Skip to content
Home » செகாவ் கதைகள் #17 – குடியானவர்கள் 4

செகாவ் கதைகள் #17 – குடியானவர்கள் 4

குடியானவர்கள்

VII

ஐயா வந்தார் – அப்படித்தான் அவர்கள் காவல் அதிகாரியை அழைத்தார்கள். எப்போது அவர் வருவார் என்பதும், அவர் எதற்காக வருகிறார் என்பதும் அவர்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே தெரியும். சுகோவோவில் நாற்பது குடும்பங்கள் இருந்தன. வரிகளும் மற்ற கட்டணங்களுமாக அவர்கள் இரண்டாயிரம் ரூபிள்கள் பாக்கி வைத்திருந்தார்கள்.

காவல் அதிகாரி முதலில் மதுக்கடைக்குச் சென்றார். அங்கே இரண்டு கோப்பை தேநீர் குடித்தார். அங்கிருந்து கிராமத்து பெரியவர் வீட்டுக்கு நடந்து சென்றார். அங்கே கடன் வைத்திருப்பவர்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். அந்திப் ஸ்யேடேல்நிகோவ், கிராமத்து பெரியவர் என்றாலும், அவருக்கு முப்பது வயதுக்குக் கொஞ்சம் அதிகம்தான் ஆகியிருந்தது. ஏழையாகவும், சரியாக வரி செலுத்தாமல் இருந்தாலும், அவர் கடுமையாகவும், எப்போதும் அதிகாரிகள் பக்கமும் மட்டுமே இருந்தார். கிராம நிர்வாகக் குழுவில் இருந்த குடியானவர்கள் அவரைக் கண்டு பயந்து, அவர் சொல்வதை அப்படியே செய்தார்கள். சில நேரங்களில் அவர் மதுக்கடைக்கு வெளியே செல்லும் யாராவது குடிகாரன் மீது பாய்ந்து, அவனைக் கட்டி, சிறையில் வைத்துவிடுவார்.

ஒரு முறை, கிழவி ஓசிப்பிடம் செல்லாமல், கிராம நிர்வாகக் குழுவுக்கு வந்து சத்தம் போட்டதால், அவளையும் ஒரு பகல், ஒரு இரவு சிறையில் வைத்துவிட்டார். அவர் இதுவரை நகரில் வசித்ததில்லை. ஒரு புத்தகம்கூட வாசித்ததில்லை. ஆனாலும், ஆங்காங்கே சில புத்திசாலித்தனமான வார்த்தைகளைத் தெரிந்து வைத்திருந்தார். அவற்றை அடிக்கடி உரையாடல்களில் உபயோகப்படுத்துவார். எனவே அவர் பேசுவது புரியவில்லை என்றாலும், அவரைப் பெரிய புத்திசாலியாகவே நினைத்தார்கள்.

ஓசிப் கிராம பெரியவரின் குடிசைக்குத் தனது வரிப் புத்தகத்துடன் வந்தபோது, மெலிந்த, வயதானவரான காவல் அதிகாரி, நீண்ட வெண்தாடியுடன், பழுப்பு ஆடை அணிந்து, வழியில் இருந்த மேசையில் அமர்ந்து எழுதி கொண்டிருந்தார். குடிசை சுத்தமாக இருந்தது. சுவர்கள் எல்லாம் செய்தித்தாள்களில் இருந்து வெட்டப்பட்ட படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. நடுவில் இருந்த இடத்தில், கடவுள் படங்களுக்கு இடையே, பல்கேரியா இளவரசன் பாட்டென்பர்க்கின் படம் இருந்தது. மேசையின் அருகில் அந்திப் ஸ்யேடேல்நிகோவ், கைகளைக் கட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தார்.

ஓசிப்பின் முறை வந்தபோது, “இவருக்கு நூற்று பத்தொன்பது ரூபிள் பாக்கி இருக்கிறது. ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பு ஒரு ரூபிள் கொடுத்தார். அதற்குப் பின்னர் ஒரு கோபெக்கூடக் கொடுக்கவில்லை.”

காவல் அதிகாரி, கண்களை ஓசிப் நோக்கி உயர்த்தி, “ஏன் இப்படி, சகோதரரே?” என்றார்.

“கருணை காட்டுங்கள், ஐயா!” என்று ஓசிப் உணர்ச்சிவசப்பட்டுக்கொண்டே, “ லுடோய்ட்ஸ்கியில் இருக்கும் ஒருவர் சென்ற வருடம் என்னிடம், ‘ஓசிப்! உங்கள் வைக்கோலை விற்றுவிடுங்கள்… விற்று விடுங்கள்!’ என்றார். என்னிடம் நூறு கட்டு வைக்கோல் இருந்தது; பெண்கள் அதைப் புல்வெளிக்கு நகர்த்திவைத்தனர். விற்பதற்கும் விலை பேசி இருந்தேன்…”

அந்திப்பின் மீது குற்றம்சாட்டினார்; பின்னால் அடிக்கடி திரும்பி, அங்கிருந்த குடியானவர்களைச் சாட்சிக்கு கூப்பிடுவது போலப் பார்த்தார். அவரது முகம் சிவந்து, வேர்த்து விட்டது. அவரது கண்களும் கூர்மையாகவும், கோபத்துடனும் இருந்தது.

“எதற்காக இதையெல்லாம் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. நான் கேட்பதெல்லாம்… ஏன் நீங்கள் உங்கள் பாக்கியை செலுத்துவதில்லை என்றுதான். நீங்கள் எல்லோருமே பாக்கியைச் செலுத்துவதில்லை. உங்களுக்கு எல்லாம் நான் பொறுப்பேற்க வேண்டுமா?” ” என்றார் காவல் அதிகாரி.

“என்னால் முடியாது.”

“அவரது வார்த்தைக்கு எந்தப் பதிலும் கிடையாது, ஐயா!” என்றார் அந்திப். “சிகில்டுயேவ் குடும்பம் மொத்தமே குற்றம் செய்பவர்கள். மற்றவர்களைப் பார்த்தீர்கள் என்றால், நான் வோட்காவைக் குற்றம் சொல்வேன். மொத்தத்தில் அனைவரும் எந்தப் புரிதலும் இல்லாத, மோசமானவர்கள்.”

காவல் அதிகாரி எதையோ எழுதினார். ஓசிப்பிடம் மெதுவாக, தண்ணீர் கேட்பது போலச் சொன்னார்.

“போய்விடு.”

சீக்கிரத்தில் அங்கிருந்து கிளம்பினார். அவரது எளிமையான வண்டியில் ஏறி, தொண்டையைச் செருமிய போது, அவரது முதுகின் வளைவில் இருந்து, அவர் ஓசிப் பற்றியோ கிராம பெரியவர் பற்றியோ வரி பாக்கியை பற்றியோ யோசிக்கவில்லை என்பதும், அவரது கவலைகளைப் பற்றியே யோசிக்கிறார் என்பதும் புரிந்தது. அவர் ஒரு மைல் செல்வதற்குள்ளேயே, அந்திப், சிகில்டுயேவ் குடிசையில் இருந்து தேநீர் பாத்திரத்தை தூக்கிக்கொண்டு சென்றார். அவரது பின்னாடியே, கிழவி தொண்டை கிழிவது போலக் கத்திக்கொண்டு வந்தாள்.

“எடுத்துப்போகவிடமாட்டேன், எடுத்துப்போகவிடமாட்டேன்!”

அவரும் வேகமாக, நீண்ட அடி எடுத்துவைத்துக்கொண்டு சென்றார். அவள் பின்னாடியே மூச்சு வாங்க, கீழே விழுவதுபோல வந்துகொண்டிருந்தாள். அவளது கைக்குட்டை தோளில் இருந்து விழுந்தது. அவளது வெள்ளை முடி காற்றில் பறந்து கொண்டிருந்தது. திடீரென்று நின்ற அவள், புரட்சியாளரைப்போல, மார்பில் கை முஷ்டியால் அடித்துக்கொண்டு, இன்னமும் அதிகமாகக் கத்திக்கொண்டு, தேம்பி அழுதுகொண்டே சொல்ல ஆரம்பித்தாள்.

“நல்ல கிறிஸ்தவர்களே, கடவுளை நம்புபவர்களே! என்னை எப்படி நடத்துகிறார், பாருங்கள்! நண்பர்களே! என்ன கொடுமை இது! ஓ! ஓ! மக்களே! எனக்குத் துணை நில்லுங்கள்!”

“பாட்டி! பாட்டி!” என்று கடுமையாகச் சொன்ன பெரியவர், “ கொஞ்சம் அறிவோடு நடந்து கொள்ளுங்கள்!”

தேநீர் பாத்திரம் இல்லாமல் சிகில்டுயேவ் குடிசை மகிழ்ச்சியில்லாமல் இருந்தது. அதை எடுத்துச் சென்றது ஒருவிதத்தில் அவமானமாக இருந்தது. அவரது குடிசையின் மானமே போய்விட்டது போல இருந்தது. அவர் அங்கிருந்த மேசை, நாற்காலி, பானைகள் அனைத்தையும் எடுத்துச் சென்றிருந்தாலும், குடிசை அவ்வளவு காலியாக இருந்திருக்காது. பாட்டி கத்திக்கொண்டிருந்தாள். மரியா அழுதாள். அவள் அழுவதைப் பார்த்து, சிறுமிகளும் அழுதார்கள். குற்றவுணர்வில் கிழவர் மூலையில் குனிந்த தலையுடன் அமைதியாக அமர்ந்திருந்தார். நிக்கொலாய்யும் அமைதியாக இருந்தார்.

கிழவிக்கு அவரைப் பிடிக்கும் என்றாலும், அவளது அனுதாபத்தை மறந்து, அவர் மீது கோபத்துடன் திட்டிக்கொண்டும், வார்த்தைகளை வேகமாக விட்டுக்கொண்டும், கைகளை மடக்கி அவரது முன்னே காட்டிக்கொண்டு கத்தினாள். எல்லாம் அவரது தவறுதான் என்றும், கடிதங்களில் எழுதியதுபோல அவர் ஸ்லாவியன்ஸ்கி பஜாரில் மாதம் ஐம்பது ரூபிள் சம்பாதித்திருந்தால், அவர்களுக்கு ஏன் அதில் இருந்து பணம் அனுப்பவில்லை என்றும் கோபமாகக் கேட்டாள். எதற்காக அங்கே வந்திருக்கிறார்? அதுவும், குடும்பத்துடன்? அவர் இறந்தால், இறுதி சடங்குக்கு யார் பணம் தருவது…? நிக்கொலாய், ஓல்கா, சாஷாவைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

கிழவர் தன் தொண்டையைச் செருமிக்கொண்டு, தொப்பியை எடுத்துக்கொண்டு கிராம பெரியவர் வீட்டுக்குச் சென்றார். அந்திப் அடுப்புக்கு அருகில் ஏதோ செய்துகொண்டிருந்தார். அவரது கன்னம் உப்பியிருந்தது. எதோ எரிவது போன்ற வாசம் வந்தது. அவரது குழந்தைகள், மெலிந்தும், குளிக்காமலும், சிகில்டுயேவ் குடும்பத்து குழந்தைகளைப் போலவே இருந்தன. அவரது மனைவியும் அசிங்கமாகவும், முகத்தில் பருக்களுடன், பெரிய தொப்பையுடன் பட்டுநூல் சுற்றிக்கொண்டிருந்தாள். அவர்கள் மிகவும் ஏழையாகவும் அதிர்ஷ்டமில்லாத குடும்பமாகவும் இருந்தார்கள். அந்திப் ஒருவர் மட்டுமே அழகாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தார். அங்கிருந்த பலகையில் ஐந்து தேநீர் பாத்திரங்கள் இருந்தன.

கிழவர் பாட்டென்பர்க்கிடம் பிரார்த்தனை சொல்லிவிட்டு, “அந்திப், கொஞ்சம் கருணை காட்டு. தேநீர் பாத்திரத்தை திரும்பக் கொடு” என்றார்.

“மூன்று ரூபிள்கள் கொடுத்துவிட்டு, எடுத்துச்செல்.”

“என்னால் முடியாது.”

அந்திப் அடுப்பில் ஊதினார். நெருப்பு சத்தத்தோடு எழுந்தது. அதன் ஒளி, தேநீர் பாத்திரத்தில் பிரதிபலித்தது. கிழவர் தன்னுடைய தொப்பியைக் கையில் எடுத்துக்கொண்டு, ஒரு நொடி யோசித்துச் சொன்னார்.

“திரும்பக் கொடுத்துவிடுங்கள்.”

அந்திப் முகத்தில் அடுப்புக்கரியின் புகையுடன், மந்திரவாதி போல இருந்தார். ஓசிப்பை நோக்கி திரும்பி, கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு, “எல்லாம் கிராமப்புற தலைவரை பொறுத்தது. இருபத்தி ஆறாம் தேதி உங்களது அதிருப்தியைப்பற்றி நேராகவோ, எழுத்து மூலமாகவோ நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம்.”

ஓசிப்புக்கு ஒரு வார்த்தைகூடப் புரியவில்லை என்றாலும், திருப்தியுடன் வீட்டுக்குத் திரும்பினார்.

பத்து நாட்களுக்குப் பின்னர், காவல் அதிகாரி திரும்பவும் வந்தார். ஒரு மணி நேரம் இருந்துவிட்டுச் சென்றார். அந்த நாட்களில் வானிலை மிகவும் குளிராகவும், காற்று வீசிக்கொண்டும் இருந்தது; நதி சில நாட்களாகவே உறைந்து போயிருந்தது. இன்னமும் பனி விழ ஆரம்பிக்கவில்லை என்றாலும், மக்கள் சிரமத்தில் இருந்தார்கள். விடுமுறைக்கு முந்தைய தின மாலை, ஓசிப்பின் பக்கத்து வீட்டுக்காரர்கள் அவருடன் பேசுவதற்கு வந்திருந்தார்கள். வேலை செய்வதும் பாவம் என்பதால், அவர்கள் விளக்கை ஏற்றாமல், இருட்டிலேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். எல்லாமே மோசமான செய்திகளாக இருந்தன. இரண்டு, மூன்று வீடுகளில் பாக்கிக்காக வீட்டில் இருந்த கோழிகளை எடுத்துச்சென்றுவிட்டனர். அவற்றை மாவட்ட காவல் நிலையத்துக்கு அனுப்ப, அங்கே அவற்றுக்கு உணவு தர யாருமின்றி அவை இறந்து போயின. செம்மறிகளையும் எடுத்து சென்றிருந்தனர். அவற்றை ஒன்றுடனொன்று கட்டி, வண்டியில் வைத்து பக்கத்து கிராமத்துக்கு எடுத்துச் சென்றதில், அவற்றில் ஒன்று இறந்து போனது. இதற்கெல்லாம் யார் காரணம் என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

“ஸிம்ஸ்டோவோதான். வேறு யார்? என்றார் ஓசிப்.”

“ஸிம்ஸ்டோவோதான்.”

எல்லாவற்றுக்கும் அவர்கள் ஸிம்ஸ்டோவோவைதான் காரணமாகச் சொன்னார்கள். வரிப்பாக்கி, இழைக்கப்படும் கொடுமைகள், பயிர் விளையாமல் போவது என அல்லவே`எல்லாவற்றுக்கும் ஸிம்ஸ்டோவோவைக் காரணமாக்கினாலும், அவர்கள் யாருக்கும் ஸிம்ஸ்டோவோ என்றால் என்னவென்று தெரியாது. ஸிம்ஸ்டோவோவில் உறுப்பினராக இருந்த விடுதிகள், தொழிற்சாலைகள், கடைகள் வைத்திருந்த வசதியான குடியானவர்கள், அதிருப்தி அடைந்தபோது, தங்களது தொழிற்சாலைகளிலும், விடுதிகளிலும் ஸிஸ்ட்டோவோவைத் திட்டிய காலத்தில் இருந்து இது துவங்கியது.

கடவுள் இன்னமும் பனியை அனுப்பவில்லை என்று குறை சொன்னார்கள்; அவர்களுக்கு விறகு தேவைப்பட்டது. உறைந்து, உடைந்து இருந்த பாதைகளில் வண்டிகளிலோ, நடந்தோ கொண்டு வரமுடியாது. பழைய நாட்களில் பதினைந்து முதல் இருபது வருடங்களுக்கு முன்பு சுகோவில் உரையாடல் இன்னமும் சுவாரஸ்யமானதாக இருந்தது. அந்த நாட்களில் வயதானவர்கள் தங்களிடம் ஏதோ ரகசியம் இருப்பது போலத் தோன்றினார்கள்; எதையோ தெரிந்தும், எதையோ எதிர்பார்த்து இருப்பது போல இருந்தார்கள். தங்க எழுத்துக்கள் பொறித்த பட்டயம், நிலத்தைப் பிரிப்பது, புதிய நிலங்கள், புதையல்கள் என பலவற்றையும் பேசினார்கள். எதையோ குறித்துக்கொண்டிருப்பதைப் போல பேசிக்கொண்டிருந்தார்கள். இப்போதோ சுகோவ் மக்களிடம் எந்த மர்மமும் இல்லை; அவர்களது வாழ்வு முழுவதும் திறந்தும், காய்ந்தும் கிடந்தது. ஏழ்மை, உணவு, பனி இல்லாமல் இருப்பது போன்றவை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தார்கள்.

சற்று நேரம் அமைதியாக இருந்தார்கள். மறுபடியும் கோழி, செம்மறிகளைப் பற்றி நினைவுக்கு வந்து, யாருடைய தவறு என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

“ஸிம்ஸ்டோவோ,” என்று சலிப்புடன் ஓசிப் கூறினார். “வேறு யார்?”

VIII

அவர்களது மறை மாவட்ட தேவாலயம், ஐந்து மைல் தொலைவில் கோசோகோரோவோவில் இருந்தது. ஞானஸ்நானம், திருமணம், இறுதிச்சடங்குகள் போன்றவற்றுக்கு அங்குதான் செல்வார்கள். மற்ற நேரங்களில் பிரசங்கங்களுக்கு ஆற்றின் மறு கரையில் இருந்த தேவாலயத்துக்குச் செல்வார்கள். விடுமுறை நாட்களில், பெண்கள் தங்களிடம் இருந்த சிறந்த ஆடையை அணிந்துகொண்டு, கூட்டமாகத் தேவாலயத்துக்குச் செல்வார்கள். அவர்கள் சிவப்பு, மஞ்சள், பச்சை ஆடைகளில் மேய்ச்சல் புல்வெளியை கடந்து செல்வதைப் பார்ப்பதற்கே உற்சாகமாக இருக்கும். மோசமான வானிலை இருக்கும் நாட்களில் அனைவரும் வீட்டில் இருப்பார்கள். அவர்களது மதச் சடங்குகளுக்கு மறைமாவட்ட தேவாலயத்துக்குச் செல்வார்கள். ஈஸ்டருக்கு முந்தைய நாற்பது விரத நாட்களில் மறைமாவட்ட தேவாலய பாதிரியாரிடம் சங்கீர்த்தனம் செய்து கொள்ளாதவர்களுக்காக, அவர் குடிசைகளுக்கு கையில் ஈஸ்டர் சிலுவையுடன் வருவார். அப்படி வருவதற்கு பதினைந்து கோபெக்குகள் வாங்கிவிடுவார்.

கிழவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். எப்போதும் கடவுளை பற்றி நினைக்காதவர். அதெல்லாம் பெண்கள் விஷயம் என்று நினைப்பவர். அவரிடம் கடவுள் பற்றியோ, அற்புதங்கள் பற்றியோ அல்லது வேறு விஷயங்கள் பற்றியோ கேள்வி கேட்டால், சொறிந்துகொண்டே, வேண்டா வெறுப்பாக “யாருக்கு தெரியும்!” என்பார்.

கிழவிக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது. ஆனாலும் எல்லாம் அவளது நினைவுகளில் குழம்பி போய் இருந்தது. பாவங்கள், மரணம், ரட்சிப்பு என்று எதையாவது அவள் சிந்திக்க ஆரம்பித்தவுடன், அவளுக்கு அவர்களது ஏழ்மையும், மற்ற விஷயங்களும் நினைவுக்கு வந்துவிடும். உடனே அவள் சிந்தித்துக்கொண்டிருப்பதை மறந்து விடுவாள். அவளுக்குத் தோத்திரங்களும் பிரார்த்தனைகளும் கூட நினைவில் இருப்பதில்லை. மாலை நேரங்களில், தூங்கப் போவதற்கு முன், வீட்டில் இருந்த கடவுள் உருவங்களுக்கு முன் நின்றுகொண்டு, “கசனின் புனித தாயே, ஸ்மோலென்ஸ்கின் புனித தாயே, ட்ரொருட்சிஸ்சியின் புனித தாயே…” என்று முணுமுணுத்துக்கொண்டிருப்பாள்.

மரியாவும், பியோக்ளாவும் சிலுவை இட்டுக்கொண்டார்கள்; விரதம் இருந்தார்கள்; வருடாவருடம் இயேசுவின் ஆசியுடன் அப்பத்தைப் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் எதையும் புரிந்து கொள்ளவில்லை. குழந்தைகளுக்கும் அவர்கள் எந்தப் பிரார்த்தனையும் சொல்லிக் கொடுக்கவில்லை. கடவுளைப் பற்றியும் எதுவும் சொல்லவில்லை. எந்த ஒழுக்கமும் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படவில்லை. அவர்கள் விரத காலத்தில் பாலும், இறைச்சியும் சாப்பிட தடை இருந்தது. மற்ற குடும்பங்களிலும் இதே நிலைதான். சிலர் நம்பினார்கள்; சிலர் புரிந்துகொண்டார்கள். அதே நேரத்தில் எல்லோரும் விவிலியத்தை மென்மையான, போற்றும் அன்புடன் மிகவும் விரும்பினார்கள். ஆனால் அவர்களிடம் விவிலியப் புத்தகம் இருக்கவில்லை. ஓல்கா சில நேரங்களில் அவர்களுக்கு வாசித்துக் காட்டியதால் அவளை மிகவும் மதித்தார்கள். அவளையும், சாஷாவையும் தங்களை விட மேலானவர்கள் என்பது போலவே அவர்களிடம் பேசினார்கள்.

தேவாலய விடுமுறை நாட்களிலும், மற்ற பிரசங்க நேரங்களிலும், ஓல்கா அருகில் இருக்கும் கிராமங்களுக்கும், மாவட்ட தலைநகருக்கும் சென்றாள். அங்கே இரண்டு மடங்களும், இருபத்தேழு தேவாலயங்களும் இருந்தன. அப்படிச் செல்லும் நாட்களில், அவள் கனவுலகில் இருப்பவள் போலவும், அவளது குடும்பத்தை மறந்தும் இருந்தாள். வீட்டிற்குத் திரும்பும் போதே, தனக்கு கணவனும், பெண்ணும் இருக்கும் மகிழ்ச்சியைக் கண்டறிந்தாள். அப்போதெல்லாம், முகம் ஒளிர, சிரிப்புடன் அவள் கூறுவாள்: “கடவுள் என்னை ஆசீர்வதித்திருக்கிறார்!”

கிராமத்தில் நிகழ்ந்தவை அவளுக்கு விருப்பமாக இல்லை. எலிசாவின் நாளன்று அவர்கள் குடித்தார்கள். விண்ணேற்பு நாளன்றும் குடித்தார்கள். உயிர்த்தெழும் நாளன்றும் குடித்தார்கள். பரிந்துரை விருந்துக்கு மூன்று நாட்கள் மறைமாவட்டம் முழுவதும், சுகோவிலும் கூட விடுமுறை. அப்போது மூன்று நாட்களும் குடியானவர்கள் குடித்தார்கள். பொதுப் பணத்தில் இருந்து ஐம்பது ரூபிள்களைக் குடியில் செலவழித்துவிட்டு, வீடுகளில் இருந்து வோட்காவுக்குப் பணம் சேகரித்தார்கள். விருந்தின் முதல் நாளன்று, சிகில்டுயேவ் குடும்பம் செம்மறி ஒன்றை கொன்று, காலை, மதியம், மாலை என சாப்பிட்டார்கள். கடும் பசியுடன் இருப்பது போல் சாப்பிட்டார்கள். குழந்தைகள் இரவில் எழுந்துகொண்டு சாப்பிட்டார்கள். மூன்று நாட்களும் கிர்யக் குடித்துக்கொண்டு இருந்தான். அவன் தொப்பி, காலணி என அனைத்துக்கும் குடித்து விட்டு, மரியாவை கடுமையாக அடித்துவிட்டான். அவர்கள் அவள் மீது குளிர் நீரை ஊற்ற வேண்டியதாகிவிட்டது. அதன் பின் அனைவரும் அதற்காக அவமானம் அடைந்தார்கள். அதன் பின்னர் அனைவரும் நோய்வாய்ப்பட்டார்கள்.

ஆனால், சுகோவிலும் ஒரு முறை ஆன்மிக உணர்வு கரைபுரண்டோடியது. ஆகஸ்ட் மாதத்தில், மாவட்டம் முழுவதும் இருந்த கிராமங்களுக்கு, மேரி மாதாவின் புனித உருவம் கொண்டு செல்லப்பட்டது. அவர்களது கிராமத்துக்குப் புனித தாயின் உருவம் வந்த தினம், மேகமூட்டத்துடன் இருந்தது. பெண்கள் தங்களது சிறந்த விடுமுறை தின ஆடைகளை அணிந்துகொண்டு, மாதாவின் உருவத்தை வரவேற்கத் தயாராக இருந்தார்கள். அன்று மாலை, மாதாவின் உருவம், சிலுவையுடன் அவர்களது கிராமத்துக்கு வந்தது. ஆற்றின் மறுபுறம் இருந்த தேவாலய மணி ஒலித்தது. அவர்கள் பாடிக்கொண்டிருந்தார்கள். தெருவில் கிராமத்தினரும், இன்னமும் பலரும் பெருங்கூட்டமாக திரண்டிருந்தனர். எல்லா புறமும் சத்தமும், தூசியும், பெரும் கூட்ட நெரிசலுமாக இருந்தது… கிழவரும், பாட்டியும், கிர்யக்கும் – மற்ற அனைவரும் தங்களது கைகளை புனித தாயின் உருவத்தை நோக்கி நீட்டிக்கொண்டு, ஆர்வத்துடன் சொன்னார்கள்: “காப்பாற்றுபவளே! தாயே! காப்பாற்றுபவளே!”

அனைவரும் அந்த நேரத்தில் பூமிக்கும், சொர்க்கத்துக்கும் நடுவே வெறும் வெளி இல்லை. எல்லாவற்றையும் செல்வந்தர்களும், அதிகாரத்தில் இருப்பவர்களும் எடுத்துக் கொள்ளவில்லை என்றும், இன்னமும் காயங்களுக்கு மருந்தாக ஒரு இடம் இருக்கிறது என்றும், அடிமைத்தனம், ஏழ்மை, பயங்கரமான வோட்கா எல்லாவற்றில் இருந்தும் காப்பாற்றும் ஒரு இடம் இருக்கிறது என்றும் உணர்ந்துகொண்டார்கள்.

“காப்பாற்றுபவளே! தாயே! காப்பாற்றுபவளே!” ஆனால் அன்று நன்றி கூறும் பிரசங்கம் முடிந்து, உருவத்தை எடுத்து சென்ற பின்னர், எல்லாம் திரும்பவும் பழையது போலவே ஆனது. மதுக் கடையில் குடித்துவிட்டு கத்திக்கொண்டிருப்பவர்களின் குரல் திரும்பவும் கேட்க ஆரம்பித்தது.

வசதியாக இருந்த குடியானவர்கள் மட்டுமே மரணத்துக்குப் பயந்தார்கள். பணம் அதிகமாக, அதிகமாக அவர்களுக்குக் கடவுள் மீதான நம்பிக்கையும், ஆன்மாவின் ரட்சிப்பின் மீதான நம்பிக்கையும் குறைந்தது. உலகம் முடிவடையப் போவது குறித்த பயம் மட்டுமே அவர்களை மெழுகுவர்த்தி ஏற்றவும், அவர்களுக்காகப் பிரார்த்தனைகளைச் சொல்லவும் வைத்திருந்தது. ஏழ்மையில் இருந்த குடியானவர்கள் மரணத்தைப் பார்த்து பயப்படவில்லை. கிழவனிடமும், பாட்டியிடமும், அவர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்து விட்டதாகவும், மரணிக்க நேரம் வந்து விட்டதாகவும் நேரடியாகவே சொல்லப்பட்டது. அவர்களும் அதற்காகக் கவலைப்படவில்லை.

நிக்கொலாய் இறக்கும் போது, தன்னுடைய கணவன் ராணுவத்தில் இருந்து விடுமுறைக்கு வர முடியும் என்று பியோக்ளா கூறிய போது, அவளை அவர்கள் தடுக்கவும் இல்லை. மரியாவோ, மரணத்தைக் கண்டு பயப்படாமல், அது மெதுவாக வருவதாக வருத்தப்பட்டாள். அவளது குழந்தைகள் மரணமடைந்த போது, அதற்காக மகிழவும் செய்தாள்.

மரணத்துக்குப் பயப்படவில்லை என்றாலும், ஒவ்வொரு நோய்க்கும் பயந்தார்கள். சிறிய அறிகுறி போதும் – வயிறு சரியில்லை, கொஞ்சம் காய்ச்சல் – உடனே பாட்டியை போர்வையில் சுற்றி, அடுப்பின் அருகில் வைத்து விடுவார்கள். அவளும் முனகிக்கொண்டே, புலம்ப ஆரம்பித்து விடுவாள்: “நான் இறந்துகொண்டிருக்கிறேன்!”

கிழவர் உடனடியாக சென்று பாதிரியாரை அழைத்து வருவார். கிழவிக்கு நோய் சொஸ்தமாக புனித நீர் தெளித்து சடங்குகள் நடக்கும். அவர்கள் எப்போதும் சளி, புழுக்கள், வயிற்றில் நகரும் கட்டிகள், இதயத்தைச் சுற்றிக்கொண்டிருக்கும் கட்டிகள் போன்றவற்றைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் சளி பிடிப்பதற்கு பயந்தார்கள். எனவே எப்போதும் கோடையிலும் தடித்த பல ஆடைகள் அணிந்து, அடுப்புக்கு அருகில் வெப்பத்தில் இருப்பார்கள். பாட்டிக்கு எப்போதும் மருத்துவரைப் பார்க்கப் பிடிக்கும். எனவே அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று, தனக்கு வயது எழுபது இல்லை, ஐம்பத்து எட்டு என்று சொல்லுவாள். மருத்துவருக்கு தன்னுடைய உண்மையான வயது தெரிந்துவிட்டால், மருந்துகளை எடுப்பதைவிட அவள் சாவது மேல் என்று தனக்கு வைத்தியம் செய்யமாட்டார் என்று அவள் பயந்தாள். வழக்கமாக அதிகாலையில், இரண்டு, மூன்று குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவள் மருத்துவமனைக்குச் செல்வாள். அங்கிருந்து மாலை நேரம், கோபத்தோடும், பசியோடும் வந்து சேர்வாள். அவளுக்கும், சிறுமிகளுக்கும் ஏதாவது மருந்துகளும் கொண்டு வருவாள். ஒரு முறை அவள் நிக்கோலேயைக் கூட்டிச் சென்றாள். அவரும் இரண்டு வாரங்களுக்கு மருந்துகளைச் சாப்பிட்டுவிட்டு, தான் நன்றாக இருப்பதாகத் தெரிவித்தார்.

கிராமத்தில் இருந்து இருபது மைல் சுற்றளவில் இருந்த அனைத்து மருத்துவர்கள், அவர்களது உதவியாளர்கள் என அனைவரையும் பாட்டி தெரிந்து வைத்திருந்தாள். அவர்களை ஒருவரைக் கூட அவளுக்குப் பிடித்ததில்லை. பரிந்துரை விருந்தின் போது, கிராமத்துக்குச் சிலுவையுடன் வந்திருந்த பாதிரியார், சிறைக்கு அருகில் இருக்கும் நகரில், ராணுவத்தில் மருத்துவ உதவியாளராக இருந்த கிழவர் ஒருவர் இருப்பதாகவும், அவர் அற்புதமாகக் குணமாக்குவதாகவும் தெரிவித்து, அவரைச் சென்று பார்க்கலாம் என்று கூறினார். பாட்டியும் அவரது அறிவுரையை கேட்டுக்கொண்டாள்.

முதல் பனி விழுந்த போது, அவள் நகரத்துக்குச் சென்று, பெரிய தாடியுடன், முகம் முழுவதும் நீல நரம்புகளுடன், நீண்ட அங்கியில் இருந்த மதமாற்றம் செய்திருந்த யூத கிழவனுடன் வந்தாள். அப்போது குடிசைக்கு வெளியே சிலர் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். பயங்கரமான கண்ணாடிகளுடன் தையல்காரர் ஒருவர், கிழிந்த துணிகளில் இருந்து மேலங்கி தைத்துக்கொண்டிருந்தார். இரண்டு இளைஞர்கள், கம்பளி காலணி செய்து கொண்டிருந்தார்கள். குடிப்பழக்கத்தால் வேலையை இழந்திருந்த கிர்யக் வீட்டில் சும்மா இருந்தான். எனவே தையல்காரரின் அருகில் இருந்து கொண்டு கயிறு ஒன்றை சரி செய்து கொண்டிருந்தான்.

குடிசைக்குள் சத்தமாகவும், கூட்டமாகவும், மூச்சு முட்டும் வகையிலும் நிலை இருந்தது. நிக்கொலாய்யை ஆராய்ந்து விட்டு, அவருக்குக் குவளைகளை வைத்து வைத்தியம் செய்ய வேண்டும் என்றார்.

தையல்கார கிழவன், கிர்யக், சிறுமிகள் அனைவரும் சுற்றி நின்று கொள்ள, அவர் குவளைகளை நிக்கொலாய் மீது வைக்க ஆரம்பித்தார். நிக்கொலாய் உடலில் இருந்து நோயை வெளியே எடுப்பதுபோல அவர்களுக்கு இருந்தது. நிக்கொலாய்யும் அவரது மார்பில் இருந்த குவளையில் மெதுவாகக் கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்தம் நிரம்புவதை பார்த்து, அவரது உடலில் இருந்து எதுவோ வெளியேறுகிறது என்று எண்ணி, மகிழ்ச்சியுடன் சிரித்தார்.

“நல்லது,” என்ற தையல்காரர், “கடவுளே! உனக்கு நல்லது செய்யும்.”

மருத்துவர் பனிரெண்டு குவளைகளை முதலில் வைத்துவிட்டு, அடுத்து இன்னொரு பனிரெண்டு குவளைகளை வைத்தார். அதன் பின்னர் தேநீர் குடித்து விட்டு, கிளம்பிவிட்டார். நிக்கொலாய் நடுங்க ஆரம்பித்தார். அவரது முகம் களையிழந்து காணப்பட்டது. அங்கிருந்த பெண்கள் சொன்னது போல, முட்டியைப் போலச் சுருங்கிவிட்டது. அவரது விரல்கள் நீலமாக மாறின. தடித்த போர்வையையும், அதன் மீது செம்மறி தோலையும் போர்த்திக்கொண்டார். ஆனாலும் அவருக்கு குளிர் அதிகமாகிக்கொண்டே போனது. மாலை வரும் போது, அவர் மிகவும் சிரமத்தில் இருந்தார். தரையில் படுக்கவைக்கும்படிக் கேட்டார். தையல்காரரைப் புகை பிடிக்காமல் இருக்க சொன்னார். அதன் பின்னர் செம்மறித்தோலாடைக்குள் புதைந்துகொண்டார். காலை விடியும் நேரம் இறந்துவிட்டார்.

IX

ஓ, என்ன ஒரு கடுமையான, நீண்ட குளிர்காலம்!

அவர்களது தானியம் கிறிஸ்துமஸ் வரை மட்டுமே வந்தது. அதன் பின்னர் அவர்கள் மாவு வாங்க வேண்டி வந்தது. வீட்டில் இப்போது தங்கிவிட்ட கிர்யக், மாலைகளில் சத்தமாக கத்தி, அனைவரிடமும் பயத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தான். காலை நேரத்தில் தலை வலியால் அவதிப்பட்டு, அவமானமடைந்தான். அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. தொழுவத்தில் மாடுகள் பசியுடன் காலையும் இரவும் கத்திக்கொண்டிருந்தன. அது பாட்டிக்கும் மரியாவுக்கும் உள்ளத்தை உருக வைத்தது. அவர்களது கெட்ட நேரமோ என்னவோ, குளிர்காலத்தில் பனி உறைந்து, பெரிய குவியலாகச் சேர்ந்து கொண்டிருந்தது. முடிவில்லாமல் குளிர் தொடர்ந்தது. திருப்பிறப்பு உணர்த்தும் விழா அன்று பனிப்புயல் அடித்தது. ஈஸ்டர் அன்றும் பனி பொழிந்தது.

இவற்றை எல்லாம் தாண்டியும் குளிர்காலம் முடிந்தது. ஏப்ரல் மாத ஆரம்பத்தில், பகல்கள் வெப்பமாகவும், இரவுகள் உறைந்தும் இருந்தது. குளிர் இன்னமும் விடவில்லை. ஆனால், இறுதியில் ஒரு வெப்பமான நாள் குளிரை விரட்டியது. ஓடைகள் ஓட ஆரம்பித்தன. பறவைகள் மீண்டும் பாட ஆரம்பித்தன. மேய்ச்சல் புல்வெளியும், நதிக்கு அருகில் இருந்த புதர்களும் வெள்ளத்தில் மூழ்கின. சுகோவில் இருந்து மறுபுறம் வரை நீரால் நிரம்பி இருந்தது. அதில் இருந்து காட்டு வாத்துக்கள் கூட்டமாக பறந்து கொண்டிருந்தன. அழகான மேகங்கள் இடையே தோன்றிய வசந்த கால அஸ்தமனங்கள் ஒவ்வொரு நாளும் புதிதாகவும், அருமையாகவும், அசாதாரணமாகவும் இருந்தன – அந்த வண்ணங்களையும், மேகங்களையும் பின்னாளில் ஓவியங்களைப் பார்க்கும் போது யாரும் அவை உண்மை என்று நம்புவதில்லை.

கொக்குகள் வேகமாகத் தங்களையே கூப்பிட்டுக்கொள்வதுபோலச் சோகமாகக் குரல் எழுப்பிக்கொண்டு பறந்து கொண்டிருந்தன. பள்ளத்தாக்கின் ஆரம்பத்தில் நின்று கொண்டு ஓல்கா பாய்ந்தோடும் வெள்ளத்தையும், சூரிய ஒளியையும், ஒளிரும் தேவாலயம் பார்த்துக்கொண்டிருந்தாள். அவை அனைத்தும் இன்னமும் வயது குறைந்தது போல தெரிந்தன. அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அங்கிருந்து போய்விட வேண்டும் என்ற உணர்ச்சிகரமான எண்ணத்தில் அவளது மூச்சு வேகமாக வந்து கொண்டிருந்தது. உலகின் முடிவுக்குச் சென்றுவிடவேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. அவள் அங்கிருந்து மாஸ்கோ சென்று அங்கு வேலையாளாக இருக்கவேண்டும் என்று முடிவெடுத்திருந்தாள். கிர்யக்கும் அவளுடன் சென்று, அங்கேயே எதாவது சுமை தூக்கும் வேலையோ அல்லது வேறு வேலையோ தேடிக்கொள்வது என்றும் முடிவு செய்திருந்தார்கள். சீக்கிரமாகக் கிளம்பவேண்டும்!

வெள்ளம் வடிய ஆரம்பித்து, எல்லாம் காய்ந்து போக ஆரம்பித்தபோது, அவர்கள் கிளம்பத் தயாரானார்கள். ஓல்காவும், சாஷாவும் தோள்களில் பைகளும், கால்களில் மரகாலணிகளும் அணிந்து கொண்டு, அதிகாலையில் கிளம்பினார்கள். மரியா அவர்களை வழியனுப்ப வெளியே வந்தாள். கிர்யக் உடல்நலமில்லாமல் இருந்ததால், இன்னொரு வாரம் வீட்டில் இருக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. கடைசி முறையாக ஓல்கா தேவாலயத்தில் பிரார்த்தனை செய்து கொண்டார். கண்களில் நீர் வழியவில்லை என்றாலும், அவளது கணவனை நினைத்துக்கொண்டாள். அவளது முகம் வீங்கி, வயதான பெண்ணைப் போல அவலட்சணமாக இருந்தது. குளிர் காலத்தில் அவள் மிகவும் மெலிந்தும், எந்த அழகற்றும் மாறியிருந்தாள். அவளது தலைமுடி வெளுத்திருந்தது. அவளது முகத்தில் இருந்த பழைய இனிமையும் அழகான புன்னகையும் மறைந்து விட்டது. அவளது வாழ்வின் துயரங்கள் அவளது முகத்தில் நிரந்தரமாக சோகத்தைக்கொண்டு வந்திருந்தது. பேசுவது எதையும் கேட்பதில்லை என்பது போல அவள் கண்கள் வெறுமையும், எந்த உணர்வும் இல்லாமல் இருந்தது.

அவளுக்குக் கிராமத்தில் இருந்தும், குடியானவர்களிடம் இருந்து பிரிவது வருத்தமாக இருந்தது. அவர்கள் எப்படி நிக்கொலாய்யின் உடலை எடுத்துச் சென்றார்கள், அனைவரும் ஒன்றாகத் துக்கத்தை அனுசரித்தது, அனைவரின் கண்களிலும் துக்கத்தினால் நீர் ததும்பியது என அனைத்தும் அவளது நினைவுக்கு வந்தது. கடந்த கோடை காலத்திலும், குளிர் காலத்திலும் பல நேரங்களில் அந்த மனிதர்கள் மிருகங்களைவிடக் கேவலமாக வாழ்வதாக எண்ணியிருக்கிறாள். அவர்களுடன் வாழ்வதைப் பயங்கரம் என்றும் கருதினாள். அவர்கள் கரடு முரடானவர்கள், நேர்மையற்றவர்கள், அழுக்கானவர்கள், குடிகாரர்கள். எப்போதும் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒருவரையொருவர் மதிப்பதில்லை. அதுவே அவர்கள் சண்டை போட்டுக் கொள்வதற்குக் காரணம்.

யார் மதுக்கடையை நடத்தி, அவர்களை குடிக்கவைப்பது? ஒரு குடியானவன். பள்ளிகள், வயல்கள், தேவாலய பணத்தைக் குடியில் வீணாக்குவது யார்? குடியானவன். யார் அவர்களது பக்கத்து வீட்டுக்காரர்களிடம் இருந்து திருடுவது, அவர்கள் பொருட்களுக்குத் தீ வைப்பது, ஒரு போத்தல் வோட்க்காவுக்காகப் பொய் சாட்சி சொல்வது? குடியானவர்கள்.

ஸிம்ஸ்டோவோ மற்றும் பிற கிராம சபைகளில், முதலில் குடியானவர்களுடன் சண்டையை ஆரம்பிப்பது யார்? ஒரு குடியானவன். ஆமாம், அவர்களுடன் வாழ்வது பயங்கரமானது. ஆனால், அவர்களும் மனிதர்களே. அவர்களும் மனிதர்கள் போலத் துயரப்பட்டு, அழுதார்கள். அவர்கள் வாழ்வில் எதையும் எளிதில் மன்னித்து விட முடியாது. கடுமையான உழைப்பினால் இரவு முழுவதும் உடல் வலி, கொடுமையான குளிர்காலங்கள், போதாத அறுவடைகள், நெருக்கடி; அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. உதவுவார்கள் என்று யாரையும் பார்க்கவும் முடியவில்லை.

கொஞ்சம் வலிமையாகவும், வசதியாக இருப்பவர்களும் எந்த உதவியும் செய்வதில்லை. ஏனென்றால் அவர்களும் கரடுமுரடாகவும், நேர்மையற்றும், குடிகாரர்களாகவும், ஒருவரை ஒருவர் கடுமையாக பேசவும் செய்தார்கள். அரசாங்கத்தின் கடைசி எழுத்தரும், அதிகாரியும் குடியானவர்களைத் திருடர்கள் போல நடத்தினார்கள். கிராம பெரியவர்களையும், தேவாலயக் காவலர்களையும் கூட அவர்கள் எகத்தாளமாக அழைத்தார்கள். அப்படி அவர்களை நடத்த, தங்களுக்கு உரிமை இருப்பதாகவும் நினைத்தார்கள். கிராமத்தில் இருப்பவர்களை அவமதிக்கவும், அவர்களது பணத்தை எடுக்கவும், பயமுறுத்தவும் வரும் பேராசை பிடித்த, பணத்துக்காக எதுவும் செய்யும் , சோம்பேறி, கேவலமான மனிதர்கள் எப்படிக் குடியானவர்களுக்கு உதாரணமாக இருக்க முடியும்?

கிர்யக்கை சவுக்கால் அடிக்கக் குளிர்காலத்தில் இழுத்துச் சென்றபோது, கிழவனும், பாட்டியும் பரிதாபமாகவும், அவமானத்துடனும் அதைப் பார்த்துக்கொண்டிருந்தது ஓல்காவுக்கு நினைவுக்கு வந்தது… இப்போது அவர்கள் அனைவரையும் நினைத்து அவள் வருந்தினாள். அந்தக் குடிசைகளை திரும்பிப் பார்த்துக்கொண்டே, வலியுடன் நடந்துகொண்டிருந்தாள்.

அவர்களுடன் இரண்டு மைல் நடந்த பின்னர், மரியா அவர்களிடம் இருந்து விடை பெற்று கொண்டாள். பின்னர், மண்டியிட்டு, முன்னே தரையில் விழுந்து அழ ஆரம்பித்தாள்.

“திரும்பவும் நான் தனியாக விடப்பட்டேன். மகிழ்ச்சியில்லாமல், ஐயோ! “

இதுபோன்று அவள் வெகுநேரம் அழுது, புலம்பி கொண்டிருந்தாள். நீண்ட தூரத்துக்கு ஓல்காவும், சாஷாவும் அவள் மண்டியிட்டு இருப்பதையும், அருகில் யாருக்கோ அவள் தலை வணங்குவதையும், அவளது தலையைக் கையில் பிடித்துக்கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது.

சூரியன் மேலே எழுந்தது. வெப்பம் அதிகரிக்க ஆரம்பித்தது. சுக்கோவ் கிராமத்தில் இருந்து வெகு தூரம் சென்றுவிட்டார்கள். ஓல்காவும் சாஷாவும் கிராமத்தையும், மரியாவையும் மறந்து போனார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக, எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு சென்றார்கள். பழைய கைவண்டி ஒன்றைப் பார்த்தார்கள். தந்தி கம்பங்கள் வரிசையாக ஒவ்வொன்றாக நீண்ட தூரத்துக்கு, தொடுவானம் வரை சென்றன. கம்பிகளில் இருந்து மர்மமான சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.

பசுமையான செடிகளால் சூழப்பட்ட வீட்டைப் பார்த்தார்கள். அதன் ஈரப்பதத்தில் இருந்து வாசம் வீசிக்கொண்டிருந்தது. அங்கிருப்பவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றியது. வயல்களில் வெள்ளையாகிக் கொண்டிருந்த குதிரையின் எலும்புக்கூட்டையும் பார்த்தார்கள். வானம்பாடிகள் பாடிக்கொண்டிருந்தன. வயல் குருவிகள் ஒன்றை ஒன்று கூப்பிட்டுக்கொண்டிருந்தன. வயலில் பறவைகள் கிரீச்சிட்டபடிப் பறந்துகொண்டிருந்தன.

நடுப்பகலில் ஓல்காவும் சாஷாவும் பெரிய கிராமம் ஒன்றை அடைந்தார்கள். அங்கிருந்த பெரிய தெருவில் அவர்கள் தளபதி ஷுக்கோவின் சமையல்காரனைப் பார்த்தார்கள். அவரது சிவந்த, வேர்த்திருந்த வழுக்கை தலை, வெயிலில் மின்னிக்கொண்டிருந்தது. ஓல்காவும் அவரும் முதலில் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளவில்லை. திரும்பவும் ஒரு முறை பார்த்துக்கொண்டவுடன், தெரிந்து கொண்டார்கள். ஆனால் ஒரு வார்த்தையும் பேசாமல் அவர்கள் வழியில் சென்று விட்டார்கள். புதியதாகவும், வசதியானதாகவும் தெரிந்த குடிசை ஒன்றின் அருகே நின்ற ஓல்கா, அதன் திறந்த சன்னல்களின் முன் நின்றுகொண்டு, சத்தமாகப் பாடுவது போன்ற குரலில் இறைஞ்சினாள்;

“நல்ல கிறிஸ்தவர்களே, பிச்சை போடுங்கள், கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்குக் கிட்டும். உங்கள் பெற்றோர் கடவுளின் சொர்க்க ராஜ்ஜியத்தில் நித்திய அமைதியுடன் இருப்பார்கள்…”

“நல்ல கிறிஸ்தவர்களே… கடவுளின் பெயரால், கொடுங்கள். கடவுளின் ஆசியுடன், சொர்க்க சாம்ராஜ்ஜியம்…” என்று சாஷாவும் பாட ஆரம்பித்தாள்.

(முற்றும்)

பகிர:
nv-author-image

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *