ஒடுக்கப்பட்ட சமூக அடுக்குகளுக்கு உள்ளேயும் சாதியப் படிநிலை பேணப்படுகிறது என்பது கசப்பான நடைமுறை உண்மை. தான் அடிமை நிலையில் வைக்கப்பட்டிருந்தாலும், தனக்கும் கீழே ஒருவனை அடிமையாக வைத்திருப்பதில் மனித மனம் பெருமிதப்படுகிற மோசமான குணாதிசயம் இந்தியச் சமூகத்தில் இருக்கிறது. முற்பட்ட சாதிகளின் மூலம் சாதியக் கொடுமைகளைப் பல நூற்றாண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் தங்களின் அடுக்குக்கு உள்ளேயும் சாதியப் பாரபட்சங்களைக் கடுமையாகப் பின்பற்றுவது வேதனையான விஷயம்.
துயரத்தில் விழுந்திருக்கும் மனித மனதை ஆற்றுப்படுத்துவற்காக, ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்று ஒரு திரையிசைப் பாடலில் எழுதினார் கண்ணதாசன். எனில் அந்த அடுக்கின் கடைசியில் இருப்பவர், ‘எதைக் கொண்டு ஆறுதல் அடைவார்?’ என்கிற கேள்வி எழுகிறது.
விளிம்புநிலை சமூகத்துக்குள்ளும் நீங்காத சாதியம்
ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், தங்களுக்குள்ளேயே சாதியப் பாரபட்சங்களை பின்பற்றுவது ஒரு பக்கம் இருக்கட்டும்; அதை விடவும் கடுமையான சமூக நெருக்கடியில் இருக்கும் விளிம்புநிலை சமூகத்தினர்கூட சாதிய வேற்றுமைகளைப் பின்பற்றுவது இன்னமும் கொடுமை. போர் நடக்கும் பிரதேசத்திலிருந்து உயிர் தப்பும் நெருக்கடியில், இன்னொரு பிரதேசத்துக்கு புலம் பெயரும் மக்கள் சமூகம், அங்கும்கூட தனது சாதியப் படிநிலையைக் கறாராகப் பின்பற்றுதை எப்படிப் புரிந்து கொள்வது?
மைய நீரோட்டத்தில் கலக்க அனுமதிக்கப்படாமல், நெருக்கடியில் வாழும் விளிம்புநிலைச் சமூகத்தினருக்கு இடையிலேயும்கூட சாதியம் எவ்வாறு நுட்பமாக இயங்குகிறது என்பதை இந்தக் குறும்படம் மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. ‘விசித்திரக் கதைகள்’ என்று பொருள்வரும்படியான ‘அஜீப் தாஸ்தான்ஸ்’ (Ajeeb Daastaans) என்கிற குறும்படங்களின் தொகுப்புத் திரைப்படம் 2021-ல் வெளிவந்தது. நான்கு குறும்படங்கள் அடங்கிய இந்தத் தொகுப்பில் இருக்கும் ‘கீலீ பச்சீ’ (Geeli Pucchi) என்கிற குறும்படம், சமூக நெருக்கடிக்குள் இயங்குகிற மாற்றுப் பாலினத்தவர்களுக்கு இடையேயும் சாதிய வேற்றுமையுணர்வு வந்துவிடுவதை நுட்பமாகச் சுட்டிக் காட்டுகிறது.
‘Geeli Pucchi’ – நீரஜ் கய்வான் இயக்கிய குறும்படம்
பார்தி ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் பெண். ‘Data Entry Operator’ பணிக்கான கல்வித் தகுதி இருந்தாலும், அந்தப் பணி அவளுக்கு மறைமுகமாக மறுக்கப்படுகிறது. காரணம், அவள் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவள். அந்தத் தொழிற்சாலையில் இருக்கும் ஒரே பெண் அவள்தான். பார்தியின் நடை, உடை, பாவனை காரணமாக சக பணியாளர்களில் சிலர் அவளைப் பெண்ணாகவே கருதுவதில்லை. மாறாக அவளை ஆணாக சித்திரித்துக் கிண்டலடிக்கிறார்கள். இதனால் அவ்வப்போது தகராறும் நேர்கிறது.
இந்தச் சூழ்நிலையில் பிரியா ஷர்மா என்கிற பெண்ணுக்கு அந்தப் பணி அளிக்கப்படுகிறது. இதற்கும் சாதிதான் காரணம். பிரியா, பிராமண சாதியைச் சேர்ந்தவள். இதை மௌனமான கோபத்துடன் கவனிக்கிறாள் பார்தி. ‘அந்தப் பணியைச் செய்ய எனக்கு தகுதியில்லையா?’ என்று சீற்றத்துடன் கேட்கும்போது ‘உன் பெயர் பார்தி மண்டல். நீ தலித் வகுப்பைச் சேர்ந்தவள். உன் பெயருக்குப் பின்னால் எந்தவொரு முற்பட்ட சாதியின் அடையாளமும் இல்லை. அதுதான் காரணம்’ என்று ஒரு மூத்த பணியாளர் ஆற்றாமையுடன் சொல்கிறார்.
புதிதாக பணிக்குச் சேரும் பிரியா, இன்முகத்துடன் பார்திக்கு நட்புக்கரம் நீட்டுகிறாள். பார்திக்கு உள்ளே கோபம் இருந்தாலும், அந்த நட்பை அவளால் மறுக்க முடியவில்லை. மெள்ள மெள்ள இருவரும் நெருக்கமான தோழிகளாகிறார்கள். அந்தரங்கமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளத் துவங்குகிறார்கள். ‘தான் முற்பட்ட சாதியைச் சேர்ந்தவள்’ என்று பிரியாவிடம் தன்னிச்சையாகப் பொய் சொல்லிவிடுகிறாள் பார்தி.
பார்தி தனிமையில் வசிக்கும் பெண் என்பதும், தன்பாலீர்ப்பு கொண்டவள் என்பது பிறகு வரும் காட்சிகளின் வழியாக விரிகிறது. தனது முன்னாள் தோழியுடன் இருக்கும் ஓர் அந்தரங்கத் தருணம் அடங்கிய வீடியோவைக் கண்ணீருடன் பார்க்கிறாள் பார்தி. ஏறத்தாழ இதே நேரத்தில் பிரியாவும் திருமணமான பிறகு முற்றிலும் தொடர்பு அறுந்து போயிருக்கிற தனது பழைய தோழியைப் பற்றிய நினைவை பார்தியிடம் வருத்தத்துடன் பகிர்கிறாள். ஒரு தனிமையான தருணத்தில் பார்தியை முத்தமிட்டு விட்டு, பிறகு வெட்கமும் குற்றவுணர்வும் கலந்து பிரியா தவிக்க ‘இதில் ஒரு குற்றவுணர்ச்சியும் கொள்ளத் தேவையில்லை’ என்று ஆறுதல் சொல்கிறாள் பார்தி.
பார்தியைப் போலவே பிரியாவும் தன்பாலீர்ப்பு கொண்டவள் என்பது ஒரு பூடகமான காட்சியில் வெளிப்படுகிறது. தனது விருப்பமான பணி பறிபோனதற்கு காரணம் பிரியா என்கிற ஆட்சேபம் முதலில் இருந்தாலும், பிறகு அதை மறந்து உண்மையான நட்புடன் பழகத் துவங்கும் பார்தி, ஒரு கட்டத்தில், தான் சார்ந்திருக்கும் சமூகத்தைப் பற்றிய உண்மையைச் சொல்லிவிடுகிறாள். அவ்வளவுதான். இந்தக் கணத்துக்குப் பிறகு பிரியாவின் உடல்மொழியில் தலைகீழான மாற்றம் வந்து விடுகிறது. நீட்டிய கைகளை மெள்ளச் சுருக்கிக் கொள்கிறாள். முதலாளியின் அறைக்குச் செல்லும்போது ‘நீ வெளியில் காத்திரு’ என்று நுட்பமாக அவமதிப்பு செய்கிறாள்.
சாதி காரணமாக தோழியின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதைக் கோபமும் அழுகையுமாக எதிர்கொள்ளும் பார்தி, தன்னைத் தேற்றிக்கொண்டு ஒரு நுட்பமான தந்திரத்தின் மூலம் பிரியாவின் பணியைத் தட்டிப் பறித்துக் கொள்வதுடன் இந்தக் குறும்படம் நிறைகிறது.
நடிப்பால் அசத்தியிருக்கும் கொன்கனா மற்றும் அதிதி
இந்தக் குறும்படத்தை நுட்பமான உணர்வுகள் கச்சிதமாக வெளிப்படும்படியாக, சிறப்பாக இயக்கியிருக்கிறார், நீரஜ் கய்வான். இவருடைய இயக்கத்தில் ஏற்கெனவே வெளியான ‘Masaan’ என்கிற திரைப்படம், சர்வதேச அரங்குகளில் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றதோடு, தலித் திரைப்பட விழாக்களிலும் தவறாமல் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது.
‘Geeli Pucchi’ குறும்படத்தில் பார்தியாக கொன்கனா சென்னும், பிரியாவாக அதிதி ராவ் ஹைதரியும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தலைமுடியைச் சுருட்டி வாரிக் கொண்டு, ஆண் உடையில் அமர்த்தலான நடையுடன் தனது உடல்மொழியைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் கொன்கனா. பல காட்சிகளில் இவரது அபாரமான விழிகளே அருமையாக நடித்துவிடுகின்றன. தகுதியிருந்தும் சாதி காரணமாக, தான் கோரும் பணி மறுக்கப்படுவதை மௌனமாக விழுங்குவதும், அவசியமான இடங்களில் கோபப்படுவதும், பிரியாவின் நட்பைத் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்வதும், அந்தரங்கத் தருணங்களைப் பகிர்ந்து கொள்வதும் என பார்தியின் பாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கொன்கனாவுக்கு நிகராக, ஏன் சில காட்சிகளில் அவரையும் மீறி தனது நடிப்பால் அசத்தியிருக்கிறார் அதிதி. ஒரு நடுத்தர வர்க்க பிராமணப் பெண்ணின் உடல்மொழியைச் சிறப்பாகத் தந்திருக்கிறார். தயக்கம், கூச்சம், மெல்லிய அச்சம், வெள்ளந்தியான சிரிப்பு போன்ற முகபாவங்களால் தனது பாத்திரத்துக்குச் சிறப்பு சேர்த்துள்ளார். தவிர்க்க முடியாத தடுமாற்றத்துடன் பார்தியை முத்தமிட்டுவிட்டு ‘அய்யய்யோ..’ என்று சங்கடத்துடன் வெட்கப்படுவது முதல் பல காட்சிகளில் இவரின் நடிப்பு அருமை.
மாற்றுப் பாலின சமூகத்திலும் இருக்கிற சாதியம்
பார்தியும் பிரியாவும் அவரவர்களின் பிரிந்து சென்ற முன்னாள் தோழிகளை ஏக்கத்துடன் நினைவுகூர்கிறார்கள். அந்த ஏக்கமே அவர்கள் அந்தரங்கமாக நெருங்குவதற்கு காரணமாக அமைகிறது. இருவரும் தன்பாலீர்ப்பு கொண்டவர்கள் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். ‘கணவன் மீது அன்பு செலுத்த முடியவில்லை. பிரிந்துபோன தோழியின் நினைவாக இருக்கிறது’ என்று தனது குடும்ப உறவில் இணைய முடியாமல் தத்தளிக்கும் பிரியாவுக்கு ‘நீ ஒரு குழந்தைக்குத் தாயாவதுதான் பிரச்னைக்குத் தீர்வு’ என்று சொல்லும் பார்தி, அதற்குரிய ஆலோசனைகளை வழங்குகிறாள்.
ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில் பார்தி தனது சாதியை வெளிப்படுத்துவதும், அப்போது பிரியாவிடம் சட்டென்று தெரியும் உடல்மாற்றத்தைக் கண்டு அதிர்ச்சியடைவதும் சிறப்பான காட்சி. தன்பாலீர்ப்பு உடையவர்களை இன்னமும் இந்தச் சமூகம் வெறுப்புடனே பார்க்கிறது. அதை இயற்கைக்கு மாறான பாலுறவு என்றுதான் அணுகுகிறது. தன்பாலீர்ப்பு உடையவர்களுக்கு இணைகள் கிடைப்பது சிரமம். அவர்கள் தங்களை மறைத்துக்கொண்டு குறுங்குழுக்களாக இயங்கவேண்டும் அல்லது இணை கிடைக்காமல் தன் பாலியல் இச்சையை சகித்துக் கொண்டு வாழவேண்டும். இப்படியொரு நெருக்கடியில் பிரியா தவிக்கும்போது ஆறுதலான துணையாக வந்து சேர்கிறாள் பார்தி. ஆனால் அவளுடைய சாதியைப் பற்றி அறிந்ததும், அந்த அரிதான நட்பையும் நேசத்தையும் ஒரே கணத்தில் உதறி விடுகிறாள் பிரியா. நம் சமூகத்தில் சாதியம் எத்தனை ஆழமாகவும் கடினமாகவும் படிந்திருக்கிறது என்பதற்கு இந்தக் குறும்படம் ஒரு நல்ல உதாரணம்.
தனது சாதிய அடையாளம் தெரிந்தவுடன் பிரியாவிடம் வெளிப்படும் மாற்றத்தைக் கண்டு முதலில் அழுது வெடிக்கும் பார்தி, பிறகு தந்திரமாகச் செயல்பட்டு பிரியாவை பணியிலிருந்து விலக வைத்து அந்த இடத்தில், தான் அமர்ந்து கொள்கிறாள். முள்ளை முள்ளால் எடுப்பது போல, சாதியத் தந்திரத்தை அதே மாதிரியான ஆயுதத்துடன் எதிர்கொள்கிறாள் பார்தி. பிரியாவின் வீட்டுக்குச் செல்லும் போது பார்திக்கு மட்டும் ‘வேறு மாதிரியான’ கோப்பையில் தேநீர் தரப்படுகிறது. தனது வியூகத்தின் மூலம் பிரியாவின் பணியை எடுத்துக்கொண்ட வெற்றியுடன் பார்தி நிமிர்ந்து பார்க்கும் உச்சக்காட்சி அருமையானது.
நெருக்கடியான சூழலில் வாழ நேர்ந்தாலும்கூட மனிதர்கள் தங்களிடமுள்ள சாதிய உணர்வைக் கைவிடாமலிருக்கும் கசப்பான உண்மையை இந்தக் குறும்படம் மிகச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது.
(தொடர்ந்து பேசுவோம்)