இந்தியா பல்வேறு பிரதேசங்களை, கலாசாரங்களை, சமூகங்களை ஒன்றாக இணைத்துக் கட்டியதொரு பொட்டலம். ‘பன்மைத்துவம்’தான் இந்தியாவின் பிரத்யேக பெருமை எனப்படுகிறது, இல்லையா? எனில் வரலாறு, கலை, இலக்கியம், அதிகாரம், அரசியல் என்று ஒவ்வொரு துறையிலும் இதன் பிரதிநிதித்துவமும் பிரதிபலிப்பும் இருப்பதுதானே நியாயம்? யதார்த்தத்தில் அவ்வாறு இருக்கிறதா?
இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய வலிமையான ஊடகம் சினிமா. வெகுசனப் பரப்பை இந்த அளவுக்கு வசீகரிக்கக்கூடிய கலையும் தொழில்நுட்பமும் வேறில்லை. பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி அரசியல் அதிகாரத்தைக்கூட நடிகர்களிடம் ஒப்படைக்கும் அளவுக்கு இதன் மீதான வசீகரம் கணிசமாக உள்ளது.
இத்தனை வலிமையைக் கொண்ட ஊடகமான சினிமாவில் அனைத்துச் சமூகங்களின் கலாசார அடையாளங்களும் பதிவாகியுள்ளனவா? சிறுபான்மை சமூகங்களின் வாழ்வியல் நேர்மையாகச் சித்திரிக்கப்பட்டுள்ளதா? சினிமாவின் வரலாற்றை எளிமையாக அறிந்தவர்கள்கூட பதில் சொல்லக்கூடிய கேள்வி இது.
‘இல்லை’ என்பதே இதன் பதில்.
சமூகத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகளும் பாரபட்சங்களும் மட்டுப்படுவதற்கு தொழிற்புரட்சியும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் காரணமாக இருந்தன. இந்த வரிசையில் சினிமா என்கிற சாதனமும் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு எனலாம். சினிமாவைக் காண்பதற்கு திரையரங்குகள் உருவாகின. இங்கு கட்டண அடிப்படையில் வர்க்க வேறுபாடு இருந்தாலும், மக்கள் தங்களிடம் உறைந்திருந்த சாதி, மத வேற்றுமைகளைத் தற்காலிகமாக மறந்து ஒரு மூடப்பட்ட கூடத்தில் ஒன்றாகக் கூடுவதற்கு இந்த அரங்குகள் வழிவகுத்தன. அது ஒரு சமூக மாற்றமாகவும் இருந்தது. சமூகநீதி தெளிவாக வெளிப்பட்ட இடமாகத் திரையரங்குகளைச் சொல்லலாம். நகரமயமாக்கலும் இந்தச் சூழலுக்கு உகந்ததாக இருந்தது; மாற்றத்துக்குக் காரணமாக இருந்தது.
சாதியால் மறுக்கப்பட்ட அங்கீகாரம்
ஆனால் இந்த மாற்றத்தின் ஆரம்பக்காலப் பயணம் அத்தனை எளிதாக இல்லை. ஒரு முக்கியமான உதாரணத்தைப் பார்ப்போம். திருவிதாங்கூரைச் சேர்ந்த ஜே.சி.டானியலுக்கு திரைப்படக்கலையின் மீது ஆர்வம் பிறக்கிறது. அப்போது சென்னைதான் தென்னிந்திய சினிமாக்களின் மையம். இங்கு வந்து சினிமாவைக் கற்க முனைகிறார். ஆனால் அந்தச் சந்தர்ப்பங்கள் வெற்றிகரமாக அமையவில்லை. எனவே, மும்பைக்குச் சென்று சினிமா உருவாக்கத்தைப் பற்றி அறிந்து கொள்கிறார். பிறகு கேரளத்துக்குத் திரும்பிய அவர், ‘தி திருவிதாங்கூர் நேஷனல் பிக்சர்ஸ்’ என்கிற பெயரில் சொந்த சினிமா ஸ்டூடியோவை உருவாக்குகிறார். தன்னிடமிருந்த நிலத்தை விற்று சினிமா எடுக்க ஆரம்பிக்கிறார்.
இதில் பெண் வேடத்தில் நடிப்பதற்கு ஆட்கள் கிடைப்பது அரிதானதாக இருந்தது. நாடகத்தில் ஆண்களே ‘ஸ்திரிபார்ட்’ வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்த காலம் அது. பெண்கள் நடிப்பது விபச்சாரத்துக்கு இணையாகக் கருதப்பட்டது. மிகவும் சிரமப்பட்டு பி.கே.ரோசி என்பவரை அழைத்து வருகிறார். பல நடைமுறைச் சிரமங்களுக்குப் பிறகு படம் வெளியாகிறது. ஆனால் இதைத் திரையிடும்போது கலவரமும் திரையைச் சேதப்படுத்தலும் நடந்தது. காரணம், பி.கே.ரோசி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண். ‘இவர் எப்படி ‘நாயர்’ பெண்ணாக திரைப்படத்தில் நடிக்க முடியும்?’ என்கிற நோக்கில் இந்த எதிர்ப்புகள் எழுந்தன. திரையரங்கத்துக்கு வர முயன்ற ரோசி, சாதி இந்துக்களால் தாக்கப்பட்டு துரத்தியடிக்கப்பட்டார். தான் நாயகியாக நடித்த திரைப்படத்தை அவரே பார்க்க முடியாத நிலைமை. இவர்தான் மலையாள சினிமாவின் முதல் நடிகை.
‘விகேதகுமாரன்’ என்கிற அந்த ஊமைப்படம் 1930-ல் வெளியானது. கதை, இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பல பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட ஜே.சி.டானியல் பொருளாதார ரீதியான நஷ்டங்களைச் சந்தித்து பிறகு பல்மருத்துவராக பாளையங்கோட்டை, மதுரை போன்ற ஊர்களில் காலத்தைக் கழித்தார். ‘விகேதகுமாரன்’தான் மலையாளத்தின் முதல் திரைப்படம். ஆனால் இந்த அங்கீகாரத்தைத் தருவதற்கு கேரள அரசு முதலில் மறுத்துவிட்டது. ஜே.சி.டானியல், தமிழ் கிறிஸ்துவராகவும் நாடாராகவும் இருந்ததே இதற்குக் காரணம். அப்போது ஐஏஎஸ் அதிகாரியாகவும் எழுத்தாளருமாக இருந்த மலையத்தூர் ராமகிருஷ்ணன் மற்றும் கே. கருணாகரன் உள்ளிட்டவர்கள் இந்த அங்கீகார மறுப்புக்குக் காரணமாக இருந்தார்கள்.
தாமதமாகக் கிடைக்கும் நீதி, அநீதிக்கு இணையானது
எழுத்தாளர் என்.எஸ்.மாதவன் உள்ளிட்டவர்கள், டேனியலின் பங்களிப்பைத் தொடர்ந்து வலியுறுத்தினார்கள். இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக, டேனியல் இறந்து நீண்டகாலத்துக்குப் பிறகு 1992-ல் ஜே.சி.டானியல் பெயரில் விருது ஒன்றை கேரள அரசு ஏற்படுத்தியது. மலையாள சினிமாவின் தந்தையாகவும் அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டார். டேனியலின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்யும் வகையில் 2013-ல் கமல் எழுதி இயக்கிய ‘செல்லூலாயிட்’ என்கிற மலையாளத் திரைப்படத்தில் இந்த உண்மைச் சம்பவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
புலையர் இனத்தில் பிறந்த ரோசிக்கு இயற்கையிலேயே நடிப்பார்வம் இருந்தது. டேனியல் இவரைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே நாடகங்களில் நடித்து அனுபவமிக்க நடிகையாக இருந்தார். வறுமையில் உழன்ற இவர்களின் குடும்பம் கிறிஸ்துவத்துக்கு மாறியது. ‘ராஜம்மா’, ரோசம்மாவாக மாறினார். மலையாளத் திரைப்படத்தின் முதல் நடிகையான ரோசியால், தான் நடித்த படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காமல் துரத்தியடிக்கப்பட்டதால், தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு லாரி டிரைவரை மணந்து வாழ்க்கையைக் கழித்தார்.
வினு ஆபிரகாமின் ‘நஷ்ட நாயிகா’, ரோசியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. ‘தி லாஸ்ட் சைல்ட்’, ‘இது ரோசியுடெ கதா’ ஆகிய இரண்டு திரைப்படங்களையும் இதில் சேர்க்கலாம். மலையாள சினிமாவின் முதல் பெண் நடிகை என்ற பெருமையைப் பெற்ற பி.கே.ரோசியின் 120-வது பிறந்தநாளை கெளரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுலை சமீபத்தில் உருவாக்கியது.
ஆக… ஒரு பிரதேசத்தில், புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி முன்னோடிகளாக இருந்தவர்களையும் பங்கேற்றவர்களையும் அங்கீகரிக்கவிடாமல் தடுத்ததற்கு காரணம் எது? ஜே.சி.டானியலும் பி.கே.ரோசியும் தகுந்த நேரத்தில் பாராட்டப்படாமல் இருந்ததற்கு காரணம் சாதியமும் மதமும். அவர்கள் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த காரணத்தினாலும் மதம் மாறியதாலும் அவர்களின் முயற்சிகளும் திறமைகளும் இருட்டடிப்பு செய்யப்பட்டன.
மாட்டிறைச்சியும் சர்ச்சைகளின் அரசியலும்
வெகுசனப் பரப்பை கணிசமாகச் சென்று சேரக்கூடிய சினிமா என்னும் ஊடகத்தில் சமூகத்தின் அனைத்துக் கலாசாரங்களும் பதிவாகின்றனவா என்ற கேள்வி இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். ‘மாட்டிறைச்சி’ – உலகத்தில் கணிசமான மக்களால் உண்ணப்படும் இந்த உணவும் பழக்கமும் இந்தியாவில் மட்டும் அரசியலாக மாற்றப்பட்டுள்ளது. இதன் பின்னே நீண்ட வரலாறு உள்ளது. இந்தியாவில் பழங்காலம் தொட்டே மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் இருப்பதற்கு பிராமணிய, புத்த, சமண நூல்களில் சான்றுகள் உள்ளன. D.N.Jha எழுதிய ‘Myth of the Holy Cow’ என்னும் நூலில் இது தொடர்பான விரிவான தகவல்கள் உள்ளன.
வேதகாலத்தில் யாகங்களில் பசுக்கள் பலியிடப்பட்டிருக்கின்றன. ‘அசுவமேத யாகத்’தில் அறுநூறு விலங்குகளும் பறவைகளும் கொல்லப்படும்; அப்படிக் கொல்லப்பட்ட பின் பலியிடுதலின் நிறைவைக் குறிப்பிடும் வகையில் 21 பசுக்கள் கொல்லப்படும். பசு உணவாக எடுத்துக் கொள்ளப்பட்டதற்கும் விருந்தினர்களுக்கு அளிக்கப்பட்டதற்கும் சான்றுகள் இருக்கின்றன.
சமணர்களையும் பார்ப்பனர்களையும் மதிக்கும் பொருட்டு பசுக்களைக் கொல்வதற்கு முகலாயப் பேரரசர்கள் தடை விதித்தனர். மராட்டிய மன்னரான சிவாஜியும் ‘பசு கொல்லப்படக்கூடாது’ என்று அறிவித்தார். இப்படியாகத் தொடர்ந்த சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் இன்று ‘பசு வதைச் சட்டம்’, ‘பசு பாதுகாப்பு இயக்கம்’ என்று அரசியல் கருவிகளாக மாறியிருக்கின்றன. காதலர் தினத்தை ‘பசு அணைப்பு நாளாக’ கொண்டாட வேண்டும் என்று அரசின் ஒரு துறையே சமீபத்தில் அறிவிக்கும் அளவிற்கு இது நகைச்சுவையாகவும் ஆபத்தானதாகவும் பரிணமித்திருக்கிறது.
ஆதிமனிதன் வேட்டைச் சமூகமாக மாறிய பின்பு, தாவர உணவுகளுக்குப் பிறகு விலங்குகளின் இறைச்சிகளை உண்ணும் பழக்கம் ஏற்பட்டது. இந்த அடிப்படையான பழக்கம் இடையில் எவ்வாறு மாற முடியும்? ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சி உண்ணும் பழக்கம் இன்று இயல்பாக ஏற்றுக் கொள்ளப்படும்போது மாட்டிறைச்சி ஏன் அரசியல் விவாதப்பொருளாகவும் சர்ச்சையாகவும் மாற்றப்பட்டது? அதை உண்பவர்கள் கீழ்த்தர மக்களாகவும் அருவருப்பானவர்களாகவும் பார்க்கப்படும்படியான சூழல் உருவானது ஏன்?
இந்திய மக்களிடையே, மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் உயர்ந்து கொண்டே வருவதை National Sample Survey Office (NSSO) என்னும் அமைப்பின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆடு, கோழி போன்றவற்றின் விலை அதிகமாக இருப்பதால், புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்காக விலை குறைவாக உள்ள மாட்டிறைச்சியை அடித்தட்டு மக்கள் தேடி விரும்பிச் சாப்பிடுவது நடைமுறைக் காரணமாக உள்ளது.
‘மாட்டுக்கறி’ – தமிழ் சினிமாவில் ஒலிக்காத வார்த்தை
இப்படி கணிசமான சதவீத மக்களால் உண்ணப்படும் ‘மாட்டுக்கறி’ என்னும் சொல்லைப் பற்றியோ, அந்த உணவுப்பழக்கத்தைப் பற்றியோ எந்தவொரு தமிழ் சினிமாவிலாவது காட்சி மற்றும் வசனங்கள் வழியாக இதுவரை பார்த்திருக்கிறீர்களா? ஏன் இந்த உணவுப்பழக்கம் மிக கவனமாகத் தவிர்க்கப்பட்டு வந்துள்ளது?
1918-ல் தனது பயணத்தைத் துவங்கிய தமிழ் சினிமா ஏறத்தாழ தொன்னூற்று ஐந்து ஆண்டுகளைக் கடந்த பிறகுதான் 2012-ல் ‘அட்டகத்தி’ என்னும் திரைப்படத்தில் ‘மாட்டுக்கறி’ என்னும் வார்த்தை வசனத்தில் வருகிறது.
சமூகத்தின் ஒரு பகுதி மக்களிடையே உள்ள அன்றாட உணவுப்பழக்கம் தொடர்பான வார்த்தை ஏன் ‘வெடிகுண்டு’ போல் பயத்துடன் பார்க்கப்படுகிறது?
இதன் பின்னால் உள்ள நீண்ட அரசியல் சர்ச்சைகள் கவனமாகத் திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்படுகின்றன. இன்னொருபுறம் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதன்மையான இடத்தில் இருக்கிறது. இதெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே.
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிபலிப்பு தமிழ் சினிமாவில் என்றல்ல – இந்தியாவின் இதர மாநில சினிமாக்களில், ஏன் உலக சினிமாக்களிலும், எவ்வாறாக இருந்தது என்பதைப் பற்றி இந்தத் தொடரில் தொடர்ந்து பேசுவோம்.
(தொடரும்)
Super