Skip to content
Home » தலித் திரைப்படங்கள் # 16 – ஃபன்ட்ரி

தலித் திரைப்படங்கள் # 16 – ஃபன்ட்ரி

ஃபன்ட்ரி

இந்தியா போன்ற சூழலில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறக்கும் ஒருவர், வாழ்நாள் பூராவும் தன் சாதிய அடையாளத்தை முள்கிரீடம்போலச் சுமந்து கொண்டிருக்க வேண்டும். ஒரு நிமிடம்கூடக் கழற்றி வைக்க முடியாது. அவரே சற்று நேரம் மறந்திருந்தாலும்கூடச் சுற்றியுள்ள முற்பட்ட சமூகங்கள் அவமதிப்பின் மூலம் அதை நினைவுப்படுத்திவிடும். சாதியம் தரும் அவமானங்களின் வலியை பெரியவர்களின் மூலம் நிறைய திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஆனால் ஓர் வளரிளம் பருவத்து இளைஞனின் கோணத்தின் பார்வையின் வழியாக இந்தத் துயரத்தை விவரித்திருப்பதுதான் ‘ஃபன்ட்ரி’ திரைப்படத்தை வித்தியாசமாக்குகிறது.

சாதிய வலியை அசலாகச் சித்திரிக்கும் சினிமாக்கள் ‘கலைப் படம்’ என்னும் வடிவத்தில்தான் பெரும்பாலும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இவை வெகுசன மக்களுக்குச் சென்று சேர்வது குறைவு. இன்னொரு பக்கம் பார்த்தால், வெகுசன சினிமாக்கள் சாதியத்தின் பெருமிதத்தைத்தான் நேரடியாகவும் மறைமுகமாகவும் உரையாடிக் கொண்டிருந்தன அல்லது சாதிய எதிர்ப்பு என்கிற பெயரில் அதை ரொமான்டிசைஸ் செய்து கொண்டிருந்தன. இந்த மாதிரியான சூழலில் தூய கலைப்படைப்பு பாணியையும் ஜனரஞ்சக வடிவத்தையும் கச்சிதமாக இணைக்கும் ‘மாற்று சினிமாக்களில்’ சாதியத்தின் வலி திறமையாக பேசப்பட்டது. இவ்வகையான திரைப்படங்களை உருவாக்கும் படைப்பாளிகளில் மராட்டி திரைப்பட இயக்குநரான நாகராஜ் மஞ்சுளே குறிப்பிடத்தகுந்தவர்.

வளரிளம் பருவத்துக் காதலின் கோணத்தில் பேசப்பட்ட சாதியம்

2013-ல் வெளியான, நாகராஜ் மஞ்சுளே இயக்கிய ‘ஃபன்ட்ரி’ திரைப்படம் தேசிய விருது உள்ளிட்டு பல்வேறு சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது. தமிழில் தலித் இலக்கியமானது மராத்தியில் இருந்து தமக்கான உந்துதலைப் பெற்றுக் கொண்டதைப் போலவே இந்த மராத்தி சினிமாவிலிருந்து உத்வேகத்தைப் பெற்று தலித்களின் வாழ்வியலைச் சிறப்பாகவும் நேர்மையாகவும் பதிவு செய்யும் தமிழ் சினிமாக்கள் இப்போது உருவாகி வருவது சாத்தியமாகியுள்ளது. இதன் முன்னோடி படைப்பாளியாக பா. ரஞ்சித்தைச் சொல்லலாம்.

பல்லாண்டுகளாகத் தொடரும் தீண்டாமைக் கொடுமையை ஒரு கலைப்படைப்பின் மூலமாகச் சொல்லும்போது எரிமலை நெருப்பின் தகிப்போடுதான் சொல்ல வேண்டும் என்றில்லை. நகக்கண்ணில் மெல்லிய ஊசியேற்றியும் சொல்லலாம். ஃபன்ட்ரி திரைப்படம் மேற்பார்வைக்கு எளிமையானதாகவும் உள்ளுக்குள் பல அடுக்குகளில் கடுமையான அரசியல் விமர்சனங்களை ஒளித்து வைத்திருக்கும் ஒரு சிறந்த தலித் சினிமாவாகவும் அமைந்திருக்கிறது. ஒரு பதின்ம வயதுச் சிறுவனின் நிறைவேறாத காதலின் பின்னணியோடும் யதார்த்தமான அழகியலோடும் தலி்த் மக்களின் துயரத்தை இத்திரைப்படம் பதிவு செய்திருக்கிறது.

காதல் என்றவுடனே நீங்கள் நம்தன நம்தன… என்கிற பின்னணியுடனான பாடல் காட்சிகளும் இறுதிக்காட்சியில் தீப்பந்தங்கள் இளம் காதலர்களை கும்மிருட்டில் துரத்தும் தமிழ் சினிமாக்களை நினைவு கூராதீர்கள். அந்த அபத்தங்கள் எல்லாம் இதில் இல்லை. சாதிய, நிற, வர்க்க வேறுபாடுகளினால் ஓர் இளைய மனம் எதிர்கொள்ளும் அவமானங்களின் பெருமூச்சும் கண்ணீரும் இதன் காட்சிகளில் உறைந்துள்ளன. சாதியக் கொடுமைகளைத் தாங்கித் தாங்கி அதை ஏற்றுக்கொண்டு கெட்டிப்பட்டுப் போன ஒடுக்கப்பட்ட மக்களின் முந்தைய தலைமுறையினரிடமிருந்து விலகி இளைய தலைமுறை அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் போராட்டத்தையும் முயற்சியையும் பற்றி இத்திரைப்படம் உரையாடுகிறது.

சாதியக் குறியீடுகளாக வெளிப்படும் கருங்குயிலும் பன்றியும்

நவீன கைபேசிகளும் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான உரையாடல்களும் கூட இருந்தாலும் அடிப்படைக் கழிப்பிட வசதிகள் அற்ற, மஹாராஷ்டிராவில் உள்ள அகோல்நர் என்கிற சிறிய கிராமம். கைக்காடி எனும் வழக்கொழிந்துக் கொண்டிருக்கிற திராவிட வழி மொழி பேசும் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தின் குடும்பத்தைச் சார்ந்தவன் சிறுவன் ஜாபியா. வறுமையான குடும்பம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. சாதி இந்துக்கள் ஏவுவதில் கிடைக்கும் வேலைகளைச் செய்து ஜீவிக்கிறார்கள் அவனது குடும்ப உறுப்பினர்கள். பாதி நாட்கள் வேண்டா வெறுப்பாக வேலைக்கு செல்லவும் மற்ற நாட்களில் பள்ளி செல்வதுமாக இருக்கிறான் ஜாபியா. அவன் ஆர்வமுடன் பள்ளி செல்வதற்கு கல்வியின் மீதுள்ள ஈடுபாட்டையும் தவிர இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. விடலைப் பருவத்துக்கேயுரிய காதல் சக மாணவியான ஷாலுவின் மீது உண்டாகிறது. அல்லும் பகலும் அவள் நினைவாகத் திரிகிறான். அவளோ முற்பட்ட சாதியைச் சார்ந்தவள். வர்க்க வேறுபாடும் உண்டு. தன் நிறத்தைக் குறித்த தாழ்வுணர்வு ஜாபியாவுக்கு உண்டென்றாலும் தன் காதல் என்றாவது உண்மையாகலாம் என்று பகற்கனவு காண்கிறான்.

ஊர் திருவிழா ஒன்றின் சாமி ஊர்வலத்தில் பன்றியொன்று குறுக்கே வந்து இடையூறு செய்ய, அதைத் தீட்டாகக் கருதி ஊரில் உள்ள பன்றிகளையெல்லாம் விரட்டியடிக்கும் பொறுப்பு ஜாபியாவின் தந்தை மீது சுமத்தப்படுகிறது. தன் மகளுக்குத் திருமணம் செய்யும் கவலையோடும் நிதி நெருக்கடியோடும் இருக்கும் அவர் தனது குடும்பத்தோடு பன்றிகளை விரட்டும் செயலைச் செய்கிறார். தான் படிக்கும் பள்ளியின் அருகில் சக மாணவர்களின் முன்னிலையில் அதுவும் தான் விரும்பும் பெண் வேடிக்கை பார்க்க, பன்றிகளைத் துரத்தும் செயலில் ஏற்படும் அவமானத்தில் சிக்கித் தவிக்கிறான் ஜாபியா. சுற்றியுள்ள ஆதிக்க சாதிக்காரர்கள் இந்த குடும்பமே சிரமப்பட்டு பன்றிகளை விரட்டிப் பிடிக்கும் காட்சியை விளையாட்டு போல நின்று ரசிக்கிறார்கள். சாதிய வசைகளையும் கிண்டல்களையும் குதூகலத்துடன் எறிகிறார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க இயலாமல் மிகுந்த ஆக்ரோஷத்தோடு அவர்களை ஜாபியா தாக்கத் துவங்கும் புள்ளியில் படம் நிறைகிறது.

