Skip to content
Home » தலித் திரைப்படங்கள் # 17 – பாண்டிட் குயின்

தலித் திரைப்படங்கள் # 17 – பாண்டிட் குயின்

பாண்டிட் குயின்

பூலான் தேவி ஒரு கொள்ளைக்காரியாக மையச் சமூகத்தால் நினைவுகூரப்படுகிறார். ஆனால் அவர் கொள்ளைக்காரியாக, கொலைகாரியாக மாறியதற்குப் பின்னால் கொடூரமான சாதியமும் ஆணாதிக்கமும் பிரதான காரணிகளாக இருந்தன என்பதுதான் உண்மை. தன் வாழ்நாள் பெரும்பான்மையும் சாதிய ரீதியிலான அவமானம், அவமதிப்பு, கூட்டு வன்புணர்வு போன்ற அவலங்களால் தொடர்ந்து பாதிப்பை அடைந்தார். இந்தியக் கிராமத்தில் பிறந்த, ஓர் அடித்தட்டு சமூகத்தைச் சேர்ந்த எளிய பெண் என்னென்ன துயரங்களையெல்லாம் அடைவாரோ, அவற்றையெல்லாம் அளவுக்கு மீறி அனுபவிக்க நேர்ந்தது.

காலம் அவரை ஒரு கொள்ளைக்குழு பக்கம் நகர்த்திச் சென்றது. அங்கு பெற்ற பயிற்சி மற்றும் அனுபவத்தின் மூலம் தனக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர்களைப் பழிவாங்கினார். சாதியத் திமிர் பிடித்த, முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண்களைக் கடுமையாகத் தண்டித்தார். இதனாலேயே ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பெண்கள் பூலான் தேவியை துர்க்கையின் அவதாரமாகப் பார்த்தனர். ‘இந்திய ராபின்ஹூட்’ என்று ஊடகங்கள் அவரை வர்ணித்து எழுதின.

பூலான் தேவியின் வாழ்க்கையையொட்டி மாலா சென் எழுதிய ‘The True Story of Phoolan Devi’ என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு சேகர் கபூர் இயக்கிய ‘Bandit Queen’ என்னும் திரைப்படம் 1994-ல் வெளியானது. இது வெளியான பிறகு பூலான் தேவியின் புகழ் சர்வதேச அரங்குகளை அடைந்தது. ஆனால், ‘இந்தப் படம் என் வாழ்க்கையைப் பிரதிபலிக்கவில்லை. உண்மைக்கு மாறாக சித்தரிக்கிறது’ என்று கடுமையாக ஆட்சேபித்தார் பூலான் தேவி. படத்துக்குத் தடை கோரினார். பிறகு தயாரிப்பு நிறுவனத்திடம் நடந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு ஒரு கணிசமான நிதியைப் பெற்றுக்கொண்டு புகாரைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். சேகர் கபூரின் திரைப்படத்தை மிக கடுமையாக விமர்சித்து எழுதினார் அருந்ததி ராய். ‘The Great Indian Rape Trick’, என்று தலைப்பிடப்பட்ட அந்த விமர்சனக் கட்டுரையில் ‘சேகர் கபூர் எடுத்த திரைப்படத்தில் வன்புணர்வுக் காட்சிகள் மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டுள்ளன. பூலான் தேவி அடைந்த சாதிய அவமானங்களோ அவரது போராட்டங்களோ சரியாக சித்திரிக்கப்படவில்லை’ என்று காரசாரமான வார்த்தைகளில் எழுதியிருந்தார்.

‘சிறந்த இந்தி திரைப்படத்துக்கான’ தேசிய விருது, ‘பாண்டிட் குயின்’ படத்துக்குக் கிடைத்தது. பூலான் தேவியாக நடித்த சீமா பிஸ்வாஸ், சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். ஆடை வடிவமைப்புக்காகவும் விருது கிடைத்தது. இவற்றைத் தாண்டி பல்வேறு சர்வதேச திரைப்பட அரங்குகளிலும் அங்கீகாரமும் விருதும் ‘பாண்டிட் குயின்’ படத்துக்குக் கிடைத்தன.

ஓர் அறியாச் சிறுமி, கொள்ளைக்காரியாக மாறிய பயணம்

வருடம் 1968. உத்தரப்பிரதேச மாநிலம், ஜலான் மாவட்டத்திலுள்ள கோர்ஹா கா புர்வா என்னும் கிராமம். பதினொரு வயதேயான பூலான் தேவி என்னும் சிறுமிக்கு அவளை விடவும் மூன்று மடங்கு கூடுதல் வயதுள்ள ஆசாமியுடன் திருமணம் நடைபெறுகிறது. மணப்பெண் வயதுக்கு வந்த பிறகுதான், மணமகனின் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் என்கிற வழக்கத்தை மீறி. அதற்கு முன்பாகவே வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறான், பூலான் தேவியின் கணவன். அங்கு முரட்டுத்தனமான வன்புணர்வுக்கும் மாமியார் கொடுமைக்கும் ஆளாகிறார். அங்கிருந்து தப்பித்து பிறந்த வீட்டுக்கே திரும்பும் அவளை பூலான் தேவியின் தந்தை கண்டிக்கிறார். கணவனைவிட்டு திரும்பி வந்த அவளை ஊரும் அவமதிப்பாக பேசுகிறது.

முற்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் பூலான் தேவியின் மீது பாலியல் பலாத்காரம் செய்ய முற்படுகிறார்கள். அதைக் கடுமையாக எதிர்க்கிறாள் பூலான். நிலவுடைமை அதிகாரத்தை வைத்திருக்கும் தாக்கூர் சாதியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பஞ்சாயத்தில் பூலான் தேவிக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டு ஊரைவிட்டுத் தள்ளி வைக்கப்படுகிறாள். அவளது மாமாவின் வீட்டில் அடைக்கலம் புகுபவருக்கு அங்கும் தடை ஏற்படுகிறது. கோபத்துடன் அங்கிருந்து கிளம்பும் பூலான் தேவி, காவல்துறையால் கைது செய்யப்பட்டு லாக்கப்பில் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகிறார். தாக்கூர்கள் அவளை ஜாமீனில் எடுக்கிறார்கள். பாபு குஜ்ஜார் என்னும் கொள்ளையனிடம் ஒப்படைக்கிறார்கள்.

தன்னுடைய இரையாக பூலானை இழுத்துச் செல்லும் பாபு குஜ்ஜார், நினைத்த போதெல்லாம் மிருகம்போலப் பாய்ந்து வன்புணர்வில் ஈடுபடுகிறான். அந்தக் கொள்ளைக்கூட்டத்தில் இரண்டாம் நிலையில் உள்ள விக்ரம் என்கிற இளைஞன் மனிதாபிமானம் உள்ளவன். பூலான் பிறந்த அதே மல்லா என்கிற அடித்தட்டு சமூகத்தைச் சேர்ந்தவன். பூலானுக்கு ஆதரவாக நிற்கும் விக்ரம், ஒரு கட்டத்தில் பாபுவைக் கொன்று கூட்டத்துக்குத் தலைமையேற்கிறான். பூலானுக்கும் விக்ரமுக்கும் இடையில் காதல் ஏற்படுகிறது.

இந்த கொள்ளைக் கூட்டத்தின் மூத்த தலைவனான தாக்கூர் ஸ்ரீராம் சிறையிலிருந்து வெளியே வருகிறான். இது பூலானின் வாழ்க்கையில் இருந்த தற்காலிக மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை நாசமாக்குகிறது. விக்ரமைக் கொன்றுவிட்டு பூலானைக் கைப்பற்றும் ஸ்ரீராம், பெஹ்மாய் என்னும் கிராமத்தில் பூலானை, கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்குகிறான். ஊரார் முன்னிலையில் பூலானை நிர்வாணப்படுத்தி சாதியக் கொடுமை செய்கிறான். அவனிடமிருந்து தப்பித்து இன்னொரு கொள்ளைக்கூட்ட தலைவனான பாபா முஸ்தகிம் என்பவரின் உதவியைக் கோருகிறாள் பூலான். தனக்கென ஒரு படைக்குழுவை அமைக்கிறாள். விக்ரமின் நண்பனான மான் சிங், பூலானின் தளபதியாக உடன் நிற்கிறான்.

தனக்கென ஒரு படை அமைந்ததும் பூலானுக்குள் பழிவாங்கும் உணர்வு பெருகுகிறது. பணக்காரர்களிடமிருந்து கொள்ளையடித்து ஏழை மக்களுக்கு வழங்குகிறாள். இதனால் அவளுடைய புகழ் பரவுகிறது. ஊருக்கு நடுவில் தன்னை நிர்வாணப்படுத்திய ஸ்ரீராம் சகோதர்களைக் கொல்வதற்காக பெஹ்மாய் கிராமத்துக்குச் செல்கிறாள். அங்கு அவர்கள் இல்லையென்பதால், அங்குள்ள தாக்கூர் சமூகத்தின் ஆண்கள் அனைவரையும் நிற்க வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வைக்கிறாள். இந்தப் படுகொலைச் சம்பவம் தேசிய அளவில் கவனத்துக்கு உள்ளாகிறது. பூலான் தேவியை கைது செய்ய இந்திய அரசு உத்தரவிடுகிறது. சம்பல் பள்ளத்தாக்கில் மறைந்திருக்கும் பூலானுக்கு நெருக்கடி அதிகமாகிறது. அவளுடைய குழுவின் பெரும்பான்மையான ஆட்கள், காவல்துறை வேட்டையில் கொல்லப்படுகிறார்கள். நெருக்கடி தாங்காமல் துப்பாக்கியை கீழே வைக்கும் பூலான், சில நிபந்தனைகளுடன் இந்திய அரசாங்கத்திடம் சரண் அடைகிறாள். மக்கள் அவளைப் புகழ்ந்து கோஷம் இடும் காட்சியோடு படம் நிறைகிறது.

சாதியக் கொடுமைகளின் உக்கிரமான சாட்சியம் பூலான் தேவி

‘மிருகங்கள், பறைகள், படிக்காதவர்கள், தாழ்த்தப்பட்ட சாதியினர் மற்றும் பெண்கள் அடிக்கத் தகுதியானவர்கள்’ என்னும் மனு ஸ்மிருதியின் வாசகங்களை மேற்கோள் காட்டுவதோடு படம் துவங்குகிறது. நிர்வாணக் காட்சிகள் இருப்பதால் இந்தப் படம் இந்தியாவில் தடை செய்யப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், இங்குள்ள சாதிய அவலத்தை படம் அழுத்தமாகச் சித்திரித்திருப்பதால்தான் படத்துக்கு தடை என்னும் கருத்தை இயக்குநர் சேகர் கபூர் கொண்டிருந்தார்.

சக சிறுமிகளுடன் ஆற்றில் ஆனந்தமாக விளையாடி குளித்துக் கொண்டிருக்கும் பூலான் தேவியை அவளது தந்தை அழைப்பதாக தோழி சொல்கிறாள். அறியாச் சிறுமியான அவளை அழைத்துப் போவதற்காக மாப்பிள்ளை வந்திருக்கிறார். இங்கு ஆரம்பிக்கும் பூலான் தேவியின் துயரம் படம் பூராவும் நீள்கிறது. இது தொடர்பான காட்சிகளை வயிற்றைப் பிசையும் சங்கடத்துடன் உருவாக்கியிருக்கிறார் சேகர் கபூர்.

தன் வாழ்க்கையின் பெரும்பாலும் மோசமான, ஆணாதிக்க மனோபாவம் பெருகியுள்ள, தன்னை உடலாக மட்டுமே பார்த்த பூலான் தேவியின் வாழ்க்கையில் கிடைத்த ஒரே ஆறுதல், காதலன் விக்ரம் மட்டுமே. அவன் மட்டும்தான் பூலான் தேவிக்கு காதலையும் அரவணைப்பையும் அளிக்கிறான். சராசரிப் பெண்ணாக இருந்தவளுக்கு பயிற்சிகள் அளித்து ‘பாண்டிட் குயினாக’ மாற்றுகிறான். துரோகத்தால் வீழ்த்தப்படும் விக்ரம், இறக்கும் தறுவாயில் ‘யாரையும் நம்பாதே. எதிர்த்துப் போராடு” என்று சொல்லிவிட்டு இறக்கிறான். இந்தச் சம்பவமும் உபதேசமும் பூலான் தேவியை தலைகீழாக மாற்றுகின்றன.

மிருகங்கள் வேட்டையாடுவது போல இதர ஆண்கள் பூலான் தேவியின் மீது பாய்ந்து தங்களின் வெறியைத் தீர்த்துக் கொள்வார்கள். அவளைக் காதலுடன் அணுகுபவன் விக்ரம் மட்டுமே. அவன் தொட வரும்போது அவன் கையைத் தள்ளிவிட்டு, தானே ஆக்கிரமிப்பாள் பூலான். இது போன்ற நுட்பமான காட்சிகளின் மூலம் பூலானின் சித்திரத்தை படம் முழுவதும் திறமையாக வரைந்து காட்டியிருப்பார் இயக்குநர். சிறுமியாக இருந்தபோது தன்னை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திய கணவனை கட்டிப் போட்டு கொலைவெறியுடன் பூலான் தேவி அடிக்கும் காட்சி சிறப்பானது. இதன் காரணமாகவே சிறுமிகளைத் திருமணம் செய்யும் ஆண்களை பிறகு கடுமையாக தண்டிக்கத் துவங்கினார் பூலான்.

உன்னதமான கலைஞர்களால் உயிர் பெற்ற திரைப்படம்

இந்தியாவின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்களுள் ஒருவரான அசோக் மேத்தா, இந்தத் திரைப்படத்தில் பணிபுரிந்தார். அந்த நிலவெளியை அழகியல்ரீதியில் காட்சிப்படுத்திய அதேநேரத்தில் பூலான் தேவியின் துயரத்தையும் போராட்டத்தையும் உணர்வுபூர்வமான திரைமொழியில் பதிவு செய்திருந்தார். பூலான் தேவி பொதுவெளியில் நிர்வாணப்படுத்தப்படும் காட்சி முதற்கொண்டு பல காட்சிகள், மனதைப் பிசையும் வகையில் படமாக்கப்பட்டிருந்தன.

ஒரு திரைப்படத்துக்குப் பின்னணி இசை எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு ‘பாண்டிட் குயின்’ ஒரு சிறந்த உதாரணம். உஸ்தாத் நுஸ்ரத் ஃபதே அலி கான் மிகச் சிறந்த இசையைத் தந்திருந்தார். பாரம்பரிய ராஜஸ்தானி இசையைப் பயன்படுத்தியிருந்த நுஸ்ரத், அவலம் நிறைந்த காட்சிகளுக்கு, ஓலமிடுதலைப் போன்ற ஆலாபனைகளின் மூலம் துயரச் சுவையைப் பதிவு செய்திருந்தார்.

பூலான் தேவியாக சிறப்பாக நடித்திருந்தார் சீமா பிஸ்வாஸ். ‘பாண்டிட் குயின்’தான் அவரது அறிமுகப்படம் என்று பொதுவாகக் கருதப்பட்டாலும் 1988-ல் வெளியான ‘அம்ஷிணி’ என்கிற படத்தில் ஏற்கெனவே நடித்திருந்தார். தேசிய நாடகப் பள்ளியில் இவர் நடித்திருந்ததைப் பார்த்த சேகர் கபூர், இந்தப் படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தார். பூலான் தேவியின் சித்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தினார் சீமா.

நெருக்கடியான நேரங்களில் பூலானுக்கு ஆதரவாக நிற்கும் மாமா பாத்திரத்தில் நெகிழ்வான நடிப்பைத் தந்திருந்தார் சௌரஃப் சுக்லா. விக்ரமாக நடித்திருந்த நிர்மல் பாண்டேவின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்தது. தாக்கூர் ஸ்ரீராமாக கொடூரமான மனம் படைத்த கொள்ளைக்காரனாக கோவிந்த் ராம்தேவ் மிரட்டியிருந்தார். தளபதி மான் சிங் பாத்திரத்தில் நடித்திருந்த மனோஜ் பாஜ்பயீயின் நடிப்பு கவனிக்கத் தகுந்ததாக இருந்தது.

சாதியத்தால் படுகொலை செய்யப்பட்ட பூலான் தேவி

நிபந்தனைகளுடன் சரண் அடைந்தாலும் உடல் உபாதைகள், தாக்கூர்களால் ஏற்படக்கூடிய உயிராபத்தின் அச்சம் போன்றவற்றுடன் சுமார் பத்து வருடங்களை சிறையில் கழித்தார் பூலான். 1994-ல் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக, சமாஜ்வாதி கட்சியின் முலாயம் சிங் யாதவ் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். பூலான் தேவியின் மீதுள்ள வழக்குகள் திரும்பப் பெறப்பட்டு பூலான் விடுதலையானார். அரசியலில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டார். 2001-ல் நாடாளுமன்றத்தின் வாசலில் ஷேர் சிங் ராணா என்பவனால் படுகொலை செய்யப்பட்டார். ‘பெஹ்மாய் கிராமத்தில் தாக்கூர் ஆண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பழிவாங்கவே இந்தக் கொலையைச் செய்தேன்’ என்று ஷேர் சிங் ராணா கூறினாலும் இதற்குப் பின்னால் சாதிய ரீதியிலான சதி இருப்பதாகத் தெரிகிறது. தாக்கூர் ஆண்களால் தனக்கு உயிராபத்து ஏற்படும் என்று பூலான் தேவி கொண்டிருந்த அச்சம் உண்மையாயிற்று.

இந்தியக் கிராமத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில், ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஓர் எளிய சிறுமி, இங்குள்ள சாதியக் கொடுமைகள், ஆணாதிக்க அவலங்கள் உள்ளிட்ட பல்வேறு கீழ்மைகள் காரணமாக தன் வாழ்நாள் பெரும்பான்மையும் துயரத்தையும் அவமானத்தையும் எதிர்கொண்டார். ஒரு கட்டத்தில் வீறு கொண்டு எழுந்து கொள்ளைக்காரியாகவும் கொலைகாரியாகவும் மாறினார். காலங்காலமாக ஆணாதிக்க சமூகத்தால் அடிமைப்பட்டிருக்கும் பெண்களில் பெரும்பாலானோர் பூலான் தேவியாக மாறினால் என்னவாகும்?

(தொடர்ந்து பேசுவோம்)

பகிர:
சுரேஷ் கண்ணன்

சுரேஷ் கண்ணன்

உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை தொடர்ச்சியாக எழுதி வருபவர். அழகியல் சார்ந்த ரசனையோடு சினிமாவைப் பற்றிய உரையாடலைப் பல ஆண்டுகளாக நிகழ்த்துபவர். குமுதம், தீராநதி, உயிர்மை, காட்சிப்பிழை, அம்ருதா, பேசும் புதியசக்தி போன்ற இதழ்களில் எழுதியிருக்கிறார். விகடன் இணையத்தளத்தில் ‘பிக் பாஸ் நிகழ்ச்சி’ பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *