I
மருத்துவமனையின் முற்றத்தில் பர்டோக் செடிகள், தொட்டால் எரிச்சலைக் கொடுக்கும் நெட்டில் செடிகள், சணல் நார் செடிகள் முதலியவற்றால் சூழப்பட்ட ஒரு சிறிய விடுதி இருந்தது. அதன் கூரை துருப்பிடித்தும், புகைபோக்கி இடிந்து விழுந்துவிடுவதுபோலவும், அதன் முன் வாசற்படிகள் உடைந்தும் இருந்தன. எல்லா இடங்களிலும் புற்கள் வளர்ந்தும், எப்போதோ சுவரில் பூச்சுகள் இருந்ததற்கான அடையாளத்துடனும் இருந்தது. விடுதியின் முன்புறம் மருத்துவமனையைப் பார்த்தபடி இருந்தது. பின்புறம் திறந்தவெளியைப் பார்த்தவாறு இருந்தது. ஆணிகள் அறையப்பட்டிருந்த சாம்பல் நிற மருத்துவமனை வேலி நடுவே பிரிந்திருந்தது. கூர்மையான பகுதி மேலே பார்த்தவாறு இருந்த ஆணிகள், வேலி மற்றும் வினோதமான, பாழடைந்த, கடவுளும் கைவிட்ட விடுதியின் தோற்றம், நமது மருத்துவமனைகளிலும், சிறை கட்டடங்களிலும் மட்டுமே காணப்படும்.
நெட்டில் செடிகள் உங்களைக் குத்துவதைப் பெரிதாக நினைக்காவிட்டால், நீங்கள் விடுதிக்குச் செல்லும் குறுகலான பாதையில் சென்று, விடுதியின் உள்புறத்தில் நடப்பதைப் பார்க்கலாம். முதல் கதவை திறந்து, நாம் உள்ளே செல்கிறோம். இங்கே சுவர்களிலும், அடுப்பின் அருகிலும், எல்லாவிதமான மருத்துவமனைக் கழிவுகளும் கிடக்கின்றன. மெத்தைகள், பழைய கிழிந்த மருத்துவ அங்கிகள், கால் சட்டைகள், நீல கோடு போட்ட சட்டைகள், எதற்கும் உதவாத காலணிகள் – எல்லாம் குவியலாக வைக்கப்பட்டு, ஒன்றுடன் ஒன்று கலந்தும், கசங்கியும், மோசமான வாடை அடித்துக்கொண்டும் இருந்தன.
நிகிதா, துருப்பிடித்த நன்னடத்தைப் பதக்கங்களை அணிந்திருந்த பழைய ராணுவ வீரன், இப்போது சுமை தூக்குபவன். அங்கிருந்த குப்பையில் படுத்துக்கொண்டு, வாயில் எப்போதும் புகையிலைக் குழாயை வைத்துக் கொண்டிருப்பான். அடிபட்டது போன்றிருந்த அவனுடைய முகத்தில் எப்போதும் கண்டிப்பும், கடுகடுப்பும் இருந்து கொண்டே இருந்தன. அவனது புருவங்கள் ஸ்டெப்பி மேய்ச்சல் நில நாய்களைப்போல பெரிதாக இருபுறமும் தொங்கியது; மூக்கு சிவப்பாக இருந்தது. குட்டையாகவும், ஒல்லியாகவும் இருந்தாலும், மிகுந்த பலசாலியாகவும், சக்தி வாய்ந்த முட்டுகளை உடையவனாகவும் இருந்தான். அவன் சாதாரண, நடைமுறை ஒழுங்கை மதிக்கும், அறிவுக் கூர்மையற்ற மனிதர்களில் ஒருவன். அவனுக்கு இடப்பட்ட கட்டளைகளைத் தட்டாமல் நிறைவேற்றும் அவன், உலகில் எல்லாவற்றையும் விட ஒழுங்கைப் பெரிதாக மதிப்பவன். அதற்காக மற்றவர்களை அடிப்பதைத் தன்னுடைய கடமையாகக் கருதுபவன். முகத்தில், நெஞ்சில், பின்னால் என்று எல்லா இடங்களிலும், எது முதலில் கிடைக்கிறதோ அங்கே கைகளால் குத்து விட்டுவிடுவான். அப்படி செய்யாவிட்டால் எங்கும் ஒழுங்கு இருக்காது என்று நம்பினான்.
அடுத்ததாக இருக்கும் பெரிய, விசாலமான அறையின் உள்ளே நுழைகிறோம். அந்த விடுதியில் வாயிலைத் தவிர அந்த அறை மட்டுமே இருந்தது. இங்கே சுவர்கள் எல்லாம் அழுக்கான நீல வண்ணப்பூச்சு அடிக்கப்பட்டிருந்தது. அறையின் மேல் உத்திரம், புகைபோக்கி இல்லாத குடிசைகளில் இருப்பதைப்போலக் கரி படர்ந்து காணப்பட்டது. குளிர்காலத்தில் அறையில் இருந்த கணப்பு அடுப்பு புகைவிடுவதால், அறை முழுவதும் புகை மண்டி இருந்தது. சன்னல்கள் உள்புறமாக இரும்பு கிராதிகள் மூலமாக மூடப்பட்டிருந்தது. மரத்தால் ஆன தரை பழுப்பாகவும், உடைந்தும், பிளந்தும் இருந்தது. அறையில் அழுகிப்போன முட்டைகோஸ் வாசமும், அணைந்து போன திரி வாடையும், பூச்சிகள், அம்மோனியா வாடையும் கலந்து அடித்தன. அறையின் உள்ளே நுழைந்ததும் நமக்கு ஏதோ மிருகங்களின் கூண்டுக்குள் வந்ததுபோல நாற்றம் மூக்கைத் துளைக்கும்.
தரையோடு சேர்த்து ஆணியால் அறையப்பட்ட படுக்கைகள் இருந்தன. நீல மருத்துவமனை அங்கிகளையும், பழைய காலத்திய இரவு தொப்பிகளை அணிந்துகொண்டும் மனிதர்கள் அவற்றில் உட்கார்ந்துகொண்டும், படுத்துக்கொண்டும் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் மனநிலை பிறழ்ந்தவர்கள்
அங்கே மொத்தம் ஐந்து பேர் இருந்தார்கள். ஒருவர் மட்டுமே உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். மற்றவர்கள் எல்லாம் கைவினைக் கலைஞர்கள். அறையின் வாசலுக்கு அருகில் இருப்பவர் – உயரமான, மெலிந்த, சிவப்பு மீசையும், கண்களில் நீருடனும் இருக்கும் தொழிலாளி. தன்னுடைய தலையைக் கைகளால் தாங்கி கொண்டிருக்கும் அவர், எப்போதும் ஒரே இடத்தைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். தலையை ஆட்டிக்கொண்டும், பெருமூச்சு விட்டுக்கொண்டும் கசப்பான புன்னகையுடனும் அவர் பகலிலும், இரவிலும் துக்கத்துடன் இருந்தார். உரையாடல்களில் அவர் எப்போதாவது மட்டுமே கலந்துகொண்டார். கேள்விகளுக்கு எப்போதும் பதில் சொல்லமாட்டார். உணவு கொடுக்கப்படும்போது, அதை இயந்திரத்தனமாக எடுத்துக்கொள்வார். வலி மிகுதியுடன், நிறுத்தாமல் தும்முவதும், அவரது மெல்லிய உருவமும், கன்னங்களின் சிவப்பும், அவர் காச நோயின் முதல் படியில் இருக்கிறார் என்பதைக் காட்டின.
அவருக்கு அடுத்ததாக ஒரு சிறிய, மிகவும் துடிப்பான வயதான மனிதர் இருந்தார். கறுப்பர்கள்போல குவிந்த தாடியும், சுருண்ட கறுப்பு முடிகளும் கொண்டிருந்தார். பகலில் அவர் அந்த வார்டின் சன்னல்களிடையே நடந்துகொண்டும், படுக்கையில் துருக்கியர்களிடையே இருப்பதுபோல சம்மணங்கால் போட்டுக்கொண்டும், வானம்பாடி பாடுவதைப்போல எல்லா நேரமும் பாதி சிரித்துக்கொண்டும், பாடிக்கொண்டும் இருப்பார். அவர் இரவில் வழிபட எழுந்திருக்கும்போதும், அவரது குழந்தைத்தனமான சந்தோஷத்தையும், துடிப்பையும் காட்டுவார். அதாவது தன்னுடைய நெஞ்சைப் படபடவென்று, தன்னுடைய கைகளால் தட்டியும், கதவுகளை விரல்களால் பிராண்டவும் செய்வார். தன்னுடைய தொப்பித் தொழிற்சாலை எரிந்து போனவுடன், பைத்தியமான யூதர் மொய்செய்கா தான் அவர்.
வார்டு எண் 6-ல் இருந்தவர்களில் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டவர் அவர் ஒருவர் மட்டுமே. சில நேரங்களில் தெருவிலும் ஒரு யார்டு தூரம் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் இருந்தவர்களில் மிகவும் மூத்தவர் என்பதால் இந்தச் சலுகை வழங்கப்பட்டிருக்கலாம். அமைதியான, யாருக்கும் தொந்தரவில்லாத, எந்தத் திறமையும் இல்லாத, நகரின் கோமாளியான அவரை மக்கள் நாய்கள் மற்றும் சிறுவர்கள் இடையே பார்த்துப் பழகியிருந்தார்கள். கிழிந்து போன அங்கியும், அசிங்கமான தொப்பியும், காலணியும், சில நேரங்களில் வெறும் காலுடனும், சில நேரங்களில் கால்சட்டை இல்லாமலும்கூடச் சுற்றிக் கொண்டிருப்பார். தெருக்களில் இருக்கும் வீடுகளின் வாயில்கள், சிறு கடைகளில் நின்று, பிச்சை கேட்பார். ஒரு இடத்தில் அவருக்கு க்வஸ் (ரஷ்ய பானம்) தருவார்கள், இன்னொரு இடத்தில் ரொட்டியும், வேறொரு இடத்தில் நாணயமும் தருவார்கள். எனவே அவர் மருத்துவமனைக்கு பணக்காரராகவும், நன்றாகச் சாப்பிட்டதாகவும் நினைத்துக்கொண்டும் திரும்புவார்.
அவர்கொண்டும் வருவதை எல்லாம் நிகிதா எடுத்துக் கொள்வான். அதையும் மிகவும் முரட்டுத்தனமாக எடுத்துக்கொள்வான். கோபத்துடன் யூதரின் சட்டை பைகளைச் சோதித்து, அவனுக்கு மருத்துவமனையின் கட்டுப்பாடுகளே முக்கியம் என்றும், அவரைத் திரும்பவும் தெருவில் செல்ல அனுமதிக்கப்போவதில்லை என்றும் மிரட்டிக் கொண்டே அவரிடம் இருப்பவற்றைப் பறித்துக்கொள்வான்.
மொய்செய்கா மற்றவர்களுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வார். அவருடன் இருப்பவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பார்; அவர்கள் உறங்கும்போது போர்வையால் போர்த்திவிடுவார். அவர்களுக்குத் தன்னுடைய கோபெக் நாணயத்தைக்கொண்டும் புதிய தொப்பி வாங்குவதாகவும் கூறுவார். அவரது இடதுபுறத்தில் இருக்கும், பக்கவாதம் வந்தவருக்கு உணவைக் கரண்டியில் ஊட்டி விடுவார். அவர் இப்படி நடந்து கொள்வது அன்பினாலோ வேறு எதுவும் மனிதத்தன்மை கொண்டோ அல்ல. அவருக்கு வலதுபுறத்தில் இருந்த குரோமோவ் செய்வதை அப்படியே செய்வார். அதுதான் அவர் அவ்வாறு நடந்து கொள்வதன் காரணம்.
முப்பத்தி மூன்று வயதான, கனவான் குடும்பத்தில் பிறந்த இவான் டிமிட்ரிட்ச் குரோமோவ், நீதிமன்றத்தில் வேலை பார்த்தவர். பிரதேச நிர்வாகக் குழுவிலும் இருந்தவர். அவர் தன்னை யாரோ கொடுமைப்படுத்துவதாக எண்ணிக் கொண்டிருப்பவர். ஒன்று படுக்கையில் சுருண்டு படுத்துக் கொள்வார் அல்லது ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு நடைப்பயிற்சிபோல நடந்து கொண்டிருப்பார். அவர் உட்கார்வதே இல்லை. எப்போதும் உணர்ச்சிவசப்பட்டும், ஏதோ ஒரு தெரியாத, புரியாத எதிர்பார்ப்புகளுடன் அங்கே இருப்பதுபோல இருந்தார். வாயிலிலோ வெளியிலோ சிறிய சத்தம் கேட்டாலும் உடனே தலையைத் தூக்கி, கேட்க ஆரம்பித்துவிடுவார். ஒன்று அவரைப் பிடிக்க வரவேண்டும் அல்லது அவரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது அவருடைய நினைப்பு. அது போன்ற நேரங்களில், அவரது முகத்தில் தாங்க முடியாத வெறுப்பையும் மன உளைச்சலையும் காணலாம்.
வெளிறியும் மகிழ்ச்சியின்றியும் இருக்கும் உயரமான தாடைகொண்ட அவருடைய அகலமான முகத்தை எனக்குப் பிடிக்கும். அவை கண்ணாடிபோலப் பிரதிபலிக்கும் அவரது ஆன்மாவின் முரண்பாடுகள், பல காலமாக அது சந்திக்கும் பயங்கரங்கள் எல்லாமே பிடிக்கும். அவரது சிரிப்புகள் வினோதமாகவும், அசாதாரணமானதாகவும் இருக்கும். அவரது உள்ளத்தின் துன்பங்கள் முகத்தில் வரையும் கோடுகள் அவரது மேதைமையையும், உணர்வுகளையும் காட்டும். அவரது கண்களில் ஆரோக்கியமான, வெம்மையான ஒளி தெரியும். எனக்குப் பணிவுடனும், எல்லோருக்கும் உதவியாக இருக்க விரும்பும் அவரைப் பிடிக்கும். நிகிதா தவிர அனைவரிடமும் அவர் மிகவும் அன்பாகவும் நடந்துகொண்டார். யாரும் தங்களது கைகளில் இருந்து பொத்தான்களையோ, கரண்டியையோ கீழே போட்டுவிட்டால், அவரது படுக்கையில் இருந்து எழுந்து அதை எடுத்துக் கொடுப்பார். ஒவ்வொரு நாளும் அனைவருக்கும் காலை வணக்கம் வைப்பார். படுக்கைக்குச் செல்லும்போது அனைவருக்கும் நல்லிரவு கூறுவார்.
அவரது தொடர்ந்த கவனிப்புகளும் சிரிப்புகளும் தவிர, அவரது பைத்தியக்காரத்தனம் கீழே கண்டவாறும் வெளியே தெரியும். சில நாட்கள் மாலை நேரங்களில், அவர் தன்னுடைய அங்கியை உடலைச் சுற்றி மூடிக்கொண்டும், நடுங்கிகொண்டும், பற்களைக் கிட்டித்துக்கொண்டும், அறையின் மூலைகளுக்கு இடையேயும், படுக்கைகளுக்கு நடுவும் வேகமாக நடந்து கொண்டிருப்பார். அவருக்குக் கடுமையான காய்ச்சல் அடிப்பதுபோல இருக்கும். அங்கங்கே நின்று, அவர் மற்றவர்களைப் பார்ப்பதில் இருந்து அவர் எதுவோ மிகவும் முக்கியமான ஒன்றைக் கூற முயற்சி செய்கிறார் என்று தோன்றும். ஆனால் அவர்கள், தான் சொல்வதைக் கேட்க மாட்டார்கள் என்றோ அல்லது அவர்களால் புரிந்துகொள்ளமுடியாது என்றோ நினைத்து, அவரது தலையைப் பொறுமையில்லாமல் வேகமாக அசைத்துக்கொண்டு, மீண்டும் நடக்க ஆரம்பித்துவிடுவார்.
ஆனால் சீக்கிரமே பேசவேண்டும் என்ற விருப்பம் அதிகரிக்க, அவர் வேகமாகவும், உணர்ச்சிவசப்பட்டுப் பேச ஆரம்பித்துவிடுவார். அவர் பேசுவது, குழப்பத்துடன், மயக்கத்தில் பேசுவதுபோல, ஒன்றும் புரியாமல் இருந்தாலும், சில நேரங்களில் அவரது குரலில் இருந்தும், வார்த்தைகளில் இருந்தும் அவர் அருமையான ஒன்றைப் பேசுகிறார் என்று தெரிந்து கொள்ளலாம். அவர் பேசும் போதே அவரைப் பைத்தியம் என்றும், மனிதன் என்றும் தெரிந்துகொள்ளலாம். அவருடைய பேச்சை எழுத்தாக எழுதுவது கடினம். மனிதர்களின் இழிநிலை குறித்தும், நீதியை வன்முறை அழிப்பது பற்றியும், ஒரு நாள் பூமியில் வரப்போகும் சொர்க்க வாழ்வு குறித்தும், அவரை அடைத்து வைத்திருப்பவர்களின் முட்டாள்தனத்தையும் குரூரத்தையும் காட்டும் சன்னலின் இரும்பு கிராதிகள் போன்றவற்றைப் பற்றியும் பேசுவார். குழப்பமான, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்கள் என்றாலும் இன்றும் தேவையானவை தான்.
II
பன்னிரண்டு அல்லது பதினைந்து வருடங்களுக்கு முன் மிகவும் மரியாதைக்குரிய, செல்வந்தரான குரோமோவ் என்ற அதிகாரி நகரின் முக்கியமான தெருவில், தன் சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தார். அவருக்கு இரண்டு மகன்கள், செர்கெய் மற்றும் இவான். செர்கெய் நான்காம் வருடம் படித்துக் கொண்டிருந்தபோது, காச நோயால் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனான். அவனது மரணம் குரோமோவ் குடும்பத்துக்குத் திடீரென்று தொடர்ச்சியாக ஏற்பட்ட அழிவுகளில் முதலாவதாகும். செர்கெய்யின் இறுதி சடங்கு நடந்த ஒரே வாரத்தில், அவர்களது வயதான தந்தை மீது லஞ்சம் மற்றும் மோசடிக்காக வழக்கு போடப்பட்டது. சிறிது நாட்களிலேயே அவர் சிறை மருத்துவமனையில் டைபாய்டு காய்ச்சலில் இறந்து போனார். அவர்களது வீடு மற்றும் அனைத்து பொருட்களும் ஏலத்தில் விற்கப்பட்டுவிட்டன. இவான் டிமிட்ரிட்ச்சும் அவரது தாயும் வாழ்வதற்கான எந்த வசதியும் இல்லாமல் விடப்பட்டனர்.
அவரது தந்தையின் வாழ்நாளில், இவான் டிமிட்ரிட்ச், பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் படித்து வரும்போது, மாதத்துக்கு அறுபது அல்லது எழுபது ரூபிள்களை அவரது தந்தையுடன் இருந்து பெற்று வந்தார். அதனால் அவருக்கு ஏழ்மை பற்றி எதுவும் தெரியவில்லை. இப்போது அவரது வாழ்வு மிகப்பெரிய மாற்றத்தை அடைந்தது. காலையில் இருந்து மாலை வரை அவர் சில நாணயங்களுக்காக மாணவர்களுக்குப் பாடம் எடுத்தார். பக்கங்களை நகல் எடுக்கும் வேலையும் செய்தார். அவை எல்லாவற்றையும் சேர்த்து அவர் அவரது தாய்க்கு அனுப்பிவிட்டதால், அவர் பசியாகவே இருந்தார். இவான் டிமிட்ரிட்ச்சால் அப்படியான வாழ்வைத் தொடர முடியவில்லை. மனதில் இருந்த தைரியத்தை இழந்த அவர், பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேறி திரும்பவும் வீட்டுக்குச் சென்றார்.
அங்கே இருந்த மாவட்ட பள்ளியில் அவர் ஆசிரியராக விருப்பத்துடன் சேர்ந்தார். அங்கும் அவரால் மற்ற ஆசிரியர்களுடன் சரியாக பழக முடியவில்லை, மாணவர்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை என்பதால் சீக்கிரமே அந்த வேலையை விட்டுவிட்டார். அவரது தாய் மரணமடைந்தாள். அதன் பின்னர் ஆறு மாதம் எந்த வேலையும் இல்லாமல் இருந்தார். வெறும் ரொட்டி மற்றும் தண்ணீரை குடித்து வாழ்ந்தார். அதன் பின்னரே நீதிமன்றத்தில் வேலை செய்ய ஆரம்பித்தார். அவரது நோயினால் அவர் வேலையில் இருந்து நீக்கப்படும்வரை அங்கேயே வேலை செய்தார்.
மாணவனாக இருக்கும்போதும்கூட அவர் நல்ல ஆரோக்கியத்தோடு இருந்ததாகத் தெரியவில்லை. எப்போதும் மெலிந்தும், வெளிறியும், எப்போதும் சளி பிடித்துக்கொண்டும் இருப்பார்; கொஞ்சமே சாப்பிட்டு, சரியாக தூங்காமல் இருந்தார். ஒரு கோப்பை வைன் அவரை முழுவதுமாக போதையில் ஆழ்த்தியது. எப்போதும் அவருக்கு யாருடைய துணையாவது தேவைப்பட்டது. ஆனால், அவரது எரிச்சல் தரும் குணத்தாலும், சந்தேகக் குணத்தாலும் அவரால் யாருடனும் நெருங்கி பழக முடியவில்லை. அதனால் அவருக்கு நண்பர்களே இல்லை. நகரில் இருந்தவர்களைப் பற்றி எப்போதும் அவர் வெறுப்புடன் பேசி வந்தார். அவர்களது முட்டாள்தனமும், மிருகங்கள் போன்ற வாழ்வும் பயங்கரமானது என்று வெறுத்தார்.
எப்போதும் சத்தமாக, கோபத்துடன் பேசினார். அவரது பேச்சில் ஏளனமும், அவமரியாதையும் இருந்தது. இல்லையென்றால் ஆச்சர்யமும், உற்சாகமும் இருந்தது. எப்படிப் பேசினாலும் அவர் அதை மிகவும் தீவிரத்துடன் பேசினார். அவரிடம் எதைப் பற்றிப் பேசினாலும், அதை அவர் இறுதியில் ஒரே விஷயத்தில்கொண்டும் வந்து நிறுத்தினார்; நகரில் வாழ்வு மிகவும் சோம்பலாகவும், மூச்சை முட்டுவதாகவும் இருப்பதாகச் சொல்வார். அவர்களுக்கு உயர்ந்த எண்ணங்களும், ஆசைகளும் இல்லை என்றும் அவர்கள் அர்த்தமில்லாத, மோசமான வாழ்வை வன்முறை, ஏமாற்றுவேலை, ஊதாரித்தனம் முதலியவற்றுடன் வாழ்ந்து வந்தார்கள் என்றும் கூறுவார். அந்தப் பொறுக்கிகள் எல்லாம் நன்றாக உண்டும், நல்ல உடை அணிந்தும் இருக்க, நல்லவர்கள் கைக்கும், வாய்க்கும் உணவு இன்றி இருக்கிறார்கள் என்பார். அவர்களுக்குப் பள்ளி, முற்போக்குப் பத்திரிகைகள், அரங்கங்கள், பொதுக் கூட்டங்கள் என அறிவார்ந்த தேவைகள்தான் வேண்டும், சமூகம் அதன் தோல்விகளைப் பார்த்து அவற்றின் பயங்கரத்தை உணரவேண்டும்.
மனிதர்களை அவர் குறை சொல்லும்போது, அவர் பல வண்ணங்களை உபயோகப்படுத்துவார். கறுப்பும், வெள்ளையும் மட்டுமே அவர் பயன்படுத்தும் வண்ணங்கள். மற்றவற்றை உபயோகிக்க மாட்டார். மனிதர்கள் நல்லவர்கள் என்றும், பொறுக்கிகள் என்றும் மட்டுமே பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நடுவே வேறு எவரும் இல்லை. எப்போதும் பெண்களைப்பற்றியும், காதலைப்பற்றியும் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் பேசுவார். ஆனால் அவர் காதலித்ததில்லை.
அவர் எல்லாவற்றையும் பற்றி கடுமையாக விமர்சித்தாலும், அவரது பதற்றமான குணத்தையும் தாண்டி, அவரைப் பலரும் விரும்பவே செய்தார்கள். அவரை வான்யா என்று அனைவரும் அன்போடு அழைக்கத்தான் செய்வார்கள். அவரது நல்ல நாகரிகமான நடத்தையும், எப்போதும் உதவத் தயாராக இருப்பதும், அவரது நல்ல வளர்ப்பு, அவரது ஒழுக்கத்தின் தூய்மை, அவரது அழுக்கு மேலங்கி, அவரது மெலிந்த தோற்றம், அவரது குடும்பத்தின் துரதிர்ஷ்டம் போன்றவை அவர் மீது அன்பும், வருத்தமுமான உணர்வை ஏற்படுத்தியது. மேலும், அவர் நன்றாகப் படித்தும், பல புத்தகங்களை வாசித்தும் இருந்தார். நகர மக்களைப் பொறுத்தவரை அவருக்கு எல்லாம் தெரியும். நடமாடும் கலை களஞ்சியம் என்று அழைத்தார்கள்.
அவர் நிறையப் படித்திருந்தார். கிளப்பில் அமர்ந்து, தனது தாடியை நீவிக்கொண்டே அவர் புத்தகங்களையும், பத்திரிகைகளையும் வாசிப்பார். அவரது முகத்தில் இருந்து அவர் வாசிப்பதில்லை, அப்படியே அவற்றைச் சற்றும் ஜீரணிக்கக்கூட நேரம் கொடுக்காமல், முழுங்கிக்கொண்டிருக்கிறார் என்பதுபோல தெரியும். அவருக்கு எது கிடைத்தாலும், சென்ற வருடத்திய செய்தித்தாள்கள், நாட்காட்டிகள் என எல்லாவற்றையும் ஒரே அளவான ஆர்வத்தோடு வாசித்தார். வீட்டில் எப்போதும் கீழே படுத்துக்கொண்டே வாசித்துக் கொண்டிருப்பார்.
(தொடரும்)