மிகச்சிறந்த நடிப்பைத் தந்திருக்கும் சிறுவன் சோம்நாத் அக்வாட்

ஒரு தலித்தால்தான் ஒரு சிறந்த தலித் படைப்பை உருவாக்க முடியுமா என்பது ஆய்வுக்குரியது என்றாலும் இந்த சமூகத்தைச் சேர்ந்த இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே 2011-ல் உருவாக்கிய குறும்படமொன்று ஏற்கெனவே தேசிய விருது பெற்றிருக்கிறது. ஃபன்றியில் நிகழும் சம்பவங்கள் ஏறத்தாழ அவரது சுயஅனுபவங்களே. இவர்தான் அந்த சிறுவன் ஜாபியா என்பதைச் சொல்லித்தான் அறிய வேண்டுமென்பதில்லை. ஜாபியாவின் தந்தையாக நடிக்கும் நபரைத் தவிர மற்ற அனைவரும் தொழில்முறை சாராத நடிகர்களே. இதில் சிறிய பாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே உள்ளிட்ட மற்ற அனைவருமே அத்தனை இயல்பாக நடித்துள்ளனர்.

குறிப்பாக ஜாபியா எனும் பிரதான பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கும் சிறுவன் சோம்நாத் அக்வாடை இதில் நடிக்க ஒப்புக் கொள்ளவே மூன்று மாதங்களுக்கும் மேலாக முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர். தனது அற்புதமான நடிப்புக்காக இந்தச் சிறுவன் தேசிய விருதை வாங்கினான். பொதுவாக சிறுமுதலீட்டில் உருவாகும் கலை சார்ந்த திரைப்படங்களின் உருவாக்கம் அழுது வடியும் ஒளிப்பதிவோடு மந்தமாக நகரும். ஆனால் இதன் ஒளிப்பதிவாளரான விக்ரம் அம்லாடியின் அபாரமான திறமையினால் காட்சிகள் மிகுந்த அழகியலோடு பதிவாகியிருக்கின்றன. அவசியமான இடங்களில் மாத்திரம் ஒலிக்கும் அலோக்நந்தாவின் பின்னணி இசை காட்சியின் அர்த்தங்களைக் கூட்டுகிறது. அஜய்-அடுல் கூட்டணியின் பாடல்கள் சிறப்பாகப் பொருந்தியுள்ளன. இத்திரைப்படம் விருது விழாக்களைத் தவிர வணிக ரீதியான வெற்றியையும் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைவேறாத காதலின் வலியும் துயரமும்

இந்து புராணத்தின்படி மஹாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் மூன்றாவது வராக அவதாரம். பன்றியைக் குறிப்பது. ஆனால் இத்திரைப்படம் முழுவதும் பன்றி என்பது தீண்டாமையின் குறியீட்டுடன் இயங்குகிறது. அந்தக் கிராமத்தின் ஆதிக்கசாதி மக்கள் அங்கு மேயும் பன்றிகளை வெறுக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களையும் அதே சொல்லினால் கிண்டலடிக்கிறார்கள். மேலே பட்டாலே தீட்டு என்று அலறுகிறார்கள்.

இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே திரைக்கதையை அடுக்கியிருக்கும் விதமே மிகுந்த நுண்ணுணர்வுடன் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஒரு காட்சியில் சிறுவன் ஜாபியா புத்தகம் கேட்கும் சாக்கில் ஷாலுவிடம் பேசலாமா என்று தயங்கி வருகிறான். அவள் சக தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள். அந்தச் சமயத்தில் பன்றி ஒன்று குறுக்கே ஓடிவந்து ஒரு மாணவி மீது தீண்டிச் செல்கிறது. ஷாலு சிரிப்புடன் பன்றி தீண்டிய மாணவியை யாரும் தொடாதீர்கள் தீட்டு’ என தடுக்கிறாள். இதைப் பார்க்கும் ஜாபியா முகம் சுருங்கிப் போய் திரும்புகிறான். பன்றி ஏற்படுத்திய தீட்டை பசுமாட்டின் சிறுநீர் கொண்டு கழிக்கிறார்கள். பன்றியை வெறுக்கும் ஷாலு ஓர் ஆட்டுக்குட்டியை பிரியத்துடன் தடவிக் கொடுக்கிறாள். இது போன்ற காட்சிகளில் உள்ள நுட்பமான சாதிய முரண்களை இயக்குநர் எந்த அண்மைக் கோணமும் கொண்டு பிரத்யேகமாக பார்வையாளர்களுக்கு கவனப்படுத்துவதேயில்லை. இவை இயல்பாகவே நகர்கின்றன. பார்வையாளர்களுக்குத்தான் இளம் தலைமுறையினரிடமும் தன்னிச்சையாக பரவியிருக்கும் சாதிய உணர்வின் அழுத்தம் குறித்து அதிர்ச்சி ஏற்படுகிறது.

இன்னொரு காட்சியில் ஷாலுவின் தந்தை ஜாபியாவிடம் அவரது வீட்டு நீர்தொட்டியில் மாட்டியிருக்கும் பன்றிக்குட்டியை எடுத்துப் போடச் சொல்லி ஆணையிடுகிறார். ஜாபியா அந்த வயதுக்கேயுரிய சுயமரியாதையுடன் அதை மறுத்து சென்று விடுகிறான். ஊர் பெரியவர்களை பகைத்துக் கொள்ளாதே என்று ஜாபியாவின் தந்தை கண்டிக்கிறார். அன்றிரவு அவனுக்கு ஒரு கொடுங்கனவு வருகிறது. கிணற்று நீரில் மூழ்கி உயிருக்கு அல்லாடுவதைப்போல. திடுக்கிட்டு எழுகிறான். அந்தப் பன்றிக்குட்டியின் நிலையின் அவனுடைய நிலையும் ஒன்றாகத்தான் இருக்கிறது.

பன்றிகளைப் போலவே கருங்குருவி ஒன்றும் திரைப்படம் நெடுக ஜாபியாவின் நிறைவேறாத காதலின் குறியீடாக வருகிறது. கருங்குருவி ஒன்றை எரித்து அதன் சாம்பலை, தான் விரும்புகிற பெண்ணின் மீது வீசிவிட்டால் அவள் வசியத்தில் மயங்கி, தன்னை விரும்புவாள் என்கிற உபதேசத்தின் காரணமாக படம் பூராவும் கருங்குருவியைத் துரத்திக் கொண்டே இருக்கிறான் ஜாபியா. ஆனால் அதுவும் ஷாலுவைப் போலவே இவனுடைய கைக்குக் கடைசிவரை அகப்படாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது. அது அகப்படாது என்பது அவனுடைய உள்ளுணர்வுக்குத் தெரிந்தேயிருக்கிறது. எனவேதான் ஷாலுவுக்கு எழுதும் ஒரு கடிதத்தில் “என்னைப் பிடிக்கவில்லையென்றால் யாரிடமும் சொல்லி அவமானப்படுத்திவிடாதே” என்கிறான். ஆனால் அந்தக் கடிதம் தரப்படாமலேயே அழிந்துபோகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அறியாமையிலிருந்து பிறக்கும் மூடத்தனங்களின் அடையாளத்துடன் இந்த கருங்குருவி பறக்கிறது.

தலித் இளைஞர்கள் வன்னிய சாதிப் பெண்களை ஜீன்ஸூம் கூலிங்கிளாஸூம் அணிந்து மயக்குகிறார்கள் என்று தமிழகத்தின் சாதிக்கட்சி அரசியல் தலைவர் சொன்ன விஷயம், ஜாபியாவுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. ஜீன்ஸ் வாங்குவது அவனது கனவுகளில் ஒன்றாக இருக்கிறது. அவளது தாயோ இதோ அதோ என்று போக்குக்காட்டி வெறுப்பேற்றுகிறார். சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருப்பவர்கள் அதற்கு மேலேயுள்ளவர்களைக் கவனித்து அதை அடையும் ஆசையை ஏற்படுத்திக் கொள்வது மிக இயல்பான விஷயம்தான். தன்னுடைய ஜீன்ஸ் கனவை நிறைவேற்றிக்கொள்ள, தானே உழைக்கிறான் ஜாபியா. ஆனால் அவனது அந்த எளிய கனவு கூட நிறைவேறாமல் அழிந்து போகும் கருணையின்மை மிக இயல்பாக நிகழ்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி காட்சிகளின் மூலம் இயக்குநர் பார்வையாளர்களின் கண்களில் எதையுமே திணிப்பதில்லை.

சாதிய மனங்களின் மீது ஜாபியா எறியும் கல்

ஒரு சிறந்த சிறுகதையின் இறுதி வரியைப்போல, அதன் முற்றுப்புள்ளியைப்போல இத்திரைப்படத்தின் இறுதிக் காட்சியின் சட்டகம் மிகச் சிறப்பாக உறைந்து நிற்கிறது. ஜாபியாவின் குடும்பம் பன்றிகளைத் துரத்தி இங்குமங்குமாக ஓடுகிறது. ஜாபியாவோ அவமானத்தில் குறுகி அவ்வப்போது ஒளிந்துகொள்கிறான். சக மாணவர்களின் கண்களில், குறிப்பாக ஷாலுவின் பார்வையில் பட்டுவிடக்கூடாது என்கிற பதற்றத்தில் ஒளிந்துகொள்கிறான். அவனை ஒரு பன்றியைப் போலவே கல்லால் அடித்து வேலையைத் தொடரச் செய்கிறார் அவனது தந்தை. பன்றிகள் போக்குக் காட்டிக் கொண்டு ஓடுகின்றன. அவை அருகே வந்து அகப்படும் நேரத்தில் அருகேயுள்ள ஜாபியாவின் பள்ளியிலிருந்து தேசிய கீதம் ஒலிக்கிறது. அருகே கடந்து செல்லும் பன்றியை பிடிக்க முடியாத எரிச்சலுடன் ஜாபியாவின் குடும்பம் உறைந்து அப்படியே நிற்கிறது. சாதியங்களால் கட்டப்பட்டிருக்கும் இந்தியச் சூழலையும் தேசபக்தியையும் அவல நகைச்சுவையுடன் இந்தக் காட்சி கிண்டலடிக்கிறது.

பன்றிகளைத் துரத்திப் பிடிக்க ஜாபியாவின் குடும்பம் படும் சிரமத்தைப் பார்த்து அதை நகைச்சுவைக் காட்சியாக கண்டு ஷாலு உட்பட அவனின் சக மாணவர்கள் சிரிக்கிறார்கள். ஒரு விளையாட்டுப் போட்டியை பார்க்கும் சுவாரசியத்துடன் ரசிக்கிறார்கள். ஆதிக்கசாதி இளைஞர்கள் இவர்களை சாதிய வசைகளுடன் கிண்டலடிக்கிறார்கள். தந்தையிடம் அடிவாங்கிய ஜாபியா அந்த முரட்டுக் கோபத்துடன் ஆவேசத்துடன் இயங்கி ஒரு பன்றியைப் பிடித்துவிடுகிறான். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடுதலைக்காக அரசியல் ரீதியாக போராடிய அம்பேத்கர் உள்ளிட்ட தேசிய தலைவர்களின் சுவர் ஓவியங்களின் பின்னணியில், கட்டப்பட்ட பன்றி எடுத்துச் செல்லப்படுவது ஒரு குரூரமான நகைச்சுவை.

தனது குடும்பத்தைச் சாதியரீதியில் தொடர்ந்து கிண்டலடித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களில் ஒருவனை ஆவேசத்துடன் தாக்கத் துவங்குகிறான் ஜாபியா. தாக்கப்பட்டவன் இவனை அடிப்பதற்காக வரும் போது ஜாபியா எறியும் கல் பார்வையாளர்களை நோக்கி வருவதுடன் காட்சி உறைந்து படம் நிறைகிறது. காலம் காலமாக ஒடுக்கப்பட்டுக் கொதிந்தெழும் ஒரு சாதியின் இளைய தலைமுறையினரிடமிருந்து எறியப்படும் அந்தக் கல் நம்முடைய அகத்தில் ஏற்படுத்தும் வலியையும் மீறி நம்முடைய சாதிய மனங்கள் தொடர்ந்து இயங்கும் என்றால் நாம் மனிதர்களாக வாழவே தகுதியில்லை என்றுதான் பொருள்.

(தொடர்ந்து பேசுவோம்)

பகிர:
சுரேஷ் கண்ணன்

சுரேஷ் கண்ணன்

உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை தொடர்ச்சியாக எழுதி வருபவர். அழகியல் சார்ந்த ரசனையோடு சினிமாவைப் பற்றிய உரையாடலைப் பல ஆண்டுகளாக நிகழ்த்துபவர். குமுதம், தீராநதி, உயிர்மை, காட்சிப்பிழை, அம்ருதா, பேசும் புதியசக்தி போன்ற இதழ்களில் எழுதியிருக்கிறார். விகடன் இணையத்தளத்தில் ‘பிக் பாஸ் நிகழ்ச்சி’ பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *