தங்களைப் பல்வேறுவிதங்களில் ஒடுக்கும் முற்பட்ட சமூகத்தினரை ஒடுக்கப்பட்ட சமூகமானது அறியாமை காரணமாக ஆரம்பத்தில் மௌனமாகச் சகித்துக் கொள்ளும். சற்று விழிப்புணர்வு பெற்ற பின்னர் கோபம் கொள்ளும். ஆதிக்க சமூகம் பிரயோகிக்கும் வன்முறைகளை அதே வழியில் திருப்பியளிக்கும். ‘அடங்க மறு, திருப்பி அடி’ போன்ற கோஷங்கள் எழும். ஆனால் எந்தத் தரப்பாக இருந்தாலும் வன்முறை என்பது நிலையான தீர்வல்ல. அது பரஸ்பரப் புகைச்சலுடன் விரோத மனப்பான்மையைத் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்க மட்டுமே உதவும்.
நிலையான தீர்வு என்பது முன்னேறிய சமூகத்துக்கு முன்னால் தானும் முன்னேறிக் காட்டுவதுதான். அதற்கான கருத்தியல் போராட்டங்களை, அரசியல் வழிமுறைகளைக் கையில் எடுப்பதுதான். முன்னேறிய சமூகத்தினரைப் போலவே சொத்து சேர்ப்பது, உயர்தட்டு சொகுசான வசதிகளைத் தானும் மேற்கொள்வதெல்லாம் வெறும் பாவனையாக மட்டுமே முடியும். மாறாகக் கல்வி மட்டுமே அடித்தட்டு மக்களை உண்மையான முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும். அதனால்தான் ‘கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்’ என்கிற முழக்கத்தை அம்பேத்கர் முன்னெடுத்தார். தானே அதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். கல்வி ஒன்றே தம்மை உயர்த்தும் என்பதை உணர்ந்திருந்தார். கடினமான பொருளாதாரச் சூழலிலும் சிறப்பாகக் கல்வி பயின்றார்.
அடித்தட்டு மக்கள் முன்னேறுவதற்கு கல்வி என்பது மிகச் சிறந்த ஆயுதம். வர்க்கமும் சாதியும் ஒன்றிணைந்திருக்கும் இந்தியச் சூழலில் சாதியத் தடைகளை கடந்து வருவதற்கு கல்வி ஒரு பிரதான வழியாக இருக்கிறது. அதனால்தான் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வலுவற்றுக் கிடக்கிற ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு என்னும் பிரதிநிதித்துவ உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.
கலைப்படங்களில் மட்டுமே நுட்பமாகவும் ஆழமாகவும் உரையாடப்பட்டுக் கொண்டிருந்த சமூகப் பிரச்னைகள், ஜனரஞ்சக அம்சங்கள் மட்டுப்படுத்தப்பட்டு வெகுசன சினிமாவிலும் பிரதிபலிக்க ஆரம்பித்தன. உத்தேசமாக தொன்னூறுகளில் இந்த மாற்றம் நிகழ ஆரம்பித்தது. 2019-ல் வெளியான ‘Super 30’ என்கிற இந்த இந்தித் திரைப்படத்தை அப்படியொரு சிறந்த முயற்சி என்று சொல்ல முடியும். அடித்தட்டு மக்களுக்குக் கல்வி என்னும் சாதனம் எத்தனை முக்கியமானது என்பதை உணர்ச்சிகரமாகவும் நாடகீயத் தருணங்களுடன் விவரிக்கிறது.
ஆனந்த் குமார் என்கிற கணித ஆசிரியரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உண்மையான சம்பவங்களையொட்டி உருவான திரைக்கதை இது.
ஆனந்த் குமார் என்னும் நல்லாசிரியர்
லண்டனில் நிகழும் ஒரு கருத்தரங்கில் ஓர் இந்திய மாணவன் உரையாடுகிறான். பலூன் வியாபாரியின் மகனான அவன், தான் எவ்வாறு கல்வியின் மூலமாக முன்னேற முடிந்தது என்பதையும் அதற்குக் காரணமாக இருந்த ஆனந்த் குமார் என்கிற ஆசிரியரைப் பற்றியும் நினைவுகூர்கிறான். இதன் வழியாக அந்த ஆசிரியரின் கதை பார்வையாளர்களுக்கு விரிகிறது.
கணிதத்தில் மிகுந்த ஆர்வமும் இயல்பான திறமையும் உள்ள கல்லூரி மாணவனாக இருக்கிறான் ஆனந்த். அனைத்துமே அவனுக்கு எண்களாகத்தான் தெரிகின்றன. எண்களுடன் விளையாடுவதும் அதனுள் ஒளிந்திருக்கும் புதிர்களுக்கான தீர்வுகளைத் துரத்திப் பிடித்துக் கண்டுபிடிப்பதுதான் அவனுடைய முக்கியமான பொழுதுபோக்கு. காதலியின் முகத்தைக்கூட கணிதச் சமன்பாடுகளின் மூலம் வரையறுக்க முயற்சி செய்கிறான்.
பல்கலைக்கழக நூலகத்துக்கு ரகசியமாகச் சென்று கணிதம் தொடர்பான வெளிநாட்டு ஜர்னல்களை வாசிப்பதில் ஆர்வம் காட்டுகிறான். ஆனால் அங்குள்ள நூலகர் மூலமாகப் பிடிபட்டுத் துரத்தியடிக்கப்படுகிறான். ‘உன்னுடைய கட்டுரை அந்தப் புத்தகத்தில் வந்தால் இதழ்கள் உனக்கு இலவசமாகக் கிடைக்கும்’ என்று நல்ல மனம் கொண்ட இன்னொரு நூலக உதவியாளர் சொல்வதால் ஒரு கடினமான கணிதத்துக்குத் தீர்வு எழுதி அனுப்ப அது பிரசுரமாகிறது. லண்டன் காம்பிரிட்ஜில் படிப்பதற்கு இடம் கிடைக்கிறது. மகிழ்ச்சியில் மிதக்கும் ஆனந்தின் முன்னால் பொருளாதாரத் தடை பிரம்மாண்டமாக நிற்கிறது.
உதவுவதாக மேடையில் வாக்களித்த உள்ளூர் அரசியல்வாதி, நேராகச் செல்கிற போது எதையோ சொல்லி ஏமாற்றுகிறார். மகனின் வெளிநாட்டுப் படிப்புக்காகத் தன்னுடைய சேமிப்பு பணம் அனைத்தையும் எடுத்தும் போதாமல் அந்தத் துக்கத்தில் இறந்து போகிறார், ஆனந்தின் தந்தை. இதனால் ஆனந்தின் கேம்பிரிட்ஜ் கனவு கலைகிறது.
குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைப் பகிர்ந்து கொள்வதற்காக சாலையில் அப்பளம் விற்கிறான் ஆனந்த். அவனுக்குள் இருக்கும் அசாதாரணமான கணிதத் திறமையை வணிகத்தின் மூலமாக லாபமாக மாற்றத் திட்டமிடுகிறான் ஒரு செல்வந்தன். வாக்களித்த அரசியல்வாதியின் பினாமி அவன். உற்சாகமான வார்த்தைகளைச் சொல்லி, ஆனந்தை அழைத்துச் சென்று கை நிறைய சம்பளம் தந்து, ஐ.ஐ.டிக்கான பயிற்சி நிலையங்களை ஆரம்பிக்கிறான். குறுகிய காலத்தில் ஆனந்தின் ஆசிரியத் திறமை பரவுகிறது. ஆனந்தின் பெயர் ஒரு பிராண்டாக மாறுகிறது. வசதியான குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு பயில்வதற்காக அலை மோதுகிறார்கள். தான் கடந்து வந்த பாதையை மறந்து செல்வத்தின் மிதப்பில் ஆழ்கிறான் ஆனந்த்.
ஆனால் ஏழை மாணவன் தொடர்பாக நிகழும் ஒரு சம்பவம் முகத்தில் அறைந்து அவனை விழிக்கச் செய்கிறது. தான் செய்ய வேண்டிய சமூகக் கடமை நினைவுக்கு வருகிறது. அதிக சம்பளம் கிடைக்கும் வேலையை உடனே உதறுகிறான். பொருளாதார வசதியில்லாத, அடித்தட்டு மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வியை அளிக்கிறான். முப்பது மாணவர்களைத் தேர்ந்தெடுத்து ஐ.ஐ.டி.யில் தேர்வு பெறுவதற்கான பயிற்சியை அளிக்கிறான். ஆனந்த் வெளியேறியதால் அவனைப் பழிவாங்க நினைக்கிறான், அரசியல்வாதியின் பினாமி. ஆனந்துக்கும் மாணவர்களின் உயிருக்கும் ஆபத்து வருகிறது. ஏழை மாணவர்கள் தேர்வு எழுத முடியாதவாறு தடைகள் வருகின்றன. இந்தச் சவாலை அவர்கள் எவ்வாறு சமாளித்தார்கள் என்பதற்கான விடையோடு படம் நிறைகிறது.
அற்புதமாக நடித்திருக்கும் ஹிருத்திக் ரோஷன்
ஆனந்த் குமார் பாத்திரத்தில் இந்தித் திரைப்படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹிருத்திக் ரோஷன் தனது சிறப்பான நடிப்பைத் தந்துள்ளார். இருள் அடைந்த முகம், கலைந்த தலை, அழுக்கான தாடி, தோளில் துண்டு என்று ஒப்பனையில்லாமல் அடித்தட்டு சமூகத்தின் எளிய தோற்றத்தில் படம் முழுக்க வருகிறார். காம்பிரிட்ஜில் இடம் கிடைத்திருப்பதை அறியும் காட்சி, கிளைமாக்ஸில் நிகழும் உணர்ச்சிகரமான காட்சி உள்ளிட்டு பல காட்சிகளில் சிறப்பாகவே நடித்துள்ளார். இவரது தந்தையாக, உற்சாகமான போஸ்ட்மேனாக நடித்திருக்கும் வீரேந்திர சக்சேனாவின் பங்களிப்பைத் தனித்துச் சொல்லியாக வேண்டும். அத்தனை இயல்பான நடிப்பு.
மேடையில் பொய் வாக்குறுதிகளை அள்ளி இறைத்து விட்டு, நேரில் வேறு முகத்தைக் காட்டும் தேர்ந்த அரசியல்வாதி பாத்திரத்தில் வழக்கம் போல் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார் பங்கஜ் திரிபாதி. ‘கல்வி மட்டுமே சொர்க்கத்துக்கான பாதை’ என்று மேடைகளில் முழங்கும் இவர், கல்விதான் கொழுத்த லாபம் ஈட்டும் தொழில் என்று பினாமியிடம் சொல்வதின் மூலம் நம்மூர் ‘கல்வித் தந்தைகளை’ நினைவூட்டுகிறார்.
ஆனந்தின் காதலியாக மிருணாள் தாக்குர் அழகாக வந்து போகிறார். திருமணம் முறிந்து போகும் காட்சியிலும் தக்க சமயத்தில் ஆனந்துக்கு உதவி செய்யும் காட்சியிலும் தனது உணர்ச்சிகரமான நடிப்பால் கவர்கிறார்.
நாயகனிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் ஏகலைவனின் கதை
இந்தத் திரைப்படம் வெகுசன படைப்புக்கான ஜனரஞ்சக அம்சங்களுடனும் மிகையான நாடகத்தன்மையுடனும் அமைந்திருந்தாலும் அடித்தட்டு மக்களின் கல்வி ஆர்வம், அதை முறையாகத் தர வேண்டிய நல்லாசிரியர்களின் கடமை போன்ற விஷயங்களை அழுத்தமாக உணர்த்துகிறது. கை நிறைய சம்பளம் வந்தவுடன் ஏழை மாணவர்களின் கல்விக் கனவை மறந்து சுயநலத்தில் மூழ்கி விடும் ஆனந்தை, ரிக்ஷா ஓட்டும் ஒரு ஏழை மாணவனின் தந்தையின் உரையாடல்தான் விழிப்படையச் செய்கிறது.
ஏகலைவன் கதையை மேற்கோள் காட்டும் அவர், ஆசிரியர்கள் கூட பணக்கார மாணவர்களின் பக்கம் நின்று அவர்களின் சார்பாகச் செயல்பட்டால் அடித்தட்டு மாணவர்கள் எப்போதுதான் கல்வி கற்று முன்னேறுவது? என்கிற ஆதாரமான கேள்வியைக் கேட்கிறார், அந்த ரிக்ஷாக்காரர். அந்தக் கேள்விதான் ஆனந்தின் பாதையை மாற்றுகிறது.
ஏழை மாணவர்களின் உள்ளே புதைந்துள்ள கல்வி குறித்தான ஆர்வமும், அவர்களுக்கு முன்னால் மிகப் பெரிய தடையாக இருக்கும் பொருளியல் காரணங்களும் பல காட்சிகளில் சிறப்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. நடைமுறை வாழ்க்கையில் உள்ள விஷயங்களை வைத்தே அறிவியல் கல்வியை ஆனந்த் சொல்லித் தருவது சிறந்த காட்சி. ஏழை மாணவர்கள், பணக்கார மாணவர்களுடன் போட்டி போட்டுத் தேர்வெழுதி வென்று விட்டால் ஆனந்தின் கல்விச் சேவைக்கு உதவுவதாக சொல்கிறார், அரசியல்வாதியின் பினாமி. ஆனால் குறைந்த சதவீத வித்தியாசத்தில் ஏழை மாணவர்கள் தோற்கிறார்கள். அவர்களின் திறமைக்கு குறைவில்லை. ஆனால் பணக்கார மாணவர்களின் பகட்டான தோற்றமும், சூழலும், ஆங்கிலமும் அவர்களை மிரட்சியடையச் செய்கிறது. இந்தத் தாழ்வு மனப்பான்மையை மாணவர்களிடமிருந்து அகற்றுவதற்காக ஆனந்த் நிகழ்த்தும் ‘நாடக முயற்சி’யும் அது தொடர்பான பாடலும் ரசிக்கத்தக்க அளவில் படமாக்கப்பட்டுள்ளது.
‘பணக்காரனாகப் பிறந்தது என் பாவமா, ஏன் எங்களுக்குக் கல்வி தராமல் வெளியே போனீர்கள்?’ என்று ஒரு மாணவன் பரிதாபமாகக் கேட்கிறான். ‘நீ இன்று காலை உணவு சாப்பிட்டாயா… அவர்கள் சாப்பிடவில்லை’ என்று பசியுடன் தேர்வு எழுதச் சொல்லும் மாணவர்களை நோக்கி ஆனந்த் சொல்வது உணர்ச்சிகரமான காட்சி.
கல்விதான் முன்னேற்ற ஆயுதம்
உயிருக்குப் போராடும் தங்களின் ஆசிரியரையும் தங்களையும் சேர்த்து காப்பாற்றுவதற்காக மருத்துவமனையைச் சூழும் வில்லன்களை, தங்களின் கற்றல் அறிவின் மூலம் மாணவர்கள் எதிர்கொள்ளும் காட்சி, சினிமாத்தனமாக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது. இளையராஜாவின் இசைப்பாணியை நினைவுப்படுத்தும், அஜய்-அதுல் என்னும் இரட்டை இசையமைப்பாளர்களின் பாடல்களும் அட்டகாசமான பின்னணி இசையும் பல காட்சிகளின் உணர்ச்சிகரத்தை உயர்த்தி சிறப்பாக்கியிருக்கிறது.
2019-ம் ஆண்டில் அதிக வசூலை வாரிக் குவித்த திரைப்படங்களுள் இதுவும் ஒன்று. வெகுசன வடிவத்தில் இருந்தாலும் படத்தின் மையத்தை சிதைக்காமல் பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் விகாஸ் பாஹ்ல்.
இந்தத் திரைப்படத்தின் அசல் நாயகனான ஆனந்த் குமார் பிஹாரில் பிறந்தவர். அரசுப் பள்ளியில் படித்த இவர், இயல்பிலேயே கணிதத்தில் புலமை கொண்டிருந்தார். வறுமை காரணமாக மேற்படிப்பையும் வெளிநாட்டில் பயில்வதற்கான வாய்ப்பையும் இழந்தார். எனவே தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வி கற்றுத் தர முன்வந்தார். அதற்கான வசதிகளையும் தன்னுடைய செலவில் செய்தார். கல்வியில் ஆர்வமும் திறமையும் உள்ள 30 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, பயிற்சி தந்து உயர்கல்விக்கான பாதையை எளிமைப்படுத்தினார்.
அடித்தட்டு சமூகத்தில் உள்ள ஒருவர் கல்வி கற்றால் அதன் மூலம் அந்தத் தலைமுறையே அடுத்தடுத்து முன்னேறும் என்பது இவரது நம்பிக்கை.
ஒரு சமூகத்துக்கு அர்ப்பணிப்புணர்வு உள்ள நல்லாசிரியர்கள் தேவை. ஆனந்த் குமாரின் வாழ்க்கைச் சம்பவங்கள் அதை அழுத்தமாக உணர்த்துகின்றன. அதை ஒரு சிறப்பான சினிமாவாக மாற்றியிருக்கும் ‘Super 30’ திரைப்படம், கல்வியின் உன்னதத்தையும் அடித்தட்டு மக்களுக்கான முன்னேற்ற ஆயுதம் அதுவே என்பதையும் அருமையாகப் பதிவு செய்துள்ளது.
(தொடர்ந்து பேசுவோம்)