1996-ம் வருடம். அக்டோபர் நான்காம் தேதி. பாலக்காடு மாவட்டத்தின் கலெக்டருக்கு அன்று சோதனை நாளாக அமைந்தது. நான்கு ஆசாமிகள் கலெக்டரை அவரது அலுவலக அறையில் வைத்து பணயக் கைதியாகப் பிடித்தனர். ஊரே அல்லோகல்லோலமானது. அரசு இயந்திரங்கள் அனைத்தும் ஒன்று திரண்டு கலெக்டரை விடுவிக்க முயன்றன. கடத்தல்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தின. ஏறத்தாழ பத்து மணி நேரம் நடந்த போராட்டத்துக்குப் பிறகு ஒருவழியாக கலெக்டர் விடுதலையானார். கலெக்டரைப் பணயக் கைதியாக வைத்திருந்தவர்களிடம் இருந்த வெடிகுண்டு, துப்பாக்கி அனைத்தும் போலியானது என்பது இந்த நாடகத்தின் இறுதியில் தெரிய வந்தது.
கலெக்டரை சிறைப்படுத்தியவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன?
1975-ம் ஆண்டின் ஆதிவாசி நிலச் சட்டத்தில், ஒரு திருத்த மசோதாவைக் கொண்டு வருவதற்காக அப்போதைய கேரள அரசு உத்தேசித்தது. ஈ.கே.நாயனார் முதலமைச்சராக இருந்த, இடது ஜனநாயக முன்னணி தலைமையிலான அரசு கொண்டு வர தீர்மானித்த இந்தத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெறக் கோருவதுதான் அந்தப் போராளிகளின் ஒரே நோக்கம். ஓர் அரசு அதிகாரியை சிறை பிடிப்பதின் மூலம், இந்தப் பிரச்னையைப் பொதுமக்கள் மற்றும் அரசின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்பினார்கள். இந்த நெடுங்கால அரசியல் பிரச்னையை தேசிய அளவில் கவனப்படுத்தவும் அதற்கு தீர்வு காணவும் விரும்பினார்கள்.
‘அய்யன்காளி படை’யைச் சேர்ந்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட அந்த நால்வரின் பின்னணியில் மாவோயிஸ்ட்களின் ஆதரவும் இருந்தது.
ஆதிவாசிகள் அயல்கிரகத்தினர் அல்ல
இந்த உலகின் பூர்வகுடிகள் ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினர்தான். ‘நாகரிக’ உலகின் முன்னோர்கள் அவர்கள்தான். இயற்கையிலிருந்து துண்டித்துக் கொள்ளாமல் வனத்தை வழிபட்டு அதனுடன் இயைந்து வாழ விரும்புபவர்கள். ஆனால் ‘நாகரிகப்படுத்துகிறோம்’ என்கிற பெயரில் காலங்காலமாக வாழ்ந்து வந்த வசிப்பிடங்களில் இருந்து அரசு இயந்திரங்கள் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துகின்றன. அதன் பின்னே இருப்பது ஆதிவாசிகளின் மீதான நலன் அல்ல. இயற்கை வளங்களைச் சுரண்டுவதும், வனத்தை அழித்து ஆக்ரமிப்பதும்தான் நோக்கம். கொழுத்த லாபத்தைக் குறிவைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பின்னணியில் இருக்க அரசியல்வாதிகளும் அரசு இயந்திரங்களும் கூட்டணி அமைத்துக்கொண்டு பழங்குடியினரைக் காட்டிலிருந்து விரட்டியடிக்கும் அரசியல் உலகம் முழுவதும் தொடர்ந்தவண்ணம்தான் இருக்கிறது.
ஆதிவாசிகளுக்கு நிலஉரிமை தரும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர உத்தேசிக்கும் கேரள அரசின் தீர்மானத்தைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெறக் கோரியும் பாலக்காடு மாவட்ட கலெக்டரை சிறைப்பிடித்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு 2022-ல் ஒரு மலையாளத் திரைப்படம் வெளியானது, ‘படா’. ‘படை’ என்று பொருள்படும் இந்த பொலிட்டிக்கல் திரில்லரை இயக்கியவர் கே.எம்.கமல்.
உண்மையாக நடந்த சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்படும் திரைப்படங்கள் பொதுவாக இருவகைப்படும். ஒன்று, சாகசம் மற்றும் குற்றச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. இரண்டு, அரசியல் ரீதியிலான போராட்டச் செயல்களை அடிப்படையாகக் கொண்டவை. ‘படா’ திரைப்படத்தை இரண்டாவது வகையில் சேர்க்கலாம். இவ்வகையான திரைப்படங்களை ஹாலிவுட்டில் உருவாக்கும் போது, அடிப்படையான சம்பவங்களுடன் புனைவுச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி, சற்று கற்பனையைக் கலந்து நேர்க்கோட்டு கச்சிதத்துடன் இயக்குவார்கள். இவை பெரும்பாலும் மையத்திலிருந்து விலகாத தன்மையைக் கொண்டிருக்கும். ஆனால் இந்த வகையிலான திரைப்படங்கள் இந்தியாவில் உருவாகும்போது கணிசமான வித்தியாசத்தைக் கொண்டிருக்கும். கற்பனையை ஏராளமாகக் கலப்பதோடு ஏராளமான ஜனரஞ்சக அம்சங்களையும் கொண்டிருக்கும். ஒரு பரபரப்பான காட்சிக்கோர்வையை அப்படியே நிறுத்திவிட்டு மனச்சாட்சியே இல்லாமல் ஒரு பாடல் காட்சியை இணைப்பார்கள்.
இது போன்ற தவறுகள் எல்லாம் செய்யாமல் அயல்திரைப் பாணிக்கு நிகராக ஹாலிவுட் தன்மையுடன் ‘படா’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் கே.கே.கமல். படத்தினுள் மிகைத்தன்மையோ செயற்கையான பரபரப்போ எதுவுமில்லை. பொதுவாக அரசியல் போராளிகள் என்றால் அவர்களை வலிமையான சூப்பர் ஹீரோ போல எத்தகைய வன்முறைக்கும் அஞ்சாதவர்கள் போலச் சித்திரிப்பார்கள். ஆனால் இதில் வரும் போராளிகள் நால்வரும் எளிமையான குடும்பத்தின் பின்னணியில் இருந்து வருபவர்கள். ஒருவர் தன்னுடைய மகளின் கைக்கடிகாரத்தை இரவல் வாங்கிக் கொண்டுவருவார். இன்னொருவர் லாட்டரி வாங்கச் சொல்லி நச்சரிக்கும் பெண்மணியிடம் ‘காசு இல்லம்மா’ என்று அனுப்பிவிடுவார். உண்மைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களிடம் மிக சொற்பான பணமே இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த நால்வரும் வறுமைப் பின்னணியில் இருப்பவர்கள். சிலர் சம்பவத்தின் பின்விளைவுகளை உணர்ந்து தங்களின் குடும்பத்தைத் தூரமாக அனுப்பிவிட்டு மனஉறுதியுடன் வருவார்கள். இவர்களின் குடும்பத்தினர் அடையும் மௌனத் துயர்களும் படத்தில் இயல்பாகப் பதிவாகியிருந்தன. கலெக்டரைப் பிணைக்கைதியாக பிடிக்கும் சம்பவம் கூட நம்பகத்தன்மையுடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இவர்களின் முதல் முயற்சி எதிர்பாராதவிதத்தில் பரிதாபமாக தோற்றுவிடும். சாகசப்படம் போல அதிரடிக் காட்சியாக எதுவும் இருக்காது. இரண்டாவது முயற்சிதான் வெற்றி பெறும்.
இயல்பும் நம்பகத்தன்மையும் கலந்த காட்சிகள்
உண்மையான நபர்களின் பெயர்களைச் சற்று மாற்றி அமைத்த கதாபாத்திரங்களில் குஞ்சாக்கோ போபன், ஜோஜூ ஜார்ஜ், விநாயகன் மற்றும் திலீ்ப் போத்தன் ஆகிய நால்வரும் இயல்பான நடிப்பைத் தந்திருந்தார்கள். தலைமைச் செயலாளர் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருந்தார் பிரகாஷ் ராஜ். சீனியர் காம்ரேடாக எளிய தோற்றத்தில் இந்திரன்ஸ் நடித்திருந்தார். கலெக்டராக அர்ஜூன் ராதாகிருஷ்ணன் பொருத்தமான நடிப்பைத் தந்தார். அரசாங்கத்துக்கும் போராளிக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடத்தும் மீடியேட்டராக டி.ஜி.ரவி சிறப்பாக நடித்திருந்தார்.
கலெக்டருக்கும் போராளிகளுக்கும் இடையில் நடக்கும் அரசியல் உரையாடல்கள் கூட அதிக ஆவேசமில்லாமல் இயல்பாக அமைக்கப்பட்டிருந்தன. ‘என் கைகளை அவிழ்த்து விடுங்கள். உங்களுக்கு தெரியுமா?, 1979-ம் ஆண்டு ஐ.நா. அறிக்கையின்படி பிணைக் கைதிகளின் கோரிக்கை மதிக்கப்பட வேண்டும்’ என்று கலெக்டர் சொல்வார். “உங்களுக்குத் தெரியுமா சார்? அதற்கும் முன்பே அதாவது 1957-ல் ஆதிவாசிகளின் நிலஉரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று உறுப்பினர் நாடுகளுக்கு ஐ.நா. அறிவுறுத்தியிருக்கிறது என்று?’ என்று பதிலுக்கு கேட்பார் திலீப் போத்தன். தாங்கள் கையில் எடுத்திருக்கும் பிரச்னையின் ஆழத்தை அறிந்து இறங்கியிருக்கும் போராளிகளின் அரசியல் அறிவை உணர்த்தும் காட்சி இது.
‘ஆதிவாசிகளின் நிலவுரிமைக்காக கேரள அரசு 1975-ல் சம்பிரதாயத்துக்கு ஒரு சட்டம் கொண்டு வந்தது. அது இடதுசாரி அரசோ வலதுசாரி அரசோ, இரண்டுமே சம்பந்தப்பட்ட சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் விஷயங்களைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றன’ என்று சொல்வார் விநாயகன். கலெக்டர் மனிதாபிமானம் உள்ளவர். ‘நீங்கள் போராடும் விஷயம் சரிதான். ஆனால் அதற்கான வழிமுறை இதுவல்ல’ என்று எச்சரிப்பார்.
எளிய மக்களுக்கு எதிராக அரசு இயந்திரம் கைகோக்கும் அவலம்
ஒடுக்கப்பட்ட மக்களின் அழுகையும் ஓலமும் அதிகார சக்திகளின் காதுகளில் எப்போதும் விழாது. விழுந்தாலும் கேட்காதது போலவே கள்ள மௌனத்துடன்தான் இருக்கும். மையச் சமூகத்துக்கோ அது பற்றிய அக்கறையோ அரசியல் ஆர்வமோ எதுவுமில்லை. இது போன்ற சூழலில் தங்களின் உரிமையைக் கோருவதற்காக அழுத்தமான குரல்களை அவர்கள் எழுப்ப வேண்டியிருக்கிறது. தங்களின் மீது நிகழ்த்தப்படும் அரச வன்முறையை எதிர்கொள்வதற்காக பதிலுக்கு வன்முறையை கையில் எடுக்க வேண்டியிருக்கிறது. இப்படியாகத்தான் அரசியல் போராட்டங்களும் போராளிகளும் இது தொடர்பான வன்முறைகளும் உருவாகின்றன.
கலெக்டரைப் பிணைக்கைதியாகப் பிடித்து வைத்திருக்கும் நால்வரும் மனஉறுதியுடன் தங்களின் கோரிக்கையை முன்வைக்கிறார்கள். இவர்கள் அசந்திருக்கும் சந்தர்ப்பம் பார்த்து உள்ளே புகுந்து அவர்களைக் கொன்றுவிடும் உத்தேசத்துடன் கொலைவெறியுடன் காத்திருக்கிறது, காவல்துறை. தேர்தல் வரவிருப்பதால் தன்னுடைய அரசுக்கு எவ்விதக் கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாது என்பதை மட்டுமே சுயநலத்துடன் யோசிக்கிறார் மாநில முதல்வர். அத்தனை நெருக்கடிகளையும் பொறுமையுடன் சமாளிக்கிறார் தலைமைச் செயலாளர்.
போராடினாலும் மாறாத அவலம்
ஒரு நேர்மையான வழக்கறிஞர் மீடியேட்டராக இருக்க, மனச்சாட்சியுள்ள நீதிபதியின் முன்னால் கலெக்டரின் அறையிலேயே விசாரணை நடைபெறுகிறது. பத்து மணி நேரம் தாக்குப் பிடிக்கும் போராளிகள், ஒரு கட்டத்துக்குப் பிறகு இந்த பேச்சு வார்த்தைக்கு ஒப்புக் கொள்கிறார்கள். அவர்களுக்கு வேறு வழியும் இல்லை. ஆனால் மரணத்தை எதிர்கொள்ளவும் அவர்கள் தயாராக இருந்தவர்கள்தான். மசோதா திருத்தத்தை திரும்பப் பெற்றுக் கொள்வது பற்றி அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதோடு எவ்வித இடையூறும் இல்லாமல் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
‘பிணைக்கைதியாக இருந்தபோது அவர்கள் தன்னை மரியாதையுடன் நடத்தினார்கள்’ என்று மனச்சாட்சியுடன் கலெக்டர் சாட்சி சொல்கிறார். யாருக்கும் எவ்வித தீங்கும் நிகழவில்லை. எந்த உயிரிழப்பும் இல்லை. இதுவொரு அரசியல் போராட்டம். அனைத்தையும் கருத்தில் கொண்டு போராளிகளை நீதிபதி விடுவிக்கிறார். பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் போராளிகள் தங்களின் அரசியல் அறிக்கையை வாசித்துவிட்டு வெளியேறுகிறார்கள். பயணிப்பதற்கு கூட காசில்லாத அவர்களை, வழக்கறிஞர் தன்னுடைய காரில் அழைத்துச் செல்கிறார்.
என்னதான் நீதிபதி விடுவித்தாலும் இது அரசாங்கத்துக்கு விடப்பட்ட சவால். எனவே அரசு இயந்திரம் சும்மா இருக்குமா? சில நாட்களிலேயே காவல்துறை அந்த நால்வரையும் வேட்டையாடத் துவங்குகிறது. துரத்திப் பிடித்து சிறையில் அடைக்கிறது. சில வருட சிறைத் தண்டனைக்குப் பிறகு அவர்கள் வெளியே வருகின்றனர்.
இதெல்லாம் சரி. தங்களின் உயிரை பணயம் வைத்து அவர்கள் நிகழ்த்திய போராட்டத்துக்கு ஏதேனும் பலன் இருந்ததா? இல்லை. முன்னை விடவும் மோசமாகத்தான் ஆனது. அரசு தன்னுடைய இரும்புக்கரத்தைப் பயன்படுத்தி ஆசிவாசிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. தங்களின் நிலவுரிமைக்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும் போராடிய ஆதிவாசிகளில் சிலர் கொல்லப்பட்டார்கள். பலர் படுகாயமுற்றார்கள்.
கலெக்டரைப் பிணைக்கைதியாகப் பிடித்துவைத்திருந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான நபர்களின் புகைப்படங்கள் படத்தின் இறுதியில் காட்டப்படுகின்றன. தங்களை வெளியேற்ற முயலும் காவல்துறையை எதிர்த்து ஆதிவாசிகள் நிகழ்த்தும் போராட்டக் காட்சிகளும் அதில் நிகழும் பரிதாபமான விளைவுகளும் பின்னிணைப்பு வீடியோக் காட்சிகளாக இணைக்கப்பட்டிருக்கின்றன.
‘மக்கள் நலன்’ என்கிற பெயரில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே எப்போதும் இயங்கும் அதிகார வர்க்கத்தின் கொடுமை இப்போதைக்கு நிற்பதாக இல்லை. இந்தச் செய்தியை எவ்வித ஆர்ப்பாட்டமும் செயற்கைத்தனமும் இன்றி, இயல்பான குரலில் பதிவு செய்தவிதத்துக்காக ‘படா’ ஒரு முக்கியமான அரசியல் திரைப்படமாகியிருக்கிறது.
(தொடர்ந்து பேசுவோம்)