ஓர் இளம்பெண் பொருளாதார வசதியுள்ள குடும்பத்தில் வளர்கிறாள். ஆனால் சமூக அந்தஸ்து, மதிப்பு, அன்பு, பாசம், காதல் என்று எதுவுமே அவளுக்கு எளிதில் கிடைப்பதில்லை. காரணம் அவளுடைய சாதி. கண்ணுக்குத் தெரியாத சாதி காரணமாக, கண்ணுக்குத் தெரியும் பெரும்பாலான மனிதர்கள் அவளை இரண்டாம் பட்சமாக, மூன்றாம் பட்சமாக நடத்துகிறார்கள்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவள் என்கிற ஒரே காரணத்தால் அவள் பல அவமதிப்புகளைக் கசப்புடன் விழுங்க வேண்டியிருக்கிறது. ‘பெற்றோர்களின்’ அன்பு மற்றும் கண்ணியம் மிக்க ஒருவனின் ‘காதல்’ போன்ற உணர்வுகளை அனுபவிக்க முடியாமல் தத்தளிக்க நேர்கிறது. ஒரு மனிதனுக்குத் தேவையான அடிப்படையான விஷயங்களைக் கூட அடையவிடாமல் குறுக்கே பெருந்தடையாக நிற்கிறது, ‘சாதியம்’.
இந்திய சினிமாவின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவர் பிமல் ராய். சத்யஜித்ராயைப் போன்று, இத்தாலிய நியோ ரியலிஸப் பாணியின் தாக்கத்தில் தன்னுடைய சினிமா உருவாக்க முறையை அமைத்துக் கொண்டார். இவர் இயக்கிய உன்னதமான திரைப்படங்களுள் ஒன்று, 1959-ல் வெளியான ‘சுஜாதா’.
சுனில் தத், நூதன் ஆகிய இருவரின் நடிப்பில் உருவான உணர்ச்சிகரமான காவியம். சுபோத் கோஷ் எழுதிய வங்க மொழிச் சிறுகதையில் அடிப்படையில் உருவான இந்த இந்தித் திரைப்படம், 1960-ம் ஆண்டின் கான் திரைப்பட விழாவுக்கு அனுப்பப்பட்டது.
சாதியம் காரணமாக வாழ்நாள் முழுக்கத் தத்தளிக்கும் சுஜாதா
உபேந்திரநாத் சௌத்ரி ஒரு கட்டடப் பொறியாளர். வசதியான குடும்பம். அவரது ஒரே மகளின் பிறந்த நாள் விழாவுக்கு வருகை தரும் விருந்தினர்களை வரவேற்பதில் மும்முரமாக இருக்கிறார். காலரா நோய் பரவிக் கொண்டிருந்த காலகட்டம். அடித்தட்டு சமூகத்தைச் சார்ந்த சிலர் ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு நிற்கிறார்கள். குழந்தையின் பெற்றோர் காலரா நோயில் இறந்துவிட்டார்கள். குழந்தையைப் பராமரிக்க ஆளில்லை. ‘தற்காலிகமாக பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று வேண்டுகோள் வைக்கிறார்கள். உபேந்திரநாத் முதலில் மறுத்தாலும் குழந்தையைப் பார்த்து மனமிரங்கி ஏற்றுக் கொள்கிறார். அவருடைய மனைவியும் சம்மதிக்கிறார்.
முற்போக்கு எண்ணம் கொண்ட உபேந்திராவுக்கு எவ்வித மனத்தடையுமில்லை. ஆனால் ‘தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தை’ தன் வீட்டில் வளர்வது குறித்து தாய்க்கு சிறிது மனச்சங்கடம் இருக்கிறது. ஆனால் தன்னிச்சையாகப் பெருகும் தாயன்பும் கூடவே இருக்கிறது. இரண்டு குழந்தைகளும் ஒன்றாக விளையாடுகின்றன. அடைக்கலம் தேடி வந்த குழந்தைக்கு ‘சுஜாதா’ என்று பெயரிடுகிறார்கள்.
சுஜாதாவின் மீது பிரியம் இருந்தாலும், சமூகம் என்ன சொல்லுமோ என்கிற சங்கடம் காரணமாக அவளை வேறு எங்காவது அனுப்ப இவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போகின்றன. ‘சரி, இதுதான் கடவுளின் விருப்பம் போல’ என்கிற முடிவில் சுஜாதாவைத் தன் வீட்டிலேயே வளர்க்கிறார்கள். என்றாலும் சொந்த மகளுக்குத்தான் முதலிடம். வளர்ப்பு மகளான சுஜாதாவுக்குப் பல விஷயங்கள் கிடைப்பதில்லை. இந்த மாற்றாந்தாய் மனோபாவம் வீட்டுக்குள் தன்னிச்சையாக வந்துவிடுகிறது.
சொந்த மகளை விடவும் வளர்ப்பு மகள்தான் பெற்றோர் மீது மிகப் பிரியமாக இருக்கிறாள். பம்பரமாகச் சுழன்று வீட்டின் நிர்வாகத்தைக் கவனிக்கிறாள். காலம் நகர்கிறது. இரு மகள்களும் வாலிப வயதை எட்டுகிறார்கள். செல்லச் சண்டை இட்டுக் கொண்டு பிரியமான தோழிகளாக இருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் தன்னுடைய வளர்ப்பின் பின்னணியும் தாயின் புறக்கணித்தலுக்குமான காரணம் சுஜாதாவுக்குத் தெரிய வருகிறது. அதிர்ச்சியடைந்து தற்கொலை செய்ய முயன்று பின்பு மனதை தேற்றிக் கொள்கிறாள். உபேந்திரநாத்தின் உறவு வழியில் ஓர் இளைஞன் இருக்கிறான். அவனை தன் மகளுக்கு திருமணம் செய்யலாம் என்று ஆசைப்படுகிறார்கள். ஆதிர் என்கிற அந்த இளைஞன் வீட்டுக்கு வருகிறான். ஆனால் விதி வேறு மாதிரியான நாடகத்தை எழுதுகிறது. சுஜாதாவைப் பார்த்ததும் அவனுக்குள் காதல் மலர்கிறது. தன் விருப்பத்தை அவளிடம் தெரிவிக்கிறான். சுஜாதாருக்கும் விருப்பம்தான். ஆனால் தன்னுடைய பின்னணி காரணமாக காதலை மென்று விழுங்குகிறாள். பெற்றோர்களுக்குத் துரோகம் செய்யக்கூடாது என்று மனதார நினைக்கிறாள்.
ஆதிர் – சுஜாதாவின் காதல் விஷயம் ஒரு கட்டத்தில் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. ‘ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணையா திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்?’ என்று ஆதிரிடம் பாட்டி கடும் ஆட்சேபம் தெரிவிக்கிறார். ‘தன் பெண்ணுக்கு வந்த வரன் என்று தெரிந்தும் காதலித்தாளே?’ என்று சுஜாதாவின் தாயும் வெறுப்பைக் கொட்டுகிறார். பெற்றோர்களுக்கு எவ்விதத் துயரத்தையும் தரக்கூடாது என்று எண்ணுகிற சுஜாதா தன் காதலை தியாகம் செய்ய முடிவு செய்கிறாள். இதனால் ஆதிர் மனம் உடைந்து போகிறான். அவனால் சுஜாதாவைத் தவிர வேறு யாரையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
காவிய துயரத்துடன் நகரும் இந்தச் சோகமான நாடகத்தில் ஓர் உணர்ச்சிகரமான திருப்பம் நிகழ்கிறது. தங்களின் மீது சுஜாதா வைத்திருக்கும் உண்மையான அன்பையும் தியாகத்தையும் தாய் தெரிந்துகொள்கிறாள். அவளை ‘உண்மையான மகளாக’ ஏற்றுக் கொள்வதுடன் படம் நிறைகிறது.
அற்புதமான நடிப்பைத் தந்திருக்கும் நூதன் மற்றும் சுனில் தத்
டைட்டில் பாத்திரமான ‘சுஜாதா’வாக நூதன் அற்புதமாக நடித்திருந்தார். பெற்றோர்களிடம் காட்டும் பிரியம், தன்னுடைய பின்னணியை அறிந்ததும் உருவாகும் துயரம், தன்னையும் அவர்கள் மகளாக ஏற்றுக் கொள்ள வேண்டுமே என்கிற தவிப்பு, நிறைவேற முடியாத காதலால் ஏற்படும் நிராசை, அனைத்துக்கும் காரணமாக இருக்கும் சாதி என்று பல்வேறு உணர்வுகளையும் மனப்புழுக்கத்தையும் எவ்வித மெனக்கெடலும் இன்றி இயல்பாகவும் அநாயாசமாகவும் வெளிப்படுத்துகிறார். முகத்தில் நிரந்தமாகப் படிந்திருக்கும் மெல்லிய சோக பாவம் கூட இவரது அழகையும் நடிப்பையும் ஒரு படி மேலே உயர்த்திக் காட்டுகிறது. பல அண்மைக்காட்சிகளில் இவரது நடிப்பும் அழகும் மூச்சுத் திணற வைக்கிறது. ‘சுஜாதா’ என்கிற பாத்திரத்துக்கு தன் நடிப்பால் உயிரூட்டியிருக்கிறார் நூதன்.
சுஜாதாவிடம் ஆத்மார்த்தமான அன்பை வெளிப்படுத்தும் ஆதிர் என்கிற பாத்திரத்தில் சுனில் தத் நடித்திருந்தார். சாதி வித்தியாசம் பார்க்காத ஒரு முற்போக்கு இளைஞனின் குணாதிசயத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருந்தார். இவரது வசீகரமான தோற்றமும் மென்மையான பேச்சும் அந்தக் காலக்கட்டத்தின் பார்வையாளர்களை, குறிப்பாகப் பெண்களை நிச்சயம் கவர்ந்திருக்கும். சுஜாதாவிடம் தன் காதலை மிருதுவாக வெளிப்படுத்தும் கண்ணியம், அது நிறைவேறாத சூழல் ஏற்படும்போது உண்டாகும் ஏமாற்றம், தன் காதலில் பிடிவாதமாக நிற்கும் உறுதி போன்ற உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தார்.
வளர்ப்புத் தந்தை உபேந்திரநாத் சௌத்ரியாக, தருண் போஸ் மிகச் சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார். சுஜாதாவை தன் இன்னொரு மகளாகவே எண்ணும் உயர்ந்த பண்பைக் கொண்டவர். ‘இவளால நம்ம பொண்ணோட திருமணத்துக்கு இடையூறு வருமோன்னு பயமா இருக்கு’ என்று மனைவி புலம்பும் போதெல்லாம் அந்தக் கருத்தை ஏற்கவும் முடியாமல், தள்ளவும் முடியாமல் சங்கடமான முகபாவத்தைத் தருவார். மிகச் சிறந்த குணச்சித்திர நடிப்பு. சுஜாதாவின் தாய் சாருமதியாக, சுலோசனா லட்கர் சிறப்பாக நடித்திருந்தார். ஒரு தாயாக, சுஜாதாவின் மீது இயல்பான பிரியம் பெருகினாலும் சமூகம் ஏற்படுத்தியிருக்கும் தடை காரணமாக மனவிலகலையும் புறக்கணிப்பையும் தரும் தத்தளிப்பை நன்கு வெளிப்படுத்தியிருந்தார். பழமைவாத மனோபாவம் கொண்ட பாட்டியாக லலிதா பவாரின் நடிப்பும் கச்சிதமாக இருந்தது.
பிமல் ராயின் நேர்த்தியான இயக்கம்
இந்திய சினிமாவின் முன்னோடி பிமல் ராய் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் உணர முடிகிறது. இந்த உணர்ச்சிகரமான திரைக்கதையை பிமல் ராய் கையாண்டிருக்கும் விதத்தில் அத்தனை நேர்த்தியும் தெளிவும் இருக்கிறது. ஓர் அழகான நீரோடை போல காட்சிகள் இயல்பாக நகர்கின்றன. துயரமான காட்சிகள் மிகையான சோகம் இன்றி கலையமைதியுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
சுஜாதா தற்கொலை செய்வதற்காகச் செல்லும் போது காந்தியின் உருவமும் வாசகங்களும் அவளை மனம் மாறச் செய்கின்றன. இந்தியச் சமூகத்தில் உறைந்திருந்த தீண்டாமை என்னும் கொடுமைக்கு எதிராக தனது அரசியல் செயல்பாடுகளை பிரதானமாக மேற்கொண்டவர் காந்தி. இதன் தாக்கம் அப்போதைய இந்தியத் திரைப்படங்களில் வெளிப்பட்டது. ‘சுஜாதா’வையும் இந்த முன்னோடி திரைப்படங்களில் ஒன்றாக இணைக்கலாம்.
இந்தப் படத்தில் பல காட்சிகள் உயிரோட்டத்துடன் பதிவாக்கப்பட்டுள்ளன. பிறந்த நாள் விழா என்றாலும் கூட சாதாரணமாக கடந்துவிடாமல் அதில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரின் முகபாவமும் அண்மைக்காட்சிகளாக பதிவு செய்யப்பட்டிருப்பது சுவாரசியம். சுஜாதாவுக்குக் காதலுணர்ச்சி உருவாகியிருப்பதை இயற்கையின் உற்சாகமாக அசைவுகளின் மூலம் பதிவு செய்திருப்பது அருமை. கமல் போஸின் ஒளிப்பதிவு மிகுந்த அழகியல் தன்மையுடன் அமைந்திருக்கிறது. எஸ்.டி.பர்மனின் இனிமையான பாடல்களும் மஜ்ரூஹ் சுல்தான்புரியின் கவித்துவமான பாடல் வரிகளும் திரைப்படத்துக்குக் கூடுதல் சுவையைச் சேர்த்திருக்கின்றன.
சாதி என்பதே கற்பிதம்தான். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் ஒருவர் பிறந்த காரணத்தினாலேயே வாழ்நாள் முழுவதும் அவர் எதிர்கொள்ளும் அவமதிப்பு, மனப்புழுக்கம், அங்கீகார ஏக்கம், அகத்துயரம் போன்றவை சுஜாதாவின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
‘இறைவன் இருக்கிற பூஜையறைக்குள் நின்று கொண்டு, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்கிறாயே?’ என்று பாட்டி கடிந்து கொள்ளும் போது ‘அவர்களையும் நீங்கள் சொல்லும் இறைவன்தானே படைத்தான்?’ என்று எதிர்க் கேள்வி கேட்கிறான் ஆதிர்.
சுஜாதாவின் இருப்பு தன்னுடைய மகளின் திருமணத்துக்கு இடையூறாக இருக்குமோ என்று எண்ணும் தாய், யாரோ ஒருவருக்கு மணம் செய்து கொடுத்துவிடலாம் என்று எண்ணுகிறார். பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்து விட்டு வரும் ஒரு மணமகனின் தந்தை, சுஜாதாவின் பின்னணி பற்றி அறிந்ததும் “நம்முடைய சாதியைச் சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணாக இருந்தால் கூட சம்மதித்திருப்பேன். ஆனால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணுக்கு என் மகனைக் கேட்க என்ன துணிச்சல்?’ என்று கோபப்படுவார். ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் மீது மையச் சமூகத்துக்கு இருந்த அருவருப்பும் சாதிய மனோபாவமும் இது போன்ற காட்சிகளின் மூலம் வலுவாக வெளிப்பட்டுள்ளது.
சாதியம் காரணமாக இந்தியச் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் நிலை எத்தனை பரிதாபமாக இருக்கிறது என்பதற்கான திரைப்படச் சாட்சியம் என்று ‘சுஜாதா’வை சொல்ல முடியும். அவளுடைய மனப்புழுக்கத்தின் வெம்மை ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களைச் சுட்டெரிக்கிறது. சாதியத்துக்கு எதிரான உருவான சிறந்த இந்தியத் திரைப்படங்களுள் ஒன்றாக ‘சுஜாதா’ உத்தரவாதமாக இடம் பெறும்.
(தொடர்ந்து பேசுவோம்)