Skip to content
Home » தலித் திரைப்படங்கள் # 7 – கல்வி நிலையங்களில் சாதியம்

தலித் திரைப்படங்கள் # 7 – கல்வி நிலையங்களில் சாதியம்

Quota - The Reservation

இடஒதுக்கீடு என்பது சலுகையல்ல; அது பிரதிநிதித்துவ உரிமை. இடஒதுக்கீட்டுக்குப் பின் நீண்ட போராட்ட வரலாறு உள்ளது. பல்லாண்டுகளாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டிருந்த வகுப்பினருக்கு, கல்வி நிலையம் மற்றும் பணியிடங்களில் குறிப்பிட்ட சதவிகித இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதன் மூலம்தான் சமூகத்தில் சமத்துவம் மலர்வதற்கான வழி கிடைக்கும் என்பதுதான் அதன் நோக்கம். ஆனால் இடஒதுக்கீட்டின் வரலாறு தொடங்கி நூறாண்டுகளுக்குப் பின்னரும் கூட சாதிய உக்கிரத்தின் கொடுமைகள் தணியவில்லை. அது நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

இத்தனை அரும்பாடுபட்டுப் பெற்ற இடஒதுக்கீட்டின் பலனை, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் நடைமுறையில் நிம்மதியாகப் பெறமுடிகிறதா? இல்லை. கல்விநிலையம், பணியிடம், சமூகம் என்று சாதியம் என்னும் நாகம் அவர்களைத் தொடர்ந்து துரத்திக்கொண்டே வருகிறது. சமூகநீதி என்பதின் அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல், “நீ கோட்டாவின் வழியே உள்ளே நுழைந்தவன்தானே?” என்கிற அவமதிப்புடன் கூடிய கேள்விகளின் மூலம் சாதியத்தை அவர்களுக்கு நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கிறது. தங்களின் வாய்ப்பு குறைந்து போகிறதே என எரிச்சல் கொள்கிறது.

உயர்கல்வி நிலையங்களில் மாணவர்கள் ‘திடீர்’ என தற்கொலை செய்துகொள்ளும் செய்திகளை நாளிதழ்களில் அடிக்கடி வாசித்திருப்போம். தேர்வுக்கான மனஅழுத்தம், தீராத வயிற்றுவலி என்பது போன்ற காரணங்கள் ‘புலன் விசாரணையின்’ மூலமாக வெளியாகியிருக்கும். ஆனால் அவற்றில் பல மரணங்கள் ‘திடீர்’ என நிகழ்வதில்லை. அவை ‘தற்கொலை’யும் அல்ல. மாறாக தினம் தினம் சாதிய அவமதிப்புகளை எதிர்கொள்ளும் உளைச்சல் தாங்காமல், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மரணத்தை நோக்கித் தள்ளப்படும் அவலம் அது. முற்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்களால் செய்யப்படும் ‘கொலை’ என்று கூடச் சொல்லிவிடலாம்.

கல்வி நிலையங்களில் தாண்டவமாடும் சாதியம்

சஞ்சீவ் ஜைஸ்வால் இயக்கிய Quota – The Reservation (2022) என்கிற இந்தித் திரைப்படம், இத்தகைய அவலத்தை அழுத்தமாக உணத்தும்ம் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. Saurabh Rawat மருத்துவராகும் லட்சியத்துடன் இருப்பவன். படிப்பில் ஆர்வமுள்ளவனும் கூட. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் இடஒதுக்கீட்டின் மூலம் ஒரு பிரபலமான மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறது. ஆரம்ப நாளில் நிகழும் ஒரு சிறிய சம்பவம், சௌரப்பின் மருத்துவக் கனவைச் சிதைக்கப்போகிறது என்பதை அப்போது அவன் அறிந்திருக்கமாட்டான்.

‘ஏற்கெனவே நீட் தேர்வு நம்மள சாகடிக்குது. இதுல இந்த கோட்டால வந்த பசங்களால வேற நம்மளோட வாய்ப்பு இன்னமும் குறையுது” என்று முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த சீனியர் மாணவர்கள் எரிச்சல் கொள்கிறார்கள். அதில் பங்கஜ் சுக்லா என்கிற மாணவன் சிகரெட்டை சௌரப்பின் வாயில் திணித்து “புகைடா” என்று கட்டாயப்படுத்துகிறான். “எனக்கு பழக்கமில்லை” என்று சௌரப் மறுத்தும் உபயோகமில்லை. தன்னுடைய சாதிய வன்மத்தை ‘ராகிங்’ மூலம் சீனியர் மாணவன் வெளிப்படுத்துகிறான். “என்னை விடுங்க.. ப்ளீஸ்” என்று அங்கிருந்து விலகிச் செல்லும் சௌரப்பின் மீது அந்த மாணவர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள்.

உயிர்ப்பலி கேட்டுத் துரத்தும் சாதியம்

“ஒரு கீழ்ச்சாதிக்கார மாணவன் என்னை எதிர்ப்பதா?” என்று ஆத்திரமடையும் பங்கஜ், அன்றிரவு சௌரப்பின் அறைக்குச் சென்று அவனுடைய தலையில் மது பாட்டிலால் தாக்கி எச்சரித்து விட்டுச் செல்கிறான். தன் மீது எந்தத் தவறும் இல்லாத நிலையில், தான் தாக்கப்பட்டதை எண்ணி அதிர்ச்சியடையும் சௌரப், நண்பர்களின் ஆலோசனைப்படி இதைப் பற்றி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கிறான்.
“இதெல்லாம் இங்க சகஜம்ப்பா.. அவங்களை எதிர்க்க முடியாது. பேசாம விட்டுடு” என்கிற அறிவுரைதான் கிடைக்கிறது.

துறைத் தலைவரான அருண் திரிவேதியிடம் புகார் தெரிவிக்கச் செல்வதிலும் பயனில்லை. சாதிய வெறி பிடித்த அருண் திரிவேதி, புகாரை ஏற்க மறுத்ததோடு மட்டுமல்லாமல் சௌரப்பை அவமானப்படுத்தி “உன்னை மாதிரி ஆளுங்க முகத்துலயே விழிக்க எனக்கு விருப்பமில்ல. வெளியே போ” என்று துரத்தியனுப்புகிறார்.
ஆனால் கல்லூரி டீன் ரொம்ப நல்லவர். இதே விஷயத்தை நைச்சியமான சொற்களில் சொல்கிறார். “ஏற்கெனவே ரிசர்வேஷன் விஷயத்துல அவங்க ரொம்பவும் காண்டா இருக்காங்க.. ஏம்ப்பா இந்த சின்ன விஷயத்தைக் கிளர்றே?” என்று கை கழுவி விடுகிறார்.

தலித் அமைப்பைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் சௌரப்புக்கு ஆதரவாக உடன் நிற்கிறார். கல்லூரி நிர்வாகத்திடம் அவர் வந்து பேசினாலும் கூட எவ்வித பயனுமில்லை. சௌரப் மட்டுமல்ல; ஏனைய ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கும் இதே மாதிரியான அவமதிப்பு தினம் தினம் நடக்கிறது. தனது மீடியா துறை நண்பரிடம் சொல்லி இதை விவாதப் பொருளாக மாற்ற முயற்சி செய்கிறார் ராஜசேகர். அது முடியாமல் போகிறது. ஆம், மீடியாவின் அதிகாரத்தில் உள்ளவர்களும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

‘ரோஹித் வெமுலாக்கள் வெளிப்படுத்தும் அரசியல் செய்தி’

இப்படிப்பட்ட சூழலில் சௌரப்புக்கு மேலும் ஓர் அநீதி நிகழ்கிறது. படிப்பில் சிறந்து விளங்கும் சௌரப், முதல் வருட தேர்வில் தோற்றுப் போகிறான். சாதிய வெறி பிடித்த பேராசிரியரால் தோற்கடிக்கப்படுகிறான் என்பதுதான் அதன் பின்னுள்ள உண்மை. தனது மருத்துவர் கனவும் லட்சியமும் சிதைந்து போவதை சௌரப்பால் ஜீரணிக்கவே முடியவில்லை. மீண்டும் துறைத்தலைவரிடம் சென்று அழுது கெஞ்சுகிறான். “உங்க மாதிரி ஆளுங்க.. ஏன் படிக்க வர்றீங்க. உங்களாலதான் கல்லூரியோட பேரு கெட்டுப் போகுது” என்று சௌரப்பை மீண்டும் அவமதிக்கிறார் அந்தப் பேராசிரியர்.

“சௌரப் தேர்வில் தோற்றுப் போக வாய்ப்பேயில்லை. விடைத்தாள் மீண்டும் திருத்தப்பட்டால் உண்மை தெரிந்துவிடும்” என்று சக மாணவர்கள் சொல்கிறார்கள். தலித் அமைப்பைச் சேர்ந்த ராஜசேகரும் இது தொடர்பாக விடாமல் போராடுகிறார். ஒருபக்கம் மனது உடைந்தாலும் சௌரப்பும் தொடர்ந்து போராடுகிறான். ஆனால் அவனுக்கான நீதி மட்டும் கிடைப்பதில்லை. நெருக்கடியின் உச்சத்தில் தன்னையே போராட்டத்தின் விதையாக மாற்றிக்கொண்டு உயிர்தியாகம் செய்கிறான் சௌரப். ‘இனியும் இன்னொரு மாணவனுக்கு இது போன்ற அநீதி நடக்கக்கூடாது’ என்பதே தன்னுடைய மரணத்தின் மூலம் அவன் விடுக்கும் அரசியல் செய்தி.

முற்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தின் கள்ள மௌனங்களால் நிகழும் சாதியக் கொடுமைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் பெயர் பட்டியல் இறுதி டைட்டில் கார்டில் வரிசையாக வருகிறது அவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும்விதமாக இந்தப் பட்டியல் காட்டப்படுகிறது.. ரோஹித் வெமுலா, பாயல் தாத்வி முதற்கொண்டு தேசமெங்கும் பல உயிர்கள் பலியான விவரம் மாநில வாரியிலான வரிசையில் வருகிறது. தமிழ்நாட்டிலிருந்து அனிதா, அபிநாத் ஆகிய பெயர்களும் பட்டியலில் வருகின்றன.

இடஒதுக்கீட்டால் முன்னேறியவர்கள், நிறம் மாறும் அவலம்

இந்தத் திரைப்படம் தனது மையத்திலிருந்து எங்கும் விலகுவதில்லை. நிகழ்ந்த அநீதியின் பல்வேறு பரிமாணங்கள் காட்சிகளாகவும் வசனங்களாவும் படம் முழுவதும் நீண்டு கொண்டேயிருக்கின்றன.
“யாரை வேணா கேட்டுப்பாரு. தன்னோட கல்லூரிக் காலத்தைத்தான் மறக்க முடியாத இனிமையான அனுபவமாக எல்லோரும் சொல்வாங்க. ஆனா தலித் மாணவர்களுக்கு மட்டும் அது கிடையாது” என்று கசப்புணர்ச்சியுடன் தன் தோழியிடம் சொல்கிறான் சௌரப்.

தலித் அமைப்பின் தலைவரான ராஜசேகர், இடஒதுக்கீட்டின் மூலம் படித்து முன்னேறிய ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் இந்தப் பிரச்னையைக் கொண்டு செல்கிறார். அவரோ, ‘இந்த மாதிரி புகார்கள் நிறைய வருது.. பார்க்கலாம்’ என்று பிடிகொடுக்காமல் பேசி அனுப்புகிறார். வெளியே வரும் ராஜசேகர், அந்தச் சமயத்தில் சௌரப்பிடம் சொல்லும் வசனம் முக்கியமானது. “ஒடுக்கப்பட்டவங்க முன்னேறி அதிகாரமும் செல்வாக்கும் வந்த பிறகு தன்னையும் ஒரு பிராமணரா நெனச்சுக்கறாங்க. இது பெரிய பிரச்னையா இருக்குது”.
இப்படியாகப் படம் தலித்களின் மீதான விமர்சனமாகவும் அமைகிறது.

தன்னுடைய மருத்துவக் கனவு, கண் எதிரேயே பறிபோவதைக் கண்டு மனம் துடிக்கும் சௌரப்பை, ஒரு தலித் எம்.பி.யிடம் அழைத்துச் செல்கிறார் ராஜசேகர். “ஏதாச்சும் செய்யணுங்க” என்று அவர் வேண்டுகோள் வைக்க “நாம மட்டும் இப்ப ஃபவர்ல இருந்தா நடக்கறதே வேற.. பார்ப்போம் தம்பி..” என்று அவரும் கை கழுவுவது போல் பேச “நீங்க அதிகாரத்துக்கு வரதுக்குள்ள என்னை மாதிரி நிறைய மாணவர்கள் அவதிப்பட்டுக்கிட்டே இருக்கணுமா? அதுக்காகவா உங்களுக்கு வாக்களிச்சோம். ஏதாச்சும் பண்ணுங்க ப்ளீஸ்” என்று அழுகையும் கோபமுமாக வெடிக்கிறான் சௌரப்.

ஒருபக்கம் சாதியம் தருகிற நெருக்கடி, இன்னொரு பக்கம் தட்டின பக்கமெல்லாம் பாவனையுடன் மூடிக் கொள்கிற கதவுகள், இதற்கு இடையில் நசுங்கித் தவிக்கும் தன் மருத்துவர் கனவு என்று உளைச்சலின் உச்சத்தில் தன் உடலையே போராட்டத்துக்கான விதையாக இடுகிறான் சௌரப். அதன் அறுவடையை எதிர்காலம் பயிர் செய்து கொள்ளட்டும் என்பது அவனது நோக்கம்.

‘தற்கொலைதான் இதற்கு தீர்வு’ என்பது சௌரப்பின் செய்தியல்ல. அவனது மரணம் தேசிய மீடியாவில் எதிரொலிக்கிறது. செய்தி விவாத அறைகள் சூடாகின்றன. தவறிழைத்த பேராசிரியர் கைது செய்யப்படுகிறார். தேர்வுத்தாள் மீண்டும் திருத்தப்படும் போது சௌரப் தோற்கவில்லை; சாதிய வன்மம் காரணமாக வேண்டுமென்றே தோற்கடிக்கப்பட்டிருக்கிறான் என்கிற உண்மை வெளிச்சத்துக்கு வருகிறது.

சாதியம் என்பது அழுத்தப்பட்ட சமூக மனிதர்களின் குருதியை பல நூற்றாண்டுகளாக ருசித்தபடியே இருக்கிறது. நீண்ட காலமாக தொடர்கிற இந்தத் துயரம் என்று ஓயும் என்கிற கேள்வியை அழுத்தமாக கேட்டபடி நிறைவுறுகிறது இந்தத் திரைப்படம்.

(தொடர்ந்து பேசுவோம்)

பகிர:
சுரேஷ் கண்ணன்

சுரேஷ் கண்ணன்

உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை தொடர்ச்சியாக எழுதி வருபவர். அழகியல் சார்ந்த ரசனையோடு சினிமாவைப் பற்றிய உரையாடலைப் பல ஆண்டுகளாக நிகழ்த்துபவர். குமுதம், தீராநதி, உயிர்மை, காட்சிப்பிழை, அம்ருதா, பேசும் புதியசக்தி போன்ற இதழ்களில் எழுதியிருக்கிறார். விகடன் இணையத்தளத்தில் ‘பிக் பாஸ் நிகழ்ச்சி’ பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *