Skip to content
Home » தலித் திரைப்படங்கள் # 12 – ஆக்ரோஷ்

தலித் திரைப்படங்கள் # 12 – ஆக்ரோஷ்

ஆக்ரோஷ்

வர்க்கமும் சாதியமும் இணைந்து இரட்டைத் தலை பாம்புகளாக செயல்பட்டு அடித்தட்டு மக்களை நசுக்கும் வரலாறு என்பது பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. ஓர் ஆதிவாசியின் மௌனத்துக்குப் பின்னால் எத்தனை பெரிய வலியும் துயரமும் கோபமும் இருக்கிறது என்பதை கலையம்சத்துடன் பதிவு செய்திருக்கிறது, 1980-ல் வெளியான ‘ஆக்ரோஷ்’ என்கிற இந்தி்த் திரைப்படம். இயக்குநர், ஒளிப்பதிவாளர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர் என்று பல்வேறு முகங்களைக் கொண்ட கோவிந்த் நிஹ்லானி இயக்கிய முதல் திரைப்படம் இது. அந்த வருடத்துக்கான ‘சிறந்த இந்திப் திரைப்படமாக’ தேசிய விருது பெற்றதோடு, சர்வதேச திரைவிழாவில் ‘தங்கமயில்’ விருதையும் பெற்றது. ஃபிலிம்பேர் விருதுகளையும் அள்ளிக் குவித்துள்ளது.

அதிகார சக்திகளின் முன் எந்த வலுவும் அற்ற அடித்தட்டு சமூகம் எவ்வாறு மௌனக் கோபத்துடன் இயங்குகிறது; அதிகாரத்தை எதிர்க்க முடியாமல் எப்படி தன்னையே தண்டித்துக் கொள்கிறது என்கிற அவலத்தை உணர்ச்சிகரமாகவும் அழுத்தமாகவும் ஆழமான காட்சிகளின் வழியாக பதிவு செய்துள்ளார் கோவிந்த் நிஹ்லானி.

மௌனம் சாதிக்கும் ஆதிவாசியின் சமூகக் கோபம்

காவல் துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், தன் மனைவியின் சிதைக்குத் தீ மூட்ட வருகிறார், லாஹண்யா என்கிற ஆதிவாசி. குடும்பச் சண்டை காரணமாக தன் மனைவியை அவர் கொலை செய்துவிட்டார் என்பது குற்றச்சாட்டு. இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஆதிவாசியின் சார்பில் அரசாங்க வழக்கறிஞராக பாஸ்கர் குல்கர்னி என்கிற இளைஞன் நியமிக்கப்படுகிறான். லட்சியவாதம் கொண்ட இளைஞனான அவனுக்கு இதுதான் முதல் வழக்கு. நீதியை நிலைநாட்ட வேண்டும் என்கிற விடாப்பிடியான நேர்மையைக் கொண்டிருக்கிறான்.
‘கொலை நடந்த அன்று என்னதான் நடந்தது. நீங்கள் வாயைத் திறந்து பேசினால்தான் உங்களைக் காப்பாற்ற முடியும். உண்மையை வெளிக்கொணர முடியும்’ என்று ஆதிவாசியிடம் மன்றாடுகிறான்.

ஆனால், குற்றம் சாட்டப்பட்ட ஆதிவாசியைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் கனத்த மௌனம்தான் விடையாகக் கிடைக்கிறது. உறைந்த பார்வையுடனும் திகைத்த முகபாவத்துடனும் மௌனியாக இருக்கிறார் அந்த ஆதிவாசி. வழக்கறிஞன், தானே களத்தில் இறங்கி விசாரணையை மேற்கொள்ளத் துவங்குகிறான். ஆதிவாசியின் தந்தையும் சகோதரியும் கூட மௌனமாக இருக்கிறார்கள். இந்த விசாரணைப் படலத்தில் வழக்கறிஞனின் உயிருக்கு மிரட்டலும் ஆபத்தும் வருகிறது. அச்சம் ஒருபக்கம் இருந்தாலும் நீதியை நிலைநாட்டவேண்டும் என்று விடாமல் போராடுகிறான்.

நீதிமன்றத்தில் அரசாங்க வழக்கறிஞராக வாதாடுபவர், இளம் வழக்கறிஞனின் சீனியர். அவனுடைய குருநாதரும் வழிகாட்டியும்கூட. அந்தத் தயக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் உண்மையின் ஒரு துளி வெளிச்சத்தையாவது நீதியின் முன்னால் கொண்டு வந்துவிட வேண்டும் என்று போராடுகிறான். அவனுக்கு மிரட்டல்கள் அதிகமாகின்றன. நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கவே, போலீஸ் காவல் வழங்கப்படுகிறது. தனது விடாமுயற்சி காரணமாக உண்மையின் ஆரம்பத்தைக் கண்டுபிடித்துவிடுகிறான். நீதிமன்றத்தில் அதை நிரூபிக்க முயல்வதற்குள் ஆயிரம் தடைகள் வருகின்றன. இந்த நிலையில் தந்தை இறந்துவிடுவதால் அதற்கான இறுதிச் சடங்குக்கு ஆதிவாசியை அழைத்துச் செல்கிறார்கள்.

எதிர்பார்க்கவே முடியாத ஓர் அதிர்ச்சிகரமான உச்சக்காட்சியுடன் படத்தை நிறைவு செய்திருக்கிறார் கோவிந்த் நிஹ்லானி. அடித்தட்டு மக்களுக்கு நீதி என்பது எட்டாத கனவாகவே இருக்கிறது என்கிற நடைமுறை உண்மையை கசப்பு மருந்து போல் கருணையேயில்லாமல் பார்வையாளர்களுக்குப் புகட்டியிருக்கிறார் இயக்குநர்.

மூன்று திறமையான நடிகர்களின் பங்களிப்பு

இளம் வழக்கறிஞராக நஸ்ருதீன் ஷா. சுருட்டை முடியும் பொருத்தமான தாடியும் என ஆரம்பக் காலத் தோற்றத்தில் வசீகரமாக இருக்கிறார். லட்சியவாத தேடலை பிடிவாதமாக தொடரும் இளைஞனின் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். அதே சமயத்தில் வெகுசன ஹீரோ மாதிரி சாகசம் எல்லாம் செய்வதில்லை. மிரட்டல் சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் தனக்கு ஏற்படும் உயிர் அச்சத்தை யதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார்.

வழக்கறிஞராக நஸ்ருதீன் ஷா, வக்கீலாக அம்ரீஷ் பூரி

ஆதிவாசியாக ஓம் பூரி. படம் முழுக்க விறைத்த பார்வையுடன் வருகிறார். இரண்டே காட்சிகளில் இரண்டு வாக்கியம் மட்டும்தான் பேசுகிறார். மற்றபடி படம் முழுக்க இவருக்கு வசனம் என்பதே கிடையாது. அந்த முகத்தில் தெரிவது அதிர்ச்சியா, அச்சமா, கோபமா என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அனைத்தும் கலந்த விபரீதமான முகபாவத்தை படம் முழுக்கத் தந்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் குரல் எங்குமே ஒலிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பதை ஒரு குறியீடாக இந்தப் பாத்திரத்தின் மூலம் இயக்குநர் சொல்ல வருகிறாரோ என்று கூடத் தோன்றுகிறது.

வழக்கறிஞர் கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல் மௌனமாக இருக்கும் ஓம் பூரி, தன்னுடைய சிறந்த நடிப்பால் சம்பந்தப்பட்ட காட்சிகளைக் கையாண்டிருக்கும் விதம் பாராட்ட வைக்கிறது. சிறையில் இருக்கும்போது பழைய நினைவுகள் வந்து வாட்ட, மனவலியினால் மௌனமாக அலறும் காட்சிகளில் ஓம் பூரியின் நடிப்பு அற்புதமாக இருக்கிறது. ஆதிவாசியின் மனைவியாக ஸ்மீதா பாட்டீல். இவர் வரும் காட்சிகள் மிகக் குறைவு என்றாலும், விளக்கின் வெளிச்சத்தில் இவரின் பாதி முகம் மட்டும் டைட்குளோசப்பில் தெரியும் ஒரு காட்சியில் தேவதை போல வசீகரமாக இருக்கிறார்.

ஆதிவாசியாக ஓம் பூரி, ஆதிவாசியின் மனைவியாக ஸ்மீதா பாட்டீல்

சீனியர் வக்கீலாக அம்ரீஷ் பூரி சிறப்பாக நடித்திருக்கிறார். தன்னை எதிர்த்து வாதாட ஜீனியர் வக்கீலான நஸ்ருதீன் ஷா மெலிதாகத் தயங்கும் போது ‘பாரதப் போரில் அர்ஜுனன் தனது குருநாதரையே எதிர்த்துப் போரிட வேண்டிய நிலை ஏற்பட்டதை உதாரணம் காட்டுகிறார். ஆனால் நீதிமன்றத்தில் ஜூனியர் திறமையாக வாதத்தை வைக்கும் போது எரிச்சல் அடைந்து தன் ஆட்சேபத்தை அவ்வப்போது முன்வைக்கிறார். இவர் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட மேல்தட்டு மக்களுடன் இணைந்து புழங்கும் அந்தஸ்துக்காகத் தன் சொந்தச் சமூகத்துக்கே துரோகம் செய்கிறார். உண்மை வெளியே வராமல் பார்த்துக் கொள்கிறார். இது தொடர்பாக படத்தின் இறுதியில் இரு வழக்கறிஞர்களுக்கும் இடையில் நிகழும் உரையாடல் அற்புதமானது.

நீதி, காவல் போன்ற அரசு இயந்திரங்கள் அடித்தட்டு மக்களுக்கு எதிராகவும் மேல்தட்டு மக்களுக்கு ஆதரவாகவும் இயங்கும் நடைமுறை அவலத்தை இந்தத் திரைப்படம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. ஒரு பத்திரிகையில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு பிரபல நாடக ஆசிரியர் விஜய் டெண்டுல்கர் எழுதிய கதையை வைத்து இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கோவிந்த் நிஹ்லானியின் திறமையான இயக்கம்

கோவிந்த் நிஹ்லானி அடிப்படையில் ஒளிப்பதிவாளர் என்பதால் இதில் வரும் காட்சிகள் மிகுந்த அழகியலுடன் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நஸ்ருதீனின் வீடு தாக்கப்படும் ஒரு நீண்ட காட்சி வருகிறது. அதை கோவிந்த் நிஹ்லானி எடுத்திருக்கும் விதம் அத்தனை அற்புதமாக இருக்கிறது. நஸ்ருதீன் அடையும் உளவியல் அச்சத்தையும் பதட்டத்தையும் பார்வையாளனுக்கும் கடத்தி விடுகிறார். நீதிமன்றத்தில் வாதாடும்போது, காவலுக்கு இருந்த போலீஸ்காரர் அகன்று, அடியாட்கள் வந்து அமர்ந்து விட அவர்களை திரும்பிப் பார்த்துக் கொண்டே நஸ்ருதீன் அச்சத்துடன் விசாரணை செய்யும் காட்சியும் சிறப்பானது. படம் முழுக்க வரும் டைட்-குளோசப் காட்சிகள் படத்தின் காண்பனுபவத்தை உன்னதமாக்குகின்றன.

நஸ்ருதீன் ஷா, ஓம் பூரி, அம்ரீஷ் பூரி ஆகிய மூன்று திறமையான நடிகர்களும் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். நீதிக்காகப் போராடும் நஸ்ருதீன் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் நீதி வெளிப்படாமல் பார்த்துக் கொள்ளும் அம்ரீஷ், ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த சமூக முரணின் விநோதத்தின் சமூக அரசியல் நுட்பமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. “நான் தாக்கப்பட்டு உயிரிழந்தால்கூட சாட்சி வேண்டும் என்றுதான் கேட்பீர்களா?” என்று நஸ்ருதீன் கேட்க “ஆம்.. நீதிமன்றம் அதைத்தான் கேட்கும்” என்று அம்ரீஷ் பதில் சொல்லும் காட்சி சிறப்பானது.

ஓம் புரியிடம் ஒரு காட்சியை விளக்கும் இயக்குனர் கோவிந்த் நிஹலானி.

ஒரு காட்சியில், ‘ஆதிவாசிப் பெண் கொலை செய்யப்பட்டார்’ என்று வெளிவந்த பத்திரிகைச் செய்தியை நஸ்ருதீன் வாசித்துக் கொண்டிருக்க, பின்னணியில் ஒலிக்கும் ரேடியோவில் பசுக்கள் கொல்லப்படுவதை எதிர்த்து வினோபா பாவே நடத்தும் போராட்டம் பற்றிய செய்தி சொல்லப்படுகிறது. சமகால சூழலுக்கு கூடுதலாக பொருந்தும் அரசியல் செய்தி இது. இது போல் பல நுட்பமான காட்சிகள் கடந்து செல்கின்றன.

ஆதிவாசி செய்ததாகச் சொல்லப்படும் குற்றம் குறித்து விடாமுயற்சியுடன் விசாரணை செய்யும் இளம் வழக்கறிஞருக்குப் பல தடைகளும் கொலை மிரட்டல்களும் வருகின்றன. அவரால் உண்மையின் துளியைக் கூட நெருங்க முடியவில்லை. ஆதிவாசியின் குடும்பத்தினர்கூட அச்சம் காரணமாக வாயைத் திறக்க மறுத்து விடுகிறார்கள். வழக்கறிஞனின் போராட்டத்தைத் தொடர்ந்து கவனித்து வரும் ஒரு சமூகப் போராளி, நடந்த உண்மையைத் தெரிவித்துவிட்டு ‘இதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது உன்னுடைய பொறுப்பு’ என்கிறார்.
‘மார்க்ஸிஸ்ட்’ என்று வழக்கறிஞரால் அழைக்கப்படும் அந்த ஆசாமி, நக்ஸலைட் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பது பூடகமாகச் சொல்லப்படுகிறது. “அதற்கு சாட்சி வேண்டுமே?” என்று வழக்கறிஞர் கேட்க, “அதெல்லாம் உங்களுக்கு. எங்களின் விசாரணை முறை வேறு” என்று சொல்லி இருளில் மறைந்து விடுகிறான், அந்த ‘மார்க்ஸிஸ்ட்’.

அடித்தட்டு மக்கள் தங்களுக்கு எதிராக நிகழும் வன்முறையையும் பாலியல் அத்துமீறல்களையும் மௌனத்துடனும் அச்சத்துடனும் சகித்துக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிற சமூக அவலத்தை இந்தத் திரைப்படம் நுட்பமான திரைக்கதை மற்றும் காட்சிகளுடன் பதிவு செய்திருக்கிறது. அஜித் வர்மனின் அற்புதமான பின்னணி இசையும் பாடல்களும் படத்துக்குக் கூடுதல் சிறப்பைச் சேர்த்திருக்கின்றன. கவனத்தில் கொள்ளத்தக்க, ஒரு முக்கியமான ‘தலித்’ திரைப்படமாக கோவிந்த் நிஹ்லானியின் ‘ஆக்ரோஷ்’ திரைப்படம் வரலாற்றில் எப்போதும் நினைவுகொள்ளப்படும்.

(தொடர்ந்து பேசுவோம்)

பகிர:
சுரேஷ் கண்ணன்

சுரேஷ் கண்ணன்

உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை தொடர்ச்சியாக எழுதி வருபவர். அழகியல் சார்ந்த ரசனையோடு சினிமாவைப் பற்றிய உரையாடலைப் பல ஆண்டுகளாக நிகழ்த்துபவர். குமுதம், தீராநதி, உயிர்மை, காட்சிப்பிழை, அம்ருதா, பேசும் புதியசக்தி போன்ற இதழ்களில் எழுதியிருக்கிறார். விகடன் இணையத்தளத்தில் ‘பிக் பாஸ் நிகழ்ச்சி’ பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *