Skip to content
Home » தலித் திரைப்படங்கள் # 8 – அசூத் கன்யா

தலித் திரைப்படங்கள் # 8 – அசூத் கன்யா

கலையின் நோக்கம் என்பது வெறும் பொழுதுபோக்காக மட்டும் இருக்கக்கூடாது. அது மனித மனதைப் பண்படுத்துவதாகவும் அமைந்திருக்க வேண்டும். அவ்வாறு பல்வேறு வகையான பண்படுத்தல்களின் மூலம்தான் மானுட குலம் இன்றைய நாகரிக வெளிக்குப் படிப்படியாக வந்து சேர்ந்திருக்கிறது. இன்னமும் கூட, கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்றும் சமூகம் எதிர்கொள்ளும் அவலங்களுள் ஒன்று சாதியம். கண்ணுக்குத் தெரியாத கற்பிதங்களையொட்டி ஒரு மனிதனை உயர்வாகவும் இன்னொரு மனிதனைத் தாழ்வாகவும் பார்க்கும் கொடுமை இன்னமும் நம் சமூகத்தில் நீடிக்கிறது.

இந்தி மொழியின் ‘முதல் தலித் சினிமா’

தீண்டாமை என்னும் சமூக அவலத்தைப் பற்றி ஆரம்பகட்டத்திலிருந்தே இந்தியத் திரைப்படங்கள் பேசியிருக்கின்றன. இந்த நோக்கில் சாதியத்தைப் பற்றி முதலில் பேசிய இந்தித் திரைப்படம் ‘அசூத் கன்யா’ (Achhut Kannya). ‘தீண்டத்தகாத பெண்’ என்று பொருள்படும் தலைப்பைக் கொண்ட இந்தப் படம் 1936-ல் வெளிவந்தது. அதாவது இந்திய சினிமா பேச ஆரம்பித்த ஐந்தே வருடங்களில் வெளிவந்த இந்தத் திரைப்படம், உருவாக்கத்திலும் உள்ளடக்கத்திலும் சிறப்பான நேர்த்தியைக் கொண்டிருப்பதைக் காண ஆச்சரியமாக இருக்கிறது.

முற்பட்ட சாதியைச் சேர்ந்த ஓர் இளைஞனுக்கும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணுக்கும் இடையில் இளம் வயதிலிருந்தே உருவாகும் நட்பு, பிறகு மலரும் காதல், சாதிய வேற்றுமை காரணமாக ஏற்படும் பிரிவு, பிறகு நிகழும் தியாகம் போன்ற விஷயங்களை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் இயங்குகிறது. இந்திய சினிமாவின் துவக்க காலத்தைக் கட்டமைத்த இயக்குநர்களுள் ஒருவரான ஃபிரான்ஸ் ஆஸ்டன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் நாயகிகளுள் ஒருவரான தேவிகா ராணி, ‘கஸ்தூரி’ என்கிற ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளம் பெண்ணாக நடித்துள்ளார். அவருக்கு இணையாக, பல படங்களில் நடித்த அசோக்குமாருக்கு இது மூன்றாவது திரைப்படம். பாம்பே டாக்கீஸ் தயாரித்த வெற்றிப்படங்களுள் இதுவும் ஒன்று.

1900-களின் இந்தியக் கிராமம். பிராமண சாதியைச் சேர்ந்த மோகன், சாதியப் பாரபட்சம் பார்க்காமல் பிறருக்கு உதவும் நல்ல குணத்தைக் கொண்டவராக இருக்கிறார். பாம்பு கடித்து உயிர் போகும் தறுவாயில் உள்ள அவரை, துக்கியா என்கிற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் காப்பாற்றுகிறார். இருவரும் நண்பர்களாகிறார்கள். சகோதரர்களாகப் பழகத் துவங்குகிறார்கள். இதனால் மோகனின் மகன் பிரதாப்புக்கும் துக்கியாவின் மகள் கஸ்தூரிக்கும் இடையே இளம் வயதிலிருந்தே நட்பு உருவாகிறது. ஒன்றாகவே சுற்றித் திரிகிறார்கள்.

திருமண வயதை நெருங்கிய பிறகும் கஸ்தூரியோடு பிரதாப் தொடர்ந்து பழகுவது அவனது தாய்க்குப் பிடிப்பதில்லை. பிரதாப்புக்குத் திருமணம் செய்வது தொடர்பாகப் பேச்சு நடக்கிறது. பிரியத்துடன் பழகி வரும் கஸ்தூரிக்கும் பிரதாப்புக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்பது மோகன் மற்றும் துக்கியாவின் உள்ளார்ந்த விருப்பம். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமேயில்லை என்பதை இருவரும் அறிந்திருக்கிறார்கள். காரணம் இடையில் பெரும் தடையாக நிற்கும் சாதி.

அவர்களின் தந்தைகளுக்கு மட்டுமல்ல, பிரதாப்புக்கும் கஸ்தூரிக்குமே திருமணத்தின் மூலம் தாங்கள் ஒன்று சேர முடியாது என்பது நன்கு தெரிந்திருக்கிறது. அந்த நடைமுறைத் துயரத்தைத் தாண்டியும் தங்களின் நேசத்தைத் தொடர்கிறார்கள். இந்த நிலையில் பிரதாப்புக்கு அதே சாதியைச் சேர்ந்த மீரா என்கிற பெண்ணுடன் திருமணம் நடக்கிறது. தங்களின் காதல் கருகிப் போகும் சோகத்தை இருவருமே மனதினுள் புதைத்துக்கொள்கிறார்கள்.

மோகன்லால் – கஸ்தூரி – காந்திய அடையாளத்துடன் பாத்திரப் பெயர்கள்

சாதியப் பாரபட்சம் பார்க்காமல் நடந்து கொள்ளும் மோகன்லாலின் மீது அதே ஊரைச் சேர்ந்த பாபுலால் என்கிற, வைத்தியத் தொழில் பார்க்கும் நபருக்கு வஞ்சம் ஏற்படுகிறது. ’15 தலைமுறைகளாக வைத்தியம் பார்க்கும் பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவன்’ என்பதைத் தற்பெருமையுடன் சொல்லிக் கொண்டாலும் கல்வியறிவு இல்லாத கிராமத்து மக்களை ஏமாற்றி காசு சம்பாதிப்பதுதான் பாபுலாலின் நோக்கம். ஆனால் மோகன்லாலோ தனது மளிகைக் கடையின் மூலம் சரியான மருந்துகளை தந்து மக்களை நோயிலிருந்து குணப்படுத்துகிறார். ‘மோகனை எப்படியாவது பழிவாங்கவேண்டும்’ என்கிற சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்கும் பாபுலாலுக்கு ஒரு வாய்ப்பு வருகிறது.

நோய்வாய்ப்பட்டு கவலைக்கிடமாக இருக்கும் துக்கியாவை தன் வீட்டுக்குள் அழைத்து வந்து பராமரிக்கிறார் மோகன். ‘இவன் பிராமண சாதிக்கு களங்கம் விளைவிக்கிறான்’ என்று ஊர் மக்களைத் தூண்டி விட்டு மோகனின் வீட்டையும் கடையையும் எரிக்க வைக்கிறார் பாபுலால். போலீஸ் விசாரணையில் கலவரத்துக்குக் காரணம் பாபுலால் என்பது தெரிய வந்தாலும் ‘நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என்று பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுகிறார் மோகன்.

கலவரத்தில் மோகனின் மண்டை உடைபடுகிறது. நண்பனைக் காப்பாற்றுவதற்காக மருத்துவரைத் தேடி விரையும் துக்கியா, ஓடும் ரயிலை நிறுத்துவதால், ரயில்வே கிராஸிங் கார்டாக இருந்த அவரது பணி பறிபோகிறது. கஸ்தூரியின் குடும்பம் நிர்கதியாக நிற்கிறது. புதிதாகப் பணியேற்க வரும் மன்னு, கஸ்தூரியைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். கஸ்தூரியும் வேறு வழியில்லாமல் சம்மதிக்கிறாள். மன்னுவின் முதல் மனைவி இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறாள். அவள் செய்யும் சதி வேலை காரணமாக பிரதாப்பை மன்னு தாக்குகிறான். ரயில்வே கிராஸிங்கில் அவர்களது வண்டி சாய்கிறது. பலரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தன்னுயிரை கஸ்தூரி தியாகம் செய்வதோடு படம் நிறைகிறது.

தேவிகா ராணி – இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் நாயகி

ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த தேவிகா ராணி, ‘கஸ்தூரி’ என்கிற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்ணாக அருமையாக நடித்திருக்கிறார். டைட்டில் கார்டில் இவரது பெயர்தான் முதலில் வருகிறது. பிரதாப் மீதுள்ள நட்பு மற்றும் காதல், அது சாத்தியம் ஆகாத கனவு என்பதைக் கசப்புடன் ஏற்றுக்கொள்ளும் சோகம், புதிய வாழ்க்கையைச் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக் கொள்ளும் தியாகம் போன்ற உணர்வுகளைத் தனது அற்புதமான முகபாவங்களால் வெளிப்படுத்தியிருக்கிறார்.

தேவிகா ராணி

அசோக்குமார் தனது ஆரம்பகால கட்டத்தில் நடித்த வெற்றிப்படங்களுள் ஒன்று ‘அசூத் கன்யா’. பால் வடியும் முகத்துடன் ‘பிரதாப்’ என்கிற பிராமண இளைஞனாக நடித்திருந்தார் அசோக்குமார். திருமணம் ஆனதற்குப் பிறகுதான் கஸ்தூரியின் மீதுள்ள காதலின் கனத்தை உணர்கிறான் பிரதாப். ‘நானும் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்திருக்கக்கூடாதா?” என்று, கஸ்தூரியுடன் இணைய முடியாத உணர்வை நிராசையுடன் பிரதாப் வெளி்ப்படுத்துவது நெகிழ்வான காட்சிகளுள் ஒன்று. ‘அகமண முறைதான்’ சாதி நீடிப்பதற்கு ஒரு வலுவான காரணியாக இருக்கிறது’ என்று அம்பேத்கர் சொன்னதை இங்கு நினைவுகூரலாம். அவரவர்களின் சாதியை உதறி விட்டு செய்யும் திருமணங்களின் மூலம்தான், சமூகத்தின் அடுக்குகளாகப் படிந்துள்ள சாதிய உணர்வுகள் மெள்ள மெள்ள மறையும்.

நட்பு மற்றும் காதலுக்குக் குறுக்கே நிற்கும் சாதியம்

காந்தி நடத்திக் கொண்டிருந்த தீண்டாமை ஒழிப்புச் செயற்பாடுகள், ஆரம்பக் கால இந்திய சினிமாக்களிலும் பிரதிபலித்தன. சாதியப் பாரபட்சம் பார்க்காமல் செயல்படும் நபரின் பாத்திரப் பெயர் மோகன்லால். தேவிகா ராணியின் பாத்திரப் பெயர் கஸ்தூரி. மோகன்லாலாக நடித்திருக்கும் பி.எப்.பித்தவாலாவின் பங்களிப்பு அருமையாக இருக்கிறது. பிரதாப் மற்றும் கஸ்தூரியின் காதலுக்கு இணையாக, மோகன் மற்றும் துக்கியாவின் நட்பு சித்திரிக்கப்பட்டுள்ளது. பாபுலாலின் தூண்டுதலின் பேரில் ஊர் மக்கள் ஒன்றுகூடி மிரட்டினாலும் ‘எனது நண்பனை வீட்டிலிருந்து வெளியே அனுப்பமாட்டேன்’ என்று துணிச்சலாகச் சொல்கிறார் மோகன். தீண்டாமை ஒழிப்புக்காகப் பாடுபட்டவர்களில் முற்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களுக்குக் கணிசமான பங்கிருக்கிறது. அதைப் பிரதிநிதிப்படுத்துவது போல மோகன்லாலின் பாத்திரப்படைப்பு அமைந்திருக்கிறது.

