Skip to content
Home » தலித் திரைப்படங்கள் # 11 – ஸத்கதி

தலித் திரைப்படங்கள் # 11 – ஸத்கதி

ஸத்கதி

இந்தியக் கிராமங்களில் நிலவும் சாதியக் கொடுமையை இந்தக் குறும்படத்தில் அழுத்தமாகவும் உணர்ச்சிகரமாகவும் பதிவு செய்திருக்கிறார் சத்யஜித்ரே. பிரேம்சந்த் எழுதிய ‘ஸத்கதி’ (Sadgati) என்கிற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்ட படைப்பு இது. தூர்தர்ஷன் முதன் முதலாகத் தயாரித்த இந்த 45 நிமிடக் குறும்படம், 1981-ல் வெளியாகியிருந்தாலும், சமகாலத்துக்கும் பொருந்தக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கிறது.

ஸத்கதி என்றால் ‘நல்வழி’ அல்லது ‘விடுதலை’ என்று பொருள். இறந்தவரின் ஆன்மா சாந்தியடைவதைக் குறிக்கும் சொல். இந்தப் படைப்பில் நிகழும் ஒரு மரணம், விடுதலையா அல்லது சாதியத்தால் நிகழ்ந்த கொலையா என்கிற ஆழமான கேள்வியை எழுப்புகிறது.

சாதியமும் உழைப்புச் சுரண்டலும்

‘துக்கி’ ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். தோல் பதனிடும் தொழிலைச் செய்யும் அவனுடைய மனைவி ஜூரியா. இவர்களுடைய மகளின் திருமணச் சடங்குக்காக ஒரு ‘நல்ல நாள்’ பார்க்க வேண்டும். அந்த ‘நல்ல நாளை’ அந்தக் கிராமத்திலுள்ள பிராமணர்தான் பார்த்துச் சொல்ல வேண்டும்.

காலையிலேயே கிளம்பிச் சென்று புல் வெட்டிக் கொண்டிருக்கும் துக்கியைப் பார்த்து “பிராமணர் எங்காவது சென்று விடப் போகிறார்… சீக்கிரம் கிளம்புங்கள்” என்று அவசரப்படுத்துகிறாள் ஜூரியா. “வெறுங்கையுடனா செல்ல முடியும்.?” என்று புல்கட்டை தலையில் சுமந்து நடக்க ஆரம்பிக்கிறான் துக்கி. அவன் சமீபத்தில்தான் கடும் சுரத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறான். காலையில் எதையும் சாப்பிடவில்லை. அந்தச் சோர்வுடன் கிளம்பி விடுகிறான். பிராமணர் வீட்டின் பின்புறமாகச் சென்று, அவர் வரும் வரை காத்திருந்து அவரைப் பார்த்தவுடன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிடுகிறான். என்னவென்று பிராமணர் விசாரிக்க “மகளுக்காக நாள் பார்த்து சொல்லச் சொல்லியிருந்தேனே.. சொன்னபடி நீங்கள் வீட்டுக்கு வந்தால் நன்றாக இருக்கும்” என்று சங்கடமான சிரிப்புடன் சொல்கிறான்.

பிராமணர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்கிறார். வீட்டின் வராண்டாவைத் துப்புரவாகப் பெருக்கச் சொல்கிறார். உமி மூட்டைகளை இன்னொரு இடத்துக்குக் கொண்டு போய் வைக்கச் சொல்கிறார். பசியும் சோர்வுமாக அவற்றைச் செய்து முடிக்கிறான் துக்கி. அதன் பிறகு பிராமணர் தரும் வேலைதான் அவனை மலைத்துப் போக வைக்கிறது. ஒரு பெரிய முரட்டுத்தனமான மரத்தின் பகுதியை துண்டு துண்டாக வெட்டிப் போடச் சொல்கிறார். துக்கியின் கையில் கிடைப்பதோ கூர்மையில்லாத கோடரி. அது அவனுக்குப் பழக்கப்படாத வேலையும் கூட. இன்னொரு பக்கம் சோர்வு.

‘மகளுக்கு நல்ல நாள் பார்க்க வேண்டுமே’ என்று மனதை திடப்படுத்திக் கொண்டு மரத்தை வெட்ட ஆரம்பிக்கிறான். ம்ஹூம்.. மழுங்கலான கோடரி துளி கூட இறங்கவில்லை. அப்படியே சோர்ந்து போய் மரத்தருகே அமர்கிறான். நன்று உண்டு விட்டு உறங்கி எழுந்திருக்கும் பிராமணர், வேலை நடக்காமல் நின்றிருப்பதைப் பார்த்து “இதைக் கூடவா வெட்ட முடியவில்லை? நீ செய்யாவிட்டால் நான் நல்ல நாள் பார்த்துச் சொல்லமாட்டேன்” என்று மிரட்டுவதால் மீண்டும் ஆவேசத்துடன் மரத்தை வெட்டும் துக்கி, ஒரு கணத்தில் மயங்கி விழுந்து விடுகிறான். அதன் பிறகு ஆம்… செத்தே போய் விடுகிறான்.

இதையெல்லாம் ஆத்திரத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நல்ல ஆசாமி “பசியுடன் இருப்பவனை அடாவடியாக பிராமணன் வேலை வாங்கியதால்தான் அவன் செத்துவிட்டான்” என்று துக்கியைச் சேர்ந்தவர்களிடம் சொல்ல, அவர்கள் பிணத்தை அப்புறப்படுத்த மறுத்துவிடுகிறார்கள். அவர்களால் காட்ட முடிந்த தார்மிகமான கோபம் அது.

குடிநீர் எடுக்கச் செல்லும் வழியில் துக்கியின் பிணம் இருப்பதால், இதர பிராமணர்கள் வந்து ஆட்சேபிக்கிறார்கள். வேலை வாங்கிய பிராமணனுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது. எனவே விடியற்காலையில் பிணத்தின் காலில் கயிற்றைக் கட்டி, இறந்த மிருகத்தை இழுத்துச் செல்வது போல இழுத்துச் சென்று விலங்குகளின் சடலங்கள் இருக்கும் இடத்தில் பிணத்தைப் போட்டு விடுகிறார். பிறகு அந்த இடத்தைச் சுற்றிலும் நீர் தெளித்து சுத்தம் செய்கிறார். ’துக்கி’ விட்டுச் சென்ற கோடரி, மரத்தில் குத்தி நிற்கிற காட்சியுடன் படம் மௌனமாக நிறைகிறது.

ஓம்புரி மற்றும் ஸ்மிதா பாட்டீலின் அற்புதமான நடிப்பு

துக்கியாக ஓம்புரி அற்புதமாக நடித்திருக்கிறார். ஒடுங்கிய முகமும் கலைந்த தலையும் இவரது பாத்திரத்துக்குப் பொருத்தமாக உதவி செய்திருக்கிறது. உமி மூட்டையை முதுகில் சுமந்து செல்லும்போது சுமை தாங்காமல் அதை ஒரு ஏறு ஏற்றிச் சமாளித்துச் செல்லும்போது உண்மையான சுமைக்கூலியின் உடல்மொழியை கொண்டு வந்துவிடுகிறார். ‘மனைவி இறந்து விட்டால் இன்னொரு திருமணம் செய்து கொள்’ என்று பிராமணர் உபதேசம் செய்து கொண்டிருக்கும்போது, அவரை எப்படித் தொந்தரவு செய்வது என்கிற சங்கடத்துடன் வீட்டின் வாசலில் குத்துக்காலிட்டு பரிதாபமாக அமர்ந்து கொள்கிற இடத்தில் ஓம்புரி மறைந்து துக்கியின் சித்திரம்தான் நம் கண்ணில் வந்து நிற்கிறது.

இதர வேலைகளை எப்படியோ சமாளித்து செய்து விடும் துக்கி, முரட்டு மரத்துண்டைப் பார்த்தவுடன் திகைத்து நின்று விடுகிறான். பிறகு அதை தனது எதிரியாக உருவகித்துக் கொண்டு ஆங்காரத்துடன் கோடரியை ஓங்கி ஓங்கி வெட்டும் காட்சி எடுக்கப்பட்டிருக்கும்விதம் நமக்கே மூச்சுத் திணற வைக்கிறது. மகளுக்கு நல்ல தேதி கிடைக்க வேண்டுமே என்பதற்காக அத்தனை சுமைகளையும் தாங்கிக் கொள்கிறான் துக்கி.

துக்கியின் மனைவி ஜூரியாவாக ஸ்மீதா பாட்டீல். சோகம் வழியும் கண்களும் அற்புதமான நடிப்பும் அந்தச் சிறிய பாத்திரத்துக்கு உயிர் தந்திருக்கிறது. பிராமணர் வீட்டுக்குச் செல்லக்கூடாதா என்று முதலில் அவசரப்படுத்துகிற ஜூரியா, தன் கணவனுக்கு உடல்நலம் சரியில்லை என்பதை உணர்ந்தவுடன், பெண்களுக்கேயுரிய உள்ளுணர்வுடன் ‘அப்புறம் செல்லலாமே?’ என்று எச்சரிக்கை செய்கிறாள். எவராலும் சீந்தப்படாமல் நிர்க்கதியாகக் கிடக்கும் கணவனின் பிணத்தைத் தடவிப்பார்த்து அழும் காட்சியில் ஒரு அடித்தட்டுப் பெண்ணின் கையாலாகாத நிலையை நம்மால் உணர முடிகிறது.

பிராமணராக மோகன் அகாஷே சிறப்பாக நடித்திருக்கிறார். கும்பிட்டு நிற்கும் துக்கியை ஓரக்கண்ணில் அலட்சியமாகப் பார்ப்பதும், சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொண்டு கடுமையான பணிகளை ஏவி வாங்கிக் கொள்வதும், நன்கு உண்டு விட்டு, உறங்கி எழுந்த கண்களுடன் துக்கியின் பணி பாதியில் நிற்பதைக் கண்டு கண்டிப்பதும், பிணத்தை என்ன செய்வது என்று தவிப்பதும் என்று தனது பாத்திரத்தைத் திறமையாகக் கையாண்டிருக்கிறார்.

‘நாளும் கோளும் நலிந்தவர்களுக்கு இல்லை’

வீட்டில் ஒரு மங்கல நிகழ்ச்சி நடத்த வேண்டுமென்றால் அதற்கு நல்ல நாள் பார்க்கும் வழக்கம் எப்படி வந்திருக்கும்? மனித குலம் வேட்டைச் சமூகமாக இருந்த போது இயற்கையை, வானத்தைக் கூர்ந்து கவனித்திருப்பான். சூரியனும் கோள்களும் நட்சத்திரங்களும் நகர்வதற்கேற்ப தனது அன்றாட நாளில் நிகழும் மாற்றங்களை தொடர்ந்து கவனித்திருக்கக்கூடும். உயிராபத்தோ, காயமோ ஏற்படாமல் நல்ல வேட்டை கிடைத்தால், அன்றைய நாள் நல்ல நாள். மாறாக ஏதாவது துர்சம்பவமோ, இடையூறோ ஏற்பட்டால் அது நல்ல நாள் இல்லை என்கிற எளிமையான தர்க்க முடிவுக்கு வந்திருக்கக்கூடும். இப்படித்தான் சோதிட சாஸ்திரம் வளர்ந்திருக்கும்.

வேதங்களைக் கற்றவர்கள், வேத நெறிகளை அறிந்த பிராமணர்கள் கடவுளின் நெருக்கமான பிரதிநிதிகளாக கருதப்பட்டார்கள். எனவே தங்களின் வீடுகளில் நிகழும் எந்தவொரு மங்கல நிகழ்ச்சிக்கும், அவர்கள் நாள் குறித்துத் தந்தால் அது இடையூறு ஏதுமின்றி நல்லபடியாக நடந்து முடியும் என்கிற நம்பிக்கை இதர சமூகங்களின் ஆழ்மனதில் விதைக்கப்பட்டிருக்கும். இதெல்லாம் ஒருவகையான கற்பிதங்கள்தான். இயற்கையின் அசைவுகள் தன்னிச்சையாக நிகழ்ந்து கொண்டிருக்க, அதிலிருந்து நம் சௌகரியத்துக்கு ஏற்ப உருவகித்துக் கொள்ளும் மூட நம்பிக்கைகள் இவை.

இப்படியொரு மூடநம்பிக்கை காரணமாகத்தான், உழைப்புச் சுரண்டல் காரணமாக துக்கி தன் உயிரை இழக்கிறான். ‘நாளும் கோளும் நலிந்தவர்களுக்கு இல்லை’ என்கிற பழமொழியும் இதைத்தான் சுட்டிக்காட்டுகிறது.

நிலவுடமைச் சமூகத்துக்கும் சாதியக் கட்டுமானத்துக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. அதுபோலவே நிலவுடைமைக்கும் ஆணாதிக்கத்துக்கும் இறுக்கமான பிணைப்பு இருக்கிறது. ஆண்களை விடவும் சாதியத்தை உயர்த்திப் பிடிப்பவர்களாக பெண்கள் இருக்கிறார்கள் என்கிற கசப்பான யதார்த்தத்தையும் இந்தக் குறும்படம் பதிவு செய்திருக்கிறது. ‘காலையில் இருந்து சாப்பிடவில்லை மகராஜ். அதனால்தான் மரம் வெட்ட முடியவில்லை’ என்று துக்கி சொன்னவுடன் ‘அவனுக்கு சாப்பிட ஏதாவது கொடேன். ஒரு பைசா செலவில்லாமல் வேலை வாங்கிக் கொள்கிறோமே’ என்று பிராமணர் தன் மனைவியிடம் சொல்ல, ‘அதெல்லாம் முடியாது’ என்று கறாராக மறுக்கிறார், பிராமணரின் மனைவி. இன்னொரு நேரத்தில் புகை பிடிப்பதற்காக கரித்துண்டு கேட்கும் துக்கியிடம் எரிச்சலுடன் தூக்கி எறிகிறார். ‘இவனுங்க எல்லாம் வாசல் ஏறி வருவதா?’ என்கிற கோபத்தை முகத்தில் காட்டிக் கொண்டே இருக்கிறார்.

தனது பெரும்பாலான சினிமாக்களை இலக்கியப் படைப்புகளில் இருந்துதான் உருவாக்கியிருக்கிறார் சத்யஜித்ரே. அடிப்படையில் அவரே ஒரு நல்ல எழுத்தாளரும் கூட. வங்க மொழியில் நிறைய திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் பிரேம்சந்தின் சிறுகதை இந்தியில் எழுதப்பட்டிருந்த காரணத்தினாலும், தூர்தர்ஷனின் தயாரிப்பு என்பதாலும் இந்தியில் இந்தக் குறும்படத்தை இயக்கியிருந்தார். சிறுகதைக்கு விசுவாசமாகப் பயணிக்கும் அதே நேரத்தில் சினிமாவின் மொழியையும் அருமையாகப் பயன்படுத்தியிருந்தார். காலையில் மாடுகள் மேய்ச்சலுக்கு கிளம்புவது, மாலையில் அவை திரும்புவது போன்ற காட்சிகளை காட்டுவதின் மூலம், துக்கியின் முழுநாளும் கடுமையான பணியில் கழிவதை நமக்கு உணர்த்திவிடுகிறார்.

சௌமெந்து ராயின் இயல்பான ஒளிப்பதிவு, துலால் தத்தாவின் சிறப்பான எடிட்டிங் (விறகு வெட்டும் காட்சி ஓர் அற்புதம்), பெரும்பாலான இடங்களை மௌனத்தில் நிரப்பி அவசியமான இடங்களில் மட்டும் ஒலிக்கும் சத்யஜித்ராயின் சன்னமான இசை போன்றவை இந்தக் குறும்படத்தின் தரத்தை கணிசமான அளவுக்கு உயர்த்தியிருக்கின்றன.

சமூகத்தில் உறைந்துள்ள சாதியப்படிநிலை காரணமாக, அடித்தட்டு மக்கள் அறியாமையாலும் சாதியக் காரணங்களாலும் எவ்வாறெல்லாம் மௌனமாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்தக் குறும்படம் கலையமைதியுடன் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது.

(தொடர்ந்து பேசுவோம்)

பகிர:
சுரேஷ் கண்ணன்

சுரேஷ் கண்ணன்

உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை தொடர்ச்சியாக எழுதி வருபவர். அழகியல் சார்ந்த ரசனையோடு சினிமாவைப் பற்றிய உரையாடலைப் பல ஆண்டுகளாக நிகழ்த்துபவர். குமுதம், தீராநதி, உயிர்மை, காட்சிப்பிழை, அம்ருதா, பேசும் புதியசக்தி போன்ற இதழ்களில் எழுதியிருக்கிறார். விகடன் இணையத்தளத்தில் ‘பிக் பாஸ் நிகழ்ச்சி’ பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *