சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரைப் பற்றிய அரசியல் அறிவோ, கரிசனமோ, தெளிவான பார்வையோ, அசலான சித்திரிப்பைத் திரைப்படங்களில் ஏற்படுத்தும் நியாய உணர்வோ பெரும்பாலான தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு இருக்கிறதா என்கிற சந்தேகத்தையே ஆர்.வி.உதயகுமாரின் சமீபத்திய பேச்சு ஏற்படுத்தியிருக்கிறது. ‘குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் போது மதம் மற்றும் தேசிய அடையாளத்தை மட்டும் விண்ணப்பப் படிவத்தில் எழுதினால் போதும். சாதியைப் பற்றி ஏன் பேச வேண்டும்? அதைப் பற்றி பேசாமல் இருந்தாலே மறைந்துவிடும்’ என்று பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் வைத்த கருத்தை மீண்டும் நினைவுகூர்வோம்.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பொருளாதாரச் சமநிலையின்மையும் அதன் இடைவெளியும் அதிக அளவில் உள்ளது. வர்க்கமும் சாதியும் பின்னிப் பிணைந்துள்ளன. கல்வி மற்றும் பணியிடங்களில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு உருவாக்கித் தருவதன் மூலம் சமத்துவத்தை நோக்கி நகர முடியும் என்ற அரசியல் தீர்மானத்தின் விளைவுதான் இடஒதுக்கீடு. இதற்குப் பின் ஏராளமான போராட்டங்களும் நீண்ட வரலாறும் இருக்கின்றன. மதம், இனம், சாதி, பொருளாதாரம், பாலினம், வசிப்பிடம் போன்ற வகைமைகளில் மக்களைத் தொகுத்தால்தான் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியும்.
இடஒதுக்கீடு என்னும் அடிப்படையான உரிமை
பள்ளி மற்றும் பணியிடங்களில் சாதிச் சான்றிதழ் கேட்பதன் நோக்கம் சாதியத்தை வளர்ப்பதல்ல. அதன் மூலம் ஒடுக்கப்பட்ட பிரிவினரை அடையாளம் கண்டு அவர்களுக்கான உரிமையைப் பெற்றுத் தரமுடியும் என்பதுதான் அதன் இலக்கு. இத்தனை பெரிய அரசியல் ஏற்பாட்டை “சாதியைப் பத்திப் பேசாமல் இருந்தாலே அது ஒழிந்துவிடும்” என்கிற ஒற்றை வாக்கியத்தின் மூலம் புரிதல் இன்மையினாலோ சாதிய மேட்டிமைத்தனத்துடனோ ஒரு சினிமா இயக்குநர் சொல்வாராயின், அவர் உருவாக்கும் திரைப்படங்களின் உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கும்/இருந்திருக்கும் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
திரைப்படங்களின் உள்ளே மட்டுமல்ல; திரைப்படத்துறைக்குள்ளேயும் சாதியம் ஒரு சர்ச்சைக்குள்ளான விஷயமாக இருக்கிறது. ஆரம்ப காலக்கட்டத்தில் முற்பட்ட சாதியினரின் கையில் இருந்து சினிமா பிறகு இடைநிலைச் சாதியினரின் கைகளுக்கு மாறத் துவங்கியது. இதற்கு தமிழக அரசியலில் நடந்த மாற்றங்களும் ஒரு காரணம். பிராமணர், பிராமணரல்லாதவர் என்கிற இரு பெரும் பிரிவில், இடைநிலைச் சாதிகளுக்கு அரசியல் முக்கியத்துவம் கிடைத்ததே ஒழிய, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் நிலைமை அப்படியேதான் இருந்தது. சினிமாக்கதைகளின் உள்ளேயும் சரி, படப்பிடித்தளங்களிலும் சரி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த படைப்பாளிகள் ஒருவகையான நவீன தீண்டாமையுடனும் கள்ள மௌனத்தாலும் ஒதுக்கப்பட்டனர். இப்போது அந்தப் பிரிவினரின் அரசியல் முழக்கம் தமிழ் சினிமாவுக்குள் ஒலிக்கத் துவங்கியிருப்பது பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கிறது.
சின்னக்கவுண்டர், எஜமான், நாட்டாமை போன்ற திரைப்படங்கள் இடைநிலைச் சாதியினரின் சாதியப் பெருமிதங்களை மிகையான தொனியில் நிலைநிறுத்த முயன்றன. இப்போது தலித் அரசியலைப் பேசும் தமிழ் சினிமாக்கள் உருவாகத் துவங்கியிருப்பதல் அவர்கள் பதற்றமடையத் துவங்கியிருக்கிறார்கள். தமக்குக் கீழேயுள்ள பிரிவுகள் முன்னேறி வருவதை, ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தவர்கள் விரும்பவில்லை என்பது ஒரு கசப்பான சமூக முரண்.
சினிமாக்களில் மட்டுமல்ல; சினிமாத் துறைக்குள்ளும் இருக்கும் சாதியப் பாரபட்சம்
சாதியக் கட்சிகள் அரசியல் கட்சிகளாக உருமாறி அதிகாரத்தை நோக்கி நகரத் துவங்கிய பிறகு வெறுப்பரசியல் சார்ந்த சாதிய உரையாடல்களும் வன்முறைகளும் உக்கிரமாகப் பெருகத் துவங்கியிருக்கின்றன. எனவே இடைநிலைச் சாதியினரின் பெருமையை நிலைநிறுத்துவதோடு நின்றுவிடாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை அவதூறு செய்யும் எதிர் சினிமாக்களும் உருவாகத் துவங்கிவிட்டன. மோகன்.ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி (2020), ருத்ர தாண்டவம் (2021) போன்ற திரைப்படங்கள் இந்த வகையில் ஆபத்தான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தன. அதே இயக்குநர் இயக்கத்தில் வெளியான ‘பகாசூரன்’ திரைப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில்தான் ஆர்.வி.உதயகுமார் அவ்வாறாகப் பேசியிருக்கிறார் என்பதிலிருந்து இதன் தொடர்ச்சியை ஒருவாறாகப் புரிந்துகொள்ளமுடியும்.
ஆர்.வி.உதயகுமார்களும் கே.எஸ்.ரவிக்குமார்களும் மென்மையாகவும் தன்னிச்சையாகவும் முன்னெடுத்த சினிமாக்களின் போக்கை, மோகன்.ஜிக்கள் உக்கிரமாக நகர்த்திச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ‘ஜீன்ஸும் கூலிங்கிளாஸும் போட்டு எங்க சமூகத்து பெண்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள்’ என்று சாதியக் கட்சித் தலைவர்கள் பரப்புரை செய்யும் வெறுப்புப் பிரசாரத் தொனியை இவர்கள் அப்படியே சினிமாவில் பிரதிபலிக்கிறார்கள்.
‘பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் என்று மக்களை இருமுனை அடிப்படையில் அடையாளப்படுத்துவது, இங்குள்ள அரசியல் பேச்சாடலின் இயல்பான கூறுகளாக இயல்பாக்கப்பட்டுவிட்டதால் அது தாழ்த்தப்பட்ட அடையாளங்கள் வளர்வதற்கு ஒரு பெரிய தடையாகி வருகிறது. இந்தக் காரணத்தால்தான், பார்ப்பனர்கள் அல்லாதோர் அடையாளத்துக்கு எதிராக தலித்துகள் எழுப்பும் விமர்சனம் ஒரு பெரும் முக்கியத்துவத்தை பெறுகிறது. ஒருவகையில் பார்க்கப் போனால், ஒரு காலத்தில் பார்ப்பனிய ஆதிக்கம் எப்படி இருந்ததோ அதற்கு எதிராக வெற்றி பெற்ற பார்ப்பனர் அல்லாதவர்களின் ஆதிக்கம் அதைப்போல் மாறி விட்டது. ஆகையால் இந்த மேலாதிக்கங்களை ஒரு கறாரான விமர்சனத்துக்கு உட்படுத்துவது ஒரு முக்கியமான பிரச்னை’ என்று ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார் எம்.எஸ்.எஸ் பாண்டியன். (Brahmin and Non-Brahmin: Genealogies of the Tamil Political Present : 2006).
‘விடுதலை’ திரைப்படத்தின் பாத்திர வடிவமைப்பில் வெற்றிமாறன் சறுக்கியிருக்கிறாரா?
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அரசியலைத் தமிழ் சினிமாவில் உரையாடத் துவங்கிய இயக்குநர்களின் வரிசையில் முக்கியமான ஒருவராக வெற்றிமாறனைச் சொல்லலாம். விசாரணை, வடசென்னை, அசுரன் என்று பல முக்கியமான திரைப்படங்களை உருவாக்கி வருபவர். அவர் சமீபத்தில் உருவாக்கி வரும் திரைப்படத்தின் பெயர் ‘விடுதலை’. ஒரு போராளிக்குழுவின் தலைவருக்கும் போலீஸ் கான்ஸ்டபிளுக்கும் இடையில் நிகழும் அரசியல் ஊடாடங்களை அடிப்படையாகக் கொண்டது.
‘விடுதலை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும் போது சொன்ன ஒரு விஷயம் என்னை தனித்துக் கவனிக்க வைத்தது. படத்தில் வரும் ‘தலைமைச் செயலாளர்’ பாத்திரத்துக்கு யாரை நடிக்க வைக்கலாம் என்கிற பேச்சு வந்த போது ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ்மேனனை நடிக்க வைக்கலாம் என்று வெற்றிமாறனுக்கு யோசனை வந்திருக்கிறது. ஆனால் ‘மணிரத்னம் அழைத்தே நடிக்க மறுத்தவர், நம் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாரா?’ என்கிற தயக்கமும் கூடவே எழுந்திருக்கிறது. ஆனால் ராஜீவ் மேனனை இதற்காக அணுகிய உடனே நடிக்க அவர் ஒப்புக்கொண்டதில் வெற்றிமாறனுக்கு மகிழ்ச்சி.
இதில் கவனிக்க என்ன இருக்கிறது என்று தோன்றலாம். ஒரு காலத்தில் சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் அதிகார மட்டங்களிலும் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகமிருந்தது. சதவிகித அடிப்படையில் குறைவாக இருந்தாலும் அதிகாரத்தைக் கைப்பற்றிய இடங்களில் அவர்களே முன்னணியில் இருந்தார்கள். இந்தக் காரணத்தில்தான் பிராமணரல்லாதவர் இயக்கம் தமிழ்நாட்டில் முக்கியத்துவம் பெற்றது. நீதிக்கட்சியும் திராவிடக்கட்சிகளும் இது சார்ந்த அரசியல் எதிர்ப்பை முன்வைத்தன.
சினிமா உருவாக்கம் குறித்த பார்வைகளில் கறாரான நோக்கும் அக்கறையும் கொண்டவர் வெற்றிமாறன் என்பது அவருடைய நேர்காணல் உள்ளிட்ட விஷயங்களில் இருந்து ஒருவர் அறிந்துகொள்ள முடியும். ஒரு திரைப்படைப்புக்கு பாத்திரத் தேர்வும் நடிப்பவரின் உருவமும் வடிவமைப்பும் எத்தனை முக்கியமானது என்பதை ஒருமுறை அவர் விளக்கியதை காண முடிந்தது. இளம் இயக்குநர்களுக்கான குறும்படப் போட்டியில், ஒரு குறும்படத்தில் காவலர் வேடத்தில் நடித்தவர் அதற்குரிய சிகையலங்காரத்தைப் பின்பற்றாமல் கல்லூரி மாணவர் போல முடியை நீளமாக வைத்திருந்தார். இதற்காக சம்பந்தப்பட்ட இயக்குநரைக் கடுமையாகக் கடிந்து கொண்டார் வெற்றிமாறன். “போலீஸ் வேஷத்துல நடிக்கற ஒருத்தர் அதற்குரிய ஹேர்கட் பண்ணக்கூட தயாரா இல்லைன்னா அவரை ஏன் நடிக்க வைக்கறீங்க?” என்று கறாரான கேள்வியை முன்வைத்து இயக்குநரை நெளியவைத்தார்.
நடுவராக இருந்து இன்னொரு படைப்பைக் கறாராக அணுகுபவர், தாம் உருவாக்கும் திரைப்படங்களின் ஒவ்வொரு விஷயத்திலும் முழு சிரத்தையை அளிக்க வேண்டும். வெற்றிமாறன் அந்த உழைப்பைச் செய்யத் தயங்குவதில்லை என்பதை அவருடைய பாத்திரங்களும் வடிவமைப்புகளும் ஏற்கெனவே நிரூபித்திருக்கின்றன.
ஆனால் ‘தலைமைச் செயலாளர்’ பாத்திரம் என்றவுடன் வெள்ளை நிறமுள்ள ஒரு மனிதரை நடிக்கவைக்கவேண்டும் என்று வெற்றிமாறனின் மனதில் தன்னிச்சையான சிந்தனையை உருவாக்கியது எதுவாக இருக்கும் என்கிற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. இத்தனைக்கும் இதே படத்தில் “மனுஷனை மேலே கீழேன்னு வெச்சு பிரிக்கறது நாங்களா நீங்களா?’ என்று போராளித்தலைவர், காவல்துறை அதிகாரியிடம் கேட்பது போன்ற காட்சியும் வருகிறது.
சிறிய சிறிய முயற்சிகள்தான் பெரிய மாற்றத்தை உருவாக்கும்
‘இது தொன்னூறுகளின் காலக்கட்டத்தில் நடக்கும் கதை. எனவே அப்போதைய சூழலைப் பிரதிபலிக்கும் பாத்திரம்’ என்று பதில் வரக்கூடும். சமகாலத்தில் கூட உயர் அதிகார மட்டத்தில் பிராமண சமூகத்தினர்தானே நிறைந்திருக்கிறார்கள் என்றும் சொல்லக்கூடும் அல்லது அந்த யதார்த்த அரசியலை பிரதிபலிக்கத்தான் அப்படிப்பட்ட தோற்றத்தில் உள்ளவரைத் தேர்வு செய்தோம் என்றும் கூட சொல்லலாம். ஆனால் தனது அரசியல் பார்வையில் தெளிவு கொண்டிருக்கும் ஒருவர் வழக்கமான போக்கில் இணைந்தது ஏன் என்கிற கேள்வி எழுகிறது. ஏன் அந்தப் பாத்திரம் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் தோற்றத்தைக் கொண்டவரைப் பிரதிபலிக்கவில்லை? பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய தலைவர்கள் அந்தச் சமூகத்திலிருந்தே உருவாகிவிட்டார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.
சமீபத்திய மலையாளத் திரைப்படங்களைக் கவனித்தால் அவற்றில் சுவாரசியமான, பாத்திர வடிவமைப்புகளை உருவாக்குகிறார்கள். அதில் இயல்பான தோற்றம் கொண்டவர்களை சினிமாத்தனம் பெரிதும் இல்லாமல் நடிக்க வைக்கிறார்கள். Nna Thaan Case Kodu (2022) என்கிற மலையாளத் திரைப்படத்தில் நீதிபதியாக நடித்தவரை உதாரணம் சொல்லலாம். தமிழில் வெளிவந்த ‘கார்கி’ திரைப்படத்தில் கூட சுதா என்கிற ஒரு Trans woman-ஐ நீதிபதி பாத்திரத்தில் நடிக்க வைத்தார்கள். அவரும் தன் பங்களிப்பை அருமையாக நிறைவேற்றினார். இவ்வாறுதான் சமூகத்தில் பல மாற்றங்களைச் செய்ய முடியும். இயல்பாக்க முடியும்.
தமிழ் சினிமாவில் தலித் சமூகத்தினரின் சித்திரிப்பு முறையானதாக இல்லை என்பதைப் பற்றி இந்தத் தொடரில் உரையாடிக் கொண்டிருக்கிறோம். இது சிறிய உதாரணம்தான். என்றாலும் வெற்றிமாறன் போன்ற தெளிவான அரசியல் பார்வை கொண்டவர்கள் கூட தேய்வழக்குச் சித்திரிப்புகளில் தன்னிச்சையாக மாட்டிக் கொள்கிறார்களோ என்கிற சந்தேகத்தைச் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. அரசியல் சுரணையற்ற இயக்குநர்களும், எதிர் அரசியல் பேசும் இயக்குநர்களும் நிறைந்திருக்கும் சூழலில் வெற்றிமாறன் போன்ற அரிதான படைப்பாளர்கள்தான் இன்னமும் விழிப்பாகவும் கவனமாகவும் இருக்க வேண்டியிருக்கிறது.
0
மிக அழுத்தமான பார்வையுடன் கூடிய அருமையான எழுத்தாக்கம்… சுரேஷ் கண்ணனின் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய எழுத்துகளுக்கு எப்போதும் ரசிகை.. நன்றி 🙏❤️
. ‘மணிரத்னம் அழைத்தே நடிக்க மறுத்தவர், ‘ இது மணிரத்தினம் மேல் சாதி என்பதால் அல்ல. அவர் ஒரு தலை சிறந்த இயக்குனர். மேலும் ராஜிவ் மேனன் நடிக்க மறுத்தது அவை ஒளிப்பதிவாளர் என்ற ஒரு தனித்துவத்தை இழக்கக் கூடும் [ பார்க்க ; ஜெயமோகன் பதிவு ] என்பதாலும் இருக்கலாம்.
மேலும் சினிமா ஒரு வணிகம். அதில் முதலீடு வருமா அல்லது கருப்பு /வெளுப்பு – கவனிக்கப் படுமா ?