முற்பட்ட சமூகங்கள், ஒடுக்கப்பட்ட சமூகங்களின்மீது சாதியப் பாரபட்சம், உழைப்புச் சுரண்டல், வன்முறை போன்றவற்றை மட்டும் நிகழ்த்துவதில்லை. தங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையிலான ஆயுதங்களாகவும் அவர்களைத் தந்திரமாக மாற்றிக் கொள்கின்றன. நாட்டுப்புறக் கலைஞர்களாக இருக்கும் இரு இளைஞர்கள், தங்கள் மீது நிகழும் சாதியரீதியிலான வன்முறை காரணமாக, கலையைத் துறந்துவி்ட்டு பதிலுக்கு வன்முறையை கையில் எடுப்பவர்களாக மாறும் சமூக அவலத்தை இந்தத் திரைப்படம் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது. தலித்தியம், அம்பேத்கரியம் ஆகிய அடையாளங்களை வெளிப்படையாக முன்வைத்து உரையாடிய முதல் தெலுங்கு தமிழ் சினிமா இது என்று கூறப்படுகிறது.
சாதிய ஒடுக்குமுறையைப்பற்றி உரையாடும் திரைப்படங்கள் அதுவரை கலைப்படங்களின் வழியாக மட்டுமே பெரும்பாலும் அழுத்தமாக நிகழ்ந்து கொண்டிருந்தன. சாதியம், உழைப்புச் சுரண்டல், பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை, அதன் பின்னுள்ள ஆணாதிக்கம், அரசியல் விழிப்புணர்வு என்று பல்வேறு அழுத்தமான இழைகள், இந்தத் திரைப்படங்களில் நுட்பமாகப் பின்னப்பட்டிருக்கும். தொன்னூறுகளில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்தது. அதுவரை கலைப்படங்களில் மட்டுமே குறுகிய வட்டத்தில் பேசப்பட்டுக் கொண்டிருந்த இந்த சித்திரிப்புகள், வெகுசன சினிமாவுக்குள்ளும் வரத் துவங்கியது. அரசியலில் நிகழ்ந்த மாற்றங்களின் பிரதிபலிப்பும் ஒரு வலுவான காரணியாக இருந்தது. இவ்வகையான திரைப்படங்களுக்கு ஒரு வணிகச் சந்தையும் மதிப்பும்கூட ஏற்பட ஆரம்பித்தது. பார்வையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அரசியல் விழிப்புணர்வும் ஒரு முக்கியமான காரணம்.
இந்த நோக்கில் தலித்திய அரசியலை, அரசியல் அடையாளங்களுடன் வெளிப்படையாகப் பேசிய முதல் தெலுங்குத் திரைப்படம் என்று ‘பலாஸ 1978’ஐ (Palasa 1978) சொல்லலாம்.
‘தேவர் மகன்’ திரைப்படத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குள் நிகழும் பங்காளிச் சண்டையின் காரணமாக உருவாகும் வன்முறைகள் சித்திரிக்கப்பட்டிருக்கும். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உதிரிகளாக, இந்தச் சண்டைக்கு இடையே பாதிக்கப்படும் அபலைகளாக மட்டுமே இதில் சித்திரிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் ‘பலாஸ 1978’ திரைப்படம் கூடுதல் பரிமாணங்களுடன் விரிந்துள்ளது. பாதிப்பைச் சந்திக்கும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பார்வையின் வழியாகவும் விரிந்துள்ளதை முக்கியமான மற்றும் அவசியமான வித்தியாசம் எனலாம்.
வன்முறைப் பாதைக்குத் தள்ளப்படும் கலைஞர்கள்
மோகன்ராவ், ரங்காராவ் ஆகிய இருவரும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும் கலைஞர்கள். கோயில்கள், திருவிழாக்கள் போன்ற இடங்களில் பாடல்களைப் பாடுவதுதான் இவர்களின் குடும்பத் தொழில்.
கடத்தல் தொழில் செய்யும் பெரிய முதலாளிக்கும் சின்ன முதலாளிக்கும் இடையே கடுமையான பகையும் போட்டியும் இருக்கிறது. பெரிய முதலாளியின் முக்கியமான பலம் பைராகி என்கிற ஆசாமி. எவராலும் வீழ்த்த முடியாத பலசாலியான பைராகி, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இரண்டு முதலாளிகளும் தங்களின் பகைக் கணக்குகளைத் தீர்த்துக் கொள்வதன் காரணமாக நிறைய மரணங்கள் நிகழ்கின்றன. இவர்களுக்கு இடையே நடக்கும் சண்டையில் இறப்பவர்களும் எளிய மக்கள்தான். சாகடிப்பவர்களும் அதே சமூகத்தின் பலசாலிகள்தான்.
பைராகியைப் போல அதிபலசாலியாக ஆவதுதான் இளைஞன் மோகன் ராவின் கனவு. இளம் வயதிலிருந்தே சாதியப் பாரபட்சங்களின் வலியை அனுபவித்து வளர்கிறான். கிணற்றில் நீர் எடுக்கும் ஒரு பிரச்னையில் ஆத்திரப்படும் மோகன்ராவ் அவமதித்தவனை நையப் புடைக்கிறான். இன்னொரு தருணத்தில் திரையரங்கில் ஒரு பெண்ணுக்கு நிகழும் சாதிய அவமதிப்பு காரணமாகப் பெரிய முதலாளியின் மகனை அடித்து, காலை உடைத்துவிடுகிறான் மோகன் ராவ்.
காவல்துறையால் கைது செய்யப்படும் மோகன்ராவை வலுக்கட்டாயமாக ஜாமீனில் எடுக்கிறார் பெரிய முதலாளி. அவனை வெளியே வரவழைத்து, பைராகியின் மூலம் கொல்வதுதான் அவரது திட்டம். ஆனால் எவராலும் வெல்ல முடியாத பைராகியை வீழ்த்திக் கொன்றுவிடுகிறான் மோகன் ராவ். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் சின்ன முதலாளி, கொலைக் குற்றத்திலிருந்து மோகன் ராவை விடுவித்து, தன் அரசியல் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார். தேர்தலில் பங்கெடுக்க வாய்ப்பு கேட்கும் மோகன் ராவின் அண்ணனை, ‘உனக்கெல்லாம் அவ்வளவு துணிச்சல் வந்துடுச்சா?’ என்று கேட்டு அடித்து மிதிக்கிறார் சின்ன முதலாளி. இதனால் சகோதரர்களுக்குள் முரண் ஏற்பட, இப்போது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வது பெரிய முதலாளியின் முறை. ரங்கா ராவைத் தன் பக்கம் சேர்த்துக் கொள்ளும் அவர் ‘உன் தம்பியை போட்டுத் தள்ளு. நான் உன்னை தேர்தலில் ஜெயிக்க வைக்கிறேன்’ என்கிறார்.
சுதாரித்துக் கொள்ளும் சகோதரர்கள் இருவரும் இணைந்து பெரிய முதலாளியைப் போட்டுத் தள்ளுகிறார்கள். எதிர்க்க முடியாத சக்தியாக வளர்கிறார்கள். இந்த வன்முறையின் தொடர்ச்சி அடுத்தடுத்த வாரிசுகளுக்கு இடையேயும் தொடர்கிறது. தந்தையைக் கொன்றது மட்டுமல்லாமல், தன் காலையும் உடைத்து முடக்கிப் போட்ட மோகன் ராவைக் கொல்ல ஆவேசப்படுகிறான், பெரிய முதலாளியின் மகன். தாயின் ஆலோசனையின்படி சின்ன முதலாளியின் குடும்பத்திடம் சமரசம் பேசுகிறான். குடும்பப் பகை தீர்ந்து அவர்களின் ஒற்றை இலக்கு, மறைந்திருக்கும் மோகன் ராவைக் கொல்வது என்பதாக அமைகிறது.
அதிகாரமும் வலிமையும் மேல் கீழாக மாறி மாறிப் பயணிக்கும் இந்தத் தொடர்ச்சியான போரில் வென்ற தரப்பு எது என்கிற கேள்வியுடன் படம் நிறைகிறது.
தலித் அரசியலைப் பேசத் துவங்கியிருக்கும் வெகுசன திரைப்படங்கள்
இயக்குநர் கருணாகுமாரின் அறிமுகத் திரைப்படமான ‘பலாஸ 1978’, எழுபதுகளின் காலக்கட்டத்தில் துவங்கி சமகாலம் வரைக்குமாக இயங்குகிறது. காலம் முன்னும் பின்னுமாக நகர்கிற திரைக்கதை சுவாரசியத்தை அதிகரித்திருக்கிறது. சுப்பிரமணியபுரம், அசுரன் போன்ற நேர்த்தியான தமிழ்த் திரைப்படங்களின் சாயலை இந்தத் திரைப்படம் கொண்டிருக்கிறது. ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டிருந்தாலும் மையத்திலிருந்து அதிகம் விலகாமல் பயணிக்கிறது. என்றாலும் படத்தின் ஆதாரமான செய்தி கடைசி சில நிமிட காட்சிகளில்தான் அழுத்தமாக வெளிப்படுகிறது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பலாசா நகரத்தின் பின்னணியில் இயங்கும் இந்தத் திரைப்படம், அதன் மொழி, கலாசாரம், வாழ்வியல் போன்றவற்றை நேர்த்தியாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறது. ‘அங்கு நடந்த உண்மையான சம்பவங்கள்தான், இந்தத் திரைப்படத்தின் உருவாக்கத்துக்குக் காரணம்’ என்கிறார் இயக்குநர். முந்திரி உற்பத்தி தொழில்தான், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த மக்களின் மிகப் பெரிய வாழ்வாதார அடிப்படை. இந்தத் திரைப்படமும் அந்தப் பின்னணியைக் கொண்டிருக்கிறது.
சாதி, வர்க்கம், வன்முறை, அதிகாரத்துக்கான போட்டி போன்றவை எவ்வாறு பிரிக்க முடியாத சக்திகளாக இயங்குகின்றன; ஒன்றோடு ஒன்று தொடர்ந்து மோதி வெல்கின்றன, தோற்கின்றன, மீண்டும் வீறு கொண்டு எழுகின்றன என்பதைப் பின்னிப் பிணையும் காட்சிகளுடன் சொல்லும் இந்தத் திரைப்படம், ஒரு வரலாற்றுக் காலக்கட்டத்தின் குறுக்கு வெட்டுச் சித்திரமாகவும் பதிவாகியுள்ளது.
இந்தப் படத்தில் நடித்தவர்கள் பெரும்பாலும் தொழில்முறை நடிகர்கள் அல்ல. குறும்படங்களில் நடித்தவர்கள். எனவே படத்தின் நிறம் இயல்பான சித்திரிப்புடன் உள்ளது. மோகன் ராவாக நடித்திருக்கும் ரக்ஷித் அட்லூரியின் பங்களிப்பு நன்றாக அமைந்துள்ளது. எவராலும் வீழ்த்த முடியாத பலசாலியான பைராகியைப்போல் ஆவதுதான் மோகன் ராமின் லட்சியம். இதனாலேயே ஊரார் எவராலும் தூக்க முடியாத ‘பைராகி கல்’லைத் தூக்கி சாதனை செய்கிறான் மோகன் ராவ்.
பெரிய முதலாளியின் விசுவாசியான பைராகி, மோகன் ராவைக் கொல்லத் திட்டமிடும் செய்தி ஊர் முழுக்கப் பரவுகிறது. ‘நீ சென்று பைராகியின் காலைப் பிடித்துக்கேட்டால் மன்னிப்பு கிடைக்கக்கூடும்’ என்று ஆலோசனை சொல்லப்படுகிறது. வேறு வழியில்லாமல் அதையே செய்ய முடிவு செய்கிறான் மோகன் ராவ். ஆனால் பைராகி மன்னிக்கத் தயாராக இல்லை. ‘இந்த ஊர் முழுக்க ஒவ்வொரு வீட்டிலும் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று பைராகி சொல்ல, ‘நீயும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்தானே? இதன் பின்னுள்ள வலி உனக்குத் தெரியாதா?’ என்று பரிதாபமாகக் கேட்கிறான் மோகன் ராவ். ஆனால் முதலாளியின் கட்டளையை மட்டுமே பிரதானமாகப் பின்பற்ற முனைகிறான் பைராகி. ஊர் மக்களிடம் மன்னிப்பு கேட்பதற்காக கிளம்பும் மோகன் ராவை, அவனது அண்ணனின் குரல் தடுத்து நிறுத்துகிறது: ‘பைராகி கல்லையே தூக்கிய உன்னால், பைராகியை வெல்ல முடியாதா?’. இதனால் மனம் மாறி பைராகியிடம் ஆவேசமாகச் சண்டையிடும் மோகன் ராவ், அவனை வெல்கிறான்.
பெரிய முதலாளியாக வருபவரின் நடிப்பு அத்தனை இயல்பாக இருக்கிறது. எந்தவொரு சர்ச்சையிலும் உடனே எதிர்வினை ஆற்றாமல் தந்திரமாக இயங்கும் முதலாளித்துவ குணாதிசயத்தை கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். ‘நாய்க்கு நாம சோறு போடறதால அது நமக்கு சமமா ஆயிடாது. அதை நாம எப்படி பயன்படுத்திக்கிறோம்ன்றதுதான் முக்கியம்’ என்று இவர் சொல்லும் வசனம் யாரைக் குறிக்கிறது என்பதை விளக்கத் தேவையில்லை. சாதியப் பெருமிதமும் முதலாளித்துவ குணாதிசயமும் கலந்த சமூகமானது, தனக்குக் கீழேயுள்ள எளிய மனிதர்களை எங்கெல்லாம் தந்திரமாக அரவணைத்துச் செல்கிறது, எங்கெல்லாம் கீழே தள்ளிக் கொல்கிறது என்பது தொடர்பான காட்சிகள் இந்தத் திரைப்படத்தின் நம்பகத்தன்மையை உயர்த்துகின்றன.
வன்முறைதான் சாதியஒடுக்குமுறைக்குத் தீர்வா?
‘செபாஸ்டியன்’ என்கிற நேர்மையான காவல்துறை அதிகாரியின் பாத்திரம் படத்தின் இடையில் அதிரடியாக நுழைகிறது. முதலாளிகளின் தந்திரம், அடியாட்களின் வன்முறை ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்தி சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதுதான் இவரது நோக்கம். ஆனால் ஒரு கட்டத்தில் மோகன் ராவைப் புரிந்துகொள்கிறார். சாதிய ஒடுக்குமுறைதான் அவனை வன்முறைப் பாதையை நோக்கித் தள்ளியிருக்கிறது என்கிற நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு என்கவுன்ட்டர் செய்யாமல் வாழ அனுமதிக்கிறார். ‘கல்வியின் மூலம் இந்த நிலைக்கு நான் உயர்ந்திருக்கிறேன். எனவே நீதிமன்றத்தின் துணை கொண்டு குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை வாங்கித் தருவேன்” என்று சொல்லும் செபாஸ்டியன், தன் இளம் வயதில் இதே மாதிரியான சாதிய ஒடுக்குமுறையைச் சந்தித்தவர்.
ஆனால் எத்தனை வருடங்கள் கடந்தாலும் தன் இலக்கை செபாஸ்டியனால் அடைய முடியவில்லை. செல்வந்தர்கள் சட்டத்தின் இடுக்கில் புகுந்து தப்பித்துவிடுகிறார்கள். செபாஸ்டியனின் ஆலோசனையின்படி, வன்முறையைக் கை விட்டுவிட்டு, தனக்குத் தெரிந்த கலையை தேசமெங்கும் பரப்பச் சென்றிருக்கும் மோகன் ராவ், மீண்டும் பழிவாங்குதலுக்குத் திரும்புகிறான். சாதியச் செல்வாக்கு கொண்டவர்களை நீதியால் கூட தண்டிக்க முடிவதில்லை என்கிற யதார்த்த்தைப் படம் சொல்லியிருந்தாலும், ‘வன்முறைதான் தீர்வு’ என்பது போல் நகர்ந்திருந்ததைத் தவிர்த்திருக்கலாம்.
அந்தந்த காலக்கட்டத்தின் பின்னணி, அரசியல் அசைவுகள், மாற்றங்கள், சாதியப் படிநிலைகள் போன்றவை நேர்த்தியான காட்சிகளின் வழியாக விரிகின்றன. சொல்ல வந்த செய்தியின் மையத்தை இன்னமும் கூர்மையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் பதிவு செய்திருக்கலாம்; என்றாலும், ‘கவனிக்கத் தகுந்த தலித் திரைப்படம்’ என்கிற அடையாளத்தை ‘பலாஸ 1978’ ஏற்படுத்தத் தவறவில்லை.
0