சாதிய வெறி பிடித்த பாபுலாலாக நடித்திருக்கும் கிஷோரிலாலின் நடிப்பும் அருமை. டி.எஸ்.பாலையாவை நினைவுபடுத்துவது போல், தனது நயவஞ்சமான எண்ணத்தையும் தற்பெருமையையும் சிறப்பான முகபாவங்களால் வெளிப்படுத்துகிறார். தனது சாதியப் பெருமிதத்தைக் காட்டி, ஊர் மக்களை ஏமாற்றினாலும், விசாரணைக்கு வரும் காவல்துறை அதிகாரியைக் கண்டதும் கூழைக்கும்பிடு போட்டு அவர் பணிந்துவிடுவது ஒரு நுட்பமான அரசியல் காட்சி. அதிகாரத்துடன் பின்னிப்பிணைந்து விடுவதில் முற்பட்ட சாதியினர் எத்தனை தந்திரமாகச் செயல்படுவார்கள் என்பதற்கு உதாரணக்காட்சியாக இது அமைந்துள்ளது.

இந்தத் திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளவர் சரஸ்வதி தேவி. திரைத் துறையில் பெண்களின் பங்களிப்பு அரிதாக இருந்த காலக்கட்டத்தில், பிரபலமான இசையமைப்பாளராக இருந்துள்ளார் சரஸ்வதி தேவி. இந்துஸ்தானி இசையில் பாண்டித்தியம் பெற்ற இவர் ‘அசூத் கன்யா’ படத்துக்காக இசையமைத்த பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கின்றன. ‘ஏ படகுக்காரனே.. எங்கே சென்றாய்.. படகு மூழ்கிக் கொண்டிருக்கிறது. காதலில் இத்தனை துயரம் இருக்கும் என்று முன்பே தெரிந்தால் இங்கு எவருமே காதலிக்க மாட்டார்கள்’ என்கிற பொருள் வரும்படியான வரிகள் கொண்ட ஒரு பாடல், பிரதாப் மற்றும் கஸ்தூரியின் காதல் உடைந்து போவதை மனவலியுடன் விவரிக்கிறது.

பிராமண சாதியைச் சேர்ந்த மோகன் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த துக்கியா ஆகிய இருவருக்கும் இடையே ஏற்படும் நட்பு, அவர்களின் வாரிசுகளுக்கு இடையே ஏற்படும் காதல், அதனால் ஏற்படும் எதிர்ப்பு, துயரம், சோகம் போன்றவற்றை இயல்பான காட்சிகளுடன் விரியும் இந்தத் திரைப்படம், கண்ணுக்குத் தெரியாத சாதியினால் மனிதர்கள் அகவயமாகவும் புயவயமாகவும் எத்தனை துயரங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை உணர்வுபூர்வமாக பதிவு செய்திருக்கிறது. இந்தியச் சினிமாவின் ஆரம்பக் காலக்கட்டத்தில் வெளியான ‘தலித் திரைப்படம்’ என்னும் வகையில் ‘அசூத் கன்யா’ ஒரு முக்கியமான படைப்பு என்பதில் சந்தேகமில்லை.

(தொடர்ந்து பேசுவோம்)

பகிர:
nv-author-image

சுரேஷ் கண்ணன்

உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை தொடர்ச்சியாக எழுதி வருபவர். அழகியல் சார்ந்த ரசனையோடு சினிமாவைப் பற்றிய உரையாடலைப் பல ஆண்டுகளாக நிகழ்த்துபவர். குமுதம், தீராநதி, உயிர்மை, காட்சிப்பிழை, அம்ருதா, பேசும் புதியசக்தி போன்ற இதழ்களில் எழுதியிருக்கிறார். விகடன் இணையத்தளத்தில் ‘பிக் பாஸ் நிகழ்ச்சி’ பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *