Skip to content
Home » செகாவ் கதைகள் #16 – குடியானவர்கள் 3

செகாவ் கதைகள் #16 – குடியானவர்கள் 3

குடியானவர்கள்

V

விண்ணேற்பு நாள் அன்று மாலை பத்து, பதினோரு மணி போல, மேய்ச்சல் புல்வெளிகளில் ஆடிக்கொண்டிருந்த பெண்களும் ஆண்களும் பெரிய சத்தம் இட்டுக்கொண்டு கிராமத்தை நோக்கி ஓடினார்கள். பள்ளத்தின் மறுபுறம், உயரத்தில் இருந்தவர்களுக்கு முதலில் என்ன விஷயம் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை.

“தீ! தீ!” என்று கீழேயிருந்து கூச்சல் எழுந்தது. “கிராமத்தில் தீ பிடித்துவிட்டது!”

கீழே உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் சுற்றும், முற்றும் பார்த்தார்கள். அவர்களுக்கு முன் ஒரு பயங்கரமான காட்சி விரிந்தது. கிராமத்தில் இருந்த வீடுகளில் ஒன்றில் நெருப்பு, ஏழு அடிக்கு உயரமாக வளைந்து, எழுந்து எல்லாப்புறமும் நீரூற்று போலக் கங்குகள் பறப்பதைப் பார்த்தார்கள். சட்டென்று கூரை முழுவதும் நெருப்பு பற்றி எரிந்தது. நெருப்பு எரியும் சத்தம் பலமாகக் கேட்டது.

நிலவொளி மங்கியது. கிராமம் முழுவதும் இப்போது சிவப்பு நிற ஒளியில் மூழ்கியது. நிழல்கள் இங்குமங்குமாக ஓடிக்கொண்டிருந்தன. எரிந்து கொண்டிருக்கும் பொருட்களின் வாசம் எழுந்து கொண்டிருந்தது. கீழிருந்து ஓடி வந்தவர்கள் அனைவரும், பேசவும் முடியாமல், நடுங்கிப் போய் நின்றிருந்தார்கள். ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு, கீழே விழுந்து, பழக்கமில்லாத வெளிச்சத்தில் பார்க்கவும் முடியாமல் இருந்தார்கள். அவர்கள் அருகில் இருந்தவர்களையும் கண்டுகொள்ள முடியவில்லை. பயங்கரமான சூழல் நிலவியது. புகைமூட்டத்தின் இடையே புறாக்கள் பறந்து கொண்டிருந்தது சூழலை இன்னமும் பயங்கரமாக ஆக்கியது. இன்னமும் நெருப்பு பற்றிய செய்தியை அறியவில்லை என்பதால், மதுக் கடையில் இருந்தவர்கள் பாடிக் கொண்டும் வாத்தியங்களை இசைத்துக் கொண்டும், எந்தக் கவலையும் இல்லாமல் இருந்தனர்.

“செம்யன் மாமாவின் வீடு எரிகிறது!” என்று ஒரு குரல் சத்தமாக எழுந்தது.

மரியா தனது குடிசையை சுற்றி, கைகளைக் கைகளைப் பிசைந்து கொண்டும், தேம்பிக் கொண்டும், பற்கள் தந்தி அடிக்க நடந்து கொண்டிருந்தாள். ஆனால் நெருப்புப் பிடித்திருந்த குடிசை கிராமத்தின் மறுபுறத்தில் இருந்தது. நிக்கொலாய் தன்னுடைய காலணிகளுடன் வெளியே வந்தார். குழந்தைகளும் தங்களது நீண்ட ஆடைகளுடன் வெளியே வந்தனர். அருகில் இருந்த கிராம காவலாளியின் குடிசையில் இருந்த இரும்பு தட்டி பலமாகத் தட்டப்பட்டது… பூம், பூம், பூம்! … சத்தம் அங்கு முழுவதும் பரவி கொண்டிருந்தது. தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த சத்தம் அவர்களது இதயத்தில் வலியைக் கொடுத்தது. வயதான பெண்கள் கைகளில் கடவுள்களின் புனித சிலைகளுடன் நின்று கொண்டிருந்தார்கள்.

குடிசைகளின் பின்னிருந்து செம்மறி ஆடுகள், பசுக்கள், கன்று குட்டிகள் போன்றவை தெருவில் துரத்தி விடப்பட்டன. வீடுகளில் இருந்து பெட்டிகள், தொட்டிகள், ஆட்டுத்தோல் பைகள் முதலியவை வெளியே கொண்டு வரப்பட்டன. மற்ற குதிரைகளிடம் இருந்து பிரித்துக் கட்டப்பட்டிருந்த அடங்காத கறுப்புக் குதிரை ஒன்றும் அவிழ்த்து விடப்பட்டிருந்தது. அது கிராமத்தில் மேலும், கீழுமாக ஒன்றிரண்டு முறை தரையைத் தேய்த்துக் கொண்டு, ஓடிக் கொண்டிருந்தது. அங்கிருந்த வண்டி ஒன்றின் அருகில் நின்று கொண்டு, வண்டியை பின்னங்கால்களால் எட்டி உதைத்துக் கொண்டிருந்தது.

ஆற்றின் மறுபுறம் இருந்த தேவாலயத்தின் மணி அடிக்க ஆரம்பித்திருந்தது.

எரிந்து கொண்டிருந்த குடிசையின் அருகே மிகவும் வெப்பமாகவும், நெருப்பின் வெளிச்சத்தில் ஒவ்வொரு புல்லையும் பார்க்க முடிந்தது. செம்யன், நீண்ட மூக்குடைய சிவந்த முடியைக் கொண்ட குடியானவன். மேலங்கியும் காதுகளின் மீது இழுத்து விடப்பட்ட தொப்பியுமாகக் குடிசையில் இருந்து எப்படியோ வெளியே கொண்டு வரப்பட்ட பெட்டியின் மீது உட்கார்ந்து கொண்டிருந்தார்; அவரது மனைவி முகத்தைக் கீழே பார்த்தவாறு, புலம்பிக்கொண்டும் மயக்கமாகவும் இருந்தாள். எண்பது வயது மதிக்கத்தக்க ஒருவர், நீண்ட தாடியோடு, குறுகிய நிலையில் – அந்தக் கிராமத்தை சேர்ந்தவர் இல்லை, ஆனால் நெருப்போடு ஏதோவிதத்தில் தொடர்பு கொண்டவர் – கைகளில் வெள்ளை மூட்டையுடன் நடந்து கொண்டிருந்தார். நெருப்பின் வெளிச்சம் அவரது தலையில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. கிராம பெரியவர், அந்திப் ஸ்யேடேல்நிகோவ், நாடோடிகளைப் போலக் கறுப்பு நிறமும் கறுப்பு முடியோடும் இருந்தவர், கைகளில் கோடாரியோடு குடிசைக்குச் சென்று, ஒவ்வொரு சன்னல்களாக உடைக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் கூரையை உடைக்க ஆரம்பித்தார். யாருக்கும் ஏன் என்று தெரியவில்லை.

“பெண்களே! தண்ணீர்!” என்று கத்தினார். “தீயணைப்பு வண்டியையும் கொண்டு வாருங்கள்! வேகமாகச் செல்லுங்கள்!”

அதுவரை மதுக்கடையில் குடித்துக் கொண்டிருந்த குடியானவர்கள் தீயணைப்பு வண்டியை இழுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் அனைவரும் குடித்திருந்தார்கள். எல்லோரும் தட்டு, தடுமாறி, கீழே விழுந்து, என்ன செய்வதென்று தெரியாத முகபாவனையுடன் இழுத்துக்கொண்டு வந்தார்கள்.

தானும் குடித்திருந்த கிராமப் பெரியவர், “பெண்களே! தண்ணீர். வேகமாக வாருங்கள்.” என்றார்.

பெண்களும், சிறுமிகளும் வேகமாக கீழே ஓடினார்கள். அங்கே ஒரு சிறிய ஓடை இருந்தது. அதில் இருந்து தண்ணீரை வாளிகளில் எடுத்து வந்து, தீயணைப்பு வண்டியில் ஊற்றினார்கள். திரும்பவும் கீழே ஓடினார்கள். ஓல்கா, மரியா, சாஷா, மோட்கா என அனைவரும் தண்ணீர் எடுத்து வந்தார்கள். பெண்களும், சிறுவர்களும் தண்ணீரை குழாய் வழியே செலுத்தினார்கள். குழாயின் மறுபுறத்தை கையில் பிடித்திருந்த பெரியவர், அதைக் கதவுகள், சன்னல்கள் போன்றவற்றின் மீது தண்ணீரை, தன்னுடைய விரல்களை வைத்து அழுத்திச் செலுத்தினார்.

“அந்திப்! நன்று!” என்று குரல்கள் எழுந்தன. “நன்றாகத் தண்ணீரை அடி!”

அந்திப் குடிசையின் உள்ளே சென்று, குரல் எழுப்பினார்.

“வேகமாகத் தண்ணீரைச் செலுத்துங்கள். வேகம், என் கிறிஸ்தவ மக்களே, இந்தத் துரதிர்ஷ்டமான நேரத்தில் வேகமாக வேலை செய்யுங்கள்.”

குடியானவர்கள் நெருப்பைச் சுற்றி நின்று, எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்தார்கள். யாருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. என்ன செய்வது என்ற உணர்வும் இல்லை. அவர்களைச் சுற்றியும் கோதுமை, வைக்கோல், தொழுவங்கள், விறகுக் கட்டைகள் இருந்தாலும், என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. கிர்யக்கும் அவனது தந்தை ஓசிப்பும், முழுவதுமாகக் குடித்துவிட்டு, அங்கே நின்று கொண்டிருந்தார்கள்.

சும்மா நின்றுகொண்டிருப்பதை நியாயப்படுத்தவோ என்னவோ, ஓசிப், கீழே கிடந்த அந்த வீட்டின் பெண்ணை நோக்கி, “என்ன பிரச்சனை, பெண்ணே? குடிசையைக் காப்பீடு செய்திருக்கிறாய், இல்லையா? எதற்காக அழுகிறாய்?”

செம்யன், முதலில் தனக்குள்ளேயும், பின்னர் அருகில் இருந்தவர்களிடமும், நெருப்பு எப்படி ஆரம்பித்தது என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

“கையில் மூட்டையை வைத்திருக்கும் அந்தக் கிழவன், தளபதி சுக்கோவின் வீட்டு பண்ணையாள்… அவன் நமது தளபதியிடம் – அவரது ஆன்மா சாந்தியடையட்டும் – சமையல்காரனாக இருந்தான்… இன்று மாலை இங்கே வந்து, ‘நான் இரவு தங்கி கொள்கிறேன்’ என்றான்… ஆமாம், எங்களிடம் ஒரு கண்ணாடி இருந்தது… மனைவி தேநீர் பாத்திரத்தில், அவருக்குத் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தாள். என்ன கெட்ட நேரமோ, பாத்திரத்தை அடுப்புடன் வாசல் அருகில் வைத்தாள். அடுப்பில் இருந்து கங்குகள் மேலே கூரையில் பட்டிருக்கவேண்டும். அதுதான் நடந்தது. நாங்களும் எரிந்து போயிருப்போம். அந்தக் கிழவரின் தொப்பி எரிந்துவிட்டது; எவ்வளவு மோசம்!”

இரும்பு தட்டி இன்னமும் தட்டப்பட்டுக் கொண்டிருந்தது. நதியின் மறுபுறம் தேவாலயத்தில் மணி இன்னமும் அடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. நெருப்பின் வெளிச்சத்தில், ஓல்கா புகை மூட்டத்தில் சிவந்து தெரிந்த ஆடுகளையும், வெளிர்நீல புறாக்களையும் கண்களில் பயங்கரத்துடன் பார்த்துக்கொண்டே, மேலும் கீழுமாக ஓடி தண்ணீரை எடுத்துக் கொண்டிருந்தாள். மணிச்சத்தம் அவளது இதயத்தைக் கத்தியால் குத்தியது போல இருந்தது. நெருப்பு அணையவே போவதில்லை என்றும், சாஷா காணாமல் போய்விட்டது என்றும் படபடத்துக் கொண்டிருந்தாள்… குடிசையின் கூரை பலத்த சத்தத்துடன் சரிந்து விழுந்தபோது, கிராமம் முழுவதும் நெருப்புப் பரவப்போகிறது என்ற எண்ணம் அவளைப் பலவீனமாக்கவும் மயக்கமாக்கவும் செய்தது. அவளால் அதற்கு மேல் தண்ணீர் எடுக்க முடியவில்லை. எனவே அங்கேயே அவள் தன்னுடைய வாளியை அருகிலேயே வைத்து விட்டு அமர்ந்துவிட்டாள். அவளுக்கு அருகிலும், கீழேயும் இன்னமும் குடியானவப் பெண்கள் உட்கார்ந்து, இழவு வீட்டில் அழுவது போல அழுது கொண்டிருந்தார்கள்.

அப்போது, நதியின் மறுபுறம் இருந்த பண்ணையில் இருந்து இரண்டு வண்டிகளில், அங்கிருக்கும் பண்ணையாள்களும், காவலாளிகளும், ஒரு தீயணைப்பு வண்டியை இழுத்துக்கொண்டு வந்து சேர்ந்தார்கள். பொத்தான் போடாத வெள்ளை அங்கியை அணிந்துகொண்டு, ஒரு இளம் மாணவனும் குதிரையில் வந்து சேர்ந்தான். கோடரிகளின் சத்தம் கேட்டது. நின்று எரிந்து கொண்டிருந்த வீட்டின் மீது ஒரு ஏணி வேகமாக வைக்கப்பட்டது. அதில் ஐந்து பேர் வேகமாக ஏறினார்கள். அவர்களில் முதலாவதாக அந்த மாணவனும் ஏறினான். அவனது முகம் சிவந்தும், கடினமான, அதிகாரமான குரல்களைக் கட்டளையிட்டுக் கொண்டும் இருந்தான். அவனது குரலில் இருந்து அவன் பல நெருப்புகளை அணைத்திருப்பான் என்று தோன்றியது. அவர்கள் வீட்டை உத்திரம், உத்திரமாகப் பிரிக்க ஆரம்பித்தார்கள். அதே நேரத்தில் அங்கிருந்த சோள மூட்டைகள், தடைகள், குவியல்கள் போன்றவற்றை அங்கிருந்து அகற்றினார்கள்.

“உடைக்கவிடாதீர்கள்!” என்று கூட்டத்தில் இருந்து சத்தம் கேட்டது. “உடைக்க விடாதீர்கள்!”

கிர்யக் உறுதியாகக் குடிசையை நோக்கி சென்றான். குடிசையை உடைப்பவர்களை நிறுத்தப்போவதுபோல வேகமாகச் சென்றவனை, அங்கிருந்த வேலையாள் ஒருவன் கழுத்தில் ஓங்கி ஒரு அறை வைத்தான். அதைப் பார்த்து அனைவரும் சிரித்தார்கள். இப்போது இன்னொரு அறை விழுந்தது. கிர்யக் கீழே விழுந்தான். தவழ்ந்தபடியே கூட்டத்துக்குள் சென்று மறைந்தான்.

அப்போது அந்த மாணவனின் சகோதரிகள் இருவர், மிகவும் அழகாக ஆற்றின் மறுபுறத்தில் இருந்து வந்தார்கள். அவர்கள் சற்றுத் தொலைவில் நின்று கொண்டு நெருப்பைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உடைத்துப்போட்டிருந்த உத்திரங்களில் நெருப்பு அணைந்திருந்தது. புகை மட்டும் வந்துகொண்டிருந்தது. குழாயை கையில் வைத்துக் கொண்டிருந்த மாணவன், நீரை முதலில் உத்திரங்களின் மீதும், அடுத்து அங்கு நின்று கொண்டிருந்த குடியானவர்கள் மீதும், தண்ணீரை கொண்டுவரும் பெண்கள் மீதும் அடிக்க ஆரம்பித்தார்.

“ஜார்ஜ்!” என்று அந்தப் பெண்கள் அவனை நோக்கி சற்று கண்டிப்புடன், “ஜார்ஜ்!” என்று அதட்டினர்.

நெருப்பு அணைந்துவிட்டது. அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லும்போது, வானம் வெளுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். கடைசி நட்சத்திரங்கள் மறையும் அதிகாலை நேரத்தில் இருப்பதுபோல அனைவரின் முகமும் வெளிறி, முகம் கறுத்து இருந்தது. அங்கிருந்து கிளம்பிச் செல்லும்போது, அவர்கள் தளபதி சுகோவின் சமையலாளைப் பற்றியும், அவனது எரிந்து போன தொப்பியை பற்றியும் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அதற்குள்ளாக நெருப்பைப் பற்றி வேடிக்கையாகப் பேச ஆரம்பித்திருந்தார்கள். சீக்கிரமாக அணைந்துவிட்டது என்று அவர்கள் வருந்துவது போலவும் இருந்தது.

“எவ்வளவு நன்றாக நெருப்பை நீங்கள் அணைத்துவிட்டீர்கள்!” என்று ஓல்கா, அந்த மாணவனிடம் சொன்னாள். “நீங்கள் எங்களுடன் மாஸ்கோ வரவேண்டும். அங்கே தினமும் எங்காவது நெருப்பு பிடிக்கும்.”

“நீங்கள் மாஸ்கோவில் இருந்துவருகிறீர்களா?” என்றாள் அந்தப் பெண்களில் ஒருத்தி.

“ஆமாம், என் கணவர் ஸ்லாவியன்ஸ்கி பஜாரில் உணவு பரிமாறுபவராக வேலை செய்தார். இது என் மகள். இவளும் மாஸ்கோ பெண்தான்” என்று அருகில் நடுங்கி கொண்டும், ஒடுங்கிக்கொண்டும் இருந்த சாஷாவைக் காட்டினாள்.

அந்த இளம்பெண்கள் அவளிடம் பிரெஞ்சு மொழியில் ஏதோ கேட்டார்கள். மாணவன் சாஷாவுக்கு இருபது கோபெக் நாணயம் ஒன்றைத் தந்தான்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த கிழவர் ஓசிப் முகத்தில் நம்பிக்கை தெரிந்தது.

“காற்று வீசாமல் இருந்ததற்கு, நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். இல்லையென்றால் கிராமமே எரிந்து போயிருக்கும். பிரபுவே” என்று அவரும் அந்த இளைஞனை நோக்கி கூறினார்.

இப்போது கொஞ்சம் தடுமாற்றத்தோடு அவனை நோக்கி, “காலை மிகவும் குளிராக இருக்கிறது… கொஞ்சம் வெப்பத்துக்கு… பிரபுவின் ஆரோக்கியத்துக்கு ஒரு அரைப் போத்தல்…” என்றார்.

அவருக்கு எதுவும் தரப்படவில்லை. தொண்டையைச் செருமிக் கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றார். ஓல்கா தெருவின் முனையில் நின்றுகொண்டு, வண்டிகள் இரண்டும் கரையின் ஓரமாக சென்று, நதியைக் கடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பிரபுவும், அவரது சகோதரிகளும் புல்வெளி வழியாக நடந்து கொண்டிருந்தனர். அவர்களது குதிரை வண்டி நதியின் மறுபுறம் காத்துக் கொண்டிருந்தது. குடிசைக்குத் திரும்பிய அவள், அவளது கணவனிடம் உற்சாகமாக:

“என்ன நல்ல மனிதர்கள்! எவ்வளவு அழகு! அந்தப் பெண்கள் தேவதைகள் போல இருந்தார்கள்!”

“அவர்கள் நாசமாகப் போகட்டும்!” என்று வன்மத்துடன் பியோக்ளா தூக்கத்தில் கூறினாள்.

VI

மரியா மிகவும் மகிழ்ச்சியின்றி இருந்தாள். இறப்பதற்கும் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்தாள். ஆனால், பியோக்ளா இந்த வாழ்வை விரும்பினாள். ஏழ்மை, அசுத்தம், எப்போதும் சண்டையிடுவது போன்றவை அவளுக்குப் பிடித்திருந்தது. அவளுக்குக் கொடுத்ததை எந்தக் குறையும் சொல்லாமல் சாப்பிட்டாள். எங்கு வேண்டுமென்றாலும், கையில் கிடைத்ததை வைத்துக்கொண்டு தூங்கினாள். அறையில் இருக்கும் மூத்திர வாளியை வீட்டின் வாசலிலேயே கொட்டிவிடுவாள். அதில் தேங்கி இருக்கும் நீரில் நடந்தும் செல்வாள். இந்த வாழ்வைப் பிடிக்கவில்லை என்றதற்காக அவள் முதல் நாளில் இருந்தே ஓல்காவையும் நிக்கொலாய்யையும் வெறுத்தாள்.

“இங்கே என்ன உண்பதற்குக் கிடைக்கிறது என்று பார்ப்போம், மாஸ்கோ கனவான்களே!” என்று வெறுப்புடன் கூறினாள். “பார்க்கலாம்!”

செப்டம்பர் மாத ஆரம்பத்தில் ஒரு நாள் காலை, சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் குளிரினால் முகம் சிவந்தும் இருந்த பியோக்ளா இரண்டு வாளி தண்ணீரைக் கொண்டு வந்துகொண்டிருந்தாள். மரியாவும், ஓல்காவும் மேசையில் அமர்ந்து தேநீர் குடித்துக் கொண்டிருந்தார்கள்.

“தேநீரும், சர்க்கரையும்” என்று கேலியாக ஆரம்பித்த பியோக்ளா, “என்ன நேர்த்தியான பெண்கள்!” என்று வாளிகளை கீழே வைத்துக் கொண்டே தொடர்ந்தாள். “தினமும் தேநீர் குடிக்கப் பழகியிருக்கிறீர்கள். தேநீர் குடித்தே பருத்து, வெடித்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று ஓல்காவை வெறுப்புடன் பார்த்துக் கொண்டே சொன்னாள்: “மாஸ்கோவில் அப்படி இருந்து தான், உன்னுடைய கோப்பை கூடப் பெருத்துவிட்டது, சதைப்பிண்டமே!” என்று சொல்லிக்கொண்டே, கையில் இருந்த தடியைச் சுழற்ற, அது ஓல்காவின் தோளில் வேகமாக அடித்தது. இரண்டு மைத்துனிகளும், தங்களது கைகளைப் பிசைந்து கொண்டு, “ஓ! கடவுளே!” என்று மட்டுமே சொல்ல முடிந்தது.

அப்படியே பியோக்ளா துணிகளைத் துவைக்க நதிக்கு சென்றாள். செல்லும் வரை அவள் திட்டிக்கொண்டே சென்றது, குடிசையில் நன்றாகவே கேட்டது.

அன்றைய நாள் கழிந்தது. அதைத் தொடர்ந்து நீண்ட இலையுதிர்கால மாலை வந்தது. அவர்கள் குடிசையில் அமர்ந்து பட்டுநூல் சுற்றினார்கள். அதாவது பியோக்ளாவைத் தவிர. அவள் ஆற்றுக்குச் சென்றிருந்தாள். அருகில் இருந்த தொழிற்சாலையில் இருந்து பட்டுநூலைப் பெற்றார்கள். மொத்த குடும்பமும் வாரம் வெறும் இருபது கோபெக் கூலிக்காக வேலை செய்துகொண்டிருந்தனர்.

“பழைய காலத்தில் பிரபுக்களின் கீழே நிலைமை நன்றாக இருந்தது” என்று கிழவனார் பட்டுநூலை சுற்றிக்கொண்டே பேசினார். “வேலை பார்ப்போம். சாப்பிட்டு, தூங்கலாம். எல்லாம் அதனதன் நேரத்தில் நடக்கும். இரவில் முட்டைகோசு சூப்பும் வேகவைத்த தானியமும் இருக்கும். மதியமும் அதுவேதான் உணவு. வெள்ளரிக்காய்களும் முட்டைக்கோசும் நிறையக் கிடைக்கும். எவ்வளவு வேணுமோ, அவ்வளவு சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். அனைவரும் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.”

குடிசையில் ஒற்றை விளக்கு மங்கலாகவும் புகையுடனும் எரிந்துகொண்டிருந்தது. யாரோ விளக்கின் மீது திரையைப் போட்டவுடன், சன்னலில் இருந்து பெரிய நிழல் விழுந்தது. நிலவொளி இப்போது உள்ளே விழுந்துகொண்டிருந்தது. வயதான ஓசிப், அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பு, அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று மெதுவாகப் பேசிக்கொண்டிருந்தார். இப்போது ஏழ்மையும், சோகமும் மட்டுமே இருக்கும் அந்தப் பகுதிகளில், அவர்கள் வேட்டை நாய்களுடன் வேட்டையாட செல்வதைப் பற்றிச் சொன்னார். வேட்டையில் முன்னே கொட்டடித்துகொண்டு செல்லும் குடியானவர்களுக்கு வோட்கா கொடுக்கப்பட்டது. வண்டி, வண்டியாக வேட்டையாடப்பட்ட மிருகங்கள், மாஸ்கோவில் இருந்த இளம் முதலாளிகளுக்கு அனுப்பப்பட்டது. வேலையில் மோசமாக இருப்பவர்கள் குச்சியால் அடிக்கப்பட்டார்கள் அல்லது ட்வெர் பண்ணைக்கு அனுப்பப்பட்டார்கள். நன்றாக வேலை செய்பவர்களுக்கு பரிசு கொடுக்கப்பட்டது.

கிழவியும் சில விஷயங்களைத் தெரிவித்தாள். அவளுக்கு எல்லாம் நினைவில் இருந்தது. அவளுடைய அன்பான, கடவுளுக்குப் பயந்த முதலாளியம்மாவை நினைவு கூர்ந்தாள். அவளது கணவன் ஒரு ஊதாரி மற்றும் பொறுக்கி. அவளது மகள்கள் செய்திருந்த திருமணங்கள் சந்தோஷத்தைத் தரவில்லை. ஒருத்தி குடிகாரனையும் இன்னொருத்தி வேலையாளையும் திருமணம் செய்திருந்தார்கள். மூன்றாமவள் ரகசியமாக ஓடிப்போயிருந்தாள் (அப்போது இளவயதாக இருந்த பாட்டியும் அவள் ஓடிப்போக உதவியிருந்தாள்.) அவர்கள் அனைவரும், அவர்களது தாயோடு இளவயதிலேயே துக்கத்தினால் மரணமடைந்தனர். இதையெல்லாம் நினைவுக்குக்கொண்டு வந்த பாட்டி, கண்ணீர் சிந்த ஆரம்பித்தாள்.

அதே நேரத்தில், யாரோ கதவை தட்டவே, அனைவரும் திடுக்கிட்டனர்.

“ஓசிப் மாமா, நான் இன்றிரவு மட்டும் இங்கே தங்கி கொள்கிறேன்.”

தளபதி சுக்கோவின் சமையலாள், வழுக்கையான வயதானவர், தொப்பியை நெருப்பில் கொடுத்தவர், உள்ளே வந்தார். அவரும் அமர்ந்து, அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, அவரும் பலவிதமான கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார். படுக்கையில் கால்களைக் கீழே போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்த நிக்கொலாய், அவரிடம் பழைய நாட்களில் பிரபுக்களின் வீடுகளில் செய்யப்பட்ட பதார்த்தங்களைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தார். அவர்கள் இறைச்சி பொறைகள், கட்லெட், பலவித சூப் மற்றும் குழம்பு வகைகள் போன்றவற்றைப் பற்றிப் பேசினார்கள். எல்லாவற்றையும் நன்றாக நினைவில் வைத்திருந்த அவர், இப்போது சமைக்கப்படாத பதார்த்தங்களையும் பற்றிப் பேசினார். புல்ஸ் ஐ-க்கொண்டு செய்யப்பட்ட பதார்த்தத்தைப் பற்றிக் கூறினார்.

“கட்லெட்களைப் பிரெஞ்சு முறையில் செய்வீர்களா?” என்றார் நிக்கொலாய்.

“இல்லை.”

நிக்கொலாய் தலையை வருத்தமாக ஆட்டி, “ச்! ச்! பெரிய சமையல்காரர் இல்லை போல” என்றார்.

அங்கங்கே உட்கார்ந்தும், படுத்தும் இருந்த சிறுமிகள், கண்களைச் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மேகத்தில் தேவதைகள் உலவுவது போல, அவர்கள் இருந்தார்கள். அவர்களுக்குக் கதை கேட்பது பிடித்திருந்தது. மூச்சுவிடாமல், நடுங்கிக்கொண்டும், மாறிமாறி மகிழ்ச்சி, பயம் என்று முகம் வெளிற கதை கேட்டார்கள். பாட்டியின் கதைகள் அவர்களுக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது.

அவர்கள் அமைதியாகப் படுத்துக்கொண்டார்கள். அவர்களது நினைவுகளால் தடுமாற்றம் அடைந்த வயதானவர்கள், இளமை எவ்வளவு அருமையானது என்று நினைத்தார்கள். எப்படிப்பட்ட நினைவுகள் இளமையில் இருந்தாலும், உயிர்ப்புடனும், மகிழ்வானதும், உணர்வுபூர்வமானதும் தவிர எதுவும் நினைவில் இல்லை. மரணம் எவ்வளவு நடுக்கத்தைத் தருவதாக இருக்கிறது! அதைப்பற்றிச் சிந்திக்காமல் இருப்பதே நல்லது! விளக்கு அணைந்தது. மாலை நேரம், இரண்டு சன்னல்களிலும் இருந்து வந்த நிலவொளி, தொட்டில் கிரீச்சிடும் சத்தம் போன்றவை அவர்களுக்கு என்ன காரணத்தினாலோ, வாழ்வு முடிந்துவிட்டது என்று தோன்ற வைத்தது… என்ன செய்தாலும், வாழ்வு திரும்ப வரப்போவதில்லை என்றும் தோன்றியது… கண்கள் செருகுகிறது, தன்னையே மறக்கிறோம், திடீரென்று யாரோ தோளைத் தொடுகிறார்கள் அல்லது கழுத்தில் மூச்சுவிடுகிறார்கள் – தூக்கம் கலைந்துவிடுகிறது… உடல் நெருக்கமாக உணர்கிறது; மனதில் மரணம் பற்றிய நினைவுகள் வருகின்றன. மறுபுறம் திரும்பிப் படுக்கிறீர்கள்; மரணம் மறக்கப்படுகிறது, ஏழ்மை, உணவு, மாவு விலை ஏறிக்கொண்டிருப்பது போன்ற பழைய நினைவுகள் மனதில் எழும்புகிறது. இன்னமும் சிறிது நேரத்தில், வாழ்வு முடிந்துவிட்டது என்றும், எதையும் திரும்பக்கொண்டு வரமுடியாது என்றும் தோன்றுகிறது.

“கடவுளே!” என்று சமையல்காரர் பெருமூச்சுவிட்டார்.

அப்போது யாரோ சன்னலில் மெதுவாகத் தட்டுவது கேட்டது. பியோக்ளா திரும்பியிருக்க வேண்டும். ஓல்கா, கொட்டாவி விட்டுக்கொண்டே, தோத்திரம் ஒன்றை சொல்லிவிட்டு, கதவை திறந்து, வெளிக்கதவில் இருந்த பூட்டைத் திறந்தாள். ஆனால் யாரும் உள்ளே வரவில்லை. தெருவில் இருந்து குளிர்ந்த காற்றும் நிலவொளி சட்டென்று காட்டிய வெளிச்சமும் மட்டுமே வந்தது. தெருவில் எந்த அசைவும் இல்லை. திறந்த கதவின் வழியே வானத்தில் நிலவு தெரிந்தது.

“யாரங்கே?” என்றாள் ஓல்கா.

“நான்தான்” என்று பதில் வந்தது. “நான்தான். “

கதவின் அருகே, சுவரோடு குறுக்கிக்கொண்டு, பியோக்ளா முழுவதும் நிர்வாணமாக நின்றுகொண்டிருந்தாள். அவள் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தாள். அவளது பற்கள் அடித்துக்கொண்டிருந்தன. தெளிந்த நிலவொளியில் அவள் மிகவும் வெளிறி, விநோதமாகவும், அழகாகவும் இருந்தாள். பளிச்சென்ற நிலவொளியில் அவள் உடலில் விழுந்த நிழல்கள் தனியே தெரிந்தது. அவளது கறுத்த புருவமும், இறுக்கமான, இளம் முலைகளும் அவளைத் தனித்துவமான ஒளியில் காட்டியது.

“அங்கிருக்கும் பொறுக்கிகள் என் உடையை உருவிவிட்டார்கள்” என்றாள். “வீடு வரை உடையில்லாமல் வந்தேன்… என் அம்மா என்னைப் பெற்றதைப் போல நிர்வாணமாக… நான் போட்டுக்கொள்ள எதாவது கொண்டு வா.”

“உள்ளே வா!” என்று ஓல்கா மெதுவாகக் கூறினாள். அவளும் நடுங்க ஆரம்பித்திருந்தாள்.

“உள்ளே கிழவனும் கிழவியும் என்னை இப்படிப் பார்க்க கூடாது… “ உள்ளே, கிழவி ஏற்கெனவே நடுங்க ஆரம்பித்திருந்தாள். கிழவரும் ‘யாரங்கே?” என்றார். ஓல்கா, அவளுடைய மேலாங்கியையும், பாவாடையையும் கொண்டு வந்து கொடுத்தாள். அவள் மாற்றிக்கொண்டவுடன், இருவரும் சத்தமிடாமல் கதவை சாத்திவிட்டு, உள்ளே அமைதியாக நுழைந்தார்கள்.

யாரென்று ஊகித்த பாட்டி. “நீதானா அது, தூ! நாடோடி!… கெட்டுத்தான் போவாய்!” என்று கோபமாகக் கூறினாள்.

திரும்பவும் அனைத்தும் அமைதியாக மாறியது. அவர்கள் எப்போதும் நன்றாகத் தூங்கியதில்லை; யாராவது ஒருவர் ஏதாவது காரணத்துக்காக, எழுந்துகொண்டே இருப்பார்கள்; கிழவருக்கு முதுகு வலி, கிழவிக்குக் கவலை, கோபம், மரியாவுக்கு பயம், குழந்தைகளுக்கு பசி, அரிப்பு. இப்போதும் அவர்களது தூக்கம் தடைப்பட்டது. புரண்டு, புரண்டு படுத்துக்கொண்டும், தூக்கத்தில் பேசிக்கொண்டும், தண்ணீர் குடிக்க எழுந்துகொண்டும் இருந்தார்கள்.

பியோக்ளா திடீரென்று சத்தமாக, பயங்கரமாக ஊளையிட்டாள். உடனே அதை நிறுத்திவிட்டாள். அதன் பின்னர் சிறிது நேரம் மெதுவாகத் தேம்பிக்கொண்டிருந்தாள். அதுவும் மெதுவாக குரல் மங்கி, சிறிது நேரத்தில் அமைதியானாள். ஆற்றின் மறு கரையில் இருந்து ஒவ்வொரு மணி நேரத்தையும் அறிவிக்கும் மணி சத்தம் அவ்வப்போது கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால், மணிகள் வினோதமாக அடிக்கப்பட்டன. முதலில் ஐந்து அடிக்கப்பட்ட பின்னர், மூன்று அடிக்கப்பட்டது.

“கடவுளே!” என்று சமையல்காரர் பெருமூச்சுவிட்டார்.

சன்னலைப் பார்த்து விடிந்துவிட்டதா அல்லது இன்னமும் நிலவொளி இருக்கிறதா என்று சொல்ல முடியவில்லை. மரியா எழுந்து, வெளியே சென்றாள். அவள் மாடுகளைக் கறப்பதை கேட்க முடிந்தது. “அசை-யாயாதே!” என்று சொல்லிக்கொண்டிருந்தாள். கிழவியும் எழுந்து வெளியே சென்றாள். குடிசைக்குள் இன்னமும் இருட்டாக இருந்தது. ஆனாலும் எல்லாப் பொருட்களையும் பார்க்க முடிந்தது.

இரவு முழுவதும் தூங்காததால், நிக்கொலாய் படுக்கையில் இருந்து இறங்கினார். அவரது பச்சை பெட்டியில் இருந்த அழகான மேலங்கியை எடுத்து போட்டுக்கொண்டு, கைகளையும், அங்கியின் பின்புற வால்களையும் ஆசையோடு தடவிக்கொண்டு, சிரித்தார். மிகவும் கவனமாக அதைக் கழட்டி, திரும்பவும் மடித்துப் பெட்டிக்குள் வைத்தார்.

மரியா திரும்பவும் உள்ளே வந்து, அடுப்பை மூட்டினாள். அவள் இன்னமும் முழுமையாக எழவில்லை. நடக்கும்போதே தூக்கத்தில் கீழே விழுந்துவிடுவாள் போல இருந்தது. ஏதேனும் கனவு நினைவுக்கு வந்ததோ, அல்லது நேற்றிரவு கேட்ட கதைகள் நினைவுக்கு வந்ததோ, தெரியவில்லை. அடுப்பின் முன் நின்றுகொண்டு, கைகளை சோம்பல் முறித்துக்கொண்டு, “இல்லை, சுதந்திரமே நல்லது!” என்றாள்.

(தொடரும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *