டிருந்தாள். சமயத்தில், அவள் போட்ட கூச்சலில், தெருவில் இருந்தவர்கள் எல்லாம் வீட்டின் முன் நின்று கேட்டு விட்டுச் செல்வார்கள்.

அவள் கிழவரையும் அன்போடு கவனித்துக்கொள்ளமாட்டாள். அவரை எப்போதும் கொள்ளை நோய் வந்தவர் என்றும், சோம்பேறி என்றும் திட்டிக் கொண்டிருப்பாள். அவரும் பொறுப்பான, நம்பிக்கைக்கு உகந்த குடியானவர் அல்ல. அவள் அப்படி அவரைத் திட்டிக் கொண்டே இருக்கவில்லை என்றால், அவர் வேலைக்கே சென்றிருக்கமாட்டார். வீட்டிலேயே இருந்து பேசிக் கொண்டிருந்திருப்பார். அவரது மகனிடம் அவரது எதிரிகள் குறித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அவரது வீட்டுக்கு அருகில் இருந்தவர்கள் எல்லாம் தன்னை அவமானப்படுத்துவதாகவும் குறை சொல்லிக் கொண்டிருந்தார். அவரிடம் பேசிக் கொண்டிருப்பதே சலிப்படைய செய்வதாக இருந்தது.

“ஆமாம்.” என்று ஆரம்பித்தவர், கைகளை விரித்துக்கொண்டு, “ஆமாம்… திருச்சிலுவையின் மகிமை விழாவுக்கு ஒரு வாரம் கழித்து, என்னுடைய வைக்கோல்களை ஒரு கட்டு முப்பது கோபெக் என்று விற்றுக் கொண்டிருந்தேன்… நல்லது… அன்று காலை நானும் வைக்கோலை விற்க நல்ல மனதுடன் சென்று கொண்டிருந்தேன்; யாரையும் தொந்தரவு செய்யவில்லை. என் கெட்ட நேரம், அப்போது கிராம பெரியவர், அந்திப் ஸ்யேடேல்நிகோவ், மதுக்கடையில் இருந்து வெளியே வந்தார். ‘எங்கே எடுத்து செல்கிறாய்?’ என்று சொல்லிவிட்டு, என் காதைப் பிடித்துத் திருகினார்.”

கிர்யக், முந்தைய தினக் குடியினால் தலைவலியுடனும் அவனது சகோதரனைப் பார்க்க அவமானப்பட்டுக்கொண்டும் எழுந்தார்.

“வோட்கா என்னவெல்லாம் செய்கிறது! கடவுளே!” என்று முணுமுணுத்துக்கொண்டே, தலையைப் பிடித்துக்கொண்டு, “கிறிஸ்துவே! என்னை மன்னித்துவிடுங்கள், சகோதரனே, சகோதரியே! நானும் மகிழ்ச்சியுடன் இல்லை.”

அது விடுமுறை நாள் என்பதால், மதுக்கடையில் வாளை மீன் வாங்கி வந்து, அதன் தலையை சூப் வைத்தார்கள். மதியத்தில் அவர்கள் அனைவரும் அமர்ந்து தேநீர் குடிக்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு வியர்க்கும் வரை நீண்ட நேரம் குடித்துக் கொண்டிருந்தார்கள். தேநீர் குடித்தே அவர்கள் அனைவரும் வீங்கிப்போனதுபோல இருந்தார்கள். அதன் பின்னர், வாளை மீன் தலை சூப்பை குடிக்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொருவரும் ஒரு கோப்பை குடித்தார்கள். ஆனால், வாளை மீனை பாட்டி மறைத்துவைத்துவிட்டாள்.

மாலையில் அங்கிருந்த குறுகிய பள்ளத்தில், குயவர்கள் பானைகள் சுட ஆரம்பித்தார்கள். கீழே இருந்த மேய்ச்சல் நிலத்தில், பெண்களும்,சிறுமிகளும் பாட்டுப்பாடி, சேர்ந்து நடனமாடிக் கொண்டிருந்தார்கள். இசைக்கருவிகளை வாசித்துக் கொண்டும் இருந்தார்கள். ஆற்றின் மறுபுறமும் பானைகள் சுட சூளைகள் எரிந்து கொண்டிருந்தன. அங்கும் பெண்கள் பாடல் பாடிக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் இருந்து கேட்ட பாடல்கள் மென்மையாகவும், இனிமையாகவும் இருந்தது. மதுக் கடையை சுற்றிக் குடியானவர்கள் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் குடித்துவிட்டுப் பாடிக் கொண்டும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டும் இருந்தார்கள். அவர்கள் பேசிய வார்த்தைகளைக் கேட்ட ஓல்கா நடுக்கத்துடன் சொன்னாள்.

“ஓ! கடவுளே!”

அவர்கள் பேசிய வார்த்தைகளைக் கேட்டு அவள் ஆச்சரியமடைந்தாள். அதிலும் மிகவும் சத்தமாகவும் மோசமாகவும் கெட்ட வார்த்தைகள் பேசியது, சாவுக்கு அருகில் இருந்த கிழவர்கள்தான். அங்கிருந்த குழந்தைகள் அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாலும், எந்த அதிர்ச்சியையும் காட்டவில்லை. அவர்களது தொட்டிலில் இருந்து அதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது.

நடு இரவுக்குப் பின், சூளைகள் அணைந்து போயின. ஆனால் கொண்டாட்டங்கள் நிற்கவில்லை. மதுக்கடையில் இன்னமும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. நன்கு குடித்திருந்த வயதான தந்தையும், கிர்யுக்கும், கைகளைக் கோர்த்துக்கொண்டு, தோள்களை உரசிக்கொண்டு, ஓல்காவும், மரியாவும் இருந்த தொழுவத்துக்கு வந்தார்கள்.

“அவளை விட்டு விடு” என்று வயதானவர் அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். “அவளை விட்டு விடு… அவள் எந்தப் பாவமும் செய்யாதவள்… பாவம். “

“ம-ரிரியா!” என்று கிர்யக் கத்தினான்.

“விட்டுவிடு… பாவம்.. அவள் நல்ல பெண்..”

இரண்டு பேரும் தொழுவத்துக்கு அருகில் நின்று, பேச ஆரம்பித்தார்கள்.

“எனக்கு வ-யயலில் இருக்கும் பூ-க்க்கள் பிடிக்கும்.”என்று கிழவர் திடீரென்று குரலை உயர்த்தி, சொன்னார். “அவற்றை மேய்ச்சல் நிலத்தில் சேகரிரி-ப்பேன்”

அங்கேயே எச்சில் துப்பிவிட்டு, யாரையோ கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொண்டே குடிசைக்குச் சென்றனர்.

IV

பாட்டி, சாஷாவை சமையலறை தோட்டத்தில் வாத்துகள் நுழையாமல் பார்த்துக் கொள்ளச் சொல்லியிருந்தாள். அது ஒரு ஆகஸ்ட் மாதத்தின் வெப்பமான நாள். மது கடைக்காரனின் வாத்துகள் குடிசைகளின் பின்புறமாக வரும். ஆனால் அவை இப்போது ஓட்ஸ் தானியங்களைக் கொத்தித் தின்று கொண்டு, அமைதியாக தங்களுக்குள்ளே பேசிக் கொண்டிருந்தன. பெண் வாத்துகள் மட்டும் தங்களது தலைகளை நீட்டிக்கொண்டு கிழவி குச்சியுடன் வருகிறாளா என்று பார்த்துக் கொண்டிருந்தன. மற்ற வாத்துகள் கீழிருந்து வரும். ஆனால் அவை இப்போது ஆற்றின் மறுபுறத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. மேய்ச்சல் நிலத்தில் தூரமாக அவை பெரிய மாலை ஒன்றைப்போல நின்று கொண்டிருந்தன. சாஷா சற்று நேரம் அங்கே நின்று கொண்டிருந்தாள். வாத்துகள் வருவது போலத் தெரியவில்லை என்பதால், அவள் பள்ளத்தில் இறங்கிச் செல்ல ஆரம்பித்தாள்.

அங்கே மரியாவின் மூத்த மகள் மோட்கா, பெரிய கல்லைப்போல அசையாமல் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள். மரியாவுக்கு மொத்தம் பதின்மூன்று குழந்தைகள். அதில் ஆறு பெண் குழந்தைகள் மட்டுமே உயிருடன் இருந்தார்கள். அவர்களில் மூத்தவள் எட்டு வயது ஆனவள். நீண்ட ஆடை அணிந்திருந்த மோட்கா, கால்களில் காலணி இல்லாமல், வெயிலில் நின்றுகொண்டிருந்தாள். அவள் மீது வெயில் காய்ந்து கொண்டிருந்தது. ஆனாலும் அவள் அசையாமல் கல்போல நின்று கொண்டிருந்தாள். சாஷா அவள் அருகில் நின்று கொண்டு, தேவாலயத்தைப் பார்த்துக்கொண்டு, சொன்னாள்:

“கடவுள் தேவாலயத்தில் வாழ்கிறார். மனிதர்கள் விளக்குகளும் மெழுகுவர்த்திகளும் வைத்திருக்கிறார்கள். ஆனால் கடவுளிடம் சிறிய பச்சை, நீல விளக்குகள் கண்களைப் போல இருக்கிறது. இரவில் கடவுள் தேவாலயத்துக்குள் நடந்து கொண்டிருப்பார். அவருடன், கன்னி மேரியும், புனித நிக்கொலாய்யும் இருப்பார்கள்… தட், தட், தட்! காவலாளி பயந்து போவான். தெரியுமா? இறுதி தீர்ப்பு நாள் வரும் போது, எல்லாத் தேவாலயங்களும் சொர்க்கத்துக்குச் சென்றுவிடும்” என்று அவளது தாயைப் போலவே சொன்னாள்.

“அவற்றின் மணியும் கூடவா?” என்று மோட்கா, ஒவ்வொரு வார்த்தையையும் இழுத்துக்கொண்டு, அவளது ஆழமான குரலில் கேட்டாள்.

“மணியும் கூடத்தான். உலகத்தின் கடைசி நாள் அன்று, நல்லவர்கள் சொர்க்கத்துக்கும், கோபக்காரர்கள் நிரந்தரமாக, அணைக்கப்படாமல் எரியும் நெருப்பில் எரிவார்கள். என்னுடைய தாய் மற்றும் மரியாவிடம் கடவுள் – ‘நீங்கள் யாரையும் காயப்படுத்தவில்லை. எனவே நீங்கள் நேராக சொர்க்கத்துக்கு செல்வீர்கள்’ என்பார். பாட்டியிடம் அவர் ‘நீ இடதுபுறமாக நெருப்புக்குச் செல்.’ என்பார். லெந்து தவக்காலத்தில் இறைச்சி சாப்பிட்டவர்கள் எல்லாம் நெருப்புக்குச் செல்வர்கள்.”

வானத்தை நோக்கி விரிந்த விழிகளுடன் பார்த்த அவள், “வானத்தைக் கண்களைச் சிமிட்டாமல் பார். தேவதைகளைப் பார்க்கலாம்.”

மோட்காவும் வானத்தைப் பார்க்க ஆரம்பித்தாள். ஒரு நிமிடம் கழிந்தது.

“தெரிகிறதா?” என்று கேட்டாள் சாஷா.

“இல்லை” என்றாள் மோட்கா.

“எனக்குத் தெரிகிறது. சின்ன, சின்னத் தேவதைகள் தங்களது சிறகுகளை அடித்துக் கொண்டே செல்கிறார்கள். பூச்சிகளைப் போல சிறகுகளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.”

மோட்கா சிறிது நேரம் யோசித்தாள். கண்களைக் கீழே பார்த்துக்கொண்டே, “பாட்டி எரிந்துவிடுவாளா?” என்றாள்.

“ஆமாம்.”

அவர்கள் நின்ற இடத்தில் இருந்து, நிலம் மெதுவாகச் சரிந்தது. அந்தச் சரிவு மென்மையான பச்சைப்புற்களால் நிரம்பி இருந்தது. அதைப் பார்க்கும் எவருக்கும் அதில் படுக்கவேண்டும் என்றோ அவற்றைத் தொடவேண்டும் என்றோ தோன்றும். சாஷா அதில் படுத்துக்கொண்டு சரிவின் கீழே உருண்டு சென்றாள். மோட்கா முகத்தை மிகவும் தீவிரமாக வைத்துக்கொண்டு, மூச்சை ஒரு முறை நன்றாக இழுத்துக்கொண்டு, அவளும் கீழே உருண்டாள். அவளது உடை தோள் பக்கத்தில் கிழிந்து போனது.

“எவ்வளவு நன்றாக இருக்கிறது!” என்று மகிழ்ச்சியுடன் சாஷா சொன்னாள்.

திரும்பவும் மேலே வந்து, திரும்பவும் சரிவில் உருண்டார்கள். அதே நேரத்தில் அவர்களுக்குத் தெரிந்த குரல் ஒன்று எழுவதைக் கேட்டார்கள். எவ்வளவு கொடூரமாக இருந்தது! பல்லில்லாத, எலும்பும் தோலுமாக இருந்த, கூன் விழுந்த அவர்களின் பாட்டி, தலையில் இருந்த சிறிதளவு வெள்ளை முடி பறக்க, சமையலறை தோட்டத்தில் இருந்த வாத்துகளை நீண்ட குச்சியைக் கொண்டு விரட்டிக்கொண்டே, கத்திக் கொண்டிருந்தாள்.

“என் முட்டைகோசு எல்லாவற்றையும் நாசம் செய்துவிட்டன. உங்கள் கழுத்தை அறுக்கிறேன்! கொள்ளை நோயில் போய்விடுங்கள்! “

அவள் சிறுமிகளைப் பார்த்தாள். கையில் இருந்த குச்சியை தூக்கி எறிந்துவிட்டு, சாஷாவின் கழுத்தை கைகளால் பிடித்துக் கொண்டு, மரத்தின் மெல்லிய விளாறால் அடிக்க ஆரம்பித்தாள். சாஷா பயத்திலும் வலியிலும் அழ ஆரம்பித்தாள். அப்போது அங்கிருந்த வாத்து ஒன்று, கிழவியின் அருகிலே சத்தம் போட்டுக்கொண்டே, கழுத்தை நீட்டிக் கொண்டு சத்தம் போட்டது. அப்படி செய்துவிட்டு, மற்ற வாத்துகள் அருகே சென்றவுடன், அவை பாராட்டுவதுபோல் ‘கா-கா-கா’ என்று சத்தம் போட்டன. கிழவி இப்போது மோட்காவை அடிக்க ஆரம்பித்தாள். மோட்காவின் உடை மீண்டும் கிழிந்தது. மனதில் வருத்தத்துடன், சாஷா குடிசைக்குள் குறைசொல்லச் சென்றாள். மோட்காவும் பின்னாடியே சென்றாள். அவளும் சத்தமாக அழுது கொண்டிருந்தாள். முகத்தில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைக்காமல் இருந்ததால், அவளது முகம் தண்ணீரால் கழுவியதுபோல இருந்தது.

“கடவுளே!” என்று ஓல்கா, அவர்கள் இருவரையும் பார்த்தவுடன் கூறினாள். “கடவுளே!”

சாஷா நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள். அதே நேரத்தில் கிழவியும் கத்திக் கொண்டும் திட்டிக் கொண்டும் உள்ளே நுழைந்தாள். பியோக்ளாவும் கோபப்பட்டுக் கத்த ஆரம்பிக்க, குடிசை உள்ளே பெருத்த அமளி ஏற்பட்டது.

“இருக்கட்டும், இருக்கட்டும்” என்று அவர்களை சமாதானப்படுத்த ஓல்கா முயன்றாள். சாஷாவின் தலையைத் தடவிக் கொண்டே, “அவள் உனது பாட்டி. அவள் மீது கோபம் கொள்வது பாவம். அமைதியாகுங்கள், குழந்தைகளே!”

ஏற்கனவே அங்கிருந்த சத்தங்கள், பசி, புகை, குப்பை முதலியவற்றால் வெறுப்புடன் இருந்த நிக்கொலாய் ஏழ்மையை வெறுத்தார். அவரது தந்தையையும், தாயையும், தன் மனைவியும், மகளும் பார்ப்பதை நினைத்து அவமானப்பட்டார். படுக்கையில் கால்களைத் தொங்கவிட்டுக்கொண்டு, கண்களில் நீருடன், அவரது தாயைப் பார்த்து;

“அவளை நீங்கள் அடிக்கக்கூடாது! அதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை!” என்றார்.

“அங்கேயே உட்கார்ந்திரு, முட்டாள் ஜென்மமே! உங்களையெல்லாம் சாத்தான்தான் இங்கே கொண்டுவந்திருக்க வேண்டும். நீங்கள் எங்களை நடுத்தெருவில் கொண்டு நிறுத்திவிடுவீர்கள் போல…” என்று பியோக்ளா வன்மத்துடன் கத்தினாள்.

சாஷா, மோட்கா மற்றும் குடிசையில் இருந்த அனைத்து சிறுமிகளும் நிக்கொலாயின் பின்புறம் வந்து பதுங்கிக்கொண்டார்கள். அங்கிருந்து பயத்துடன் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களது சிறிய இதயங்கள் துடிக்கும் சத்தமும் துல்லியமாகக் கேட்டது. குடும்பத்தில் யாராவது மிகவும் உடல் நலிந்து இருக்கும்போது, வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் மனதில் பயத்துடன், ரகசியமாக அவரது மரணத்தை விரும்பும் கணம் ஒன்று வரும்; குழந்தைகள் மட்டுமே தங்களுக்கு நெருக்கமானவர்களின் மரணத்தை எண்ணி பயப்படுகிறார்கள். இப்போதும், குழந்தைகள் அடக்கிக்கொண்டிருந்த மூச்சுடனும், முகத்தில் கவலையுடனும் நிக்கொலாய்யைப் பார்த்து அவர் விரைவில் இறக்கப்போகிறார் என்று பயந்தார்கள். அவர்கள் அழவும், அவரிடம் ஏதேனும் நட்புடனும் இரக்கத்துடனும் சொல்ல விரும்பினார்கள்.

அவர் ஆறுதல் தேடுவதுபோல் ஓல்காவை அருகில் அணைத்து, நடுங்கும் குரலில் அவளிடம் பேசினார்:

“ஓல்கா, அன்பே! இங்கே என்னால் இருக்க முடியாது. என்னால் தாங்க முடியவில்லை. கடவுளின் பெயரால், கிறிஸ்துவின் பெயரால் உனது சகோதரி கிளவ்டியா அப்ரமோவ்னவுக்கு எழுது. அவளிடம் இருப்பது எல்லாவற்றையும் விற்கவோ, அடகு வைக்கவோ செய்யட்டும். நமக்குப் பணம் அனுப்பச் சொல். நாம் இங்கிருந்து உடனே கிளம்பவேண்டும். கடவுளே! மாஸ்கோவை ஒரு முறை பார்த்துவிட வேண்டும்! அதைக் கனவுகளில் மட்டுமாவது பார்க்கவேண்டும்! என்ன அழகான இடம்!”

மாலை வந்தபோது, குடிசையில் இருள் வந்தது. ஒரு வார்த்தை சொல்லும் அளவுக்கு கூட எதுவும் இல்லை. மிகுந்த கோபத்துடன் இருந்த பாட்டி, கொஞ்சம் ரொட்டியை நனைத்து ஒரு கோப்பையில் வைத்துக்கொண்டு, ஒரு மணி நேரமாக அதைச் சப்பிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். பசுவிடம் பால் கறந்து விட்டு வந்த மரியா, பால் பாத்திரத்தை பலகையில் வைத்துவிட்டாள். கிழவி அதை எடுத்து, கூஜாவில் பாலை மெதுவாக ஊற்ற ஆரம்பித்தாள். இப்போது மரியாளின் விண்ணேற்பு விரதம் என்பதால் யாரும் பாலைக் குடிக்கமுடியாது என்பதை எண்ணி அவள் மகிழ்ச்சியடைவதாகத் தெரிந்தது. பியோக்ளாவின் குழந்தைக்காக சிறிது பாலை தட்டில் ஊற்றிவைத்தாள். கிழவியும் மரியாவும் கூஜாவைக் கொண்டு சென்று நிலவறைக்கு எடுத்துச் சென்றபோது, மோட்கா படுக்கையில் இருந்து இறங்கிச் சென்று, தட்டில் இருந்த பாலில் கொஞ்சத்தை, கிழவி ரொட்டி வைத்திருந்த கோப்பையில் தெளித்துவிட்டாள்.

திரும்பவும் குடிசைக்குள் வந்த கிழவி, ரொட்டியை எடுத்துத் தின்ன ஆரம்பித்தாள். சாஷாவும், மோட்காவும் அதைத் திருப்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். விரதத்தின் போது பாலை தின்பதால் அவள் சொர்க்கத்துக்குச் செல்லப்போவதில்லை என்று மகிழ்ந்தார்கள். அவர்களைத் தட்டிக் கொடுத்துத் தூங்கச் செய்தார்கள். தூக்கத்தில் ஆழ்ந்த சாஷா இறுதித் தீர்ப்பு நாளை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். நரகத்தில் நெருப்பு குயவரின் அடுப்பைப் போல கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. அங்கே தலையில் மாடுகளைப் போலக் கொம்புகளை வைத்திருந்த சாத்தான், கிழவி வாத்துகளை விரட்டியதுபோல, கிழவியைக் குச்சியால் நெருப்புக்குள் தள்ளிக் கொண்டிருந்தான்.

(தொடரும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *