சிறுவயதில் திரைப்படங்களுக்கு முன்னால் வரும் டைட்டில் கார்டுகள் என்றாலே பெரும் தலைவலியாக இருக்கும். சில திரைப்படங்களில் காட்சிகளின் மீது டைட்டில் கார்டுகள் வரும். சில திரைப்படங்களில் பெயர்களுக்கென்றே பிரத்யேகமாக ஒரு தனிப்பாடலை உருவாக்கியிருப்பார்கள். காதல் கோட்டை படத்தின் தொடக்கத்தில் வரும் ’காலமெல்லாம் காதல் வாழ்க’, ஜெய்ஹிந்த் படத்தில் ‘தாயின் மணிக்கொடி’, அவ்வை சண்முகி படத்தில் ‘கல்யாணம் கச்சேரி’ போன்ற பாடல்கள் உதாரணம்.
ஆனால், பெயர்களுக்காகவே ஒரு கருப்புத்திரையிலோ, அல்லது ஒரு நிலையான காட்சியிலோ சில நிமிடங்கள் பெயர்கள் ஒளிபரப்பாகும் வேளையில் கடுப்பாக இருக்கும். படத்தின் பெயர், நடிப்பவர்களின் பெயர்களைத்தாண்டி நமக்கு வேறு என்ன முக்கியமாக இருந்துவிடப்போகிறது? அல்லது, நமக்கு வேறு யாரைத்தான் தெரியும்! நிறையப் பெயர்கள் கடந்து போகும். இறுதியாக ’இசை: இளையராஜா’ என்று வருவதும், பாக்யராஜ், பாரதிராஜா, மணிவண்ணன், ஷங்கர் போன்ற பிரபலமான இயக்குநர்களின் பெயர்கள் மட்டுமே அப்போது நன்கறிந்தது.
ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, கலை, பிலிம் லேப், டப்பிங் இதெல்லாம் என்ன என்றுகூட அறியாமல், ‘இவங்கல்லாம் உன் கூட வேலை செஞ்சா, அத உன் கூட வச்சிக்க. எனக்கெதுக்கு போட்டு காமிச்சிட்டு இருக்க! இதெல்லாம் எவன் இப்போ கேட்டான்’ எனக் கடிந்துகொள்வேன். ஆனால் பின்னாளில் என் பெயரும் இதுபோன்ற டைட்டில் கார்டுகளில் வரும் என அரைஞாண் கயிறு சுற்றிய டவுசர் போட்டுக்கொண்டு, ஒழுகிய மூக்குடன் லாலிபாப் சப்பிக்கொண்டிருந்த நான் அப்போது சத்தியமாக நினைத்துக்கூடப் பார்த்திருக்கவில்லை.
காலம் மாறியது. திரைப்படங்கள் மீதிருந்த ஆர்வத்தில், காட்சித் தகவல் தொடர்புத் துறையில் (Visual Communication) சேர்கிறேன். உலக சினிமாக்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பரிச்சயமாகிறது. அப்போதுதான் பல துறைகள் இணைந்து ஒரு திரைப்படம் உருவாகிறது என்ற யதார்த்தமும், அவர்களின் கூட்டு உழைப்பும் புரிகிறது.
அதன்பிறகு நான் பார்க்கத் தொடங்கிய திரைப்படங்களில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பெயர்களுக்கும் பிறகான துறைகள் மெல்ல மெல்லப் பரிட்சியமாகத் தொடங்கின. இப்படியாகச் சில படங்கள் பார்க்கும்போது நாமே எதிர்பார்க்காமல் நமக்கு நன்கு தெரிந்த சில பெயர்கள் டைட்டில் கார்டுகளில் அகப்படும். அதாவது அவர்கள் இயக்குநர்களாவதற்கு முன்பு உதவி இயக்குநராகப் பணிபுரிந்த படங்களில் அவர்களின் பெயர்களைப் பார்க்க Nostalgic ஆக இருக்கும்.
அப்போதெல்லாம் அம்மாவை அழைத்து ‘இங்க பாரும்மா! இந்தp படத்துல இவரு பேரு வந்திருக்கு’ எனk காட்டுவேன். அவரும் ‘அட இவர் இந்தப் படத்துல எல்லாம் வேலை செஞ்சாரா?’ என ஆச்சர்யப்பட்டுப்போவார். திரைக்கலைஞர்களின் வெற்றிக்குப் பிறகு உருவாகும் பெயர்களே, எளிய மனிதர்களுக்கு அடையாளம். அதற்கு முன்பு வரை அவர்கள் எப்படியிருந்தார்கள் என்பது யாருக்கும் தெரிவதில்லை.
சில இயக்குநர்கள் அதையும் தாண்டி தங்கள் உதவி இயக்குநர்களை நடிக்கவும் வைத்திருக்கிறார்கள். பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படத்தில் வைத்தியராக வரும் பாக்யராஜ், அதே பாக்யராஜ் பின்னாளில் இயக்குநராகி இயக்கிய ‘தாவணிக்கனவுகள்’ திரைப்படத்தில் தபால்காரராக வரும் ஆர். பார்த்திபன், எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘சீதா (1990)’ திரைப்படத்தில் வரும் இயக்குநர் ஷங்கர், ராஜீவ் மேனன் இயக்கிய ‘மின்சார கனவு’ திரைப்படத்தில் வரும் கௌதம் மேனன், விக்ரமன் இயக்கிய ‘புது வசந்தம்’ திரைப்படத்தில் வாட்ச்மேனாக வரும் கே.எஸ். ரவிக்குமார், வசந்த் இயக்கிய ‘ஆசை’ திரைப்படத்தில் ஆட்டோ ஓட்டுனராக வரும் எஸ்.ஜே. சூர்யா, வெங்கட்பிரபு இயக்கிய ’சென்னை 28’ படத்தில் வரும் பா.ரஞ்சித், எழில் இயக்கிய தீபாவளி திரைப்படத்தில், போகாதே பாடலில் வரும் சுசீந்திரன் (வெண்ணிலா கபடிக்குழு) எனப் இப்பட்டியல் நீளும்.
‘புதுப்பேட்டை’ விஜய்சேதுபதி, ‘ஜோடி’ த்ரிஷா என நடிகர்களுக்கு ஒரு பட்டியல் தயார் செய்தால் அதற்கே ஒரு தனிக் கட்டுரை எழுதலாம். இவை ஒருபுறம் இருக்கட்டும். இப்படியாகத் தொடர்ந்து திரைப்படங்கள் பார்க்கத் தொடங்கிய பின்னர் சில பெயர்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் கண்களில் அகப்பட்டது.
உதாரணமாக, இசை என்றால் இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன், ஒளிப்பதிவு என்றால் பீம் சிங், படத்தொகுப்பு என்றால் பி.லெனின், வி.டி விஜயன், மக்கள் தொடர்பு என்றால் மௌனம் ரவி, கலை என்றால் தோட்டாதரணி, இப்படியாக மேலும் சில பெயர்கள்.
இவர்கள் ஒருபுறம் இருக்கட்டும். டைட்டில்களில் வரும் மற்றவர்கள் எங்கே போனார்கள்? என்ன ஆனார்கள்? என்ன செய்துகொண்டிருப்பார்கள்? இப்படி நானும் அதற்கான காரணங்கள் புரியாமல் யோசித்திருக்கிறேன். உண்மைக் காரணம் மெல்ல மெல்லப் புரியத் தொடங்கியது.
சிலர் குடும்பச் சூழல் காரணமாக வேறு தொழிலுக்குச் சென்றிருக்கலாம். காரணம், சினிமாவில் கிடைக்கும் நிலையில்லாத வருமானம். ஒரு மாதம் வேலை என்றால் அதற்கான சம்பளம் கிடைக்கும். அத்தொகை அதிகமாகக்கூட இருக்கலாம். ஆனால் அடுத்த மாதம் வேலை இருக்குமா? சம்பளம் வருமா என்றால் தெரியாது.
இப்படி ஒரு சூழலில் மனைவி, பிள்ளைகளோடு ஒரு குடும்ப அமைப்பில் வாழும் திருமணமான ஒருவரால் ஒருகட்டத்திற்கு மேல் தொடர்ந்து பணிபுரிய முடியுமா என்றால் வாய்ப்பு மிக மிகக் குறைவே. இதன் காரணமாகவே பெரும்பாலும் திரைப்படங்களில் பணிபுரிபவர்கள் திரைப்படங்கள் தவிர்த்து வேறு ஏதோ ஒரு தொழிலைக் கைவசம் வைத்துக்கொள்கிறார்கள். உதாரணமாக ஹோட்டல்கள், காபி ஷாப்கள், விளம்பர நிறுவனங்கள்.
சிலருக்குத் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம் அல்லது போட்டியில் ஓரங்கட்டப்பட்டிருக்கலாம். சினிமாவில் வெற்றியும், அதில் கிடைக்கும் பெயருக்கும் இணையாக அதன் பின்னால் தொடர்கிறது பகையும் பொறாமையும். சினிமாவின் வியாபாரம், சூட்சமம், நுட்பங்கள், தொடர்ந்து தன்னை மேம்படுத்திக்கொள்ளும் தன்மை என்று இதனையெல்லாம் அறியாத எத்தனையோ பேர் கால ஓட்டத்தில் காணாமல் போயிருக்கிறார்கள்.
குறிப்பாக பிலிம் ரோலில் இருந்து டிஜிட்டலுக்குத் தமிழ் சினிமா மாறியபோது, அதற்கேற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ள முடியாமல் நிறையப் பேர் வேலை இழந்தார்கள்.
மேலே குறிப்பிட்டபடி தொடர்ந்து வெற்றியின் படிகளில் நிற்பவர்கள் மட்டுமே மக்களின் நினைவிலும் நிற்கிறார்கள். நாட்கள் செல்லச் செல்லப் புதிது புதிதாக வரும் கலைஞர்களால் முன்பிருந்தவர்களை மக்கள் மறந்தே போய் விடுகிறார்கள் (இயக்குநர்கள் உட்பட).
மேலும், சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து சில படங்கள் பணிபுரிந்து தனக்கான வாய்ப்புக்காகத் தொடர்ந்து போராடி தன் வயதை இழந்து, குடும்பத்தை இழந்து, தன் மொத்த வாழ்க்கையைப் பறிகொடுத்த பலரின் கதைகளும் இங்குண்டு.
இந்த வரிசையில் நிறையத் தயாரிப்பாளர்களையும் சொல்லலாம். ஏ.வி.எம், சூர்யா மூவீஸ், சூப்பர் குட் பிலிம்ஸ் போன்ற அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள் தவிர்த்து திரைப்படங்கள் மீதான ஆர்வத்தில் நிறையக் கோடிகளில் படம் முதலீடு செய்து, பின்னால் போட்ட பணத்தைக்கூட எடுக்க முடியாமல் கடனை அடைக்க ஊரில் இருந்த நிலம், வீடுகளை இழந்த புது தயாரிப்பாளர்கள் நொடிந்துபோவது ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. சிலர் விட்டதைப்பிடிக்கிறேன் பேர்வழி என்று மீண்டும் ஊரில் உள்ள சொத்துக்களை விற்று திரைப்படம் எடுத்து பின்னாளில் காணாமல்போன கதைகளும் இங்குண்டு.
ஆனால் அத்தனைக்குப்பிறகும் ஒரு பூ பூக்கும் என்ற பிரபஞ்சனின் வரிகளைப்போல, ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு வந்துகொண்டேதான் இருக்கிறார்கள்.
சிலர் வயது காரணமாகவோ, உடல் நலன் காரணமாகவோ சினிமாவை விட்டுப்போயிருக்கலாம். ‘என் உயிர் தோழன்’ திரைப்படத்தில் நடித்த நாயகன் பாபு ஒரு விபத்திற்குக் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சையின் மூலம் படுக்கையில் முடக்கப்பட்டு, 30 ஆண்டுகளாக உயிருக்குப் போராடி இறந்த கதை உட்படத் தமிழ் சினிமா தன்னுள் புதைத்து வைத்திருக்கும் உருக்கமான கதைகள் ஏராளம்.
கற்றது தமிழ் திரைப்படத்தில் ஒரு காட்சி.
மாதம் 2,000 ரூபாய் சம்பளத்திற்குத் தமிழ் வாத்தியாராகப் பணிபுரியும் பிரபாகரன் (ஜீவா), தன்னோடு கல்லூரியில் முதுகலை தமிழ் படித்த ஒருவன் ரயிலில் கர்சீப் விற்பதைப் பார்க்கிறான். வேலை எதுவும் கிடைக்காததால் கடைசியில் இப்படி ஒரு நிலைக்கு வந்துவிட்டதாகக் கண்ணீருடன் விடைபெறுகிறான் நண்பன்.
அதைக்கண்டு மனம் புழுங்கும் பிரபாகரன், தமிழ் முதுகலை படித்த முப்பது பேரில் மூன்று பேருக்குத் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த பிரிவில் வேலை கிடைத்ததாகவும், மீதி 26 பேர் தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பெயர்களில் வெளியே சொல்ல முடியாத வேலைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் வருத்தத்துடன் சொல்ல அக்காட்சி முடிவடையும்.
இப்படியாக, நாம் டைட்டில்களில் பார்த்த பல பெயர்கள் டீக்கடையில் தேனீர் கொடுக்கும் வயதான மாஸ்டராகவோ, ஏ.டி.எம் வாசல்களில் முன்னால் பார்த்த செக்யூரிட்டியாகவோ (இப்போது அவர்களும் இல்லை), பேருந்துகளில் நம் அருகில் இடித்துக்கொண்டு நிற்பவராகவோ, தள்ளுவண்டி கடைகளில் நம் அருகில் உணவருந்துபவராகவோ, மளிகைக்கடையில் நமக்குப் பின்னால் காத்திருக்கும் ஒருவராகவோ, இந்தக்கட்டுரையை வாசிக்கும் உங்களில் ஒருவராகவோகூட இருக்கலாம்.
0